2தீமோத்தேயு
முன்னுரை
அப்போஸ்தலர் பவுல் தீமோத்தேயுவுக்கு இரண்டாவது நிருபத்தை எழுதுகிறார். இப்போது அவர் ரோமாபுரியில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய ஜீவனுக்கு மிகுந்த ஆபத்து உண்டாயிருக்கிறது. “”நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன். நான் தேகத்தைவிட்டு பிரியும் காலம் வந்தது’’ (2தீமோ 4:6) என்று பவுல் தனக்கு மரணம் சமீபமாயிருப்பதை வெளிப்படுத்துகிறார்.
நீரோ இராயனுக்கு முன்பாக பவுல் அழைத்து வரப்பட்டு விசாரிப்பட்டார். அதைப்பற்றிச் சொல்லும்போது, “”நான் முதல்விசை உத்தரவு சொல்ல நிற்கையில்’’ (2தீமோ 4:16) என்று குறிப்பிடுகிறார். நீரோ மன்னனுக்கு முன்பாக பவுல் நின்றபோது அவரோடுகூட ஒருவரும் இருக்கவில்லை. எல்லோரும் அவரை கைவிட்டுவிட்டார்கள். அப்போஸ்தலர் பவுல் பல நிருபங்களை எழுதியிருக்கிறார். அவையெல்லாவற்றிலும் தீமோத்தேயுவுக்கு எழுதின இரண்டாம் நிருபமே அவர் கடைசியாக எழுதின நிருபம் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். பவுல் இந்த நிருபத்தை எழுதியபோது தீமோத்தேயு எங்கேயிருந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கி.பி. 68 ஆம் ஆண்டு இந்த நிருபத்தைப் பவுல் ரோமாபுரியிலிருந்து எழுதினார். அப்போஸ்தலர் 28 ஆம் அதிகாரத்தில் எழுதப் பட்டிருக்கிற பிரகாரம் பவுல் இந்த நிருபத்தை எழுதிய போது சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கலாம். (சுமார் கி.பி. 64 ஆம் ஆண்டு) விடுவிக்கப்பட்ட பின்பு சுமார் 5 அல்லது 6 வருஷங்கள் பவுல் கிழக்கு திசையில் பிரயாணம் பண்ணி மக்கெதோனியா, ஆசியா ஆகிய தேசங்களுக்குச் சென்றார். (பிலி 1:26; பிலி 2:24; பிலே 1:22; 1தீமோ 1:3; தீத்து 3:12) 2தீமோத்தேயு நிருபத்தை எழுதிய பின்பு பவுல் மறுபடியுமாகக் கைது பண்ணப்பட்டு ரோமாபுரிக்கு அனுப்பப்பட்டார்.
மையக்கருத்து
1தீமோத்தேயு, 2தீமோத்தேயு, தீத்து ஆகிய மூன்று நிருபங்களும் போதக நிருபங்கள் என்று அழைக்கப்படுகிறது. இவற்றுள் 2தீமோத்தேயு நிருபம் கடைசியாக எழுதப்பட்டதாகும். சபை ஒழுங்கு, உபதேசம் ஆகியவற்றைக் குறித்து பவுல் இந்த நிருபத்தில் எழுதியிருக்கிறார்.
பொருளடக்கம்
ஒ. முன்னுரை
1. ஆசிரியரும் வாழ்த்துரையும் (1:1-2)
2. தீமோத்தேயுவிற்காக ஸ்தோத்திரம் (1:3-5)
ஒஒ. ஊழியம் செய்யுமாறு கட்டளை
1. தீமோத்தேயுவிற்கு மூன்று கட்டளைகள் (1:6-8)
2. தேவனுடைய ஏழு அம்ச கிரியை (1:9-10)
3. தமது ஊழியத்தை விரிவாக்கும் தேவனுடைய முறைமை (1:11-12)
4. தீமோத்தேயுவிற்கு இரண்டு கட்டளைகள் (1:13-14)
5. பவுலை விட்டு விலகியவர்கள் (1:15)
6. ஒநேசிப்போருவிற்காக ஜெபம் (1:16-18)
7. தீமோத்தேயுவிற்கு எட்டு கட்டளைகள் (2:1-8)
8. சுவிசேஷத்தின் நிமித்தம் பவுல் அனுபவித்த துன்பம் (2:9-10)
9. உண்மையுள்ள ஐந்து வார்த்தைகள் (2:11-13)
10. தீமோத்தேயுவிற்கு ஐந்து கட்டளைகள் (2:14-16)
11. சத்தியத்தை விட்டு விலகுவதனால் ஏற்படும் விளைவு (2:17-18)
12. சத்தியத்தின் விளைவு (2:19-21)
13. தீமோத்தேயுவிற்கு எட்டு கட்டளைகள் (2:22-24)
14. உண்மையான ஊழியக்காரனுடைய சுபாவமும் கடமையும் (2:25-26)
ஒஒஒ. சத்தியத்தை விட்டு விலகுதல் - கிறிஸ்துவின் வருகைக்கு இருபத்திரெண்டு அடையாளங்கள்
1. கடைசி நாட்களின் பண்பு (3:1)
2. சத்தியத்தை விட்டு விலகுபவர்களின் பதினெட்டு சுபாவங்கள் (3:2-4)
3. சத்தியத்தை விட்டு விலகுபவர்களின் ஏழு பாவங்கள் (3:5-9)
ஒய. சொந்த குறிப்புக்களும் கட்டளைகளும்
1. பவுலின் ஜீவியம், ஊழியம் ஆகியவற்றின் ஒன்பது அம்ச சுபாவம் (3:10-11)
2. மானிட அனுபவத்தின் இரண்டு மாறாத பிரமாணங்கள் (3:12-13)
3. தீமோத்தேயுவிற்குக் கட்டளை (3:14)
4. வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது (3:15-17)
5. தீமோத்தேயுவிற்கு ஏழு கட்டளைகள் (4:1-2)
6. சத்தியத்தை விட்டு விலகுவது மறுபடியும் முன்னறிவிக்கப்படுகிறது (4:3-4)
7. தீமோத்தேயுவிற்கு நான்கு கட்டளைகள் (4:5)
8. தனது மரணத்தைப் பற்றி பவுலின் சாட்சி (4:6-8)
9. தீமோத்தேயுவிற்கு ஐந்து கட்டளைகள் (4:9-13)
10. பவுலை விட்டு விலகியவன் (4:14-16)
11. சாத்தானிடமிருந்தும் துன்மார்க்கரிடமிருந்தும் பவுலின் இரட்சிப்பு (4:17-18)
ய. நிருபத்தின் முடிவுரை - சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் (4:19-22)