15 சங்கீதம்
விளக்கம்
நீதிமானின் இரண்டாவது சங்கீதம்
பொருளடக்கம்
1. மனுஷன் கேட்கும் மிகப்பெரிய கேள்வி - (15:1)
2. தேவனுடைய பதில் - பரிபூரண மனுஷன் - நீதிமானிடமும் பரிபூரண மனுஷனிடமும் காணப்படும் பன்னிரெண்டு குணாதிசயங்கள் - (15:2-5)
பதினைந்தாவது சங்கீதம் நமக்கு பரலோகத்திற்குப் போகும் வழியைக் காண்பிக்கிறது. இந்த சங்கீதத்தில் நமக்குப் பிரயோஜனமுள்ள சத்தியங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் சந்தோஷமாகயிருக்கவேண்டுமென்றால் நமக்குள் பரிசுத்தம் இருக்கவேண்டும். நாம் உண்மையுள்ளவர்களாகவும், கண்ணியமுள்ளவர்களாகவும் இருந்தால் மாத்திரமே நமக்கு மெய்யான சந்தோஷம் கிடைக்கும்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே நமக்கு மெய்யான வழியாக இருக்கிறார். பிதாவினிடத்தில் போவதற்கு குமாரனாகிய இயேசுகிறிஸ்துவைத் தவிர நமக்கு வேறு வழி எதுவும் நியமிக்கப்படவில்லை. நமக்கு இயேசுகிறிஸ்து மாத்திரமே வழியாக இருக்கவேண்டும். நாம் அவருக்குள் நடக்கவேண்டும். அவருடைய உபதேசங்களைக் கைக்கொண்டு, அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்லவேண்டும்.
ஒருவன் இயேசுகிறிஸ்துவிடம் வந்து, அவரை நோக்கி ""நல்ல போதகரே நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும்'' என்று கேட்டான். இயேசுகிறிஸ்து அவனுக்குப் பிரதியுத்தரமாக, ""நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள்'' என்று சொன்னார் (மத் 19:16,17). இயேசுகிறிஸ்துவின் உபதேசம் என்றும் மாறாத நித்திய சத்தியமாயிருக்கிறது.
தாவீது இந்த சங்கீதத்தை ஆரம்பிக்கும்போது, ஒரு கேள்வியைக் கேட்டு ஆரம்பிக்கிறார் (சங் 15:1). தாவீது கேட்கிற கேள்வியை நாமும் நமக்குள் கேட்டுக்கொள்ளவேண்டும். கர்த்தர் நியமித்திருக்கிற பாதையில் நாம் நடக்கிறோமா என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும். தாவீது கேட்ட கேள்விக்கு, இந்த சங்கீதத்தில் அவரே பதிலும் சொல்லுகிறார் (சங் 15:2-5).
இந்த சங்கீதத்தில் சொல்லப்பட்டிருக்கிற குணாதிசயங்களை உடையவர்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கு தேவனுடைய சமாதானமும், சந்தோஷமும், பாதுகாப்பும் உண்டாயிருக்கும். தாவீது இந்த சங்கீதத்தில் சொல்லியிருக்கிற ஆலோசனைகளின் பிரகாரமாக நாமும் பயபக்தியோடு நடக்கவேண்டும்.
பரிசுத்த பர்வதம்
சங் 15:1. கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்?
கர்த்தருடைய பிள்ளைகள் சீயோனில் வாசம்பண்ணுவார்கள். இவர்களுடைய சுபாவம் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என்று தாவீது விவரமாகச் சொல்லுகிறார். சீயோனின் பிரஜைகளைப்பற்றிச் சொல்லும்போது, ""கர்த்தாவே யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்'' என்று தாவீது ஒரு கேள்வி கேட்கிறார். பரலோகத்திற்கு யாரெல்லாம் போவார்கள் என்று அறிந்து கொள்ள தாவீது பிரியப்படுகிறார்.
கர்த்தர் தம்முடையவர்களை பேர்பேராக அறிந்திருக்கிறார். நம்முடைய பெயர் பிரஸ்தாபத்தைச் சொல்லி நம்மால் பரலோகத்திற்குப் போகமுடியாது. மனுஷன் பெயரைப் பார்க்கிறான். கர்த்தரோ நம்முடைய இருதயத்தையும், நம்முடைய குணாதிசயங்களையும் பார்க்கிறார். கர்த்தர் எதிர்பார்க்கிற குணாதிசயங்கள் நம்மிடத்தில் இருந்தால் மாத்திரமே, நம்மால் பரலோகத்திற்குப் போகமுடியும்.
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது, நமக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய சிலாக்கியம். கர்த்தருக்குரியவர்கள் பரலோகத்தில் பிரவேசிப்பார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் தேவனுடைய விசேஷித்த ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் மாத்திரமே அவருடனேகூட நித்திய இளைப்பாறுதலில் பிரவேசிப்பார்கள். அவர்கள் மாத்திரமே தேவனுடைய நித்திய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வார்கள்.
தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு விசேஷித்த ஆசீர்வாதங்களை வாக்குப்பண்ணியிருக்கிறார். நாம் கர்த்தருடைய சமுகத்தில் வந்து நம்மை ஆராய்ந்து பார்க்கவேண்டும். நம்மிடத்தில் தேவனுக்குப் பிரியமான சிந்தனைகள் இருக்கிறதா, நாம் தேவனுக்குப் பிரியமான கிரியைகளை நடப்பிக்கிறோமா என்பதையெல்லாம் நமக்கு நாமே ஆராய்ந்து பார்க்கவேண்டும். தேவனுடைய கூடாரத்தில் தங்குவதற்கு நாம் எப்படியிருக்கவேண்டும் என்பதையும், நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் கர்த்தருடைய சமுகத்தில் வந்து நமக்கு நாமே கேள்வி கேட்டுக்கொள்ளவேண்டும். நம்முடைய கேள்வியை கர்த்தரிடத்திலும் கேட்கலாம்.
ஒரு சமயம் தலைவன் ஒருவன் இயேசுகிறிஸ்துவிடம் வந்து ""நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே. விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, கொலைசெய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார் (லூக் 18:18-20).
பவுலும் சீலாவும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். தேவனுடைய வல்லமையினால் சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அதிர்ந்தது. சிறைச்சாலையின் கதவுகளெல்லாம் திறவுண்டது. பவுல் சீலா ஆகியோரின் கட்டுக்கள் கழன்றுபோயிற்று. சிறைச்சாலைக்காரன் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தான். அவன் பவுலிடமும் சீலாவிடமும், ""ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்'' என்று கேட்டான். அதற்கு அவர்கள், ""கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்'' என்று சொன்னார்கள் (அப் 16:30,31).
""கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்'' என்னும் கேள்வியை தாவீது கர்த்தரிடத்திலேயே கேட்கிறார். ""கூடாரம்'' என்னும் வார்த்தை பழைய ஏற்பாட்டில் அதிகமாய்ப் பயன்படுத்தப்பட்டிருக்கிற வார்த்தை. கர்த்தருடைய கூடாரம் என்பது அவருடைய வாசஸ்தலத்தைக் குறிக்கிறது. மோசேயின் காலத்தில் கர்த்தருக்கு கூடாரம் ஸ்தாபிக்கப்பட்டது. கூடாரம் மிகவும் எளிமையானது. இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் பிரயாணம் பண்ணியபோது, கூடாரத்தை தங்களோடு எளிதில் எடுத்துச் செல்லும் விதமாக, அதை மிகவும் எளிமையாகப் போட்டார்கள். பழைய ஏற்பாட்டில் ""கர்த்தருடைய கூடாரம்'' என்னும் வார்த்தை, புதிய ஏற்பாட்டில், ""கர்த்தருடைய சபை'' என்று அழைக்கப்படுகிறது.
கர்த்தர் தம்முடைய கூடாரத்தில் வாசம்பண்ணுகிறார். தம்முடைய வல்லமையை அங்கு விசேஷித்த பிரகாரமாக வெளிப்படுத்துகிறார். தேவனுடைய மகிமையின் பிரசன்னம் அவருடைய கூடாரத்தில் தங்கியிருக்கிறது. கர்த்தர் தம்முடைய ஜனங்களை தம்முடைய கூடாரத்தில் சந்திக்கிறார். கர்த்தருடைய கூடாரம் சாட்சியின் கூடாரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கூடாரம் கர்த்தருடைய பிள்ளைகள் கூடிவந்து அவரை ஆராதிக்கிற கூடாரம்.
தாவீது கர்த்தரிடத்தில் மேலும் ஒரு கேள்வியை கேட்கிறார். ""யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்'' என்று தாவீது கேட்கிறார். பரிசுத்த பர்வதம் என்பது கர்த்தருடைய சபையைக் குறிக்கிற வார்த்தை. கர்த்தருடைய சபை சீயோன் மலையோடு ஒப்பிட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது. சாலொமோன் ராஜா சீயோன் மலைமீது கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டினார்.
கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தில் யாரெல்லாம் வாசம்பண்ணுவார்கள் என்பதை அறிந்துகொள்ள தாவீது ஆவலாயிருக்கிறார். பரிசுத்த பர்வதம் கர்த்தர் வாசம்பண்ணுகிற பரிசுத்த ஸ்தலம். அந்த ஸ்தலத்தில் அவரோடுகூட, அவருடைய பரிசுத்தவான்களெல்லாரும் வாசம்பண்ணுவார்கள். நாமும் கர்த்தரோடும், அவருடைய பிள்ளைகளோடும் ஐக்கியமாயிருக்கவேண்டும். கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணவேண்டுமென்னும் வாஞ்சை நமக்குள் இருக்கவேண்டும்.
கூடாரம், பரிசுத்த பர்வதம் என்பது சீயோன் மலை, தேவனுடைய நகரம், புதிய எருசலேம் என்பதைக் குறிக்கும். தேவன் இங்கு வாசம் பண்ணுகிறார் (எபி 12:22-23; வெளி 14:1). தங்குதல், வாசம் பண்ணுதல் என்பது எப்போதாவது போய் வருதல் என்று பொருள் படாது. தொடர்ந்து தங்குவதைக் குறிக்கும். பக்தியில்லாதவன் கூட தேவாலயத்திற்குப் போகலாம். ஆனால் தேவனுடைய கூடாரத்தில் தங்க வேண்டுமானால் சங் 15:2-5 இல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும்.
உத்தமன்
சங் 15:2. உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.
தாவீது கர்த்தருடைய சமுகத்தில் இரண்டு கேள்விகளைக் கேட்டுவிட்டு, பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால் அதற்குரிய பதிலையும் சொல்லுகிறார். கர்த்தருடைய கூடாரத்தில் தங்குகிறவர்கள் எப்படிப்பட்ட சுபாவமுள்ளவர்களாயிருக்க வேண்டுமென்று விவரமாய்ச் சொல்லுகிறார். பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுகிறவர்கள் உத்தமர்களாய் நடந்துகொள்ளவேண்டும். அவர்கள் உண்மையுள்ளவர்களாகவும், கண்ணியமுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்.
""ஆபிராம் தொண்ணூற்றென்பது வயதானபோது கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வல்லமையுள்ள தேவன்: நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப் பண்ணுவேன் என்றார்'' (ஆதி 17:1,2). கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்ன வார்த்தையை நமக்கும் சொல்லுகிறார். நாமும் கர்த்தருக்கு முன்பாக நடக்கவேண்டும். உத்தமர்களாயிருக்கவேண்டும். ஆதியாகமம் புஸ்தகத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிற எபிரெய வார்த்தையே சங் 15:2-ஆவது வசனத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
நாம் கர்த்தருடைய சமுகத்தில் உத்தமர்களாயிருக்கும்போது தேவன் நமக்கு எல்லாவற்றிற்கும் போதுமானவராயிருப்பார். கர்த்தருடைய பரிபூரணமான ஆசீர்வாதம் நம்மீது தங்கியிருக்கும். உத்தமர்களின் பேச்சுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இருக்காது. அவர்கள் செய்வதை மாத்திரம் சொல்லுவார்கள். சொல்லுவதை நிச்சயமாய்ச் செய்வார்கள். அவர்களுடைய இருதயம் சுத்தமாயிருக்கும். அவர்களுடைய இருதயத்தில் தேவனைப்பற்றும் விசுவாசம் நிரம்பியிருக்கும். அவர்கள் கர்த்தரை தங்கள் தேவனாகவும் ஆண்டவராகவும் அங்கீகரித்திருப்பார்கள்.
உத்தமர்கள் நீதியை நடப்பிப்பார்கள். எல்லா காரியங்களிலும் இவர்கள் உண்மையுள்ளவர்களாய் நடந்துகொள்வார்கள். இவர்களுடைய சரீரம் ஒருவேளை பலவீனமாயிருக்கலாம். இவர்களுடைய கண்கள் சரீரபலவீனத்தினால் பார்வை குறைந்து காணப்படலாம். ஆனாலும் இவர்களுடைய பார்வையில் தெளிவு இருக்கும். இவர்கள் அங்கும் இங்கும் நோக்கிப் பார்க்காமல், கர்த்தரை மாத்திரமே நோக்கிப் பார்ப்பார்கள். கர்த்தரே இவர்களுடைய இலக்கு. இவர்களுடைய சிந்தையில் கபடம் இருக்காது.
நாத்தான்வேல் இயேசுகிறிஸ்துவிடம் வந்தார். இயேசுகிறிஸ்து நாத்தான்வேலைப் பார்த்து, ""இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்'' என்று சொன்னார் (யோவா 1:47). நாம் கர்த்தருடைய சமுகத்தில் வரும்போது, கர்த்தர் நம்மையும் பார்த்து இப்படிப்பட்ட நல்வார்த்தையைச் சொல்லவேண்டும். மனுஷர் நம்மை புகழ்ந்து பேசுவதைவிட, கர்த்தர் நம்மைக் குறித்து சொல்லுகிற நற்சாட்சியே மேன்மையானது.
அப்போஸ்தலர் பவுல் கொரிந்தியருக்கு எழுதின இரண்டாவது நிருபத்தில், தங்களிடத்தில் காணப்படுகிற நற்குணத்தைப்பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார். ""மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ் சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது'' (2கொரி 1:12). கபடமில்லாமல் திவ்விய உண்மையோடு நடப்பதே விசுவாசிகளாகிய நம்மிடத்தில் காணப்பட வேண்டிய நற்குணம்.
உத்தமர்கள் நீதியை நடப்பிப்பார்கள். தங்களுடைய பேச்சுக்களிலும் கிரியைகளிலும் உண்மையுள்ளவர்களாயும், கண்ணியமுள்ளவர்களாயும், நீதியுள்ளவர்களாயும் இருப்பார்கள். நீதியை நடப்பிக்கிறவர்கள் பொய் பேசமாட்டார்கள். பொய்பேசுவதினால் தங்களுக்கு வரும் ஆதாயத்தை நீதிமான்கள் வெறுத்துவிடுவார்கள். உண்மை பேசுவதினால் தங்களுக்கு தீங்கு வந்தாலும், அதைப் பொறுமைப்போடு சகித்துக்கொள்வார்கள்.
சத்தியத்தைப் பேசவேண்டுமென்று உத்தமர்களை யாரும் கட்டாயப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் மனதார சத்தியத்தைப் பேசுவார்கள். இவர்கள் கர்த்தருடைய கூடாரத்தில் தங்குகிறவர்கள். அவருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுகிற சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறவர்கள். இவர்கள் மற்றவர்களுக்கு தீங்கு நினைக்கவும் மாட்டார்கள். தீங்கு செய்யவும் மாட்டார்கள். நீதியை நடப்பிப்பதிலும், சத்தியத்தைப் பேசுவதிலும் மாறுபாடில்லாமல் நிலைத்திருப்பார்கள். தங்களுக்கு நஷ்டம் வந்தாலும், தீங்கு நேரிட்டாலும், இவர்கள் நீதியை நடப்பிப்பதிலிருந்து பின்வாங்கிப் போய்விடமாட்டார்கள்.
நீதிமானின் குணாதிசயங்கள்
1. உத்தமனாய் நடப்பான்
2. நீதியை நடப்பிப்பான்
3. மனதார சத்தியத்தைப் பேசுவான்
4. புறங்கூறமாட்டான் (சங் 15:3).
5. தோழனுக்கு தீங்கு செய்யமாட்டான்
6. அயலான் மேல் நிந்தையான பேச்சை எடுக்க மாட்டான்
7. ஆகாதவன் அவன் பார்வைக்குக் தீழ்ப்பானவன் (சங் 15:4).
8. கர்த்தருக்குப் பயந்தவர்களைக் கனம் பண்ணுவான்
9. தனக்கு நஷ்டம் வந்தாலும் தன் ஆணையில் தவறமாட்டான்
10. மற்றவர்களுடைய கஷ்டத்தில் தன் வசதியைப் பெருக்கிக் கொள்ளமாட்டான் (சங் 15:5).
11. பரிதானம் வாங்கமாட்டான்
12. குற்றமில்லாதவனைப் பாதுகாப்பான்
நாவினால் புறங்கூறுவது
சங் 15:3. அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.
உத்தமனாய் நடக்கிறவர்களால் மற்றவர்களுக்கு ஒரு தீங்கும் உண்டாகாது. உத்தமர்கள் தங்களுடைய தோழருக்கும், அயலாருக்கும் தங்களால் முடிந்த நன்மைகளை மாத்திரமே செய்வார்கள். தங்களுடைய தோழருக்கு தீங்கு செய்துவிடாதவாறு மிகவும் கவனத்தோடிருப்பார்கள். தங்களுடைய தோழரையும் அயலாரையும் மதித்து, அவர்களோடு மரியாதையோடு நடந்துகொள்வார்கள். தங்களுடைய அயலாருடைய நற்பெயருக்கு களங்கம் உண்டுபண்ணமாட்டார்கள்.
உத்தமர்கள் தங்களால் முடிந்தவரையிலும் பிறருக்கு உபகாரம் செய்வார்கள். இவர்கள் ஒருபோதும் யாருக்கும் உபத்திரவம் செய்யமாட்டார்கள். இவர்களுடைய அயலாரைப்பற்றி மற்றவர்கள் ஒருவேளை நிந்தையான பேச்சுக்களைப் பேசலாம். அப்படிப்பட்ட பேச்சுக்களை இவர்கள் செவிகொடுத்து கேட்கமாட்டார்கள். தங்களுடைய அயலாரைப்பற்றி இவர்களும் அவதூறாகப் பேசமாட்டார்கள். மற்றவர்கள் அவதூறப்பேசினாலும் அதை இவர்கள் கவனித்துக் கேட்கவுமாட்டார்கள்.
ஒருவேளை இவர்களுடைய அயலாரைப்பற்றி இவர்களிடத்தில் யாராவது நிந்தையான பேச்சுக்களைச் சொன்னால், அதை எல்லோரிடமும் சொல்லி, அந்த நிந்தையான பேச்சை பெரிதுபடுத்தமாட்டார்கள். மற்றவர்களைப்பற்றி சொல்லப்படும் நிந்தையான பேச்சை இவர்கள் தங்களுக்குள் அடக்கி வைத்துக்கொள்வார்கள். மற்றவர்களைப்பற்றிய பேச்சுக்களெல்லாம் இவர்கள் மரிக்கும்போது, அவர்களோடுகூட அடக்கம்பண்ணப்படும். அன்பு திரளான பாவங்களை மூடும். உத்தமர்களுடைய அன்பு ஏராளமான பாவங்களை மூடிவிடும்.
நாவின் தவறான பயன்பாடுகள்
1. கோள் சொல்லுதல் (உபா 22:13-19)
2. கதை சொல்லுதல் (லேவி 19:16; நீதி 11:13)
3. பொய்ச்சாட்சி கூறுதல் (யாத் 20:16; யாத் 23:7)
4. முணுமுணுத்தல் (ரோமர் 1:29)
5. அவதூறு சொல்லுதல் (1தீமோ. 3:11)
6. தவறாக குற்றஞ்சாட்டுதல் (தீத்து 2:3)
7. வீண் பேச்சு பேசுதல் (தீத்து 1:10)
8. தூஷித்தல் (எரே 20:10)
9. அர்த்தமில்லாமல் பேசுதல் (1தீமோ 5:13)
10. பொய்பேசுதல் (நீதி 6:17; வெளி 21:8; வெளி 22:15)
11. ஏமாற்றுதல் (வெளி 12:9)
12. புறங்கூறுதல் (சங் 15:3; ரோமர் 1:30)
ஆணையிடுவது
சங் 15:4. ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.
இந்த உலகத்து ஜனங்கள் மனுஷருடைய அந்தஸ்து, ஐசுவரியம், செல்வாக்கு ஆகியவற்றைப் பார்த்து அவர்களைக் கனம்பண்ணுகிறார்கள். வெளித்தோற்றமே உலகத்து ஜனங்களுக்கு மிகவும் முக்கியம். கர்த்தருடைய பிள்ளைகள் உலகப்பிரகாரமான ஜனங்களைப்போல பிறரைப் பார்ப்பதில்லை. உலகத்து ஜனங்கள் மனுஷருடைய பக்தியையும் விசுவாசத்தையும் பார்க்கமாட்டார்கள். அவர்களுடைய பணத்தையும் பதவியையும் மாத்திரம் பார்ப்பார்கள். கர்த்தருடைய பிள்ளைகளோ ஜனங்களுடைய விசுவாசத்தையும் பக்தியையும் பார்த்து, கர்த்தருக்குப் பயந்தவர்களைக் கனம்பண்ணுகிறார்கள்.
கர்த்தருடைய பிள்ளைகள் ஒருவேளை ஏழைகளாகயிருக்கலாம். சமுதாயத்தில் சாதாரண அந்தஸ்துள்ளவர்களாக இருக்கலாம். உலகப்பிரகாரமான ஜனங்கள் இவர்களை மதிக்காமல் அசட்டை பண்ணலாம். உத்தமர்களோ உலகப்பிரகாரமான ஜனங்களைப்போல மனுஷரை நியாயந்தீர்ப்பதில்லை. ஒருவரிடத்தில் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் இருக்கும்போது, அவர் ஏழையாகயிருந்தாலும், நீதிமான் அவரை கனம்பண்ணுவார். கர்த்தருக்குப் பயந்தவர்களை நீதிமான்கள் எங்கும் பார்த்தாலும் அவர்களைக் கனப்படுத்துவார்கள்.
நீதிமான்களுக்கு மனுஷருடைய ஐசுவரியமும், பதவியும், அதிகாரமும், செல்வாக்கும் முக்கியமானதாய் தெரியாது. இவையெல்லாம் உலகப்பிரகாரமான ஜனங்களுக்கு முக்கியம். நீதிமான்களோ உலகப்பிரகாமான ஜனங்களைப்போல நடந்துகொள்ளாமல், நீதிக்குப் பயந்து, கர்த்தருக்கு பிரியமாய் நடந்துகொள்கிறார்கள். நீதி, நியாயம், பயபக்தி, விசுவாசம் ஆகியவை எங்கு காணப்பட்டாலும், அதை அவர்கள் கனம்பண்ணுகிறார்கள்.
உலகப்பிரகாரமான ஜனங்கள் மனுஷருடைய உதவிகளையும், ஒத்தாசைகளையும் அதிகமாய் எதிர்பார்க்கிறார்கள். தங்களுக்கு உதவிசெய்கிறவர்களை கனம்பண்ணுகிறார்கள். உதவிசெய்யாதவர்களையோ, தங்களுக்கு ஆகாதவர்கள் என்று தீர்மானம் செய்து, அவர்களை உதாசினம் பண்ணுகிறார்கள். நீதிமான்களோ மனுஷருடைய உதவிகளை எதிர்பார்க்காமல், கர்த்தருடைய உதவிகளையும் அவருடைய கிருபைகளையும், இரக்கங்களையும் எதிர்பார்க்கிறார்கள்.
நீதிமான்களின் இருதயத்தில் பட்சபாதம் இருக்காது. அவர்கள் எல்லோர்மீதும் ஒரே சீராய் அன்புகூருவார்கள். ஆனாலும் கர்த்தருடைய கூடாரத்தில் தங்குவதற்கு ஆகாதரவர்களாயிருக்கிறவர்களும், அவருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவதற்கு ஆகாதரவர்களாயிருக்கிறவர்களும், நீதிமான்களின் பார்வைக்கு தீழ்ப்பானவர்களாயிருப்பார்கள்.
நீதிமான்களின் இருதயமும், மனச்சாட்சியும் சுத்தமுள்ளதாயிருக்கும். ஒரு காரியத்தை செய்வதாக இவர்கள் வாக்குப்பண்ணினால், அதை நிச்சயம் நிறைவேற்றுவார்கள். தாங்கள் ஆணையிட்டதில் தங்களுக்கு நஷ்டம் வந்தாலும், அந்த ஆணையை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவர்களாயிருப்பார்கள். நீதிமான்கள் லாபம் கருதி ஆணையிடுதல் இல்லை. நஷ்டம் வரும்போது ஆணையைவிட்டு விலகிப்போய்விடுவதில்லை.
நீதிமான்கள் வாக்குமாறாதவர்கள். இவர்களுக்கு உலகப்பிரகாரமான ஐசுவரியங்களோ, சம்பத்துக்களோ முக்கியமானதல்ல. தங்களுடைய வார்த்தையில் உண்மையுள்ளவர்களாயிருக்கவேண்டும். தங்களுடைய ஆணையில் தவறாதவர்களாயிருக்கவேண்டும் என்பதே இவர்களுக்கு முக்கியம். இப்படிப்பட்டவர்களே கர்த்தருடைய கூடாரத்தில் தங்குவார்கள். இப்படிப்பட்ட நல்ல சுபாவங்களை உடையவர்கள் மாத்திரமே கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவார்கள்.
அசைக்கப்படுவதில்லை
சங் 15:5. தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.
உத்தமன் தப்பிதமான வழியில் பொருள் சேர்க்கமாட்டான். அநியாயமான காரியங்களைச் செய்து அவன் தன்னுடைய ஐசுவரியத்தை சேர்க்கமாட்டான். அவனுடைய பேச்சிலும் ஒழுக்கம் இருக்கும். அவனுடைய செயலிலும், தொழிலிலும், வியாபாரத்திலும் ஒழுக்கம் இருக்கும். நீதிமான் நீதியும், நேர்மையும், கண்ணியமுமுள்ளவன். அவன் தன்னுடைய பணத்தை வட்டிக்குக்கொடுக்கமாட்டான். மற்றவர்களுடைய உழைப்பில் இவன் சுகமாய் ஜீவிக்கமாட்டான்.
நீதிமான் பிறரிடம் கடன்வாங்கினால், தான் வாங்கி கடனை ஏமாற்றாமல், சரியாகத் திருப்பி செலுத்திவிடுவான். நீதிமான் மற்றவர்களுக்கு கடன்கொடுத்தால் அவர்களிடத்தில் அநியாய வட்டி வாங்கமாட்டான். நீதிமான் தன்னுடைய வீடுகளில் வாடகைக்கு குடியிருப்போரை தேவையில்லாமல் துன்பப்படுத்தமாட்டான். ஒருவேளை நீதிமான் பிறருடைய வீட்டில் வாடகைக்கு குடியிருக்க வேண்டியது வருமென்றால், அவன் வீட்டின் சொந்தக்காரரை வஞ்சிக்கமாட்டான்.
கர்த்தருடைய கூடாரத்தில் தங்குகிறவர்களும், தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுகிறவர்களும் சீயோனுக்கு சொந்தக்காரர்கள். இவர்கள் சீயோனின் பிரஜைகள். இவர்கள் தங்களால் முடிந்தவரையிலும் பிறருக்கு உதவி செய்வார்கள். வட்டி வாங்காமலேயே மற்றவர்களுக்கு மனப்பூர்வமாய்க் கடன்கொடுப்பார்கள். தன்னிடத்தில் கடன்பட்டவர்களிடம் கடினமாய் நடந்துகொள்ளமாட்டார்கள். ஏழைகள்மீது இரக்கம் காண்பிப்பார்கள்.
நீதிமான் குற்றமில்லாதவனுக்கு விரோதமாய் பரிதானம் வாங்கமாட்டான். கர்த்தருடைய பிள்ளைகள் உத்தியோகம் பார்க்கும்போது கர்த்தருக்குச் சாட்சியாக பணிபுரியவேண்டும். சுயஆதாயத்திற்காக லஞ்சம் வாங்கக்கூடாது. குற்றமில்லாதவனுக்கு விரோதமாக எந்தக் காரியத்தையும் செய்யக்கூடாது. பரிதானம் வாங்கிக்கொண்டு பிறருக்குத் தீங்கு செய்துவிடக்கூடாது. உத்தமன் நீதியை நடப்பிக்கவேண்டும். சத்தியத்தை மனதார பேசவேண்டும். சத்தியத்திற்கு மனப்பூர்வமாய்க் கீழ்ப்படியவேண்டும். பணத்திற்கு ஆசைப்பட்டு சாட்சியை இழந்துவிடக்கூடாது.
சீயோனில் குடியிருக்கிறவர்கள் சீயோன் மலையைப்போல உறுதியாயிருப்பார்கள். சீயோன் மலை ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை. கர்த்தருடைய கூடாரத்தில் தங்குகிறவர்களும், அவருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுகிறவர்களும் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.
கர்த்தருடைய சபையில் மெய்யான விசுவாசிகளாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள். சபை என்றென்றும் அசைக்கப்படாததுபோல விசுவாசிகளும் என்றென்றும் அசைக்கப்படாதவர்களாயிருப்பார்கள். பாதாளத்தின் வாசல்கள் சபையை மேற்கொள்வதில்லை. சபை இயேசுகிறிஸ்துவாகிய அஸ்திபாரத்தின் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. சபையை எந்த அந்தரகார சக்தியாலும் அசைக்கமுடியாது. அதுபோலவே நம்முடைய விசுவாசத்திற்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அஸ்திபாரமாயிருக்கும்போது, நம்மையும் யாராலும் அசைக்கமுடியாது.
கர்த்தருடைய பிள்ளைகள் நீதியுள்ளவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும், இரக்க குணமுள்ளவர்களாகவும், பிறருக்குத் தீங்கு செய்யாதவர்களாகவும் இருக்கவேண்டும். இப்படிப்பட்டவர்கள் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை என்று சொல்லி தாவீது இந்த சங்கீதத்தை நிறைவுசெய்கிறார்.