சங்கீதம் 16 விளக்கம்




16 சங்கீதம்

(தாவீது எழுதின மிக்தாம் என்னும் பொற்பணதிக்கீதம்.)

மேசியாவைப்பற்றிய மூன்றாவது சங்கீதம்

பொருளடக்கம்

1. தாவீது பரிசுத்தவான்கள், அப்போஸ்தலர் ஆகியோரைப் பற்றியது - (16:1-4) 

2. மேசியாவைப் பற்றியது - (16:5-11) 

பதினாறாவது சங்கீதத்தில் தாவீதைப்பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. அதே வேளையில், இந்த சங்கீதத்தில், தாவீதைவிட இயேசுகிறிஸ்துவைப்பற்றியும் அதிகமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சங்கீதத்தின் ஆரம்பத்தில் தியான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தைகள்  தாவீதின் வார்த்தைகள் என்று சொல்லுவதைவிட, இவை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய வார்த்தைகள் என்று சொல்லுவது பொருத்தமாயிருக்கும். 

இந்த சங்கீதத்தின் முடிவில் உயிர்த்தெழுதலின் நிச்சயத்தைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.  இயேசுகிறிஸ்துவே  மரித்தோரின் முதற்பலனாக உயிர்த்தெழுந்தவர். இந்த வாக்கியம் தாவீதைக் குறிக்காமல் இயேசுகிறிஸ்துவையே குறிக்கிறது.

அப்போஸ்தலர் பேதுரு இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப்பற்றி  இவ்வாறு சொல்லியிருக்கிறார். ""தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது''  (அப் 2:24).  

அப்போஸ்தலர் பவுலும் இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப்பற்றி இவ்வாறு சொல்லுகிறார். ""அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்-யிருக்கிறது.  தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான். தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை''  (அப் 13:35-37). 

கர்த்தருடைய பிள்ளைகள் எல்லோருமே  அவரிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். கர்த்தரைப்பற்றும் தங்களுடைய விசுவாசத்தை  அறிக்கை செய்கிறார்கள். தாவீதும் கர்த்தருடைய மற்ற பிள்ளைகளைப்போல  தன்னுடைய விசுவாசத்தை  அறிக்கை செய்கிறார்          (சங் 16:1). தாவீது கர்த்தரை தன்னுடைய ஆண்டவராக அங்கீகரித்திருக்கிறார் (சங் 16:2). கர்த்தருடைய பிள்ளைகள்மீது  தாவீது அன்பாயிருக்கிறார்.  தன்னுடைய இருதயத்தில் கர்த்தரை மெய்யாய் ஆராதிக்க வேண்மென்று வாஞ்சையோடிருக்கிறார்.  

புதிய ஏற்பாட்டிலே கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மனுஷகுமாரனாக தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். பழைய ஏற்பாட்டிலோ   இயேசுகிறிஸ்துவுக்கு  தாவீதே முன்னடையாளமாக இருக்கிறார். தாவீது தன்னைப்பற்றிச் சொல்லும்போது, அவர் இயேசுகிறிஸ்துவின் வாக்கியத்தைச் சொல்லுகிறார். தாவீது சொல்லுகிற வாக்கியங்கள் அவரையும் குறிக்கிறது.  அதே வேளையில் அந்த வாக்கியங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் குறிக்கிறது.

அப்போஸ்தலர் பேதுரு தாவீதின் வாக்கியத்தை பெந்தெகொஸ்தே நாளில் இவ்வாறு மேற்கோளாகச் சொல்லுகிறார்.  ""தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது. அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்குமுன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்; அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்;  என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்; ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்'' (அப் 2:24-28). 

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே உலகஇரட்சகர். அவரே மனுஷருடைய  ஆத்தும மீட்பர்.  மீட்பரின் ஊழியத்திலும் பாடுகளிலும்  பிதாவாகிய தேவனுடைய பிரசன்னம் அவரோடு கூடயிருக்கிறது      (சங் 16:8). இயேசுகிறிஸ்து  மரித்தோரிலிருந்து முதற்பலனாக உயிர்த்தெழுந்து  மகிமையடைந்திருக்கிறார்.  பிதாவின் வலதுபாரிசத்தில்  இயேசுகிறிஸ்துவுக்கு நித்திய பேரின்பம் உண்டு (சங் 16:9-11). 

தாவீதின் ஜெபம்

தேவனே

தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்  (சங் 16:1).

  பதினாறாவது சங்கீதத்தில் மிக்தாம் என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மிக்தாம் என்னும் வார்த்தை பொற்பணதிக்கீதம் என்றும் அழைக்கப்படுகிறது. பொற்பணதிக்கீதம் என்னும் வார்த்தைக்கு பசும்பொன்னைப் போன்ற சுத்தகீதம் என்றும், சொக்க தங்கத்தைப்போன்று  விலையேறப்பெற்ற கீதம் என்றும் பொருள் சொல்லலாம். இந்த சங்கீதம் பசும்பொன்னைப்போல அதிக மதிப்புள்ளது. 

பதினாறாவது சங்கீதம் இயேசுகிறிஸ்துவைப்பற்றியும், அவருடைய உயிர்த்தெழுதலைப்பற்றியும் சொல்வதினால் இது  மிகவும் முக்கியமான      சங்கீதமாகும்.  பழைய ஏற்பாட்டிலே இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சத்தியம்  மறைபொருளாக, ஒரு பொக்கிஷம்போல  புதைந்திருக்கிறது.  

தாவீது  தன்னுடைய சத்துருக்களுக்கு  தப்பித்து ஓடுகிறார்.  தனக்கு  தேவனுடைய பாதுகாப்பு வேண்டுமென்று  கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். ""தேவனே என்னைக் காப்பாற்றும்'' என்று கர்த்தரிடத்தில்  அபயமிடுகிறார். தன்னுடைய மரணங்களிலிருந்தும், விசேஷமாக  தன்னுடைய பாவங்களிலிருந்தும் தன்னைக் காப்பாறுமாறு  தாவீது  கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார்.  தாவீதுக்கு பல சமயங்களில்  மரண ஆபத்து உண்டாயிற்று. பல வேளைகளில் அவர்  பாவத்தில் விழுந்துவிடக்கூடிய சூழ்நிலையில் இருந்தார். 

தாவீது கர்த்தரையே நம்பியிருக்கிறார். அவருடைய முழுஆத்துமாவும், முழுஇருதயமும்  கர்த்தரிடத்தில் மாத்திரமே நம்பிக்கை வைத்திருக்கிறது. தாவீதின் ஜெபத்தை இயேசுகிறிஸ்துவும் ஏறெடுக்கிறார். ""பிதாவே இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால், நீங்கும்படி செய்யும்'' என்று இயேசுகிறிஸ்து பிதாவிடத்தில் விண்ணப்பம்பண்ணினார். பிதாவானவர்  தம்மை விடுவிப்பார் என்று  இயேசுகிறிஸ்துவும் பிதாவினிடத்தில் நம்பிக்கை வைத்திருந்தார்.

தேவரீர்

என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர் என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல்;   (சங் 16:2) 

தாவீது கர்த்தரை ""தேவரீர்'' என்று அழைக்கிறார். தேவரீர் என்பதற்கான எபிரெய வார்த்தை ""அதோனாய்'' என்பதாகும். அதோனாய் என்னும் பெயருக்கு ""ஆண்டவர்'' என்று பொருள் சொல்லலாம், ""பாதுகாக்கிறவர்'' என்றும் பொருள் சொல்லலாம். கர்த்தரே தாவீதை பாதுகாக்கிறவர். அவருடைய இருதயத்தைப் பெலப்படுத்துகிறவர். 

தாவீது கர்த்தரை நோக்கி, ""தேவரீர், என் ஆண்டவராயிருக்கிறீர்'' என்று சொல்லுகிறார்.  தாவீது கர்த்தருக்குத் தன்னைப் பரிபூரணமாக ஒப்புக்கொடுக்கிறார். கர்த்தரை தன்னுடைய இருதயத்தில்  தேவனாகவும், ஆண்டவராகவும் அங்கீகரிக்கிறார்.  தாவீதின் நெஞ்சம் கர்த்தரைத் தன்னுடைய தேவனாகவும் ஆண்டவராகவும் அங்கீகரிக்கிறது.  கர்த்தரே  தன்னைப் பாதுகாக்கிறவர் என்று  தாவீது நிச்சயமாய் நம்புகிறார்.  இந்த நம்பிக்கையோடு  தாவீது கர்த்தரிடத்தில், ""தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்'' என்று விண்ணப்பம்பண்ணுகிறார். 

மகாத்துமாக்கள்

 பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப்பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்            (சங் 16:3). 

தாவீது கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்கு நன்மை செய்து தேவனைக் கனப்படுத்துகிறார். கர்த்தருடைய பரிசுத்தவான்களை மகாத்துமாக்கள் என்று அழைக்கிறார். பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கு நன்மை செய்வது தாவீதுக்குப் பிரியமாயிருக்கிறது.  பரிசுத்தவான்களுக்குச் செய்கிற ஊழியமானது  கர்த்தருக்குச் செய்கிற ஊழியத்திற்கு ஒப்பாயிருக்கிறது.  

தன்னுடைய செல்வம் கர்த்தருக்கு வேண்டியதில்லை என்று தாவீது தன்னுடைய மனதிலே தீர்மானம் செய்திருக்கிறார்.  அந்த செல்வம் கர்த்தருக்கு வேண்டியதில்லாமல் போனாலும், அது பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. கர்த்தர் நம்முடைய தேவனாக இருக்கும்போது, நாம் அவருடைய நாமத்தினிமித்தம், அவருடைய பரிசுத்தவான்களுக்கு உதவிபுரியவேண்டும். இந்தப் பூமியிலுள்ள பரிசுத்தவான்களின் நன்மைகளை நம்மால் முடிந்த வரையிலும் விசாரிக்கவேண்டும். 

தம்முடைய பிள்ளைகளுக்குச் செய்கிற உதவி, தமக்கே செய்யப்படுகிற ஊழியம் என்று  கர்த்தரும் அங்கீகரிக்கிறார். பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கு ஆதரவும் உதவிகளும் தேவைப்படுகிறது.  கர்த்தருடைய பிள்ளைகள்  அவர்களை ஆதரிக்கவேண்டும்.  தங்களால் முடிந்த எல்லா உதவிகளையும் அவர்களுக்குச் செய்யவேண்டும்.  பூமியிலுள்ள பரிசுத்தவான்கள் தேவனுடைய கிருபையினால் தங்கள் இருதயத்தில் புதிதாக்கப்பட்டவர்கள். தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துவதற்காக அவர்கள் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். 

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பூமியிலுள்ள பரிசுத்தவான்கள்மீது பிரியமாயிருக்கிறார்.  அவர்களுடைய நன்மைகளை விசாரிக்கிறார். பரிசுத்தவான்களிடத்தில் பலவீனங்கள் காணப்பட்டாலும், சில குறைகள் காணப்பட்டாலும் இயேசுகிறிஸ்துஅவர்கள்மீது பிரியமாயிருக்கிறார்.     அவர்களை ஆசீர்வதிக்கிறார். ""அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே  பரிசுத்தமாக்குகிறேன்'' என்று இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் வேண்டிக்கொள்கிறார் (யோவா 17:19). 

தாவீது பூமியிலுள்ள பரிசுத்தவான்கள்மீது தன்னுடைய முழுப்பிரியத்தையும் வைத்திருக்கிறார். ஆகையினால் அவர் பரிசுத்தவான்களை  மகாத்துமாக்கள் என்று அழைக்கிறார். தன்னுடைய செல்வம் கர்த்தருக்கு வேண்டியதாயிராமல், மகாத்துமாக்களுக்கு  வேண்டியதாயிருக்கிறது என்று தாவீது கர்த்தருடைய சமுகத்தில் அறிக்கை செய்கிறார்.  

அந்நிய தேவன்

அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானப-களை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்  (சங் 16:4). 

தாவீது அந்நிய தேவனை ஆராதிப்பதில்லை. அந்நிய தேவனை ஆராதிப்பவர்களோடு தாவீது ஐக்கியமாகவும் இருக்கமாட்டார்.  அவர்களுடைய ஆராதனையை தாவீது அங்கீகரியாமல் புறக்கணித்துவிடுகிறார். அந்நிய தேவனை நாடி  பின்பற்றுகிறவர்களுக்கு  வேதனைகள் பெருகும் என்று சொல்லி அவர்களுடைய அழிவை முன்னறிவிக்கிறார். அவர்கள்மீது தேவனுடைய நீதியான நியாயத்தீர்ப்பு வரும். அந்நிய தேவனை  நாடி பின்பற்றுகிறவர்கள் ஒன்றான மெய்த்தேவனை மறுதலித்துவிடுகிறார்கள். 

விக்கிரகாராதனைக்காரர்  தேவனுடைய கிருபையைப் பெற்றுக்கொள்ளமாட்டார்கள்.  அவர்களுடைய ஜீவியத்தில் கிருபைகள் பெருகுவதற்குப் பதிலாக வேதனைகள் பெருகும்.  விக்கிரகாராதனைக்காரர் தேவனைத் தேடியும் கண்டுபிடிக்கமாட்டார்கள். அவர்களுடைய இருதயம் பெருமையாயிருக்கும்.  அவர்கள் விரக்தியில்  அந்நிய தேவனை நாடிப்போவார்கள். அவை தெய்வமாகயில்லாவிட்டாலும், அதை தெய்வம் என்று நம்பி, அதைப் பின்பற்றுவார்கள்.  

அந்நிய தேவனைப் பின்பற்றுகிறவர்கள் செலுத்துகிற இரத்த பானபாலிகளை தாவீது செலுத்தமாட்டார். அவர்கள் ஆராதிக்கிற தெய்வமும் உண்மையானவையல்ல. அவர்கள் செலுத்துகிற இரத்தபானபலியும் பரிசுத்தமானதல்ல. 

தேவனுடைய பலிபீடத்தில், இரத்தமானது  பாவநிவாரணபலியாக செலுத்தப்படுகிறது.  இரத்தத்தைப் புசிப்பது தேவனுடைய பிரமாணத்தில் தடைபண்ணப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகள் இரத்தத்தைப் புசிக்கக்கூடாது.  ஆகையினால்தான் கர்த்தருக்கு  திராட்சரசத்தை  பானபலியாக செலுத்தவேண்டுமென்று மோசேயின் பிரமாணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 

அந்நிய தெய்வங்கள் பிசாசுகளாகவும், பிசாசின் கிரியைகளாகவும் இருக்கிறது.  அவற்றை ஆராதிக்குமாறு பிசாசு ஜனங்களை வஞ்சித்துவிடுகிறான். அவர்களுடைய மனக்கண்களை மங்கச் செய்துவிடுகிறான்.  அந்நிய தெய்வங்களுக்கு  இரத்தபானபலிகளை செலுத்தி, அவற்றை புசிக்குமாறு வழிநடத்துகிறான்.  பிசாசின் உபதேசத்தில் உண்மையில்லை.  அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன். தன்னுடைய தந்திரமான வார்த்தையினால், ஜனங்களை வஞ்சித்து,  அவர்கள் அந்நிய தேவனுக்குச் செலுத்தின இரத்தபானபலியை  புசிக்குமாறு செய்துவிடுகிறான்.  இதனால் தேவனுடைய  கோபாக்கினையும், நீதியான நியாயத்தீர்ப்பும்  அவர்கள்மீது வருகிறது. 

சங் 16:4-ஆவது வசனம்  இயேசுகிறிஸ்துவையும் குறிப்பதாக வேதபண்டிதர்கள் வியாக்கியானம் சொல்லுகிறார்கள். இயேசுகிறிஸ்து  உலகத்தின் பாவத்தை நீக்கிப்போடுவதற்கு தம்முடைய இரத்தத்தையே பாவநிவாரண பலியாக செலுத்தினார். மனுஷருடைய பாவங்களை போக்குவதற்கு இயேசுகிறிஸ்துவின் இரத்தம் முழுக்கிரயமாகச் செலுத்தப்பட்டது. இயேசுகிறிஸ்து நம்முடைய பாவங்களை நீக்குவதற்கு காளை, வெள்ளாட்டுக்கடா ஆகியவற்றின் இரத்தத்தைச் சிந்தாமல், தம்முடைய சுயஇரத்தத்தையே சிந்தினார். 

மோசேயின் பிரமாணத்தின்படி  மனுஷருடைய  பாவநிவாரணத்திற்கு சுத்தமிருகங்களின் இரத்தத்தை பாவநிவாரண பலியாக செலுத்தினால் போதுமானது.  ஆனால் அந்த இரத்தத்தினால் மனுஷரை பாவங்களற கழுவமுடியவில்லை. அவை மனுஷருடைய பாவத்தை நீக்குவதற்கு  பெலனற்றதாயிருந்தது. இயேசுகிறிஸ்துவோ ஒரு பாவமும் இல்லாதவராகயிருந்தாலும், நம்மை மீட்பதற்காக, அவர் பாவமானார்.  நம்முடைய பாவங்களை  நீக்கும் பாவநிவாரண பலியாக, அவர் மிருகங்களின் இரத்தத்தைச் சிந்தாமல், தம்முடைய சுயஇரத்தத்தையே சிந்தி, மனுக்குலத்திற்கு பாவநிவாரணத்தை உண்டுபண்ணினார்.

கர்த்தர்

கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்       (சங் 16:5). 

தாவீதுக்கு கர்த்தரே எல்லாமுமாகயிருக்கிறார். கர்த்தரே தன்னுடைய சந்தோஷம் என்றும், அவரே தன்னுடைய ஆசீர்வாதத்தின் பங்காகயிருக்கிறார் என்றும் தாவீது அறிக்கை செய்கிறார். கர்த்தர் தனக்குக் கொடுத்திருக்கிற பங்கு மிகவும் விசேஷமானது என்று சொல்லி கர்த்தரைத் துதிக்கிறார்.  தாவீதுக்கு  நேர்த்தியான இடங்களில் பங்கு கிடைத்திருக்கிறது.  

கர்த்தர் தாவீதின் சுதந்தரத்தைக் காப்பாற்றுகிறார். தனக்கு சிறப்பான சுதந்தரம் உண்டு என்று தாவீது  கர்த்தருடைய சமுகத்தில் அறிக்கை செய்கிறார். தாவீதுக்கு  பரலோகமே சுதந்தரம். பரலோகத்திலே நாம் அனுபவிக்கப்போகிற நித்திய இளைப்பாறுதலே  நமக்கு மெய்யான ஆசீர்வாதம். அதுவே நம்முடைய நித்திய நன்மை.  நாம் இந்த உலகத்தில்  ஜீவிக்கிற காலம் வரையிலும் பரதேசிகளாயிருக்கிறோம்.  இந்தப் பிரபஞ்சமும், இந்தப் பிரபஞ்சத்தில் நாம் ஜீவிப்பதும், நமக்கு நித்தியமானதல்ல.  பரலோகமே  நமக்கு நித்திய  சுதந்தரம். நாம் பரலோகத்திற்குச் செல்லும் பாதையில், இந்தப் பிரபஞ்சம் வழியில் வந்திருக்கிறது.  நாம் இதைக் கடந்துதான் பரலோகம் போகப்போகிறோம்.

கர்த்தர் தன்னுடைய சுதந்தரத்தைக் காப்பாற்றுவார் என்று  தாவீது நம்பிக்கையோடிருக்கிறார்.  தன்னைக் கரம்பிடித்து வழிநடத்துகிறவர்  உண்மையுள்ளவர் என்றும், அவர்  முற்றும் முடிய  வழிநடத்துவதற்கு  வல்லமையுள்ளவர் என்றும் தாவீது கர்த்தரிடத்தில் விசுவாசம் வைத்திருக்கிறார்.  கர்த்தர் தாவீதுக்கு  மேலான ஆசீர்வாதங்களை வாக்குப்பண்ணியிருக்கிறார்.  வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்.  கர்த்தர் தம்முடைய கிருபையினால் தாவீதுக்கு தம்முடைய வாக்குத்தத்தங்களெல்லாவற்றையும் நிறைவேற்றுவார். கர்த்தரே  தாவீதுக்கு சுதந்தரமாகவும், அவருடைய பாத்திரத்தின் பங்குமானவருமாகயிருக்கிறார்.  

மேசியாவைப் பற்றிய குறிப்புகள்

1. கர்த்தர் என் சுதந்தரம் (சங் 16:5). லேவி கோத்திரத்தாருக்கு வாக்குத்தத்த தேசத்தில் சுதந்தரம் பிரித்துக் கொடுக்கப்படவில்லை. கர்த்தரே அவர்களுடைய சுதந்தரம் (உபா 10:9; உபா 18:1-2). இஸ்ரவேல் ஜனம் எல்லோருமே கர்த்தருக்கு ஆசாரிய ராஜ்யமாக இருக்கிறார்கள் (யாத் 19:6; எரே 10:16) 

2. கர்த்தர் என் பாத்திரத்தின் பங்கானவர் (சங் 16:5). இது இரட்சிப்பின் அடையாளம்  (மத் 20:22)

3. ஜாதிகளின் இரட்சிப்பே மேசியாவின் சுதந்திரம் (எபி 2:9-15)

4. வாக்குத்தத்த தேசம் பங்கு பிரிக்கப்பட்டதைக் குறிக்கிறது       (சங் 16:6) 

5. மனுக்குலத்தின் மீட்பும் பூலோகத்திலிருக்கிறவைகள் கர்த்தருக்குள் கட்டப்படுவதுமே மேசியாவின் சுதந்தரம் (எபே 1:10;             வெளி 21-22)

6. நான் கர்த்தரைத் துதிப்பேன் (சங் 16:7)

7. கர்த்தர் எனக்கு ஆலோசனை தந்தார் (சங் 16:7; ஏசா 50:4;  லூக்கா 2:40,52)

8. இராக்காலங்களிலும் என் உள்ளந்திரியங்கள் என்னை உணர்த்தும் (சங் 16:7; சங் 1:2)

9. கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்   (சங் 16:8)

10. அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிறார். அதனால், அவருடைய பிரசன்னமும், ஆதரவும் தொடர்ந்து எனக்கு கிடைக்கிறது      (சங் 16:8)  

11. நான் அசைக்கப்படுவதில்லை (சங் 16:8; சங் 125:1)

12. என் இருதயம் பூரித்தது (சங் 16:9;  எபி 12:2)

13. என் மகிமை களிகூர்ந்தது (சங் 16:9;  அப் 2:26)

14. என் மாம்சம் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். ஏனெனில், அது உயிர்ந்தெழுந்திருக்கும் (சங் 16:9; அப் 2:27)

15. கர்த்தர், என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டார்   

16. என்னுடைய சரீரம் பாதாளத்தில் பாடுகளை அனுபவிக்காது     (சங் 16:10; அப் 2:25-29).

17. நான் உம்முடைய பரிசுத்தவான் (சங் 16:10). நான் பிதா அல்ல. திருத்துவத்தில் ஒரு நபர்.

18. நித்தியத்திற்காக உயிர்த்தெழுந்தவர்களில் நானே முதலாவது இருப்பேன் (சங் 16:11; 1கொரி 15:20-23). இதனால் மற்றவர்களை மரணத்திலிருந்து என்னால் வழி நடத்த முடியும்.

19. தேவனுடைய சமூகத்தில் பரிபூரண ஆனந்தம் எனக்கு உண்டு   (சங் 16:11; எபி 12:2).

20. தேவனுடைய சமூகத்தில் நித்திய பேரின்பம் எனக்கு உண்டு    (சங் 16:11).

நேர்த்தியான இடங்கள்

நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு  (சங் 16:6). 

தாவீதுக்கு நேர்த்தியான இடங்களில்  பங்கு கிடைத்திருக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகளுக்கு  அவரே பங்காகயிருக்கிறார்.  கர்த்தரே நம்முடைய பாத்திரத்தின் பங்கு. நம்முடைய பாத்திரத்தின் பங்கைப் பெற்ற பிறகு,  நாம் வேண்டிக்கொள்வதற்கு வேறொன்றும்  இல்லை. நம்முடைய ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் வேண்டும். நாம் பரலோகத்தில்  பிரவேசிப்பது தான் கர்த்தர் நமக்குக் கொடுக்கப்போகிற சிறப்பான சுதந்தரம். 

நாம் பரலோகத்திற்குப் போகும்போது, அங்கு தேவனுடைய சமுகத்தில், நித்திய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்போம்.  அப்போது நம்முடைய ஆத்துமாவைப்பார்த்து,  ""என் ஆத்துமாவே உன்னுடைய இளைப்பாறுதலில்  பிரவேசி'' என்று சொல்லவேண்டும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம்மிடம் இந்த வார்த்தையைச் சொல்லுவதே, நமக்கு மேலான ஆசீர்வாதம். அதுவே நம்முடைய சுதந்தரத்தின் பங்கு. 

கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு நேர்த்தியான இடங்களில் பங்குகொடுக்கிறார். இந்த இடம் வெளிச்சமான இடம்.  இங்கு கர்த்தரே  ஒளியாகவும், வெளிச்சமாகவும் இருக்கிறார்.  இந்த இடத்திலுள்ள பள்ளத்தாக்குகள் தரிசனத்தின் பள்ளத்தாக்குகளாகும்.  கர்த்தர் நம்முடைய மனக்கண்களை பிரகாசமுள்ளதாக மாற்றுகிறார்.  பள்ளத்தாக்கின் ஆசீர்வாதங்களை நமக்கு பிரத்தியட்சமாய்க் காண்பிக்கிறார்.  

கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற  நேர்த்தியான இடத்தில், அவர் நமக்குத் தம்மை பிரத்தியட்சமாய் வெளிப்படுத்துகிறார்.  அவர் நம்மை அறிந்திருக்கிறார்.  நாமும் அவரை அங்கு அறிந்திருப்போம்.  தாவீது  பரலோகத்தின் ஆசீர்வாதங்களைத் தியானித்துப் பார்த்து, "" நேர்த்தியான இடங்களில்  எனக்கு பங்கு கிடைத்தது'' என்று சொல்லுகிறார்.  மேலும் தனக்கு  சிறப்பான சுதந்தரம் உண்டு என்றும் விசுவாசத்தோடு அறிக்கை செய்கிறார்.  நாம் இம்மானுவேலின் தேசத்தில் பிரவேசிப்பதோடு, அவருடைய அன்புக்கும் பாத்திரவான்களாயிருப்போம்.  

கர்த்தரைத் துதிப்பேன்

எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும் (சங் 16:7).  

கர்த்தர் தாவீதுக்கு ஆலோசனை தந்திருக்கிறார். தனக்கு ஆலோசனை தந்த கர்த்தரை தாவீது நன்றியோடு துதிக்கிறார்.  கர்த்தர் தாவீதுக்கு  நேர்த்தியான இடங்களில் பங்கு கொடுத்திருக்கிறார்.  அவருக்கு சிறப்பான சுதந்தரத்தையும் கொடுத்திருக்கிறார். கர்த்தரே தாவீதின் சுதந்தரமாகவும், அவருடைய பாத்திரத்தின் பங்காகவும் இருக்கிறார். தாவீதின் சந்தோஷத்திற்கு கர்த்தரே  காரணமானவராகயிருக்கிறார்.  

நாம் கர்த்தருடைய சமுகத்தில் சந்தோஷமாயிருக்கும்போது, அந்த சந்தோஷத்திற்காக கர்த்தரைத் துதிக்கவேண்டும்.  கர்த்தர் கொடுக்கிற சந்தோஷமே மெய்யான சந்தோஷம்.  அதுவே நித்திய சந்தோஷம். இப்பிரபஞ்சத்தின் சந்தோஷமெல்லாம் அநித்தியமானது.  

தேவன் தம்முடைய வார்த்தையினாலும், ஆவியினாலும் தாவீதுக்கு  ஆலோசனை தருகிறார்.  கர்த்தர் தாவீதை ஆளுகை செய்கிறார்.  தாவீது  இராக்காலங்களில் அமைதியாக படுத்திருக்கும்போது,  அவருடைய எண்ணங்களெல்லாம் கர்த்தருடைய ஆலோசனையைப்பற்றித் தியானித்துக் கொண்டிருக்கும். இராக்காலங்களில் தாவீதின் உள்ளிந்திரியங்கள்  அவரை உணர்த்தும்.  இராக்காலத்திலே தாவீது தன்னுடைய அன்றாட வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, தேவனுடைய சமுகத்தில் தனியாக, அமைதியாக அமர்ந்திருப்பார்.  அப்போது தாவீதின் மனச்சாட்சி அவரோடு பேசும்.  அது அவரை உணர்த்தும்.  

கர்த்தரே நம்மை ஆராய்ந்து பார்க்கிறவர். நம்மைச் சோதித்தறிகிறவர். எரேமியா தீர்க்கதரிசி கர்த்தரின் இந்தக் குணாதிசயத்தை இவ்வாறு சொல்லுகிறார். ""கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கும், இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதிக்கிறவருமாயிருக்கிறேன்'' (எரே 17:10). 

கர்த்தரே நமக்கு நேர்த்தியான இடங்களில் பங்குகொடுக்கிறவர். அவரே நமக்கு சிறப்பான சுதந்தரத்தை வாய்க்கப்பண்ணுகிறவர். இது  கர்த்தருடைய ஆசீர்வாதம்.  அவர் தம்முடைய கிருபையினால்  நமக்கு  விசேஷித்த ஆசீர்வாதங்களைக் கொடுக்கிறார். இந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டிருக்கிற நாம், கர்த்தரைத் துதிக்கவேண்டும். அவருடைய கிருபைகளையும், இரக்கங்களையும் நினைவுகூர்ந்து அவரை நன்றியோடு ஸ்தோத்திரம்பண்ணவேண்டும்.  

கர்த்தருடைய கரங்களிலிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிற நமக்கு,  அவர்  சில பொறுப்புக்களையும் கொடுக்கிறார்.  நேர்த்தியான இடங்களில்  பங்கைப் பெற்றிருக்கிற நாம், அந்த இடங்களில் கர்த்தர் நமக்கு நியமித்திருக்கிற  ஊழியங்களையும் நிறைவேற்றவேண்டும்.  கர்த்தருடைய கரத்திலிருந்து சிறப்பான சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிற நாம், அந்த சுதந்தரத்திற்குப்  பாத்திரவான்களாகவும் நடந்துகொள்ளவேண்டும். 

நாம் இராக்காலத்திலே கர்த்தருடைய சமுகத்தில்  அமர்ந்திருக்கும்போது, கர்த்தர் நம்மிடத்திலிருந்து எதிர்பார்க்கிற காரியங்களைத் தியானித்துப் பார்க்கவேண்டும்.  கர்த்தருடைய சித்தம் நம்முடைய ஜீவியத்தில் நிறைவேற  நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். 

இந்த சங்கீதத்தில் தாவீது சொல்லுகிற எல்லா வார்த்தைகளும் இயேசுகிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகயிருக்கிறது. பிதாவாகிய தேவனிடத்தில் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு சுதந்தரம் கிடைத்திருக்கிறது.  கிறிஸ்துவானவர் பிதாவாகிய  தேவனுடைய  பங்காகவும் இருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் சுதந்தரம்  மிகவும் சிறப்பானது. கர்த்தர்  தம்முடைய பங்கில் பிரியப்படுகிறார். கிறிஸ்துவுக்கு பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்ந்திருக்கிற மகிமை கிடைத்திருக்கிறது. 

தாவீது  இந்த சங்கீதத்தைப் பாடி  கர்த்தரைத் துதிப்பதுபோல, நாமும் துதிக்கலாம். தாவீதின் வார்த்தைகளை நமக்கும் சொந்தமாக்கிக்கொள்ளலாம்.  நாம் கர்த்தரை நம்முடைய தேவனாகவும் ஆண்டவராகவும் தெரிந்துகொண்டோம். கர்த்தரும் நம்மை தம்முடைய பிள்ளைகளாக அங்கீகரித்திருக்கிறார்.  அவரே நம்முடைய சுதந்தரமும்,  நம்முடைய பாத்திரத்தின்  பங்குமானவர். கர்த்தருடைய சமுகத்தில்  நாம்  பரிசுத்தமான திருப்தியோடு, அவர் செய்த நன்மைகளை நினைத்து அவரைத் துதிக்கவேண்டும். 

ஜீவமார்க்கம்

சங் 16:8. கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.

சங் 16:9. ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.

சங் 16:10. என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.

சங் 16:11. ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.

அப்போஸ்தலர் பேதுரு தன்னுடைய முதலாவது பிரசங்கச் செய்தியில், இந்த வசனங்கள் எல்லாவற்றையும் மேற்கோளாகச் சொல்லுகிறார். இந்த சம்பவம் பெந்தெகொஸ்தேநாளில் பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரி ஊற்றப்பட்ட பிறகு நடைபெற்றது. தன்னுடைய பிரசங்கத்தில் பேதுரு  தாவீதைப்பற்றிச் சொல்லுகிறார். தாவீது கிறிஸ்துவைப்பற்றியும், விசேஷமாக கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப்பற்றியும் சொல்லுவதாக  பேதுரு தெளிவுபடுத்துகிறார் (அப் 2:25-28).

தாவீதின் தீர்க்கதரிசனம்

அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக  நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்;  அதினாலே என் இருதயம்  மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்;  என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்; ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்  (அப் 2:25-28).  

இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை பேதுரு நிச்சயப்படுத்திப் பிரசங்கம்பண்ணுகிறார். அவர் மறுபடியும் உயிரோடு எழும்பின சம்பவம் மெய்யானது என்பதை பேதுரு உறுதிபண்ணுகிறான். தேவன் இயேசுவை உயிரோடு எழுப்பினார். அதற்கு சீஷர்களாகிய தாங்களெல்லோரும் சாட்சிகளாகயிருப்பதாக அறிவிக்கிறார். சீஷர்களைப் பரிசுத்த ஆவியானவர் நிரப்பினார். அவர்கள் தேவனுடைய வல்லமையைப் பெற்றுக்கொண்டார்கள். இயேசுகிறிஸ்துவுக்காக உண்மையோடும், தைரியத்தோடும் சாட்சி சொல்லுவதற்குத் தேவையான வல்லமையை பரிசுத்த ஆவியானவரிடத்திலிருந்து சீஷர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். 

இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப்பற்றிப் பேசும்போது, தாவீது  சொன்ன வசனங்களைப் பேதுரு இங்கு மேற்கோளாகக் குறிப்பிடுகிறார். இயேசுகிறிஸ்துவை மரணத்தினாலோ அல்லது அவருடைய கல்லறையினாலோ கட்ட முடியவில்லை. அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்க கூடாதிருந்தது. இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்ததைப்பற்றி தாவீதும் முன்னறிவித்திருக்கிறார். 

பிதாவாகிய தேவனும் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆவிக்குரிய ஐக்கியத்திலிருக்கிறார்கள். ""கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்'' என்று இயேசுகிறிஸ்து பிதாவிடம் சொல்லுவதாக தாவீது சொன்ன வசனத்திற்கு வேதபண்டிதர்கள் வியாக்கியானம் சொல்லுகிறார்கள். இயேசுகிறிஸ்து எப்போதுமே  தம்முடைய பிதாவின் மகிமையை தமக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறார்.  தம்முடைய மரணம் பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்தும் என்று இயேசுகிறிஸ்து நிச்சயத்தோடிருக்கிறார். 

தாம் பாடுகளை அனுபவிக்கிற வேளையிலும், வேதனைகள் வழியாக கடந்து செல்லும் வேளைகளிலும், கல்வாரி சிலுவையில்  மரித்துக்கொண்டிருந்த வேளையிலும், பிதாவானவர் தம்மோடு கூடவே இருந்ததாக இயேசுகிறிஸ்து அறிவிக்கிறார். ""நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலது பாரிசத்திலே இருக்கிறார்'' என்று  இயேசுகிறிஸ்து  பிதாவைப்பற்றிக் குறிப்பிடுகிறார். தேவன் நம்முடைய வலதுபாரிசத்திலிருக்கிறபோது, நாமும் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை.  

இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியத்தையும், பாடுகளையும், மரணத்தையும் குறித்துப் பிதாவிடத்தில் சந்தோஷமாகச் சாட்சிகொடுக்கிறார். ""நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார் அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது.              என் நாவு களிகூர்ந்தது'' என்று இயேசுகிறிஸ்து தம்முடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார். பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. பாடுகள் வழியாகச் சென்றபோதும், கல்வாரி சிலுவையில் வேதனைகளை அனுபவித்தபோதும், பிதாவின் சித்தமே இயேசுகிறிஸ்துவின் உள்ளத்தில் நிரம்பியிருந்தது. ஆகையினால் இயேசுகிறிஸ்து முடிவுபரியந்தம் மிகுந்த சந்தோஷத்தோடு தம்முடைய ஊழியத்தை நிறைவேற்றினார். 

இயேசுகிறிஸ்துவின் பாடுகளும் மரணமும் அவருக்குச் சந்தோஷமாயிற்று. தம்முடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வண்ணமாக ""என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்'' என்று இயேசுகிறிஸ்து விசுவாசத்தோடு சொல்லுகிறார். இதைத் தொடர்ந்து ""என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்'' என்றும் இயேசுகிறிஸ்து தம்முடைய உயிர்த்தெழுதலைப்பற்றி நம்பிக்கையோடு சொல்லுகிறார். 

சரீரமும் ஆத்துமாவும் நித்தியமாகப் பிரிந்திருப்பதில்லை. இயேசுகிறிஸ்துவுக்கு கல்வாரி சிலுவையில் சரீரமரணமுண்டாயிற்று. பிதாவானவர் தம்முடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டாரென்று இயேசுகிறிஸ்து  மிகுந்த நம்பிக்கையோடு சொல்லுகிறார்.

கல்வாரி சிலுவையில் மரித்துப்போன இயேசுகிறிஸ்துவின் சரீரம் கல்லறையில் அடக்கம்பண்ணப்படுகிறது. அது அங்கு சிறிது காலத்திற்கு மாத்திரமே இருக்கும். மரித்துப்போனவர்களின் சரீரம் கெட்டுப்போகும். அழிந்துபோகும். ஆனால் இயேசுகிறிஸ்துவோ தம்முடைய சரீரத்தைப்பற்றிச் சொல்லும்போது ""உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்'' என்று குறிப்பிடுகிறார். இயேசுகிறிஸ்துவின் சரீரம் மரிக்கும். ஆனால் அந்தச் சரீரம் கெட்டுப்போகாது. அழிந்துபோகாது. 

இயேசுகிறிஸ்து நித்தியமானவர். அவருடைய மரணமும் பாடுகளும், அவர் ஆசீர்வதிக்கப்பட்ட உயிர்த்தெழுந்த சரீரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு வாசலைப்போலாயிற்று. ""ஜீவ மார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்'' என்று இயேசுகிறிஸ்து பிதாவிடத்தில் தம்முடைய மரணத்தைப்பற்றி விசுவாசத்தோடு சொல்லுகிறார். இயேசுகிறிஸ்துவின் மரணத்தின் மூலமாகவும், உயிர்த்தெழுதல் மூலமாகவும், மனுக்குலத்திற்கு உயிர்த்தெழுதலின் சத்தியம்  வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

கல்வாரி சிலுவையில் இயேசுகிறிஸ்து அனுபவித்த பாடுகளும் வேதனைகளும் முடிந்துபோயிற்று. ""உம்முடைய சந்நிதானத்திலே என்னை சந்தோஷத்தினாலே நிரப்புவீர்'' என்று  இயேசுகிறிஸ்து பிதாவிடத்தில் சொல்லுகிறார்.  கல்வாரி சிலுவையின் வேதனைகளும் பாடுகளும் முடிந்துபோயிற்று. இப்போது  கிறிஸ்துவின் சந்தோஷம் பரிபூரணமாயிற்று.  கல்வாரியை சகித்துக்கொண்டதினால் இயேசுகிறிஸ்துவுக்கு சந்தோஷத்தின் நிறைவு வெகுமதியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதாவின் சந்தோஷத்தினால் இயேசுகிறிஸ்து நிரப்பப்படுகிறார். இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவனுடைய வலதுபாரிசத்தில் எப்போதும் கூடவே  இருப்பார். பிதாவோடு ஐக்கியமாகயிருப்பதே குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு நிறைவான சந்தோஷமாகும். கிறிஸ்துவினுடையவர்களாகிய நாமெல்லோருமே கர்த்தருடைய சந்தோஷத்தில் பிரவேசிப்போம். அவருடைய சந்தோஷத்தினால் நிரப்பப்படுவோம். அந்தச் சந்தோஷம் நித்திய சந்தோஷமாகயிருக்கும். 

இயேசுகிறிஸ்துவின் பாடுகளும் சந்தோஷமும்  

கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்            (சங் 16:8,9).

தாவீது கர்த்தருடைய சமுகத்தில் தன்னுடைய பக்தியை வெளிப்படுத்துகிறார். கர்த்தரை நன்றியோடு துதித்துப் பாடுகிறார். பரலோகத்திற்கு நேராக  தாவீது  தன்னுடைய ஜெபவார்த்தைகளை ஏறெடுக்கிறார். அப்போது பரிசுத்த ஆவியானவர் அவர்மீது  தீர்க்கதரிசன வரத்தை அருளுகிறார்.  அப்போது தாவீது  தன்னைப்பற்றி  சொல்லுவதற்குப் பதிலாக, மேசியாவின் மகிமையை  முன்னறிவிக்கிறார்.  

பழைய ஏற்பாட்டுக்காலத்தில்  தாவீதின் தீர்க்கதரிசன வார்த்தைகள் புரிந்துகொள்வதற்கு  கடினமாயிருந்தது.  அது  ஒரு மறைபொருளான  இரகசியம் போலவே இருந்தது.  தாவீதின் தீர்க்கதரிசன வார்த்தைகள் இயேசுகிறிஸ்துவைப்பற்றி முன்னறிவிக்கப்பட்ட சத்தியமாகும்.  புதிய ஏற்பாட்டு வசனங்களின் பிரகாரம் தாவீதின் தீர்க்கதரிசனத்திற்கு  விளக்கம் கொடுக்கும்போது,  தாவீது சொன்ன மறைபொருள் தெளிவாய் விளங்குகிறது. 

தாவீது இந்த வசனங்களை இயேசுகிறிஸ்துவைக் குறித்தே சொல்லுகிறார்.  பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தீர்க்கதரிசன ஊழியம் செய்த  தீர்க்கதரிசிகளைப்போலவே, தாவீதும் ஒரு தீர்க்கதரிசியாக இந்த வசனங்களைச் சொல்லுகிறார். ""தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்'' (1பேது 1:11). இந்த சத்தியமே இந்தத் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருக்கிற  முக்கியமான செய்தியாகும். 

இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவித்து மரிக்கவேண்டும். கிறிஸ்துவின் சரீரம் மரித்துப்போகும். அந்த சரீரம் அடக்கம்பண்ணப்படும்.  மூன்று நாட்களுக்கு  கிறிஸ்துவின் சரீரம்  மரணவல்லமையின் கீழிருக்கும். 

இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவிக்கும்போதும், மரிக்கும்போதும்  தேவனுடைய தெய்வீக வல்லமை அவரோடு கூடயிருந்தது. ""எல்லாம் முடிந்தது'' என்று இயேசுகிறிஸ்து தம்முடைய வார்த்தையைச் சொல்லும் வரையிலும் அவருக்கு மரணம் உண்டாகவில்லை.  இயேசுகிறிஸ்து தேவகுமாரன்.  அவரை மனுபுத்திரரால் கொல்லமுடியாது.  ஆகையினால்  கிறிஸ்துவானவரே, ""எல்லாம் முடிந்தது'' என்று சொல்லி  தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுக்கிறார். அப்போதுதான் இயேசுகிறிஸ்துவுக்கு மரணமுண்டாயிற்று. 

இயேசுகிறிஸ்து மரிக்கும்போது அவருடைய இருதயம் சந்தோஷத்தினால்  நிரம்பிற்று.  பிதாவின் சித்தத்திற்குப் பூரணமாய்க் கீழ்ப்படிந்த திருப்தி இயேசுகிறிஸ்துவுக்கு உண்டாயிற்று. கிறிஸ்துவானவர்  பாடுகளை அனுபவித்தார்.  பிதாவானவர் அவரை மகிமைப்படுத்தினார்.  இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவித்தபோது அவருடைய சரீரத்தில் வேதனை உண்டாயிற்று. அவருடைய இருதயத்திலோ சந்தோஷம் உண்டாயிற்று. இயேசுகிறிஸ்துவில் பிதாவின் சித்தம் நிறைவேறிற்று.  

இயேசுகிறிஸ்து  சிலுவையில் மரிக்கும்போது அவருடைய இருதயம் பூரித்தது. அவருடைய மகிமை களிகூர்ந்தது. கிறிஸ்துவின் மகிமை களிகூர்ந்தது என்னும் வாக்கியத்தை, பேதுரு  ""கிறிஸ்துவின் நாவு களிகூர்ந்தது'' என்று சொல்லுகிறார். ""மகிமை'' என்னும் வார்த்தையை பேதுரு  ""நாவு'' என்று சொல்லுகிறார். 

இயேசுகிறிஸ்துவின் இருதயம் பூரித்ததற்கும், அவருடைய மகிமை களிகூர்ந்ததற்கும் மூன்று காரணங்கள் உண்டு.  அவையாவன : 

1.  இயேசுகிறிஸ்து தம்முடைய பிதாவின் சித்தத்திற்கும் அவருடைய மகிமைக்கும் தம்முடைய கிரியைகளின் மூலமாக முக்கியத்துவம் கொடுக்கிறார். ஆகையினால் ""கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்'' (சங் 16:8) என்று சொல்லுகிறார்.  

2. இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவிக்கும்போது பிதாவின் பிரசன்னம் அவரோடு கூடயிருக்கும் என்னும் நிச்சயத்தைப் பெற்றிருக்கிறார். ஆகையினால், ""அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை'' (சங் 16:8) என்று சொல்லுகிறார். பிதாவானவர் இயேசுகிறிஸ்துவுக்கு உதவிசெய்ய  அவருக்கு அருகாமையிலிருக்கிறார்.  இயேசுகிறிஸ்துவுக்கு உதவி தேவைப்படும்போது, பிதாவானவர்  தூரத்தில் இருக்காமல், குமாரனுக்கு உதவிபுரிவதற்காக அவருக்கு அருகாமையிலிருக்கிறார். 

3. இயேசுகிறிஸ்துவின் பாடுகள் அவருக்கு சந்தோஷத்தையும் மகிமையையும் தருகிறது.  தாம் அனுபவிக்கிற பாடுகளின் மூலமாய்  கிறிஸ்துவானவர்  தாம் அடையப்போகிற மகிமையை நோக்கிப் பார்க்கிறார்.  இயேசுகிறிஸ்து தமக்கு முன்வைத்திருந்த  சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தில் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்       (எபி 12:2).  இயேசுகிறிஸ்துவின்  தாபர ஸ்தலம் மகிமையாயிருக்கும் (ஏசா 11:10). இயேசுகிறிஸ்துவின் மாம்சம் நம்பிக்கையோடே  தங்கியிருக்கும்.  இயேசுகிறிஸ்து சிலுவையில் பாடுகளை அனுபவித்து மரித்தபோது, அவருடைய இருதயம் பூரித்தது.  அவருடைய மகிமை களிகூர்ந்தது (சங் 16:9). ""இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார். தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாய் அவரை மகிமைப்படுத்துவார்'' (யோவா 13:31,32). 

இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்

என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.  ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு  (சங் 16:10,11). 

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவிக்கவேண்டும் என்பதும், மரிக்கவேண்டும் என்பதும் பிதாவின் சித்தமாயிற்று. இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்தாலும், அவர் மகிமையோடு உயிர்த்தெழுந்தார்.  அவருடைய மரணத்தைத் தொடர்ந்து அவருடைய உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. இதுவே கிறிஸ்துவின் மகிமை.

இயேசுகிறிஸ்து அநேக பாடுகளை அனுபவித்தார். இந்தப் பாடுகளுக்குப் பதிலீடாக  பிதாவானவர் அவருக்கு அநேக சந்தோஷங்களை  ஏற்படுத்தியிருக்கிறார். ""ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்'' என்பதே பிதாவினிடத்தில் கிறிஸ்துவானவர்  ஏறெடுக்கிற  விண்ணப்பமாகும்.  இயேசுகிறிஸ்து பள்ளத்தாக்கின் வழியாக கடந்து சென்றாலும், அவரைச் சுற்றிலும் காரிருள் சூழ்ந்திருந்தாலும், பிதாவானவர் தம்மை வழிநடத்துவார் என்னும் நம்பிக்கை இயேசுகிறிஸ்துவிடம் இருந்தது.

கிறிஸ்துவானவர் அந்த நம்பிக்கையோடு ""என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்'' என்று பிதாவினிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார்.  இயேசுகிறிஸ்து சிலுவையில் மரிகும்போதும் அவரிடத்தில் இந்த நம்பிக்கை பூரணமாயிருந்தது.  இதே நம்பிக்கையோடு, இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில், ""பிதாவே, உம்முடைய கரங்களில்  என் ஆவியை ஒப்புவிக்கிறேன்'' என்று ஜெபித்து தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்தார். சற்று நேரத்திற்கு முன்பு, ""பிதாவே என்னை மகிமைப்படுத்தும்'' என்று ஜெபித்த இயேசுகிறிஸ்து இப்போது தம்முடைய ஜீவனையே ஒப்புக்கொடுக்கிறார். 

இயேசுகிறிஸ்துவே தம்முடைய சரீரமாகிய சபைக்குத் தலையாகயிருக்கிறார். சங் 16:10,11-ஆகிய வசனங்கள் சபையைக் குறிப்பதாகவும் வியாக்கியானம்பண்ணலாம். இந்த இரண்டு வசனங்களும் விசுவாசிகளைக் குறிக்கிற வார்த்தைகள்.  கிறிஸ்துவின் ஆவியானவர்  விசுவாசிகளை வழிநடத்துகிறார். அவர் நம்முடைய ஆத்துமாவை பாதாளத்தில் விடமாட்டார். நம்முடைய அழிவை நாம் காண்பதற்கு இயேசுகிறிஸ்து அனுமதி கொடுக்கமாட்டார்.  

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம், இந்த சங்கீதத்தை பயபக்தியோடு பாடும்போது,  முதலாவதாக கர்த்தரைத் துதிக்கிறோம்.  அதன்பின்பு நமக்கு பக்திவிருத்தி உண்டாகும் வார்த்தைகளைத் தியானிக்கிறோம். சோர்ந்துபோயிருக்கிற நம்முடைய ஆத்துமாக்களை கர்த்தருடைய வார்த்தையினால் உற்சாகப்படுத்துகிறோம்.  விசுவாசிகள் ஒருவருக்கொருவர்  ஆதரவாயிருந்து, ஒருவருடைய பாரத்தை  ஒருவர் சுமந்து, ஒருவருக்கொருவர்  பக்திவிருத்திக்கு ஏதுவான, ஆவிக்குரிய ஆலோசனைகளைச் சொல்லுகிறோம்.  

இயேசுகிறிஸ்து மரித்தபோது, தம்முடைய ஜீவனையும், சரீரத்தையும் சந்தோஷமாக  மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.  கிறிஸ்துவின்  ஆவி அவருடைய சரீரத்தை விட்டுப் பிரிந்துபோன சம்பவம் அவருக்கு  மிகுந்த  ஆனந்தமாயும், பேரின்பமாயும் இருந்தது.  கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும், மரிக்கும்போது சந்தோஷமாய் மரிக்கவேண்டும்.  கர்த்தருடைய சமுகத்தில் நம்முடைய மாம்சமும் மகிமையோடு தங்கியிருக்கும்        (சங் 16:9) என்று  விசுவாசத்தோடு அறிக்கை செய்யவேண்டும். நாம் மரித்தாலும், மறுபடியும் சந்தோஷமாய் உயிர்த்தெழுவோம் என்னும் நம்பிக்கை  நமக்கு உண்டு. ஆகையினால் மரணம் நமக்கு  துக்கமான சம்பவமல்ல.  அது  ஆனந்தமும், பேரின்பமும் நிறைந்த  சம்பவம். 

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, தம்மை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தபோது,  ""உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில்  நித்திய பேரின்பமும் உண்டு'' என்று சொல்லி  ஜெபித்தார்.  நாமும் மரிக்கும்போது, கர்த்தருடைய சமுகத்தில்  நமக்கு நித்திய சந்தோஷமும், நித்திய இளைப்பாறுதலும் வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது. இந்த வாக்குத்தத்தத்தை விசுவாசத்தோடு பற்றிக்கொள்ளவேண்டும். இந்த நம்பிக்கையோடு நம்முடைய சரீர மரணத்தை  சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.