நான் பயப்படேன்
எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம் பேருக்கும் பயப்படேன் (சங் 3:6)
தாவீது படுத்து நித்திரை செய்தாலும், இன்னும் ஆபத்தில்தான் இருக்கிறார். சத்துருக்கள் அவரை சூழ்ந்திருக்கிறார்கள். ஆனால் தாவீதோ தன்னுடைய சத்துருக்களை நோக்கிப் பார்க்காமல், கிருபையுள்ள கர்த்தரை நம்பிக்கையோடு நோக்கிப் பார்க்கிறார் சத்துருக்கள் தன்னை அழித்துப்போடுவார்கள் என்று பயப்படாமல், கர்த்தர் தன்னை இரட்சிப்பார் என்று தாவீது நம்பிக்கையோடிருக்கிறார்.
தாவீதை விட்டு பயம் நீங்கிப்போயிற்று. கர்த்தர் எல்லா பயங்களையும் அமைதிப்படுத்திவிடுகிறார். தாவீதுக்கு விரோதமாய் பதினாயிரம்பேர் சுற்றிலும் படையெடுத்து வருகிறார்கள். ஆனால் தாவீதோ அவர்களுக்குப் பயப்படாமலிருக்கிறார். தாவீதுக்கு விரோதமாக படையெடுத்து வருகிறவர்கள் அந்நிய தேசத்தாராயிருந்தாலும், தன்னுடைய சொந்த தேசத்தாராயிருந்தாலும், தாவீது அவர்களுக்குப் பயப்படவில்லை. தாவீதுக்கு விரோதமாக சத்துருக்கள் பாளயமிறங்கியிருந்தாலும் தாவீது அவர்களுக்குப் பயப்படவில்லை
தாவீது தன் குமாரன் அப்சலோமுக்குப் பயந்து ஓடிப்போகும்போது, ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை சுமந்து வந்தார்கள் அப்போது தாவீது மிகுந்த குழப்பத்திலிருந்தார். இந்தப் பிரச்சனையிலிருந்து தனக்கு விடுதலை கிடைக்குமா என்னும் நிச்சயம் அவரிடத்தில் காணப்படவில்லை. சாதோக்கு தாவீதோடு கூடயிருந்தார். தாவீது, தன்னுடைய ஜீவனின் பாதுகாப்பைக் குறித்து, நிச்சயமில்லாமல், சந்தேகத்தோடு, சாதோக்கிடம், "கர்த்தர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி செய்வாராக" (2சாமு 15:26) என்று அவிசுவாசத்தோடு சொன்னார்.
இப்போதோ தாவீதிடத்தில் விசுவாசம் நிரம்பியிருக்கிறது. கர்த்தரிடத்தில் வைத்திருக்கிற நம்பிக்கை உறுதியாயிருக்கிறது. தாவீதின் இருதயத்தில் இப்போது அவிசுவாசமோ, அவநம்பிக்கையோ பயமோ, பதட்டமோ காணப்படவில்லை. தனக்கு விரோதமாய் படையெடுத்து வருகிற பதினாயிரம் பேருக்கும் தான் பயப்படவில்லை என்று விசுவாசத்தோடு சொல்லுகிறார். ஏனெனில் கர்த்தர் தாவீதை தாங்குகிறார். தாவீது இப்போது சூழ்நிலைகளை நோக்கிப் பார்க்காமல் கர்த்தரை நோக்கிப் பார்க்கிறார். சத்துருக்கள் தனக்கு என்ன செய்வார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்காமல், கர்த்தர் தனக்கு என்ன செய்யப்போகிறார் என்பதை விசுவாசத்தோடு சிந்தித்துப் பார்க்கிறார்.