கர்த்தர் தாங்குகிறார்


 

கர்த்தர் தாங்குகிறார்

 

நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக் கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார் (சங் 3:5)

 

நாம் தேவனுடைய தெய்வீக பாதுகாப்பின் கீழ் இருக்கவேண்டும். தேவனுடைய பாதுகாப்பே மெய்யான பாதுகாப்பு. தாவீதைச் சுற்றிலும் அவருடைய சத்துருக்கள் சூழ்ந்து நிற்கிறார்கள். தாவீதுக்கு விரோதமாக தூஷணமான வார்த்தைகளைப் பேசுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் தாவீதோ அமைதியாகப்படுத்து நித்திரை செய்கிறார்.

 

தாவீதின் நித்திரைக்கு அவருடைய சத்துருக்கள் தடையாயிருக்கவில்லை. தாவீது தன்னுடைய சத்துருக்களை நினைத்துப் பார்த்தால், அவருக்கு நித்திரை வராது. தாவீதோ மனுஷரை நோக்கிப் பார்க்காமல், கர்த்தரை நோக்கிப் பார்த்து, தன்னை கர்த்தருடைய சமுகத்தில் ஒப்புக்கொடுத்துவிடுகிறார். கர்த்தர் தன்னை தீங்குகளுக்கு விலக்கி பாதுகாப்பார் என்னும் நிச்சயம் தாவீதின் இருதயத்தை ஆளுகை செய்கிறது. அதனால் அவர் படுத்து நித்திரை செய்கிறார்.

 

தாவீது படுத்து நித்திரை செய்த பின்பு விழித்துக்கொள்கிறார். போதுமான அளவு ஓய்வு எடுத்துக்கொள்கிறார். இப்போது சோர்வுகள் நீங்கி உற்சாகமாய் விழித்துக்கொள்கிறார். கர்த்தர் தன்னைத் தாங்குகிறார் என்னும் நிச்சயம் தாவீதின் இருதயத்தில் நிரம்பியிருக்கிறது

 

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும், நித்திரை செய்வதற்கு முன்பாக, நம்மை கர்த்தருடைய சமுகத்தில்

ஒப்புக்கொடுக்கவேண்டும். கர்த்தருடைய இரக்கங்களுக்காக அவரை நன்றியோடு துதிக்கவேண்டும். நித்திரை செய்யப்போகும்போதும் நித்திரையை விட்டு எழுந்திருக்கும் போதும், நாம் குடும்பமாக கர்த்தருடைய சமுகத்தில் அமர்ந்திருந்து அவருடைய இரக்கங்களுக்காகவும், அவருடைய பாதுகாப்புக்களுக்காகவும், நாம் அவரை நன்றியோடு துதிக்கவேண்டும்.

 

தாவீதைச் சுற்றிலும் சத்துருக்களும், அவர்கள் மூலமாய் அவருடைய ஜீவனுக்கும் ஆபத்துக்களும் சூழ்ந்திருக்கிறது. இந்த ஆபத்துக்கள் மத்தியில் தாவீதின் இருதயமும் ஆவியும் அமைதியாயிருக்கிறது. தாவீதின் உள்ளத்தில்

எந்தவிதமான பயமோ, பதட்டமோ காணப்படவில்லை தாவீது தன்னை ஜெபத்தோடும், பயபக்தியோடும் கர்த்தருடைய சமுகத்தில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். தன்னுடைய பிரச்சனைகளையெல்லாம் கர்த்தரை நோக்கி சத்தமிட்டு கூப்பிட்டுச் சொல்லிவிட்டார் கர்த்தர் தன்னை பாதுகாப்பார் என்னும் நிச்சயம் இப்போது தாவீதின் இருதயத்தை ஆளுகை செய்கிறது அவருடைய இருதயம் அமைதியாக அமர்ந்திருக்கிறது. தாவீது படுத்து நித்திரை செய்கிறார் தாவீதின் ஆத்துமாவும், ஆவியும், சரீரமும் சமாதானமாய், நிம்மதியாய், கர்த்தருடைய சமுகத்தில் ஓய்வு எடுக்கிறது



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.