கர்த்தாவே எழுந்தருளும்
கர்த்தாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர் (சங் 3:7).
தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசுவாசத்தோடும் உற்சாகத்தோடும் ஜெபம்பண்ணுகிறார். கர்த்தர் தன்னுடைய இரட்சகர் என்பதை தாவீது தன் இருதயத்தின் ஆழத்தில் விசுவாசிக்கிறார். ஒருபுறம் விசுவாசமும், மற்றொரு புறம் ஜெபமும் தாவீதின் இருதயத்தில் நிரம்பியிருக்கிறது. தன்னுடைய இரட்சகராகிய கர்த்தரிடத்தில், தாவீது பயபக்தியோடு "கர்த்தாவே எழுந்தருளும், என் தேவனே என்னை இரட்சியும்" என்று பயபக்தியோடு ஜெபம்பண்ணுகிறார்.
தாவீதின் இருதயத்தில் கர்த்தர் மீதுள்ள விசுவாசம் உறுதியாயிருக்கிறது. அவருடைய இருதயத்தில் பயத்திற்கும் விசுவாசத்திற்கும் நடைபெற்ற யுத்தத்தில் விசுவாசம் ஜெயம்பெற்றிருக்கிறது. சத்துருக்களுடைய அச்சுறுத்தல்களை தாவீது சிந்தித்துப் பார்க்கவில்லை அதற்குப் பதிலாக கர்த்தர் தன்னுடைய பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து துன்மார்க்கருடைய பற்களை தகர்த்துப்போட்டார் என்று விசுவாசத்தோடு சொல்லுகிறார்
தாவீதின் சத்துருக்கள் இப்போது தாவீதோடு யுத்தம்பண்ணாமல், கர்த்தருக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிறார்கள். தேவனுடைய கிருபை தாவீதைத் தாங்குகிறது. தேவனுடைய வல்லமையோ தாவீதின் சத்துருக்களை முறியடிக்கிறது. கர்த்தரே தம்முடைய பிள்ளைகளை தமது பலத்த கரத்தினால் பாதுகாக்கிறார். தமக்கு விரோதமாகவும், தம்முடைய பிள்ளைகளுக்கு விரோதமாகவும் எழும்புகிற
சத்துருக்களின் வல்லமைகளை கர்த்தர் அதம்பண்ணிப்போடுகிறார். அவர்களுடைய தாடையிலே அடித்து, அவர்களை
நொறுக்கிப்போடுகிறார். தாடையில் அடிபட்டவர்களால் பேசமுடியாது.
தாவீதின் சத்துருக்கள் அவருக்கு விரோதமாக தூஷணவார்த்தைகளைப் பேசினார்கள். இப்போதோ தாடையில் அடிபட்டவர்களாக,
பேசமுடியாமலிருக்கிறார்கள். நமக்கு விரோதமாக பேசுகிறவர்களுடைய தாடைகளை கர்த்தர் அடிப்பார் நமக்கு விரோதமாக அவர்கள் ஒரு வார்த்தையும் சொல்ல முடியாதவாறு அவர்களுடைய பேச்சுக்களை அதம்பண்ணிப்போடுவார்.