நீதியின் தேவனே
என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கிறீர்; எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும் (சங் 4:1)
தாவீது நான்காம் சங்கீதத்தை ராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கிறார். தேவ ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்கிற சங்கீதங்களை, நாம் திருச்சபைகளில் பாடுகிறோம். சபையின் பக்திவிருத்திக்காகவே பரிசுத்த ஆவியானவர் சங்கீதப்புஸ்தகத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார் தாவீது இந்த சங்கீதத்தை இயற்றினாலும், இதை ராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கிறார்.
தாவீது ராஜா கர்த்தருடைய ஆலயத்தில் கீதவாத்தியங்களை வாசிப்பதற்கும், கர்த்தரைப் பாடும் பாட்டுக்களை பாடுவதற்கும் இருநூற்று எண்பத்தெட்டு பேரை நியமித்தார். அவர்களை இருபத்துநான்கு பிரிவுகளாகப் பிரித்தார். இவர்கள் கர்த்தரைப் பாடும் பாட்டுக்களைக் கற்றுக்கொண்டு, நிபுணரானவர்கள். இவர்களில் தலைவனாக இருக்கிறவரிடத்தில் தாவீது நான்காவது சங்கீதத்தை ஒப்புவிக்கிறார் (1 நாளா 25)
தாவீது தேவனிடத்தில் பேசுகிறார். நம்முடைய வேண்டுதல்களையும், விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் கேட்பதில் தேவன் பிரியமாயிருக்கிறார். நம்முடைய ஜெபங்களுக்கு பிரதியுத்தரம் கொடுப்பதிலும் தேவன் பிரியமாயிருக்கிறார். நம்முடைய சுயபக்தியினாலோ சுயபுத்தியினாலோ, சுயபரிசுத்தத்தினாலோ சுயதிறமையினாலோ நம்மால் தேவனிடமிருந்து ஒன்றும் பெற்றுக்கொள்ள முடியாது. தேவன் தாமே தம்முடைய கிருபையினாலும், இரக்கத்தினாலும் நம்முடைய ஜெபங்களுக்கு பதில் கொடுக்கிறார்
தாவீது நீதியின் தேவனிடத்தில், "நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்" என்று சொல்லும்போது உமது கிருபையினாலும் இரக்கத்தினாலும் எனக்குச் செவிகொடும்" என்று பொருள்படுமாறு ஜெபம்பண்ணுகிறார்.
தாவீது தன்னுடைய ஜெபத்தில் இரண்டு காரியங்களை சொல்லுகிறார். அவர் கர்த்தரைப்பற்றிச் சொல்லும்போது, கர்த்தரை தன்னுடைய நீதியின் தேவனாக அழைக்கிறார். தேவன் நீதியுள்ளவர் மாத்திரமல்ல. அவரே எல்லா நீதிகளுக்கும் ஆதாரமாயிருக்கிறவர். கர்த்தரே தாவீதின் நீதியான காலங்களுக்கும் ஆதரமாயிருக்கிறார். தாவீதுக்கு கர்த்தர் தம்முடைய கிருபையினால் நன்மை செய்திருக்கிறார். தேவன் தாவீதை தம்முடைய கிருபையினால் நீதிமானாக்கியிருக்கிறார் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்படுகிறோம்
தாவீது நெருக்கத்திலிருந்தபோது கர்த்தர் அவருக்கு விசாலமுண்டாக்கினார். அவருடைய இருதயத்தை பரிசுத்தமான சந்தோஷத்தினால் நிரப்பினார். தாவீதின் ஜீவியத்தில் துன்பங்கள் மிகுந்திருந்தாலும், கர்த்தர் அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தார். தாவீதைச் சுற்றிலும் ஆபத்துக்கள் சூழ்ந்திருந்தாலும், கர்த்தர் அவருக்கு ஆறுதலையும் சமாதானத்தையும் கொடுத்தார். அவருடைய இருதயம் நெருக்கத்திலிருந்தது. கர்த்தரோ அவருடைய இருதயத்தில் விசாலமுண்டாக்கினார்.
தேவன் நீதியுள்ளவர். அவர் கிருபையுமுள்ளவர் தாவீது கர்த்தரை நோக்கி, "எனக்கு இரங்கி என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்" என்று ஜெபம்பண்ணுகிறார். தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். நெருக்கத்திலிருந்த தாவீதுக்கு கர்த்தர் ஏற்கெனவே விசாலத்தை உண்டாக்கினார். அதே தேவன் தனக்கு இனிமேலும் உதவி செய்வார் என்று தாவீது நம்புகிறார். அந்த நம்பிக்கையில், "கர்த்தாவே எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும் என்று ஜெபம்பண்ணுகிறார். கர்த்தருடைய கிரியை பரிபூரணமானது.