சங்கீதம் 147:11 தியானம்
தமக்கு பயந்து, தமது கிருபைக்கு காத்திருக்கிறவர்கள் மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.' (சங்147:11)
கடந்த போன ஆண்டுகளில் உலகில் நடைபெற்ற எந்தவொரு அழிவுகளும் வரலாறு காணாத அளவு நடந்ததாக செய்திகள் அறிவிக்கப்பட்டன. சென்ற வருடத்தைக் காட்டிலும் இந்த ஆண்டானது அதிக பயங்கரங்களும், அதிகமான அழிவுகளும் உண்டாகி வருகிறது.
எங்கு பார்த்தாலும் ஜனங்கள் கூட்டம் கூட்டமாக மரிப்பது அனுதினமும் ஒரு சாதாரண செய்தியாகிவிட்டது. ஒரே குழியில் மரித்த பல சடலங்களை புதைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. மனித நேயமே அழிந்து போன காலமாகி விட்டது. இந்த கடைசி காலத்தில் நிற்கிற உங்களிடத்தில் தேவன் எதிர்பார்ப்பது நீங்கள் திறப்பில் நின்று ஜெபிக்க வேண்டும் என்பதையே, திறப்பிலே நிற்கிற மனிதனை தேடுகிறார். அவனால் தான் தேசம் அழிவிலிருந்து காக்க பட முடியும்.
தேவனுக்கு விரோதமான பாவங்களை செய்ய வைத்து தேவனது நேரடியான கோபத்தை ஜனங்கள் மேல் கொண்டுவர வேண்டும் என்பது சாத்தானின் தந்திரம்.
ஆனால், தனது சாயலை பெற்ற மனிதன் அழிந்து போகாமல் காக்கப்படும்படிக்கு திறப்பிலே நின்று கதறும் மனிதன் யார்? என்று தேவன் அங்கலாய்க்கிறார்
தேவனுடைய பிள்ளையே, நீ திறப்பில் நின்று மற்றவர்களுக்காக ஜெபிக்கும் போது தேவன் உன்மேல் பிரியப்படுவார், உங்கள் கூப்பிடுதலை கவனித்து கேட்டார்.
அழிவிலிருந்து மக்கள் காக்கப்படுவார்கள். இது தான் தேவனின் விருப்பம்.
சோதோமின் அக்கிரமத்தினால் அழிக்க தேவன் எண்ணினபோது ஆபிரகாம் அவர்களிடம் பத்து நீதிமான்கள் இருந்தால் என்று கேட்டு தேவளின் வாக்குறுதியைப் பெற்று லோத்தின் குடும்பத்தை காப்பாற்றினார். மோசேயும் இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்து தேவ கோபம் எழும்பினபோது அவர்களை அழிக்காதபடிக்கு ஜனங்களுக்காய் திறப்பில் நின்றவர்.
பிரியமானவர்களே, இப்படிப்பட்ட ஜெபங்களையே தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். பார்வைக்கு அழகான ஜெபங்கள் நமக்கு தேவையில்லை. இருதயத்தை கிழித்து, ஜனங்கள் அழியாமல் தன்னையே அர்ப்பணித்து திறப்பில் நின்று தேவனிடம் கதறும் ஜெபங்களே வேண்டும் இந்த கடைசி கால சம்பவங்களை நாம் பார்க்கும்போது திறப்பில் நம்மை நிறுத்தி கதறி ஜெபிக்க வேண்டும். அட்போதே தேவன் நம் நெற்றியில் முத்திரை போட்டு அவருக்கு சொந்தமாக மாற்றுவார்.
