இரண்டாம் வார்த்தை
இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்
இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தில் உங்கள் யாவருக்கும் ஸ்தோத்திரம். இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் அறையப்பட்டு மரித்த நாளை நினைவு கூர்ந்து அவருக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர் சிலுவையில் பேசின மிக முக்கியமான இரண்டாவது வார்த்தையைத்தான் இப்பொழுது தியானிக்க இருக்கிறோம்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து கொண்டிருக்கிறார் அந்த நேரத்தில்கூட தம்மிடத்தில் ஜெபம் பண்ணுகிற குற்றவாளிக்கு ஆறுதலாக பதில் சொல்லுகிறார். அதைத்தான் லூக்கா தன்னுடைய சுவிசேஷ புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார்
லூக்கா 23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
குற்றவாளியின் ஜெபத்திற்கு இயேசுகிறிஸ்து ஆமென் என்று பதில் கூறுகிறார். அவன் கேட்டுக் கொண்டதை விட அவனுக்கு அதிகமாகவே தருகிறார். குற்றவாளியின் ஜெபம் என்னவென்று கவனிப்போம் லூக்கா 23:42 ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இந்த ஜெபத்தை நன்றாக கவனித்தால் அவன் எதிர்காலத்தில் மறுமையில் அவனுக்கு ஆசீர்வாதம் வேண்டும் என்று விரும்பி ஜெபம் பண்ணுகிறான். இயேசுகிறிஸ்து மறுமையில் மட்டுமல்ல இன்றைக்கே ஆசீர்வாதம் உனக்கு உண்டு என்று கூறுகிறார் "இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்" ஆம் பிரியமானவர்களே நம்முடைய கர்த்தர் நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாய் செய்கிறவர் நாம் மனம் திரும்பும் பொழுது உடனடியாக நம்மை ஆசீர்வதிகறவராக இருக்கிறார்.
மனம் திரும்பிய குற்றவாளியிடம் இயேசுகிறிஸ்து இந்த வார்த்தைகளை பேசிக்கொண்டிருக்கிறார் இந்த வார்த்தைகளை இயேசு பேசிக்கொண்டிருக்கும்போது கல்வாரி சிலுவையில் மகா வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் வேதனையைக் குறைப்பதற்கு அவருக்கு ஆறுதலான வார்த்தைகளை பேசும் நபர்கள் அங்கு எவரும் இல்லை. ஆனால் இயேசு கிறிஸ்து மனம் திரும்பிய குற்றவாளிக்கு ஆறுதலான வார்த்தைகளை பேசுகிறார். ஒருவன் எவ்வளவு பெரிய பாவம் செய்த பாவியாக இருந்தாலும் அவன் தன்னுடைய பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்பி இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவுடன் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. அத்துடன் அவன் மரிக்கும்போது தேவனுடன் பரதீசியில் அவனுக்கு ஒரு இடமும் கிடைக்கிறது.
இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரித்து கொண்டிருக்கும்போது மனம் திரும்பிய குற்றவாளிக்கு கூறுகிறார். பாவிகளை மன்னிப்பதற்காகவே இயேசு தம்முடைய ஜீவனை ஒப்புக் கொடுக்கிறார். நமக்கு பாவ மன்னிப்பு உண்டு பண்ணுவதற்காக இயேசு கிறிஸ்து தம்முடைய சொந்த ரத்தத்தை கிரையமாக கொடுக்கிறார். நமக்கு நித்தியஜீவன் அளிப்பதற்காகவும் கல்வாரி சிலுவையில் தன்னுடைய ஜீவனை கொடுக்கிறார். தங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டு மனம் திரும்பி இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டவர்கள் எல்லோரும் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க வேண்டும் என்பதற்காக இயேசு தம்முடைய மரணத்தின் வழியாக பரலோக ராஜ்யத்தின் வாசலை நமக்காக திறக்கிறார்.
நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று இயேசுகிறிஸ்து கூறுவதன் மூலமாக அவர் கல்வாரி சிலுவையில் மரித்த பின்பு பரதீசிக்கு போவார் என்பது நமக்குத் தெளிவு படுத்தப்படுகிறது. சிலுவை பாதை வழியாக இயேசு கிறிஸ்து கிரீடத்தை பெற்றுக் கொள்கிறார். சிலுவை இல்லாமல் சிங்காசனம் இல்லை என்பதை நாம் இயேசு கிறிஸ்துவின் ஜீவியத்தின் வழியாக புரிந்து கொள்ள வேண்டும். பாடுகளை அனுபவிக்காமல் மேன்மை அடைய முடியாது நாம் நம்முடைய கிரீடத்தை பெற்றுக்கொள்வதற்கு சிலுவைப் பாதை மட்டுமே நியமிக்கப்பட்டு இருக்கிறது. இதைத்தவிர வேறு பாதை இல்லை நாமும் வேறு பாதை தேடி குறுக்குவழியில் சென்று அடையலாம் என்று ஏமாற்றத்தை அடையக்கூடாது.
மனம் திரும்பிய பாவிகள் மரிக்கும்போது இயேசு கிறிஸ்துவோடு கூட இருப்பார்கள் என்னும் சத்தியம் இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும். பரலோகத்தில் நித்திய சந்தோஷம் இருக்கும் பரதீசு என்றால் மகிழ்ச்சியான தோட்டம் என்று பொருள். இது தேவனுடைய பரதீசு ஜெயம் கொள்கிறவன் எவனோ அவனுக்கு இந்த பரதீசியின் மத்தியில் இருக்கிற ஜீவ விருட்சத்தின் கனியை கர்த்தர் புசிக்கக் கொடுப்பார் என்று வெளிப்படுத்தின விசேஷம் 2:7 கூறுகிறது. இங்கு இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் மட்டும் இயேசு கிறிஸ்துவோடு கூட இருப்பார்கள். விசுவாசிகளுக்கு பரலோகத்தில் கர்த்தருடைய சமூகத்தில் இருப்பதே மிகப்பெரிய சந்தோஷம். விசுவாசிகள் மரித்த உடனே இந்த இடத்திற்கு போவதற்கு சிலாக்கியம் பெற்றிருக்கிறார்கள். மனம் திரும்பிய குற்றவாளி இயேசுவினால் இளைப்பாறும் இடத்தில் சேர்க்கப்படுகிறான் மனம் திரும்பாத மற்றொரு குற்றவாளி நித்திய நரகத்தில் சேர்க்கப்படுகிறான். நாம் மனம் திரும்பின அனுபவத்தில் தொடர்ந்து நீடித்தால் இன்றைக்கு மரித்தாலும் இளைப்பாறும் இடத்திற்கு கொண்டு போய் விடப்படும் நம்முடைய வாழ்வில் மனம் திரும்பாத அனுபவம் இருக்கும் பட்சத்தில் நாம் மரித்தால் நிச்சயமாக நரகத்திற்கே செல்வோம் . பரலோகமா...? நரகமா....? எது வேண்டும் என்று நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
போதகர். சார்லஸ் சதீஷ் குமார்
WMM இம்மானுவேல் கிறிஸ்தவ சபை, வேப்பங்குப்பம்
