முதலாம் வார்த்தை
பிதாவே இவர்களை மன்னியும்
இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தினாலே உங்கள் யாவருக்கும் ஸ்தோத்திரம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமக்காக பாடுகளை ஏற்று சிலுவையில் மரித்த இயேசு கிறிஸ்துவை நினைவுகூர்ந்து அவருக்கு நன்றி சொல்லும் விசேஷ இந்த நாளில் சிலுவையில் அவர் கூறிய வார்த்தைகளை தியானித்து கொண்டிருக்கிறோம் அப்படி சிலுவையில் அவர் பேசின முதலாவது வார்த்தையைத்தான் இப்பொழுது நாம் தியானிக்க இருக்கிறோம்.
லூக்கா 23:34 அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைகிறார்கள். சிலுவையில் அறையப்பட்ட பின்பு, அல்லது இயேசு கிறிஸ்து மரிப்பதற்கு முன்பு மிகவும் முக்கியமான ஏழு வார்த்தைகளை பேசுகிறார். இவ்வேழு வார்த்தைகளில் "பிதாவே இவர்களுக்கு மன்னியும்" என்று கூறியது முதலாவது வார்த்தையாகும். இந்தவாக்கியம் லூக்கா கவிசேஷத்தில் மாத்திரம் எழுதப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட உடனோ அல்லது சிலுவையில்அறையப்படும் போதோ அவர் இந்த வார்த்தைகளை சொல்லி ஜெபித்திருக்கலாம்.
இயே கிறிஸ்துவின் ஜெபம் மிகவும் எளிமையானது. "பிதாவே இவர்களுக்கு மன்னியும்" என்று தம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து ஜெபம் பண்ணுகிறார். இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைகிறவர்கள் அதினால் அவர்கள் மிகப் பெரிய பாவத்தை செய்கிறார்கள். இவர்கள் செய்த இந்த பாவத்திற்கு மன்னிப்பே இல்லை தேவகுமாரனை சிலுவையில் அறைந்த குற்றத்திற்காக இவர்கள்மீது நியாயத்தீர்ப்பு வரும். ஆனால் இயேசு கிறிஸ்து இவர்கள்மீது மனதுருக்கமாக இருக்கிறார். இவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்று தன்னுடைய பிதாவிடம் விண்ணப்பம் பண்ணுகிறார் இவர்களுக்காக பரிந்து பேசுகிறார்.
நம்முடைய சத்துருக்களுக்காகவும் நாம் ஜெபிக்க வேண்டும். நம்மை விரோதிக்கிறவர்களுக்காகவும், நம்மை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் நாம் ஜெபிக்க வேண்டும். நமக்கு விரோதமாக அவர்கள் செய்த பாவங்களும் மன்னிக்கப்பட வேண்டுமென்று நாம் பிதாவாகிய தேவனிடத்தில் கருத்தாய் ஜெபிக்க வேண்டும் இப்படிப்பட்ட ஜெபம் ஏறெடுத்ததற்கு, இயேசுகிறிஸ்துவே நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார். உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள் உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும்ஜெபம்பண்ணுங்கள்"(மத் 5:44) என்பதே இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்திருக்கும் உபதேசமாகும். இயேசு கிறிஸ்து தம்மை சிலுவையில் அறைந்த சத்துருக்களை சிநேகித்து அவர்களுக்காக ஜெபிக்கிறார். இப்படிப்பட்ட சுபாவம் நம்மிடத்திலும் காணப்படவேண்டும். நாமும் நம்முடைய சத்துருக்களை சிநேகித்து அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.
மன்னிப்பதை குறித்து இயேசு சொன்ன உவமை: மத்தேயு 18:23-35
23 எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப் பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.
24 அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.
25 கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்.
26 அப்பொழுது, அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து, வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான்.
27 அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைபண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.
28 அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன் பட்டிருந்தவனாகிய தன் உடன்வேலைக்காரரில் ஒருவனைக் கண்டு, அவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான்.
29 அப்பொழுது அவனுடைய உடன் வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான்.
30 அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான்.
31 நடந்ததை அவனுடைய உடன் வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.
32 அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.
33 நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,
34 அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
35 நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.
ஆம் பிரியமானவர்களே நிச்சயமாகவே நாம் செய்த எண்ணிலா பாவங்களை இயேசு நமக்கு மன்னித்து இருக்கும்போது நம்முடைய சகோதர சகோதரிகள் செய்திருக்கும் குற்றங்களை குறைகளை பாவங்களை நாமும் மனப்பூர்வமாக மன்னிக்க வேண்டும் அப்படி மன்னித்தால் மட்டுமே நம்முடைய பாவங்கள் பரலோகத்தில் மன்னிக்கப்படும் தேவனிடத்தில் மன்னிப்பு பெற்ற நாம் மற்றவரை மன்னிக்காமல் இருந்தால் தேவன் நமக்கு மன்னித்த மன்னிப்பை திரும்பப் பெற்றுக்கொண்டு நித்திய ஆக்கினையினால் நம்மை நியாயம் தீர்ப்பார் . நாம் தேவனிடத்தில் மன்னிப்பு கோருவதும் தண்டனை பெறுவதும் நாம் எடுக்கும் தீர்மானத்தில் தான் இருக்கிறது இன்று முதல் நாம் நமக்கு அடுத்தவரை மனப்பூர்வமாக மன்னிப்போம் என்று தீர்மானம் எடுத்து தேவனுடைய நாமத்தை மகிமைப் படுத்துவோம் ஆமென்.
போதகர். சார்லஸ் சதீஷ் குமார், WMM இம்மானுவேல் கிறிஸ்தவ சபை, வேப்பங்குப்பம்.
