பெர்கமு வெளி 2:12-17
வெளி 2:12. பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில் இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது;
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பெர்கமு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியதை சொல்லும்போது தம்மை இருபுறமும் கருக்குள்ள பட்டயம் உடையவர் என்று சொல்லுகிறார் பெர்கமு சபையில் வஞ்சிக்கிற மனமுள்ளவர்கள் உட்பிரவேசித்திருக்கிறார்கள். கர்த்தர் அவர்களோடு இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தினாலே யுத்தம் பண்ணுகிறார். தேவனுடைய வார்த்தையே கர்த்தருடைய பட்டயம். இது இருபுறமும் கருக்குள்ளது. இந்தப் பட்டயம் நம்மைப் பாதுகாக்கவும் செய்யவும். சத்துருவை அழிக்கவும் செய்யும்.
கர்த்தருடைய பட்டயம் கருக்குள்ளது. மிகவும் கூர்மையானது. மனுஷருடைய இருதயம் எவ்வளவு கடினமாக இருந்தாலும், அந்த இருதயத்தை கர்த்தருடைய கருக்குள்ள பட்டயத்தால் வெட்டிக் காயப்படுத்த முடியும் இந்தப் பட்டயம் இருபுறமு
ம் கருக்கானது. ஒருபுறத்தில் கர்த்தருடைய நியாயப்பிரமாணம் இருக்கிறது. மற்றொரு புறத்தில் கிறிஸ்துவின் சுவிசேஷம் இருக்கிறது. கர்த்தருடைய பிரமாணத்தை மீறுகிறவர்களுக்கு விரோதமாக நியாயப்பிரமாணம் தீர்ப்பு செய்யும் சுவிசேஷத்திற்காக விரோதமாக வஞ்சிக்கிறவர்களை கர்த்தருடைய வார்த்தை நியாயந்தீர்க்கும்.
பெர்கமு மீசியாவிலுள்ள ஒரு பட்டணம். காய்கஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது. சிமிர்னாவிற்கு வடக்கில் 50 மைல் தூரத்தில் அமைந்துள்ள பட்டணம்.
அறிந்திருக்கிறேன் வெளி 2:13
வெளி 2:13. உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், தீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடி கொண்டிருக்கும் இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அத்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசம் நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.
கிறிஸ்துவானவர் தம்முடைய சபைக்கு வரும் பிரச்சனைகளை அறிந்திருக்கிறார். அவர்களுக்கு வருகிற சோதனைகள் கஷ்டங்கள் எல்லாவற்றையும் கர்த்தர் அறிந்திருக்கிறார். தம்முடைய பிள்ளைகளை யார் வஞ்சிப்பார்கள் என்பதும் கர்த்தருக்குத் தெரியும் பெர்கமு சபையார் இருக்கிற இடத்திலே சாத்தானும் குடிகொண்டிருக்கிறான். சபையாரைச் சுற்றிலும் பாவிகளும் துன்மார்க்கரும் குடியிருக்கிறார்கள்.
சாத்தானுடைய சிங்காசனம் இருக்கும் இடத்தில் பெர்கமு சபையார் குடியிருக்கிறார்கள். ஆனாலும் பெர்கமு சடையார் கர்த்தருடைய நாமத்தை பற்றிக் கொண்டிருக்கிறார்கள். கர்த்தரைப்பற்றும் விசுவாசம் பெர்கமு சபையார் மறுதலிக்கவில்லை. இவர்களைச் சுற்றிலும் சாத்தானுடைய சிங்காசனம் இருந்தாலும் பெர்கமு சபையார் நற்கிரியைகளைச் செய்கிறார்கள். இந்த உலகம் முழுவதிலும் சாத்தானுடைய சிங்சாசனம் ஸ்தாபிக்க பட்டிருக்கிறது. எங்கெல்லாம் துன்மார்க்கம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் சாத்தான் தன்னுடைய சிங்காசனத்தில் அமர்ந்திருந்து துன்மார்க்கரை ஆளுகை செய்கிறார்.
பெர்கமு சபையாரைப்பற்றி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நல்ல வார்த்தைகளை சொல்லி புகழ்கிறார். அவர்கள் தம்முடைய நாமத்தை பற்றிக்கொண்டிருப்பதை கர்த்தர் சாட்சியாய் அறிவிக்கிறார். அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருக்க வெட்கப்படவில்லை. கிறிஸ்துவின் நாமத்தைப் பற்றிக்கொண்டால் தங்களுக்கு அவமானம் வருமோ என்றோ , உபத்திரவம் வருமோ என்றோ பெர்கமு சபையார் யோசிக்கவில்லை. எல்லா சூழ்நிலைகளிலும் அவர்கள் கர்த்தருடைய நாமத்தை உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தேவனுடைய கிருபை பெர்கமு சபையாருக்குக் கிடைத்திருக்கிறது. அவர்கள் கர்த்தரைப்பற்றும் விசுவாசத்தில் உண்மையுள்ளவர்களாக உறுதியுள்ளவர்களாக இருக்கிறார்கள், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைவிட்டு அவர்கள் விலகிப் போக வில்லை விசுவாசத்தை மறுதலிக்கவுமில்லை.
பெர்கமு சபையார் சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் குடியிருக்கும் போது அந்திப்பா என்பவர் கர்த்தருக்கு உண்மையுள்ள சாட்சியாகயிருந்தார். ஆனால் சத்துருக்களோ அந்திப்பாவை கொன்று போட்டார்கள், கர்த்தரைப்பற்றும் விசுவாசத்தினிமித்தமாய் அந்திப்பா இரத்த சாட்சியாக மரித்தார். இந்த இடத்தில் சாத்தான் குடி கொண்டிருந்தாலும், அந்திப்பாவின் இருதயத்திலோ கர்த்தர் குடி கொண்டிருந்தார். அந்திப்பா இரத்தசாட்சியாக மரித்ததைப் பார்த்து பெர்கமு சபை யார் பயந்து போய் விடவில்லை. அவர்கள் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தை மறுதலிக்கவில்லை. கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய விசுவாசத்தை கர்த்தர் அறிந்திருக்கிறார்.
பெர்கமு -சபை பற்றிக் கூறப்பட்டிருக்கும் காரியங்கள்
1. கிரியைகள்
2. கிறிஸ்துவின் நாமத்தைப் பற்றிக் பற்றிக்கொண்டிருக்கிறது.
3. விசுவாசத்தை மறுதலியாமலிருக்கிறது.
பழங்கால பாபிலோனியாவின் மார்க்கப் பிரிவினர் தங்களுடைய செயல்பாடுகளைப் பாபிலோனிலிருந்து பெர்கமுவிற்கு மாற்றிக் கொண்டார்கள். ஆகையினால் இந்தப் பட்டணம் சாத்தான் குடிகொண்டிருக்கும் இடம் என்று அழைக்கப்படுகிறது.
விசுவாசிகள் தங்களுடைய ஜீவியகால முழுவதும் கர்த்தரையே நம்பி ஜீவிக்க வேண்டும். விசுவாசத்தை ஏராளமானோர் மறுதலித்திருக்கிறார்கள்.
அந்திப்பாவைப் பற்றி அதிகமாக எந்த நிகழ்ச்சியும் தெரியவில்லை . இவன் கிறிஸ்துவிற்காக இரத்தச்சாட்சியாக மரித்தான். ஆதித்திருச்சபையில் அந்திப்பாவின் நடபடிகள் என்றொரு புத்தகம் இருந்தது இவன் பெர்கமு சபையின் மூப்பனாக இருந்திருக்கலாம். வெண்கலத்தினால் ஒரு காளையைச் செய்து அதன் வயிற்றுக்குள் அந்திப்பாவை வைத்து அவளை உயிரோடு எரித்து பொசுக்கி விட்டார்கள் என்று திருச்சபை வரலாறு கூறுகிறது.
வெறுக்கிறேன் வெளி 2:14-16
வெளி 2:14. ஆகிலும், சில காரியங்களைக் குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு ; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்தில் உண்டு.
வெளி 2:15. அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு அதை நான் வெறுக்கிறேன்.
வெளி 2:16. நீ மனந்திரும்பு இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம் பண்ணுவேன்.
பெர்கமு சபையார் கர்த்தருடைய நாமத்தை பற்றி கொண்டிருந்தாலும், கர்த்தரை பற்றும் விசுவாசம் அவர்கள் மறுதலியாமலிருந்தாலும், அவர்களிடத்திலும் சில குறைகள் காணப்படுகிறது ஆவியின் அகத்தமும் மாம்சத்தின் அசுத்தமும் ஐக்கியமாயிருக்கும். இவ்விரண்டும் எப்போதும் சேர்ந்தே காணப்படும். நாம் துன்மார்க்கரோடு ஐக்கியம் வைத்திருந்தால், நமக்குள்ளும் துன்மார்க்கமான சிந்தனைகள் பிரவேசிக்கும். நாமும் துன்மார்க்க கிரியைகளை செய்ய ஆரம்பித்து விடுவோம். ஒருவரிடத்தில் துன்மார்க்கம் இருக்கும்போது அது மற்றவர்களிடத்திலும் பரவும், முடிவில் அது முழுசபையையும் அசுத்தப்படுத்திவிடும்.
பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பிலேயாம் பணத்திற்காக துர்ப்போதனை செய்தான். இஸ்ரவேல் புத்திரரை கர்த்தருடைய சமூகத்தில் இடறப்பண் ணுவதற்கு ஏற்ற போதகத்தை பாலாக் என்பவனுக்கு பிலேயாம் சொன்னான். பிலேயாம் பாலாக்குக்கு இரண்டு ஆலோசனைகளைச் சொன்னான். அவையாவன: 1. விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பது. 2. வேசித்தனம் பண்ணுவது இஸ்ரவேல் புத்திரர்கள் இவ்விரண்டு காரியங்களையும் செய்து கர்த்தருடைய சமூகத்திற்கு முன்பாக இடறிப்போனார்கள். பிலேயாமுடைய இப்படிப்பட்ட போதகத்தைக் கைக்கொள்கிறவர்கள் பெர்கமு சபையில் இருக்கிறார்கள் இவர்கள் மனந்திரும்ப வேண்டும். இல்லை என்றால் இவர்களுடைய பாவம் பெர்கமு சபையிலுள்ள மற்ற சபையாருக்கும் பரவும்.
பெர்கமு சபையிலே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தை கைக்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள். இவர்களுடைய போதகம் இயேசுகிறிஸ்துவினுடைய போதத்திற்கு விரோதமானது. இவர்களுடைய போதகத்தில் சத்தியம், ஜீவனோ இல்லை . இயேசுகிறிஸ்துவின் போதகமோ சத்தியமும் ஜீவனும் உள்ளது. பெர்கமு சபையிலுள்ள சிலர் கிறிஸ்துவின் போதகத்தைக் கைக்கொள்வதற்குப் பதிலாக, நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கை கொள்கிறார்கள் இவர்கள் உடனே மனந்திரும்ப வேண்டும். இல்லை என்றால் நிக்கொலாய் மதஸ்தருடைய போதகம் பெர்கமு சபையில் அநேகருக்குப் பரவிவிடும். அந்தக் கள்ள போதகத்தை சபையிலுள்ள அநேகர் கைக்கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள். நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தை கர்த்தர் வெறுக்கிறார்.
தவறு செய்கிறவர்கள் காலதாமதம்பண்ணாமல் மனந்திரும்ப வேண்டும். சபையாரும் மனந்திரும்ப வேண்டும். பாவம் செய்கிற தனிநபர்களும் மனந்திரும்பவேண்டும் ஒரு முழு சமுதாயமும் பாவம் செய்யும்போது, அந்த சமுதாயம் முழுவதும் மனந்திரும்ப வேண்டும். பாவத்தை கூட்டாகச் செய்கிறவர்கள் கூட்டாக மனந்திரும்ப வேண்டும். பாவத்திற்குப் பங்காளிகளாகயிருக்கிறவர்கள் மனந்திரும்புவதிலும் பங்காளிகளாகயிருக்க வேண்டும்
கர்த்தர் சபையிலுள்ள துன்மார்க்கரை கண்டிக்கிறார். அவர்களைத் தண்டிக்கிறார். துன்மார்க்கரைத் தண்டிக்கும்போது முழுசபையாரையும் எச்சரிக்கிறார். சபையிலுள்ளவர்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும். சபைக்குள்ளே கிறிஸ்துவின் சுத்த கவிசேஷம் தெரிவிக்கப்பட வேண்டும். பிலேயாமுடைய போதகத்திற்கு சபையில் இடமில்லை கர்த்தருடைய வார்த்தைகளை கைக்கொள்கிறவர்கள்தான் சபையிலிருக்கவேண்டும்
பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்கிறவர்களை சபையிலிருந்து வெளியேற்றி விட வேண்டும். பரிசுத்தத்திற்கும் அசத்தியத்திற்கும் சம்பந்தமில்லை. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமில்லை. கொஞ்சம் புளித்த மாவு து எல்லா மாவையும் புளிக்க வைத்துவிடும் சபையில் ஒரு சிலர் பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொண்டாலும், அநேகர் அந்தப் போதகத்தைக் கைக்கொள்வதற்கு வாய்ப்புண்டாகும்.
பாவம் செய்கிறவர்களை கர்த்தர் நியாயந்தீர்க்கிறார். தேவனுடைய வார்த்தை கர்த்தருடைய வாயிலுள்ள பட்டயம் இருக்கிறது. தம்முடைய பட்டயத்தினால் கர்த்தர் பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்கிறவர்களோடே யுத்தம் பண்ணுகிறார். பாவிகள் மனந்திரும்ப வேண்டும். தவறான உபதேசத்தைப் பின்பற்றுகிறவர்கள் மனந்திரும்பி கிறிஸ்துவின் உபதேசத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் கர்த்தர் அவர்களிடத்தில் வந்து, தம்முடைய வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம் பண்ணுவார். யுத்தத்தில் எப்போதும் கர்த்தரே ஜெயிக்கிறவர். கர்த்தர் வெறுக்கிற காரியம் எதுவும் அவருடைய சபையில் இருக்கக்கூடாது
பெர்கமு சபையைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் காரியங்கள்
1. பிலேயாமுடைய போதகத்தைக் கொள்ளுகிறவர்கள்.
2. விக்கிரகங்களுக்கு படைத்தவைகளைப் பிடிக்கிறவர்கள்,
3. வேசித்தனம் பண்ணுகிறவர்கள்
4. நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிற வர்கள்.
பிலேயாமின் மூன்று பாவங்கள்
1. பிலேயாமின் வழி (2பேதுரு 2:15) - அநீதத்தின் கூலியை விரும்பினான்.
2. பிலேயாமின் வஞ்சம் (யூதா 11 - அநீதத்தின் கூலியைப் பெற்றுக் கொண்டான்
3. பிலேயாமுடைய போதகம். (வெளி 2:14) - பாலாக் என்பவனுக்குப் பிலேயாம் தவறாகப் போதகம் பண்ணினான்
மறைவான மன்னா , வெண்மையான குறிக்கல், புதிய நாமம் வெளி 2:17
வெளி 2417. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டது அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.
ஜெயங்கொள்கிறவர்களுக்கு கர்த்தர் மூன்றுவிதமான ஆசீர்வாதங்களைக் கொடுக்கிறார். அவையாவன : 1. மறைவான மன்னா 2. வெண்மையான குறிக்கல் 3. புதிய நாமம்.
மறைவான மன்னா என்பது கிறிஸ்துவின் ஆவியானவருடைய ஆறுதலையும் ஊழியங்களையும் குறிக்கிற வார்த்தை மன்னா வானத்திலிருந்து பூமிக்கு வந்தது மறைவான மன்னாவோ வானத்திலிருந்து நம்முடைய ஆத்துமாவுக்கு இறங்கி வந்திருக்கிறது. உலகத்தாருக்கு இந்த மன்னா மறைவாயிருக்கிறது. இந்த மன்னாவை கிறிஸ்துவில் மாத்திரமே காணமுடியும் ஜெயங்கொள்கிறவர்களுக்கு கர்த்தர் இந்த மறைவான மன்னாவை புசிக்க கொடுக்கிறார்.
ஜெயங்கொள்கிறவர்களுக்கு கர்த்தர் வெண்மையான குறிக்கல்லைக் கொடுக்கிறார். வெண்மை நிறம் பரிசுத்தத்தைக் குறிக்கிற வார்த்தை வெண்மையான குறிக்கல்லில் பாவத்தின் கரை எதுவுமில்லை பழைய ஏற்பாட்டுக் காலத்தில், நீதிபதிகள் நிரபராதிகளை விடுவித்து, குற்றவாளிகளைத் தண்டிப்பார்கள். ஒருவர் நிரபராதி என்பதை உறுதிசெய்யும் விதமாக, நீதிபதி அவருக்கு வெண்மையான குறிக்கல்லைக் கொடுப்பார். குற்றவாளிக்கோ கருப்பான குறிக்கல்லைக் கொடுத்துவிடுவார்.
கர்த்தர் ஜெயங்கொள்கிறவர்களுக்கு மாசற்ற தூய்மையான வெண்மையான குறிக்கல்லைக் கொடுக்கிறார். அந்தக் கல்லின்மேல் நமக்கு ஒரு புதிய நாமத்தை எழுதுகிறார். இந்தப் புதிய நாமம் நம்முடைய புத்திர சுவிகாரத்தின் நாமமாகும். நாம் மாத்திரமே நம்முடைய நாமத்தை அறியமுடியும் கர்த்தர் வெண்மையான கல்லின் மேல் எழுதியிருக்கிற நம்முடைய புதிய நாமத்தை வேறொருவராலும் அறியமுடியாது. நம்முடைய சுவிகாரத்தின் அடையாளங்களை நம்மால் மாத்திரமே அறிந்து கொள்ள முடியும் நம்முடைய சுவிகாரம் மற்றவர்களுக்குத் தெரியாது.
வெண்மையான குறிக்கல் பழங்காலத்தில் வெற்றிக்கு அடையாளமான கற்களாக இருந்தது. அத்துடன் மன்னிப்பு, அதற்கான உறுதிமொழி ஆகியவற்றையும் வெண்மையான குறிக்கல் விளக்கிற்று நியாயாதிபதிகளிடம் வெள்ளை நிறக் கற்கள், கருப்பு நிற கற்களும் இருந்தன குற்றவாளியிடம் கருப்புக்கல் கொடுக்கப்பட்டால், அவன் தண்டிக்கப்படுவார். வெள்ளைக்கல் கொடுக்கப்பட்டால் அவன் விடுவிக்கப்படுவாரா. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுகிறவர்களுக்கு வெள்ளைக்கற்களில் அவர்களுடைய பெயர்களைப் பதித்து, பரிசாகக் கொடுப்பது வழக்கம். இப்படிப்பட்ட பரிசுகளைப் பெறுகிறவர்களை அரசாங்கமே தன்னுடைய சொந்த செலவில் பாதுகாத்து பராமரிக்கும். ஜெயம் பெறுகிறவனுக்கு வெண்மையான குறிக்கல் கொடுக்கப்படும் என்பதற்கு இந்தப் பகுதியில் கூறப்பட்டிருக்கும் அனைத்து வியாக்கியானங்களும் பொருந்தும்.