இறைவன் இணைத்தவர்கள்
(சி. சாமுவேல்)
“அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாய் இருப்பார்கள்: இவ்விதமாய் அவர்கள் இருவராய் இராமல் ஒரே மாம்சமாய் இருக்கிறார்கள்” மாற்கு 10;8.
மனிதனை ஏன் படைத்தார்?
இறைவன் மனிதனை ஏன் படைத்தார்? அவருக்குப் பணிவிடை செய்யவா? அதற்குத்தான் ஏராளமான விண்தூதர்கள் இருந்தார்களே! பின் ஏன் மனிதனைப் படைக்கவேண்டும்?அவரைத் தொழுதுகொள்ளவா? அதே தூதர் குழாம் அவரை இரவும் பகலும் தொழுது கொள்வதாகத் திருமறை கூறுகிறதே! ஆகவே இறைவன் மனித இனத்தைப் படைக்க வேறு காரணமும் இருந்திருக்க வேண்டும். அது என்ன?
கடவுளைப் பற்றி யோவான் வலியுறுத்தும் ஒரு பேருண்மை “தேவன் அனபாகவே இருக்கிறார்” என்பது (1 யோவான் 4:8), இந்த அன்புதான் மனிதப் படைப்பின் மூல காரணம். ஆம், மனிதனே,
இறைவனின் அன்புதான் உன் படைப்பிற்கு காரணம். இறைவன் தனியராக இல்லாமல் ஒரு குடும்பமாகவே இருக்கிறார். அதாவது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைக் கொண்ட திரியேகக் குடும்பம். அவர் ஒருவரில் மூவராய் இருக்கிறார் என்ற அடிப்படை சத்தியத்தை மறுப்போமானால் “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்ற திருமறைக் கூற்று பொய்த்து விடும். ஏனெனில் இறைவன் நித்தியமானவர். அவர் குணாதிசயங்கள் எல்லாம் நித்தியமானவை, என்றென்றும் உள்ளவை. படைப்பனைத்திற்கு முன்பும் அவர் அன்பாகவே இருந்தார். அவர் ஒருவரில் ஒருவராக மட்டும் இருந்தால் படைப்புக்கு முன்பு யாரில் அன்பாக இருந்தார் என்ற கேள்வி எழுகிறது. அன்பு தனித்திருக்க முடியாது. அன்பு செலுத்த குறைந்தது இருவராவது இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் ஒருவர்மேல் ஒருவர் அன்பு செலுத்தக் கூடும். ஆகவே படைப்பனைத்திற்கும் முன்பிருந்தே பிதா குமாரனிலும், குமாரன் பிதாவிலும் அன்பாய் இருந்தனர். ஆயினும் அவர்கள் இரு கடவுளர் அல்லர். ஒரே ஆவியினால், பரிசுத்த ஆவியினால் பிணைக்கப்பட்டவர்கள். எனவே இறைவன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய திரியேகர் என்பது மறுக்கமுடியாத சத்தியம்.
அன்பு தனித்திருக்க முடியாது எனக் கூறினேன். அன்பின் மற்றொரு தன்மை அது ஒரு கட்டுக்குள், ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடக்கி வைக்க முடியாததொன்று. அனபு பெருகும், விரிவாகும் தன்மை உடையது. புதிதாய்த் திருமணமான ஒரு தம்பதி ஒருவரை ஒருவர் ஆழ்ந்து நேசிக்கலாம். ஆயினும் அவர்கள் தங்கள் அன்பில் மட்டும் நிறைவு காண்பதில்லை. தங்களுக்கென்று பிள்ளைகள் வேண்டும், தங்கள் குடும்பம் விரிவாக வேண்டும் என்று விரும்புவார்கள். அவ்விதமே இறைவனின் அன்பும் திரியேக குடும்பத்திற்குள் அடக்கி வைக்கப்படாமல், தமக்கென்று ஒரு குடும்பம் வேண்டும் என்று விரும்பினார் இறைவன். அதன் விளைவுதான் மனிதனின் படைப்பு. ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தவுடன் கேட்கப்படும் ஒரு கேள்வி “குழந்தை யாரைப்போல் இருக்கிறது?” என்பது. ஒவ்வொரு தம்பதியும் தங்கள் குழந்தைக்கு குடும்பத்தின் சாயல் இருக்கவேண்டும் என்று விரும்புவது இயற்கை. அவ்விதமே,
“தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக… என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார். அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்” ஆதியாகமம் 1:26,27. மேலும், “ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்” ஆதியாகமம் 1:27.
ஆம், இறைவன் ஒரு தனி ஆளை உருவாக்கவில்லை. இருவராய் உருவாக்கினார். உண்மை, ஆதாமைத்தான் முதலில் படைத்தார். ஆனால் ஆதாமுக்குள்தானே ஏவாள் இருந்தாள்! இறைவன் நியமித்த முதல் நிறுவனம், திட்டம் திருமணமே. மனிதனின் புவி வாழ்க்கை திருமணத்துடன் தொடங்கியது. அவனுடைய பரலோக வாழ்வும் ஒரு திருமணத்துடன் தொடங்கும். அதுதான் “ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம்”. திருமணம் மனித சமுதாயத்தின் புனித அடித்தளம். மனிதர்களை “ஆணும் பெண்ணுமாக” படைத்து”, “தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.” யாரை? குடும்பங்களை. பின்பு அவர்களைப் பார்த்து கூறினார்: “பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி… ஆண்டுகொள்ளுங்கள்.”
இந்த வசனத்தின் அடிப்படையில் “குடும்பக் கட்டுபாடு” தவறு என்று போதிப்பவர் உண்டு. திருவசனங்களை வாசிக்கும்போது, அவைக் கூறப்பட்ட சூழ்நிலை, சந்தர்ப்பம், நோக்கம் யாவையும் புரிந்துக்கொண்டு, பொருள் கொள்ளவேண்டும். தம்முடைய சாயலில் படைக்கப்பட்ட மனித குடும்பம் அவர் சார்பில், அவர் பிரதிநிதியாய், பூமியை ஆளவேண்டும் என்பதே இறைவனின் நோக்கம். அந்த நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால், மனிதன் பூமியை நிரப்ப வேண்டும். அவன் பலுகிப் பெருகினால்தான் பூமியை நிரப்பமுடியும். இன்று இந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. இறைவன் எதற்காக பூமியை நிரப்பச்சொன்னார்? அதைக் கீழ்ப்படுத்தி, ஆண்டுகொள்ள. ஆனால் இப்போது நாம் பூமியை மிதமிஞ்சி, அளவுக்கு மீறி நிரப்பி, அதைக் கறைப்படுத்திவிட்டோம். நம்முடைய நீர்நிலைகள், ஆகாயம், உணவுப்பொருட்கள் யாவும் நஞ்சாகிக்கொண்டு வரும் சூழ்நிலை. நாம் எப்படி பூமியைக் கீழ்ப்படுத்த முடியும்? இன்றைய நிலையில் பூமியைக் கீழ்ப்படுத்த குடும்பக்கட்டுபாடு தேவையே.
மேலும் மனுக்குலத்தை ஆணும் பெண்ணுமாகப் படைத்த இறைவன் அவர்களைப் பார்த்து, “பூமியை ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொன்னார். அதாவது, ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து பூமியை ஆளவேண்டும் என்பதே அதன் பொருள். இது இறைவனால் நியமிக்கப்பட்ட கூட்டாட்சி. ஆண் ஆதிக்கமா, பெண் ஆதிக்கமா என்று பட்டிமன்றம் நடத்தத் தேவை இல்லை. ஆண்-பெண்ணின் இணைந்த ஆதிக்கமே இறைவனின் திட்டம். இந்தத் திட்டத்தில் ஆணும் பெண்ணும் சமபங்காளிகள். ஆம் தம்பதியரே, நீங்கள் இருவரும் இறைவனின் பார்வையில் சமபங்காளிகள் என்பதை மறவாதீர்.
ஏவாளை ஏன் படைத்தார்?
“பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்” ஆதியாகமம் 2:18.
“தனிமையாய் இருப்பது நல்லதல்ல.” ஏன்?
வாழ்க்கைப் பிரச்சினைகளை இருவராய் ஒருங்கிணைந்து சந்திக்க. வாழ்க்கையின் நன்மைகளை, இன்பங்களை ஒன்றாய்ச் சேர்ந்து அனுபவிக்க. இது அன்பின் இறைவன் ஏற்படுத்திய அன்பின் திட்டம். இறைவன் இவ்வுலகைப் படைத்த நோக்கத்தை, திட்டத்தைக் குடும்பங்களின் மூலமாகவே நிறைவேற்ற சித்தங்கொண்டார். பெருவெள்ளத்தில் நோவாவை மட்டுமன்றி, எட்டுபேர் கொண்ட அவர் குடும்பத்தையே இரட்சித்தார். ஆபிரகாமைக் குடும்பமாக தெரிந்துகொண்டார். அவருக்கு இறைவன் கொடுத்த வாக்குறுதி என்ன?
“பூமியிலுள்ள வம்சங்கள் எல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்” ஆதியாகமம் 12:3. “வம்சங்கள்” என்ற சொல் ஆங்கிலத்தில் ”families” அதாவது “குடும்பங்கள்” என்றுள்ளது. இது உலகத்தின் விசுவாசக் குடும்பங்கள் அனைத்தையும் குறிக்கும். ஆம், சகோதரனே, சகோதரியே, நீ ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு, இரட்சிக்கப்பட்டிருக்கும் விசுவாசி என்றால், கர்த்தர் உன்னையும் உன் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார் என்பது உறுதி. தொடர்ந்து நாம் பழைய ஏற்பாட்டை வாசிக்கும்போது, இறைவன் யாக்கோபைக் குடும்பமாகத் தெரிந்துகொண்டார், மேசியாவின் அரியணையில் அமர தாவீதின் குடும்பத்தைத் தெரிந்துகொண்டார் என்றெல்லாம் பார்க்கிறோம். புதிய ஏற்பாட்டிலும் மக்கள் குடும்பம் குடும்பமாய் இரட்சிக்கப்படுவதைக் காண்கிறோம். பிலிப்பி சிறைச்சாலை அதிகாரி, கொர்நேலியு முதலானோர் குடும்பங்களாய் இரட்சிக்கப்பட்டார்கள். பவுலின் நிருபங்களில் பல விசுவாசத்தம்பதியர் குடும்பங்களின் பெயர்களை வாசிக்கிறோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறினார்: “இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” மத்தேயு 18:20. இந்த வாக்கு ஒரு விசுவாசிகளின் ஐக்கியத்திற்கு மட்டுமன்றி, ஒரு கிறிஸ்தவக் குடும்பத்திற்கும் உரியது. இரண்டு பேர் என்பது கணவன் மனைவியையும், மூன்று பேர் என்பது பெற்றோர் பிள்ளையையும் குறிக்கும் எனலாம். ஒரு மெய்க் கிறிஸ்தவக் குடும்பம் ஆண்டவருக்கு எவ்வளவு பிரியமானது என்பதை இதனால் அறிகிறோம். மேலும் திருமறையில் வாசிக்கிறோம்:
“தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்” சங்கீதம் 68:6. ஆம், சகோதரனே, சகோதரியே, இறைவன் தனிமையாய் இருப்பவர்களுக்கு வீடுவாசலை ஏற்படுத்துகிறார். ஏன்? “மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல.” ஒவ்வொருவருக்கும் குடும்பத்தின் அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பும் தேவை. உன்னதப்பாட்டு இதை அழகாக சித்திரிக்கிறது.
“நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்” உன்னதப்பாட்டு 6:3. இது ஓர் ஆழ்ந்த உறவின், சொந்த உரிமையின் அறிக்கை. ஒரு நல்ல குடும்பத்தில் இந்தத் தனிச்சிறப்பு வாய்ந்த “சொந்த உரிமையை” ஒவ்வொருவரும் உணர்ந்திருக்கிறார்கள். கணவனும் மனைவியும் ஒருவரைப்பற்றி ஒருவர் பேசும்போதும், பெற்றோர் பிள்ளைகளைப்பற்றி, பிள்ளைகள் பெற்றோரைப்பற்றி, சகோதர சகோதரிகள் ஒருவரைப்பற்றி ஒருவர் பேசும்போதும், அவர்கள் குரலில் அன்பும் பெருமிதமும் தொனிக்கிறது. ஒரு மெய்க் கிறிஸ்தவக் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் “சொந்த உரிமை” பாராட்டுவதோடுகூட அவர்கள் அனைவரும் விண்தந்தையிடம் “சொந்த உரிமை” பாராட்டமுடியும். மேலும் திருமறை கூறுகிறது:
“ஒண்டியாய் இருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்:
அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலன் உண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கி விடுவான்: ஒண்டியாய் இருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிட துணை இல்லையே. இரண்டுபேராய்ப் படுத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு சூடுண்டாகும்: ஒண்டியாய் இருக்கிறவனுக்கு சூடுண்டாவது எப்படி? ஒருவனை யாதொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாமே: முப்புரி நூல் சீக்கியரமாய் அறாது” பிரசங்கி 4:8-12.
11 ஆம் வசனத்தில் “இரண்டுபேர்” என்ற சொல் ஒரு தம்பதிக்கே பொருந்தும். கணவனும் மனைவியும் ஒருமித்து செயல்படும்போது, “அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்” என்பது முற்றிலும் உண்மை. கிறிஸ்தவத் தம்பதியர் யாவருக்குள்ளும் இப்படிப்பட்ட ஐக்கியம் இருந்தால் எவ்வளவு நலமாய் இருக்கும்! இருவரும் சேர்ந்து ஆவிக்குரிய வாழ்விலும், உலக வாழ்விலும் வேகமாய் முன்னேறலாமே. இருவரும் இணைந்து நின்று சாத்தானை மேற்கொள்ளலாமே. “முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” என்று பிரசங்கி கூறுகிறார். தனிநூல் சீக்கிரம் அறந்துவிடும். ஆனால் நடுவில் ஒரு நூலை வைத்து, அதன்மேல் வேறு இரு நூல்களை மாறிமாறி பின்னினால், அது மிகவும் வலுவாய் இருக்கும். ஒரு கிறிஸ்தவத் திருமணத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நடுநூலாய் இருந்து, கணவனும் மனைவியும் அவரை மையமாகக் கொண்டு பின்னப்படும்போது, அவர்களுடைய திருமண இணைப்பு ஒருக்காலும் அறாது. தம்பதியரே, உங்கள் வாழ்க்கை இயேசுவைச் சுற்றி பின்னபட்டிருக்கட்டும். இயேசுவே உங்கள் திருமணத்தின் நடுநாயகராக இருக்கட்டும்.
துணையை எப்படிப் படைத்தார்?
“பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்… அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை உண்டுபண்ணினார். அவன் நித்திரை அடைந்தான்: அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்” ஆதியாகமம் 2:18,21,22.
ஏற்றதுணை… ஆம் சகோதரனே, உன் மனைவிதான் உனக்கு எற்ற துணை. ஆம், சகோதரியே, உன் கணவன்தான் உனக்கு ஏற்ற துணை. “துணைவன்”, “துணைவி” என்ற தமிழ் சொற்கள் மிகவும் பொருத்தமான, பொருள் நிறைந்த சொற்கள். துணையைத் தந்த இறைவனின் நோக்கத்தை, விருப்பத்தை நன்கு வெளிப்படுத்தும் சொற்கள். சகோதரனே, கர்த்தர் உனக்கு ஒரு துணையைக் கொடுத்திருக்கிறார். ஓர் “அடிமையை” அல்ல, ஒரு “பணிப்பெண்ணை” அல்ல. கிறிஸ்தவத் திருமணங்களில் மணமகள் மணமகனின் இடது புறத்தில் நிற்பது வழக்கம். காரணம்? அவள் அவன் இருதயத்திற்கு ஏற்றவள் என்பதை வலியுறுத்தவே. இதை எப்போதும் நினைவிற் கொள்ளுங்கள்.
மனிதனுக்கு ஏற்ற துணையை இறைவன் எப்படிப் படைத்தார்?
அவனுக்கு ஆழ்ந்த நித்திரை வரப்பண்ணி, அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுக்கிறார். தன் உறுப்புகளில் ஒன்றை இழந்த ஆதாம் ஊனன் ஆகிவிட்டான். ஆம் சகோதரனே, ஏற்ற துணையின்றி தனிமையாய் இருக்கும் மனிதன் ஊனமுற்ற மனிதன். ஊனமுற்ற ஆதாம் பூரணப்பட வேண்டுமென்றால், அவனிலிருந்து எடுக்கப்பட்ட எலும்பு திரும்ப அவனுக்குக் கொடுக்கப்படவேண்டும். இறைவன் திரும்பக் கொடுத்தாரா? கொடுத்தார். ஆனால் எப்படிக் கொடுத்தார்? அந்த எலும்பை ஓர் அழகிய பெண்ணாக மாற்றி, “அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.” ஆ! அவன் உணர்ச்சிகளைச் சற்று கற்பனை செய்து பாருங்கள். முதல் பார்வையிலேயே தன் உள்ளத்தைப் பறித்துக்கொண்ட இவள் யார்? அவன் உடலிலிருந்து எடுக்கப்பட்டவள். அவன் சொந்த உறுப்பு. திருமண உறவின் இரகசியம் அதில் பொதிந்திருந்தது. அதை நன்கு புரிந்துகொண்ட ஆதாம் முதல் திருமணவாக்கைக் கொடுக்கிறான்.
“இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறார்” ஆதியாகமம் 2:23. இவ்வாக்கை ஏவாளுக்கும் சேர்ந்து கொடுக்கிறான்ஆதாம். இது அவள் அவன் வாழ்க்கையில் வகிக்கப் போகும் சிறப்பான பங்கின், சம உரிமையின் அறிக்கை, கூட்டறிக்கை, ஆதாமிலிருந்து இறைவன் எடுத்தது ஒரு எலும்பு மட்டுமே. பல எலும்புகள் அல்ல. அதாவது “ஒருவனுக்கு ஒருத்தி” என்பதே இறைவனின் திட்டம்.
“ஒரு மங்கை மனிதன்”, “ஒரு மனிதன் மங்கை” என்ற இந்தத் திட்டத்தை யாவரும் பின்பற்றினால், “எய்ட்ஸ்” போன்ற நோய்களுக்கு இடமே இருக்காது.
ஆபிரகாம் லிங்கனின் சகோதரிக்கு திருமணமானபோது, அவர் ஒரு கவிதை இயற்றினார். அதன் பொருள்? இறைவன் மனிதனின் காலிலிருந்து அவனுக்குத் துணையை உருவாக்கவில்லை. ஆகவே அவள் அவனுக்கு அடிமை அல்லள். அவளை அவன் தலையிலிருந்தும் எடுக்கவில்லை. ஆகவே அவள் அவன்மேல் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. அவன் விலாவிலிருந்து அவன் எடுக்கப்பட்டதால், இருவரும் சரிநிகராய், ஒன்றாய்ச் செயல்படவேண்டும். பேச்சுமூச்சற்றிருந்த ஒரு நோயாளியைச் சோதித்த மருத்துவர் அவன் மனைவியிடம், “உன் கணவன் உயிர் பிரிந்துவிட்டது” என்று கூறினார். அந்த நோயாளியோ ஈனக்குரலில், “டாக்டர், நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்” என்றான். உடனே அவன் மனைவி அதட்டும் குரலில், “நீங்க சும்மா இருங்கோ, டாக்டருக்குத் தெரியாதா என்ன?” என்றாளாம்! இப்படிப்பட்ட மனைவிகளுண்டு. மனைவியை அடித்து, துன்புறுத்தும் கோழைகளும் உண்டு. ஆம், சகோதரனே, நீ உன் மனைவியை அடிக்கிறவனாய் இருந்தால், நீயும் ஒரு கோழைதான் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை.
ஆதாமின் வாக்கைத் தொடர்ந்து, இறைவனின் கட்டளை பிறக்கிறது: “இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்து இருப்பான்: அவர்கள் ஒரே மாம்சமாய் இருப்பார்கள்” ஆதியாகமம் 2:24.
இறைவன் கொடுத்த இம்முக்கட்டளைகளில் முதல் கட்டளை “விட்டு” அதாவது “பிரிந்து” என்பதாகும். “கணவன் தன் பெற்றோரை விட்டு” என்பதை “இதினிமித்தம் பெண் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் கணவனோடு இசைந்திருப்பாள்” என்று மாற்றிவிட்டோம். உண்மையில் இக்கட்டளை கணவன், மனைவி இருவருக்குமே பொருந்தும். இக்கட்டளையின் பொருள் பெற்றோரை ஒதுக்கிவிட வேண்டும் என்பதன்று. இருவரும் இருவருடைய பெற்றோருக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத்தான் வேண்டும். அப்படியானால் “பிரிந்து” என்பதின் பொருள் என்ன? திருமணத்திற்கு முன்பு பெற்றோர் இல்லத்தில் பழகிப்போன வாழ்க்கைமுறைகள் சிலவற்றை இருவரும் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். சில வேளைகளில் பெரிய மாற்றங்களும் இணக்கங்களும் தேவைப்படும். பெற்றோரும் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுத்தபின் அவர்கள் வாழ்க்கையில் அடிக்கடித் தலையிட்டு குழப்பத்தை உண்டாக்குவதைத் தவிர்க்க வேண்டும். பெரியோர் என்ற முறையில் அறிவுரை கூறுவதில் தவறில்லை. ஆனால் தலையிடுவது முற்றிலும் தவறு. சில பெற்றோர் பின்னாலிருந்து தூண்டிவிட்டுக் கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட “ரிமோட் கன்ட்ரோலினால்” இளம்தம்பதியர் பலரின் வாழ்க்கை வெகுவாய்ப் பாதிக்கப்பட்டிருப்பதை நான் அறிவேன். பெற்றோரே, உங்கள் பிள்ளைகள் தங்கள் குடும்பங்களைத் தாங்களே நடத்தட்டும். நீங்கள் அவர்களுக்காக ஜெபியுங்கள். அதுபோதும்.
அடுத்த கட்டளை “இசைந்திரு” அல்லது “இணைந்திரு” என்பது. திருமணத்தில் இணைக்கப்படும் தம்பதி ஒரு புதிய உலகத்தை உருவாக்குகிறார்கள். ஒரு குடியரசை ஸ்தாபிக்கிறார்கள், முடியரசை அன்று. இங்கே சர்வாதிகாரத்திற்கு இடமில்லை. அவர்களிலிலிருந்து ஒரு புதிய தலைமுறை பிறக்கும். இருவர் மூவராய், நால்வராய் பெருகுவார்கள். இப்பொழுது அவர்கள் வாழ்க்கையில் முதன்மையானவற்றின் வரிசை மாறுகிறது. முதலாவது இறைவன், இரண்டாவது துணைவன் அல்லது துணைவி, மூன்றாவது பிள்ளைகள், நான்காவது பெற்றோர், கடைசியாக “தான்”.
மூன்றாவது கட்டளை தம்பதியர் “ஒரே மாம்சமாய்” இருக்கவேண்டும் என்பதே. அதாவது அவர்கள் ஒருவரில் ஒருவர் பிணைந்துவிட வேண்டும். ஓர் ஆத்துமா, ஓர் உடல், ஓர் உயிர் எனப் பின்னப்பட வேண்டும். ஆதியாகமத்தில் “அவர்கள் ஒரே மாம்சமாய் இருப்பார்கள்” என்பதை இயேசு பின்வருமாறு கூறுகிறார்: “இவ்விதமாய் அவர்கள் இருவராய் இராமல் ஒரே மாம்சமாய் இருக்கிறார்கள்” மாற்கு 10:8. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கணவனும் மனைவியும் ஒரே மாம்சமாய் “இருப்பார்கள்” என்று கூறாமல் “இருக்கிறார்கள்” என்பதை வலியுறுத்துகிறார். ஆம் தம்பதியரே, திருமணமான நாழிகையில் இருந்து நீங்கள் இருவரும் “ஒரே மாம்சமாய்” இருக்கிறீர்கள். இதை ஒருக்காலும் மறவாதீர். கணவனே, உன் மனைவிதான் கர்த்தர் உனக்களித்த ஏற்ற துணை. மனைவியே, உன் கணவன்தான் கர்த்தர் உனக்களித்த ஏற்ற துணை. கணவன்மாரே, உங்கள் மனைவியரின்றி நீங்கள் முழுமை பெறவில்லை நீங்கள் இருவரும் இணைந்து பிணைந்து, ஓருடல் ஓருயிர் ஓராத்மாவாக செயல்படுங்கள். அதுவே இறைவனின் திட்டம். அதுவே இறைவனின் கட்டளை.
பிரிக்காதிருக்கக்கடவன்
“ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார் ” மாற்கு 10:9.
மேற்கூறிய வசனத்தில் “இணைத்ததை” என்ற சொல் மூலமொழியில் “பிரிக்கமுடியாதபடி பிணைத்ததை” என்று பொருள்படும். அதாவது வஜ்ஜிரத்தால் அல்லது சிமென்டினால் இறுகப் பிணைக்கப்படுவதுபோல் பிணைக்கப்பட்டவர்கள் கணவனும் மனைவியும். இறைவனின் பார்வையில திருமண உறவு அதைவிட வலுவாய் இருக்கவேண்டும். ஆகவேதான் இறை இயேசு கூறுகிறார்: “தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.” பிரித்தால்? உள்ளங்கள் நொறுங்கும். இப்படிப் பிரிக்கப்பட்டதால் உடைந்த உள்ளங்களுடன் எங்களுக்குக் கடிதம் எழுதியவர் பலர். சிமென்டினால் வலுவாய்க் கட்டப்பட்ட ஒரு சுவர். அக்கட்டடத்தைப் பிரித்து, செங்கல்களை உடையாமல் தனித்தனியே எடுக்கமுடியுமா? ஒருக்காலும் முடியாது. அப்படிச் செய்ய முயற்சித்தால் செங்கற்கள் நொறுங்கிப்போம். அவ்விதமே இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்கமுயன்றால், இதயங்கள் நொறுங்கிப்போகும்.
அது மட்டுமன்று, அப்படிப்பிரிக்கிறவர்கள் யாராயினும், அது கணவனோ மனைவியோ, பெற்றோரோ மற்றோரோ, அவர்களை இணைத்த இறைவனையே அவமதிக்கிறார்கள். ஆகவே அவர் கோபத்திற்கு, சாபத்திற்கு ஆளாவார்கள். கர்த்தர் கூறினார்: “கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாய் இருக்கிறார்: உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் பண்ணினாயே” மல்கியா 2:14. “உன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் பண்ணினாயே” என்று கர்த்தர் யாரிடம் கூறினார்? ஒரு வாலிபனிடமா? இல்லை, எல்லா வயதினரிடமும் கூறுகிறார். ஆம், சகோதரனே, ஒரு கணவன் தன் மனைவிக்கு எவ்வயதிலும் துரோகம் செய்யலாம். இளவயதிலோ, நடுவயதிலோ, ஏன் முதிர்வயதிலும் கூட துரோகம் செய்யலாம். இப்படிப்பட்ட சில ஊழிய்ாகளும்
உண்டு. அதுபோல் ஒரு மனைவியும் தன் கணவனுக்கு எவ்வயதிலும் துரோகம் செய்யலாம். இச்செய்கை இறைவனின் சினத்தைக் கிளறும். எச்சரிக்கை, சகோதரனே! எச்சரிக்கை,சகோதரியே! கணவன்மாரே, கர்த்தர் கூறுவதைக் கவனமாய்க் கேளுங்கள். அவள் “உன் தோழி”. உனக்கு நெருக்கமான சில தோழர்கள் இருக்கலாம். ஆனால் சதோதரனே, அனைவரிலும் உன் மனைவிதான் உன் உயிருக்குயிரான தோழி, உன் “best friend”. அப்படியே மனைவியரே, உங்களுக்கு மிகவும் நெருங்கிய தோழிகள் இருக்கலாம். ஆனாலும் உன் கணவன்தான் உன் உயிருக்குயிரான தோழன், உன் “best friend”. மேலும் கர்த்தர் என்ன கூறுகிறார்? அவள் “உன் உடன்படிக்கையின் மனைவி”. “உடன்படிக்கை” என்ற சொல் திருமறையில் மிகவும் புனிதமான ஒரு சொல். நம்முடைய தேவன் உடன்படிக்கையின் தேவன். அவர் தாம் தெரிந்தெடுத்த மனிதரோடு செய்துகொண்ட ஒப்பந்தங்களை “உடன்படிக்கை” என்று திருமறை குறிப்பிடுகிறது. ஆகவே இது தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு சொல். வலிமையான ஒரு சொல். அதாவது, திருமண உடன்படிக்கைக்கு இறைவனே சாட்சி. திருமணத்தின் வாய்மைக்கும் நிரந்தரத்திற்கும் அவரே உத்தரவாதம் அளிக்கிறார். அவர் பார்வையில் திருமண உறவு மிகவும் புனிதமான ஒர் உறவு. அதைக் காத்துக்கொள்ளும் தம்பதியருக்கும் அது ஆசீர்வாதமாகவும், அதை முறிக்கிறவர்களுக்கு அது ஆக்கினையைக் கொண்டுவருவதாகவும் இருக்கும். ஆகவேதான் கர்த்தர் கூறுகிறார்:
“ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்” மல்கியா 2:15. மேலும் கர்த்தர் உரைக்கிறார்:
“தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்: அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் வஸ்திரத்தை மூடுகிறான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: ஆகையால் நீங்கள் துரோகம் பண்ணாமல் உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்” மல்கியா 2:16.
“தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன்” என்று ஆண்டவர் கடுமையான வெறுப்புணர்ச்சியுடன் கூறுகிறார். “தள்ளிவிடுதல்” என்பது விவாகரத்தைக் குறிக்கிறது. அந்நாட்களில் இஸ்ரவேல் மக்களுக்குள்ளே மனைவியைத் தள்ளிவைப்பது எளிது. இன்று மேநாடுகளில் இது மிகவும் சாதாரணம். இந்த “விவாகரத்து” கலாச்சாரம் நம் நாட்டிலும் பரவி வருகிறது. தமிழ் நாட்டில் சட்டப்பூர்வமான விவாகரத்துக்கள் குறைவானாலும், விவாகரத்து செய்யாமலே பிரிந்து வாழும் தம்பதியர் உண்டு என்பதை எங்களுக்கு வரும் கடிதங்கள் மூலம் அறிகிறோம். இதுவும் இறைவனின் பார்வையில் கொடுமையே. “கொடுமை” என்ற சொல் ஆங்கிலத்தில் “வன்முறை” என்றுள்ளது. தம்பதியரே, கர்த்தரின் எச்சரிக்கும் குரல் உங்கள் செவிகளில் ஒலித்துக்கொண்டிருக்கட்டும். நீங்கள் உங்கள் திருமணவாக்குக்கு உண்மையாய் இருந்தால், இறைவனே பின்னணியில் நின்று, உங்கள் திருமணவாழ்க்கையின் வெற்றிக்குத் துணை நிற்கிறார். திருமணபிணைப்புக்கு எதிரான சக்திகளை முறியடிக்கிறார். திருமண உடன்படிக்கையைப்பற்றி பண்டிதர் பில்லி கிரஹாம் கூறுகிறார்: “நாம் கிறிஸ்துவுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு அடுத்த பெரிய வாக்குறுதி திருமணவாக்கு. இது வாழ்நாள் முழுதும் தொடரும் வாக்களிப்பு. திருமணவாக்கு என்பது ஒருவருக்கொருவர் கொடுத்தது மட்டுமன்று, இறைவனுக்கும், நம் குடும்பத்தாருக்கும், திருச்சபைக்கும், சமுதாயத்திற்கும் கொடுத்த உறுதிமொழி.”
ஆம். கிறிஸ்தவத் தம்பதியரே, உங்கள் திருமணவாக்கை எக்காரணத்தை முன்னிட்டும் முறிக்காதீர். அப்பொழுது இறைவன் உங்களை ஆசீர்வதிப்பது உறுதி. நாங்கள் நடத்திய ஓர் இல்லற முகாமில் பங்குபெற்ற ஒரு சபைப்போதகர் எழுதிய கடிதம்: “கர்த்தருக்குள் அன்பான சகோதரருக்கும், சகோதரிக்கும், எனக்கும் என்னுடைய மனைவிக்கும் மனவருத்தம் ஏற்பட்டு. ஒருவருடமாக பிரிந்து இருந்தோம். நான் தங்களுடைய குடும்பமுகாமில் கலந்து கொண்டேன். தாங்கள் கொடுத்த ஆலோசனைகளின்படி, பிரிந்திருந்த என் மனைவியோடு ஒப்புரவாக தீர்மானம் எடுத்தேன். அதன்படி நானும், என் மனைவி, பிள்ளைகள் யாவரும் சந்தோஷமாக இருக்கிறோம்.” தம்பதியரே! உங்களில் யாராவது பிரிந்திருந்தால், இனி ஒன்று சேர்ந்து வாழ இன்று தீர்மானியுங்கள்.
குடும்பச் சட்டங்கள்
“மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப்புருஷருக்கும் கீழ்ப்படியுங்கள்… புருஷர்களே, உங்கள் மனைவிகளில அன்புகூருங்கள்: அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து…” எபேசியர் 5:22.23.
மனைவியரே. உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பிரதான கட்டளை “கீழ்ப்படியுங்கள்” என்பது. கணவன்மாரே, உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பிரதான கட்டளை “அன்புகூருங்கள்” என்பது. சகோதரியே, திருமறைச் சட்டத்தின்படி நீ உன் சொந்த கணவனுக்குக் கீழ்ப்படிகிறாயா? சில பெண்கள் தங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படிவார்கள், தங்கள் மூத்த சகோதரருக்குக் கீழ்ப்படிவார்கள். ஆனால் தங்கள் சொந்த கணவனுக்கு மட்டும் கீழ்ப்படியமாட்டார்கள். மனைவி தன் கணவனுக்கு “கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல்” கீழ்ப்படியவேண்டும் எனத் திருமறை கூறுகிறது. ஏன்? “கிறிஸ்து சபைக்குத் தலைவராய் இருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாய் இருக்கிறான்” எபேசியர் 5:23.
இது இறைவன் அளித்த முதல் குடும்பச் சட்டம். ஏவாள் ஆதாமிலிருந்து எடுக்கப்பட்டாளே தவிர ஆதாம் ஏவாளிலிருந்து எடுக்கப்படவில்லை. ஆகவேதான் இறைவன் கணவனைக் குடும்பத் தலைவனாய் நியமித்திருக்கிறார். ஆயினும் ஏவாள் ஆதாமின் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதால், அவள் அவனுக்குப் பக்கத்துணை, அவனுக்கு சமமானவள். இருவரும் சமம் என்றால், கணவன் எப்படி மனைவிக்குத் தலையாய் இருக்கமுடியும் என்ற கேள்வி எழலாம். ஒரு நாட்டிற்கு ஒரு தலைவர்தான் இருக்கமுடியும். இல்லாவிட்டால் குழப்பந்தான் ஏற்படும். நம் நாட்டுக் குடியரசுத் தலைவர் ஒருவரே. ஆயினும் நம் அரசு அமைப்பின்படி குடியரசுத்தலைவரும், ஒரு சாதாரண குடிமகனும் சம உரிமை பெற்றவர்கள். அவ்விதமே குடும்பத்திலும் கணவன் தலையாய் இருந்தாலும், கணவன் மனைவி இருவரும் சம உரிமை உள்ள இல்லத்தரசன், இல்லத்தரசி, எபேசியர் 5:22இல் மனைவிகள் தங்கள் கணவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும் என்று கூறும் முன் அதற்கு முந்தின வசனத்தில் பவுல் கூறியிருப்பதையும் கருத்தில கொள்ளவேண்டும்.
“தெய்வபயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்” எபேசியர் 5:21. ஆம் தம்பதியரே, கணவனும் மனைவியும் நடைமுறையில் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருக்கவேண்டும். அதாவது விட்டுக்கொடுக்க வேண்டும். கருத்துவேற்றுமை வரும்போது, இருவரும் சம உரிமையுடன் விவாதித்து, ஜெபித்து, யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து, ஒரே முடிவை எடுக்கவேண்டும். கருத்துவேற்றுமை நீடிக்குமானால், தலைவன் என்ற முறையில் கணவன்தான் முடிவெடுக்க வேண்டும். அந்த முடிவை மனைவி முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை கணவன் தவறான முடிவை எடுத்தாலும் பரவயில்லை. தன் முடிவு தவறு என்று தெரிந்த பின்பு, அடுத்த முறை மனைவியின் கருத்துக்குக் கூடுதலான மதிப்பு கொடுக்கக் கற்றுக்கொள்வான். அதற்கு மாறாக பெண்கள் தங்கள் கணவருக்குக் கீழ்ப்படிவதைக் கேவலமாக நினைத்தால், அதனால் குடும்ப சமாதானம் சீர்குலைந்து போகும். ஒரு கணவன் தன் மனைவியிடம் தண்ணீர் கேட்டபோது, அந்த நவீன மனைவி, “நான் உன் பணிப்பெண் அல்ல. நீயே போய் எடுத்துக்கொள்” என்றாளாம்! கணவனும் மனைவியும் “ஒரே மாம்சமாய் இருக்கிறார்கள்” என்பது உண்மை என்றால், ஒருவருக்கொருவர் சேவை செய்வதில் களிகூர வேண்டுமே தவிர, அதைக் கேவலமாய் நினைப்பது திருமறை சட்டத்திற்கு புறம்பானது. ஆகையால், “சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்த புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்” எபேசியர் 5:24. சபையானது கிறிஸ்துவுக்கு ஏன் கீழ்ப்படியவேண்டும்? இயேசு கூறுகிறார்: “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” யோவான் 14:15.
ஆம் சகோதரி, கீழ்ப்படிதல் அன்பின் அடையாளம். நீ உன் கணவரை ஆழ்ந்து நேசித்தால், அவருக்குக் கீழ்ப்படிவதைத் தாழ்வாய் நினைக்கமாட்டாய். “கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல” என்ற சொற்களைக் கவனிக்க. அதாவது, கிறிஸ்துவின் கட்டளைகளுக்கு மாறான எதையும் கணவன் சொன்னால் அதை ஏற்கவேண்டியதில்லை. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், கிறிஸ்துவுக்குப் பிரியமில்லாததைச் செய்ய இயலாது என்பதை மிகவும் தாழ்மையுடனும் நயமுடனும், அதே நேரத்தில் உறுதியுடனும் கூறவேண்டும், மேட்டிமையாக அன்று. விசவாசியான சில மனைவியர் இரட்சிக்கப்படாத தங்கள் கணவரைத் தாழ்வாக நினைத்து, மேட்டிமையாக நடந்துகொள்வதை நான் அறிவேன். இது திருமறையின் குடும்பச் சட்டத்தை அவமதிப்பதாகும். கணவன்மாரே, நீங்கள் கவனியுங்கள்.
“புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்: அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்பு கூர்ந்து… தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” எபேசியர் 5:25,27.
ஆம் சகோதரகளே, கிறிஸ்து சபையில அன்புகூர்ந்ததுபோல நாம் நம் மனைவியரிடத்தில் அன்பு செலுத்த வேண்டும். கிறிஸ்து சபையை எப்படி நேசித்தார்? “தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” அன்றோ? சபைக்குத் தலையாய் இருக்க கிறிஸ்து பெருவிலை கொடுத்தார். அவ்விதமே குடும்பத் தலைவனும் மனைவியின் நல்வாழ்க்கைக்காக, தன் குடும்பத்தின் நன்மைக்காகத் தன்னையே ஒப்புக்கொடுக்க, தியாகம் செய்ய ஆயத்தமாய் இருக்கவேண்டும். சகோதரனே, குடும்பத்தலைவனாய் இருப்பது எளிதன்று. அதற்கு விலைகொடுக்க ஆயத்தமாய் இருக்கவேண்டும். திருவசனம் மனைவியைவிட கணவனுக்குக் கூடுதலான பொறுப்பைக் கொடுத்திருக்கிறது. “கிறிஸ்து சபையில் அன்புகூர்ந்ததுபோல”… இது ஒரு மகத்தான ஒப்பனை. அதற்கு நாம் தகுதி உள்ளவர்களாய் இருக்க வேண்டும். கிறிஸ்து சபையாகிய தம் மணவாட்டியை எப்படி சம்பாதித்தார்? விண்தந்தை, “என் மகன் தனியாய் இருப்பது நல்லதல்ல” என்றுகூறி, கல்வாரியில் குத்தப்பட்ட இறைமைந்தர் இயேசுவின் விலாவிலிருந்து அவருக்கு மணவாட்டியை உருவாக்கினார். திருமறை கூறுகிறது: ” கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கு தம்மைத்தாமே அதற்கு ஒப்புக்கொடுத்தார்” எபேசியர் 5:27. ஆம் சகோதரனே, கிறிஸ்துவின் உறவு சபையைப் பரிசுத்தப்படுத்துவதுபோல், உன் உறவினால் உன் மனைவி தூய்மையாக்கப்படவேண்டும். அதாவது உன் அன்பு பரிசுத்தமாக்கும் அன்பாக இருக்கவேண்டும். மேலும்,
“அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்த சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்” எபேசியர் 5:28. ஒரு முறை என் மனைவியின் விரல் காயப்பட்டபோது, “ஏன் என் விரலைக் காயப்படுத்திக் கொண்டாய்?” என்று கேட்டேன். ஆம் சகோதரனே, உன் மனைவியின் விரல் உன் விரல்.
உன் மனைவியின் ஒவ்வோர் உறுப்பும் உன் உறுப்பு. அவள் உன் சொந்த சரீரமாய் இருக்கிறாளே! இவ்விதமாய் நீ உன் மனைவியை நேசிக்கிறாயா? இல்லை எனில், உன் அன்பு குறைவுள்ளது. இதோ, இன்னொரு குடும்பச் சட்டம்.
“கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்” எபேசியர் 5:29. ஆம், குடும்பத்தைப் பராமரிப்பது கணவனின் தலையாய கடமை. மனைவி சம்பாதிக்க, தான் சோம்பேறியாய்த் திரிகிற கணவன்மார் சிலரை அறிவேன். மனைவி வெளியே சென்று வேலை செய்யவே கூடாது என்று நான் கூறவில்லை. ஆனால் குடும்பத்தைப் பராமரிக்கவேண்டிய பொறுப்பை இறைவன் கணவனிடந்தான் கொடுத்திருக்கிறார். குடும்பத்தின் நல்வாழ்வுக்கு கணவன்தான் பொறுப்பாளி.
பங்காளர்கள்
“உங்களுடனே கூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்கள் ஆனபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்” 1 பேதுரு 3:7.
ஆம் தம்பதியரே, நீங்கள் கணவனும் மனைவியுமாய் இரட்சிக்கப்பட்டிருந்தால், நித்திய வாழ்விற்குப் பங்காளிகளாய் இருக்கிறீர்கள். அப்படியானால் இவ்வுலக வாழ்விலும் நீங்கள் பங்காளிகள்தானே! அது மட்டுமின்றி. நீங்கள் இருவரும் சேர்ந்து இறைவனுககுப் பங்காளிகள். ஆனால் நாம் இறைவனுடன் சமபங்காளிகள் இல்லை. அவர் மாபெரியவர். நாம் அவருக்குச் சின்ன பங்காளிகள். ஆயினும் மகத்துவமான இறைவனுக்குப பங்காளிகளாய் இருப்பது ஒவ்வொரு மெய்க்கிறிஸ்தவத் தம்பதிக்கும் கிடைத்த மாபெரும் நற்பேறு. வெளியூரில் வேலை செய்துகொண்டிருந்த வாலிபன் ஒருவன் ஓர் அறையில் தங்கி, தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். கொஞ்சநாள் கழித்து, “என் அறையைச் சுத்தம் செய்வது கடினமாய் இருக்கிறது. எனக்கு ஒரு சுத்திகரிக்கும் இயந்திரம் (vacuum cleaner) வேண்டும்” என்று தன் பெற்றோருக்குக் கடிதம் எழுதினான். பெற்றோர் அதை வாங்க பணம் அனுப்பினார்கள். இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து, “எனக்குத் துணிகளைத் துவைக்கும் இயந்திரம் ஒன்று வேண்டும்” என்று கடிதம் எழுதினான். அதற்கும் பெற்றோர் பணம் அனுப்பினார்கள். அதற்குப் பிறகு மாவரைக்கும் இயந்திரம் வேண்டுமென்று எழுதினான். அப்பொழுது அவன் தாயார் தன் கணவனைப் பார்த்து, “நம் மகனுக்குத் தேவை நவீன இயந்திரங்கள் இல்லை, ஒரு மனைவி” என்றாளாம்! பாருங்கள், இயந்திரங்களுக்கு ஒப்பானவளாம் பெண்! ஆனால் சகோதரனே, இறைவன் கொடுத்த உன் மனைவி ஓர் இயந்திரம் அல்லள். அவளுக்கும் உணர்ச்சிகள் உண்டு. அவள் உன் பணிப்பெண் அல்லள். அவள் உன் மனைவி. இல்லறப்பணிகளில், பிள்ளைவளர்ப்பில், அனைத்திலும் உங்கள் இருவருக்கும் சமபங்கு உண்டு. ஆம் தம்பதியரே, ஒரு கிறிஸ்தவத் தம்பதி இணைபிரியா சமபங்காளர்கள். குடும்பத்தை இறைவனின் கட்டளைகளின்படி கட்டுவதில், ஜெபத்தில், கொடுப்பதில், இறைப்பணியில் சமபங்காளர்கள் என்பதை ஒருக்காலும் மறக்கவேண்டாம்.
தம்பதிகள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை இனிமையாக்குவதற்கு சில நடைமுறை ஆலோசனைகளைக் கொடுக்க விரும்புகிறேன். முதலாவது இருவருக்குமிடையே போதுமான சொல் பரிமாற்றம், கருத்துப் பரிமாற்றம் இருக்கவேண்டும். எப்போதும் ஒருவரே பேசிக்கொண்டிருக்க மற்றவர் பேசாமடந்தையாய் இருந்தால், அது நல்லுறவுக்கு தீங்கு விளைவிக்கும். அது புண்படுத்தும் அமைதி. சிலர் தங்கள் துணையின்மேல் ஏதாவது வருத்தம் இருந்தால், அதை மனம்விட்டுக் கூறாமல், உள்ளேயே பொருமிக்கொண்டிருப்பார்கள். அது முற்றிலும் தவறு. சில கணவன்மார் மனைவி பேசுவதைக் கவனிக்காமல் செய்தித்தாளைப் படிப்பதிலோ அல்லது வேறு எதிலோ கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள். அப்படியே பாராமுகமாய் இருக்கும் மனைவியரும் உண்டு. இது தீமையை விளைவிக்கும். உன் துணை உன்னோடு பேசும்போது, கண்களை உன் துணையின் பக்கமாகத் திருப்பி, கண்ணோடு கண் பொருத்தி, ஆர்வத்துடன் செவி கொடுக்கவேண்டும். அப்போதுதான் ஒருவர் விருப்பங்களில மற்றவர் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளமுடியும்.
மேலும் கணவன் மனைவிக்கிடையே எவ்வித ஒளிவுமறைவும் இருக்கலாகாது. சிலர் தங்கள் துணையோடு பகிர்ந்து கொள்ளாததை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதுண்டு. இதுவும் மிகத் தவறு. திருமணம் ஆனபின்பு, உன் துணைதான் அனைத்து நண்பர்களிலும் உனக்கு மிகவும் நெருங்கிய நண்பராய் இருக்கவேண்டும்.
சிலர் தங்கள் வாழ்க்கைத்துணையை அதிகமாக நேசித்தாலும், அதை வெளியே காட்டமாட்டார்கள். சொல்லினாலும் செயலினாலும் அன்பை வெளிப்படுத்துவதே இனிமையான இல்லற வாழ்க்கைக்கு ஊன்றுகோலாய் இருக்கும். திருமணம் செய்துகொள்வோர் பொதுவாக எதிர்பார்ப்பது என்ன? தன் துணை தன்னைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்பதே. ஆனால் எத்தனை பேர் நான் என் துணையைச் சந்தோஷமாக வைத்திருப்பேன் என்று உறுதி கொண்டிருக்கிறீர்கள்? என் மனைவி தன் திருமணத்திற்குமுன், “ஆண்டவரே, நல்ல பதவியில் உள்ளவரையோ, வசதி படைத்தவரையோ என் வாழ்க்கைத்துணைவராய் நான் கேட்கவில்லை. என்னை அன்புடன் சந்தோஷமாய் வைப்பவரைக் கொடுத்தால் போதும்” என்று ஜெபிப்பார்களாம். திருமணத்திற்குப் பின்பு, “எனக்கு வரப்போகிறவரை நான் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று ஜெபிக்கவில்லையா?” எனக் கேட்டேன்! பவுல் கூறுகிறார்:
“ஒவ்வொருவனும் தன் சுயப்பிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்” 1 கொரிந்தியர் 10:24. பிறரின் நன்மையையே நாடும் இச்சிந்தனை திருமண வாழ்க்கையில் இன்னும் அதிகமாகக் காணப்படவேண்டும். தன் நலத்தைவிட தன் துணையின் நலமே நம் சிந்தனையில் மேலோங்கி நிற்கவேண்டும். இதுதான் கிறிஸ்துவின் சிந்தனை, கிறிஸ்துவின் அன்பு. தம்பதியரே, அடிக்கடி உங்கள் வாயைத் திறந்து, துணையிடம், “நான் உன்னை நேசிக்கிறேன்”, “நான் உம்மை நேசிக்கிறேன்” என்று கூறப் பழகுங்கள். மேனாட்டார், “அன்பே”, “தேனே” என்று எளிதாகக் கூறுவார்கள். ஆனால் வெகு எளிதாக விவாகரத்தும் செய்து விடுவார்கள். இது வெறும் மாய்மாலம். நம் நாட்டவரோ அன்பை வாயினால் அறிக்கை செய்யாமல் மெளனமாய் இருப்பார்கள். மேனாட்டாரின் மாய்மாலமும் வேண்டாம். நம் நாட்டவரின் மெளனமும் வேண்டாம். உண்மையான அன்பை, உண்மையான மனதுடன் சொல்லினால் வெளிப்படுத்துங்கள். அத்துடன் உங்கள் அன்பைச் சொல்லினால் மட்டுமன்றி, செயலினாலும் வெளிப்படுத்துங்கள். அவ்வப்போது ஒருவருக்கொருவர் வெகுமதிகைள்க கொடுக்கப் பழகுங்கள். விலை உயர்ந்த பொருட்களையே கொடுக்கவேண்டும் என்பதன்று. ஒரு சிறிய ரோஜாமலரைக் கொடுத்தாலும், அதன் பின்னணியில் உள்ள மெய்யன்புதான் முக்கியம். தம்பதியரே, நீங்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பை வெளிப்படுத்துங்கள். அப்படிச்செய்வது மேலும் அன்பை வளர்க்கும். திருமணம் இறைவனால் கொடுக்கப்பட்ட தனிச்சிறப்பு வாய்ந்த ஓர் அழகான உறவு. அதைக் கவனமாய்ப் பேணி வளர்க்கவேண்டும். இல்லாவிட்டால், ஏமாற்றமும் வேதனையும் கசப்புந்தான் மிஞ்சும்.
மற்றுமொரு மிக முக்கியமான அறிவுரை –
உன் துணையிடம் பரிபூரணத்தை எதிர்பார்க்காதே. குறையே இல்லாதோர் எவருமில்லை. தவறுகள் நேரிடும்போது, மன்னிக்கவும், மன்னிப்புக் கேட்கவும் தயங்கவேண்டாம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு எவ்வளவாய் மன்னித்திருக்கிறார் என்பதை நினைவுகூருங்கள். அப்பொழுது மன்னிக்கத் தயங்கமாட்டீர்கள். சிலருக்கு மன்னிப்பது எளிதாய் இருக்கும். ஆனால் மன்னிப்புக் கேட்பது கடினமாய் இருக்கும். ஆனால் யாரிடம் மன்னிப்புக் கேட்கிறோம்? நம் சொந்த சரீரத்திடந்தானே! ஒருவருக்கொருவர் பிழை பொறுக்காத தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றி காண்பது அரிதிலும் அரிது. மன்னிப்பதோடு மறக்கவும் ஆயத்தமாக இருக்கவேண்டும். மறந்துவிட்டதை ஏதாவதோர் அன்புச் செயலால் உறுதிப்படுத்துங்கள். சகோதரனே, சகோதரியே, உன் தவறை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. உன் துணையிடம் குற்றம் கண்டுபிடிக்க தீவிரியாதே.
திருமறை வரலாற்றில் பிளவுபட்ட சில தம்பதியரையும், பிணைக்கப்பட்ட சில தம்பதியரையும் காண்கிறோம். ஒரு கிறிஸ்தவத் தம்பதிக்கு மிகச்சிறந்த முன்மாதிரியாய் இருப்பவர்கள் ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும். அவர்கள் இருவரும் கூடாரத்தொழிலில் பங்காளிகளாய் இருந்தார்கள். அந்தத் தொழிலில் இறைப்பணியாளராகிய பவுலைக் கூட்டாளிகயாகச் சேர்த்துக்கொண்டார்கள் (அப்போஸ்தலர் 18:2,3). அத்தொழிலின் வருவாயைக்கொண்டு திருப்பணியைத் தாங்கினார்கள். இவர்களில் காணப்பட்ட மிகவும் பாராட்டுக்குரிய பண்பு, இவர்கள் வேதத்தை நன்கு கற்றறிந்திருந்ததே. தங்கள் வாழ்க்கையையும், ஊழியத்தையும் திருவசனங்களின் அடிப்படையில் உறுதியாக அமைத்திருந்தார்கள். “சாதுரியவானும் வேதங்களில் வல்லவனும் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டவனும் கர்த்தருக்கடுத்தவைகளைத் திட்டமாய் போதகம் பண்ணிக்கொண்டு வந்தவனும்” ஆன அப்பொல்லோவையே திருத்துமளவுக்கு வேதவசனத்தில் ஊன்றியிருந்தார்கள் (அப்போஸ்தலர் 18:24-26). மேலும் பவுலுடன் சேர்ந்து ஊழியம் செய்தார்கள் என்றும், ஒருமுறை பவுலுக்காக தங்கள் உயிரையும் கொடுக்கஆயத்தமாய் இருந்தார்கள் என்றும், சபைகூடிவர தங்கள் இல்லத்தைத் திறந்து கொடுத்திருந்தார்கள் என்றும் அறிகிறோம் (ரோமர் 16:3-6). இப்படிப்பட்ட மாதிரி தம்பதிகளாய் இருக்க ஜெபியுங்கள்.
பயிற்சி
1, கணவனும் மனைவியும் வாரத்தில் ஒரு நாளைத் தங்கள் இருவருக்குமென்று ஒதுக்கி வையுங்கள்.
2. உங்கள் துணைவி-துணைவர் பேசும்போது, முழு கவனத்துடன் கேளுங்கள். அப்போது உங்கள் கண்கள் உங்கள் துணையின்மேல் பதிந்திருக்கட்டும்.
3. உறங்கும் முன்பும், காலையில் எழுந்த பின்பும், அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவுடனும், உங்கள் துணையுடன் பேசத் தவறாதீர்கள்.
4. உங்கள் துணையைப் பிறர் முன்னிலையில் கனப்படுத்துங்கள்.
5. மன்னிப்புக் கேட்க முந்துங்கள்.
6. குற்றம் கண்டுபிடிபபதைத் தவிர்த்து, பாராட்டப் பழகுங்கள்.
7. வாக்குவாதம் உண்டாகும்போது, விட்டுக்கொடுக்கப் பழகுங்கள்.
8. அவ்வப்போது ஒருவருக்கொருவர் வெகுமதிகளைக் கொடுக்கப் பழகுங்கள்.