இனிதாக்கும் இல்லத்தரசி (டாலி சாமுவேல்)

இனிதாக்கும் இல்லத்தரசி

(டாலி சாமுவேல்)

“குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது” நீதிமொழிகள் 31:10.

பெண்ணின் செல்வாக்கு

“ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே” என்பது பழமொழி. இதற்கு மனித வரலாற்றில் பல ஆதாரங்கள் உண்டு. ட்ராய் நாட்டு இளவரசியும் பேரழகியுமான ஹெலனுக்காய் அவள் நாட்டுக்கும் கிரேக்க நாட்டுக்குமிடையே கடும்போர் மூண்டது. அப்பேரழகியின் முகம் ஆயிரம் கப்பல்கள் போரில் இறங்கக் காரணமாயிற்று. இது தீய செல்வாக்கு. எஸ்தரின் பேரழகோ யூத இனத்திற்கு வாழ்வளித்த நல்ல செல்வாக்கு. ஆகாபின் மனைவி யேசபேலின் செல்வாக்கு அழிவின் செல்வாக்கு. தெபொராளின் செல்வாக்கு வெற்றியின் செல்வாக்கு. ஆம், பெண்ணின் செல்வாக்கு மறுக்க முடியாத ஓர் உண்மை. இந்தச் செல்வாக்கு ஆதித் தாயிலிருந்தே தொடர்கிறது.
“அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதன் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்: அவனும் புசித்தான்” ஆதியாகமம் 3:6.
அவள் கொடுத்தாள், அவன் புசித்தான். அது தவறு என்று அவனுக்குத் தெரியாதா? அதைப் புசித்தால் மரணம் என ஆண்டவர் கூறவில்லையா? ஆனாலும் புசித்தான். ஏன்? இதுதான் பெண்ணின் செல்வாக்கு-வசப்படுத்தும், தூண்டும், கவர்ச்சிக்கும் சக்தி- பெண்ணின் விந்தையான சக்தி. இச்சக்தி வரலாற்றை மட்டுமன்றி, ஒரு குடும்பத்தையும் கட்டலாம் அல்லது உடைக்கலாம். இச்செல்வாக்கைச் செயலாற்றும் பெண்கள் முவ்வகையினர்.

முதல்வகைப் பெண் அடங்காப்பிடாரி! இவள் தன் பிடிவாதத்தினால் தான் செய்ய நினைத்ததை எப்படியும் சாதித்து விடுகிறாள். இரண்டாவதுவகைப் பெண் கண்ணீரினால் தான் நினைத்ததைச் சாதிக்கிறவள். கண்ணீர்குண்டு அணுகுண்டை விட வல்லமையானது என்பதை நன்கு அறிந்தவள் இவள். மூன்றாவது வகைப் பெண்ணோ மிகவும் அமைதியாய் தன் செல்வாக்கைப் பயன்படுத்துகிறவள். இவள் சண்டைபோடமாட்டாள். பிடிவாதம் பிடிக்கமாட்டாள். கண்ணீர் விடமாட்டாள். ஆனாள் சாதுரிமாய், சாமர்த்தியமாய்த் தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வாள். சகோதரி, நீ எவ்வகையைச் சேர்ந்தவள்?

ஏவாளின் வீழ்ச்சி

ஏவாள் தன் வீழ்ச்சிக்கு, தன் கணவனின் வீழ்ச்சிக்கு, இல்லை மனித இனத்தின் வீழ்ச்சிக்கே காரணமானாள். ஏன்? முதலாவது ஏவாள் சாவைத்தரும் உரையாடலில் ஈடுபட்டாள்.
“அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாவதே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்க்ள என்றும் தேவன் அறிவார் என்றது” ஆதியாகமம் 3:4-5. 
சகோதரி, உன்னைப்போல் ஒரு பெண், கடவுளின் சாயலில் படைக்கப்பட்டப் பெண், கணவனின் அன்பில் மகிழ்ந்திருக்கும் ஒரு பெண் தனிமையில் பேசத்தகாத ஒருவனுடன் பேசுகிறாள். இதுதான் ஏவாளின் முதல் குற்றம். அவளுடைய இரண்டாவது குற்றம் வீண்பேச்சில் ஈடுபட்டது.
“அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்” நீதிமொழிகள் 17:17.
ஆம் சகோதரி, அறிவற்றப் பேச்சு, அதிகப் பேச்சு, அவசியமற்றப் பேச்சு ஆபத்தானது. தாவர இயல் விஞ்ஞானி பூக்கள் மிகுதியாய் இருக்கும் மரத்தில் கனிகள் குறைவாய் இருக்கும் என்கிறான். அப்படியே அதிகப் பேச்சு அறிவை மழுங்கச் செய்யும்.
“பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனம் உண்டாகும்படி பேசுங்கள்” எபேசியர் 4:29.
காவலாளி கோட்டையைக் காப்பதுபோல் நம் நாவைக் காப்போம். ஒரு தம்பதி; மனைவி வாயாடி. கணவனின் வாழ்க்கையை நரகமாக்கினாள் அவள். கணவன்
அற்ப ஆயுசில் மரித்துப்போனான். அவள் நாவு குறுகியதாய் இருந்திருந்தால், அவன் வாழ்நாள் நீடித்திருந்திருக்கும் என்றனர் பலர். ஏவாளும் வீண்பேச்சுக்கு இடங்கொடாதிருந்தால் மனுக்குலம் பிழைத்திருக்கும். தந்திரமான சொற்கள்! “நீங்கள் தோட்டத்தில் உள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ?” அவள் உண்மையான பதிலைத்தான் சொன்னாள்.
“நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம், ஆனாலும், தோட்டத்தின் நடுவிலுள்ள விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்; நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாமென்று சொன்னார் என்று சொன்னாள்” ஆதியாகமம் 3:2,3.
ஏவாள் இத்துடன் தன் உரையாடலை நிறுத்தியிருந்தால் நலமாய் இருந்திருக்கும். ஆனால் தொடர்ந்து தந்திரக்காரனின் பேச்சுக்கு செவிகொடுத்தாளே, அதுதான் தவறு. ஆதாமும் ஏவாளும் பரிபூரண வாழ்க்கையை, அழிவில்லா வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும் என்பதே இறைவனின் விருப்பம். அதற்கு அவருடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்கவேண்டும். வெளியேறினால் மரணம்-வெறும் உடல் மரணமன்று, அதைவிடக் கொடிய ஆன்மீக மரணம். இதோ, சாத்தானின் வஞ்சக வார்த்தைகள்.
“அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது” ஆதியாகமம் 3:4,5.
தேவர்களைப்போல! நானும் ஆதாமும் தேவர்களைப்போல! அவள் நெஞ்சில் ஒரு கிளர்ச்சி, ஒரு படபடப்பு! ஆம், பெண்களாகிய நாம் எவ்வளவு சுலபமாக உணரச்சிவசப்பட்டு விடுகிறோம்! அந்த உணர்ச்சிவேகத்தில் நாம் செய்யும் தவறுகள்தான் எத்தனை! தேவர்களைப்போல்… தேவர்களைப்போல்… இரத்தத்தில் சூடு
ஏறுகிறது. உரையாடல் நிற்கிறது. தந்திரமான மெளனம்! இனி பேசத்தேவையில்லை. வாழ்வின் பெருமை அவளை ஆட்கொள்கிறது… இல்லை, இல்லை, ஆட்டிப்படைக்கிறது.
“மாமிசத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்தில் உள்ளவைகள் எல்லாம் பிதாவினால் உண்டானவைகள் அல்ல;அவைகள் உலகத்தினால் உண்டானவைகள்” 1 யோவான் 1:16.
கண்களின் இச்சை! மெதுவாய் மரத்தைப் பார்க்கிறாள் ஏவாள். என்ன அழகு! கனி கவர்ச்சிக்கிறது… மயங்கி நிற்கிறாள்! சகோதரியே, உன் கண்கள் எதைக்கண்டு
மயங்குகின்றன? சினிமாக்காட்சிகளா? தொலைக்காட்சி விளம்பரப்படுத்தும் கவர்ச்சிப்பொருட்களா? சகோதரி, கண்களின் இச்சைக்கு இடங்கொடுக்க வேண்டாம். ஏவாளின் வீழ்ச்சி உன்னை எச்சரிக்கட்டும். இதோ! ஏவாளின் கண்கள் மயங்குகின்றன. நரம்புகள் துடிக்கின்றன. மாமிசம் ஏங்குகின்றது! நாவில் நீர் சுரக்கின்றது. அழகிய விரல்கள் நடுக்கத்துடன் கனியை நோக்கி விரைகின்றன. விலக்கப்பட்ட கனியைப் பறிக்கின்றன. அந்தோ! அடுத்த வினாடி மரணத்தின் சாயல் இறைவனின்
சாயலை மேற்கொள்கிறது. இறைமகள் விழுகிறாள். தன்னோடு தன் கணவனையும் இழுத்துக்கொண்டு விழுகிறாள். அவன்மேல் உள்ள அவள் செல்வாக்கு அவனையும் வீழ்த்தியது.
சகோதரி, நீ இப்படிச் செய்தது என்ன? உனக்குச் சொந்தமில்லாத பொருளை நீ இச்சித்ததென்ன? சகோதரியே, நீ இப்படிச் செய்திருந்தால், ஆண்டவரிடம் அதை அறிக்கைச்செய். கண்களின் இச்சையிலிருந்து, மாம்சத்தின் இச்சையிலிருந்து, வாழ்வின் பெருமையிலிருந்து மனந்திரும்பு. கணவனுக்கு உறுதுணையாய் இருக்க வேண்டியவள் பிசாசுக்கு அடிமையாகிவிடாதே. உன் கணவனிடம் உள்ள உன் செல்வாக்கை இறைவனுக்குப் பிரியமான வழிகளில் பயன்படுத்து. உன் குடும்பத்தைக் கெடுக்கவன்று, அதைக் கட்ட பயன்படுத்து.

வாழ்க்கைத் துணை

ஆதியிலே இறைவன் பெண்ணைப் படைத்த நோக்கமென்ன?
“பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனியாய் இருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்” ஆதியாகமம் 2:18.
ஆம் சகோதரி, ஆதாமுக்கு ஏற்ற துணையாய் இருக்கவே இறைவன் ஏவாளைப் படைத்தார். அவளுக்குக் கொடுக்கப்பட்ட முதல் பட்டம் வாழ்க்கைத்துணைவி. அதாவது அவள் அவனுக்குப் பங்காளி, அன்பு மனைவி, இல்லத்தரசி. அப்படியானால், இறைவனால் நியமிக்கப்பட்ட ஒரு மனைவியின் குணவியல்புகள் என்ன? ஆதாம் கூறினான்:
“இவள் என் எலும்பில் எலும்பும், மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்” ஆதியாகமம் 2:23.
மனித உடலில் எலும்பின் பங்கு என்ன? அதுதான் உடலைத் தாங்குகிறது. அவ்விதமே மனைவியே, நீ உன் கணவனையும் குடும்பத்தையும் உன் ஜெபத்தினாலும், நல்ல ஆலோசனையினாலும் தாங்கவேண்டும். இரண்டாவது, எலும்பு உடலின் முக்கியமான உள் உறுப்புகளைப் பாதுகாக்கிறது. அதேபோல் உன் கணவனின் நற்பெயர், நன்மதிப்பு போன்றவ்ற்றை உன் நன்னடத்தையினால் நீ பாதுகாக்கவேண்டும். மாம்சத்தின் பங்கு என்ன? உடலுக்கு உருவத்தைக் கொடுப்பது மாம்சம்.
அப்படியே தன் குடும்பத்திற்கு ஓர் அழகான உருவத்தைக் கொடுக்கவேண்டியவள் மனைவி. சகோதரி, உன் குடும்பத்தின் உருவம் என்ன?

   

முத்துக்களைப் பார்கிலும்…

“குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துகளைப் பார்க்கிலும் உயர்ந்தது” நீதிமொழிகள் 31:10,
முத்துக்களிலும் விலைமிக்கவள்! யார் இவள்? இவள்தான் பண்புமிக்க இல்லத்தரசி, கணவனின் நம்பிக்கைக்குரிய இல்லத்தரசி. பிள்ளைகளின் பாராட்டுக்குரிய இல்லத்தரசி. நல்ல பெண், நல்ல மனைவி, நல்ல தாய். இவள் “சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்” நீதிமொழிகள் 31:20.
நல்ல பெண்… சிறுமையானவர்களுக்கு இரங்கும் பெண்… ஏழைகளுக்கு உதவும் பெண். சகோதரி, நீயும் இப்படிப்பட்ட ஒரு நல்ல பெண்தானா? அல்லது ஏழைகளைக் கண்டால் காணாதவளைப்போல் ஒதுங்கிப் போகிறாயோ? இந்த நல்ல பெண், “இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரம் கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படி அளக்கிறாள்” நீதிமொழிகள் 31:15. ஆம், தன் வீட்டாருக்கு மட்டுமன்று, தன் வேலைக்காரருக்கும் ஆகாரம் கொடுக்கிறாள். ஆனால் இன்று சில பெண்கள் செய்வதென்ன? கெட்டுப்போனதும் உதவாததுமானவைகளைக் கொண்டு வேலைக்காரருக்கு படி அளக்கிறாள். சகோதரி, நீ எப்படி? இதோ, முத்துக்களைப் பார்க்கிலும் விலைமிக்கவள்!
“அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது. அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல, நன்மையையே செய்கிறாள்” நீதிமொழிகள் 31:11,12.
மனைவிகள் பலர், ஆனால் நல்ல மனைவிகள் சிலரே. யார் நல்ல மனைவி? கணவனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவள். அவன் நன்மையையே பிரதானமாகக் கருதபவள் அவள். எல்லாவற்றிலும் அவனுக்குத் தோள்கொடுத்து, தன் குடும்பத்தைத் திறம்பட நடத்துகிறவள். வீண்செலவு செய்யாதவள். ஆகவே அவன் சம்பத்துக் குறைவதில்லை. சகோதரி, நீ இப்படிப்பட்ட மனைவிதானா? மேலும்,
“ஆட்டுமயிரையும் சணலையும் தேடி, தன் கைகளினால் உற்சாகத்தோடே வேலை செய்கிறாள். அவள்… தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டு வருகிறாள்… தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்… இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும்” நீதிமொழிகள் 31:13-18.
மெய்யாகவே இவள் முத்துக்களிலும் விலைமிக்கவள். இவள் திறமைதான் என்னே! இவள் சோம்பேறியாய் உட்கார்ந்திராமல், உற்சாகத்துடன் வேலை செய்கிறவள்.
தன் குடும்ப நலனுக்காக அரும்பாடுபடுகிறவள். நான் அறிந்த ஒரு பெண். திருமணமான நாளிலிருந்து தன் கையினால் சமைப்பதே இல்லை. வாழ்நாளெல்லாம் ஓட்டல் சாப்பாடுதான். ஆனால் தன்னை அலங்கரித்துக்கொள்ள மணிக்கணக்கில் நேரம் எடுத்துக்கொள்வாள். அந்தோ பரிதாபம்! பாவம் அவள் கணவன்! சகோதரியே, நீ அப்படி இருக்கமாட்டாய் என்று நம்புகிறேன்.
திருமதி முத்துக்களிலும் விலைமிக்கவள் தன் வீட்டுப்பணியோடு தன் கைகளின் சம்பாத்தியத்தை ஞானமாய் முதலீடு செய்து மேலும் பொருளீட்டுகிறாள். இரவில் வெகுநேரம் விழித்திருந்து வேலை செய்கிறாள். இந்த இடத்தில் கணவன்மாருக்கு சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். இவள் திறமையாய்ச் செயல்பட அவளுக்கு
கணவனின் முழு ஒத்துழைப்பு கிடைத்தது. அவன் அவளை ஊக்குவிக்கவும் பாராட்டவும் தவறியதில்லை. “அவள் புருஷன் அவளைப் பார்த்து: அநேகம் பெண்கள் குணசாலிகளாய் இருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்” நீதிமொழிகள் 31:29.சகோதரரே, நீங்கள் இப்படி உங்கள் மனைவியரை ஊக்குவிக்கிறீர்களா? பாராட்டுகிறீர்களா? அல்லது அவள் என்ன செய்தாலும் குற்றம் கண்டுபிடிக்கிறீர்களா? உங்கள் இல்லற வாழ்க்கை இனிமையாய் அமைய உங்கள் மனைவியைப் பாராட்டப் பழகுங்கள். ஊக்குவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். மேலும்,
“அவள் புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாய் இருக்கிறான்” நீதிமொழிகள் 31:23.அவள் கணவன் பேர்பெற்றவனாய் இருக்கிறான். ஏன்? அவன் மனைவி குணசாலியான பெண். வெற்றியுள்ள ஒவ்வொரு மனிதனின் பின்னணியிலும் இருப்பது ஒரு பெண் என்பது அறிஞர் கூற்று. சகோதரியே, உன் கணவனின் வெற்றியின் பின்னணியில் நீ இருக்க வேண்டும் என்பதை மறவாதே. திருமதி முத்துக்களிலும் விலைமிக்கவள் ஒரு நல்ல மனைவி மட்டுமல்லள், ஒரு நல்ல தாயுமாய் இருந்தாள்.“அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்” நீதிமொழிகள் 31:28. ஆம், பிள்ளைகளின் பாராட்டைப் பெற்றவள் அவள். ஏன்? “தன் வாயை ஞானம் விளங்க திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின் மேல் இருக்கிறது” நீதிமொழிகள் 31:26. ஆம், அவள் ஒரு நல்ல தாய். சிறு வயதிலிருந்தே தன் பிள்ளைகளுக்கு இறைவனின் திருவசனத்தைப் போதித்த ஞானமுள்ள தாய். எப்படி போதித்தாள்? கட்டாயமாக அன்று, தயவுடன், அன்புடன், விவேகத்துடன் போதித்தாள். ஆகவே கர்த்தரின் வசனம் அவர்கள் பாதைக்குத் தீபமாய் இருந்தது. அவர்கள் ஆத்துமாக்களைக் குறித்து மட்டுமன்று, அவர்கள் சரீரத் தேவைகளைப் பற்றியும் அக்கறை கொண்ட நல்ல தாய் இவள்.
“தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பிருக்கிறதால் தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள்… வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள்” நீதிமொழிகள் 31:21-25.
ஆம், நல்ல ஆகாரம்… நல்ல ஆவிக்குரிய போதனை… அந்தந்தக் காலத்துக்கேற்ற நல்ல உடை… இந்தக் குடும்பித்திற்குத்தான் என்ன குறை? வருங்காலத்தைப் பற்றிய கவலையற்றக் குடும்பம். அந்த நல்ல தாய் மகிழ்ந்திருந்தில் வியப்பென்ன? சகோதரியே, திருமதி முத்துக்களிலும் விலைமிக்கவள் ஒரு நல்ல பெண்ணாக, நல்ல மனைவியாக, நல்ல தாயாக இருந்ததின் இரகசியம் என்ன?
“செளந்தரியம் வஞ்சனையுள்ளது; அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்” நீதிமொழிகள் 31:30.
கர்த்தருக்குப் பயப்படுகிற பெண்… இதுதான் திருமதி முத்துக்களிலும் விலைமிக்கவளின் வாழ்க்கை இரகசியம். கணவனாலும் பிள்ளைகளாலும் புகழப்பட்டதின் இரகசியம். அவள் கர்த்தராலும் புகழப்படுகிறாள். ஆகவேதான் திருமறையில் அழியா இடம் பெற்றுவிட்டாள் இவள். சகோதரியே, நீயும் இப்படிப்பட்ட ஒரு பெண்ணாய் இருக்கத் தீர்மானிப்பாயா?

புனித மஞ்சம்

இறுதியாக சில முக்கியமான அறிவுரைகளுடன் இந்தக் கட்டுரையை முடிக்க விரும்புகிறேன். சில பெண்கள் பாலுறவைக் குறித்து ஐயுறவு கொள்கிறார்கள். அதை அசுத்தமானதாகவும், ஏன் பாவமானதாகவும்கூட கருதும் பெண்கள் உண்டு. ஆனால் திருமணத்திற்கு அது புனிதமானது என்று திருமறை கூறுகிறது.
“விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயும் இருப்பதாக” எபிரெயர் 13:4.
ஆம், விவாகமஞ்சம் புனிதமஞ்சம். சரீரப்பிரகாரமான உறவைக் குறித்துப் பேசும்போது, “கூடி வாழுங்கள்”என்று தெளிவாக, திட்டவட்டமாகப் பவுல் கூறுகிறார்.ஆகவே கணவனுடன் இன்பம் அனுபவிப்பது கடவுளால் நியமிக்கப்பட்டது. இந்த உறவில்தான் “இருவரும் ஒரே மாம்சம்” என்றத் தத்துவம் நிறைவு பெறுகிறது. ஆயினும் பெண்களின் உணர்ச்சிகளுக்கும், ஆண்களின் உணர்ச்சிகளுக்கும் வித்தியாசம் உண்டு. பொதுவாக ஆண்களின் சரீரத்தேவை பெண்களின் தேவையைவிடக்
கூடுதலாக இருக்கும். இதை மனைவியர் உணர்ந்து, கணவருடன் ஞானமாய் ஒத்துழைக்கவேண்டும். இது மனைவியின் கடமை என்று பவுல் கூறுகிறார். மேலும் பவுல் வலியுறுத்துகிறார்:
“மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி” 1 கொரிந்தியர் 7:4.
ஆம், மனைவியின் உடல் கணவனுக்குச் சொந்தம். ஒரு பெண் தன் கணவனை முழுமனதுடன் நேசித்தால், தன்னை முற்றிலுமாய் அவனுக்கு ஒப்புவிப்பதில் மகிழ்ச்சி அடைவாள். இதனால் உண்டாகும் பலன்கள்:
1.கணவனின் சரீரத் தேவையைச் சந்திக்கிறது,
2.அவன் ஆண்மையை நிறைவேற்றுகிறது.
3.மனைவியின்மேல் அவன் அன்பு பெருகுகிறது.
4.குடும்பத்தில் உரசல்களைக் குறைக்க உதவுகிறது,
5.இருவருக்கும் இன்பமான ஓர் உணர்ச்சிமிக்க அனுபவத்தை அளிக்கிறது.
6.கணவன் தன் சிந்தனையைத் தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.