இனியஇல்லம் (டாலி சாமுவேல்)

இனியஇல்லம் (டாலி சாமுவேல்)

“பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து” எபேசியர் 3:14,15.

கிறிஸ்துவின் குடும்பம்

வருமான அதிகாரி ஒருவர் சொத்து மதிப்பிட ஒருப் போதகர் வீட்டுக்குச்சென்று, அவருடைய உடைமைகளைக் குறித்து விசாரித்தார். அதற்கு அவர், “எனக்கு விலைமிக்க, மத்ப்பிட முடியாதச் சொத்துக்கள் இருக்கின்றன” என்றார். உடனே  அதிகாரி காகிதமும் பேனாவுமாகக் குறிப்பெடுக்க ஆயத்தமானார். இதோ, அந்தப் போதகர் கொடுத்தப் பட்டியல்! “எனக்கு ஓர் இரட்சகர் இருக்கிறார். அவர் எனக்காக நித்திய வாழ்வைச் சம்பாதித்திருக்கிறார். நித்திய நகரத்தில் எனக்கோர் இடம் ஆயத்தம்
பண்ணிக்கொண்டிருக்கிறார். எனக்குப் புத்தியும் பக்தியும் நிறைந்த மனைவி இருக்கிறாலள். அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது. அன்பும் கீழ்ப்படிதலுமுள்ள பிள்ளைகள் இருக்கிறார்கள்.” வேறென்ன என வினவினார் அதிகாரி. “இந்த வாழ்க்கை ஓட்டத்தை மகிழ்ச்சியுடன் ஓட களிப்பான இதயமும் எனக்குண்டு” எனக் கூறி முடித்தார் போதகர். அந்த அதிகாரி தம் பேனாவை மூடிவிட்டு எழுந்து நின்றார். “ஐயா, மெய்யாகவே நீர் ஒரு செல்வச்சீமான். ஆனால் உம்முடைய சொத்துக்கு வருமான வரி கிடையாது” என்றுக் கூறி விடை பெற்றார்.
ஆம், இதுவே கிறிஸ்தவக் குடும்பம். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் விலைமதியா சொத்தாகக் கருதும் குடும்பமே கிறிஸ்தவக் குடும்பம். பெற்றோரைப் புகழும் அன்புமிக்கப் பிள்ளைகள் உள்ள குடும்பமே கிறிஸ்தவக் குடும்பம். எல்லாவற்றிற்கும் மேலாக இயேசு ராஜாவைத் தலைவராகக் கொண்டக் குடும்பமே மெய்க் கிறிஸ்தவக் குடும்பம். இத்தகைய குடும்பம் இயேசுவின் இதயத்தைத் தொடுகிறது, மகிழ்விக்கிறது.

திருமணத்தின் அடித்தளம்

ஒரு மெய்க்கிறிஸ்தவக் குடும்பத்தின் அடித்தளம் கிறிஸ்துவே. மெய்க்கிறிஸ்தவத் தம்பதிகள் கிறிஸ்துவினால் இணைக்கப்பட்டவர்கள். கிறிஸ்தவத் திருமணத்தைக் கிறிஸ்துவே முன்னின்று நடத்திவைக்கிறார். அவரே ஒரு விசுவாசிக்கு ஏற்றத்துணையைத் தெரிந்தெடுக்கிறார். அவரே கிறிஸ்தவக் குடும்பத்தைக் கட்டுகிறார். தம்பதியரே, உங்கள் திருமணத்தின் அடிப்படை என்ன? பல்லியா? குருவியா? அல்லது அந்தணன் குறித்த நாளா? நீங்கள் இணைக்கப்பட்டது எப்படி? இறைவன்தான் உங்களை இணைத்தாரா? அல்லது வரதட்சிணையா? பதவியா? ஜாதியா?
கிறிஸ்துவை அடித்தளமாகக்கொண்ட திருமண வாழ்க்கையின் காணப்படுவது  இயேசுவின் பிரசன்னம் – திருமணத்தில் (யோவான் 2:2); இல்லத்தில் (மாற்கு 2:1); வாழ்க்கைப் பயணத்தில் (லூக்கா 24:15). இயேசுவின் பிரசன்னம் ஆசீர்வதிக்கும் பிரசன்னம். இவ்வித நற்பேற்றைப் பெற்றத் தம்பதியருக்கு இயேசுவே வழிகாட்டி. கரடுமுரடான பாதையில் துணை நிற்கும் தோழர் இவர். மகிழ்ச்சியின் சாவி இயேசுவின் கரத்தில் உள்ளதால் எச்சூழ்நிலையிலும் இவர்களுக்கு மகிழ்ச்சி. அவரே ஒவ்வொரு கட்டத்திலும் இவர்களின் ஆலோசனைக் கர்த்தா. இத்தம்பதி அவர் இதயத்திற்கு உகந்தவர்கள். இவர்கள் திட்டங்கள், விருப்பங்கள் எல்லாம் அவர் சித்தத்தின் நடுமையத்தில் இருக்கும். அவரது வாக்குறுதிகள் இவர்கள் பெலன். இத்தம்பதியின் வாழ்க்கையில் வரும் புயலோ, சூறாவளியோ இவர்களைப் பாதிக்காது. ஏனெனில் இயேசுவின் பிரசன்னம் இவர்களை அமைதிப்படுத்தும்.

அன்பின் பிணைப்பு

அன்பு ஒருக்காலும் ஒழியாது” 1 கொரிந்தியர் 13:8.

இணைபிரியா கிறிஸ்தவத் தம்பதியைப் பிணைப்பது ‘ஒருக்காலும் ஒழியாத’  அன்பு. இந்த அனபை வளர்ப்பது மனவியின் அன்புமிக்கக் கீழ்ப்படிதலும், கணவனின் தியாகமிக்க அன்பும். இதுதான் எபேசியர் 5ஆம் அதிகாரத்தில் தம்பதியருக்குக் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரையின் சுருக்கம். இதன்படி கிறிஸ்து திருச்சபைக்குத் தலைவராய் இருப்பதுபோல், கணவன் மனைவிக்குத் தலைவனாய் இருக்கிறான். இவர்கள் இருவருக்கும் தலைவர் கிறிஸ்து. இருவரின் தன்மைகளும் அடையாளங்களும் கிறிஸ்துவில் மறைந்துவிடுகின்றன. ஆகவே கணவனுக்குக் கீழ்ப்படிவது மனைவிக்கும், மனைவிக்காகத் தியாகம் செய்வது கணவனுக்கும் வருத்தமாய் இராது. ஏனெனில் அவர்கள் கிறிஸ்துவின் அன்பில் மூழ்கியவர்கள். கிறிஸ்துவின் அன்பு எத்தகையது?

தன்னலமற்ற அன்பு:

இத்தகைய அன்பைக் காண்பிப்பது முதலாவது கணனனின் பொறுப்பு என்றாலும், மனைவியும் கணவனைத் தியாக சிந்தையுடன் நேசிக்கவேண்டும். கணவனை ஆழமாய் நேசிக்கிறவள் தன் கணவன் வீட்டாரையும் நேசிப்பாள். அவ்விதமே தன் மனைவியை நேசிப்பவன் அவள் வீட்டாரை நேசிப்பான்.

புனிதப்படுத்தும் அன்பு:

“அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” எபேசியர் 5:25-27. கிறிஸ்துவின் அன்பு திருவசனத்தைக்கொண்டு சபையைப் புனிதப்படுத்துவதுபோல், கணவனும் மனைவியும் திருவசனத்தைக்கொண்டு   ஒருவரையொருவர் புனிதப்படுத்தவேண்டும்.

சேவைசெய்யும் அன்பு:

“மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய  ஜீவனைக்கொடுக்கவும் வந்தார்” மத்தேயு 20:28. கணவனும் மனவியும் ஒருவருக்கொருவர் உதவிச்செய்வதில், கரிசனை காட்டுவதில் முந்திக்கொள்ளவேண்டும். சில கணவன்மார்கள் மனைவிக்குச் சில பணிகளைச் செய்வது கேவலமென நினைக்கிறார்கள். நாங்கள் நடத்திய ஓர் இல்லற முகாமில் கலந்துக்கொண்ட ஒரு கணவனின் புகார் என்ன தெரியுமா? மனைவி வேறு வேலையில் இருக்கும்போது, பிள்ளையைக் குளிப்பாட்டும்படித் தன்னிடம் சொல்வதாகக் குறைப்பட்டுக்கொண்டார். தம் சொந்தப் பிள்ளையைக் குளிப்பாட்டுவது அவரூக்கு இழிவாகத் தோன்றுவதேன்? கணவன்மாரே! சேவைச் செய்யும் அன்பு உங்கள் மனைவியை மகிழ்விக்கும்.

பிரிக்கமுடியாத அன்பு:

“கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?” ரோமர் 8:36.  திருச்சபை கிறிஸ்துவின் உடல். உடலைக் கால்வேறு கைவேறு என்றுப் பிரிப்பது எப்படி? அவ்விதமே ஓருடலாய் இருக்கும் கணவன்-மனைவியைப் பிரிப்பது எப்படி? எங்களுக்குத் திருமணமாகி 28 ஆண்டுகளானபோது, ஒரு மேனாட்டுத் தம்பதியர் என்னையும், என் கணவரையும் பார்த்து, “28 ஆண்டுகள் கூடி வாழ்ந்திருக்கிறீர்களா?” என்று வியப்புடன் கேட்டனர்! (இப்போது 56 ஆண்டுகளை முடித்திருக்கிறோம்!). மேனாடுகளில் பரவலாய்க் காணப்படும் மணமுறிவு கலாச்சாரம் நம் நாட்டிலும் பரவி வருகிறது. கணவனும் மனைவியும் இருவர் ஒருவராக மட்டுமன்றி, கிறிஸ்துவுடன் சேர்ந்து மூவர் ஒருவராக இணைக்கப்பட்டிருந்தால், ஒன்றும் அவர்களைப் பிரிக்க இயலாது. திருமணமானவுடன் தொடங்கிய அன்பு ஆண்டுகள் செல்லச்செல்ல வளரவேண்டும், குறையக் கூடாது. கிறிஸ்துவில் பிணைக்கப்பட்டோரின் அன்பு வளரும் அன்பு; என்றும் எவராலும் பிரிக்கமுடியாத அன்பு.

கணவன்மாரே, உங்கள் மனைவியை மகிழ்விக்க இதோ ஓர் அறிவுரை! நீங்கள் ‘மகிழ்ச்சிக் கேக்’ ஒன்று செய்யவேண்டும். அதன் செய்முறைப் பின்வருமாறு:

தேவையான பொருட்கள்: அன்பு-4 கப்; புரிந்துக்கொள்ளல்-3 கப்; கரிசனை-4 மேசைக்கரண்டி; உதவுதல்- 3 தேக்கரண்டி. இவைகளை ஒன்றாகச் சலிக்கவும். அத்துடன் சரியான அளவில் வேலையையும், விளையாட்டையும் சேர்க்கவும். பாதுகாப்பு, ஒருங்கிணைந்து திட்டமிடுதல் ஆகிய சுவையூட்டும் பொருட்களைச் சேர்க்கவும். நகைச்சுவை என்ற வெண்ணெய்த் தடவிய பாத்திரத்தில் இந்த கலவையைப்போட்டுச் சுடவும். ‘மகிழ்ச்சிக் கேக்’ தயாரானவுடன், அதை மெய்த் தெய்வீகத்தன்மையினால் அலங்கரிக்கவும். இதைத் தோழமை என்னும் தட்டில் வைத்து, புன்முறுவலுடன் உங்கள் மனைவிக்குக் கொடுங்கள். அப்போது அவள் வதனத்தில் காணப்படும் அழகுறச் செய்யும் மகிழ்ச்சிக்கு ஈடேது?

பிரிவினை உண்டாக்கும் பிரச்சனை

பிரிவினை உண்டாக்கும் பிரச்சனை பலவாயினும் அதிமுக்கியமானது பணப் பிரச்சனையே. அதிலும் கடன்பட்டுவிட்டால், குடும்பத்தின் அமைதிக்குக்கேடுண்டாகிறது. கட்ன்பட்டதின் அடிப்படைக் காரணத்தைக் கணவனும் மனைவியும் ஒன்றுசேர்ந்து ஆராயவேண்டும். குடியினால் கடனா? ஊதாரித்தனத்தினால் கடனா? இதன் முளயைத்தோண்டி எடுக்கவேண்டும். குடி குடும்பத்தைக் கெடுக்குமென்று யாவரும் அறிவோம், இதிலிருந்து விடுதலைபெறும் ஒரே வழி இரட்சிக்கப்பட்டு, முற்றிலுமாய் ஆண்டவர் கையில் ஒப்புவிப்பதே. அப்போது குடி கசப்பாய் மாறும். விரலுக்குத்தக்க வீக்கமென்பது பழமொழி. இன்று தொலைக்காட்சி வணிகத்தின்மூலம் பல சோதனைகள் வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டன. இது இல்லத்தரசிகளுக்குப் பெரும் சோதனை! ஒரு பொருளை வாங்குமுன் இரு காரியங்களைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இது உனக்குத் தேவைதனா? அல்லது உன் விருப்பமா? இப்படி வேறுபடுத்தக் கற்றுக்கொண்டால் வீண்செலவைத் தவிர்க்கமுடியும். எப்போதும் ரொக்கத்துக்குப் பொருட்கள் வாங்கு; கணக்கில் வாங்காதே. கணவனும் மனைவியும் ஒன்றுசேர்ந்து வரவுசெலவு திட்டத்தை வகுத்தால், கடனைத் தவிர்க்கலாம். இப்படித் திட்டமிடும்போது, முதலாவது கர்த்தருக்குக் கொடுக்கவேண்டிய பத்திலொரு பங்கை ஒதுக்கிவை. பிறகு பத்திலொரு பங்கைச் சேமிப்பாக ஒதுக்கிவை. மீதியைக்கொண்டு வீட்டுச் செலவுகளைக் கணக்கிட்டுச் செலவிடு. கடன்பட்டு அவதியுறுவதைப் பார்க்கிலும் குறைவில் அவதிப்படுவது நல்லது. கடன் இறைவிருப்பத்துக்கு மாறானது என்பதை உணரவேண்டும். கடனைவிட்டு வெளிவர உறுதியுடன் செயல்படு. இனி கடன்படமாட்டேன் என்று உறுதிகொள். அப்போது குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும்.

தாய்மை

ஒரு தாயாவது சிறப்பானதோர் அனுபவம். ஒரு கிறிஸ்தவத் தாயாவதோ மகத்தானதோர் அனுபவம். விசுவாசியான ஒரு பெண் தான் கருத்தரித்த அன்றே தன் கருவில் வளரும் குழைந்தைக்காக ஜெபிக்கத் தொடங்குகிறாள். என் மகள் தன் முதல் குழந்தை பிறந்த சில நாட்களிலேயே அவன் அருகில் அமர்ந்து,  உரத்தக் குரலில் பைபிள் வாசித்து ஜெபிப்பாள். நான் அவனுக்கு என்ன புரியப்போகிறது என்றுலக் கேட்டேன். அத்றகவள் அறியாத வயதிலிருந்தே கர்த்தருடைய வார்த்தைகள் அவன் செவிகளில் ஒலிக்க வேண்டுமென்பது என் ஆவல் என்றால். திருமறையில் காயீன், ஆபேலைக் குறித்து வாசிக்கிறோம். பல ஆண்டுகளுக்குமுன் ஹூஸ்டன் என்ற அமெரிக்கப் பட்டணத்தின் காவல் துறையினர் ‘காயீனை உருவாக்குவது எப்படி?’, ‘ஆபேலை உருவாக்குவது எப்படி?’ என்ற தலைப்புகளில் பின்வரும் துண்டுப் பிரதிகளை வெளியிட்டனர்.

காயீனை உருவாக்குவது எப்படி?

1.  பிள்ளை கேட்பதை எல்லாம் கொடு.

2.  கெட்ட வார்த்தைகைப் பேசும்போதுச் சிரித்து மகிழ்.

3.  ஆவிக்குரிய பயிற்சி அளிக்காதே. 21 வயதில் அவனே தெரிந்துகொள்ளட்டும்.

4.  தவறு செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டாதே.

5.  அவனுடைய வேலைகளையெல்லாம் நீயே செய்.

6.  அவன் எதையும் வாசிக்கவிடு. (கணிப்பொறியில் எதையும் பார்க்கட்டும்!)

7.  பிள்ளைகளுக்குமுன் கணவனுடன் சணடைபோடு.

8.  பணம் கேட்கும்போதெல்லாம் கொடு.

9.  அவனுக்கு எதையும் மறுக்காதே.

10.மற்றவர் குறை கூறும்போது மகனுக்கு இசைந்து பேசு.

11.அவன் சச்சரவில் மாட்டிக்கொள்ளும்போது, அவன்மேல் எனக்கு எந்த அதிகாரமுமில்லை எனக் கையை விரித்துவிடு.

12.கண்ணீரின் வாழ்க்கைக்கு உன்னை ஆயத்தப்படுத்திக்கொள்.

ஆபேலை உருவாக்குவது எப்படி?

1.  கிறிஸ்தவ வாழ்க்கையைக் கற்றுக்கொடு-நீதிமொழிகள் 22:6.

2.  தேவையானபோது தண்டனை கொடு-நீதிமொழிகள் 22:15.

3.  முன்மாதிரியாக வாழ்ந்துக்காட்டு-2 தீமோத்தேயு 1:5.

4.  நாள்தோறும் பைபிள் வாசிக்கக் கற்றுக்கொடு-சங்கீதம் 119:9.

5.  ஜெபிக்கக் கற்றுக்கொடு-மத்தேயு 18:20.

6.  தன் கைகளால் வேலை செய்யக் கற்றுக்கொடு-புலம்பல் 3:27.

7. ஆவிக்குரியவைகளுக்கு முதலிடம் கொடுக்கச் சொல்-1 தீமோத்தேயு 4:8.

8.  பெரியோர்களை மதிக்கக் கற்றுக்கொடு- 1 பேதுரு 5:5.

9.  தாய்மையின் மேன்மையை உணர்த்து-1 தீமோத்தேயு 5:25.

10.சபை வழிபாட்டுக்கும், ஆவிக்குரிய கூட்டங்களுக்கும் ஒழுங்காகச் செல்வதில் முன்மாதிரியாக இரு-எபிரெயர் 10:25.

11.நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய கற்றுக்கொடு-ரோமர் 13:1.

12.நன்னடத்தை நற்பயனைத் தரும் என்பதை விளக்கிச் சொல்-ரோமர் 12:17.

தாயே, நீ வளர்க்கும் பிள்ளை காயீனா? அல்லது ஆபேலா? ஓர் உயர்தரமான மகன் அல்லது மகள் தற்செயலாக உருவாவதில்லை. அப்படிபட்டப் பிள்ளையின் பின்னால் மறைந்திருப்பது ஒரு தாயின் கரிசனை, அக்கறை, முயற்சி, ஜெபம்.

ஒரு தாயின் மன்றாட்டு

ஒரு தாய் தன் பிள்ளையைக் குளிப்பாட்டும்போதெல்லாம் பின்வருமாறு ஜெபிப்பாளம்:
இச்சிறு கால்களைக் கழுவுகிறேன்; இக்கால்கள் நிலைபெறு வாழ்வுக்குக் கொண்டுச் செல்லும் இடுக்கமான பாதையில் நடக்கட்டும்.
இச்சிறு கைகளைக் கழுவுகிறேன்; இக்கைகள் உமக்குச் சேவை செய்யட்டும்.
இச்சிறு முழங்கால்களைக் கழுவுகிறேன்; இவை உமக்குமுன் முடங்கி, ஜெபத்தினால் பல வெற்றிகளைக் காணட்டும்.
என் பிள்ளயின் அழுக்குத் துணிளைக் கழுவுகிறேன்; நீர் என் பிள்ளையை இரட்சிப்பின் வஸ்திரத்தினாலும், நீதியின் சால்வையினாலும் உடுத்துவீராக.

தாயே! சோப்பும் தண்ணீரும் நம் பிள்ளைகளின் உடலை மட்டும் சுத்திகரிக்கும். இயேசுவின் இரத்தமோ அவர்கள் இதயத்தையும் ஆத்துமாவையும் சுத்திகரிக்கும். ஆகவே உன் பிள்ளையை இர்ட்சிப்பின் வழியில் நடத்தத் தவறாதே.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.