இயங்கும் இல்லத்தரசன் (சி. சாமுவேல்)

இயங்கும் இல்லத்தரசன்

(சி. சாமுவேல்)
“இரண்டுபேர் ஒரு மனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ?” ஆமோஸ் 3:3.

இறைவனுடன் நடை

நான் வட இந்தியாவில் பொறியாளராகப் பணியாற்றிய நாட்களில் என்னோடு பணியாற்றிய விசுவாசியான நண்பர் ஒருவர் இருந்தார். அவர் சென்ற சபையில் திருமணம் செய்வது பரிசுத்தக் குலைச்சல் என்பதுபோல் போதிக்கப்பட்டதால், அவர் முப்பது வயது கடந்தும் திருமணம் செய்யாமலே இருந்தார். இந்த போதனை தவறு என்று வசன ஆதாரத்துடன் நான் எவ்வளவோ எடுத்துரைத்தும் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஒரு நாள் இவர் வெளியூர் சென்றிருந்தபோது, அங்கே இவர் சபைப் போதகர்களில் ஒருவர் ஒரு பெண்ணோடு ரயிலில் ஏறுவதைக் கண்டார். விசாரித்துபோது, அவள் அப்போதகரின் புது மனைவி என்று தெரியவந்தது. அதற்குப்பின்தான் அவர் கண்கள் திறக்கப்பட்டு, அவரும் திருமணம் செய்து கொண்டார். 1980 ஆம் ஆண்டு நானும் என் மனைவியும் ஒரு மாதம் இலங்கையில் ஊழியம் செய்தோம். திரிகோணமலையில் ஒரு நாள் குடும்ப உறவைக் குறித்துப் பேசினேன். கூட்டம் முடிந்தவுடன் ஒரு பெண் என் மனைவியிடம் வந்து, “கணவனும் மனைவியும் கூடிவாழ்ந்தால், ஆண்டவர் வருகையில் எடுத்துக்கொள்ளப்படமாட்டீர்கள் என்று எங்கள் சபையில் போதிக்கிறார்கள். ஆகவே நானும் என் கணவரும் ஒரே வீட்டில் அந்நியரைப் போல் வாழ்கிறோம். சபைக்குக்கூட ஒன்றாய்ச் செல்ல அனுமதி கிடையாது” என்றாள். அப்பொழுது என் மனைவி திருமறை ஆதாரங்களுடன் சத்தியத்தை விளக்கினபோது, அவள் தெளிவடைந்தாள். பவுலின் எச்சரிக்கையைக் கவனியுங்கள்: “ஆவியானவர் வெளிப்படையாய்ச சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள். விவாகம்பண்ணாதிருக்கவும்… அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்” 1 தீமோத்தேயு 4:1-3.திருமறையில் மரணத்தைக்
காணாமல் எடுத்துக்கொள்ளப்பட்ட ஏனோக்கைக்குறித்துப் பின்வருமாறு வாசிக்கிறோம்: “ஏனோக்கு… தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்” ஆதியாகமம் 5:22.இறைவனோடு நடந்த ஏனோக்கு, தம் மனைவியோடு கூடிவாழ்ந்து, பிள்ளைகளைப் பெற்றார். ஆகவே இறைவாழ்க்கைக்கும் இல்வாழ்க்கைக்கும் எந்த முரண்பாடும் இல்லை. கூறப்போனால், ஏனோக்கு இறைவனுடன் நெருக்கமான, ஆழ்ந்த உறவு கொண்டிருந்ததால், தம் இல்லற வாழ்க்கையில் இறைவனின் விதிகளை முற்றிலும் கடைபிடித்து, வெற்றியுள்ள ஒரு குடும்ப வாழ்க்கையை நடத்தியிருப்பார் என்பதில் ஐயமில்லை. ஒரு குடும்பத் தலைவனின் தலையாய பொறுப்பு, தான் இறைவனுடன் நடைபோட்டு, தன் துணைவியையும் அவ்வழியில் நடத்திச்செல்வதே. அப்படிச் செய்பவனே இயங்கும் இல்லத்தரசன்.

ஒருமனம் ஒருநடை

தலைவனின் இரண்டாவது பொறுப்பு மனைவியுடன் மனம் இசைந்து, ஒரு நடை போடுவது. கணவனே, உன் மனைவி உன் எலும்பில் எலும்பும், உன் சொந்தசரீரமுமாய் இருக்கிறாள் என்பதை இடைவிடாமல் மனதிற்கொள். “இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தா-லொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ?” நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் எனக்கு இரு நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு நாள் மாலையும் இரவு வெகுநேரம் வரை ஊர் சுற்றுவோம். எங்களுக்குள் ஒருமனம் ஒருநடை இருந்தது. ஆனால் அது புனித நடையாய் இருக்கவில்லை. வாலிபமுறுக்கில் தவறுகள் பல இழைத்தோம். ஆண்டுகள் கடந்தன.
காண்ட்லா துறைமுகக் கட்டுமானத் திட்டத்தில் பொறியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அங்கே ஒவ்வொரு நாள் மாலையும், விடுமுறை நாட்களிலும் விளையாட்டுக்குழுக்களில் சேர்ந்து, இரவு வெகுநேரம் வரை விளையாடுவேன். ஆனால் எனக்குத் திருமணமாகி என் புது மனைவியை அங்கே அழைத்துச் சென்ற முதல் நாளிலிருந்து என் விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். மாலை வேலைகளில் நாங்கள் இருவரும் சேர்ந்து வெகுதூரம் நடப்போம். தொடக்கத்திலிருந்தே எங்கள் இருவருக்கும் ஒருமனம் ஒருநடைதான். ஆனாலும் நூற்றுக்கு நூறு ஒரு மனம் இருப்பதரிது. தேவையானபோது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கவேண்டும். ஆங்கிலத்தில் ஒரு பாடல் உண்டு. அதன் பொருள், “உன்னிடத்தில் காணப்படும் பல குறைகள் உன்னை இன்னும் அதிகமாக நேசிக்க என்னைத் தூண்டுகிறது” என்பது. குறையே இல்லாதவர் எவருமிலர் என்பதை மனதில் கொண்டிருந்தால், மனைவியின் தவறுகளைப் பொறுத்துக்கொள்வது கடினமாய் இருக்காது. அதே சமயத்தில் கணவன் தன் தவறுகளைத் திருத்திக்கொள்ள உண்மையாக முயற்சி செய்யவேண்டும். மேலும் மனைவியின் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். இன்னோர் அழகான ஆங்கிலப் பாடலின் பொருள் பின்வருமாறு:
என் இறைவனும் நானும் வயல்களில் ஒருமித்து நடக்கிறோம்;
நல் நண்பரைப்போல நடக்கிறோம், பேசுகிறோம்;
கைக்கோர்த்து நடக்கிறோம், ஒருமித்துச் சிரிக்கிறோம்;
என் இறைவனும் நானும் பசும்புல்வெளிகளில் ஒருமித்து நடக்கிறோம்.
இதைச் சற்று மாற்றி “எங்கள் இறைவனும் நாங்களும்” என்று ஒரு தம்பதி பாடக்கூடுமானால், அவர்கள் நற்பேறு பெற்றவர்கள். இறைவனுக்கும் நமக்கும் உள்ள நல்லுறவே குடும்ப உறவின் அடித்தளம். ஆரம்பத்தில் ஆதாமும் ஏவாளும் இறைவனுடன் இவ்வித நல்லுறவைக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் பாவம் செய்தபோது, அந்த உறவு முறிந்தது. இறைவனுடன் உறவு முறிந்தபோது, அவர்கள் இருவர் உறவிலும் கீறல் உண்டானது. ஆதாம் தன் பாவத்திற்கு அவள்தான் காரணம் என்று கூறி தான் தப்பித்துக் கொள்ளப் பார்த்தான். இன்றும் தாம்பத்திய பிளவு உண்டாவதற்கு முக்கிய காரணம் பாவமே.

கற்புள்ள நடை

தலைவனின் மூன்றாவது பொறுப்பு தூய நடை, சரீரத்தூய்மை. 1 பேதுரு 3:1-6இல் உள்ள அறிவுரை பெண்களுக்கு மட்டுமே என்று நினைக்கிறோம். ஆனால் 7ஆம் வசனத்தில் உள்ள “அந்தப்படி புருஷர்களே” என்ற சொற்களைக் கவனியுங்கள். அதாவது, பெண்களுக்கு சொல்லப்பட்ட சில ஆண்களுக்கும் பொருந்தும். முக்கியமாக “கற்புள்ள நடக்கை” ஆண்களுக்கும் தேவை. எங்கள் வாலிப நாட்களில் எங்கள் தாயார் எங்களிடம் அடிக்கடி வலியுறுத்தியதொன்று, கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமன்று, ஆண்களுக்கும் வேண்டும் என்பதே. இந்த அறிவுரை என் உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துவிட்டதால், அதை உறுதியாய்ப் பின்பற்றினேன். அதற்காக என் ஆண்டவருக்குப் பிறகு என் தாயாருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் 4 ஆம் வசனத்திலுள்ள “அமைதலுள்ள ஆவியும்”ஆண்களுக்குத் தேவை. 7 ஆம் வசனத்தையும் கவனியுங்கள்.
“அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாய் இருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்தியஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்கள் ஆனபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்” 1 பேதுரு 3:7.
ஒரு கிறிஸ்தவத் தம்பதியின் கூட்டு ஜெபவாழ்க்கைக்கு தடை வராமலிருக்க கணவனே முதல் பொறுப்பாளி. அவன் தன் மனைவியின் பெலவீனத்தை உணர்ந்து,
விவேகமாய் நடந்துகொள்ள வேண்டும். “மாமியார் மெச்சின மருமகள் இல்லை, மருமகள் மெச்சின மாமியார் இல்லை” என்பது பழமொழி. ஆனால் ஒருவன் தன் தாய்க்கும் தாரத்துக்கும் நடுவே விவேகமாய் நடந்துகொண்டால், ஒற்றுமை நிலவும். இதை நான் அனுபவரீதயாய்க் கூறமுடியும். சில கணவன்மார் வீட்டிலேயும் வெளியிலேயும் தங்கள் துணைக்குக் கொடுக்கவேண்டிய கனத்தைக் கொடுப்பதில்லை. சகோதரனே, உன் மனைவியைப் பிறர்முன் இழிவாய்ப் பேசாதே, பாராட்டக் கற்றுக்கொள். அவள் யார்? நீங்கள் இருவரும் விசுவாசிகளாய் இருந்தால், “உன்னுடனேகூட அவளும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறவள்.” ஆகவே நீங்கள் இருவரும் இறைவன் பார்வையில் சமமானவர்கள். இன்று பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பல பெண்கள் வெளியில் வேலை பார்க்கச் செல்கிறார்கள். இவர்களில் 70சதவீதம் பேர் வீட்டில் 90சதவீதம் பணிகளைத் தாங்களே செய்யவேண்டும். இந்தியப் பெண் அரியதோர் இனம். எந்த உதவியுமின்றி வீட்டுப்பணிக்கும் அலுவலகப்பணிக்குமிடையே கடினமான சூழ்நிலைகளைச் சமாளித்து, எல்லாரையும் திருப்திப்படுத்தி, குடும்பத்திற்கு எப்போதும் முதலிடம் கொடுத்து, நேரம் அரிதாயினும், ஓடியாடி உழைக்கும் மனைவியின் பாரத்தை, மன அழுத்தத்தைக் கணவன் புரிந்துகொள்வதே இல்லை. புரிந்தும் புரியாதவர்போல் பாசாங்கு செய்வோரும் உண்டு. ஐன்ஸ்டீன் உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியாய் இருந்தாலும், இல்லற வாழ்க்கையில் வெறும் சூன்யமாகவே இருந்தார். அவர் தம் மனைவிக்குப் பின்வரும் கட்டளைகளை எழுதிக் கொடுத்தாராம்!
A.1. என் உடைகளை ஒழுங்குபடுத்தி வைக்கவேண்டும்,
2. என் அறையில் எனக்கு மூன்று வேளை உணவு கொண்டுவரவேண்டும்,
3. என் படுக்கை, புத்தகங்கள் ஒழுங்காக இருக்கவேண்டும் என் மேஜையை என்னைத்தவிர வேறுயாரும் தொடக்கூடாது.
B. என்னுடன் உனக்குள்ள எல்லா தனி உறவுகளையும் துறந்துவிடவேண்டும் (சமுதாயத்திற்காக வெளித்தோற்றங்கள் தவிர). குறிப்பாக, (1) வீட்டில் உன்னோடு
உட்கார்ந்திருக்கும்படியோ அல்லது (2) உன்னுடன் எங்காவது செல்லவேண்டுமென்றோ கேட்கக்கூடாது.
C. கீழ்க்கண்டவாறு எனக்கு வாக்களிக்க வேண்டும்:
1. என்னிடத்தில் அன்பை எதிர்பார்க்கக்கூடாது. அதற்காக என்னை நிந்திக்கக்கூடாது.
2. நான் உன்னுடன் பேசிய உடனேயே பதில் கொடுக்கவேண்டும்.
3. நான் சொன்னமாத்திரத்தில் மறுபேச்சின்றி என் அறையைவிட்டு வெளியேறிவிட வேண்டும்.
4. சொல்லினாலோ செயலினாலோ என் பிள்ளைக்ள கண்களில் என்னைத் தரக்குறைவாகக் காட்டி விடக்கூடாது. 
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐன்ஸ்டீன் மனைவி விடுமுறையில் தன் பிள்ளைகளுடன் தன் நாட்டுக்குச்சென்றவள் திரும்பி வரவேயில்லை. எப்படி வருவாள்?

ஓர் உயிர் ஓர் உடல்

தலைவனின் நான்காவது பொறுப்பு பாலுறவைக் குறித்தத் தெளிவுடன் மனைவியின் சரீரத்தைக் கனப்படுத்துதல். “அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாய் இருப்பார்கள்” என்ற தத்துவம் பாலுறவில்தான் நிறைவு பெறுகிறது. பவுல் கூறுகிறார்: “வேசியோடு இசைந்திருக்கிறவன் அவளுடனே ஒரேசரீரமாய் இருக்கிறான் என்று அறியீர்களா? இருவரும் ஒரே மாம்சமாய் இருப்பார்கள் என்று சொல்லி இருக்கிறதே” 1 கொரிந்தியர் 6:16.
ஆம், பாலுறவில் இருவர் ஓர் உடலாகி விடுகிறார்கள். வேசியோடு ஒருவன் ஓர் உடல் ஆகலாம்; ஆனால் ஓர் உயிர் ஆக முடியுமா? தூய்மையான இன்பத்தில் கணவனும் மனைவியும் இணைந்து பங்குபெறுவதில்தான் அவர்கள் ஓர் உடலும் ஓர் உயிருமாகிறார்கள்.
ஒரு கணவன் தன் சொந்த மனைவியைப் பலாத்காரம் செய்யமுடியுமா? சில கணவர்கள் தங்கள் மனைவியின் உணர்ச்சிகளையோ, உடல்நிலைகளையோ கருத்தில் கொள்ளாமல், தன்னலமாக தங்கள் இச்சையை நிறைவேற்றிக் கொள்வார்கள். இது பலாத்காரமே. பாலியல் உணர்ச்சிகள் இருவருக்கும் எப்போதும் ஒரேவிதமாக இருக்காது. இந்த வேற்றுமையை எப்படி சமாளிப்பது? அதற்குத் தேவை பரஸ்பர அன்பு, கனிவு, கனம், தன்னலமின்மை மற்றும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் தன்மை.
பாலுறவை அசுத்தமானதாகவும் பாவமானதாகவும் கருதும் விசுவாசிகளும் ஊழியர்களும் உண்டு. ஆனால் திருமறை என்ன கூறுகிறது?
“விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாதாயும் இருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்” எபிரேயர் 13:4.
ஆம், திருமணமான தம்பதிக்குள்ளே பாலுறவு பரிசுத்தமானது, புனிதமானது. ஆனால் திருமணத்திற்கு வெளியே அது அசுத்தமானதும், பாவமானதும், இழிவானதும், தேவகோபத்திற்கு பாத்திரமானதும் ஆகும். தம்பதியருக்கிடையே பரஸ்பர உண்மையும், கற்பும் நிலவினால், அது மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும்
அளிக்கும்.
பாலுறவின் நோக்கம் குடும்பவிருத்திக்காக மட்டுமே என்று போதிக்கிறவர்கள் உண்டு. இன்பத்திற்கு பாலுறவு கொள்ளலாமா? குடும்பக்கட்டுபாடு செய்யலாமா?கூடாது என பதில் அளிப்போர் காட்டும் ஆதார வசனங்களைச் சற்று ஆராய்வோம்.
“பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி… ஆண்டுகொள்ளுங்கள் என்றுசொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்” ஆதியாகமம் 1:28.
இறைவன் கொடுத்த இக்கட்டளையின் இரு பகுதிகளைக் கவனியுங்கள். முதலாவது “பலுகிப்பெருகி,பூமியை நிரப்புங்கள்”. இரண்டாவது “கீழ்ப்படுத்தி… ஆண்டு கொள்ளுங்கள்”. ஆண்டுகொள்ள வேண்டுமென்றால் மனிதன் பூமியை நிரப்பவேண்டும். பூமியை நிரப்ப அவன் பலுகிப்பெருகவேண்டும். ஆனால் இன்று மனிதன் பூமியை அளவுக்குமிஞ்சி நிரப்பிவிட்டான். ஆகவே இரண்டாவது கட்டளையை முற்றிலும் நிறைவேற்ற அவன் இனப்பெருக்கத்ைத்க கட்டுப்படுத்தவேண்டியுள்ளது.
முதல் பகுதிளை நிறைவேற்றிவிட்டோம். அடுத்த பகுதியை நிறைவேற்ற கட்டுபாடு தேவை. சிலர் ஆதியாகமம் 38:9,10ஐச் சுட்டிகாட்டி, குடும்பக் கட்டுபாடு பாவம் என்பார்கள். ஆனால் அந்த வசனங்களைக் கவனமாகக் படித்தால், கர்த்தர் ஓனானை அழித்ததின் காரணம் “அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததி உண்டாகதபடிக்தகத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான்” என்று தெரியவரும்.
இன்பத்திற்காக மட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்வதைத் திருமறை அனுமதிப்பது மட்டுமன்றி, அதை ஓர் அறிவுரையாகவும் கொடுக்கிறது. பவுல் கூறுகிறார்:
“புருஷன் தன் மனைவிக்கு செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள். மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. உபவாசத்திற்கு ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிலிடாதபடிக்கு, மறுபடியும் கூடிவாழுங்கள்” 1 கொரிந்தியர் 7:3-5.
மனித உறவுகளுக்கு சிறந்த வழிகாட்டியாய் இருக்கும் நீதிமொழிகளில் வாசிக்கிறோம்:
“உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும்போல் இருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்போழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக. என் மகனே, நீ பரஸ்தீரீயின் மேல் மயங்கித்திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத்
தழுவவேண்டியதென்ன?” நீதிமொழிகள் 5:18-20.
இந்த வசனங்கள் கூடாவொழுக்கத்தைக் கண்டிப்பதுடன் மனைவியுடன் இன்பம் அனுபவிக்கத் தூண்டுகிறது. கணவனும் கற்புடனும் உண்மையுடனும் நடந்துகொள்ளவேண்டும். ஏன்? கடவுளையப்பற்றிய பயத்தினாலா? அல்லது மானம் காக்கவா? இல்லை, மனைவியை ஆழ்ந்து நேசிப்பதினால். “நான் நேசிப்பவரின் கண்களில் வேதனை நிறைந்த கண்ணீரைக் காண்பதைவிட நான் சாகும் வரை அடிக்கப்படுவது மேலானது” என்றான் ஓர் உண்மையுள்ள கணவன். இதுவே ஒவ்வொரு கிறிஸ்தவக் கணவனுக்கும் இருக்கவேண்டிய சிந்தை.
கணவனும் மனைவியும் உடலுறவு கொள்ளுமுன் ஜெபியுங்கள். இது இறைவன் நியமித்த பரிசுத்தமான உறவு என்ற உணர்வு இருந்தால், நன்றியுடன் ஜெபிக்கத் தயங்கமாட்டீர்கள். கணவன் தன்னிச்சையைத் தீர்க்கும் ஒரு கருவியாக மனைவியை நடத்தக்கூடாது. பாலுறவில் தன்னலம் இருக்கக்கூடாது. கூடியவரைக்கும் இருவரும் சேர்ந்தே இன்பம் அனுபவிக்கவேண்டும். இதில் முக்கிய பொறுப்பு கணவனுடையது. பாலுறவு அன்பின் சின்னம். கணவன்- மனைவி இடையே உள்ள தனிச்சிறப்பு வாய்ந்த, நெருங்கிய அன்பின் வெளிப்பாடு. பவுல் அது ஒரு கடமை என்கிறார். ஒருவர் வேண்டும்போது இன்னொருவர் தன்னை அர்ப்பணிக்க ஆயத்தமாக இருக்கவேண்டும். கணவன் வெறும் விலங்குணர்ச்சிக்கு இடங்கொடாமல், மனைவியின் உடலைக் கனத்துடன், மரியாதையுடன், மென்மையாகக் கையாளவேண்டும். திருமறை இந்த உறவைத் தனிச் சலுகை உள்ள “இரகசியம்” என்கிறது. இச் சலுகையைக் கூடாவொழுக்கத்தின் மூலம் துர்ப்பிரயோகம் செய்தால் இறைவனின் ஆக்கினைத் தீர்ப்புக்கு ஆளாவோம்.
இப்பகுதியை ஓர் எச்சரிக்கையுடன் முடிக்க விரும்புகிறேன். தாம்பத்ய வாழ்க்கையில் உடல் உறவு மிகவும் முக்கியமானது என்றாலும், அதுவே எல்லாம் என்றிருக்கக்கூடாது. ஒரு காலத்தில் பாலுறவை அருவருப்பாக எண்ணிய கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். இந்த நவீன நாட்களிலோ பாலுறவை அளவுக்கு மீறி, மிதமிஞ்சி, மிகைப்படுத்தி சில கிறிஸ்தவ ஆசிரியர்களும் எழுதுகிறார்கள். அதைவிட முக்கியமானது கணவனுக்கும் மனைவிக்குமிடையே தொடரும், நெருங்கிய, தனித்தோழமை, நாளடைவில் அதுவே இறுதிவரை நிலைத்திருக்கும். இப்படிப்பட்ட தோழமையை வளர்ப்பதில் இருவருக்கும் பங்கிருந்தாலும், தலையாய பொறுப்பு கணவனுடையதே. கணவனே, உன் மனைவி உனக்குச் சரியான துணையாய் இருக்கிறாளா என்பதைவிட நீ அவளுக்குச் சரியான துணையாய் இருக்கிறாயா என்பதுதான் கேள்வி. நீ அவளுக்கு ஏற்ற துணையாய் இருந்தால், அவளும் உனக்கு ஏற்ற துணையாய் இருப்பாள் அல்லது மாறுவாள்.

நரம்பும் தோலும்

மனைவி கணவனுக்கு “எலும்பில் எலும்பும், மாம்சத்தில் மாம்சமுமாய்” இருக்கிறாள் என்றால், கணவன் மனைவிக்கு “நரம்பில் நரம்பும், தோலில்தோலுமாய்” இருக்கவேண்டும். உடலின் உறுப்புக்களை இயங்கச்செய்வது நரம்புகள். அதுபோல் குடும்பத்ைத் இயங்கச்செய்வது கணவனின் தலையாய பொறுப்பு. இன்று பல குடும்பங்களில் கணவன் மனைவிஇருவருமே சம்பாதிக்கிறார்கள். ஆனாலும் பொருளீட்டுவதில் முதல் பொறுப்பு கணவனுடையதே. வேலைசெய்ய மனதில்லாத சோம்பேறியான சில ஆண்களை அறிவேன். இவர்களைக் குறித்துப் பவுல் கூறுகிறார்: “ஒருவன் வேலைசெய் மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்துறு நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே. உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய் ஒழுங்கற்றுத் திரிகிறீர்ளென்று கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்தி சொல்லுகிறோம்” 2 தெசலோனிக்கேயர் 3:10-12.
குடும்பத்தின் நல்வாழ்வுக்குத் தலைவனே பொறுப்பு. பிள்ளைவளர்ப்பில் அவனே முன்னிலை வகிக்க வேண்டும்.
தோல் உள் உறுப்புக்களைப் பாதுகாக்கிறது. அவ்விதமே கணவன் தன் குடும்பத்தைக் காக்கக் கடமைப்பட்டிருக்கிறான். அப்பொழுது மனைவி, எலும்பு சரீரத்தைக் தாங்குவதுபோல் தன் குடும்பத்தைத் தாங்குவாள். மாம்சம் சரீரத்திற்கு உருவம் கொடுப்பதுபோல் தன் குடும்பத்திற்கு ஓர் அழகுருவம் கொடுப்பாள். கடைசியாக, உயிரின்றி உடல் பயனற்றது. ஆவியின்றி உயிரில்லை. குடும்பத்தின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் கணவனின் பொறுப்பே முதன்மையானது.

பாலுறவும் பெண்பாலும்

1. ஒருமித்த உறவு பெண்மையை முழுமை பெறச்செய்கிறது,
2. கணவனின் அன்பை உறுதிப்படுத்துகிறது.
3. இயற்கையான சரீரத்தேவையைப் பூர்த்தி செய்கிறது.
4. மனதில் ஓர் இதமான உணர்வைத் தருகிறது.
5. கணவனோடு ஒரு நெருங்கிய உறவை உருவாக்குகிறது.
6. தூய்மை காக்க உதவுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.