யோனா கூறும் சத்தியங்கள்
“அதற்கு அவன்: நான் எபிரெயன். சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான்.” யோனா:1.9
பரிசுத்த வேதாகத்தில் உள்ள ஒவ்வொரு நபரை முன்னிறுத்தியும், பல சத்தியங்கள் உரைக்கப்பட்டுள்ளது. இதில் சாதாரண குடிமக்கள் முதல் ராஜக்குலத்தைச் சேர்ந்தவர்கள் வரை உட்படுகிறார்கள். ஆனால் ஒரு நாட்டில் உள்ள மக்களைத் தேவனிடத்திற்கு திருப்பும் பணியில், தீர்க்கத்தரிசிகள் தனித்தன்மை வகிக்கிறார்கள்.
இந்நிலையில் வேதத்தில் உள்ள சிறிய தீர்க்கத்தரிசிகளில் ஒருவராக பட்டியலிடப்பட்ட யோனாவின் வாழ்க்கைப் பயணம், வெறும் 4 அதிகாரங்களில் காட்டப்பட்டாலும், அதன்மூலம் தேவன் எண்ணிலடங்கா காரியங்களை வெளிப்படுத்துவதைக் காண முடிகிறது.
நவீன காலத்தில் வாழும் கிறிஸ்தவர்களான, நம் வாழ்க்கையோடு அவற்றை சேர்த்து படிப்பது, நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். எனவே யோனா சொல்லும் சாத்தியங்கள் என்ற இந்த வேதப்பாடத்திற்குள் நுழைவோம்.
இந்த யோனா யார்?
கி.மு.786-746 காலக்கட்டத்தில், இஸ்ரவேல் நாட்டை ஆட்சி செய்து வந்த யோவாசின் குமாரனாகிய யெரொபெயாம் என்ற ராஜாவின் நாட்களில் யோனா தீர்க்கத்தரிசி வாழ்ந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கணக்கிட்டுள்ளனர்.
பொதுவாக தீர்க்கத்தரிசி யோனாவைக் குறித்து பேசும் பலரும், யோனா புத்தகத்தில் உள்ள காரியங்களை மட்டுமே முன்னிறுத்தி பேசுகிறார்கள். இதனால் நம்மில் பலருக்கும், யோனாவைக் குறித்து வேதத்தில் யோனா புத்தகத்தில் மட்டுமே இடம்பெற்றுள்ளது என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் யோனாவின் தந்தைக் கூட ஒரு தீர்க்கத்தரிசியாக இருந்தார் என்று 2 ராஜாக்கள்:14.25 வசனத்தைப் படிக்கும் அறிய முடிகிறது.
மேலும் யோனா கூறிய ஒரு தீர்க்கத்தரிசனம் அப்படியே நிறைவேறியதாகவும், அதே வசனம் கூறுகிறது. எனவே வேத ஆராய்ச்சியாளர்கள், சிறிய தீர்க்கத்தரிசிகளின் பட்டியலில் யோனாவை சேர்த்தாலும், அவர் ஒரு நாட்டிற்கே முக்கியமான காரியங்கள் வரை கூறியவர் என்பது மேற்கூறிய வசனத்தின் மூலம் மறைமுகமாகத் தெரிகிறது.
எனவே இந்த யோனா புத்தகத்தில் படிப்பதற்கு என்ன இருக்கிறது என்ற நமது எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்வோம். தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்பட்ட ஒரு தீர்க்கத்தரிசியாக இருந்திருக்க வாய்ப்புள்ள யோனாவின் வாழ்க்கையை ஆராய்ந்து, பல ஆவிக்குரிய காரியங்களைக் கற்றுக் கொள்வோம்.
1.
நினிவே என்ற நகரத்தின் மிஞ்சிய பாவத்தைக் கண்டு, அதை அழிக்க நினைத்த தேவன், அது குறித்து எச்சரிக்க, தீர்க்கத்தரிசி யோனாவை அங்கு செல்லுமாறு கூறுகிறார். ஏனெனில் தான் செய்த பாவத்தில் மனிதன் அழிந்து போவதைத் தேவன் ஒருநாளும் விரும்புவது இல்லை.
நம்மிடம் கூட தேவன் பல காரியங்களை ஒப்படைக்கிறார். எடுத்துக்காட்டாக, நம்மோடு வேலைச் செய்யும் ஒரு நண்பருக்கு சுவிசேஷம் கூறுவது அல்லது குடும்பத்தில் உள்ள ஒருவரின் இரட்சிப்பிற்காக ஜெபிப்பது உள்ளிட்ட காரியங்களைச் செய்யுமாறு தேவன் கூறலாம்.
ஆனால் தேவனின் மேலான திட்டத்தைப் புரிந்து கொள்ள தவறும் யோனா, யோப்பா என்ற இடத்திற்கு சென்று, அங்கிருந்து தர்ஷீசுக்கு போகும் கப்பலுக்கு கூலி கொடுத்து தப்பிச் செல்ல முயற்சி செய்கிறார்.
இதேபோல சில நேரங்களில், நமது சொந்த புத்தியைப் பயன்படுத்தி, தேவனுக்கே அறிவுரைக் கூறுகிறோம் அல்லவா? இவ்வளவு பாவியான மனிதன் எப்படி இரட்சிக்கப்படுவான்? அல்லது அவரிடம் போய் எப்படி இயேசுவைப் பற்றி கூறுவது? என்னைப் பற்றி என்ன நினைப்பார்? என்றெல்லாம் யோசித்துக் கொண்டு, அந்தப் பணியைச் செய்ய மறுக்கிறோம். மேலும் சில நேரங்களில் தேவ சமூகத்தில் இருந்து யோனாவைப் போல விலகி, நமது சொந்த விருப்பத்திற்கு ஓடி மறைந்து கொள்கிறோம்.
கப்பலின் கீழ்தட்டிற்கு இறங்கிப் போய், தன்னை மறைத்து கொள்ளும் யோனா, அங்கே அயர்ந்து தூங்கியதாக வேதம் கூறுகிறது. ஆனால் அவரை தட்டியெழுப்ப தேவனோ, ஒரு தேவ தூதனோ அங்கு வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதேபோல சில நேரங்களில் தேவனை மறந்து அல்லது தேவனுக்கு மறைந்து பயணிக்கும் நம்மை, தேவன் கண்டுகொள்ளாமல் விட்டது போல தெரியலாம்.
யோனாவின் கீழ்படியாமையை உணர்த்துவதற்காக, கடலின் மீது பெரிய காற்றை அனுப்பிய போது, கப்பலே உடையும் வகையிலான பெரிய கொந்தளிப்பு உண்டானதாக (யோனா:1.4) காண்கிறோம்.
நமக்கு கொடுக்கப்பட்ட தேவ ஊழியங்களை விட்டுவிட்டு, தேவையில்லாத செலவுகளைச் செய்து கொண்டு, தேவனுக்கு மறைவாக பதுங்க நினைத்தாலும், அங்கே எல்லாருக்கும் முன்பாக நம்மை வெளியே கொண்டு வர வல்லமையுள்ள தேவனை தான் நாம் ஆராதிக்கிறோம். எனவே அவரை ஏமாற்றலாம் என்ற நமது எந்தத் திட்டமும் தோல்வியைத் தான் சந்திக்கும்.
எனவே தேவன் அளிக்கும் ஊழியங்களை உண்மையும் உத்தமமுமான முறையில் செய்து முடிப்போம். அப்போது நமக்கு மட்டுமின்றி, நம்மைச் சுற்றிலும் உள்ள மற்றவர்களுக்கும், அது ஆசீர்வாதமாக இருக்கும். நமது கீழ்படியாமையை உணர்த்த மற்றவர்களைச் சேர்த்து தண்டனையில் வீழ்த்துவதைத் தவிர்ப்போம்.
2.
தனது கீழ்படியாமை யாருக்கும் தெரியாது என்ற எண்ணத்தில் தான், யோனாவும் அயர்ந்து தூங்கினார். ஆனால் யோனாவிற்கு நஷ்டம் ஏற்படவில்லை என்றாலும், அவருடன் பயணித்த மற்ற அனைவருக்கும் நஷ்டம் ஏற்பட்டதாக காண்கிறோம். ஏனெனில் கப்பலுக்கு ஏற்படும் சேதத்தை தவிர்க்க, தங்களிடம் இருந்த சரக்குகளை கடலில் ஏறிந்துவிட்டு, ஒவ்வொருவரும் சொந்த தெய்வங்களை நோக்கி வேண்டுதல் செய்கிறார்கள் (யோனா:1.5).
தேவனால் அளிக்கப்பட்ட பணியை நாம் செய்ய தவறும் போது, அது நமக்கு மட்டுமின்றி, நாம் சார்ந்துள்ள சபை, தெரு, ஊர், நகரம் என்று எல்லா தரப்பிலும் பாதிப்பு உண்டாகும். நமது சபையில் சரியான எழுப்புதல் இல்லை அல்லது தேவனுடைய அதிசய கரத்தை காண முடியவில்லை என்றால், அதற்கு நம்முடைய கீழ்படியாமைக் கூட ஒரு காரணமாக இருக்கலாம். எனவே நமது குறைகளை தேவனால் உணர்த்தினால், உடனடியாக நம்மையே தேவ சமூகத்தில் தாழ்த்துவது நல்லது.
இந்தக் காலத்தில் பொதுவாக சபையில் எழுப்புதல் இல்லை என்றால், தேவ ஊழியர்களையும் மற்ற விசுவாசிகளையும் மட்டுமே குறைக் கூறுகிறார்கள். அதே நேரத்தில் நம்முடைய ஆவிக்குரிய நிலை எப்படி இருக்கிறது அல்லது நம்மிடம் தேவன் ஒப்படைத்தப் பணிகளை அல்லது ஊழியங்களை நாம் சரியான முறையில் செய்கிறோமா? என்று ஆராய்ந்து பார்க்க தவறுகிறார்கள். இதனால் தேவனுக்கு முன்பாக நாம் குற்றவாளிகளாக மாறுகிறோம். மேலும் நம்மைச் சுற்றியுள்ள பிரச்சனைகள் அதிகமாகிறதே தவிர, குறைவதில்லை.
இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு காரியம் என்னவென்றால், தான் பயணிக்கும் கப்பலுக்கு எதிராக அவ்வளவு பெரிய காற்றும், கடல் கொந்தளிப்பும் உண்டானச் சூழ்நிலையிலும், யோனா எந்தக் கவலையும் இல்லாமல் அயர்ந்த நித்திரை செய்ததாக வேதம் கூறுகிறது.
நம்மில் பலருக்கும் இது போன்ற மனநிலைக் காணப்படுகிறது. சபையில் எழுப்புதல் வரவில்லை என்றால், நான் என்ன செய்ய முடியும்? அல்லது நான் வசிக்கும் ஊரில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிரச்சனைக்கு யார் காரணம் என்று கண்டுபிடியுங்கள் என்று மற்றவர்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இல்லாவிட்டால், தேவ கிருபையில் எனக்கு எந்த குறையும் இல்லை, என்னை தேவன் ஆசீர்வதித்து இருக்கிறார் என்று கூறி, எதிலும் தலையிடாமல் ஒதுங்கிக் கொள்கிறோம். ஆனால் இது கூட தேவனுடைய பார்வையில் சரியான நடத்தை அல்ல என்பதை யோனாவின் வாழ்க்கையின் மூலம் தேவன் விளக்குகிறார்.
யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கப்பலில் ஏறி, தர்ஷீசுக்கு சென்று விடலாம் என்ற எண்ணம் கொண்ட யோனாவின் திட்டத்தைத் தேவன் தோல்வியடைய செய்தார். மேலும் பல நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்பாக, தனது குற்றத்தை அறிக்கையிட வேண்டிய நிலை யோனாவுக்கு உண்டானது.
இதேபோல நம்மிடம் ஒப்படைத்த தேவனுடைய பணியை நாம் செய்ய தவறும் போது, இதுவரை நாம் அறியாத பலருக்கு முன்பாக நமது குற்றத்தை அறிக்கையிட வேண்டிய நிலை ஏற்படலாம். இதைத் தவிர்க்க, தேவனால் நம்மிடம் ஒப்படைக்கப்படும் பணிகளை, எந்தக் குறையும் இல்லாமல் செய்து முடிப்போம். இதுவரை ஏதாவது தேவப் பணிகளைச் செய்ய தவறியிருந்தால், உடனடியாக தேவ சமூகத்தில் மன்னிப்புக் கேட்டு மனந்திரும்புவது தான் சிறந்த வழி.
3.
தேவனால் அளிக்கப்பட்ட பணியைச் செய்ய தவறிய யோனாவின் கீழ்படியாமையின் விளைவாக, கப்பலில் பயணித்த எல்லாருக்கும் பாதிப்பு உண்டானது. இதனால் யோனாவை தவிர, மற்ற எல்லா பயணிகளும் தங்களின் சொந்த தெய்வங்களை நோக்கி வேண்டிதல் செய்ததாக (யோனா:1.5) காண்கிறோம். ஆனால் ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தரின் தீர்க்கத்தரிசியாகிய யோனா, எந்த கவலையும் இல்லாமல் சுகமாக தூங்குகிறார்.
இதில் ஆச்சரியமான இன்னொரு காரியம் என்னவென்றால், தங்களிடம் இருந்த சரக்குகளையும், பொருட்களையும் கடலில் எடுத்து எறிந்து கப்பலின் எடையைக் குறைக்கும் அளவிற்கு பெரிய அளவிலான கொந்தளிப்பில் செல்லும் கப்பலில் தூங்கும் யோனாவின் அறையில் எந்தொரு பொருளும் கீழே விழுந்திருக்காதா? என்பது தான். நிச்சயம் விழுந்திருக்கும், இங்கும் அங்குமாக உருண்டிருக்கும். பெரிய சத்தங்களும், கூக்குரல்களும் உண்டாகி இருக்கும்.
ஆனால் அதையெல்லாம் பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளாத யோனா, அயர்ந்து தூங்குகிறார். அதேபோல நாம் இருக்கும் சபையில், தெருவில், ஊரில் ஏற்படும் பிரச்சனைகளைக் குறித்த செய்திகளை நாம் அனுதினமும் பார்க்கிறோம், கேட்கிறோம்.
இப்படி நாம் கேள்விப்படும் காரியங்களுக்காக குறைந்தபட்சம் தேவ சமூகத்தில் ஜெபிக்கலாமே! நாம் வசிக்கும் தேசத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்காக நாம் ஜெபிக்க கடமைப்பட்டுள்ளோம் என்று 1 ராஜாக்கள்:8.37-40 வசனங்களில் வாசிக்கிறோம். அதை செய்ய தவறும் பட்சத்தில், யோனாவைப் போல எல்லாருக்கும் முன்பாக, நமது கீழ்படியாமையை, தேவ சமூகத்தில் நாம் அறிக்கையிட வேண்டிய நிலை ஏற்படும்.
இன்று பலருக்கும் இது போன்ற காரியங்களை நினைத்து ஜெபிக்குமாறு கூறினால், அதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில் இந்தக் காரியங்களைச் செய்வதால், சபையில் பெரிய ஊழியங்களோ அல்லது ஊரில் பெரிய புகழோ கிடைக்கப் போவதில்லை. மேலும் நம்மைச் சுற்றியுள்ள சிலர், இது குறித்து அறிந்தால் கேலி, கிண்டல் செய்யவும் வாய்ப்புள்ளது.
ஆனால் நாம் செய்வது தேவனுடையப் பணி என்பதை நாம் மறக்கக் கூடாது. சபையின் எழுப்புதலுக்காக, ஊரில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்காக ஜெபிக்க வேண்டும் என்ற பாரம் உங்களுக்கு தேவனால் அளிக்கப்பட்டால், அதற்காக முற்றிலும் உங்களை ஒப்புக் கொடுத்து, அதை செய்ய தயங்க வேண்டாம்.
இதனால் இந்த உலகில் உங்களுக்கு பெயரோ, புகழோ கிடைக்காமல் போகலாம். அது குறித்து யாருக்கும் தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால் தேவனுடைய பார்வையில், அது விலையேறப்பட்டதாக இருக்கும் என்பதோடு, அதற்கான பலனை அவர் நிச்சயம் அருளுவார்.
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், கடல் கொந்தளிப்பில் சிக்கிய கப்பலில் உள்ள மற்ற எல்லா ஜாதி மக்களும், தங்களுடைய தெய்வங்களை நோக்கி முறையிடுகிறார்கள். ஜீவனுள்ள தேவனின் தீர்க்கத்தரிசியான யோனா, எந்த கவலையும் இல்லாமல் தூங்குகிறார்.
இதே நிலையில் உள்ள இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள், இன்றும் அதிகளவில் உள்ளார்கள். மற்ற மதங்களைச் சேர்ந்த நமது நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியோர், எந்த பதிலையும் தராத, தெய்வங்களாக பாவிக்கப்படும் கல்லையும், மண்ணையும், மரத்தையும் வணங்குகிறார்கள்.
ஆனால் நாமோ ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கும் மக்கள். நமது தேவன் கூப்பிடும் போது, பதில் அளிக்கிறவர். நமது போராட்டங்களில் ஜெயம் தருகிறவர். பாவத்தில் இருந்து மீட்டவர். நமது குறைகளையெல்லாம் மன்னிக்கிறவர். நமக்காக பரலோகத்தில் இடத்தை ஆயத்தம் செய்பவர். இப்படி நமது தேவனைக் குறித்து எவ்வளவோ காரியங்களைக் கூறலாம்.
இப்படியிருக்க உயிரில்லாத மனித படைப்புகளைத் தெய்வங்களாக வணங்கும் நம்மை சார்ந்தவர்கள், தங்களின் பக்தியின் பாகமாக, எவ்வளவோ காரியங்களைச் செய்கிறார்கள். அதனால் மட்டுமே சொர்க்கத்திற்கு போக முடியும், மோட்சம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.
அவர்களின் அறியாமையைப் பார்த்து, அவர்களை கேலி, கிண்டல் செய்கிறோம். பிசாசை வணங்கும் மக்கள், நரகத்திற்கு போகிறவர்கள் என்றெல்லாம் சபிக்கிறோம்.
ஆனால் அவர்களிடம் உள்ள பக்தியோடு, ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கும் நமக்குள்ள பக்தியை என்றாவது ஒப்பிட்டு பார்த்து இருக்கிறோமா? அவர்கள் காட்டும் அளவிற்கு நாம் பயபக்தியைக் காட்டாவிட்டாலும், அதில் பாதியாவது நம்மிடம் இருக்கிறதா? இல்லை என்பது தான் வேதனையான விஷயம்.
இன்னும் தெளிவாக கூறினால், அவர்களை விட நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் வேதம் எளிய காரியங்களை மட்டுமே போதிக்கிறது. ஆனால் அதை கூட நாம் செய்யாமல், மற்றவர்களைக் குற்றப்படுத்துகிறோம். எனவே யோனா செய்த இந்தத் தவறை நாமும் செய்ய வேண்டாம். நம்மைச் சுற்றிலும் உள்ளவர்கள் பிரச்சனைகளைச் சந்திக்கும் போது, அவர்களுக்காக ஜெபிப்போம்.
மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களின் வழிபாட்டு முறைகளைக் கேவலமாக பேசுவதை நிறுத்திவிட்டு, நாம் ஆராதிக்கும் ஜீவனுள்ள தேவனை எந்த அளவிற்கு அன்பு கூறுகிறோம் என்று ஆராய்ந்து பார்ப்போம். நாம் செய்த தவறுகளைத் தேவன் உணர்த்தும் போது, உடனே மன்னிப்புக் கேட்டு, நம்மால் வந்த பிரச்சனைகளுக்கு தீர்வைக் காண்போம்.
4.
கடல் கொந்தளிப்பைக் கண்டு பயந்து கப்பலில் இருந்த மற்ற மதத்தினர் தங்கள் தெய்வங்களை நோக்கி முறையிடும் போதும், யோனா தூங்கினார் என்று கண்டோம். இதிலிருந்து மற்றவர்களோடு சேர்ந்து நான் அழிந்தாலும் பரவாயில்லை, தேவனிடம் இருந்து மறைந்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் யோனாவிற்கு இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.
இதனால் தான் அவ்வளவு கொந்தளிப்பின் நேரத்திலும், யோனா பதட்டம் இல்லாமல் தூங்குகிறார். யோனா:1.6-ல் எந்தக் கவலையும் இல்லாமல் தூங்கிய யோனாவை, கப்பல் மாலுமி வந்த எழுப்பி, ஜெபிக்க கூறியதாக காண்கிறோம்.
இந்த நிலை நம்மில் பலருக்கும் ஏற்படுகிறது. தேசத்தில் நடக்கும் பிரச்சனைகளைப் பெரிய பொருட்டாக எண்ணாத நாம், அதற்காக ஜெபிக்க தவறும் போது, நம்மைச் சுற்றிலும் உள்ள மற்ற மதத்தினரால் உணர்த்தப்படுகிறோம். ஆனால் அந்த உணர்த்துதலை நாம், எந்த அளவிற்கு மதிக்கிறோம் என்பது ஆராயத்தக்கது.
கப்பல் மாலுமி வந்து எழுப்பிய பிறகும், யோனா ஜெபித்ததாக வேதத்தில் குறிப்பிடவில்லை. ஏனெனில் தன்னால் தான் இந்தப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பது யோனாவிற்கு நன்றாக தெரிந்திருந்தது. ஆனாலும் யோனா எதுவும் பேசாமல் மெளனமாக இருந்து, தனது குற்றத்தை மற்றவர்களிடம் இருந்து மறைக்கிறார்.
நம்மைச் சுற்றிலும் நடக்கும் பிரச்சனைகளுக்காக ஜெபிக்குமாறு, மற்ற மதத்தினர் வந்து நம்மை கேட்கும் போது, நம்மை தேவ சமூகத்தில் தாழ்த்தி ஜெபிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, என்னை ஜெபிக்குமாறு கூற இவர்கள் யார்? இவர்களே பிசாசை வணங்குகிறவர்கள்! என்றெல்லாம் கூறுவது தவறு.
ஏனெனில் ஒரு தவறான பாதையில் சென்ற தீர்க்கத்தரிசியை கழுதை கூட உபதேசித்து உள்ளதை வேதத்தில் காண்கிறோம். இது குறித்து ஏற்கனவே வேதத்தில் கழுதைகள் (பாகம் - 3) என்ற வேதப்பாடத்தில் நாம் படித்திருக்கிறோம். எனவே இது போன்ற சூழ்நிலையில், நம்மை தாழ்த்தி தேவ சமூகத்தில் மன்றாடும் போது, தேசத்தின் மீது தேவன் மனமிறங்குவார்.
தேவ சமூகத்தில் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளாமல், ஜெபிக்காமல் இருந்த யோனாவை, சீட்டுப் போட்டு கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்ற பயணிகள், மாலுமி என்று எல்லாரும் சேர்ந்து, யோனாவைப் பிடிக்கும் வரை, யோனா தனது தவறைக் குறித்து எதுவும் பேசவில்லை.
நமக்கு அளிக்கப்பட்ட தேவப் பணியைச் செய்யாமல், தேவ சமூகத்தை விட்டு மறைந்து வாழும் போது, நம்மைச் சுற்றிலும் உள்ளவர்களால் உணர்த்தப்படுகிறோம். அப்படியும் நாம் நம்மை தாழ்த்தி ஜெபிக்க மறுக்கும் போது, மற்ற எல்லாருடைய பார்வையும் நமக்கு நேராக திரும்பும் வகையில், தேவன் கிரியை செய்வார். அதன்பிறகு நமது குற்றத்தைப் பலருக்கு முன்பாக அறிக்கையிட வேண்டிய நிலை ஏற்படும்.
பல நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்பாக தனது குற்றத்தை அறிக்கையிட வேண்டிய நிலை வந்த போதும், யோனாவின் பேச்சில் எந்தொரு மனந்திரும்புதலுக்குரிய வார்த்தையும் காணப்படவில்லை. அந்தச் சூழ்நிலையிலும் யோனா, தேவனை நோக்கி ஜெபிக்கவோ, மன்னிப்புக் கேட்கவோ செய்யவில்லை.
நமது அழைப்பை தெளிவாக புரிந்து கொண்டு, தேவ கட்டளைகளுக்கு கீழ்படிவோம். தேவனை விட்டு மறைந்து போகும் முயற்சியில் நாம் ஈடுபடும் போது, மற்றவர்களின் மூலம் தேவன் உணர்த்தினால், அந்தச் சந்தர்ப்பத்தில் நம்மையே தாழ்த்தி, குற்றத்தை ஒப்புக்கொள்வோம். தேவ சமூகத்தில் மன்னிப்பு கேட்போம்.
5.
யோனா:1.9-10 வசனங்களில் தீர்க்கத்தரிசி யோனாவின் அறிக்கையை காண்கிறோம். அதைக் கேட்டு கப்பலில் உள்ள அனைவரும் பயந்து, அதற்கானத் தீர்வையும் யோனாவிடமே கேட்கிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய ஒரு காரியம் என்னவென்றால், சர்வ வல்லமையுள்ள தேவனிடம் பயபக்தியுள்ளவன் என்று யோனா பொய் சொல்லுகிறார். ஏனெனில் பயபக்தியுள்ளவராக இருந்திருந்தால், தேவனுடைய கட்டளையின்படி அவர் செய்திருப்பார்.
ஏனெனில் நீதிமொழிகள்:16.6-ல் கர்த்தருக்கு பயப்படுகிறவன் தீமை விட்டு விலகுவான் என்றும், ஏசாயா:57.11-ல் தேவனை மனதில் வைக்காதவர்கள், பொய்யர்கள் என்றும் வேதம் கூறுகிறது.
சில சூழ்நிலைகளில் நாம் கையும் களவுமாக உலக மக்களின் முன்னால் மாட்டிக் கொண்டாலும், நமது உண்மையான நிலவரத்தை ஒப்புக் கொள்வதில்லை. அதற்கு பதிலாக, நான் ஒரு கிறிஸ்தவன்; நானும் சர்ச்சுக்கு போகிறேன்; பைபிள் படிக்கிறேன் என்றெல்லாம் பெருமையாக கூறுகிறோம்.
ஆனால் தேவ நாமத்தை மகிமைப்படுத்தக் கூடிய சாட்சியுள்ள ஜீவியம், நமக்குள் இல்லாமல் இப்படி வெளியோட்டமாக கூறுவதில் எந்தப் பயனும் இல்லை. நம்மை காண்பவர்கள் இயேசுவைக் காணாத நிலையில், கிறிஸ்தவர்கள் என்று பெயரளவில் கூறுவதில் அர்த்தமில்லை. எனவே கிறிஸ்துவின் அன்பு, தாழ்மை, கருணை, தயவு, மன்னிக்கும் தன்மை ஆகியவை மற்றவர்களுக்கு முன்பாக வெளிக்காட்ட வேண்டியுள்ளது.
யோனாவின் அறிக்கை மூலம் எல்லாருக்கும் முன்பாக தன்னை பக்தியுள்ள மனிதனாக காட்டி கொள்வதற்கான முயற்சி நடைபெற்றதாக மட்டுமே தோன்றுகிறது. இதனால் மற்றவர்களுக்கு பயம் ஏற்பட்டதே தவிர, தேவன் மீது பக்தி ஏற்படவில்லை.
நம்மைச் சுற்றிலும் உள்ளவர்கள் பெரியப் பிரச்சனைகளின் வழியாக செல்லும் போது, அவர்களுக்கு முன்பாக நம்மை நாமே உயர்த்தி காட்டக் கூடாது. அது அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்கு பதிலாக, பயத்தை மட்டுமே ஏற்படுத்தும். மேலும் ஜீவனுள்ள தேவனை நோக்கிப் பார்த்து, தங்களின் பாவத்தில் இருந்து விடுதலைப் பெறலாம் என்ற எண்ணமும் ஏற்படாது.
தனது அறிக்கையில், தேவனுக்கு முன்பாக மறைந்து ஓடி வந்ததால் இப்படி வந்தது என்று கூறும் யோனா, அதற்காக தேவ சமூகத்தில் மன்னிப்பு கேட்டு, ஜெபிக்கவில்லை. சில நேரங்களில் நாம் செய்யும் அறிக்கைகள் கூட இந்த மாதிரி தான் உள்ளன. நான் செய்த தப்பு மூலம் தான் இப்படி நடக்கிறது என்பது உண்மை தான். ஆனால் என்ன செய்வது, எல்லாரும் செய்யக்கூடிய தவறு தானே... என்று பொதுவாக கூறுகிறோமே தவிர, தேவன் என் குறைகளை மன்னிக்க வேண்டும் என்ற வார்த்தைகள் நம்மில் இருந்து வருவதில்லை.
தேவ சமூகத்தில் தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டிருந்தால், தேவன் மனமிறங்கி மற்றவர்களுக்கு இளைபாறுதலை அளித்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் யோனா அப்படி செய்யவில்லை. இது போன்ற தவறு நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் வராமல் பாதுகாக்க வேண்டும்.
மற்றவர்களின் பிரச்சனைகளைப் பார்த்து நாம் ஜெபித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறுவோம். அப்போது நமக்குள் இருக்கும் தேவ அன்பு, அவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு முன்பாக, கிறிஸ்தவர்கள் என்று பெருமையான வார்த்தைகளை பேசாமல், தேவனை உயர்த்துவோம். அப்போது அவர்களுக்கு பிரச்சனைகளின் மீதான பயம் மறைந்து, தேவனுக்கு பயப்படுகிற பயம் ஏற்படும்.
யோனாவின் அறிக்கையைக் கேட்கும் கப்பலில் இருந்தவர்கள், இதைச் செய்தற்கான காரணத்தைக் கேட்கிறார்கள்? ஆனால் அதற்கு யோனாவிடம் எந்தப் பதிலும் இல்லை (யோனா:1.10). நம் செய்யும் தவறுகளுக்கு, நம்மைச் சார்ந்தவர்கள் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படும் போது, அவர்கள் பல கேள்விகளை நம்மிடம் கேட்கிறார்கள்.
ஆனால் தவறு நம் பட்சத்தில் இருப்பதால், எந்தப் பதிலையும் கூற முடியாமல் திணறுகிறோம். தேவ ஊழியங்களில் ஈடுபடும் பலருக்கும் இந்த நிலைமை உண்டாகிறது. ஒரு காரியத்தைக் குறித்த தெளிவான தேவ சித்தத்தை அறியாமல், சொந்த விருப்பத்திற்கு ஏதாவது செய்து விடுகிறார்கள்.
ஆனால் பின்நாட்களில் ஏதாவது பிரச்சனை வரும் போது, அதற்கு விடை தெரியாமல் திணறுகிறார்கள். எனவே எந்தக் காரியத்திற்கும் தாவீதைப் போல தேவ சித்தத்தை அறிந்து செய்தால், நமக்கு தோல்விகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தேவ சித்தத்தின்படி நாம் செய்யும் போது, இந்த உலகில் எத்தனைப் பேர் வந்து நமக்கு எதிராக நின்றாலும், அதை எளிதாக மேற்கொள்ள முடியும்.
6.
கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பிற்கான காரணத்தைக் குறித்து யோனாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கிடைக்காத நிலையில், கப்பலில் உள்ள மற்றவர்கள் செய்வது அறியாமல் திணறுகிறார்கள். எனவே யோனாவின் மூலம் உண்டான பிரச்சனைக்கு என்ன பரிகாரம் செய்வது என்று அவரிடமே கேட்கிறார்கள் (யோனா:1.11). இதேபோல நாம் செய்யும் தவறுகளுக்கு தேவனிடம் இருந்து எப்படி மன்னிப்பு கிடைக்கும் என்பது நமக்கு மட்டுமே தெரியும்.
இதன்படி, தன்னால் ஏற்பட்ட பிரச்சனைக்கு, தானே ஒரு தீர்வாக அமையும் வகையில், தன்னை கடலில் எறிந்து விடுமாறு யோனா கூறுகிறார். இதன்மூலம் தான் இறந்தாலும் பரவாயில்லை, கப்பலில் உள்ள மற்றவர்கள் பிழைக்கட்டும் என்று யோனா நினைக்கிறார் என்று நாம் கருதியினால், அது முற்றிலும் தவறு என்பது எனது தனிப்பட்ட கருத்து.
ஏனெனில் ஒரு தீர்க்கத்தரிசியான யோனாவிற்கு, தனது கீழ்படியாமையின் மூலம் ஏற்பட இருந்த பின்விளைவுகள் என்ன என்பது நன்றாக தெரிந்திருக்கும். இருந்தாலும், தேவ சித்தத்தை விட தனது விருப்பம் தான் நடைபெற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான் யோனா செயல்பட்டுள்ளார்.
தனது விருப்பம் தோல்வி அடைந்ததால், மற்றவர்களுக்கு முன்னால் யோனாவிற்கு நிமிர்ந்து நிற்க முடியவில்லை. ஆனாலும் தனது செயல்பாட்டை யாரும் குற்றப்படுத்திவிட கூடாது என்ற எண்ணத்தில் யோனா செயல்படுகிறார்.
இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் இருக்கும் போது, மற்றவர்களிடம் கூறும் காரியங்கள் சுயநலம் கொண்டதாக இருக்கக் கூடாது. அப்படியிருந்தால், அது நமக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பெரிய இடறலை உண்டாக்கும். ஏனெனில் யோனா கூறும் காரியங்கள், சுயநலம் கொண்டதாக மட்டுமே இருந்தது என்று யோனா:1.12 வசனத்தைப் படிக்கும் போது அறிந்து கொள்ளலாம்.
யோனா கூறிய காரியத்தில் அப்படி என்ன சுயநலம் இருக்கிறது என்று நமக்கு தோன்றலாம். ஆனால் யோனா கடந்து வந்த பாதைகளை முன்னிறுத்தி சிந்தித்தால், அவரது சுயநலத்தை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
நினிவே நகரத்திற்கு செல்லுமாறு அனுப்பப்பட்ட யோனா, கர்த்தருடைய பார்வைக்கு விலகி, தர்ஷீசுக்கு போகும் கப்பலில் ஏறிச் செல்கிறார். ஆனால் கர்த்தரால் தடுக்கப்பட்டதால், உடன் பயணித்தவர்களிடம் தனது தவறை அறிக்கையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் எந்தக் குற்ற உணர்வும் கொள்ளாத யோனா, சொந்த விருப்பத்தின் தோல்வியை தாங்க முடியாமல் எப்படியாவது சாக வேண்டும் என்று விரும்புகிறார்.
ஆனால் சொந்தமாக அதற்கு முயற்சி செய்தால், ஜீவனுள்ள தேவனுடைய ஊழியக்காரனாகிய யோனா தற்கொலைச் செய்து கொண்டார் என்ற அவப்பெயர் ஏற்படும். அதை தடுக்கும் வகையில், தன்னைக் கடலில் தூக்கி எறிந்து விடுமாறு கூறுகிறார். இதன்மூலம் கப்பலில் இருந்தவர்களால் கொல்லப்பட்டார் என்று அதை மாற்ற விரும்புகிறார்.
தேவ கட்டளைகளைச் செய்ய நாம் தவறிவிட்டு, மற்றவர்களுக்கு முன்பாக நிற்க வேண்டிய நிலை ஏற்படும் போது, யோனாவைப் போல நம்மில் பலரும் செயல்படுகிறோம். எடுத்துக்காட்டாக, தேவாலயத்தில் நமக்கு அளிக்கப்பட்ட ஒரு ஊழியத்தை ஒழுங்காக செய்ய தவறும் பட்சத்தில், அதற்கான பொறுப்பை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால் பெரும்பாலானோர் அப்படி செய்வதில்லை. அந்த ஊழியத்தில் இருந்தே என்னை நீக்கி விடுங்கள் என்று கூறுகிறார்கள். இதன்மூலம் தங்களின் மீது எந்த அவதூறான பேச்சு வராமல் பாதுகாக்கிறார்கள். இது குறித்து யாராவது கேட்டால், நான் நன்றாகத் தான் செய்து கொண்டிருந்தேன். என்ன செய்வது என்னை அந்த ஊழியத்தில் இருந்து தூக்கிவிட்டார்கள் என்பார்கள்.
மேலும் தாங்கள் வகித்த பொறுப்பை ஏற்கும் மற்றவர்கள் அதில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்து, அவர்கள் செய்யும் காரியங்களைக் குற்றப்படுத்துகிறார்கள். இதன்மூலம் தங்களின் சிறப்பான செயல்பாட்டை நிரூபிக்க விரும்புகிறார்கள்.
மேற்கண்ட இந்தச் செயல்பாடு மனிதர்களுக்கு புரியாமல் இருக்கலாம். அதைச் செய்பவர்களுக்கு கூட தெரியாமல் இருக்கலாம். ஆனால் தேவன் அந்த செயல்பாட்டைத் தெளிவாக அறிந்து வைத்துள்ளார். இது போன்ற நடவடிக்கையின் மூலம் நம்மைக் கொண்டு தேவன் செய்ய நினைத்த காரியங்கள் தடைப்படுகிறது என்பதோடு, அதற்கான காரணத்தை மற்றவர்கள் மீது சுமத்துகிறோம். மேலும் சுயவிருப்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். இது தேவனுடைய பார்வையில் தவறாகவே கணக்கிடப்படுகிறது.
தேவன் நம்மிடம் ஒப்படைத்த காரியங்களைச் செய்ய தவறும் போது, மற்றவர்களால் உணர்த்தப்படுகிறோம். அப்போதே நம்மை தாழ்த்திவிட வேண்டும். அந்த சந்தர்ப்பத்தை தவறவிடும் பட்சத்தில், அந்த தவறு ஏற்பட்டதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு, மற்றவர்களின் மீது அதை சுமத்த திட்டமிடக் கூடாது.
ஒரு குறிப்பிட்ட காரியத்தை தேவன் நம்மிடம் ஒப்படைத்தால், அதற்கு ஏற்ற கிருபையையும் அளிக்கிறார். எனவே எந்த ஊழியத்தில் நாம் தோல்வி அடைந்தோமோ, அதே ஊழியத்தை பரிசுத்தாவியின் புதிய பலத்துடன் செய்ய வேண்டும். அதை தான் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
7.
யோனா புத்தகத்தை வாசிக்கும் போது, நினிவே மற்றும் தர்ஷீசு என்ற இரு நகரங்களைச் சாதாரணமாக காண்கிறோம். ஆனால் நினிவே நகரத்திற்கு போக வேண்டிய யோனா, அதற்கு மறுத்துவிட்டு, தர்ஷீசு பட்டணத்திற்கு போக முயற்சி செய்தது ஏன்? என்ற கேள்வி நமக்கு ஏற்படுகிறது.
எனவே இவ்விரு நகரங்களின் பின்னணியைக் குறித்து அறிந்தால், நமது கேள்விக்கான பதிலை எளிதாக கண்டறிய முடியும். முதலில் யோனா செல்லுமாறு அனுப்பப்பட்ட நினிவே நகரத்தைக் குறித்து காண்போம்.
நினிவே:
யோனா:1.2 வசனத்தில் மகா நகரமாகிய நினிவே என்று தேவன் கூறுவதில் இருந்து அது ஒரு பெரிய நகரம் என்பதை நாம் அறியலாம். யோனா புத்தகத்தின் கடைசி வசனத்தை (யோனா:4.11) வாசித்தால், இலட்சத்து இருபதினாயிரம் (1,20,000) பேருக்கும் அதிகமான மனிதரும், மிருகங்களும், நினிவே நகரில் வசித்து வந்ததாக தெரிகிறது.
வரலாற்று ரீதியாக நினிவே ஒரு பழமையான அசீரிய நகரமாகும். இன்றைய ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மோசூல் என்ற நகரமே, நினிவே என்று வரலாற்றில் அறியப்பட்டதாக, சில வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இது டைகிரிஸ் நதியோரத்தில் அமைந்துள்ளது.
பல சாம்ராஜ்ஜியங்களின் கீழ் ஆட்சி செய்யப்பட்ட நினிவே நகரம், உலகின் பெயர்பெற்ற துறைமுக நகரமாக விளங்கி வந்துள்ளது. இதை நிரூபிக்கும் வகையில் பல வரலாற்று சிறப்புமிக்க பொருட்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அப்பகுதியில் இருந்து தோண்டி எடுத்துள்ளனர். கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை தீவிரவாதிகளின் பிடியில் இந்த பகுதி சிக்கியுள்ளது.
மேற்கூறிய வரலாற்று சிறப்புகளைக் கொண்ட நகரமான நினிவே, இஸ்ரவேல் மக்களுக்கு எதிராக பல முறை போர் தொடுத்துள்ளது. இஸ்ரவேல் மக்கள், அசீரியர்களால் தாக்கப்பட்டதாக வேதத்திலும் அநேக இடங்களில் காண முடிகிறது. இதனால் பொதுவாக, அசீரியர்களின் மீது இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு வெறுப்பு காணப்பட்டது. அவர்களோடு பேசவோ, பழக்கவோ இஸ்ரவேல் மக்கள் விரும்பவில்லை.
மேலும் அந்தக் காலத்தில் பெரிய வியாபார நகரமாக இருந்த நினிவே, அசீரிய பெண் கடவுளான இஸ்தாரின் பெயரால் அறியப்பட்டது. நினிவே என்பதற்கு சரியான அர்த்தம் கண்டறிய முடியவில்லை என்றாலும், அது ஒரு மீன்களின் நகரம் அல்லது மீன்களைக் கொண்ட ஒரு வீடு, இடம் என்று பொருள் அளிப்பதாக உள்ளது.
நீரோ-அசீரிய சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாக விளங்கிய நினிவே, இந்திய பெருங்கடலுக்கும், மத்திய தரைக்கடலுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்த நிலப்பகுதியாக இருந்ததால், அந்த வழியாக செல்லும் எல்லா வணிக கப்பல்களும் இந்த நகரத்திற்கு வந்து சென்றுள்ளன.
இதனால் மிகவும் செல்வச் செழிப்பாக இருந்த நகரம் என்பதோடு, உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், நினிவே நகரத்திற்கு வந்து சென்றுள்ளனர். அதே நேரத்தில் உலகில் உள்ள எல்லா பாவ பழக்கங்களும், அங்கே நடந்தெறியுள்ளது.
இப்படி பாவத்தில் திளைத்த நினிவே நகரத்தைத் தான் அழிக்கப் போவதாக எச்சரிக்க, தேவன் யோனாவை அனுப்புகிறார். யோனா போன்ற தீர்க்கத்தரிசியின் வார்த்தைகளைக் கேட்டு, நினிவே நகர மக்கள் மட்டுமின்றி, அங்கு வரும் மற்ற நாட்டு வணிகர்கள் கூட மனந்திரும்ப வேண்டும் என்பதே தேவ சித்தமாக இருந்தது. ஆனால் அந்தத் திட்டத்திற்கு, யோனா ஒப்புக் கொள்ளவில்லை.
இன்னும் தெளிவாக கூறினால், உலகின் மிக விறுவிறுப்பான வியாபார சந்தையைக் கொண்ட மிகப்பெரிய நகரத்திற்கு வரும் நியாயத்தீர்ப்பைக் குறித்து தீர்க்கத்தரிசனம் உரைக்கும் பொறுப்பு, யோனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இஸ்ரவேலின் எதிரிகளாக கருதப்பட்ட அசீரியர்களின் தலைநகரத்திற்கு போக யோனா விரும்பவில்லை.
இதன்மூலம் தேவனுடைய கண்ணோட்டத்திற்கும், மனிதனுடைய கண்ணோட்டத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ளலாம். நம் வாழ்க்கையில் கூட தேவன், இது போன்ற பல திட்டங்களை வைத்துள்ளார். ஆனால் அதன் பின்னணி மற்றும் அதன் மூலம் அடைய போகும் மாற்றங்கள் ஆகியவற்றை யோனாவைப் போல நமக்கும் தெரிவதில்லை.
தேவன் கூறும் காரியங்களை வெளியோட்டமாக பார்த்துவிட்டு, அதற்கு ஒப்புக் கொடுக்க தயங்குகிறோம். இதன்மூலம் தேவனுடைய திட்டங்கள் தோல்வி அடைகின்றன என்பதை விட, நமக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது.
ஏனெனில் மேற்கூறிய சிறப்புகளைப் பெற்ற நினிவே நகரத்திற்கு வரவுள்ள நியாயத்தீர்ப்பைக் குறித்து யோனா முதலிலேயே சென்று கூறியிருந்தால், தேவனுக்கு கீழ்படிந்த தீர்க்கத்தரிசி என்ற பெயர் கிடைத்திருக்கும். மேலும் அந்த நகரத்தில் வாழ்ந்த பலருக்கும் முன்பாக, ஜீவனுள்ள தேவனுடைய தீர்க்கத்தரிசி என்ற பெயர் யோனாவிற்கு கிடைத்திருக்கும்.
ஆனால் தனது கீழ்படியாமை மூலம் தேவ திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, மறுஅழைப்பைப் பெற்ற பிறகு சென்றதால், அந்த அளவிற்கு யோனா பிரபலம் அடையவில்லை. மேலும் வேதத்தில் இவ்வளவு பெரிய நகரத்தை இரட்சிப்பில் நடத்திய தீர்க்கத்தரிசிக்கு வெறும் 4 அதிகாரங்கள் மட்டுமே கிடைத்தது.
இது யோனா தீர்க்கத்தரிசிக்கு பெரிய இழப்பு தானே? நாமும் தேவத் திட்டத்திற்கு விரோதமாக நமது சொந்த விருப்பத்தைச் செய்யும் போது, இது போன்ற இழப்புகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
எனவே எப்போதும் தேவன் கூறும் காரியங்களை, நமது கண்ணோட்டத்தில் வைத்து பார்ப்பதைத் தவிர்த்து, அதற்கு ஒப்புக் கொடுப்போம். அப்போது மனிதரின் புத்திக்கு எட்டாத பெரிய காரியங்களைச் செய்யும் தேவன், சகலத்தையும் மேன்மையாக முடிப்பார்.
8.
இந்த வேதப்பாடத்தின் கடந்த பகுதியில், நினிவே நகரத்தின் சிறப்பு குறித்தும், யோனாவின் தவறான கணிப்புக் குறித்தும் கண்டோம். நினிவேக்கு செல்ல மறுத்த யோனா, தர்ஷீசு நகரத்திற்கு செல்ல திட்டமிட்டார். அந்தக் காலத்தில் உலகிலேயே புகழ்பெற்ற நகரமாக திகழ்ந்த நினிவேயை நிராகரித்துவிட்டு தர்ஷீசுக்கு செல்லும் அளவிற்கு அந்த நகருக்கு அப்படி என்ன சிறப்பு இருந்தது என்பதை இந்தச் செய்தியில் காண்போம்.
தர்ஷீசு:
யோனா:1.3 இல் தர்ஷீசுக்கு செல்ல யோப்பாவிற்கு சென்ற யோனா, அங்கிருந்து கப்பல் ஏறியதாக கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து தர்ஷீசு என்பது இஸ்ரவேல் நாட்டில் இருந்து நீண்டதூரத்தில் அமைந்தது என்று அறியலாம். வேத ஆராய்ச்சியாளர்களின் கருத்துபடி, இஸ்ரவேல் நாட்டில் இருந்து தர்ஷீசு ஏறக்குறைய 2,500 கி.மீ. தூரத்தில் அமைந்து இருக்கலாம் என்று தெரிகிறது.
தர்ஷீசு என்ற வார்த்தைக்கு ஆரிய அல்லது சமஸ்கிருத மொழியில் “கடலை ஒட்டிய கரை பகுதி” என்று பொருள் கிடைக்கிறது. யூத வழிப்பாட்டு முறைகளில் தர்ஷீசிசம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அதற்கு “உன்னதமான தேவதைகள்” என்று பொருள் கிடைக்கிறது.
பரிசுத்த வேதாகத்தில் ஆதியாகத்தில் (10.4) இருந்தே தர்ஷீசு என்ற வார்த்தை பயன்பாட்டில் உள்ளது. வெள்ளப்பெருக்கின் அழிவில் காக்கப்பட்ட நோவாவின் மகனான யாப்பேத்தின் பேரன்களில் ஒருவர் தர்ஷீஸ் என்று பெயரிடப்பட்டார். பிற்காலத்தில் தர்ஷீஸ் என்ற பெயர் அவன் இருந்த தீவு பகுதிக்கு இடப்பட்டிருக்கிறது. எனவே தர்ஷீசு என்பது ஒரு பழம்பெரும் நகரமாக இருந்தது என்பதோடு, கடல்களால் சூழப்பட்ட ஒரு தீவாக இருந்துள்ளது.
ஏனெனில் இந்நகரத்தில் இருந்து இஸ்ரவேல் ராஜாவாகிய சாலொமோன், பொன், வெள்ளி, யானைத் தந்தங்கள், குரங்குகள், மயில்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்ததாக 2 நாளாகமம்:9.21 இல் காண்கிறோம். மேலும் யோசாபாத் கூட தர்ஷீசுக்கு செல்லும் கப்பல்களைச் செய்ததாக 2 நாளாகமம்:20.36 இல் காண்கிறோம். எனவே தர்ஷீசு, ஒரு செழிப்பான பகுதியாக இருந்தது என்பதை அறியலாம்.
ஆனால் ஏசாயா:66.19 வசனத்தை வாசிக்கும் போது, தூரத்தில் உள்ள ஜாதிகளின் தீவுகளின் பட்டியலில் தர்ஷீஸையும் தேவன் குறிப்பிடுகிறார். மேலும் தேவனை யார் என்றே அறியாத ஜாதியைச் சேர்ந்த மக்கள், தர்ஷீசில் வாழ்ந்து வந்ததாகவும் காண்கிறோம். ஆனால் தர்ஷீசு என்ற பண்டைய நகரம் தற்போது எந்தப் பகுதியில் அமைந்திருந்தது என்பதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.
பல நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தங்களின் வியூகங்களைத் தெரிவித்துள்ளனர். அதில் ஒருவரான போசார்ட் என்பவர் கூறுகையில், இலங்கையை உள்ளடக்கிய பண்டைய தமிழகத்தின் ஒரு துறைமுகப் பகுதி தான் தர்ஷீசு எனப்பட்டது என்கிறார். மேலும் தற்போது அது இலங்கையின் குதிரைமலை என்ற பகுதியாக இருந்தது என்கிறார்.
சங்கக் கால தமிழகத்தைக் குறித்த ஒரு புத்தகத்தில், தமிழக மன்னர்களுடன் இஸ்ரவேல் வணிகர்கள் பண்டமாற்று வியாபாரத்தில் ஈடுபட்டதாகவும், இரு தரப்பினருக்கும் இடையே கப்பல் போக்குவரத்து இருந்ததாகவும் வாசிக்க முடிந்தது. அதில் ஞானி சாலொமோனின் பெயரும் இடம்பெற்று இருந்தது. எனவே தர்ஷீசின் கப்பல்கள் என்று வேதம் குறிப்பிடுவது தமிழகத்தின் கப்பல்கள் தானா? என்பது ஆராயத்தக்கதே.
எது எப்படியோ தர்ஷீசு நகரில் ஜீவனுள்ள தேவனைக் குறித்த எந்தக் காரியங்களும் அறியாத ஒரு கூட்டம் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் அங்கு முழுக்க முழுக்க வியாபாரம் நடைபெற்றதால், தலைமறைவாக சிறந்த இடமாக இருந்துள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டே யோனா, தர்ஷீசு நகரத்தைத் தேர்ந்தெடுத்து இருக்கலாம் என்று தெரிகிறது.
இதேபோல தேவனுடைய திட்டத்தில் இருந்து விலகிச் செல்ல விரும்பும் நாம், சில நேரங்களில் தேவனோடு எந்தத் தொடர்பும் இல்லாத இடத்திற்கு சென்று மறைந்து கொள்ள விரும்புகிறோம். அதாவது இரட்சிக்கப்படாத நபர்களின் இடையே சென்று தங்கிவிட்டால், அங்கே தேவனிடத்திற்கு நம்மை வழிநடத்த யாரும் வரமாட்டார்கள் என்று நினைக்கிறோம்.
ஆனால் சங்கீதக்காரன் கூறுவது போல, நாம் பாதாளத்தில் சென்று படுக்கை விரித்தாலும் (சங்கீதம்:139.8) தேவனுடைய பார்வையில் இருந்து தப்ப முடியாது. இதை நாம் நன்கு அறிந்தாலும், சில நேரங்களில் யோனாவைப் போல சில முயற்சிகளில் ஈடுபடுகிறோம்.
மேலும் தேவனுடைய திட்டத்தைக் காட்டிலும், நமது திட்டம் சிறந்த லாபத்தை உண்டாக்கும் என்று நினைத்து, அதற்காக பாடுபடுகிறோம். யோனாவைப் போல அதற்கு என்ன செலவானாலும், கவலைப்படுவதில்லை. ஆனால் ஒரு காரியத்தை நம்மைக் கொண்டு செய்ய தேவன் தீர்மானித்துவிட்டால், அதை அவர் மாற்றமாட்டார். சில நேரங்களில் நமக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், அந்தப் பாதையின் வழியாகவே திரும்ப கொண்டுவரும் வகையில் நடத்துவார்.
தர்ஷீசு என்ற நகரத்திற்கு சென்று தேவனுடைய பார்வையில் இருந்து விலகிச் செல்ல விரும்பிய யோனாவின் பயணத்தைத் தேவன் தடுத்து நிறுத்தினார். யோனா நினைத்தது போல, தர்ஷீசு நகரத்திற்கு சென்று சேர முடியவில்லை. அதேபோல நம் வாழ்க்கையில் தேவ சித்தமில்லாத காரியங்களில் நாம் ஈடுபட்டால், அதை அவர் தடுத்து நிறுத்துகிறார்.
எனவே நமக்கு லாபமாக தோன்றும் காரியங்களைச் செய்ய முயற்சி செய்யாமல், தேவ சித்தத்தைச் செய்ய பாடுபடுவோம். அப்போது நாம் எதிர்பார்க்காத உன்னதமான ஆசீர்வாதங்களால் நம்மை தேவன் நிரப்புவார்.
9.
நினிவே மற்றும் தர்ஷீசு நகரங்களின் சிறப்புகளைக் குறித்து கடந்த செய்திகளில் கண்டோம். இந்நிலையில் நினிவேக்கு செல்ல யோனா தயக்கம் காட்டியதற்கான மற்ற சில காரணங்களையும், அதன் பின்னணிகளைக் குறித்தும் இந்தச் செய்தியில் காண்போம்.
முதலாவதாக நினிவே மற்றும் தர்ஷீசு ஆகிய இரு நகரங்களும், இஸ்ரவேல் நாட்டின் இருபுறத்தில் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இஸ்ரவேல் நாட்டின் கிழக்கு பகுதியில் டைகிரிஸ் நதியை ஒட்டி நினிவே நகரம் அமைந்திருந்தது. யோனாவின் சொந்த ஊரில் இருந்து ஏறக்குறைய 600 மைல்கள் கிழக்காக நினிவே அமைந்திருந்தது. மேலும் நினிவேக்கு செல்ல யோனா கடல் பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இதிலிருந்து தேவனுடைய வார்த்தையைப் பெற்ற யோனா, அப்போதே அதை செய்யக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனெனில் யோனாவின் ஊரில் இருந்து நிலப்பரப்பில் கிழக்கு நோக்கி பயணிக்க வேண்டிய அவர், 30 மைல்கள் தொலைவில் இருந்த யோப்பா என்ற துறைமுகத்திற்கு செல்கிறார்.
அங்கிருந்து மேற்கு நோக்கி, அதாவது அவர் செல்ல வேண்டிய திசைக்கு எதிர்திசையில் 2200 மைல்கள் தூரத்தில் இருந்த தர்ஷீசுக்கு செல்ல முயன்றார். அதற்கான கட்டணத்தையும் யோனா செலுத்துகிறார். அதிலிருந்து தேவனுடைய திட்டத்தில் இருந்து, தன்னை விலக்கி கொள்ள யோனா எந்த அளவிற்கு விரும்பினார் என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும் நினிவே என்ற ஊருக்கும் அங்கு வசித்த அசீரியர்களுக்கும் என்ன நேர்ந்தாலும், தனக்கு அது தெரியவே கூடாது என்று யோனா நினைத்துள்ளார்.
இதற்கான காரணம், அசீரியர்கள் விக்கிரகங்களை வணங்குபவர்கள் என்பதோடு, இஸ்ரவேல் மக்களுக்கு எதிரிகள் என்ற சிந்தனை யோனாவின் மனதில் ஆழமாக பதிந்திருந்தது என்று நாம் ஏற்கனவே கண்டோம். மேலும் அவர்கள் பெருமையுள்ளவர்கள் என்பதோடு, மற்ற மக்களின் மீது கருணைக் காட்டாதவர்கள். அப்படிப்பட்டவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு அளிக்க தேவன் விரும்பிய போதும், யோனாவால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஏனெனில் யோனாவைப் பொறுத்த வரை, அந்த மக்கள் செய்த பாவத்திலேயே அழிந்து போக வேண்டும் என்று விரும்பினார். அவர்களுக்கு எச்சரிப்பின் வார்த்தை அளிக்கப்பட்டு, மனந்திருந்தி தேவனை நோக்கி கூப்பிட்டால், அதை தேவன் மன்னிப்பார் என்று யோனா நன்கு அறிந்திருந்தார்.
எனவே தனது எதிரிகளுக்கு தேவன் கருணைக் காட்டக் கூடாது என்ற ஒரு தவறான எண்ணம் யோனாவிற்கு இருந்துள்ளது. இதை தேவனோடு பேசும் போது, அவர் கூறும் காரணத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். யோனா:4.2 வசனத்தில், முதல் முறையாக நினிவேக்கு அழைப்பு கிடைத்த போது ஏன் போகவில்லை என்பதை யோனா கூறுகிறார்.
எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும், அவர்கள் திருந்தி நல்ல மனிதர்களாக வாழ வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆனால் யோனாவிற்கு அது பிடிக்கவில்லை. தேவன் இரக்கம் நிறைந்தவராக எனக்கு மட்டும் இருந்தால் போதும் என்று நினைக்கிறார்.
இதே தவறை சில நேரங்களில் நாமும் செய்கிறோம். நாம் சந்திக்கும் சிலரை நம்மால் ஏற்றுக் கொள்ளவோ, மன்னிக்கவோ முடிவதில்லை. இதனால் அவர்களிடம் நாம் பேசுவது குறைவு என்பதோடு, இரட்சிப்பின் சுவிஷேசமும் அவர்களுக்கு அறிவிப்பது இல்லை. ஆனால் ஒருவராகிலும் கெட்டுப் போவது தேவனுக்கு சித்தமில்லை என்று வேதம் கூறுகிறது.
நாம் வெறுக்கும் நபர் கொடும் பாவியாக இருக்கக் கூடும். அவர் திருந்துவதற்கான யாதொரு வாய்ப்பும் நம் கண்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் அந்த மனிதர் திருந்தி தேவ பிள்ளையாக வாழ, தேவன் வாய்ப்பு அளிக்க விரும்பும் போது, அதற்கு நாம் தடையாக இருக்கக் கூடாது. இந்த தவறைத் தான் யோனா செய்ய முயற்சித்தார்.
தேவனுக்கு கீழ்படிய மறுத்த யோனாவை, தேவன் தண்டிக்கவில்லை. மாறாக, அவன் செய்த தவறைக் குறித்து உணர்ந்து மனந்திருந்த அவருக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுத்தார். ஆனால் அதே நேரத்தில் யோனாவைப் போல கீழ்படியாமை காட்டிய பலரும், தேவனுடைய தண்டனையைப் பெற்றதாக, வேதத்தில் நாம் காண முடிகிறது.
மேலும் அவருக்கு இருந்த தவறான கண்ணோட்டத்தை மாற்ற தேவன் திட்டமிடுகிறார். ஆனால் யோனா புத்தகத்தின் கடைசி வசனம் வரை, நாம் கவனித்து வாசித்தாலும், அந்த திட்டம் நிறைவேறியதாக தெரியவில்லை என்பதை அறியலாம்.
திருந்தவேமாட்டார்கள் என்று நம்முடைய மனித மூளையில் நினைக்கும் பலரையும், தேவனால் திருத்த முடியும். அவர் திருத்தியும் இருக்கிறார் என்பதற்கு எவ்வளவோ சாட்சிகளை நாம் அனுதினமும் காண்கிறோம், கேட்கிறோம். எனவே நாம் யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.
பாவத்தில் அழிய இருந்த நினிவே பட்டணத்திற்கு தேவனுடைய எச்சரிப்பின் வார்த்தை அளிக்கப்பட்ட போது, தேவ பயத்தையும் தாழ்மையையும் ஏற்படுத்தியது. ஆனால் தேவனுடைய தீர்க்கத்தரிசியாகிய யோனாவிற்குள் இருந்த கோபமும், வைராக்கியமும் எவ்வளவேயினும் குறையவே இல்லை. இதுபோன்ற ஒரு நிலைப்பாட்டில் நாம் வாழக் கூடாது.
தேவன் பாவத்தை மட்டுமே வெறுக்கிறாரே தவிர, பாவியை அல்ல. பாவத்தில் மரித்து போன ஒவ்வொரு மனிதனும் திருந்தி, புதிய மனிதனாக வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
எனவே தேவனுடைய அந்தத் திட்டத்தை அறிவிக்குமாறு நாம் அறிவுறுத்தப்படும் போது, அது யாராக இருந்தாலும், எவ்வளவு கொடும் பாவியாக இருந்தாலும், அவருக்கு சுவிஷேசம் அறிவிக்க தயங்க கூடாது. யாருக்கு தெரியும், யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு, நினிவே மக்கள் தேவனிடத்திற்கு திரும்பியது போல, நாம் அறிவிக்கும் சுவிஷேசத்தைக் கேட்டு, நம்மால் வெறுத்து தள்ளப்பட்ட கொடும் பாவியும் மனந்திருந்தலாமே!
10.
யோனாவின் வரலாற்றைப் படிக்கும் போது, ஒரு பெரிய மீனின் வயிற்றில் 3 நாட்களாக ஒரு மனிதனால் எப்படி உயிரோடு வாழ முடியும் என்ற சந்தேகம் நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டாகிறது. அதன் பின்னணி குறித்து இந்தச் செய்தியில் காண்போம்.
யோனாவின் காலத்தில் தற்போது உள்ளது போன்ற உயிரினங்களின் வகைப்பாடு அமைப்புகள் எதுவும் இருக்கவில்லை என்பதை நாம் அறிவோம். எனவே மக்கள் கண்களால் பார்த்தவற்றை அவர்களின் விருப்பம் போல, பெயரிட்டு அழைக்கும் முறை பின்பற்றப்பட்டது. இதனால் ஒரு மனிதனை விழுங்க வேண்டுமானால், அது ஒரு பெரிய மீனாக மட்டுமே இருக்க முடியும் என்பது சிந்திக்கத்தக்கது.
மேலும் கடல்வாழ் உயிரினங்களின் வகையில் உட்படும் பெரிய அளவிலான திமிங்கலங்கள், சுறா மீன்கள் போன்றவை ஒரு முழு மனிதனை அப்படியே விழுங்கும் திறன் கொண்டவை என்று சில கடல்வாழ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆனால் திமிங்கலம் என்ற வார்த்தை வேதத்தில் ஏற்கனவே சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அது யோனாவை விழுங்கியிருக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தால், பெரிய மீன் என்ற வார்த்தைக்கு பதிலாக, திமிங்கலம் என்று எழுதப்பட்டு இருக்கலாம்.
அதே நேரத்தில் யோனா:1.17 வசனத்தில் யோனாவை விழுங்கிய மீனை, கர்த்தர் ஆயத்தப்படுத்தி இருந்தார் என்று வாசிக்கிறோம். அதாவது அது ஒரு புதிய தேவனுடைய படைப்பாக கூட இருந்திருக்கலாம் என்பது சிந்திக்கத்தக்கது.
ஏனெனில் தேவனுடைய வழியை விட்டு விலகி ஓடும் ஒரு மனிதனை, தனது வழிக்கு திரும்ப கொண்டு வர, ஒரு புதிய படைப்பை உருவாக்கக் கூட தேவன் தயங்குவதில்லை. மேலும் எந்த மாதிரியான அற்புதத்தையும் தேவன் நடத்தி காட்டுவார். இதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு தான் தீர்க்கத்தரிசி பிலேயாமின் கழுதைப் பேசிய சம்பவம். இது குறித்து ஏற்கனவே வேதத்தில் கழுதைகள் என்ற வேதப்பாடத்தில் நாம் படித்திருக்கிறோம்.
எனவே நமக்கு அளிக்கப்பட்டுள்ள பணியை அல்லது ஊழியத்தை தேவ சித்தம் போல செய்து முடிப்பது சாலச்சிறந்தது. அதை நம் சொந்த விருப்பத்திற்கு மாற்ற நினைக்கும் போது, யோனாவைப் போல பல விபரீதங்களைச் சந்திக்க நேரிடும்.
அந்தப் பெரிய மீனால் விழுங்கப்பட்ட யோனா, அதன் வயிற்றில் மூன்று நாட்கள் இருக்க நேர்ந்தது. இதை வாசிக்கும் போது, இந்தக் காரியம் நமக்கு சாதாரணமாக தெரிந்தாலும், மீனின் வயிற்றில் 3 நாட்கள் இருப்பது என்பது அவ்வளவு லேசான காரியமல்ல. கடலில் வாழும் மீன்களின் உடற்கட்டமைப்பு மற்றும் தகவமைப்பு குறித்த புத்தகத்தை ஆராய்ந்ததால், அதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
இதை எளிதாக கூற வேண்டுமானால், நம் வீடுகளில் சாப்பிடுவதற்காக வாங்கும் மீன்களை உதாரணம் காட்டலாம். மீன்களைச் சமைப்பதற்கு முன் சுத்தம் செய்யும் போது, அதன் குடல் மற்றும் வயிற்று பகுதியை நீக்க வேண்டும். ஏனெனில் அந்த இரு பகுதிகளும் கடும் நாற்றம் மிகுந்தவை.
மீன் வகைகளை விரும்பி சாப்பிடும் ஒரு நபரால் கூட, அவற்றின் குடல் மற்றும் வயிற்று பகுதியை நீக்காமல் சாப்பிட முடியாது. அவை சாப்பிடுபவருக்கு குமட்டலை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது. அப்படியென்றால் யோனா மூன்று நாட்கள், மீனின் வயிற்றில் எப்படி இருந்திருப்பார் என்று யோசித்து கொள்ளுங்கள்.
மீனின் வயிற்றில் இருந்தவாறு யோனா ஜெபித்ததாக, யோனா:2.1 வசனத்தில் காண்கிறோம். கப்பலில் யோனாவின் தவறை தேவன் சுட்டிக்காட்டிய போதே, தன்னை யார் என்று மற்றவர்கள் கேட்ட போதோ ஜெபிக்காத யோனா, மீனின் நாற்றம் கொண்ட வயிற்றில் சிக்கித் தவித்த போது ஜெபிக்கிறார். மேலும் அந்தச் சூழ்நிலையில் இருந்து, தேவனுடைய உதவி இல்லாமல் யோனாவால் வெளியே வரவே முடியாது என்பது உறுதியானது.
தேவன் அளிக்கும் சிறிய அளவிலான தண்டனைகளிலேயே, நம் குறையை உணர்ந்து, அவரிடம் மன்னிப்பு கேட்டால், மற்றவர்களுக்கு முன்னால் நாம் தலைக்குனிவைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படாது. அந்தத் தலைக்குனிவு சந்தர்ப்பத்திலும் நம்மை தாழ்த்த நாம் தயாராக விட்டால், யோனாவைப் போல நாம் விரும்பாத என்பதோடு, எங்கேயும் தப்ப முடியாத ஒரு சந்தர்ப்பத்தில் சிக்கிக் கொண்டு நம்மை தாழ்த்தி ஜெபிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
மீனின் வயிற்றில் இருந்த யோனாவின் பயணம், நாம் பொதுவாக நினைக்கும் வகையில் ஒரு AC பஸ் சென்றது போல இருக்கவில்லை என்பதை, யோனா 2:2-9 வசனங்களை படிக்கும் போது தெரிந்து கொள்ளலாம். மீனின் வயிற்றில் நாற்றம் ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் அது தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கும் என்பதால், இங்கும் அங்குமாக தூக்கி வீசப்பட்டிருப்பார்.
மூன்று நாட்களும் யோனா, சற்றும் இளைபாறுதல் இல்லாமல் கஷ்டப்பட்டிருப்பார். நாம் கூட தேவனுடைய வார்த்தைக்கு விலகி சென்றால், நம் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து தப்ப முடியாத வகையில் சிக்கிக் கொண்டு, அலைச்சலை மட்டுமே சந்திக்க முடியும். எல்லாப் பக்கத்திலும் நெருக்கப்பட்டு, அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே தேவன் அழைக்கும் போதே, அதற்கு ஒப்புக் கொடுத்து செல்வது நல்லது. அதற்கு விரோதமாக நமது சொந்த விருப்பங்களை முன்னிறுத்தி, அவரிடம் இருந்து தப்ப நினைத்தால், அது நடக்காது. மேலும் தேவன் வைத்துள்ள பாதைக்கு நம்மைக் கொண்டுவர, எந்த மாதிரியான அற்புதத்தை செய்யவும், அவர் தயங்கமாட்டார்.
11.
தேவனுடைய சத்தத்திற்கு கீழ்படியாமல், சொந்த விருப்பத்திற்கு தர்ஷீசுக்கு செல்ல முயன்ற யோனா, மீனின் வயிற்றில் சிறை வைக்கப்பட்ட சூழ்நிலையைக் குறித்து கடந்த செய்தியில் சிந்தித்தோம். அங்கிருந்து யோனா தப்புவதற்கு என்ன செய்ய வேண்டியிருந்தது என்பதைக் குறித்து இந்தச் செய்தியில் காண்போம்.
ஒரு பெரிய மீனின் வயிற்றில் சென்று சிக்கிக் கொண்ட யோனா, மூன்று நாட்களாக கடும் நாற்றத்தில் கஷ்டப்பட்டார். அதே நேரத்தில் அவருக்கு சாப்பிட உணவோ, குடிக்க தண்ணீரோ கிடைத்திருக்க வாய்ப்பில்லை. இன்னும் தெளிவாக கூறினால், ஒரு மீனின் வயிற்றிற்குள் அவருக்கு சுவாசிக்க ஆக்ஸிஜன் எப்படி கிடைத்தது என்பது தேவனுக்கு மட்டுமே தெரியும்.
ஏனெனில் எந்தொரு உயிரினத்தின் இரைப்பையிலும் ஆக்ஸிஜன் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஒரு மனிதனுக்கு ஆக்ஸிஜன் இல்லாமல் 3 நிமிடங்களுக்கு மேல் வாழ முடியாது என்று மருத்துவம் கூறுகிறது. ஆனால் நம் தேவனால் ஒரு பெரிய மீனின் வயிற்றில் சிறைப்பிடிக்கப்பட்ட யோனா, அங்கே மூன்று நாட்கள் உயிரோடு இருக்கிறார்.
தேவனிடமிருந்து நாம் விலகிச் செல்ல விரும்பினாலும், அவரது வழிக்கு நம்மை திரும்பக் கொண்டுவர, ஒரு சில தண்டனைகளை நம் வாழ்க்கையில் தேவன் அனுமதிக்கிறார். ஆனால் அந்தத் தண்டனைகளின் மூலம் நம்மை முழுமையாக அழித்துவிட வேண்டும் என்பது தேவனுடைய விருப்பம் அல்ல.
அதே நேரத்தில் மேற்கண்ட சம்பவத்தைப் போல, தேவனால் அளிக்கப்படும் தண்டனைகளைப் பார்க்கும் போது, நம்மால் வாழவே முடியாது என்று தோன்றலாம். ஆனால் அங்கேயும் நாம் அழிந்து போகாமல், தேவனால் காக்கப்படுகிறோம் என்பது கவனிக்கத்தக்கது. இந்தச் சூழ்நிலையில் உடனடியாக நம்மை தாழ்த்தினால், அங்கிருந்து விரைவில் விடுவிக்கப்படுவோம்.
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு காரியம் என்னவென்றால், தவறு செய்த யோனாவை தவிர, யோனாவை உயிரோடு விழுங்கிய மீனும் 3 நாட்கள் உபவாசம் இருந்தது. ஏனெனில் அந்த மீன் 3 நாட்களாக எதுவும் சாப்பிட்டதாக வேதம் குறிப்பிடவில்லை. அப்படியே மீன் ஏதாவது சாப்பிட்டு இருந்தால், அந்த உணவோடு சேர்ந்து யோனாவும் ஜீரணமாகி இருப்பார்.
ஏனெனில் பொதுவாக பெரிய அளவில் அமைந்த மீன்களின் உணவு மண்டலத்தில், வாயில் உணவு அரைக்கப்படுவது மிகவும் குறைவு என்றாலும், இரைப்பையில் மிக அடர்ந்த நிலையில் ஜீரண அமிலங்கள் சுரக்கப்படுகின்றன. இதில் உணவு முழுவதும் கூழ் போல மாற்றப்படுகிறது. ஆனால் மீனின் வயிற்றில் இருந்த யோனாவிற்கு, ஒரு சிறு காயம் கூட ஏற்படவில்லை. அவரது தண்டனையின் நடுவிலும், தேவனுடைய இரக்கம் பாதுகாக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் யோனா தன்னைத் தாழ்த்தி ஜெபித்த போது, அதே அதிகாரத்தின் 10வது வசனத்தில் தேவனுடைய கட்டளைக்கு ஏற்ப யோனாவை கரையில் கக்கிப் போடுகிறது மீன். எனவே நமது குற்றத்தை உணர்ந்து நம்மை தாழ்த்தி ஜெபிக்கும் வரை, தேவனிடம் இருந்து நமக்கு மீட்பு கிடைக்காது. மாறாக, அவரது தண்டனையின் அளவு அதிகரித்துக் கொண்டே தான் செல்லும்.
யோனா செய்த தவறுக்கு, அவருடன் பயணித்த பயணிகள் தவிர, கடலில் வாழ்ந்த ஒரு மீனும் கஷ்டப்பட்டது. இதுபோல நாம் தேவனுடைய வழியை விட்டு விலகி வாழும் போது, நம்மைச் சுற்றி வாழும் பலருக்கும் பெரிய இழப்பு உண்டாகும் என்பதோடு, நாம் உட்படும் சபை, குடும்பம், சமூகம், தெரு என்பதையும் கடந்து, நம்மோடு தொடர்புடைய உயிரினங்கள் கூட பாதிப்பைச் சந்திக்கும்.
எனவே நமது கீழ்படியாமைக்கு தேவன் அளிக்கும் சிறிய அளவிலான தண்டனையை அனுபவிக்கும் போதே, நமது தவறை உணர்ந்து, அவரது சமூகத்தில் நம்மை தாழ்த்தினால், பெரிய அளவிலான விரும்பத்தகாத சந்தர்ப்பங்களில் கஷ்டப்பட்டு, கட்டாய மனந்திரும்புதல் என்ற நிலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.
மேலும் சிறிய தண்டனைகளில் நாம் திருந்தாமல் போனால், நம்மால் மேற்கொண்டு நகரவே முடியாத ஒரு நிலைக்கு கொண்டு சென்று, தேவனால் மட்டுமே நம்மால் காப்பாற்ற முடியும் என்று உணர்த்துவார். அங்கிருந்து நம்மால் தப்பிச் செல்லவே முடியாது.
12.
மீனின் வயிற்றில் அனுபவித்த கஷ்டத்தில் மனதிரும்பிய யோனா, தேவனுடைய திட்டத்தின்படி நினிவேக்கு சென்று பிரசங்கித்தார். அப்போது அந்த நகரில் ஏற்பட்ட மாற்றங்களைக் குறித்து இந்தச் செய்தியில் காண்போம்.
யோனா:3.3 வசனத்தின் மூலம் நினிவே மூன்று நாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாக இருந்தது என்று அறிய முடிகிறது. பண்டைய கால மனிதர்களின் பயண முறையின்படி, நாள் ஒன்றுக்கு 18 முதல் 20 மைல் தூரம் வரை நடப்பார்கள். அதற்கு மேல் ஓய்வெடுத்து கொள்வார்கள். அந்த கணக்கில் பார்த்தால், யோனா சென்ற நினிவே நகரம் ஏறக்குறைய 50 மைல் சுற்றளவு கொண்டதாக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இந்நிலையில் யோனா:3.4 வசனத்தை கவனித்து வாசித்தால், நினிவே நகரத்திற்குள் பிரவேசித்த யோனா, 40 நாட்களுக்குள் அந்த நகரம் கவிழ்க்கப்பட்டு போகும் என்று ஒரே ஒரு நாள் மட்டுமே பிரசங்கித்ததாக காணலாம். அதாவது நினிவே நகரம் முழுவதும் பிரயாணம் செய்து, தேவனுடைய கோபத்தைக் குறித்து, யோனா பிரசங்கிக்கவில்லை.
தேவனுடைய திட்டத்திற்கு விலகியோடி, இவ்வளவு தண்டனைகளை அனுபவித்து, கட்டாய மனந்திரும்புதல் அடைந்து பிறகும், யோனாவிற்கு தேவ சித்தத்தை முழுமையான செய்ய இன்னும் விருப்பம் இல்லை. இந்த வேதப்பாடத்தில் நாம் ஏற்கனவே கண்டது போல, தேவனால் நமக்கு அளிக்கப்பட்டுள்ள பணி, நமது விருப்பத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். ஆனாலும் அதைத் தயக்கத்தோடும் அரைக்குறை மனதோடும் செய்வது ஒரு தவறான நடவடிக்கையாகும்.
இப்படி செய்வது தேவனுடைய கோபத்தில் இருந்து தப்பிக்க, நாம் செய்யும் தந்திரமான நடவடிக்கை என்று கூட கூறலாம். நினிவே மக்கள் மனந்திருந்த வேண்டும் என்பது தேவ சித்தம். இந்நிலையில் தேவ சித்தம் செய்யாமல் இருந்தால், யோனாவிற்கு தண்டனையின் அளவு அதிகரித்து கொண்டே போகிறது. அதற்காக நினிவே மக்களின் மீதான தனது வெறுப்பை மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. இதனால் தேவ சித்தத்தை எப்படியோ, அரைக்குறையாக செய்கிறார் யோனா.
இதேபோல பல விசுவாசிகளும், ஊழியர்களும் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். நான் மட்டும் இரட்சிக்கப்படாமல் இருந்திருந்தால், என்ன செய்திருப்பேன் தெரியுமா?, என்ன செய்வது ஞானஸ்நானம் எடுத்துவிட்டேனே!, இன்று ஞாயிற்றுக்கிழமையா, தேவாலயத்திற்கு போக வேண்டுமே! என்றெல்லாம் கூறுகிறார்கள்.
தேவனுடைய பணிகளை நாம் விருப்பம் இல்லாமல் செய்வதால், எந்தப் பயனும் ஏற்பட போவதில்லை என்பதோடு, அதை அரைக்குறை மனதோடு செய்துவிட்டு சிலர் பெருமையும் பாராட்டுகிறார்கள். தேவனால் அளிக்கப்பட்ட ஊழியங்களைத் தாழ்மையோடும் முழுமனதோடும் செய்ய வேண்டும்.
அதே நேரத்தில் நினிவே நகரத்தில், யோனாவின் எச்சரிப்பு சத்தம் பெரிய அளவிலான மனமாற்றத்தை ஏற்படுத்துவதாக, யோனா:3.5-8 வசனங்கள் கூறுகிறது. ராஜாவின் உத்தரவு வரும் முன்னரே, பாவத்தில் இருந்த நகர மக்கள் தேவனுக்கு முன்பாக தங்களை தாழ்த்த ஆரம்பித்துவிட்டார்கள். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு காரியம் என்னவென்றால், யோனாவின் பிரசங்கத்தில், உங்களை தாழ்த்தினால் தேவன் மனமிரங்குவார் என்ற வார்த்தையே வரவில்லை.
ஆனாலும் தேவனுக்கு முன்பாக தங்களை தாழ்த்தி, அவரது இரக்கத்தைப் பெறும் ஒரு முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இங்கே முயற்சி என்று நான் குறிப்பிட காரணம், தங்களைத் தாழ்த்தினால் தேவன் மனமிரங்குவார் என்பதில் அவர்களுக்கு எந்த உத்தரவாதமும் இருக்கவில்லை என்பது ராஜாவின் பேச்சில் தெரிகிறது (யோனா:3.9).
இதேபோல திருந்தவேமாட்டான் என்று நாம் நினைக்கும் பலரையும், தேவனுடைய எச்சரிப்பின் வசனம் திருத்த வல்லது. எனவே நம்மிடம் அளிக்கப்பட்டுள்ள சுவிசேஷத்தை, மற்றவர்களுக்கு கூற நாம் தயங்கக் கூடாது. 40 நாட்களில் நினிவே நகரை அழிக்க நினைத்த தேவன், அவர்களின் மனந்திரும்புதலை கண்டு, அந்த முடிவை கைவிட்டார். இதுபோல மனந்திரும்பும் ஒவ்வொரு பாவியையும் எண்ணி, தேவன் தேசத்திற்கு நியமித்துள்ள நியாயதீர்ப்புத் திட்டத்தை கைவிடுவார்.
13.
யோனா தீர்க்கத்தரிசியின் ஒரு நாள் பிரசங்கத்தில், ஒரு நகரமே அழிவில் இருந்து இரட்சிக்கப்பட்டது என்று கடந்த பகுதியில் கண்டோம். இந்நிலையில் அந்த நகரின் இரட்சிப்பு, யோனாவிற்கு ஏற்படுத்திய மாற்றத்தைக் குறித்து இந்த வேதபாடத்தில் காண்போம்.
நினிவே மக்களின் மனந்திரும்புதல், தேவனின் கோபத்தைத் தளர்த்தியது. ஆனால் தேவன் காட்டிய இந்த மனஉருக்கத்தையும் கிருபையையும் கண்டு, யோனாவிற்கு கடும்கோபம் வருகிறது (யோனா:4.1-3). ஏனெனில் தேவ சித்தம் நிறைவேறியது என்பதைவிட, தனது தீர்க்கத்தரிசனம் நிறைவேறாமல் போகும் என்பது தான் யோனாவிற்கு கவலை உண்டாக்கியது.
அதை அவமானமாக கூட யோனா நினைக்கிறார் என்பதை தேவனிடம் அவர் கூறும் பகுதியில் இருந்து தெரிகிறது. மேலும் இதன்மூலம் தனது கீழ்படியாமையை நியாயப்படுத்தவும் முயற்சி செய்கிறார்.
இந்த மனநிலையோடு செயல்படும் பல கிறிஸ்தவ மக்கள், இன்று தங்களுக்குள் சண்டைகளையும் விரோதங்களையும் வளர்த்து கொள்ளுகிறார்கள். எங்கள் சபை, எங்கள் ஊழியம் என்று பிரித்து பார்க்கிறார்கள். எங்கள் சபையில் இரட்சிக்கப்பட்டவர், பிரிந்து சென்று புதிய ஊழியம் ஆரம்பித்துவிட்டார், இது எவ்வளவு பெரிய தவறு என்று பல ஊழியர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.
இன்னும் சிலர், நான் மட்டும் இவருக்கு சுவிசேஷம் சொல்லாமல் விட்டிருந்தால், இன்று இவ்வளவு பெரிய ஊழியராக வளர்ந்திருக்க முடியுமா? என்று பெருமையாக பேசுகிறவர்களும் இருக்கிறார்கள். இதுபோன்ற தவறான எண்ணங்கள் கிறிஸ்தவர்களில் இருந்து விலக வேண்டும்.
தேவனிடமிருந்து ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான அழைப்பும், ஊழியமும் அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக அளிக்கப்பட்டுள்ள தாலந்துகளும் திறமைகளும் வேறுபடுகிறது. எனவே நம்மால் இரட்சிக்கப்பட்டவர், நம்மை விட பெரிய ஊழியங்களைச் செய்தால், அதைக் கண்டு சந்தோஷப்பட வேண்டுமே தவிர, அதை தவறாக விமர்சிப்பதோ, அதற்கு எதிராக ஜெபிப்பதோ ஒரு தவறான நடவடிக்கையாகும். நாம் செய்யும் ஒவ்வொரு ஊழியத்திற்கும், பரலோகத்தில் நிறைவான பிரதிபலன் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மற்றவர்கள் அழிந்தாலும் பரவாயில்லை, தனது தீர்க்கத்தரிசனம் எப்படியாவது நிறைவேற வேண்டும் என்ற மனநிலையோடு யோனா ஜெபிக்கிறார். ஆனால் அந்த ஜெபம், ஒரு நல்ல மனநிலையோடு கூடியதல்ல. அது எரிச்சலில் வந்தது என்பதை யோனா:4.4 வசனத்தில் தேவன் கேட்கும் கேள்வியில் இருந்து அறியலாம்.
ஆனால் அதற்கு பதில் அளிக்காமல், தனது வேண்டுதல் நிறைவேற யோனா பிடிவாதம் பிடிக்கிறார். யோனாவின் இந்த மனப்போக்கை மாற்ற தேவன் ஒரு ஆமணக்குச் செடியை முளைக்கக் கட்டளையிடுகிறார் (யோனா:4.6). இதேபோல சில காரியங்களுக்காக நாம் பிடிவாதம் கொண்டு ஜெபிக்கும் போது, தேவன் சில நன்மைகளை நமக்கு அளித்து, சமாதானம் செய்ய விரும்புகிறார். இதில் இருந்து தேவனுடைய நடத்துதலை அறிந்து, நாம் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தனக்கு நிழல் கொடுத்த ஆமணக்கு செடியைக் கண்டு யோனாவிற்கு எந்த மாற்றமும் நிகழாத நிலையில், அதைத் தேவன் காய்ந்து போகும்படி செய்கிறார். தேவ சித்தமில்லாத காரியங்களுக்காக பிடிவாதம் கொண்டு ஜெபிக்கக் கூடாது. அந்த ஜெபம் ஆசீர்வாதங்களுக்கு பதிலாக, நமக்கு அளிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்களையும் இழப்பதற்கு எதுவாக அமையலாம்.
வெயிலின் வெப்பத்தைத் தாங்க முடியாத யோனா, தேவனிடம் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக, சாக வேண்டும் என்று மீண்டும் ஜெபிக்கிறார். இதனால் அந்தக் காய்ந்தப் போன ஆமணக்கு செடியை முன்னுறுத்தி, தேவன் யோனாவிற்கு பாடம் புகட்டுகிறார்.
எந்தத் தகுதியும் இல்லாத நமக்கு, விலையேறப்பட்ட இரட்சிப்பை அளித்து, மேன்மையான ஊழியங்களில் பங்கு பெற செய்த தேவனுடைய இரக்கங்களை என்றும் நம் நினைவில் கொள்ள வேண்டும். அந்தக் காலத்தில் மற்ற எத்தனையோ தீர்க்கத்தரிசிகள் இருந்த போதும், தேவன் யோனாவை இந்தப் பணிக்காக தேர்ந்தெடுத்தார். ஆனால் அதை மறந்த யோனா, தனது விருப்பத்தைச் செய்ய விரும்புகிறார்.
இதனால் தனக்கு எத்தனையோ பிரச்சனைகள் வந்த போதும், யோனாவிற்கு சுயசித்தத்தை விட்டு கொடுக்க முடியவில்லை. நம்மிடம் ஒப்படைக்கும் ஊழியம் ஒரு சாதாரண ஊழியமாக நமக்கு தோன்றலாம். ஆனால் அது பலருக்கும் கிடைக்காத ஒன்று என்பதை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே அதை உண்மையும் உத்தமமுமாக செய்ய வேண்டும்.
இப்படி யோனா புத்தகத்தின் துவக்கம் முதல் கீழ்படியாமை காட்டும் யோனா, கடைசி வாக்கியம் வரை, சரியான முறையில் மனந்திரும்பவில்லை. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, தேவனுடைய சித்தம் அல்லது அவருடைய மனதில் இருக்கும் காரியத்தை ஒரு தீர்க்கத்தரிசி என்ற நிலையில், அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இந்த நிலை நமக்கு என்றும் ஏற்படக்கூடாது. தேவனுடைய சித்தத்தில் இருந்து நாம் விலகும் போதே, அதை அவர் உணர்த்துவார். அப்போதே அதற்கு கீழ்படிந்து மனந்திரும்பி, தேவனுடைய பணிக்கு முழுமையாக ஒப்புக் கொடுக்க வேண்டும். அப்போது மகிமையான காரியங்களை நாம் காண முடியும்.
யோனாவின் கீழ்படியாமை மற்றும் பிடிவாதம் மூலம், அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. மேலும் அவரது விருப்பம் கடைசி வரை நிறைவேறவும் இல்லை. தேவ சித்தம் மட்டுமே நிறைவேறியது. ஆனால் அதன்மூலம் யோனாவிற்கு கிடைக்கவிருந்த மகிமையான ஆசீர்வாதங்களை அவர் இழந்து, ஒரு குட்டி தீர்க்கத்தரிசியாக, வேதத்தில் காட்டப்படுகிறார்.
எனவே நமது விருப்பத்தைச் செய்ய எவ்வளவு முயற்சி செய்தாலும், அது சில நேரங்களில் பெரிய தோல்வியையும், ஏமாற்றத்தையும் மட்டுமே தரும் என்பது யோனாவின் வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பாடமாகும்.
மேலும் பரிசுத்த வேதாகத்தில் ஒரு கேள்விக் குறியோடு முடியும் புத்தகம் என்ற சிறப்பையும் யோனாவின் புத்தகம் பெறுகிறது. அதாவது தேவனுடைய மனதை புரிந்து கொள்ளாத ஒவ்வொருவரையும் நோக்கி, தேவன் கேள்விக் குறியோடு மட்டுமே நிற்கிறார் என்பதை நமக்கு உணர்த்துகிறது. இந்த வேதப்பாடத்தையும் ஒரு கேள்வியோடு முடிப்போம், தீர்க்கத்தரிசி யோனாவைப் போல நமக்குள் கீழ்படியாமையும் பிடிவாதமும் இருக்கிறதா?
Arise and Shine, Powered by Joomla!