தேவன் நம்மை சோதிப்பது ஏன்?
கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார், துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது” சங்கீதம்:11.5
எல்லா தேவ பிள்ளைகளின் இருதயத்திலும் இருக்கும் மிகப் பெரிய கேள்வி என்னவென்றால், எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனைகள் வருகின்றன. கர்த்தருக்கு உண்மையாய் வாழாத எவ்வளவோ பேர் நன்றாக இருக்கிறார்களே? என்பதாகும். மேலும் இந்தக் கஷ்டங்களுக்கு முக்கிய காரணம், பிசாசு தான் என்று பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். ஆனால் மேற்கண்ட வசனத்தின்படி, தேவனும் நம்மை சோதிக்கிறார் என்று அறிகிறோம்.
பாவத்தில் இருந்து மீட்டு நமக்கு பரிசுத்த வாழ்க்கையைத் தந்த பிறகும், இந்தச் சோதனைகள் எதற்காக நமக்கு அளிக்கப்படுகின்றன? என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. நீதிமானைத் தேவன் எதற்காக சோதிக்கிறார் என்பதையும், அதன் பின்னணிகளைக் குறித்தும் இந்த வேதப் பாடத்தில் ஆராய்ந்து அறிவோம்.
1. அன்பின் அளவு:
நம் மீதான மிகுந்த அன்பினால், பாவத்தில் இருந்து நம்மை தேவன் இரட்சித்தார். அவரைத் தேடி நாம் போகவில்லை, அவர் நம்மைத் தேடி வந்தார். யாருக்கும் வேண்டாதவர்களாக இருந்த நம்மை, அவருக்கு வேண்டும் என்றார். இதில் இருந்து தேவனுடைய அளவில்லாத அன்பை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் அவரது அன்பிற்கு நிகராக நாம் என்ன செய்கிறோம்? என்ற கேள்வி எழுப்பப்பட்டால், அதற்கான பதிலை கூற முடியாமல் திணறுகிறோம். ஏனெனில் அவர் காட்டிய அன்பிற்கு முன்னால், நாம் செய்யும் ஊழியங்கள் எதுவுமே நிகராக அமையாது.
மேலும் படிக்க: எல்லாரும் இயேசுவின் 2ம் வருகையில் போக முடியுமா?
இந்நிலையில் நாம் உண்மையாக அவரை அன்புக் கூறுகிறோமா? என்பதை அறிய தேவன் சில சோதனைகளை நம் வாழ்க்கையில் அனுமதிக்கிறார். அதைக் குறித்து உபாகமம்:13.1-3 வசனங்களில் காணலாம். அதன்படி, நம்மை தேவனிடம் இருந்து பிரிக்கக் கூடிய வகையில், திசைத் திருப்பும் பல சம்பவங்கள் நம் வாழ்க்கையில் நடைபெறலாம்.
எடுத்துக்காட்டாக, இயேசு கிறிஸ்துவை மட்டுமே நாம் உண்மையான தேவன் என்று நம்புகிறோம், அவரையே ஆராதிக்கிறோம். ஆனால் சில நேரங்களில் நம்மோடு வேலைச் செய்யும் மற்ற மத நம்பிக்கைகளைக் கொண்டவர்கள், அவர்கள் சேவிக்கும் தெய்வங்கள் மூலம் அல்லது கோயில்களில் அற்புதம் நடைபெறுவதாக கூறுவதைக் கேட்கிறோம். நாம் கடந்து செல்லும் சில சூழ்நிலைகளில், அவற்றைக் கேட்பதைத் தவிர்க்க முடிவதில்லை.
இது போன்ற காரியங்களைத் தொடர்ந்து நாம் கேட்கும் போது, நமக்குள் சில கேள்விகள் எழுகின்றன. தெய்வங்களாக பாவிக்கப்படும் கல்லும், மண்ணும் எப்படி அற்புதம் செய்ய முடியும்? அவை தேவர்கள் அல்ல என வேதம் கூறும் போது, அந்தக் கோயிலில் அற்புதம் நிகழ்த்தியது யார்? போன்ற கேள்விகள் உண்டாகின்றன.
மேலும் படிக்க: நம்மில் பலரும் வழக்கமாக, தவறாக கூறும் வேத வசனங்கள்!
இன்னொருபுறம் நம் தேவன் மீதான விசுவாசத்திலும் சற்று தளர்வு உண்டாகிறது. இது தேவன் அளிக்கும் ஒரு சோதனை என்று நாம் உபாகமம்: 13.3 வசனத்தில் வாசிக்கிறோம். இது போன்ற சோதனைகளில், நம் தேவன் மீதான விசுவாசத்தில் தளர்ந்து போகக் கூடாது. யார் என்ன கூறினாலும், யோபு கூறுவது போல, நான் ஆராதிக்கும் தேவன் இன்னார் என்று அறிவேன் என்ற உறுதி நமக்குள் இருக்க வேண்டும்.
ஏனெனில் தேவன் மீதான நமது அன்பு அதிகரிக்கும் போது, இது போன்ற செய்திகள் நம்மை கலங்க செய்யாது. எனவே தேவனோடு உள்ள உறவை தினமும் புதுப்பித்து கொள்ள வேண்டும்.
இதேபோல, நம்மை கிறிஸ்துவிற்குள் வழிநடத்திய அல்லது நாம் மேன்மையாக நினைக்கும் சில தேவ ஊழியர்களை மிகவும் நேசிக்கிறோம். இந்த அன்பு சில நேரங்களில், தேவன் மீதான அன்பை காட்டிலும் அதிகமாகி விடுகிறது. அந்தக் குறிப்பிட்ட நபர் கூறுவது எல்லாமே சரி என்று நம்புகிறோம்.
இது கூட தேவன் மீதான அன்பை நிரூபிக்கும் ஒரு சோதனையாக, தேவன் நம் வாழ்க்கையில் அனுமதிக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் அதிகமாக நம்பும் நபர், தேவனை விட்டு விலகிப் போனால், அவர்களை நம்பும் நாமும் பின்மாற்றத்தைச் சந்திக்க வாய்ப்புள்ளது.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக, சமீபத்தில் படித்தது, கேட்டது, சிந்தித்தது பகுதியில் நாங்கள் வெளியிட்ட தேவ ஊழியங்களைச் செய்கிறீர்களா? – இவற்றை மறக்காதீர்கள்! என்ற செய்தியைக் கூறலாம். எனவே ஆவிக்குரிய வாழ்க்கையில் நம்மை நடத்திய அல்லது நடத்தும் நபர்களைப் பின்பற்றலாம். ஆனால் அவர்களின் ஆலோசனைகள் வேதத்திற்கு புறம்பாக அமைந்தால், அவற்றை பின்பற்றக் கூடாது.
நம் வாழ்க்கையில் தேவனை எந்த அளவிற்கு நேசிக்கிறோம் என்பதை அறிவதற்கு இது தேவனால் அனுமதிக்கப்படும் ஒரு சோதனை ஆகும். எனவே இந்தச் சோதனையில் இடறி பின்வாங்கி போகாமல், தேவனை மட்டுமே அதிகமாக நேசிக்கிறோம் என்பதை நிரூபித்து, ஜெயமுள்ள வாழ்க்கையைத் தொடருவோம்.
2. பயத்தின் அளவு:
நீதிமானை தேவன் சோதிப்பது ஏன்? என்ற கேள்விக்கு, அவர் மீதான அன்பின் அளவை அறியவே என்று கடந்த பகுதியில் பார்த்தோம். அதே நேரத்தில் அந்த அன்பு அதிகரிக்கும் போது, அன்புக்குரியவர் மீதான மரியாதையும் அதிகரிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
ஒருவர் மீதான அன்பிற்கு ஏற்ப, அவர் மீதான பயத்தோடு கூடிய மரியாதை நமக்குள் அதிகரிக்கிறது. அதேபோல தேவனை எந்த அளவிற்கு நாம் நேசிக்கிறோமோ, அதற்கு ஏற்ப அவருக்கு பயத்தோடு கூடிய மரியாதையைச் செலுத்து வேண்டும். இந்நிலையில் ஒரு நீதிமானுக்குள் காணப்பட வேண்டிய, தேவ பயத்தின் அளவை தேவன் அவ்வப்போது சோதித்து பார்க்கிறார்.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக, விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமை எடுத்து கொள்ளலாம். அவரது வாழ்க்கையில் முதிர்வயதில் கிடைத்த ஒரு மகனை பலியாக அளிக்குமாறு தேவன் கேட்கிறார். அதைப் பற்றி அதிகம் யோசிக்காத ஆபிரகாம், தான் 25 ஆண்டுகளாக காத்திருந்த பெற்ற ஈசாக்கை, தேவனுக்கு கொடுக்க முன்வருகிறார்.
ஆதியாகமம்:22.12 வசனத்தில், ஈசாக்கை வெட்டுவதற்கு கத்தியை ஓங்கும் வரை, தேவன் எதுவும் பேசவில்லை. இனி விட்டால், ஆபிரகாம் அதையும் செய்து விடுவார் என்ற நிலை வந்தபோது, ஆபிரகாமை தடுத்து நிறுத்தும் தேவன், “நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்பதை இப்போது அறிந்திருக்கிறேன்” என்று கூறுவதைக் காணலாம்.
நம் வாழ்க்கையில் இதுபோன்ற சோதனைகளைத் தேவன் அளித்து, அவர் மீது நமக்கு இருக்கும் அன்பின் அளவை தேவன் பரிசோதிக்கிறார். இதன் ஒரு பகுதியாக, பல காலமாக நாம் காத்திருந்து பெற்ற பல ஆசீர்வாதங்களும் நம் கைவிட்டு போனது போன்ற சூழ்நிலை உண்டாகலாம். இந்தச் சந்தர்ப்பங்களில், தேவனை நோக்கி எதிர்த்து பேசுவதோ அல்லது மறுதலிப்பதோ கூடாது. மாறாக, தேவன் கூறும் காரியங்களை அப்படியே கீழ்படிந்தால் போதும்.
தேவன் கேட்ட காரியத்தில் சில திருத்தங்களைச் செய்ய ஆபிரகாம் முயற்சி செய்யவில்லை. எடுத்துக்காட்டாக, மகனை தருமாறு தானே தேவன் கேட்டார்? ஆகார் மூலமாக பெற்ற இஸ்மவேலை அளிக்கிறேன் என்று ஆபிரகாம் கூறவில்லை. அதாவது தேவனுக்கு செய்யும் காரியத்தை முழு மனதோடு செய்தார்.
அதன் விளைவாக, உன் ஏக மகன் என்றும் பாராமல் அவனை எனக்காக ஒப்புக் கொடுத்தாய் என்று பாராட்டும் கர்த்தர், ஆபிரகாமை மட்டுமின்றி அவர் தலைமுறை முழுவதையும் ஆசீர்வதிக்கிறார். இது போன்ற ஒரு பூரணமான அன்பில் உருவாகும் தேவ பயத்தைத் தான் தேவன் நம்மிடமும் எதிர்பார்க்கிறார்.
தேவன் மீதான அன்பில் பூர்ணமாக இருந்த ஆபிரகாமிற்கு, அவனைச் சுற்றிலும் இருந்தவர்கள் பயப்பட்டார்கள். தேவன் மீதான அன்பு நமக்குள் இல்லாவிட்டால், அவருக்கு பயப்படுகிற பயமும், அதனால் வரும் அவர் மீதான மரியாதையும் இருக்காது. தேவ அன்பு இல்லாத இடத்தில், மனிதரின் அன்பும் உலகப் பொருட்களின் மீதான இச்சையும் நுழைந்து விடுகிறது. இதனால் உலக காரியங்களை எண்ணி வருத்தமும் சஞ்சலமும் நம் மனதில் குடியேறுகிறது. அதை லோத்தின் வாழ்க்கையில் காணலாம்.
எனவே தேவன் மீதான அன்பை அல்லது பயத்தை, நாம் நிரூபிக்கும் ஒரு வாய்ப்பாக சில சோதனைகளை நம் வாழ்க்கையில் அனுமதிக்கிறார். அந்த வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக் கொண்ட ஆபிரகாமின் தலைமுறையே ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டது. அதேபோல நாமும் இந்த சோதனைகளில் சோர்ந்து போகாமல், தைரியமாக எதிர்கொண்டு ஜெயமெடுப்போம். தேவன் மீது முழு மனதோடு அன்பு கூர்ந்து, தேவ பயத்தில் வாழ்ந்து நமக்கு இருக்கும் ஜெயமான ஆசீர்வாதங்களைப் பெற்றுகொள்வோம்.
3. நம் இருதயத்தை அறிய:
தேவன் நம் வாழ்க்கையில் சோதனைகளை அனுமதிப்பதன் மூலம் அவர் மீதான அன்பையும் பக்தியோடு கூடிய பயத்தையும் நாம் நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்று கடந்த வார செய்திகளில் பார்த்தோம்.
இந்நிலையில் நம்மை நாமே முழுமையாக அறிந்து கொள்ளும் வகையிலும், தேவன் சில சோதனைகளை நம் வாழ்க்கையில் அனுமதிக்கிறார். இதை குறித்து உபாகமம்:8.3 வசனத்தில் காண்கிறோம்.
எகிப்தில் இருந்து பல அற்புதங்களைச் செய்து இஸ்ரவேல் மக்களை விடுவித்த தேவன், பாலைவன வழியாக வாக்குத்தத்தம் செய்யப்பட்ட கானான் தேசத்திற்கு நடத்தினார். அந்த வழியில் பல சோதனைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதேபோல நம் மனதில் உள்ள காரியங்களை நாம் தெளிவாக அறிந்து கொள்ள தேவன் சில சோதனைகளை நம் வாழ்க்கையில் அனுமதிக்கிறார்.
அந்தச் சோதனைகளின் போது, தங்களை அழிக்கவே தேவன் வனாந்தரத்திற்கு கூட்டிக் கொண்டு வந்தார் என்று இஸ்ரவேல் மக்கள் பல இடங்களில் முறுமுறுத்தனர். ஆனால் அப்படி இஸ்ரவேல் மக்களை அழிப்பதற்கு தேவன் விரும்பி இருந்தால், அவர்களின் மீது பகலில் படர்ந்து காணப்பட்ட மேகஸ்தம்பம் மற்றும் இரவில் இருந்த அக்னி ஸ்தம்பத்தை நீக்கியிருந்தாலே சாத்தியமாகி இருக்கும்.
இதேபோல நம் வாழ்க்கையில் தேவனால் அனுமதிக்கப்படும் சோதனையில், நாம் புலம்பக் கூடாது. நம்மை அழிப்பதற்கோ, தீங்கு விளைவிக்கவோ தேவன் சோதனைகளை அனுமதிப்பதில்லை. மாறாக, அந்தச் சோதனைகளின் போது, நம் ஆழ்மனதில் இருக்கும் காரியங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.
வெளியோட்டமாக எந்தளவிற்கு வேண்டுமானாலும் விசுவாசம் கொண்டவர்களாக காட்டிக் கொள்ள முடியும். ஆனால் குறிப்பிட்ட சூழ்நிலையில் வழியாக நாம் கடந்து செல்லும் தான், அந்த விசுவாசம் செயல்பாட்டில் வரும். எடுத்துக்காட்டாக, எனது எல்லா தேவைகளுக்கும் தேவன் போதுமானவராக இருக்கிறார் என்று வாயில் கூறுவது எளிது. ஆனால் நமக்கு ரூ.1 லட்சம் அவசரமாக தேவைப்படும் சூழ்நிலையில் தான், தேவனுடைய கிரியைக்காக பொறுமையோடு காத்திருக்கும் மனநிலை நம்மிடம் காணப்படுகிறதா? என்பதை அறிய முடியும்.
இஸ்ரவேல் மக்களுக்கு எந்தச் சோதனைகளையும் அளிக்காமல், கானான் தேசத்திற்கு தேவன் அழைத்து சென்றிருக்க முடியும். ஆனால் எந்தக் காரியத்தையும் உழைப்பின்றி எளிதாக பெற்றுக் கொண்டால், அதன் மதிப்பு தெரியாது, இது மனித இயல்பு. எனவே அந்த மனநிலையோடு இருந்த இஸ்ரவேல் மக்களுக்கு, தங்களையே யார் என்று காட்ட சோதனைகளை தேவன் அனுமதித்தார்.
ஆனால் அந்தச் சோதனைகளில் தேவ கிரியைக்காக காத்திருக்க தவறிய இஸ்ரவேல் மக்கள், மோசே மற்றும் ஆரோனிடம் புலம்பினார்கள். அவர்களுக்கு தங்களின் மனதில் இருந்த அவிசுவாசத்தையும் தேவன் வைத்துள்ள மகிமையான எதிர்காலத்தையும் குறித்த தெளிவான வெளிப்படுத்தல் இருக்கவில்லை. ஏனெனில் அவர்களுக்கு எகிப்தில் இருந்த கஷ்டமான வாழ்க்கையில் இருந்து ஒரு விடுதலை வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே காணப்பட்டது.
இதனால் சோதனைகளை எதிர்கொள்ள தயங்கியதோடு, முறுமுறுத்தனர். 40 நாட்கள் மட்டுமே பயணிக்க வேண்டிய இஸ்ரவேல் மக்கள், 40 ஆண்டுகள் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள். மேலும் எகிப்தில் இருந்து வெளியேறிய தலைமுறையில் யோசுவா மற்றும் காலேப் தவிர, மற்ற யாரும் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட கானான் தேசத்திற்குள் நுழைய முடியவில்லை.
கானான் தேசத்தை வேவுப் பார்க்க சென்ற யோசுவாவும் காலேப்பும், அதை சரியாக செய்தார்கள். உடனிருந்தவர்கள் எல்லாரும் மக்களை மனதளர்த்தும் காரியங்களைக் கூறிய போதும், விசுவாசத்தில் இவ்விருவரும் தளர்ந்து போகவில்லை. இதேபோல நம் வாழ்க்கையில் வரும் சோதனை நேரங்களில், நமது ஆவிக்குரிய நிலையை உணர்ந்து, அதில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். அப்போது நமக்காக வைக்கப்பட்டுள்ள பரலோகமாகிய நித்திய வீட்டிற்கு சென்ற சேர, ஏற்ற இருதயத்தைக் கொண்டவர்களாக நாம் மாறுவோம்.
4. தேவ திட்டத்திற்கு நேராக வழிநடத்த:
நம் வாழ்க்கையில் சோதனைகளைத் தேவன் அனுமதிப்பதன் பின்னணியில், அவர் மீதான அன்பு மற்றும் பயத்தின் அளவை, நாம் நிரூபிக்க வேண்டியுள்ளது என்றும், நம் மனதில் உள்ளவற்றை நமக்கு வெளிப்படுத்த தேவன் விரும்புகிறார் என்றும் கடந்த வார பகுதிகளில் கண்டோம்.
இந்நிலையில் தேவத் திட்டத்திற்கு நேராக நம்மை நடத்தவும், சில சோதனைகளை நம் வாழ்க்கையில் தேவன் அனுமதிக்கிறார். ஏனெனில் உலகில் பாவத்தில் உழன்று திரியும் ஒவ்வொரு மனிதனையும் இரட்சித்து, பரிசுத்தவானாக மாற்றுவதன் பின்னணியில் தேவனுக்கு ஒரு மேலான நோக்கம் காணப்படுகிறது.
இதை இன்னும் தெளிவாக கூறினால், தாவீது கூறுவது போல, தாயின் கருவில் உருவாகும் முன்னே நம்மை குறித்த திட்டங்களை தேவன் வகுத்து விடுகிறார். அதற்கு நேராக நம்மை அனுதினமும் வழிநடத்தி செல்கிறார். இதை குறித்து சிலருக்கு வெளிப்படுத்தவும் செய்கிறார்.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக, யோசேப்பை எடுத்துக் கொள்ளலாம். யோசேப்பிற்கு சிறு வயதில் காட்டப்பட்ட இரு கனவுகளின் நிறைவேறுதலுக்காக, பல கடினமான பாதைகளில் கடந்து செல்ல வேண்டியிருந்தது. வீட்டில் செல்லப் பிள்ளையாக யோசேப்பு வளர்ந்திருந்தால், எகிப்திற்கு செல்ல யாக்கோபு விட்டிருக்கமாட்டார். மேலும் கடைசி வரை, தனது அண்ணன்களைக் குற்றஞ்சாட்டிக் கொண்டே யோசேப்பு காலத்தைக் கழித்திருப்பார். யாக்கோபிற்கும் யோசேப்பை தவிர, மற்ற பிள்ளைகள் ஒரு பொருட்டாக தெரிந்திருக்கமாட்டார்கள்.
இதேபோல நம்மைக் குறித்த தேவனின் திட்டங்களுக்கு நேராக நாம் செல்ல வேண்டுமானால், நம்மைச் சுற்றிலும் உள்ள சில பிரிக்க முடியாத உறவுகளாக உள்ள சிலரை, தேவன் நம்மை விட்டு அகற்றுகிறார். இந்தப் பிரிவுகள் நம்மால் தாங்க முடிவதில்லை.
செய்யாத குற்றத்திற்கு தனிமையில் சிறையில் வாடிப் போதும், தனது சொப்பனத்தின் நிறைவேறுதலை நோக்கி செல்கிறோம் என்ற எண்ணம் யோசேப்பிற்கு அறவே இருந்திருக்காது. ஆனால் உண்மையுள்ள தேவனை மறக்காமல் வாழ்ந்த யோசேப்பை, தேவன் கடைசி வரை கைவிடவில்லை.
தனது வீட்டில் இருந்த போது, சொப்பனம் கண்டு சந்தோஷப்பட்ட யோசேப்பிற்கு, பல ஆண்டுகள் கடினமான பாதையில் சென்று அதன் நிறைவேறுதலை அடைந்த போது, அதை கூறி சந்தோஷப்பட யாரும் இருக்கவில்லை. ஆனால் குறித்த காலம் வந்த போது, யாக்கோபின் முழு குடும்பமும் சந்தோஷப்பட்டது.
இதுபோல நம் வாழ்க்கையில் தேவனால் நிர்ணயிக்கப்பட்ட சில ஆசீர்வாதங்களைப் பெற, நாம் எதிர்பாராத பல கடினமான பாதைகளில் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். அப்போது மனமுடிந்து சோர்ந்து போகக் கூடாது. மாறாக, நம்மை குறித்த தேவனுடைய திட்டத்திற்கு நேராக வழிநடத்தப்படுகிறோம் என்று விசுவாசிக்க வேண்டும்.
சோதனை பாதையில் சென்ற போது, அதிலிருந்து தப்ப சிறைக்கு வந்த பார்வோனின் வேலைக்காரனிடம் யோசேப்பு உதவி கேட்கிறார். ஆனால் அதிலும் தோல்வி மட்டுமே கிடைத்தது. அதுபோல தேவனால் வழிநடத்தப்படும் சோதனை பாதைகளில், நாம் மனிதரின் உதவியை நாடினால், வெற்றிப் பெறவோ அல்லது அதிலிருந்து தப்பவோ முடியாது.
யாக்கோபின் வீட்டில் வெறும் கனவை மட்டுமே கண்டு மகிழ்ந்த யோசேப்பு, சிறைச்சாலை என்ற சோதனையின் வழியாக சென்ற போது, மற்றவர்களின் கனவிற்கு விளக்கம் அளிக்கும் புதிய ஒரு வரத்தையும் பெறுகிறார். மேலும் சோதனையின் வழியாக சென்ற போதும், யோசேப்பு செய்ததெல்லாம் ஜெயமாக இருந்ததாக வேதம் குறிப்பிடுகிறது.
எனவே தேவனால் அளிக்கப்படும் சோதனைகளின் வழியாக நாம் கடந்து செல்லும் போது, நமது ஆவிக்குரிய வரங்களின் அளவு அதிகரிக்கிறது. அதாவது நாம் தேவனால் உருவாக்கப்படுகிறோம் என்று கூறலாம். மேலும் என்னத்தான் சோதனையான பாதையில் சென்றாலும், தேவன் நம்மோடு இருப்பதால், சிறைச்சாலை போன்ற சூழ்நிலையிலும் நாம் செய்யும் காரியங்கள் ஜெயமாக தான் இருக்கும்.
5. தேவனின் எதிர்பார்ப்பு:
நம்மை தேவன் எதற்காக சோதிக்கிறார் என்பதற்கான காரணங்களைக் குறித்து கடந்த சில வாரங்களாக சிந்தித்து வந்தோம். இந்நிலையில் அந்தச் சோதனைகளில் நாம் வெற்றிப் பெற வேண்டியது எந்த அளவிற்கு இன்றியமையாதது என்பதை குறித்து இந்த வாரம் சிந்திப்போம்.
இந்த வேதப்பாடத்தின் முக்கிய வசனமான சங்கீதம்:11.5 அடிப்படையில் சிந்திக்கும் போது, கர்த்தர் நீதிமானைச் சோதிப்பதோடு, அதில் அவன் வெற்றிப் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்று அறிய முடிகிறது.
நாம் ஏற்கனவே பார்த்தது போல ஆபிரகாமின் வாழ்க்கையில் அளிக்கப்பட்ட சோதனைகளில், அவர் வெற்றிப் பெற்றார். அதன் பலனாக, அவரது சந்ததி முழுவதும் ஆசீர்வதிக்கப்பட்டதாக மாறியது. அதற்கு தேவனே சாட்சி அளிப்பதை வேதம் குறிப்பிடுகிறது.
அதேபோல யோசேப்பின் வாழ்க்கையில் வந்த சோதனைகளில், வெற்றிப் பெற்று தனது கனவுகளின் நிறைவேறுதலைப் பெற்றார். மேலும் தந்தையின் சிறப்பான ஆசீர்வாதங்களைப் பெற முடிந்தது. அந்தச் சோதனைகளின் வழியாக செல்லாமல், ஆஸ்தி மிகுந்த யாக்கோபின் வீட்டில் வளர்ந்திருந்தால் கூட, யோசேப்பிற்கு அவ்வளவு பெரிய மேன்மையை அடைந்திருக்க முடியாது என்பது எனது கணிப்பு.
இதன்மூலம் சோதனைகளை வென்று தேவனால் உயர்த்தப்படும் ஒரு நீதிமான் எவ்விதமாக ஆசீர்வதிக்கப்படுவான் என்பதற்கு யோசேப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
அதே நேரத்தில் தேவனால் அளிக்கப்பட்ட சோதனைகளில் தோல்வியைத் தழுவிய இஸ்ரவேல் மக்கள், வனாந்தரத்தில் 40 நாட்களுக்கு பதிலாக, 40 ஆண்டுகள் அலைந்து திரிந்தனர். மேலும் அவ்வளவு கஷ்டப்பட்ட பிறகும், எகிப்தில் இருந்து புறப்பட்ட யோசுவாவும் காலேப்பும் தவிர, வேறு யாரும் கானான் நாட்டை சென்றடையவில்லை. ஏனெனில் அவர்களில் யாரும் தேவன் அளித்த சோதனைகளில் வெற்றிப் பெறவில்லை.
இதில் தேவனை முகமுகமாக கண்டு பேசிய மோசேயும் உட்படுகிறார் என்பது கவனிக்கத்தக்கது. எனவே நம் வாழ்க்கையில் தேவனால் அனுமதிக்கப்படும் சோதனைகளில் நாம் வெற்றிப் பெற வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.
தேவன் அளிக்கும் சோதனைகளில் நீதிமான்களால் மட்டுமே வெற்றிப் பெற முடிகிறது. அதில் தோல்வி அடையும் போது, நாம் துன்மார்க்கராகவும் கொடுமையில் பிரியமுள்ளவர்களாகவும் கணக்கிடப்படுகிறோம். இப்படிப்பட்டவர்களைத் தேவன் வெறுக்கிறார் என்று சங்கீதம்:11.5 வசனம் கூறுகிறது. மேற்கூறியது போல, தேவன் அளித்த சோதனைகளில் தோல்வியடைந்த இஸ்ரவேல் மக்களை தேவன் வெறுத்தார் என்று வேதம் கூறுகிறது.
யோபின் வாழ்க்கையில் பிசாசு சோதனைகளைக் கொண்டு வந்த போதும், அதை தேவன் அனுமதிக்கிறார் என்று காண்கிறோம். நம் வாழ்க்கையில் கூட சில சந்தர்ப்பங்களில் பிசாசினால் சோதிக்கப்பட, தேவன் அனுமதி அளிக்கலாம். ஏனெனில் பிசாசின் சோதனைகளில் நாம் வெற்றிப் பெறுவோம் என்ற நம்பிக்கையில் தான் தேவன் பிசாசிற்கு அனுமதி அளிக்கிறார்.
ஆனால் பேதுருவை சோதிக்க பிசாசு அனுமதி கேட்ட போது, அதற்கு தேவன் மறுத்துவிட்டதாக, இயேசு கூறுவதைக் காண்கிறோம். எனவே நமது ஆவிக்குரிய நிலைப்பாடு மற்றும் தன்மையை அறிந்து மட்டுமே, நம் வாழ்க்கையில் தேவன் சோதனைகளை அனுமதிக்கிறார். இதனால் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவனால் அளிக்கப்படும் சோதனையின் தன்மை வேறுபடுகிறது.
எனவே தேவனால் அளிக்கப்படும் சோதனைகளைக் கண்டு இஸ்ரவேல் மக்களைப் போல துவண்டு போய், முறுமுறுக்க தேவையில்லை. மாறாக, கர்த்தருக்காக பொறுமையோடு காத்திருப்போம். ஆபிரகாமைப் போல தேவன் மீது முழுமையான நம்பிக்கை வைப்போம்.
யோசேப்பைப் போல தேவன் அறியாமல் எனக்கு எதுவும் நடக்காது என்ற தைரியத்தோடு செயல்படுவோம். அப்போது ஏற்ற நேரம் வரும் போது, நாம் எதிர்பாராத ஆசீர்வாதங்களாலும் நன்மைகளாலும் தேவன் நிரப்புவார். நம் வாழ்க்கையில் தேவனால் அளிக்கப்படும் சோதனைகளால், நமக்கு நன்மை மட்டுமே காணப்படுமே தவிர, தீமை எதுவும் ஏற்படாது. எனவே தேவனால் அளிக்கப்படும் சோதனைகளைக் கண்டு பயப்பட வேண்டிய தேவையில்லை.
இது Arise and Shine என்ற வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.