ஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள் PDF Download
“அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள், அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை” சங்கீதம்:34.5
ஜெபத்தின் மூலம் மறைமுகமான மாற்றங்களைத் தவிர, பலருக்கும் வெளிப்படையான மாற்றங்களைப் பெற்றதாக வேதத்தில் காண்கிறோம். அதிலும் ஒரு மனிதனின் முழுத் தன்மையையும் தெளிவாக காட்டும் கண்ணாடி என்று அழைக்கப்படும் “முகத்தில்”, சிலருக்கு மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், அதை உடன் இருந்தவர்கள் கண் கூடாக கண்டதாகவும் வேதம் கூறுகிறது.
ஆனால் மேற்கண்ட எல்லாருக்கும் ஒரே மாதிரியான சூழ்நிலையோ, அனுபவமோ இருக்கவில்லை என்பது நாம் கவனிக்க வேண்டியுள்ளது. எனவே வேதத்தில் செய்யப்பட்ட பலரது ஜெபத்தின் போது, அவர்களின் முகங்களில் ஏற்பட்ட மாற்றங்களைக் குறித்து ஆராய்ந்தால், நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அது பெரும் உதவிகரமாக அமையும் என்று நம்புகிறோம். ஜெபத்தில் தங்களின் முகங்களை அடைந்த சிலரது பின்னணிகளைக் குறித்து ஒவ்வொன்றாக இந்த வேதப்பாடத்தில் காண்போம்.
1. காயீனின் முகம்:
பரிசுத்த வேதாகமத்தில் முதல் முதலாக தேவனுக்கு காணிக்கை செலுத்துதல் அல்லது தேவனை நோக்கிய ஜெபித்தல் என்ற சம்பவம் ஆதியாகமம் 4 ஆம் அதிகாரத்தில் காண முடிகிறது. தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஆதாம்-ஏவாளின் பிள்ளைகளான காயீனும், ஆபேலும் காணிக்கைகளைத் தேவனுக்குச் செலுத்துகிறார்கள்.
இதில் மூத்தவனான காயீனின் பலியைத் தேவன் அங்கீகரிக்கவில்லை. இளையவனான ஆபேலின் காணிக்கையைத் தேவன் அங்கீகரித்தார். காயீனின் காணிக்கைத் தேவனால் நிராகரிக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதை ஆராய்ந்தால், அதற்கு பல காரணங்களைக் கூறலாம். ஆனால் அது நம்முடைய வேதப்பாடத்தின் சிந்தனையைத் திசைத் திருப்பிவிடும் என்பதால், அதைக் குறித்து பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் சிந்திப்போம்.
காயீனின் காணிக்கை நிராகரிக்கப்பட்டதால் அவனது முகம் வேறுபட்டது என்று ஆதியாகமம்: 31.5-ல் காண்கிறோம். தனது பலி அங்கீகரிக்கப்பட்ட போதும், ஆபேலின் முகத்தில் பெருமையோ, கர்வமோ ஏற்படவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவனுக்கு சந்தோஷம் மட்டுமே உண்டானது.
தனது காணிக்கை அங்கீகரிக்கப்படவில்லை என்ற வருத்தம் காயீனுக்குள் இருந்தாலும், தனது சகோதரன் ஆபேலின் காணிக்கை அங்கீகரிக்கப்பட்டது, அவனுக்கு பெரிய அவமானமாக தெரிந்தது. இன்றைய கிறிஸ்தவர்களில் பலரிடமும் மேற்கூறிய காயீனின் மனநிலை காண முடிகிறது. தங்களின் ஜெபத்தை மட்டும் தேவன் கேட்கவில்லை. தனக்கு மட்டும் பரிசுத்தாவியின் வல்லமை, அபிஷேகம் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறார்கள்.
இந்நிலையில் மற்றவர்களின் ஜெபத்திற்கு தேவன் பதிலளிக்கும் போது, இந்த வருத்தம் மறைந்து, இந்தச் சூழ்நிலையைப் பெரிய அவமானமாக கருதுகிறார்கள். இதனால் ஜெபம் கேட்கப்பட்ட மற்றவர்களின் மீது மறைமுகமாக கோபமும் எரிச்சலும் உண்டாகிறது.
நம் ஜெபத்திற்கு தகுந்த பதில் கிடைக்கவில்லை என்ற நிலையில் இருந்து வளர்ந்து கொண்டே செல்வதைத் தடுத்து நிறுத்த, அவ்வப்போது தேவன் நமக்கு உணர்த்துவார். காயீனுக்கு எரிச்சல் ஏற்பட்டு, முகநாடி வேறுபட்டது ஏன்? என்று தேவன் கேட்பதை, ஆதியாகமம்:4.6 இல் காணலாம்.
அடுத்த வசனத்தில் நன்மையான காரியத்தைச் செய்தால் மேன்மை கிடைக்கும் என்றும், அதைச் செய்ய தவறினால் பாவம் வாசற்படியிலேயே படுத்திருக்கும் என்றும் தேவன் எச்சரிக்கை அளிக்கிறார். ஆனால் காயீன் தரப்பில் அதற்கு எந்தப் பதிலும் இல்லை. அப்படியென்றால், தேவனுடைய வார்த்தைகளுக்கு காயீன் அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறலாம்.
நமது தோல்வியின் நேரத்தில் மற்றவர்களின் மீது கோபமும் எரிச்சலும் வரக்கூடும். ஆனால் அந்த நேரத்திலும் பாவம் செய்யக் கூடாது என்ற தேவனின் எச்சரிப்பு வரும் போது விழிப்புடன் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால், தனது சொந்த சகோதரன் என்றும் பாராமல் கொலைச் செய்த காயீனைப் போல சாபத்திற்கு பாத்திரவான்களாக மாறி விடுவோம்.
தனது காணிக்கை அங்கீகரிக்கப்படாமல் போனதற்கான காரணத்தைக் குறித்து காயீன் யோசிக்க இல்லை. மேலும் அதை குறித்து தேவனின் கையால் படைக்கப்பட்ட தனது பெற்றோரிடமும் கேட்கவில்லை. மாறாக, எந்தப் பாவமும் அறியாத சகோதரன் மீது கோபம் கொள்கிறான்.
இதுபோல நமது ஜெபத்திற்கு பதில் கிடைக்காத நிலையில், அதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மற்றவர்களின் ஜெபங்களுக்கு பதில் கிடைத்ததை எண்ணி, பொறாமை கொள்ளவோ, எரிச்சல் அடையவோ நமது மனதை அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் அதன் முடிவு சாபத்தை மட்டுமே நமக்கு பெற்று தரும்.
மேலும் நம்மோடு இருப்பவர்கள் அல்லது ஜெபித்தவர்கள், நல்ல ஆசீர்வாதமான நிலையை அடையும் போது, அதில் சந்தோஷமடைய வேண்டுமே தவிர, எரிச்சல் அடையக் கூடாது. கிறிஸ்துவிற்குள் நமது சகோதர, சகோதரியாக இருக்கும், அப்படிப்பட்டவர்களின் மீதான கோபத்தையும் எரிச்சலையும் வளர்த்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
காயீனினை போல செயல்படும் வகையில் பிசாசு அளிக்கும் இது போன்ற ஆலோசனைகள், நமக்குள் வரும் போதே, அதை தேவ அன்பு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி ஜெயித்துவிட வேண்டும். இல்லாவிட்டால், ஆவிக்குரிய வாழ்க்கையில் நமக்கு பெரியளவிலான தோல்வியை உண்டாக்கிவிடும் என்பதை நினைவில் கொள்வோம்.
சகோதர அன்புடன் தேவனுக்கு உகந்த காணிக்கையைச் செலுத்திய ஆபேல், தேவ சமூகத்தில் நீதிமானாகச் சென்று சேர்ந்தான். ஆனால் சொந்த சகோதரனின் ஆசீர்வாதத்தைக் கண்டு எரிச்சல் அடைந்து, முகநாடி வேறுபட்ட காயீனுக்கு சாபம் மட்டுமே கிடைத்தது.
எனவே நமது ஜெபத்திற்கான பதிலைப் பெற, முதலில் நம்மை தேவ சமூகத்தில் தகுதிப்படுத்திக் கொள்வோம். தேவனிடமிருந்து பதில் கிடைக்காவிட்டாலும், தேவ அன்பில் நிரம்பி மற்றவர்களோடு பழகும் பாணியை தொடருவோம். தேவ சமூகத்தில் மற்றவர்களின் வெற்றியைக் கண்டு, நமது முகநாடி மாறாமல் பாதுகாத்து கொள்வோம். அப்போது பிசாசின் எந்தத் திட்டமும் நம் வாழ்க்கையில் பலிக்காது என்பதோடு, நமது தவறான நடவடிக்கையின் மூலம் தேவனிடம் இருந்து சாபத்தைப் பெற்று கொள்வதையும் தவிர்க்கலாம்.
2. மோசேயின் முகம்
இஸ்ரவேல் மக்கள் வாழ வேண்டிய முறைகளை எழுதி தர மோசேயை மலையின் மீது ஏறி வருமாறு, கர்த்தர் கட்டளையிடுகிறார். இதற்காக மோசே 40 நாட்கள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் மலையில் தேவ சமூகத்தில் காத்திருக்கிறார். தேவ சமூகத்தில் அவரது முகத்தைப் பார்த்து கொண்டு, அவரது சத்தத்தைத் தொடர்ந்து கேட்ட மோசேக்கு, 40 நாட்கள் என்பது ஒரு பெரிய விஷயமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் 40வது நாள் தனது மக்களின் தவறான போக்கை குறித்து கூறி, மோசேயை கீழே இறங்கி செல்லுமாறு தேவன் கூறுகிறார். உலகிலேயே மிகவும் பொறுமையான மனிதன் என்று தேவனிடம் இருந்து சாட்சியைப் பெற்ற மோசேக்கே, தனது மக்களின் நடவடிக்கையைக் கண்டு கோபம் வந்துவிட்டது.
இதனால் தேவ சமூகத்தில் தான் பெற்றுக் கொண்ட மகிமையான காரியங்களை மோசே இழக்கிறார். தேவனால் அளிக்கப்பட்ட கற்பலகையையும் உடைத்து போடுகிறார். இஸ்ரவேல் மக்களுக்கும் தேவனுக்கும் நடுவே நின்ற மோசேக்கு, இந்தப் பரிதாப நிலை ஏற்பட்டது.
இன்று தேவ சமூகத்தில் மற்றவர்களுக்காக திறப்பில் நின்று ஜெபிக்கும் ஜெப வீரர்கள் மற்றும் தேவ ஊழியங்களுக்கு, இது போன்ற நிலை ஏற்படுகிறது. நாம் போராடி ஜெபித்து குறிப்பிட்ட மக்களுக்காக விடுதலையைப் பெற்று கொடுக்க விரும்புகிறோம். ஆனால் அதற்கு சிலர் தயாராக இருப்பதில்லை என்பது தான் வேதனை அளிக்கிறது.
எடுத்துக்காட்டாக, தங்கள் வாழ்க்கையில் பழகிய பாவ பழக்க வழக்கங்களை விட முடியவில்லை என்று இன்று பலரும் ஜெபிக்க வருகிறார்கள். அதற்காக தேவ ஊழியர்கள் போராடி ஜெபித்து அனுப்புகிறார்கள். அதன்பிறகு அதற்காக குறிப்பிட்ட நபரும் தேவ சமூகத்தில் காத்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல், வழக்கமான பாணியிலேயே பாவத்தில் ஈடுபட்டால், அந்த தேவ ஊழியரின் முயற்சிகள் வீணாகும் அல்லவா?
இரட்சிக்கப்பட்ட மக்களிடையே தேவனை குறித்தும் அவரது வழிநடத்தல் குறித்தும் தெளிவான வெளிப்படுத்தல் இல்லை என்பது தான் இதற்கு முக்கிய காரணம். நமக்காக யாராவது போராடி ஜெபித்து ஆசீர்வாதத்தையும் விடுதலையையும் வாங்கி தரட்டும். நாம் இப்படியே இருப்போம் என்கிற தவறான எண்ணமும் இதற்கு காரணமாக உள்ளது. இது போன்ற செயல்பாடுகளால், நமக்காக ஜெபிக்கும் நபரையோ அல்லது தேவ ஊழியரையோ நாம் எந்தச் சூழ்நிலையிலும் கோபப்படுத்தக் கூடாது. அவர்கள் கோபப்படாமல் இருந்தாலும், அது எந்த வகையிலும் நமக்கு ஆசீர்வாதமாக இருக்காது என்பது கவனிக்கத்தக்கது.
தங்களுடன் மோசே இருந்த வரை, இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கு முன்பாக ஒழுங்காக வாழ்ந்தார்கள். அவர் 40 நாட்கள் தங்களிடம் இருந்து பிரிந்து போன உடன், தங்களை வழிநடத்தும் தேவனையே மறந்துவிட்டு, புதிய தேவர்களை உண்டாக்க துவங்கிவிட்டனர். இது போன்ற அனுபவம் நம் வாழ்க்கையில் இருக்க கூடாது.
இன்று தேவாலயத்தில் பயபக்தியோடு இருக்கும் பலரும், பணியாற்றும் நிறுவனங்களில் உண்மையாக இருப்பதில்லை. தேவ ஊழியர்களிடம் செல்லப் பிள்ளையாக இருக்கும் பலருக்கும், சொந்த குடும்பத்தில் சரியான சாட்சி இல்லை. இது போன்ற செயல்பாடுகளைக் கொண்ட விசுவாசிகளால், தேவ ஊழியர்கள் மற்றும் மற்ற விசுவாசிகளின் ஆசீர்வாதங்களுக்கும் தடையாக நிற்கிறார்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டும்.
இஸ்ரவேல் மக்களின் தவறுகளுக்காக, தேவ சமூகத்தில் மீண்டும் முறையிடும் மோசே, மீண்டும் 40 நாட்கள் மலையில் தேவனோடு செலவிடுகிறார். முடிவில் பத்து கட்டளைகளைப் பெற்று கொண்டு மலையில் இருந்து இறங்கி வருகிறார். அப்போது மோசே வரவேற்க செல்லும் இஸ்ரவேல் மக்களால், அவரது முகத்தைக் காண முடியவில்லை என்று வேதம் (யாத்திராகமம்:34.30) குறிப்பிடுகிறது.
இரண்டாவது முறை தேவ சமூகத்தில் இருந்து திரும்ப வந்த மோசேயின் முகத்தில் உண்டான தேவ மகிமை முதல் முறையே ஏற்பட்டிருக்கக் கூடும். ஆனால் இஸ்ரவேல் மக்களின் தவறான நடவடிக்கையில் கோபம் அடைந்ததால், அது மறைந்து போனது. முதலிலேயே தேவ மகிமையோடு மோசேயின் முகத்தை பார்ப்பதற்கு பதிலாக, கோபத்தோடு கூடிய நியாயத்தீர்ப்பை தான் இஸ்ரவேல் மக்கள் பெற்று கொண்டார்கள்.
எனவே தேவ சமூகத்தில் நமக்காக ஜெபிக்கும் தேவ ஊழியர்கள் மற்றும் விசுவாசிகளை, துச்சமாக நினைக்கக் கூடாது. இதனால் அவர்களின் மேன்மையான ஆவிக்குரிய வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு, அவர்களிடம் இருந்து நமக்கு தேவ ஆசீர்வாதம் கிடைப்பதற்கு பதிலாக, தேவனால் அளிக்கப்படும் நியாயத்தீர்ப்பை பெற வேண்டிய நிலை ஏற்படும். மேலும் மோசேயை போல நாமும் மற்றவர்களுக்காக ஜெபித்து, ஆசீர்வாதங்களைப் பெற்று தரும் போது, நமது முகமும் பிரகாசிக்கிறது.
3. அன்னாளின் முகம்
நம் வாழ்க்கையில் அத்தியாவசியமான காரியங்கள் இல்லாமல் போகும் போது, நம் மனதில் அதிக துக்கம் ஏற்படுகிறது. அந்த வகையில் குழந்தை இல்லாமல் மலடி என கேலி செய்யப்பட்ட அன்னாளும் துக்க முகத்தோடு தேவாலயத்திற்கு வந்ததாக, 1சாமுவேல்:1.10 இல் வாசிக்கிறோம்.
அந்த துக்கத்தை மாற்றும் வகையில், அவளது கணவன் ஆறுதல் வார்த்தைகளைக் கூறுகிறார். ஆனால் அது அவளுக்கு சமாதானத்தை அளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் தன்னை யாராலும் ஆறுதல்படுத்த முடியாது என்பதை உணர்ந்த அன்னாள், தனது மனதின் துக்கத்தை தேவ சமூகத்தில் கூறுகிறாள். மேலும் ஒரு திடமான தீர்மானத்தை எடுக்கிறாள். அப்போது தேவனுடைய சமாதானம், அவளுக்கு கிடைத்தது.
கஷ்டங்களின் மத்தியில் நாம் இருக்கும் போது, ஆறுதல்படுத்த பலரும் வருவார்கள். தங்களின் வார்த்தைகளால், நம்மை சமாதானப்படுத்த முயற்சிப்பார்கள். இவை அனைத்தும் தற்காலிகமானவை என்பதோடு, அவற்றில் எந்த பயனும் ஏற்படுவதில்லை. ஏனெனில் நம்மை வெளிப்புறமாக காணும் பலருக்கும், நம் மனதில் உள்ள பாரத்தை புரிந்து கொள்ள முடியாது. தேவன் முகங்களை மட்டுமல்ல, இருதயங்களை காண்கிறவர் என்பதால், அவருக்கு நமது பாரத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
இதனால் எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் மட்டுமே நம்மை தேற்றுகிறது (பிலிப்பியர்.4.7). எனவே நம் தேவைகளையும் பாரங்களையும் தேவ சமூகத்திற்கு கொண்டு செல்லும் போது, மனதில் உள்ள பாரங்கள் நீங்கி ஆறுதலை பெற முடியும். அன்னாள் செய்த ஜெபத்தை பார்த்தவர்கள், அதை தப்பாக நினைத்தார்கள். ஆனால் தேவன் அன்னாளின் மனதை புரிந்து கொண்டார். அவள் எடுத்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு, அடுத்தாண்டே சாமுவேலை அளித்தார்.
நாம் தேவ சமூகத்தில் செல்லும் போது, அன்னாளைப் போல இருதயத்தை ஊற்றி ஜெபிக்க வேண்டும். மேலும் தேவன் உணர்த்தும் காரியங்களுக்கு ஏற்ப, தீர்மானங்களை எடுக்க வேண்டும். அப்போது நாம் செய்யும் ஜெபத்திற்கு பதில் கிடைக்கும் என்பதோடு, நமக்குள் இருக்கும் துக்கம் மறைந்து போகும்.
அன்னாள் ஜெபித்த உடனேயே அவளுக்கு குழந்தை கிடைக்கவில்லை. குறைந்த பட்சம் 2 மாதங்களுக்கு பிறகு மட்டுமே, தான் கருவுற்று இருப்பதை உணர்ந்திருப்பார். ஆனால் தனது ஜெபத்தை முடித்த உடன், அன்னாளுக்குள் இருந்த மனத்தின் பாரம் நீங்கி, அப்புறம் அவள் துக்க துக்கமுகமாய் இருக்கவில்லை (1சாமுவேல்:1.18) என்று வேதம் கூறுகிறது.
அதாவது ஒரு காரியத்திற்காக நாம் கருத்தாக ஜெபித்து, அதை தேவன் கேட்டார் என்றால், நமக்குள் இருக்கும் மனத்தின் பாரம் அகன்றுவிடும். அதன்பிறகு திரும்ப அதை குறித்த பயமோ, கலக்கமோ, துக்கமோ ஏற்படாது. நம் ஜெபத்திற்கு பதில் கிடைத்தது என்பதற்கு இது ஒரு அடையாளம் என்று கூட கூறலாம். நம் ஜெபத்திற்கு உடனடியாக பதில் கிடைக்காவிட்டாலும், தேவன் நியமித்த காலத்தில் அதற்கு பதில் கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
இன்றைய கிறிஸ்தவர்களில் பலரும், தங்களுக்கு அதிக பாரத்தை உண்டாக்கும் காரியங்களுக்காக ஜெபிப்பது இல்லை. மாறாக, பிரபல தேவ ஊழியர்களை நாடி செல்கிறார்கள். இன்னும் சிலர் ஜெபிப்பார்கள் என்றாலும், அதை கருத்தாக செய்யமாட்டார்கள். ஏற்கனவே ஒரு மாற்று திட்டத்தை மனதில் வைத்து கொண்டு, ஜெபித்து பார்ப்போம், கிடைத்தால் நல்லது. இல்லாவிட்டால் நாம் திட்டமிட்டது போல செய்வோம் என்று இருப்பார்கள்.
எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு ரூ.1 லட்சத்தில் ஒரு பொருள் வாங்க வேண்டும் என்று இருந்தால், அதற்காக ஏற்கனவே பலரிடம் கடன் கேட்டு வைத்து கொள்வார். அதன்பிறகு, ஒரு கடமைக்கு ஜெபித்து விடுவார். யாராவது கேட்டால், தேவன் என் ஜெபத்தை கேட்டு, குறிப்பிட்ட நபர் மூலமாக, அந்த தேவையை சந்தித்தார் என்பார்கள்.
இது போன்ற ஜெபத்தை தேவன் கேட்பதும் இல்லை. குறிப்பிட்ட காரியத்தை குறித்த மனபாரம் நம்மை விட்டு நீங்குவதும் இல்லை. பல முறைகளில் முயற்சிகள் செய்து, தளர்ந்து போவது மட்டுமே மிச்சம்.
எனவே ஒரு காரியத்திற்காக ஜெபிக்கும் போது, அன்னாளை போல முழு மனதோடு ஜெபிப்போம். அதை பலரும் கேலி, கிண்டல் செய்யலாம். ஆனால் நம் ஜெபம் தேவனுடைய சமூகத்தில் எட்டுகிறது என்று விசுவாசிப்போம். மேலும் அப்படி செய்யும் உண்மையான ஜெபத்தை தேவன் கேட்டு, நம் மனதில் இருக்கும் பாரத்தை நீக்கி, நமது துக்க முகத்தையும் நீக்குவார். ஜெபத்தை முடிக்கும் போது, நமது முகத்தில் மகிழ்ச்சியும், வாயில் தேவனை துதிக்கும் துதியும் உண்டாகும்.
4. தானியேலின் முகம்
இஸ்ரவேல் மக்கள் பாபிலோனுக்கு அடிமைகளாக சென்ற காலத்திலும், தனது தேவனுக்காக வைராக்கியமாக நின்ற ஒரு ஜெப வீரன் தான் தானியேல். தனது ஜெபத்தை தொடர்ந்தால் உயிரே போகலாம் என்ற நிலை ஏற்பட்ட போதும், அதை ஒரு பெரிய பொருட்டாக நினைக்காத தானியேல், தன் வாழ்க்கையில் தேவனுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவராக இருந்தார்.
இதனால் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு நடக்கும் காரியங்களை கூட, தீர்க்கத்தரிசனமாக தெரிந்து கொண்டார். இன்னும் தெளிவாக கூறினால், உலகின் முடிவை குறித்தும், இயேசுவின் இரண்டாம் வருகையை குறித்தும் தீர்க்கத்தரிசனம் கண்ட பழைய ஏற்பாட்டு தீர்க்கத்தரிசிகளில் தானியேல் முக்கியமானவர்.
தனது நண்பர்களான அனனியா (சாத்ராக்), மீஷாவேல் (மேஷாக்), அசரியா (ஆபேத்நேகோ) ஆகியோருடன் ஜெபிக்கும் பழக்கம், தானியேலுக்கு இருந்தது (தானியேல்:2.17-18) என்று வேதம் கூறுகிறது. மேலும் ஒரு நாளில் 3 வேளை ஜெபிப்பது தானியேலின் வாழ்க்கையில் வழக்கமாக இருந்தது (தானியேல்:6.10).
பாபிலோனுக்கு அடிமைகளாக கொண்டு போகப்பட்ட போது, உணவு காரியங்களில் தானியேலுக்கும் அவரது நண்பர்களுக்கும் போராட்டம் ஏற்பட்டது. ஆனாலும் அவர்கள் ஒரு உறுதியான தீர்மானத்தை எடுத்து, அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.
பலருக்கும் இன்று உண்ணும் உணவில் வரும் போராட்டங்களில் சோர்ந்து போகிறார்கள். தேவ சமூகத்தில் உபவாசத்தோடு ஜெபிப்போம் என்றால், அது ஒரு பெரிய காரியமாக நினைக்கிறார்கள். இன்னும் சிலருக்கு ருசியான உணவு இல்லாவிட்டால், வீட்டை போர்க்களமாக மாற்றி விடுகிறார்கள். சமீபத்தில் இதை குறித்து ஒரு நண்பர் கூறும் போது, நாம் சாப்பிட தானே வாழ்கிறோம் என்றார்.
ஆனால் உண்மையில் வாழ்வதற்காக தான் நாம் சாப்பிட வேண்டுமே தவிர, சாப்பிடுவதற்காக வாழக்கூடாது. அதுவும் ஒரு ஆடம்பரமான வாழ்க்கையாக மாறிவிடும். குறிப்பிட்ட ருசியோடு கூடிய உணவை மட்டுமே நான் சாப்பிடுவேன் என்று வாழ்பவர்களுக்கு, உணவில் அடிமைத்தனம் இருக்கிறது எனலாம்.
இதில் கவனிக்க வேண்டிய ஒரு காரியம் என்னவென்றால், இந்த சோதனையில் இருந்து தன்னை தப்புவிக்க வேண்டும் என்று தானியேலும் அவரது நண்பர்களும் தேவனிடம் ஜெபிக்கவே இல்லை. ஆனால் அவர்கள் எடுத்த உறுதியான தீர்மானத்தை தேவன் கணம் பண்ணுகிறார்.
இதிலிருந்து ஜெபிக்கிற ஒரு மனிதனுடைய உறுதியான தீர்மானத்தை தேவன் கணம் பண்ணுகிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் தனக்கு வரும் சோதனைகளை நீக்கும்படி ஒரு ஜெபவீரன் போராட வேண்டிய தேவையில்லை. தேவனே அவனை காப்பாற்றுவார்.
தேவனோடு ஜெபத்தில் வழக்கமாக இருப்பவர்களின் முகங்கள் எப்போது பிரகாசிக்கும் தன்மையோடு இருக்கும். மேலும் தங்களுக்கு வரும் சோதனை நேரங்களில், அதிலிருந்து தப்பிச் செல்ல அல்லது அதற்கு அடிபணிந்து போகிறவர்களுக்கு, தேவன் அளிக்கும் மகிமையான பிரகாசமுள்ள முகத்தை பெற முடியாது.
ஏனெனில் பாபிலோனில் தானியேலுடன் இருந்த மற்ற வாலிபர்களும் இஸ்ரவேலில் இருந்து அடிமைகளாக கொண்டு வரப்பட்டவர்கள் தான். அவர்களும் தானியேலின் தேவனையே ஆராதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஜெபிக்கிறவர்களாக இருக்கவில்லை. மேலும் தங்கள் உண்ணும் உணவில் ஏற்பட்ட சோதனையில் உறுதியான தீர்மானத்தை எடுக்கவில்லை. இதனால் சிறந்த ஆரோக்கியத்தை அளிக்கும் உணவு வகைகளை சாப்பிட்ட போதும், அவர்களின் முகங்களில் பிரகாசம் ஏற்படவில்லை.
இதிலிருந்து தேவனிடம் இருந்து கிடைக்கும் முகப் பிரகாசம், மற்ற காரியங்களில் இருந்து எப்படி வேறுபட்டுள்ளது என்பதை அறியலாம். இன்று பலரும் முகங்களை பிரகாசமாக காட்ட, எவ்வளவோ பணத்தை செலவு செய்கிறார்கள்.
சில தேவ ஊழியர்கள் கூட, மேடைகளில் பேசும் போது, நன்றாக தெரிய வேண்டும் என்று மேக்கப் போடுகிறார்கள். ஆனால் அவையெல்லாம் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே நிலைநிற்கிறது. இப்படி என்ன தான் மேக்கப் போட்டு வந்தாலும், ஜெபத்தில் போராடும் போது, கிடைக்கும் முகத்தின் மகிமையான பிரகாசம் கிடைப்பதில்லை.
தானியேலுக்கு முகத்தில் பிரகாசம் என்ற வெளிப்புறமான ஆசீர்வாதம் மட்டுமல்ல, சகல ஞானத்திலும், எழுத்திலும் சாமர்த்தியமுள்ளவராக தேவன் மாற்றினார். மேலும் தீர்க்கத்தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியும் அறிவையும் தானியேல் பெறுகிறார்.
ஜெபத்தில் தேவனோடு பேசும் ஒரு நபருடன், தேவன் மிகவும் சமீபமாக இருப்பார். இதனால் அவர்கள் இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ற ஞானத்தையும் மற்ற ஆசீர்வாதங்களையும் தேவன் அளிக்கிறார்.
இதனால் நம் வாழ்க்கையில் தானியேலை போல ஜெபத்தில் உறுதியாக இருப்போம். வாழ்க்கையில் வரும் சோதனைகளில் பதற்றம் அடையாமல், தேவ சித்தத்தை அறிந்து அதற்கேற்ற தீர்மானத்தை எடுத்து உறுதியாக நிற்போம். அப்போது நாம் அறியாத ஒரு மகிமையான பிரகாசத்தை நம் முகங்களில் தேவன் அருளுவார். அது நம் முகத்தோடு நின்றுவிடாமல், நமது எல்லா காரியங்களிலும் ஞானமாக வெளிப்பட செய்வார்.
5. இயேசுவின் ஜெபம்:
நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் ஜெபம் என்பது ஒரு முக்கிய பங்கை வகித்தது என்பதை நான்கு சுவிசேஷங்களும் நமக்கு கூறுகின்றன. இரவு முழுவதும் ஜெபித்தார், மலையில் ஜெபித்தார் என்று பல இடங்களில் காண முடிகிறது.
இந்நிலையில் தேவ குமாரனாக இந்த உலகத்திற்கு வந்த இயேசு எதற்காக ஜெபித்தார் என்று பலரும் கேலியாக கேட்பதுண்டு. உலகில் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டிவர் இயேசு. அப்படியிருக்க அவரது வாழ்க்கையில் ஜெபிக்க நேரத்தை ஒதுக்கியதில் எந்த தவறும் இல்லை எனலாம்.
பல சூழ்நிலைகளில் தனிமையில் ஜெபித்த இயேசு, ஒரு முறை தனது நெருங்கிய சீஷர்களான பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகிய மூன்று பேரையும் ஒரு மலைக்கு அழைத்து சென்று ஜெபித்தார். இது குறித்து மத்தேயு:17.1-ல் காண்கிறோம். இயேசுவோடு ஜெபிக்க சென்ற மூன்று சீடர்களும், எதற்காக சென்றார்கள் (லூக்கா:9.28) என்பதையே மறந்து தூங்கிவிட்டார்கள் (லூக்கா:9.32) என்று காண்கிறோம்.
இவர்களைப் போலவே, இயேசுவின் சீஷர்களான நம்மில் பலருக்கும் ஜெப நேரத்தில் தான் நன்றாக தூக்கம் வருகிறது. ஆனால் நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு காரியம் என்னவென்றால், ஜெபிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தேவ சமூகத்திற்கு நாம் வரும் போதே, இயேசு அங்கு வந்து விடுகிறார். அதை பெரும்பாலான நேரங்களில் நம்மால் உணர முடிவதில்லை. எனவே ஜெப நேரத்தில் வரும் தூக்கத்தை நாம் தவிர்க்க வேண்டும்.
ஒரு காரியத்தை முழு விருப்பத்தோடு செய்யும் போது, நமக்கு எக்காரணம் கொண்டும் தூக்கம் வராது. அதை வேண்டா வெறுப்போடு அல்லது கடமைக்காக செய்யும் போது, நமக்கு கட்டாயம் தூக்கம் வரும் என்பது நாம் எல்லாரும் அறிந்ததே. இயேசுவின் சீஷர்கள் கூட இயேசுவின் அழைப்பை மறுக்க முடியாமல் சென்றிருக்கலாம் என்று தோன்றுகிறது.
லூக்கா:9.32-ல் வாசிக்கும் போது, இயேசு ஜெபித்து கொண்டிருந்த போது, மூன்று சீஷர்களும் நித்திரை மயக்கத்தில் இருந்தார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சரியான தூக்கமல்ல, தூக்க கலக்கத்தில் இருந்தார்கள் எனலாம். இப்படி தூக்க மயக்கத்தில் இருப்பவரால், எந்த காரியத்தையும் தெளிவாக பார்க்கவோ, செய்யவோ முடியாது. போதையில் இருப்பவர்கள் போல செயல்படுவார்கள்.
இதனால் தான் என்ன சொல்கிறோம் என்பதை கூட தெரியாமல் இயேசுவிடம் பேதுரு பேசியதாக வேதத்தில் (லூக்கா:9.33) காண்கிறோம். சீஷர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலை, நாம் ஜெபிக்கும் போது ஏற்படக் கூடாது. ஏனெனில் அவர்களால், இயேசு பெற்ற தெய்வீகமான அனுபவத்தை பார்க்க முடிந்ததே தவிர, அதை அனுபவிக்க முடியவில்லை.
இன்று தேவாலயங்களில் மட்டுமின்றி, குடும்ப ஜெபங்களில் கூட பலருக்கும் இது போன்ற அனுபவம் ஏற்படுகிறது. என்ன கூறுகிறார்கள் அல்லது எதற்காக ஜெபிக்கிறார்கள் என்று கூட தெரியாமல், எந்த தொடர்பும் இல்லாத வசனங்களைக் கூறி ஜெபிக்கிறவர்களைப் பார்த்து இருக்கிறேன். தேவ சமூகத்தில் நாம் எதை செய்தாலும், தெளிவான ஞானத்தோடு செய்ய வேண்டும்.
மலைக்கு இயேசுவோடு ஜெபிக்க சென்றவர்களுக்கு இந்த நிலை என்றால், இயேசுவிற்கு ஜெபத்தில் ஒரு மாறுபட்ட அனுபவம் உண்டாகிறது. ஜெபத்தில் இருந்த இயேசுவின் முகம் சூரியனை போல பிரகாசித்ததாகவும் (மத்தேயு:17.2) அவருடைய ஆடை வெண்மையாக மாறியதாகவும், பழைய ஏற்பட்டு தீர்க்கத்தரிசிகளான மோசேயும் எலியாவும் அவரோடு சிலுவை பாடுகளைக் குறித்து பேசியதாகவும் காண்கிறோம்.
தேவ சமூகத்தில் உண்மையாக ஜெபிக்கிறவர்களுக்கு மட்டுமே இயேசுவிற்கு கிடைத்த இந்த அனுபவத்தை பெற முடிகிறது. இயேசுவின் சிலுவை பாடுகளைக் குறித்த காரியங்களை அவரது ஜெபத்தில் அறிந்து கொண்டது போல, நாமும் உண்மையாக ஜெபிக்கும் போது, நமது எதிர்கால தேவ திட்டங்களை தேவன் வெளிப்படுத்தி தருகிறார்.
இந்த அனுபவத்தை பெற தவறும் பலரும், இன்று யாராவது ஒரு தேவ ஊழியரின் மூலம் கிடைக்கும் தீர்க்கத்தரிசனத்தை தேடி அலைக்கிறார்கள். தனது ஜெபத்தில் இயேசு பெற்ற அனுபவத்தை தெளிவில்லாமல் கண்ட சீஷர்களின் செயல்பாடுகள் இவை.
மலையில் ஜெபித்த போது, தான் அனுபவிக்க வேண்டிய சிலுவை பாடுகளை அறிந்து கொண்ட இயேசு, அதற்கு தன்னை ஆயத்தம் செய்து கொண்டார். ஆனால் ஜெபத்தில் உறுதியில்லாமல் இருந்த சீஷர்களால் சோதனை நேரத்தில் நிலைத்து நிற்க முடியவில்லை.
இயேசுவை கைது செய்ய வந்த போது, எல்லாரும் அவரை விட்டு ஓடினார்கள். எனவே நாமும் ஜெபத்தில் தெளிவில்லாமல் இருந்தால், சோதனைகளின் போது நிலை நிற்க முடியாமல் இயேசுவை விட்டு ஓட வேண்டிய நிலை ஏற்படும். எனவே மற்றவர்களின் ஆவிக்குரிய வரங்களையும் தாலந்துகளையும் ஜெபத்தையும் நம்பி நாம் வாழ்ந்தால், ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சிக்கு பதிலாக, வீழ்ச்சி தான் ஏற்படும்.
எனவே கடமைக்காக ஜெபிப்பதை தவிர்த்து, தேவ பயத்தோடு அவரது சமூகத்தை தேடுவோம். அந்த உண்மையான ஜெபத்தின் மூலம் நமக்கு அறிய வேண்டிய எல்லா காரியங்களையும் தேவனே தெரிவிக்கிறார். இதன் விளைவாக வெளியோட்டமாக நம் முகத்தில் மட்டுமின்றி, நாம் அணிந்திருக்கும் ஆடையில் கூட தேவ வல்லமையின் பிரதிபலிப்பை காண முடிகிறது.
6. ஸ்தேவானின் முகம்
ஆதிகால அப்போஸ்தலர்களின் சபையில் பந்தியை விசாரிக்க நியமிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஸ்தேவான், இயேசு கிறிஸ்துவை குறித்து பிரசங்கித்து, அவரது நாமத்திற்காக முதல் ரத்தச் சாட்சியாக மரிக்கிறார். அப்போஸ்தலர்: 6.15 – ஸ்தேவானின் முகம் ஒரு தேவ தூதனின் முகம் போல தெரிந்தது என்று காண்கிறோம்.
இன்று பலரும் பிரசங்கம் செய்யும் போது, சிறப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக பல மேக்கப்களை செய்து கொள்கிறார்கள். உடை அணிவதில் இருந்து முகத்தில் களையை உண்டாகும் பல கிரீம்களைப் போடுவது வரை பல காரியங்களை செய்கிறார்கள். இதை தவறு என்று கூற முடியாது.
ஆனால் ஆதிகால கிறிஸ்தவ சபைகளில் பிரசங்கம் செய்தவர்களின் முகங்களில், தேவ மகிமை காணப்பட்டது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக, ஸ்தேவானை குறிப்பிடலாம். ஸ்தேவான் முகம் சிறப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக எதுவும் செய்யவில்லை. ஆனால் தேவனுக்காக செய்ய வேண்டியதை சரியாக செய்த போது, அவன் முகத்தில் மகிமை தானாக வந்தது. அது மற்றவர்களுக்கு ஒரு தேவ தூதனின் முகம் போல தெரிந்தது.
தனது முகத்தில் இருந்த மாற்றத்தை ஸ்தேவான் அறியவில்லை. ஆனால் அவனை பார்த்தவர்கள் மற்றும் அவனோடு வாக்குவாதம் செய்தவர்களுக்கு மட்டுமே அப்படி தெரிந்தது.
மேலும் ஸ்தேவான் உடன் யாராலும் வாக்குவாதம் செய்ய முடியாதபடி, தேவ ஞானத்தை பெற்றிருந்தான் என்று வேதம் கூறுகிறது. தங்களின் தோல்வியை ஒத்துக் கொள்ள முடியாமல், ஸ்தேவான் மீது கல் எறிந்து கொலை செய்திருக்கலாம் என்று கூட தோன்றுகிறது.
பரிசுத்தாவியின் வல்லமை ஒரு மனிதன் மீது வரும் போது, அவனுடைய பேச்சில் மட்டுமல்ல, எல்லா செயல்களிலும் அந்த மாற்றத்தை நாம் காண முடியும். ஆவிக்குரிய கனிகள் சரீரத்தின் மூலமாக எல்லாருக்கும் வெளிப்படும். அந்த வல்லமையைப் பெற்றுள்ள மனிதனுக்கு ஒரு வேளை அந்த மாற்றத்தை அறிய முடியாமல் போகலாம். ஆனால் அந்த நபருடன் இருக்கும் மற்றவர்களால் நிச்சயம் அதை உணர முடியும்.
இந்தக் காலத்தில் தேவாலயங்கள், திறந்தவெளி ஜெபக் கூட்டங்கள், சிறப்பு கூட்டங்கள் என்று கிறிஸ்தவர்கள் கூடும் எல்லா இடங்களிலும் பரிசுத்தாவியில் நிரம்புகிறார்கள். சிலர் தீர்க்கத்தரிசனம் கூறுகிறார்கள், சிலர் அற்புதங்களைச் செய்கிறார்கள். ஆனால் பரிசுத்தாவியின் வல்லமை நமக்குள் வந்த பிறகு நடைபெற வேண்டிய மாற்றங்கள் மிகவும் குறைவாக இருக்கிறது.
பரிசுத்தாவியில் நிரம்பிய ஸ்தேவான் உடன் பேசி யாராலும் ஜெயிக்க முடியவில்லை. அதே நேரத்தில் அவரை கல்லெறிய ஆரம்பித்த போது, அந்த இடத்தை விட்டு ஓட முயற்சிக்கவில்லை. மேலும் தன் மீது கல்லெறிந்த யாரையும் சபிக்கவில்லை. இவை எல்லாவற்றிற்கு மேலாக, சாகும் வரை, முழங்காலில் நின்று ஜெபித்தவாறு மரித்துள்ளார்.
நாம் சுவிஷேசம் கூறும் போது, எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் நாம் எப்படி செயல்படுகிறோம்? கடைசி நாட்களில் இருக்கும் நாம், இயேசுவை பிரசங்கிக்கும் கிறிஸ்தவர்களாக மட்டுமில்லாமல், அவருடைய மாதிரியை போல வாழ்ந்து காட்டுகிறவர்களாக இருக்க வேண்டியுள்ளது.
இயேசுவைப் போல வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கிறிஸ்தவனை யாராலும் ஜெயிக்க முடியாது. அதே நேரத்தில், அவனுக்கு எதிராக வரும் எந்தொரு கஷ்டத்திலும், பிரச்சனையிலும் தப்பியோடும் முயற்சிகளில் ஈடுபடமாட்டார்கள். மேலும் இயேசுவிற்காக ரத்த சாட்சியாக மரிக்க வேண்டிய சூழ்நிலையிலும், மற்றவர்களை சபிக்கவோ, குறைக் கூறவோ முயற்சிக்கமாட்டார்கள்.
இவை எல்லாவற்றையும் விட, பரிசுத்தாவியில் நிரம்பி இயேசுவிற்காக வாழ்கிறவர்களின் முகங்கள் எப்போது மகிமை பொருந்தியதாக இருக்கும். அது ஒரு தேவ தூதனின் முகத்தை போல பிரகாசிக்கும். சாகும் வரை, தேவனுக்காக சாட்சியாக வாழ்வார்கள்.
எனவே நாம் கூட தேவனுக்காக வாழ்கிறேன், நானும் ஒரு கிறிஸ்தவர் என்று வெறும் வார்த்தையில் மட்டும் இல்லாமல், செயலிலும் காட்டுவோம். அதற்கு பரிசுத்தாவியின் வல்லமை நமக்கு தேவை. தினமும் பரிசுத்தாவியின் வல்லமையில் நிரம்பி, தேவனுக்காக வாழ்ந்து ஊழியம் செய்யும் போது, எந்தொரு வல்லமையும் நம்மை மேற்கொள்ள முடியாது. நமது முகங்களும் பிரகாசிக்கும்.
முடிவுரை:
பரிசுத்த வேதாகத்தில் வாழ்ந்தவர்களின் முகங்களில் ஏற்பட்ட மாற்றங்களையும் அதற்கான காரணங்களையும் குறித்து இந்த செய்தியில் தியானித்தோம். தேவனுக்காக வாழ்கிறவர்களின் முகங்களை பார்த்தாலே, அதன் அடையாளத்தை எளிதில் அறிந்து கொள்ளலாம் என்பதை இந்தச் செய்தியின் மூலம் அறிகிறோம்.
இந்த கட்டுரை Arise and Shine என்ற தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.