அப்போஸ்தலர் நடபடிகள் மூன்றாம் அதிகாரம் வேத பாடங்கள்


அப்போஸ்தலர் நடபடிகள் மூன்றாம் அதிகாரம் வேத பாடங்கள்


9. சப்பாணி சுகமாக்கப்படுதல் (அப்போஸ்தலர் 3:1-10)


அப்போஸ்தலர் 3:1-10
1 ஜெபவேளையாகிய ஒன்பதாம்மணி நேரத்திலே பேதுருவும் யோவானும்தேவாலயத்துக்குப் போனார்கள். 2 அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டு வந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள். 3 தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும், யோவானையும் அவன் கண்டு பிச்சை கேட்டான். 4 பேதுருவும், யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். 5 அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான். 6 அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி, 7 வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது. 8 அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான். 9 அவன் நடக்கிறதையும், தேவனைத்துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு: 10 தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.
அப்போஸ்தலர்களும் சபை அங்கத்தினர்களும் இணைந்து விண்ணப்பங்களை ஏறெடுத்த பின்பு, தேவாலயத்திற்குள் பிரவேசித்தார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியானவர் தங்கும் ஆலயங்களாக மாறிய பின்பும், அவர்களின் பரலோக பிதாவை ஆராதிக்கும் இடத்தை அலட்சியம் பண்ணவில்லை. அவர்களது தொடர்ச்சியான விண்ணப்பங்கள் மற்றும் இறைவனுக்கு தூய்மையான நன்றி செலுத்துதலின் நிமித்தம் அசாதாரண வல்லமையை கடவுள் அவர்களுக்கு அருளியிருந்தார்.
தொடர்ச்சியான விண்ணப்பங்கள் மற்றும் வேதாகமத்தை படித்தல் இவைகளில்லாமல் ஒருவரும் ஆவிக்குரிய வல்லமையை காண இயலாது. அப்போஸ்தலர்கள் இருதயங்கள் கடவுளின் அன்பினால் நிறைந்திருந்தது. இந்த உலகில் ஏழைகளுக்கு உதவும் படியான வழியில் அந்த அன்பு அவர்களை நடத்தியது. அவர்கள் தேவையுள்ளோர், ஏழைகளைக் கண்டு விலகிச் செல்லவில்லை. கடவுளின் அன்பு அனைத்து மனிதர்களுக்கும் சேவை செய்திட நம்மைத் தூண்டுகிறது.
கூட்டத்தினூடே சத்தம் நிறைந்த ஆலயப் பிரகாரத்திற்கு, பேதுருவும், யோவானும் இணைந்து விண்ணப்பம் செய்யவும், ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளவும் போனார்கள். அவர்கள் மென்மையான ஒரு சத்தத்தைக் கேட்டார்கள். அவர்கள் திரும்பிப் பார்த்த போது தாயின் வயிற்றில் பிறந்தது முதல் சப்பாணியாய் இருந்த ஒரு பரிதாபமான மனிதனைக் கண்டார்கள். மற்றவர்களின் உதவி இல்லாமல், அவனால் ஒரு அடி கூட எடுத்து வைக்க இயலாது. கர்த்தரின் ஊழியர்கள் அந்த மனிதன் மீது இரக்கம் கொண்டு அவனுக்கு உதவிட விரும்பினார்கள். இயேசுவின் வல்லமை மீது நம்பிக்கை கொள்ளுமாறு பரிசுத்த ஆவியானவர் அவர்களை துரிதப்படுத்தினார். இரட்சகர் மீதான அவர்களது நம்பிக்கையை பெலப்படுத்தினார். இந்த பாடுள்ள மனிதனில் கர்த்தர் தமது நாமத்தை மகிமைப்படுத்த விரும்புவதை உடனடியாக பேதுருவும், யோவானும் உணர்ந்து கொண்டார்கள்.
பேதுரு அந்த ஏழை மனிதனிடம், தான் அவனை விட வசதிபடைத்தவன் இல்லை என்று கூறினார். ஆதி திருச்சபை மக்கள் தங்கள் சொத்துக்களை விற்று, பொதுவாக வைத்து இணைந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு உயிருள்ள சபையிலும் இருக்க வேண்டிய தெளிவான கொள்கையை பேதுரு வெளிப்படுத்தினார். “எங்களிடம் வெள்ளியும் இல்லை, பொன்னும் இல்லை. அப்படி நாங்கள் பெற்றிருந்தால் கிறிஸ்துவை மகிமைப்படுத்த அவைகளை ஒப்படைத்து ஏழைகளுக்கு சேவை புரிந்திருப்போம்”. திருச்சபையின் பொதுசொத்தில் பணம் அதிகமாக இருக்கும் போது, அங்கே அன்பு குறைவாக இருக்கிறது, மேலும் கஞ்சத்தனத்தை அது வெளிப்படுத்துகின்றது. எனவே தான் பணத்தில் வசதி படைத்த சபையில் இறைவனின் வல்லமை இருப்பதில்லை. ஆனால் பணப்பற்றாக்குறை இருந்தும், விசுவாசத்தில் ஐசுவரியமுடைய சபை கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்து காணப்படுகிறது. ஆகவே இந்த இரண்டில் எந்த ஒன்றை நீங்கள் விரும்புகிறீர்கள்? அருமையான சகோதரரே, வல்லமையா? அல்லது பணமா? கிறிஸ்துவா? அல்லது உலகமா? இந்த காரியங்கள் ஒருபோதும் இணைந்து செல்வதில்லை.
பிறந்ததுமுதல் சப்பாணியாய் இருந்த அந்த மனிதனை அப்போஸ்தலர்கள் உற்று நோக்கிப்பார்த்தார்கள். இவர்கள் அந்த மனிதனுக்காக அக்கறைப்படுகிறார்கள் என்பதை அந்த மனிதன் உணர்ந்து கொண்டான். அப்போஸ்தலர்களும் அதை உணர்ந்தார்கள். அவர்கள் அவனை அவமதிக்கவில்லை. அவன் மீது கிளர்ச்சித்தலைவர்களைப் போல அதிகாரம் செலுத்தவில்லை. முதலில் அவர்களிடமிருந்து பணம் கிடைக்கும் என நம்பியிருந்தான். ஆனால் அப்போஸ்தலர்களும் அவனைப் போல ஏழை என்பதை அவன் கேள்விப்பட்டவுடன், அவனது எதிர்பார்ப்பு பொய்த்தது.
இயேசு என்ற பெயரை பேதுரு உச்சரித்தபோது, அந்த சப்பாணியான மனிதன் அதை கவனமாக கேட்டான். கடவுள் உதவுகிறார் என்ற அர்த்தமுடைய இந்த பெயரின் அர்த்தத்தைத் தவிர வேறெதுவும் அவன் சிறப்பாக அறிந்திருக்க வில்லை. ஒரேயொரு உதவியாளர், சுகம் தருபவர், இரட்சகர் மெய்யான கிறிஸ்து மட்டுமே என்பதை பேதுரு இங்கு குறிப்பிடுகிறார். ஒருவேளை சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்த இயேசுவைக் குறித்து அந்த சப்பாணி கேள்விப்பட்டிருக்கலாம். இந்த நாமத்தின் நிமித்தம் மக்களின் மத்தியில் மகிழ்ச்சியின் வெள்ளம் பொங்கி வழிவதை ஒருவேளை அவன் கவனித்திருக்கலாம். சிலுவையில் அறையப்பட்டவரை இறைவன் உயிரோடு எழுப்பினார். அவரை பரலோகத்திற்கு எடுத்துக் கொண்டார். ஆனாலும் பரிசுத்த ஆவியானவரின் செய்தியானது எருசலேமின் வீதிகளிலும்,தெருக்களிலும் மறைந்திருக்கவில்லை.
இயேசுவின் நாமத்தில் எழுந்து நட ப்பதற்கான கட்டளையை அந்த சப்பாணி கேட்டான். அவனது வலக்கையை பேதுருவின் கரம் பற்றிக்கொண்டதை அவன் உணர்ந்தான். பிறகு அவனது சரீரத்தில் வல்லமையுள்ள இறைவனின் அன்பு பாய்ந்தோடுவதை அவன் உணர்ந்தான். அவனது கால்களும், கரடுகளும் பெலன் கொண்டது, அவனது எலும்புகள் நேராக்கப்பட்டது. அந்த வியாதியஸ்தன் இந்த வார்த்தைகளை கேட்டான். “இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எழுந்து நட”. அவனது முதலாவது அடியை துணிவுடன் எடுத்து வைத்தான். மிகப்பெரிய ஆச்சரியம், அவனால் நடக்க முடிந்தது.
சப்பாணி தனது வாழ்நாளில் ஒருபோதும் ஒரு அடியை கூட எடுத்து வைத்ததில்லை. இப்போதோ அவன் மானைப் போல துள்ளிக் குதித்தான். குழந்தையைப் போல ஓடினான். அவன் பேரானந்தத்தால் நிறைந்திருந்தான். அவன் அப்போஸ்தலர்களை புகழவில்லை. உடனடியாக இறைவனை அவன் மகிமைப்படுத்தினான். சுகமாக்கப்பட்ட அந்த மனிதன் நேராக வீட்டிற்கு செல்லவில்லை. அவன் இயேசுவே தன்னை சுகமாக்கினார் என்பதை அறிந்திருந்தான். விண்ணப்பம் செய்யும் அப்போஸ்தலர்களுடன் அவனும் இணைந்து கொண்டு தேவாலயத்திற்குள் பிரவேசித்தான், அவர்களுடன் இணைந்து இறைவனை துதித்தான். அவனது சந்தோஷத்தின் மிகுதியினால் வலப்பக்கமாக ஓடினான், இடப்பக்கமாக ஓடினான், மேலும் தனது எலும்புகளையும், கால்களையும் தொட்டுப் பார்த்துக் கொண்டான். நாம் ஒவ்வொரு நாளும் அனுபவிப்பதை அவன் முதன் முறையாக அனுபவித்தான். இறைவன் நாம் நடக்கும்படியான கிருபையை நமக்கு தருகிறார். இந்த சிலாக்கியத்தை பெற்ற நீங்கள் உங்கள் ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறீர்களா?
அது பிற்பகல் மூன்று மணியாய் இருந்தது. எனவே பொது ஆராதனைக்காக மக்கள் ஆலயத்தில் கூடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் அந்த ஏழை பிச்சைக்காரனை அறிந்திருந்தார்கள். அவன் மகிழ்ச்சியுடன், அளவிட முடியாத ஆனந்தத்துடன் ஓடுவதை பார்த்தார்கள். கிறிஸ்துவின் வல்லமையை வெளிப்படுத்தும் சாட்சியாக அவன் திகழ்ந்தான். அவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் மத்தியில் புதிய வல்லமை செயல்படுவதை உணர்ந்தார்கள்.
பிரியமான சகோதரரே? உங்கள் நிலை என்ன? இந்த சப்பாணியான மனிதனைப் போல தேவாலயத்து வாசலில் உட்கார்ந்து, ஆலயத்திற்குள் வந்து போகிற மக்களிடம் உதவி கேட்கிறீர்களா? அல்லது இயேசுவின் வல்லமை உங்களை உயிர்ப்பித்ததினால் நீங்கள் குதித்து எழுந்து, நடந்து அவரது நாமத்தை போற்றுகிறீர்களா? நீங்கள் உங்கள் நடத்தையினால் இரவும் பகலும் அவரை தொடர்ந்து மகிமைப்படுத்துகிறீர்களா?

10. தேவாலயத்தில் பேதுருவின் பிரசங்கம் (அப்போஸ்தலர் 3:11-26)


அப்போஸ்தலர் 3:11-16
11 குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள். 12 பேதுரு அதைக் கண்டு ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, எங்கள் சுயபக்தியினாலாவது, இவனை நடக்கப்பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப்பார்க்கிறதென்ன? 13 ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள். 14 பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலை பண்ணவேண்டுமென்று கேட்டு,15 ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். 16 அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப்பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது.
ஒரு குறிப்பிட்ட தலைவரிடம் வல்லமை இருப்பதை மக்கள் உணரும் போது, அவர்கள் அவரிடம் ஓடி, அந்த வல்லமையை பெற்றுக்கொள்ளலாம் என்று நம்புவார்கள். ஆனால் துரதிர்ஷடவசமாக அநேக தலைவர்கள் தங்களை பின்பற்றுபவர்களுக்கு இறைவனின் வல்லமையை கொடுப்பதில்லை என்பதே நீண்ட கால அனுபவமாயிருக்கிறது. மாறாக, அவர்கள் தங்களை பெருமைப்படுத்தி தங்களது சொந்த வலிமையை காட்டுகிறார்கள். அவர்கள் பொன், வெள்ளியைக் குறித்த நம்பிக்கையை தங்களை பின்பற்றுபவர்களிடம் வாக்குப் பண்ணுகிறார்கள். ஆனால் ஒருபோதும் அதை நிறைவேற்றுவதில்லை.
பேதுரு யூதர்களின் மனப்பான்மையைக் கண்டு வியப்புற்றார். அவர்களிடம் செயல்பட்ட இறைவனின் வல்லமையையோ அல்லது சத்தியத்தையோ அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. எனவே முதலாவது தன்னை அவர்கள் புகழுவதை தடைசெய்ய அவன் முயற்சித்தான். அவனது வரத்தில் அவர்கள் நம்பிக்கை வைக்காமல், இறைவனின் ஈவை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும் . கர்த்தர் இவ்விதம் கூறுகிறார்:“மனிதன் மேல் நம்பிக்கையாயிருக்கிறவன் சபிக்கப்பட்டவன்”. மனித வல்லமையோ அல்லது மதமோ மனிதனின் பாவத்தை அல்லது வியாதியை நீக்காது என்பதை பேதுரு உறுதிப்படுத்தினார். மனிதர்கள் முற்றிலும் அருகதையற்றவர்கள். அவர்கள் சிறகை விரித்து ஆடும் மயில்களைப் போல தங்களையே காண்பித்துக் கொள்பவர்கள்.
அமைதியற்ற இவ்வுலகிற்கு வல்லமை மற்றும் நம்பிக்கையை தரக்கூடிய ஓர் ஒப்பற்ற மனிதனை அப்போஸ்தலர்கள் சுட்டிக் காட்டினார்கள். அந்த மனிதன் நாசரேத்தூர் இயேசு ஆவார். பேதுரு அவரை கிறிஸ்து என்று அழைக்கவில்லை. அவரை விவரிக்க கடவுளின் ஊழியர் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இறைவனின் அடிமையாக இருக்கும் ஊழியர் என்று கிரேக்கத்தில் பொருள்படும் வார்த்தையை பயன்படுத்தினார். தன்னுடைய பிதாவிற்கு முற்றிலும் தன்னை தாழ்த்தி ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவை இது காண்பிக்கிறது. அவரது மனப்பூர்வமான ஒப்புக்கொடுத்தலின் மூலம் கிறிஸ்துவின் முழுமை மற்றும் வெற்றியை நாம் காண்கிறோம். இறைவனின் குமாரன் தனக்கு புகழ் சேர்க்கவில்லை. அவர் மனிதன் ஆனார். அடிமையின் ரூபம் எடுத்தார். மரண பரியந்தம், அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் தன்னை தாழ்த்தினார். எனவே இறைவன் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்கு தந்தருளி, அவரை உயர்த்தினார். (பிலிப்பியர்2:7-9). இறைவன் தனது ஊழியர் இயேசுவை மகிமைப்படுத்தினார் என்று பேதுரு கூறியது சரியாய் இருந்தது. இறைவனாயிருக்கக் கூடிய பரிசுத்த ஆவியானவரின் இறுதிப்பணி இயேசுகிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்துவதே ஆகும்.
புரிந்துகொள்ள முடியாத, அறியாத ஓர் இறைவனைக் குறித்து பேதுரு பேசவில்லை. அவர் இறைவனை ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவரின் இறைவன் என்று அழைத்தார். அவர்களுடைய மூதாதையர்களுக்கு தன்னை வெளிப்படுத்தினார். அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் ஆவார்கள். தேசப் பிதாக்களின் இறைவன் தன்னுடைய ஊழியர் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். இந்த தெய்வீக நிகழ்வின் தாக்கம் அப்போஸ்தலர்களின் பிரசங்கத்தின் தலையங்கத்தை வடிவமைத்தது. சிலுவையில் அறையப்பட்ட இயேசு கல்லறையில் தங்கியிருக்கவில்லை. என்றென்றும் வாழுகிற அவர் எழுந்தார். அப்போஸ்தலர்கள் கண்கண்ட சாட்சிகளாக திகழ்ந்தார்கள். அவர்கள் அவரை பார்த்து, அவருடன் பேசியவர்கள் ஆவார்கள். அவரது உயிர்த்தெழுதல் மற்றும் சிலுவை மரணத்திற்கு பிறகு வெளிப்பட்ட மகிமையின் சரீரம் குறித்த நிச்சயத்தன்மைக்கு அவர்கள் சாட்சி பகர்ந்தார்கள்.
இறைவனின் கிருபையையும் வெற்றியையும் மட்டுமே காண்பிப்பதில் பரிசுத்த ஆவியானவர் திருப்தி அடையவில்லை. இறைவனின் ஆவியானவர் பரிசுத்தமானவராக இருக்கிறபடியால், அவர் எப்போதும் மனிதனின் உள்ளான பாவங்களைத் தாக்குகிறார். ரோம ஆளுநர் இயேசுவை குற்றமற்றவர் என்று கண்டும், யூத தேசம் இறைவனால் தெரிந்தெடுக்கப்பட்ட இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் அவரை புறக்கணித்தார்கள்; மறுதலித்தார்கள். அவர் சத்தியத்தை திரித்துப் பேசினார் என்று சொல்லி இறைவனின் குமாரனை சிலுவையில் அறையும்படி புறஇனத்து ஆளுநரை வலியுறுத்தினார்கள். இயேசு முன்பு பேசிக்கொண்டிருந்த சாலமோனுடைய மண்டபத்திற்கு வெகு அருகில் தான் தேவாலயத்தின் முன்னிருந்த திறந்த வெளியை நோக்கிக் கொண்டிருக்கும் ஆன்டோனியா கோபுரம் இருந்தது. அங்கு தான் யூதத் தலைவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தார்கள். இதைக் கேட்ட மக்கள் அவர்களிடம் காணப்பட்ட அநீதியை உணர்ந்தார்கள். மேலும் அந்தக் கட்டிடங்களே அவர்களுக்கு விரோதமாக சாட்சி கூறும். மனிதரைப் பிடிக்கிறவர்களாக மாறிய பேதுரு தனது பிரசங்கத்தைத் தொடர்ந்தார். கொலைகாரர்களின் முகங்களில் இருந்து அவர் போலியான இறைபக்தி எனும் திரையை விலக்கினார். இறைவனின் ஆட்டுக்குட்டியை புறக்கணித்து விட்டு பரபாஸ் என்பவனை அவர்கள் தெரிந்து கொண்டதை கண்டித்தார். பரபாஸ் என்பவன் கொலைகாரனாகவும் கொள்ளைக்காரனாகவும் இருந்தவன். இந்த தெரிந்தெடுப்பு அவர்களது தீய ஆவியையும், பாதகமான மனதையும் வெளிப்படுத்தியது.
பரிசுத்த ஆவியானவர் பேதுருவை கிறிஸ்து என்ற பதத்தை பயன்படுத்தும்படி ஏவினார். இயேசு பரிசுத்த ஆவியினால் பிறந்தவர். பரிசுத்தமான அவர் முழு உலகத்தின் பாவத்தையும் தன் மீது சுமந்தார். அவர் குற்றமற்றவர், இறைவனின் மனுவுருவானவர். பாவமில்லாமல் வாழும் ஒருவர் ஒரு போதும் மரிக்க கூடாது. இருப்பினும் இயேசுவின் மரணத்தில் நடக்க முடியாத ஓர் காரியம் நடந்தது. ஜீவாதிபதி மரித்தார். இயேசுவின் அடிப்படைத் தன்மையை தெளிவுபடுத்தும்படி, பேதுரு “கிறிஸ்து” அல்லது இறைவனின் குமாரன் என்ற பதத்தை இதுவரை பயன்படுத்தவில்லை. மாறாக இயேசு என்ற பெயரில் அடங்கியிருந்த அனைத்து சிறப்பம்சங்களையும் வெளிப்படுத்தும்படி அதை பயன்படுத்தினார்.
பேதுரு தொடர்ந்து தன்னை குற்றம் சாட்டிய கொலைகாரர்களிடம் பேசினார். இறைவன் நாசரேத்தூர் இயேசுவை நேசித்தார். ஆனால் நீங்கள் இறைவனின் ஆவியானவருக்கு எதிர்த்து நின்றீர்கள். பரிசுத்தமானவரின் நேசகுமாரனை கொலை செய்தீர்கள். நீங்கள் குற்றவாளிகள், இறைவனின் பகைவர்கள், அவரது எதிராளிகள். நீங்கள் ஆலயத்துக்கு வந்து ஆசீர்வாதத்தை அடையும்படி விண்ணப்பம் பண்ணுகிறீர்கள். ஆனால் இறைவன் உங்கள் விண்ணப்பங்களுக்கு பதிலளிப்பது கிடையாது. ஏனெனில் இறைவனின் நீதியுள்ள ஊழியர் இயேசுவை நீங்கள் கொலை செய்தீர்கள்.
அதைத் தொடர்ந்து மேலும் அவர் சாட்சி பகர்ந்தார். யூதர்களால் அவமதிக்கப்பட்டு, பாடுபட்டு, இறுதியில் கொலைசெய்யப்பட்ட இயேசுவுக்கு இறைவன் ராஜ்யத்தை தரும்படி தமது கரத்தை நீட்டினார். அவர் மோசே, எலியா மற்றும் திருமுழுக்கு யோவானுக்கு இப்படிச் செய்யவில்லை. இறைவனின் சித்தம் மற்றும் விருப்பத்துடன் இசைந்திருந்த இயேசுவின் பரிசுத்தத்திற்கு அவரது உயிர்த்தெழுதல் சான்றாக இருந்தது. ஆண்டவராகிய இயேசு வாழுகிறார், இருக்கிறார், நமக்கு அருகில் உள்ளார். மற்ற மனிதர்களைப் போல கிறிஸ்து கல்லறையில் அழிந்துவிடவில்லை என்பதை பேதுருவின் சாட்சி உறுதிப்படுத்துகிறது. மரணக் கட்டுகளை தகர்த்தெறிந்து, பிதாவாகிய இறைவனின் மகிமையில் இயேசு இப்போது வாசம் பண்ணுகிறார்.
யூதர்களுக்கு இந்த அதிர்ச்சியூட்டும் செய்தியை உறுதிப்படுத்தும்படி, அவர்கள் அநேக வருடங்கள் அறிந்திருந்த சுகமாக்கப்பட்ட அந்த மனிதனை அவர்கள் நடுவே நிறுத்தி பேசினார். அவனது புதுப்பிக்கப்பட்ட தசைகள், நேராக்கப்பட்ட எலும்புகள் பேதுருவின் சாட்சிக்கு சான்று பகர்ந்தது. மேலும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நிரூபணமாக்கியது.
அந்த சுகமாகுதல் கிருபையினால் மாத்திரம் வந்தது என்பதை பேதுருவின் அறிக்கை மூலமாக மருத்துவராகிய லூக்கா தெளிவுபடுத்திக் கொண்டார். இயேசுவின் மீதான விசுவாசம் என்பது கூட மனிதனுக்கு இரட்சகர் அருளும் கிருபையின் விளைவு தான்.இயேசு என்னும் நாமத்தின் மீதான விசுவாசம் அவருடைய பிரசன்னத்தை உறுதிப்படுத்துகிறது, அவரது இரட்சிக்கும் சித்தத்தைக் குறித்த நிச்சயத்தை தருகிறது, சிறந்த மருத்துவரான அவரிடம் ஒப்புக்கொடுப்பதைக் காண்பிக்கிறது. அவரது வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையை இறுகப் பற்றிக்கொள்கிறது. இயேசு என்னும் நாமம் முழுவதும் வல்லமையால் நிறைந்திருக்கிறது. இயேசு என்னும் ஒப்பற்ற நாமத்தின் வல்லமையை விட இந்த உலகில் வேறு கட்டி எழுப்பும் வல்லமை கிடையாது. பரிசுத்த ஆவியானவர் இந்த ஒப்பற்ற, அதிசயமான நாமத்தின் மூலம் மட்டுமே இரட்சிக்கிறார், சுகப்படுத்துகிறார், பரிசுத்தப்படுத்துகிறார். இந்த நாமத்தை மக்கள் மறக்கும்படியாகவும் அல்லது வேறு முக்கிய நாமங்களுக்கு இதை மாற்றியமைப்பதின் மூலம் சாத்தான் ஆயிரம் வழிகளில் இந்த நாமத்தை அழிப்பதற்கு முயற்சிக்கிறான். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இப்போதும் அருமையான சகோதரரே, நீங்கள் சத்தியத்தை கேட்பவர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தெய்வத்துவத்தின் பரிபூரணமெல்லாம் நாசரேத்தூர் இயேசு என்னும் மனிதனின் சரீரத்திலே தங்கியிருந்தது. எவர் ஒருவர் அவருக்கு தங்களை அர்ப்பணிக்கிறார்களோ, அவர்கள் அவருடைய வல்லமையை அனுபவிப்பார்கள். இறைவனின் நித்திய வல்லமை நமது பலவீனத்தை சரிசெய்து பலப்படுத்துகிறது.
இரட்சிக்கும் விசுவாசம் என்பது ஒரு மாபெரும் இரகசியம். ஒரு விசுவாசி இயேசுவின் நாமத்தின் மீது முழுமையான நம்பிக்கையை வைப்பதற்கு அதுவே தைரியத்தையும், உறுதியையும் தருகிறது. இரட்சகர் மீதான அவனது தொடர்ச்சியான பார்வை மூலம் அவனது நம்பிக்கை வளருகிறது. உங்களது அசைக்க முடியாத விசுவாசத்தையும், சிலுவையில் அறையப்பட்ட அவரை உறுதியாக பற்றிக் கொள்வதையும், அவரது உயிர்த்தெழுதலின் வல்லமையால் நீங்கள் ஆட்கொள்ளப்படுவதையும் அவர் எதிர்பார்க்கிறார். உன் விசுவாசம் உன்னை இரட்சித்திருக்கிறது

அப்போஸ்தலர் 3:17-26
17 சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்.18 கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் முன்னறிவித்தவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார். 19 ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும், 20 உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள். 21 உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும். 22 மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. 23 அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான். 24 சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள். 25 நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடேபண்ணின உடன்படிக்கைக்கும் புத்திரராயிருக்கிறீர்கள். 26 அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.
குழப்பம் அடைந்திருந்த யூதர்கள் முன்பு பேதுரு ஒரு நியாயாதிபதியாக நிற்கவில்லை. அவர்கள் மறுபடியும் பிறக்கவில்லை என்பதை அறிந்திருந்தும் அவர்களை “சகோதரரே” என்று அழைத்தார். இயேசு சிலுவையிலே அவர்களது எல்லா பாவங்களையும் மன்னித்துவிட்டார். அவர்களில் தங்கியிருப்பதற்கு ஆயத்தமாயிருந்த பரிசுத்த ஆவியானவரை அவர்கள் மீது ஊற்றினார். அந்த வாக்குத்தத்தம் அவர்களுக்கு மட்டும் உரியதல்ல, அவரை நம்பும் அனைவருக்கும் உரியது. அவர்கள் மீதான இறைவனின் கிருபையின் நோக்கங்கள் வெளிப்படுவதையும், அவர்களுக்காக காத்திருந்த இரட்சிப்பு அவர்களை ஊடுருவிச் செல்வதையும் பேதுரு ஏற்கெனவே திட்டவட்டமாய் அறிந்திருந்தார்.
அப்போஸ்தலர்களின் தலைவர் “பிதாவே இவர்களுக்கு மன்னியும், இவர்கள் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்” என்று விண்ணப்பம் செய்து துன்பங்களினூடே சிலுவை மரணத்தை அடைந்த இயேசுவின் வல்லமையை வெளிப்படுத்தினார். யூதர்கள் மற்றும் அவர்களின் தலைவர்களின் தவறுகளை தெளிவுடன் காண்பிக்கும் மிக முக்கிய வார்த்தைகள் இவைகள். பேதுருவின் வாயிலிருந்து தடையின்றி வந்த இந்த வார்த்தைகள் அவரது சொந்த அனுபவத்தை சார்ந்து இருந்தது. ஏனெனில் மறுதலித்த, சபித்த அவரையும் உயிர்த்தெழுந்த இயேசு மன்னித்து நீதிமானாக்கியிருந்தார். அவரது மறைவான பாவத்தையும் கூட அவர் கிருபையினால் மன்னித்திருந்தார். அவனது நற்செயல்களோ அவனது தூய நடக்கையோ அவனை மீட்கவில்லை. பேதுரு தனது சொந்த அனுபவத்தின் மூலம் உற்சாகம் அடைந்திருந்தார். அவர் இயேசு கிறிஸ்துவின் கிருபையை வெளிப்படையாகவும், முழுமையாகவும் வெளிப்படுத்தினார். அவர் ஏற்கெனவே அவருடைய வார்த்தையை கேட்டவர்களின் பாவத்தை சுட்டி காண்பித்திருந்தார். எல்லா உண்மையோடும், தெளிவோடும் அவர்களது இருதயத்தை வசனத்தால் ஊடுருவியிருந்தார். மனம் வருந்துகிற ஒரு விசுவாசியிடம் பரிசுத்த ஆவியானவர் நியாயத்தீர்ப்பையும், பாவத்தையும் உணர்த்திய பிற்பாடு, புத்துணர்வையும், ஆசீர்வதிக்கப்பட்ட ஆறுதலையும் தருகிறார்.
இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவரது வார்த்தைகளை அளப்பதற்கரிய ஆர்வத்துடன் பேதுரு கவனித்தார். கிறிஸ்துவின் பாடுகளின் மூலம் இந்த உலகம் இரட்சிக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை பேதுரு நன்கு உணர்ந்திருந்தார். எல்லா நல்ல தீர்க்கதரிசிகளும் முன்னுரைத்தபடி இறைவனின் ஆட்டுக்குட்டியானவர் மரிக்க வேண்டும். இறைவன் முன்பு அறியச்செய்திருந்த அவரது முதன்மையான சித்தம் இது தான். அவர் அனைத்து பாவங்களையும், முழு உலகத்தின் அவமானத்தையும் தன்னுடைய குற்றமற்ற குமாரன் மீது சுமத்தும்படி தீர்மானித்திருந்தார். நமக்குப் பதிலாக அவர் ஒருவர் மாத்திரமே இறைவனின் கோபாக்கினையின் அக்கினியில் மரிப்பதற்கு தகுதியானவரும், உகந்தவரும் ஆவார். பரலோக பிதா தனது குமாரனை பலியாகக் கொடுப்பதற்கு பதிலாக அவரே ஒருவேளை தீய உலகிற்காக மரிக்கும்படி விரும்பியிருக்கலாம். ஆனால் அவரது மகத்துவமான தன்மையில் அவர் முழு பிரபஞ்சத்தையும் தாங்குபவராக இருக்கிறார். தனது குமாரனை நமக்குப் பதிலாக கொடுப்பதைத் தவிர அவருக்கு வேறு வழி இல்லை. இயேசுவின் மரணம் என்ற பரிகாரப்பலியின்றி மன்னிப்பு கிடையாது.
இயேசு மனமுவந்து பாடுபடுவதற்கு தன்னை அர்ப்பணித்ததின் விளைவு தான் கண்களால் காணக்கூடிய கிறிஸ்துவுக்கு அளிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் ஆகும். சிலுவையைக் குறித்து தியானிக்கும் ஒருவன் இறைவனின் இருதயத்திற்குள் சென்று பார்க்கிறான். அவர் அழிந்து போகக் கூடிய பாவிகளை நேசித்ததினால் தனது கீழ்ப்படிதலுள்ள குமாரனை கொடுத்தார். கனியற்ற அக்கிரமக்காரர்களை பரிசுத்தப்படுத்தி, தனக்குள் நிலைத்திருக்கச்செய்து, அதிக கனிகளை கொடுக்க வைக்கிறார்.
கொலைகாரர்களின் கைகளில் நாசரேத்தூர் இயேசு மரித்தது ஒரு விபத்து அல்ல என்பதை பேதுரு பழைய ஏற்பாடு மூலம் உறுதிப்படுத்தினார். அவர் பிதாவின் சித்தத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்து மரித்தார் என்பதை தெளிவுபடுத்தினார். பின்பு தன்னைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் மனந்திரும்பும்படியாக அவர்களுக்கு சவால் விடுத்தார். மனந்திரும்புதல் என்பது வெறுமனே ஒரு துக்க உணர்வோ, வெட்கத்தினால் ஏற்படும் கண்ணீரோ அல்ல. மாறாக முழுவாழ்விலும் ஏற்படும் முழுமையான மாற்றம் ஆகும். தவறான குறிக்கோள்களை விட்டுவிட்டு தெய்வீகத்தன்மை வாய்ந்த உண்மை குறிக்கோளாய் இருக்கக்கூடிய கிறிஸ்துவிடம் திரும்புவதை அது முக்கியப்படுத்துகிறது. இந்த மனந்திரும்புதல் என்பது பாவங்களை அறிக்கையிடுவது, இறைவனின் கோபத்திற்கு நாம் ஏதுவானவர்கள் என்று ஒத்துக்கொள்வது, இலவசமான கிருபையில் விசுவாசம் வைப்பது, அவர் நமக்கு அளித்திருக்கும் அளவிட முடியாத மன்னிப்பில் தொடர்ந்திருப்பது என்று அனைத்தையும் உள்ளடக்கியது ஆகும். இறைவனுக்கு முழுமையாக ஒப்புக்கொடுத்தலும். உடைந்த இருதயமும் அளவற்ற முழுமையான கிருபையில் சந்திக்கிறது. கிறிஸ்து மாத்திரமே சிலுவையிலே நமது இரட்சிப்பை நிறைவேற்றுகிறார். அவர் மீது விசுவாசம் வைப்பவர்களை நீதிமான்களாக்குகிறார்.
இறைவனின் நீதி நமது இருதயங்களில் தங்கும் போது பரிசுத்த ஆவியானவரின் வரங்கள் வெளிப்பட்டு, இறைவனுடைய சமாதானம், விடுதலை அருளப்படுகிறது. இயேசுவைப் பின்பற்றுபவர்களின் இருதயங்களில் அவர் தங்கியிருக்கிறார் என்பதையோ அல்லது கிறிஸ்துவின் மரணம் குறித்த இறையியல் உண்மைகளின் பட்டியலையோ மட்டும் கிறிஸ்துவின் மீது விசுவாசம் மற்றும் உண்மையான மனந்திரும்புதல் உறுதிப்படுத்தவில்லை. மாறாக இந்த விசுவாசத்தின் மூலம் ஒருவருக்குள் தங்கியிருக்கும் பரிசுத்த ஆவியானவரின் தெய்வீக வல்லமையை பெற்றுக்கொள்ள முடிகிறது. அருமையான சகோதரனே; இறைவனுடனான ஐக்கியத்திற்குள் நீ பிரவேசித்திருக்கிறாயா? நீங்கள் மனந்திரும்பியுள்ளீர்களா? உங்களது வாழ்வின் அமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதா? கிறிஸ்துவை உங்கள் வாழ்வின் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் புதிய உடன்படிக்கையில் தொடர்ந்து இருப்பீர்கள், பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவீர்கள்.
அருமையான சகோதரரே, சற்று கவனமாக இருங்கள். புதிய உடன்படிக்கையின் முதன்மையான நோக்கம் பாவங்களை மன்னிப்பது அல்லது நித்திய வாழ்வை பெற்றுக்கொள்வது அல்லது அற்புதமான பரிசுத்த ஆவியானவரின் வரங்களைப் பெறுவதும் அல்ல, மாறாக அது கிறிஸ்துவை நமக்குள் பெற்றிருப்பது ஆகும். எல்லா படைப்புகளும் அவருக்காக காத்திருக்கின்றன. படைத்தவருக்கும் படைப்புகளுக்கும் இடையே உள்ள பிரிவினை முடிவுக்கு வரும்படி சர்வசிருஷ்டியும் ஏங்குகிறது. அவரது ஜீவனின் வல்லமை அனைத்தையும் மேற்கொள்ளும். அழியும் பிரபஞ்சத்தை புதுப்பிக்கும். நாம் அனைவரும் இதற்காகவே ஏங்கித் தவிக்கிறோம். இன்று ஒரு விசுவாசியில் ஏற்படும் இந்த புதுப்பித்தல் கிறிஸ்துவின் வருகையின் போது நாம் அடைய உள்ள முழு மகிமைக்கு ஆதாரமாக உள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் மனிதனின் பாவத்தினால் ஏற்பட்ட வீழ்ச்சியை சரிசெய்து மீண்டும் பரிபூரண நிலையை அவர் அடையச் செய்வார்.
கர்த்தரின் வருகைக்கான ஆயத்த காலம் என்பதின் பின்னணியத்தில் சீஷர்கள் இயேசுவின் பரமேறுதலை புரிந்து கொண்டார்கள். பரமேறிச் சென்று பிதாவுடன் இருக்கின்ற காலம், பூமியில் ஆவிக்குரிய ஓர் எழுப்புதலுக்கு அவசியமான காலம் என்பதை இயேசு அறிந்திருந்தார். அவருடைய பரமேறுதல் முழு சிருஷ்டியை ஒப்புரவாக்கவும், மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவும் வழியைத் திறந்தது. கிறிஸ்துவின் பரமேறுதலின் போது பரிசுத்த ஆவியானவர் மக்களில் தங்கி செய்யும் புதுப்பிக்கும் பணியானது உறுதிப்படுத்தப்பட்டது.
எல்லா உண்மை தீர்க்கதரிகளும் கிறிஸ்துவின் வருகை தான் உலக வரலாற்றின் முடிவு என்பதை கூறுகிறார்கள். நமது முடிவு என்பது நியாயந்தீர்ப்பு அல்ல, அது எல்லாவற்றையும் அதனுடைய உண்மை நிலைக்கு மறுபடியும் கொண்டு வருவதால் ஏற்படும் மகிழ்ச்சி, புதுப்பித்தலின் சந்தோஷம் ஆகும். வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட மோசே என்ற தீர்க்கதரிசி சுட்டிக் காண்பித்தவர் தான் படைப்பின் மையம் ஆவார். மோசே மூலம் கொடுக்கப்பட்ட பழைய உடன்படிக்கையைத் தள்ளி புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தியவர் ஆவார். இறைவனுடன் இந்த புதிய உடன்படிக்கைக்குள் வர மறுக்கும் அனைவருக்கும் எந்த நம்பிக்கையும் கிடையாது. கிருபையை புறக்கணிக்கிற கல்லான இருதயம் கொண்டோருக்கு நம்பிக்கை கிடையாது. கிறிஸ்துவைப் புறக்கணிக்கும் அனைத்து மக்களையும் இறைவன் பட்சித்துப் போடுவார். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுதல் அல்லது நிராகரித்தலின் காணக்கூடிய விளைவு தான் உலக வரலாறு ஆகும்.
பேதுருவின் கருத்து செறிந்த இந்த அறிக்கைக்குப் பின்பு, யூதர்களை இயேசுவை ஏற்றுக்கொள்ளும்படி அவர் உற்சாகப்படுத்தினார். அவர்கள் தீர்க்கதரிசிகளின் பிள்ளைகள் என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தினார். அவர்களுடைய பிதாக்களுடன் இறைவன் ஏற்படுத்திய உடன்படிக்கையின் பங்காளிகள் என்பதை தெளிவுபடுத்தினார். தனக்குச் சமமான நிலையில் இருந்து மக்கள் தன்னுடன் உடன்படிக்கையை ஏற்படுத்த முடியாது என்பதை இறைவன் அறிந்திருந்தார். எனவே தான் பாவம் நிறைந்த, தற்காலிகமான, முரட்டாட்டம் பண்ணுகிற மனிதனின் நிலைக்கு நித்தியமான, பரிசுத்தமான சிருஷ்டி தன்னை உட்படுத்தினார். இதுவே அவரது மாபெரும் கிருபையின் சாராம்சம் ஆகும்.
கலகம் செய்த மனிதர்களுடனான இறைவனின் வரலாறு ஆபிரகாமை அவர் தெரிந்தெடுத்ததில் ஆரம்பித்தது. அவனது சந்ததியில் வரும் ஒருவர், மாம்சத்தில் வெளிப்பட்டு இறைவனின் ஆசீர்வாதங்களை பூமியில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொடுப்பார் என்று பரிசுத்தமான இறைவன் இந்த மனிதனிடம் சொன்னார். சாத்தானின் எதிர்ப்பு மற்றும் மனிதனின் தோல்வி இவைகளின் மத்தியிலும் இறைவன் தனது திட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். பழைய உடன்படிக்கையின் முடிவை பரிசுத்த ஆவியானவர் கொண்டு வரும் நாள் வருகிறதை இறைவன் உணர்ந்தார். அனைத்து மக்களையும் இறைவனுடன் ஐக்கியம் கொள்ளும்படி அழைத்தார். அதற்கு முன் பேதுரு யூதர்களுக்கு அந்த கிருபையை காண்பித்தார். இறைவனை விசுவாசித்தவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள்.
இறைவன் தன்னுடைய குமாரனை சிலுவையில் அறைந்த தனது எதிரிகள் மனந்திரும்பும் படியான ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தார். கிறிஸ்து தனது பிதாவின் சித்தத்திற்கு முழுவதுமாக இசைந்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் குமாரனை மகிமைப்படுத்தி உயர்த்தினார். இறைவனின் ராஜ்யத்தின் எல்லைக்குட்பட்ட தம்மை பின்பற்றுபவர்கள் மீது ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை குமாரன் பொழிந்தருளும்படி செய்கிறார். ஆண்டவர் ஆயத்தப்பட்டு கேட்பவர்களின் இருதயங்களை ஆசீர்வதிக்கிறார். அவர்கள் திரும்பும்படியாகவும், மனந்திரும்பும்படியாகவும் வழி நடத்துகிறார். மனிதன் தானாகவே மனந்திரும்ப முடியாதவனாக இருக்கிறான். பரிசுத்த ஆவியானவர் தான் கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைக்கும்படி உதவுகிறார். மனிதன் தன்னுடைய துன்மார்க்கத்திலிருந்து மனந்திரும்பவில்லையென்றாலும், தனது வன்மத்தை விட்டுவிடவில்லையென்றாலும், அவன் ஒருபோதும் கிறிஸ்துவுடனான ஐக்கியத்திற்குள் வர இயலாது. நாம் அனைவரும் ஆயத்தத்துடன், முழு விருப்பத்துடன் இறைவன் பக்கம் திரும்பும்படி அவர் எதிர்பார்க்கிறார். வரப்போகும் முழுமையான ஒப்புரவாக்குதலின் பணியை அவர் நம்மில் தொடங்கியிருக்கிறார். பிரியமான விசுவாசியே, நீ உன்னுடைய பாவங்களை விட்டுவிட்டாயா? கிறிஸ்துவை நீங்கள் உறுதியாய் பற்றிக் கொண்டீர்களா?


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.