அப்போஸ்தலர் நடபடிகள் 2:24-47 விளக்கவுரை

அப்போஸ்தலர் நடபடிகள் 2:24-47 விளக்கவுரை



அப்போஸ்தலர் 2:33-36 
33 அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார். 34 தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும், 35 நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான். 36 ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.



இரட்சிப்பைக் குறித்த ஒரு நீண்ட அறிமுகத்திற்குப் பிறகு, இறைவனால் அனுப்பப்பட்டு, சிலுவையில் அறையுண்டு மரணத்தைத் தழுவி, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்படுவதற்கும் இடையிலான தொடர்பை பேதுரு எடுத்துரைக்கிறார். இயேசுவின் வருகையும், மரணமும், உயிர்த்தெழுதலும் ஒரு புதிய யுகத்தின் தொடக்கத்திற்கு இன்றியமையாதவை. ஏனெனில் அவருடைய மரணமும் உயிர்த்தெழுதலுமின்றி பரிசுத்த ஆவியானவர் இவ்வுலகத்திற்கு வர முடியாது.

இயேசு தம்முடைய பிதாவின் சித்தம் அனைத்தையும் இசைவாக நிறைவேற்றி, பரமேறி, அவருடைய வலது பக்கத்தில் அமர்ந்தார். யூதர்களால் அவமதிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டவருக்கு இறைவன் மிக அதிகமான கனத்தையும் மகிமையையும் பொழிந்தருளினார். வானத்திலும் பூமியிலும் அனைத்து அதிகாரங்களையும் பிதா குமாரனுக்குக் கொடுத்தார். மேலும் பிதாவினுடைய வாக்குத்தத்தை நிறைவேற்றும் அனைத்து வல்லமையையும் அவருக்குக் கொடுத்திருந்தார். தம்மை விசுவாசித்து, தம்மிடம் விண்ணப்பம் செய்யும் தமது சீடர்களுடைய உள்ளத்தில் வாழும்படி அவர் தம்முடைய பரிசுத்த ஆவியைப் பொழிந்தருளினார். கிறிஸ்து சிலுவையின் மூலமாக நம்மைப் பிதாவோடு ஒப்புரவாக்கிய காரணத்தினாலேயே பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டார். அவர் நமக்காக பரிசுத்த பிரதான ஆசாரியனாக நமக்காகப் பரிந்துபேசுகிறார். கிறிஸ்துவின் பரிந்துபேசும் பணியே பரிசுத்த ஆவியானவரை நமக்குப் பொழிந்தருளியது.

உண்மையில் இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு யாரும் இறைவனுடைய கிருபாசனத்தை நெருங்கி நமக்காக பரிந்துரை விண்ணப்பத்தை ஏறெடுக்க முடியாது. அனைத்து தீர்க்கதரிசிகளும், அரசர்களும், அனைத்து மதங்களை நிறுவியவர்களும் ஒன்று தங்கள் கல்லறைகளில் புதைக்கப்பட்டு அதில் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அல்லது ஆபிரகம், மோசே, மற்றும் எலியா ஆகியோரைப் போல பரலோகத்தில் இளைப்பாறுகிறார்கள். கிறிஸ்து மட்டுமே பிதாவாகிய இறைவனோடு இணைக்கப்பட்டு மிக நெருக்கமாயிருக்கிறார். நித்திய காலமாகவே குமாரனில் பிதாவும், பிதாவில் குமாரனும் வாழ்கிறார்கள். பரிசுத்த ஆவியின் வெளிப்பாட்டில் தீர்க்கதரிசியாகிய தாவீது பிதாவிற்கும் குமாரனுக்கும் இடையிலான ஐக்கியத்தைக் கண்டார். தூதர்களுடைய துதிப்பாடல்களினால் சூழப்பட்டவராக, குமாரன் மீண்டும் பரலோகத்திற்கு எழுந்தருளிச் சென்றபோது, பிதா குமாரனிடத்தில் என்ன சொன்னார் என்பதை தாவீது காதுகொடுத்துக் கேட்டார். “நீர் உம்முடைய சிங்காசனத்தில் அமர்ந்து ஓய்ந்திரும். உம்முடைய மனித உடலில் பட்ட பாடுகளினால் நீர் உம்முடைய பணியை நீர் முடித்திருக்கிறீர். நீர் இரட்சிப்பை நிறைவேற்றி விட்டீர். இப்போதிலிருந்து நான் என்னுடைய பரிசுத்த ஆவியின் வல்லமையோடு செயல்படப் போகிறேன். அவர் என்னை மெய்யாகத் தேடுகிற அனைவர் மீதும் இரட்சிப்பைப் பொழிந்தருளி, அநியாயக்காரரையும், அகங்காரிகளையும் நியாயத்தீர்ப்பில் கொண்டுவந்து நிறுத்துவார்.

பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்பட்டதிலிருந்து மனிதர்கள் மீதான நியாயத்தீர்ப்பு ஆரம்பமாகிவிட்டது. கிறிஸ்துவை யூதர்கள் விசுவாசித்து, மனந்திரும்பாவிட்டால் அவர்கள் அவருக்குப் பாதபடியாகிப் போவார்கள் என்று அவர்களுடைய முகத்திற்கு முன்பாகவே பேதுரு அறிவித்தார். அவர்கள் கண்ணீரோடு மனந்திரும்பி இறைமகனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர்கள் மீது தண்டனை வரும். இந்தப் பயங்கரமான எச்சரிப்பின் வார்த்தைகள் பூமியன் அனைத்துக் கண்டங்களில் இருக்கும் அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தும். மனிதர்களுடைய பல்வேறு பிரிவுகளுக்கும் மதங்கள் அனைத்துக்கும் இந்த நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் பொருத்தமானவைகளே. இறைமகனை ஏற்றுக்கொள்ளாதவர்கள், கட்டப்பட்டு நித்திய காலத்திற்கும் கிறிஸ்துவின் பாதத்தின் கீழ் வைக்கப்படுவார்கள்.

பெந்தகொஸ்தே நாளிலிருந்து பரிசுத்த ஆவியானவர் எந்தவிடத் தடையுமின்றி பூமியின் அனைத்து இடங்களிலும் வாழ்கிறார் என்று பேதுரு அந்த மக்களுக்குக் காண்பித்தார். கடவுளுக்கும் மனிதருக்கும் இடையிலிருந்த பிரிவினைச் சுவரைக் கிறிஸ்து அகற்றிவிட்டார். தெய்வீக அன்பின் அலை தொடர்ந்து வீசுகிறது. இன்று யாரெல்லாம் விசுவாசம்கொள்கிறார்களோ அவர்களுக்கு இரட்சிப்பு கிடைக்கிறது.

பெரும்பாலான யூதர்களின் உள்ளத்தில் சத்திய ஆவியானவர் வாசம்செய்ய முடியவில்லை. காரணம் கிறிஸ்துவின் மரணத்திற்குப் பிறகுகூட பழைய ஏற்பாட்டின் மக்களாகிய அவர்கள் அவரைப் புறக்கணித்துக் கொலைசெய்தார்கள். அவர்களுடைய இருதயங்களை உருவக்குத்தும் வார்த்தைகளைப் பேசும்படி பரிசுத்த ஆவியானவர் பேதுருவை வழிநடத்தினார்: “பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இறைவனுடைய வலது பக்கத்தில் அமர்ந்து நசரேத்து வாலிபனாகிய இயேசு நூறு சதவீதம் கர்த்தராகவே இருக்கிறார். அவர் மெய்யான இறைவனிடத்திலிருந்து வரும் மெய்யான இறைவன். நீங்கள் சிலுவையில் அடித்துக்கொலைசெய்தவரே அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்துவாயிருக்கிறார்.” இந்த வார்த்தைகளினால் யூதர்கள் தங்கள் வரலாற்றின் உச்சகட்டத்தை அவர்கள் கைப்பற்றத் தவறிவிட்டார்கள் என்பதை அப்போஸ்தலர்கள் அனைவரிலும் அதிக வெளிப்படையாகப் பேசும் தன்மையுடைய பேதுரு இங்கு அறிவிக்கின்றார். அவர்கள் இறைவன் தங்களோடு செய்த உடன்படிக்கையின் பொருளைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல் அதை மீறிவிட்டார்கள். சர்வ வல்லவரின் பெயரினால் பேதுரு இவ்வாறு யூத இன மக்களுடைய மனதைக் காயப்படுத்தினார். இவ்வாறு அவர்கள் மனிதனால் நியாயத்தீர்ப்புக்கு உள்ளாகாமல், இருதயங்களை ஊடுருவி ஆராயும் இறைவனுடைய நியாயத்தீர்ப்புக்கு உட்பட்டார்கள்.


ஆரம்பத்தில் சீடர்கள் பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தினால் நிறைந்ததைப் பார்த்த சில யூதர்கள் அவர்கள் குடிபோதையில் உளறுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார்கள். அவர்களுக்கு பேதுரு வாதத்தின் மூலமாக உண்மையைப் புரியவைக்காமல் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அவர்களுடன் பேசினார். பரிசுத்த ஆவியானவர் யார் என்றும், அவர் எங்கிருந்து வருகிறார் என்றும், அவருடைய இருப்பிற்கான காரணம் என்ன என்றும் அவர் அவர்களுக்கு விளக்கினார். இறுதியாக, கிறிஸ்துவைக் கொலைசெய்ததே அந்த மக்களுடைய குற்றம் என்பதை அதிக கண்டிப்புடன் அவர்களுக்கு உணர்த்தினார். இதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் சத்தியத்தில் ஒருபோதும் சமரசம் செய்வதோ அல்லது பொய்யை சத்தியத்துடன் கலப்பதோ இல்லை என்ற உண்மையை நாம் காண்கிறோம். அவர் நம்முடைய கீழ்ப்படியாமையைக் கண்டித்து, நமது பெருமையை அழித்துப் போடுகிறார். இன்று நீங்கள் அவருடைய சத்தத்தைக் கேட்டால் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்.ஏற்பட்ட பயன் 

(அப்போஸ்தலர் 2:37-41)
அப்போஸ்தலர் 2:37-38 
37 இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். 38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

ஒரு மனிதன் மெய்யாகவே மனந்திரும்பி தன்னுடைய பழைய வாழ்க்கையைப் புறக்கணிக்காவிட்டால் அவனில் பரிசுத்த ஆவியானவர் வாழமாட்டார். ஒவ்வொரு பாவமும் இறைவனுக்கும் அவரால் அபிஷேகம் பண்ணப்பட்டவருக்கும் எதிரான மீறுதலாயிருக்கிறது. அதனால்தான் பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயத்திற்குள் குடியிருப்பதற்கு வருவதற்கு முன்பாக அதிலிருக்கும் கீழ்ப்படியாமையை அவர் உடைக்கிறார். அதன் பிறகுதான் நாம் அவருடைய பரிசுத்த ஆலயமாக ஏற்படுத்தப்பட முடியும். பரிசுத்த ஆவியானவரின் இந்த நியாயத்தீர்ப்பு ஒரே வேளையில் மாபெரும் ஆசீர்வாதமாகவும், ஆசீர்வாதங்கள் அனைத்திலும் மேலானதாகவும் காணப்படுகிறது. பரிசுத்த ஆவியானவரின் இந்த நியாயத்தீர்ப்பையும் கடிந்துகொள்ளுதலையும் நொருங்குண்ட மனதோடு பெற்றுக்கொள்ளும் ஒருவர் நித்திய தண்டனையிலிருந்து தப்பித்து, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்கிறார்.

பரிசுத்த ஆவியானவரின் வருகையின்போது உண்டான சத்தத்தை அறிந்த யூதர்கள் சீடர்கள் இருந்த வீட்டிற்கு ஓடிச்சென்றார்கள். பேதுரு பேசியதைக் கேட்டபோது துக்கமும், எச்சரிக்கையும் அடைந்தார்கள். அவர்கள் உயிருள்ள இறைவனுக்கு முன்பாக நிற்கும் தாங்கள் கீழ்ப்படியாத சொலைகாரர்கள் என்பதையும் இறைவனுடைய கோபத்தினால் வரும் தண்டனைக்கு உரியவர்கள் என்பதையும் அறிந்துகொண்டார்கள். அவர்கள் தங்களை நியாயப்படுத்தவோ அவர்களுடைய குற்றத்தைப் பற்றி கேள்வி கேட்கவோ முற்படவில்லை. மாறாக, அவர்கள் பயத்தோடு, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். இந்தக் கேள்வி இரண்டு காரியங்களை வெளிப்படுத்துகிறது.

முதலாவது, ஒரு மனிதன் பரிசுத்த ஆவியினால் உணர்த்தப்பட்டு, தான் இறைவனை விட்டு விலகிச் செல்கிறேன் என்பதை அறிந்துகொள்ளும்போது தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாத பரிதாப நிலையில் இருக்கிறான். பேதுரு இயேசுவை மறுதலித்ததும் சேவல் கூவியபோது எவ்வாறு பேதுருவின் தன்னம்பிக்கை முற்றிலும் தகர்ந்துபோனதோ அதேபோல பாவ உணர்வு பெற்றவனும் தன்நம்பிக்கையை இழந்து போகிறான்.

இரண்டாவது, உள்ளம் உடைந்த ஒருவன் இறைவனையும் அவர் தனக்காக என்ன செய்திருக்கிறார் என்பதையும் முழுவதும் அறியாத நிலையில் இருக்கிறான். அவன் செய்யக்கூடியது “நான் இரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும்?” என்று தன்னிடமே கேட்டுக்கொள்வது மட்டும்தான். நம்முடைய செயல்கள் அனைத்தும் பரிசுத்தமுள்ள இறைவனுக்கு முன்பாக பயனற்றவையாகவும் அசுத்தமானதாகவும் காணப்படும். ஒவ்வொரு மனிதனும் தன்னில்தானே குதர்க்கமானவனாக காணப்படுகிறான். தன்னுடைய இரட்சிப்புக்காக தானே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று கருதும் மனிதன் இறைவனைத் தனக்காக எதையும் செய்வதற்கு அனுமதிப்பதில்லை. இயற்கை சுபாவமுள்ள மனிதன் தன்னைத் தானே திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறான். அவன் தன்னைத் தானே நீதிமானாக்கவும் சுய விடுதலையைப் பெற்றுக்கொள்ளவும் விரும்புகிறான். அவன் இறுதிவரை தன்னுடைய சுய பலத்திலேயே வாழ விரும்புகிறான். தீமையும் சீரழிவும் நிறைந்த சுயம் நியாயத்தீர்ப்பு நாள்வரையிலும் அவனை ஆட்கொள்கிறது.

மனந்திரும்பியவர்கள் சுயமாக என்ன செய்ய வேண்டும் என்று பேதுரு சொல்லவில்லை. அதற்காக நாம் இறைவனுக்க நன்றி செலுத்துவோம். அதற்கு மாறாக அவர்களுடைய சிந்தனையிலும் இயேசுவைக் குறித்த நம்பிக்கையிலும் மாற்றம் வேண்டும் என்று பேதுரு கோரினார். மனமாற்றம் என்பது சரீரத்திலோ மூளையிலோ ஏற்படும் மாற்றமல்ல. அது உள்ளத்திலும், சித்தத்திலும், ஆழ்மனதிலும் ஏற்படும் மாற்றமாகும். அது நம்முடைய சிந்தனைகள், உணர்வுகள், சித்தம் ஆகியவற்றில் ஏற்படும் முழுமையான மாற்றத்தை உள்ளடக்கியது. சர்வாதிகார நாடுகளில் நடைபெறுவதைப் போல அது மூளைச்சலைவையின் மூலமாக ஏற்படும் மாற்றம் அல்ல. புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி இறைவனுடைய வல்லமைக்கு ஒருவன் தன்னைத் திறந்துகொடுப்பதால் ஏற்படும் மனப்பூர்வமான மாற்றமாயிருக்கிறது. அதன் பிறகு அவன் கிறிஸ்துவின் வார்த்தைகளையும் அவருடைய அப்போஸ்தலருடைய வார்த்தைகளையும் மகிழ்ச்சியோடும் நன்றியுள்ள இருதயத்தோடும் கேட்டுப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறான்.

மனமுடைந்த மக்களைப் பார்த்து பேதுரு பேசுகிறார்: “உங்களுடைய தீய வழிகளை விட்டுத் திரும்புங்கள். உங்களை நீங்களே மீட்கும் முயற்சியைக் கைவிடுங்கள். உங்கள் வாழ்வின் தோல்விகளையும் இறைவனுக்கு நீங்கள் கீழ்ப்படியாமல் செய்த பாவங்களையும் அவரிடம் வெளிப்படையாக அறிக்கை செய்யுங்கள். பரிசுத்தருடைய கரங்களில் உங்கள் வாழ்வை ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது மட்டுமே உங்கள் நோக்கங்களும், எதிர்பார்ப்புகளும், திட்டங்களும் நிறைவடையும். உங்களுக்கான இறைவனுடைய சித்தத்தை நீங்கள் நிறைவேற்ற முடியும். உலக திட்டங்களிலிருந்தும் சுயநலத்திலிருந்தும் திரும்பி, இறைவனை நோக்கிச் செல்லும்படி ஒருவருடைய வாழ்வின் பாதையில் ஏற்படும் மாற்றமே உண்மையான மனமாற்றமாகும். அப்பொழுதுதான் அந்த நபர் இறைவனுடைய அன்பினால் நிறைந்திருக்க முடியும்.

நாம் இறைவனிடத்தில் வருவது நம்முடைய மீட்பையும், பரிசுத்தரிடத்திற்குத் திரும்புவது அழிவிலிருந்து விடுதலையடைவதையும் வெளிப்படையாகக் காண்பிக்கிறது. மனந்திரும்பிய மனிதனுடைய மனதில் இறைவன் இருந்து அவனுக்குப் பாதுகாப்பு அருள வேண்டியது அவசியமாயிருக்கிறது. அதனால்தான் அவர்கள் இயேசுவின் நாமத்தினால் திருமுழுக்குப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பேதுரு குறிப்பிட்டார். பழைய மனிதன் பாவத்திற்கு இறந்துபோவதையும் மீட்பருடைய புதிய உலகத்திற்குள் விசுவாசி நுழைவதையுமே அந்தத் திருமுழுக்கு காண்பிக்கிறது. கிறிஸ்துவுக்குள்ளாக திருமுழுக்குப் பெற்றுக்கொள்ளும் ஒருவர் அழிந்துபோகும் நபருக்கு ஒப்பாக இருக்கிறார். தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கும் ஒருவர் இறைவனுடைய கிருபையினால் மீட்கப்படுகிறார். அவர் ஒரு புதிய படைப்பாக மாற்றப்பட்டு, உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படுகிறார். பிதாவினுடைய மகிமைக்காக கிறிஸ்துவினுடைய நீதி அவருக்கு அருளப்படுகிறது. நம்முடைய உள்ளான மனிதனில் உள்ள பாவங்களை நீக்கிச் சுத்திகரிக்கப்படுவது திருமுழுக்கின் முதல் பலனாயிருக்கிறது. கிறிஸ்துவோடு இணைக்கப்படும் ஒருவருடைய நெற்றியில் அவர் கர்த்தருக்குரியவர் என்பது யாருக்கும் தெரியாத எழுத்துக்களில் பொறிக்கப்படுகிறது. இறைவனுடைய மகனுடைய ஒப்புரவாகுதலினால் அவர் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறார்.

இரண்டாவது, திருமுழுக்கின் பயனாக ஒருவர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறார். யோவான் தான் கொடுத்த திருமுழுக்கு மனந்திரும்புதலுக்காகக் கொடுக்கப்பட்ட வெறும் அடையாளம் என்றும் அது கிறிஸ்துவினால் கொடுக்கப்படும் திருமுழுக்கிற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறது என்றும் அறிந்திருந்தார். அவர் வெளிப்படையாகவே அதைச் சொல்லியிருந்தார்: “எனக்குப் பின் வருகிறவர் என்னிலும் வல்லமையுள்ளவர். அவர் உங்களுக்கு ஆவியினாலும் அக்கினியினாலும் திருமுழுக்குக் கொடுப்பார்”. பெந்தகொஸ்தே நாளின்போது முதன்முதலாக வரலாற்றில் இந்த இரட்சிப்பு நிறைவேறும் தருணம் நடைமுறைக்கு வந்தது. தன்னைக் கொலைசெய்த பாவத்திலிருந்து மனந்திரும்பிய பாவிகளுக்கு கிறிஸ்து பரிசுத்த ஆவியினாலே திருமுழுக்குக் கொடுத்தார். அவர்கள் அதற்காக தண்ணீர் திருமுழுக்கினால் ஆயத்தம்செய்யப்பட்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் உள்ளத்தில் நொருக்கப்பட்டவர்களாக விசுவாச உலகத்திற்குள் நுழைந்தார்கள். இறைவனுடைய அன்பு அவர்கள் அனைவருடைய அறிவுக்கும் அப்பாற்பட்டதாயிருந்தது.

அன்புள்ள சகோதர, சகோதரியே, நீங்கள் திருமுழுக்குப் பெற்று விட்டீர்களா? நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டீர்களா? திருமுழுக்கு என்னும் வெளியான சடங்கு உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுத் தராது. அது நோயாளிக்கு போடப்படும் ஊசியைப் போன்றதல்ல. பரிசுத்த ஆவியானவர் காற்றைப் போல தமக்குச் சித்தமான இடத்தில் வீசுகிறார். எனவே விசுவாசமில்லாத திருமுழுக்குப் பயனற்றதாயிருக்கிறது. உங்களுடைய அன்பின் மூலமான கிறிஸ்து உயர்த்தப்பட்டு, மற்றவர்களுக்கு வெளிப்படும்படி உங்கள் சுயநலத்தை அழித்து உங்கள் திருமுழுக்கின் அனுபவத்தை உறுதிசெய்யுங்கள். ஒரு நாளில் அவரோடு நீங்கள் என்றும் வாழப்போகிறீர்கள். பரிசுத்த ஆவியானவரினால் திருமுழுக்குப் பெற்றவர்களுடைய சிறப்பான குணாதிசயங்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அன்பு, சந்தோஷம், சமாதானம், சாந்தம், நீதி, விசுவாசம், இரக்கம், பொறுமை, இச்சையடக்கம் ஆகியவையே அவை. இந்த கொடைகளை நீங்கள் பரிசுத்த ஆவியிடமிருந்து பெற்றுவிட்டீர்களா?

அப்போஸ்தலர் 2:39-41 
39 வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; 40 இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டுவிலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். 41 அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

தங்கள் மனதிலே குத்தப்பட்டவர்களாகி மனந்திரும்பிய அந்த மக்கள் கூட்டம் கிறிஸ்துவிடம் வரலாம் என்று பேதுரு அவர்களுக்குச் சொன்னார். அவர்கள் உண்மையில் மனந்திரும்பி, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளத் தக்கதாக திருமுழுக்கைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே காரியம். அவர் அவர்களை இந்த அறிவில் பலப்படுத்தி, இறைவனுடைய அன்பின் மேன்மையை அவர்களுக்கு தெளிவுபடுத்தும்படி அவர்களிடம்:

“பரிசுத்த ஆவியானவர் இறைவன் நமக்கு வழங்கும் கொடை, அவரை நாம் நம்முடைய முயற்சியினால் சம்பாதிக்க முடியாது.” இறைவன் நம்முடைய இருதயங்களில் வந்து வாழ்வதற்கு நம்மில் யாருக்கும் தகுதியில்லை. கிறிஸ்துவின் சொந்த இரத்தத்தினாலே அவர் சம்பாதித்த இந்தக் காரியம் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய சலாக்கியமாகும். கிறிஸ்து சிலுவையில் மரணத்தை ருசிபார்த்திருக்கவில்லை என்றால் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள நாம் தகுதியானவர்கள் அல்ல. அவர் நமக்காக மரணத்தை ருசிபார்த்து, அனைத்து மனிதர்களுடைய பாவங்களையும் நீக்கிவிட்டார். ஆகவே எந்தப் பிரச்சனையும் இன்றி நாம் அனைவருமே பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் நாம் இறைவனுக்கு முன்பாக நம்முடைய நிலையை உணர்ந்து, மனந்திரும்பி, பாவங்களை அறிக்கை செய்து, அவற்றை விட்டுவிடும்படி தீர்மானிக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் பரிசுத்தராயிருக்கிற காரணத்தினால் அவர் நம்முடைய பொய்களோடும் அசுத்தத்தோடும் ஒத்துப்போக முடியாது. சத்திய ஆவியாகிய அவர் குமாரனை மகிமைப்படுத்தி, நம்முடைய பெருமையைத் தாழ்த்துகிறார். நீங்கள் அவருடைய திட்டத்திற்கு உங்களை ஒப்புக்கொடுத்து, இறைவனுடைய மகனாகிய கிறிஸ்துவை விசுவாசித்தால் நீங்கள் இறைவனோடு ஒப்புரவாக்கப்படுவீர்கள். அப்பொழுது நீங்கள் நீதிமான்களாக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்படுவீர்கள். நீங்கள் கிறிஸ்துவுக்கும் பரிசுத்த ஆவியின் அன்புக்கும் உங்களை எவ்வளவாகத் திறந்துகொடுக்கிறீர்களோ, அவ்வளவாக நீங்கள் இறைவனுடைய வல்லமையினால் நிரப்பப்படுவீர்கள். உங்களைப் பிதாவினுடைய சாயலுக்கு ஒப்பாக மறுரூபப்படுத்த விரும்பும் பரிசுத்த ஆவியின் சத்தத்திற்கு நீங்கள் எதிர்த்து நிற்க வேண்டாம். அவர் இரக்கமுள்ளவராயிருக்கிறது போல நீங்களும் இரக்கமுள்ளவராயிருங்கள். உங்களை இறைவனுடைய சாயலுக்கு ஒப்பாக மாற்ற வேண்டும் என்பதே பரிசுத்த ஆவியானவருடைய பரிசுத்தமாகுதலின் நோக்கமாகும்.

பிதாவினுடைய வாக்குத்தத்தம் யூதர்களுக்கு மட்டும் உரியதல்ல. இறைவனுடைய அழைப்பைக் கேட்டு, இரட்சகரை விசுவாசித்து, தங்கள் கடந்த கால தீய வாழ்விலிருந்து மனந்திரும்பிய அனைத்து மனிதர்களுக்கும் அந்த வாக்குறுதி நிறைவேறும். அது நிறத்தின் அடிப்படையிலோ, ஞானத்தின் அடிப்படையிலோ, வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையிலோ யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. பரிசுத்த ஆவியானவர் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் வித்தியாசம் பார்க்கமாட்டார். யாரெல்லாம் மனந்திரும்பி கிறிஸ்துவின் சிலுவையை எடுத்துக்கொள்கிறார்களோ அவர்கள் இறைவனுடைய தத்துப் பிள்ளைகளாகிறார்கள். அவர்கள் இறைவனுடைய ஒரே மகனாகிய கிறிஸ்துவை அறிந்துகொண்டு, அவருடைய முழுமையில் பங்கடைகிறார்கள். அனைத்து மக்களையும் பரிசுத்த ஆவியானவர் அழைக்க வேண்டும் என்பதே நம்முடைய நோக்கமாயிருக்கிறது. யார் செவிகொடுப்பார்கள்? யார் அவரிடத்தில் வருவார்கள்? யார் தங்களுடைய பாவத்தை அறிந்துகொள்வார்கள்? யார் கிறிஸ்துவை விசுவாசித்து அவருடைய வல்லமையில் வாழத் தொடங்குகிறார்களோ அவர்களே.

பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் தனிப்பட்ட முறையில் அங்கு வந்தவர்களிடம் பேசி, இரட்சிப்பின் இரகசியங்களை அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்கள். அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் கொடுத்து, அவர்களுடைய இருதயத்தின் தீமையை அவர்களுக்கு வெளிப்படுத்தி, இறைவனுடைய அன்பின் மேன்மையை அவர்களுக்கு வெளிப்படுத்திக் காண்பித்தார். அவர்கள் பரிசுத்த ஆவியினால் அனைத்து மனிதர்களையும் “மாறுபாடுள்ள சந்ததி” என்று அழைக்கிறார்கள். எந்த மனிதனும் நீதியுள்ளவன் அல்ல. அனைவரும் தங்கள் நடத்தையில் தந்திரமானவர்களாகவும் தங்கள் உள்ளத்தில் கேடுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். யாரும் இந்த உலகத்தில் நல்லவர்களும் நேர்மையாளர்களாகவும் இருப்பதில்லை. அனைவரும் பொய், அநியாயம், ஏமாற்று, தந்திரம், வெறுப்பு, கொலை, பொறாமை, மற்றும் சுயநலம் ஆகியவற்றோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

பரிசுத்த ஆவியானவர் நம்முடைய சுயநலத்திலிருந்து நம்மை விடுவித்து, கிறிஸ்துவினிடத்தில் அழைத்து, நம்மை மீட்டுக்கொள்கிறார். அவர் இந்த உலகத்தைச் சீர்திருத்தாமல், விசுவாசிகளின் உள்ளான வாழ்க்கையில் மாற்றத்தை உண்டுபண்ணுகிறார். உங்கள் குணாதிசயம் மாற்றப்படவேண்டியதல்ல உங்கள் தேவை. உங்களுக்குத் தேவையானது இரட்சிப்பு. அனைத்து மனிதர்களைப் போலவும் நீங்கள் இறைவனுடைய கோபத்திற்கு ஆளானவராகக் காணப்படுகிறீர்கள். “இந்த மாறுபாடுள்ள சந்ததியிலிருந்து நீங்கள் உங்களை விலக்கிக் காத்துக்கொள்ள வேண்டும்” என்று பேதுரு உங்களுக்கு அழைப்பு விடுகிறார். நீங்கள் “பாதி இரட்சிக்கப்பட்டும் பாதி மாறுபட்டும்” இருக்க வேண்டும் என்றோ அல்லது “கிறிஸ்துவை விசுவாசித்து, உங்கள் பாவங்களில் நிலைத்திருங்கள்” என்றோ உங்களுக்குச் சொல்லப்படவில்லை. இல்லை. பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் இவ்வுலகத்திற்கு வந்தார். கிறிஸ்துவை யாரெல்லாம் உண்மையாகவும் முழுமையாகவும் விசுவாசிக்கிறார்களோ அவர்களை அவர் தம்முடைய வல்லமையினாலே இரட்சிக்கிறார். நம்முடைய இரட்சிப்பு சிலுவையில் நிறைவேற்றி முடிக்கப்பட்டது. கிறிஸ்துவின் அன்பை நீங்கள் விசுவாசித்து, அவருடைய வல்லமைக்கு உங்களைத் திறந்துகொடுப்பீர்களானால், இந்த நன்மையை பரிசுத்த ஆவியானவர் அனுதினமும் உங்கள் வாழ்க்கையில் மெய்யாக்குவார்.

திருச்சபை பிறந்த நாளில் பரிசுத்த ஆவியானவருடைய அழைப்பைக் கேட்டவர்கள் எண்ணிக்கை மூவாயிரமாயிருந்தது. ஒரு மீனவரும், கல்லாதவருமாகிய பேதுருவின் பிரசங்கத்திற்கு கிடைத்த பலனைப்போல மிகச் சில பிரசங்கிகளுக்கே திருச்சபை வரலாற்றில் பலன் கிடைத்திருக்கிறது. இறைவன் அத்தருணத்தில் பேதுருவின் மூலமாகத் தனிப்பட்ட முறையில் மக்களோடு பேசினார்.

பரிசுத்த ஆவியானவர் அந்த மக்களுடைய இருதயக் கண்களைத் திறந்து, அவர்களுடைய மனதில் வெளிச்சத்தைக் கொடுத்தபடியால், அவர்கள் இருதயத்தில் குத்தப்பட்டவர்களாக உடனடியாக மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசித்தார்கள். அந்த மக்கள் கேட்ட செய்தியைப் பற்றிச் சிந்தித்து மனந்திரும்புவதற்கு அப்போஸ்தலர்கள் நேரம் கொடுக்கவில்லை என்பது எத்தனை ஆச்சரியமானது. அது மட்டுமல்ல, அவர்கள் இறைவனைக் குறித்த அறிவில் வளரவேண்டும் என்று காத்திராமல் அவர்களுடைய அந்த நிலையிலேயே அப்போஸ்தலர்கள் அவர்களுக்கு திருமுழுக்குக் கொடுத்ததையும் கவனிக்க வேண்டும். விசுவாசம் என்பது மேலோட்டமாக அறிவுசார்ந்ததோ, தெளிந்த புத்தியுடன் கூடிய ஆனமீக காரியமோ அல்ல. பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகள் மீது தமது இன்பத்தைப் பொழிந்தருளி, மனந்திரும்பாதவர்களை நியாயம்தீர்த்தார். பேதுரு தன்னுடைய பிரசங்கத்தில் விசுவாசத்தைப் பற்றிய விதிமுறைகளை மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார். அவை கிறிஸ்துவின் வாழ்வு, சிலுவை மரணம், உயிர்த்தெழுதல், பரலோகத்திற்கு எழுந்தருளிப் போய், பிதாவினுடைய வலது பக்கத்தில் அமருதல். இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு அவற்றை விசுவாசிப்பவர், கிறிஸ்துவின் திருமுழுக்கில் தனக்குத் தானே மரணிக்கிறார். அப்போது அவர் உடனடியாகப் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும் தகுதியுடையவராகிறார்.

8. ஆதித் திருச்சபையின் ஆவிக்குரிய வாழ்க்கை (அப்போஸ்தலர் 2:42-47)

அப்போஸ்தலர் 2:42-47 
42 அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். 43 எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது. 44 விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். 45 காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள். 46 அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, 47 தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.

இதுவரை நற்செய்தியாளனாகிய லூக்கா, விசுவாசிகளுடைய உள்ளத்தில் வாழும்படி பரிசுத்த ஆவியானவரை கிறிஸ்து எவ்வாறு அனுப்பினார், இந்த தகப்பனாகிய ஆவியானவர் எவ்வாறு பொழிந்தருளப்பட்டார், மகிழ்ச்சியையும், சத்தியத்தையும், பரிசுத்தத்தையும் அன்புடன் கலந்து அன்பின் பெருங்காற்றாய் எவ்வாறு வீசினார் ஆகியவற்றைப் பற்றி விவரித்தார். இனிமேல் பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு, ஏன் செயல்படுகிறார் என்பதைக் காண்பிக்கப்போகிறார். பிதாவினுடைய வாக்குத்தத்தம் நிறைவேறிவிட்டது; கிறிஸ்துவின் வல்லமை செயல்பட்டு வெற்றிகண்டு விட்டது. உண்மையில் அது இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஒரு புதிய கிருபையின் யுகம் பிறந்து விட்டது. கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுடைய சுயத்தை உடைத்து, அவர்களை அவர் சிறந்த மனிதர்களாக மாற்றுகிறார். அவர்களுடைய விசுவாசத்தின் மூலமாக இறைவனுடைய நன்மையினால் அவர்கள் நிரப்பப்படுகிறார்கள்.

பரிசுத்த ஆவியானவர் நடைமுறையில் எவ்வாறு தோன்றுகிறார்? லூக்கா பரிசுத்த ஆவியானவருடைய தன்மையைப் பற்றியும் அவருடைய செயலைப் பற்றியும் சுருக்கமாகவும், அழகாகவும், அடையாள மொழியிலும் விளக்குகிறார். முக்கியமாக அவர் இறைவனுடைய வார்த்தையின் முழுமைக்குள், சிறப்பாக அப்போஸ்தலருடைய போதனைகளுக்குள் அவர் விசுவாசிகளை நடத்துகிறார். கிறிஸ்து அனுதினமும் தம்முடைய மாணவர்களுக்குப் போதிக்கும் நற்செய்தியை ஆழமாகவும் தொடர்ச்சியாகவும் கற்றுக்கொள்ளாமல் தெய்வீக ஆவியிடமிருந்து நாம் வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியாது. அப்போஸ்தலர்களுடைய உபதேசம் இல்லாமல் நம்முடைய விசுவாசத்திற்கு அடிப்படையே இல்லை.

அனுதினமும் இறைவனுடைய வார்த்தையிலிருந்து பெற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய ஊட்டச்சத்தின் மூலமாக இறைவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளும் காரியம் தனிமையில் நடைபெறுவதில்லை. ஆதித்திருச்சபை விசுவாசிகள் ஒருவரோடொருவர் அன்பின் ஐக்கியம் உடையவர்களாக தங்களைவிட மற்றவர்களை மேன்மையாகக் கருதினார்கள். இறைவனுடைய ஆவியானவர் அன்பின் ஆவியானவராயிருப்பதால், இந்த அன்பின் ஐக்கியம் இல்லாமல் கிறிஸ்தவமே இல்லை.

ஆதிக் கிறிஸ்தவர்கள் தங்களுடைய இரட்சிப்பிலும் அன்பின் ஐக்கியத்தில் மட்டும் நிலைத்திராமல், அவர்கள் கர்த்தருடைய பந்தியிலும் பங்கெடுத்தார்கள். அப்பம், இரசம் ஆகிய அடையாளங்கள் மூலமாக கிறிஸ்து தங்களில் வாழ்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். இவ்வாறு அவர்கள் எழுப்புதல் அடைந்து மகிழ்ச்சியிலும், நன்றியறிதலிலும் பெலப்படுத்தப்பட்டார்கள்.

இந்த அடிப்படையான கிறிஸ்தவ குணாதிசயங்களோடு விண்ணப்பங்கள், வேண்டுதல்கள், துதிப் பாடல்கள், பாவ அறிக்கைகள் மற்றும் மன்றாட்டுகள் ஆகியவையும் அவர்களுடைய வாழ்வில் மேலோங்கிக் காணப்பட்டன. அவர்களுடைய கூடுகைக்கு அடிப்படையாயிருந்தது உலக சிந்தையோ, தத்துவ ஞானமோ அல்ல, அவர்கள் எப்போதும் தொடர்பு வைத்திருக்கும் அவர்களுடைய பிதாவாகிய இறைவனுடன் அவர்களுக்கிருந்த உறவு ஆகும். அன்புள்ள சகோதரனே, நீங்கள் தொடர்ச்சியாக மற்ற சகோதரர்களுடன் இணைந்து விண்ணப்பிக்கிறவராயிருக்கிறீர்களா?

அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தது ஒரு மோலோட்டமான நம்பிக்கையினால் அல்ல. அவர்கள் இறைவனுடைய பரிசுத்தத்தின் மகிமையை அனுபவித்திருந்தபடியால் அவர்களுடைய விசுவாசம் ஆழமானதாக இருந்தது. அவர்கள் அவருக்கு முன்பாக உறுதியாக இருந்தார்கள். அவர்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரை நேசித்து, அவரையே நம்பியிருந்தார்கள். தாழ்மையும், பயபக்தியும், இறைவனுடைய மேன்மையைக் குறித்த பயமும் எப்போதும் அவர்களிடத்திலிருந்தது. நம்முடைய உயிருள்ள விசுவாசத்திற்கு அடிப்படையாயிருக்கக்கூடிய இறைவனிடமான பயத்தையும் அன்பையும் பரிசுத்த ஆவியானவர் நம்மில் உருவாக்குகிறார்.

பரிசுத்த ஆவியானவர் யாரில் குடிகொண்டிருக்கிறாரோ அவரில் பரிசுத்த திரித்துவ இறைவனுடைய தெய்வீக வல்லமை பரிசுத்தவான்களுடைய ஐக்கியத்தில் விளங்கும். நம்முடைய பிதாவானவர் தம்முடைய இரக்கத்தின் முழுமையிலிருந்து அனுதினமும் தம்முடைய பிள்ளைகளின் விண்ணப்பங்களுக்கு பதிலளித்து, அவர்களை இரட்சிப்பினால் ஆசீர்வதித்து, பாதுகாத்து, குணப்படுத்தி, பரிசுத்தப்படுத்தி, அவர்களை வழிநடத்துகிறார்.

பரிசுத்த ஆவியானவர் தாராளமாக மகிழ்ச்சியுடன் கொடுக்கும்படி விசுவாசிகளைத் தூண்டுவதால், அவர்கள் தங்கள் பணப்பையைச் சுருக்கிக்கொள்வதில்லை. “வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதே பாக்கியம்” என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார். ஆரம்ப காலத்து கிறிஸ்தவர்கள் தங்கள் சொத்துக்களை விற்று, பண ஆசையில்லாதவர்களாக, திருச்சபையின் பொதுவான தேவைக்காக அந்த வருமானத்தைக் கொடுத்தார்கள். அவர்கள் ஒரு குடும்பமாக வாழ்ந்து, ஒருவரோடொருவர் இணங்கிப் போனார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியினால் கஞ்சத்தனம், பகைமை, பொருளாசை ஆகியவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டு, நடைமுறை அன்பில் வழிநடத்தப்பட்டார்கள்.

அவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருந்தார்கள். அவர்கள் உயிரோடிருக்கும்போதே கிறிஸ்துவின் மகிமையை தங்களால் காணமுடியும் என்று அவர்கள் நம்பினார்கள். அவர்கள் அவருடைய மகிமையின் அரசிற்காகக் காத்திருக்கும்போது, இரவும் பகலும் அவரை நினைத்து, தங்கள் இரட்சகராகிய அவரில் அதிகமாக அன்புகூர்ந்தார்கள். அவர்கள் தங்களுடைய விசுவாசம் உண்மையானதுதானா என்றோ, அவர்களுடைய அன்பு உறுதியானதா என்றோ, அவர்களுடைய நம்பிக்கை நிச்சயமானதுதானா என்றோ தங்களுக்குள் சந்தேகித்து விவாதிக்கவில்லை. அவர்கள் தங்கள் இருதயத்தினால் அவற்றை எளிமையாக விசுவாசித்து அதில் மகிழ்ந்திருந்தார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியானவருடைய சத்தியத்தில் மகிழ்வடைந்து, களைப்படையாமல் எப்போதும் இறைவனைத் துதித்தார்கள்.

கிருபையினால் தங்கள் விசுவாச வாழ்வை ஆரம்பித்த அவர்கள் தங்கள் வீடுகளில் கூடிவருவதை விட்டுவிடவில்லை. அவர்கள் வீடுகள் தோறும் கூடிவந்து அப்போஸ்தலருடைய உபதேசத்திற்குச் செவிகொடுத்து, பொதுவான விண்ணப்பங்களை ஏறெடுத்தார்கள். அவர்கள் தேவாலயத்தைப் புறக்கணிக்காவிட்டாலும் அவர்களே கைகளினால் கட்டப்படாத, பரிசுத்த ஆவியின் ஆலயங்களாக மாறியிருந்தார்கள்.

அப்படிப்பட்ட திருச்சபை இன்பமானது, கவர்ச்சிகரமானது. இந்த அன்பினால் கவரப்பட்ட அநேகர்: “நீங்கள் எவ்வாறு மாற்றமடைந்தீர்கள்?” என்றும் “இது எப்படி நடந்தது?” என்றும் கேட்டார்கள். அதற்கு அவர்கள் “உயிருள்ளவராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியாகிய தம்முடைய வரத்தை எங்களுக்குக் கொடுத்தார். அதனால்தான் நாங்கள் இவ்வாறு மாற்றமடைந்தோம்” என்று பதிலளித்தார்கள். அவர்கள் இவ்வாறு சாட்சிபகர்ந்ததன் காரணமாக புதிய மக்கள் அனுதினமும் திருச்சபையில் இணைக்கப்பட்டார்கள். அந்த எழுப்புதலினால் திருச்சபை வளர்ச்சியடைந்தது.

இந்த இடத்தில்தான் நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் “திருச்சபை” என்ற வார்த்தையை முதன்முதலில் வாசிக்கிறோம். இதுவரை நாம் அந்த மக்களைக் குறித்துக் கொடுத்த விளக்கங்கள் கிறிஸ்துவின் உயிருள்ள உடலாகிய திருச்சபையின் குணாதிசயங்கள் ஆகும். பரிசுத்த ஆவியானவருடைய செயல் வெறுமனே தனிப்பட்ட ஆத்துமாக்களில் மட்டும் செயல்படாமல் திருச்சபையாகிய பரிசுத்தவான்களின் ஐக்கியத்தில் முடிவடைகிறது. நம்முடைய இறைவன் அன்பாயிருக்கிறபடியால் அந்த அன்பு விசுவாசிகளுடைய ஐக்கியத்தில்தான் உணரப்படுகிறது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.