ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் (1859 - 1947) 9





ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் (1859 - 1947) 9



விசுவாசமும் வல்லமையும் நிறைந்த தேவ மனிதர்



"பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்" (அப் 1 : 8) என்று இயேசு தமது சீடர்களுக்கு வாக்கு கொடுத்தார்.

"பரிசுத்த ஆவி உங்களில் வரும்போது நீங்கள் பெலன் அடைவீர்கள்" என்ற வார்த்தை ஆங்கில வேதாகமத்தில் "வல்லமையைப் பெற்றுக் கொள்ளுவீர்கள்" (You will receive Power)
என்று திருப்பப்பட்டுள்ளது. இந்த வல்லமை என்ற வார்த்தை கிரேக்க மொழியில் "டூனாமீஸ்" என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றது. இந்த "டூனாமீஸ்" என்ற வார்த்தையிலிருந்துதான் டைனோமிட், டைனோமோ என்ற வார்த்தைகளை நாம் பெற்றுக் கொண்டோம். இவைகள் எல்லாம் வெடித்துச் சிதறக்கூடிய வெடி பொருட்களை குறிப்பது என்பது நமக்கு நன்கு தெரியும்.

தேவ மனிதர் விக்கிள்ஸ்வொர்த் இந்த வல்லமை என்று அழைக்கப்படும் டூனாமிஸ்ஸை பெற்றிருந்தார். அவர் இங்கிலாந்தில் உள்ள பிராட்ஃபோர்ட் பட்டணத்தைச் சேர்ந்தவர். அந்த இடத்தில் தேவ ஊழியம் செய்ய அவர் மிகவும் கஷ்டப்பட்டார். தேவ ஊழியம் செய்ய மிகவும் கடினமான இடம் அது. விக்கிள்ஸ்வொர்த் வசித்து வந்த பிராட்ஃபோர்ட் பட்டணத்துக்குச் சமீபமாக உள்ள இடத்தில் மிச்சல் என்பவர் வாழ்ந்து வந்தார். அந்த மனிதருடைய ஆத்துமத்தின் காரியமாக அவர் அடிக்கடி பேசியிருக்கின்றார். ஆனால் எந்தவித பயனும் ஏற்படவில்லை. அதின் பின்னர் மிச்சல் வியாதிப் படுக்கையில் விழுந்த செய்தி அவரது காதுகளுக்கு வந்து எட்டினது. எப்படியாவது மிச்சலை ஆண்டவருக்குள் வழிநடத்திவிட வேண்டும் என்ற ஆவலில் விக்கிள்ஸ்வொர்த் அவரை சந்திக்க முயற்சித்தார். அந்த மனிதனின் ஆத்துமத்தின் காரியமாக உடனடியாக ஏதாவது செய்யாதபட்சத்தில் அவர் நிரந்தரமாக நஷ்டப்பட்ட பாவியாக மரிப்பார் என்பதை தேவ மனிதன் நன்கு அறிந்திருந்தார். ஆனால், மிச்சல் மிகவும் கடினப்பட்ட பாவியாக இருந்தார். விக்கிள்ஸ்வொர்த் தன்னை வந்து பார்ப்பதற்குக் கூட அந்த மனிதர் விரும்பவில்லை.




ஒரு நாள் விக்கிள்ஸ்வொர்த் ஒரு திறந்த வெளிப் பிரசங்கத்துக்கு சென்று விட்டு அப்பொழுதுதான் வீடு திரும்பியிருந்தார். வீட்டில் அவரது மனைவி இல்லை. வியாதிப்படுக்கையிலிருக்கும் மிச்சலுடைய வீட்டிற்கு அவர்கள் சென்றிருப்பதைக் கேள்விப்பட்டு அங்கு சென்றார். அவர் அங்கு சென்ற போது ஒரு பெண்ணுடைய கதறி அழும் சத்தம் அவரது காதுகளில் கேட்டது. மிச்சலுடைய மனைவியைச் சந்திக்க அவர் படுக்கட்டுகளில் ஏறிச்சென்றபோது சோகமே உருவான நிலையில் மிச்சலின் மனைவி படிக்கட்டுகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள்.


"என்ன காரியம்?" என்று விக்கிள்ஸ்வொர்த் அந்த அம்மாவிடம் கேட்டார்கள்.

"எனது கணவர் மரித்துப் போனார்" என்று அந்த அம்மா அழுதுகொண்டே கூறினார்கள்.

விக்கிள்ஸ்வொர்த் நேராக மிச்சல் கிடத்தி வைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றார். அவரது மனைவி மேரி ஜேன் அம்மையார் மரித்த மிச்சலின் அருகில் துக்கத்துடன் நின்று கொண்டிருந்தார்கள். "முடிந்துவிட்டது ஸ்மித்" என்று அவர்கள் தனது கணவரிடம் கூறினார்கள்.




"மிச்சல் உயிரோடிருந்த நாட்களில் நான் அவரது ஆத்தும மீட்பின் காரியமாக எதுவுமே செய்ய இயலாமல் போய்விட்டது. அவர் எனது வார்த்தைகளை நம்பவே மறுத்துவிட்டார். எனினும் நான் அவரது இரட்சிப்பின் காரியமாக இப்பொழுது அவருக்கு உதவி செய்வேன்" என்று சொன்னார் விக்கிள்ஸ்வொர்த்.


"வேண்டாம் ஸ்மித், காரியங்கள் மிகவும் பிந்திப் போய்விட்டது" என்று மேரி ஜேன் சொன்னார்கள்.

அவர்கள் தனது கணவரை எவ்வளவோ முயற்சித்தும் அவரது தீர்மானத்திலிருந்து அவரை மாற்ற இயலாமற் போய்விட்டது. விக்கிள்ஸ்வொர்த் ஜெபித்தபோது மரித்த சடலம் உயிர்பெற்றது. அந்த மிச்சல் என்ற மனிதர் பின்னர் இரட்சிப்பை கண்டடைந்து அநேக ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்.

விக்கிள்ஸ்வொர்த் தனது திராணிக்கு மிஞ்சிப்போவதாக அவரது குடும்பத்தினர் எண்ணி மிகவும் பயப்பட்டார்கள். ஆனால், தேவ மனிதர் தனது குடும்பத்தினரைப் பார்த்து "ஆண்டவருக்கு ஒரு பல் வலியை சுகமாக்குவது போன்ற காரியம்தான் மரித்த ஒரு மனிதனை உயிரோடு எழுப்புவதுமாகும். அதில் அவருக்கு எந்த ஒரு வித்தியாசமே கிடையாது" என்று கூறினார்.

விக்கிள்ஸ்வொர்த் 81 வயதினனாக இருந்தபோது தேவன் அவருக்கு முழுமையான புதிய பற்களைக் கொடுத்தார். அதில் எந்த ஒரு சொத்தை பற்களும் கிடையாது. "அந்தப் பற்கள் ஆண்டவரால் கொடுக்கப்பட்டவை அல்ல, அவைகள் வெறும் பொய் பற்கள் மாத்திரமே. அவரது திருட்டுத்தனத்தை நான் உலகத்துக்கு அம்பலப்படுத்துவேன்" என்று கங்கணம் கட்டிக் கொண்டு சுவிட்சர்லாந்து தேசத்திலிருந்து ஒரு பிரபலமான பல் மருத்துவர் விக்கிள்ஸ்வொர்த்திடம் வந்து அவரது பற்களை பரிசோதிக்க விரும்பினான். தேவ மனிதரும் அவனுக்கு உடனே சம்மதம் தெரிவிக்கவே அவன் அவருடைய பற்களை பரிசோதித்து பார்த்துவிட்டு "இத்தனை பூரண ஒழுங்கோடு பல் வரிசை அமைந்த பற்களை நான் ஒருக்காலும் காணவில்லை" என்று கூறி தேவனை மகிமைப்படுத்திச் சென்றான்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.