ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் (1859 - 1947) 8


ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் (1859 - 1947) 8






மனத்தாழ்மை நிறைந்த தேவ மனிதர்



விக்கிள்ஸ்வொர்த் தமது கூட்டங்களில் நடைபெற்ற எந்த ஒரு அற்புத சுகங்களுக்கும் தன்னைக் காரணம் காட்டி அந்தப் புகழ்ச்சியை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆண்டவர் இயேசு ஒருவர் மாத்திரமே எல்லா புகழ்ச்சிக்கும், கனம் மகிமைக்கும் பாத்திரர் என்று கூறியதுடன் தன்னைப் புகழ்ந்த மக்களை வன்மையாக கடிந்து கண்டித்தார். ஒரு தடவை தேவன் அவரிடம் "விக்கிள்ஸ்வொர்த், நான் உன்னை எரித்துச் சாம்பலாக்கப் போகின்றேன். ஆம், விக்கிள்ஸ்வொர்த் என்ற சுவடே இல்லாமல் நான் உன்னை எரிப்பதன் மூலமாக இயேசு ஒருவர் மாத்திரமே உன்னில் மகிமைப்படுவார்" என்று தேவன் தன்னிடம் சொன்னதாக அவர் கூறினார். அந்த தேவ மனிதரைப் பொறுத்த மட்டில் ஆண்டவர் அவரிடம் சொன்னதுதான் அப்படியே நடந்தது. அவர் எந்
த ஒரு நிலையிலும் தன்னை வெளிக்கு காண்பிக்கவே இல்லை.

பெருமையினால் எழக்கூடிய கொடிய ஆபத்தை விக்கிள்ஸ்வொர்த் நன்றாக அறிந்திருந்தார். தனக்கும் தன் ஆண்டவருக்குமுள்ள பரிசுத்த உறவுக்குள் இந்தக் கொடிய பெருமை வந்து ஆக்கிரமிப்பு செய்துவிடாதபடி அதைக் கண்ணும் கருத்துமாக கண்காணித்து வந்தார். அதைக் கட்டுக்குள் வைத்து அடக்கி ஆள்வதற்காக அவர் தினமும் கர்த்தாவின் கல்வாரி அன்பை நினைப்பூட்டும் ராப்போஜனத்தை எடுத்து வந்தார். ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்களுக்கு கர்த்தருடைய ராப்போஜனம் என்பது கடமையும் அர்த்தமற்றதுமாக இருக்கின்றது. ஆனால், விக்கிள்ஸ்வொர்த் மிகுந்த பயபக்தியோடும், நடுக்கத்தோடும், ஆண்டவருடைய சிலுவைப் பாடுகளை மெய்யாகவே தனது கண்களுக்கு முன்னர் வைத்து கண்ணீரோடு அதை எடுத்தார்.




அதின் காரணமாக அவர் தன் ஆண்டவரோடு எந்த ஒரு இடைவெளியும் இல்லாத தொடர்ச்சியான ஐக்கிய சகவாசத்தில் செடியும் கொடியும் போல நிலைத்திருந்தார். இதின் நிமித்தமாக அவர் ஆண்டவருடைய ஊழியத்துக்கு எப்பொழுதும் ஆயத்தமாக இருந்தார். எந்த ஒரு ஊழிய அழைப்பும் ஆயத்தமில்லாத சமயத்தில் திடீரென்று அவருக்கு வரவில்லை.


"நீங்கள் உங்களை ஆயத்தம் பண்ணிக் கொள்ளுவதை விட்டு விடுவீர்களானால், ஊழியத்திற்காக வரும் சந்தர்ப்பத்தை கை நழுவ விட்டுவிட நேரிடும். அந்தப் பொன்னான தருணம் உங்கள் வாழ்வில் திரும்பவும் கிடைக்காது. நீங்கள் கால தாமதம் ஆகிவிட்டீர்கள்" என்று அவர் சொல்லுவார். தேவ ஊழியத்தின் பாதையில் அவருக்கு வரும் எந்த ஒரு அழைப்பையும் அவர் அல்லத்தட்டுவதில்லை. ஒரு உதாரணம் பாருங்கள்:-

ஒரு குறிப்பிட்ட ஒரு சபையின் குருவானவர் தனது சபையில் வியாதியாக இருந்த அங்கத்தினர் ஒருவரைச் சந்திக்க தன்னுடன் வரும்படியாக விக்கிள்ஸ்வொர்த்தை அழைத்தார். அழைப்பை உடனே ஏற்று அவர் அந்த குருவானவருடன் சென்றார். அந்த வீட்டை அடைந்ததும் அந்த வியாதியாக இருந்த அம்மையார் ஒரு செல்வந்தமான சீமாட்டி என்பதை விக்கிள்ஸ்வொர்த் கண்டு கொண்டார்.

அந்த இரு தேவ ஊழியர்களும் படுக்கையிலிருந்த அந்த சீமாட்டியின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த அம்மாவிற்கு அருகிலுள்ள பீரோக்களில் மருந்துகள் அடங்கிய பாட்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

"நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க வந்திருக்கின்றோம்" என்று குருவானவர் அந்த அம்மாவிடம் சொன்னார். ஆனால், தேவ மனிதர் விக்கிள்ஸ்வொர்த் அந்த அம்மையாரைப் பார்த்து "நான் உங்களுக்காக ஜெபிக்க வரவில்லை. ஏனெனில், நீங்கள் உங்கள் மருந்துகளோடும், மாத்திரைகளோடும் உங்கள் வியாதியில் ஆனந்தித்துக் கொண்டிருக்கின்றீர்கள். எனது ஜெபம் உங்களுக்கு அவசியம் இல்லை" என்று கூறிவிட்டு எழுந்து போய்விட்டார்.

அந்த அம்மாவை எப்படியோ சாந்தப்படுத்தி சமாதானப்படுத்தி அவர்களுக்காக ஜெபித்துவிட்டு குருவானவர் கடந்து வந்தார். குருவானவருடைய வருகைக்காக விக்கிள்ஸ்வொர்த் வெளியே காத்துக் கொண்டிருந்தார். குருவானவரின் முகம் கருகருத்துப் போயிருந்தது. "நீங்கள் தேவனுடைய திருச்சபைக்கு ஒரு பெரிய இடறு செய்துவிட்டீர்கள். அந்த அன்பான அம்மையார் நமது திருச்சபைக்கு எவ்வளவோ பணங்களை கொடுத்திருக்கின்றார்கள்" என்று சொன்னார்.

"அங்குதான் ஆபத்து இருக்கின்றது" என்றார் விக்கிள்ஸ்வொர்த்.

"நல்லது, நாம் அந்த அம்மாவை நமது தேவாலயத்தில் இனி பார்ப்பதிற்கில்லை" என்றார் குருவானவர்.




"நீங்கள் அப்படிச் சொல்லாதீர்கள். அவர்கள் சீக்கிரமாக, வெகு சீக்கிரமாகவே நமது ஆலயத்துக்கு வருவார்கள்" என்று மிகுந்த பொறுமையோடு தேவ மனிதர் கூறினார்.


அதின் பின்னர் தேவ ஊழியர்கள் இருவரும் மாலை தேயிலைப் பானம் அருந்திவிட்டு அந்த நாளின் இரவு ஆராதனைக்காக தேவாலயத்துக்குச் சென்றனர். என்ன ஆச்சரியம், மத்தியானம் மிகவும் சுகயீனமாக படுக்கையில் கிடந்த அந்த அம்மையார் தேவாலயத்துக்கு நடந்து வந்து ஜெபத்துக்காக முன்னே போனார்கள்.

"இப்பொழுது நீங்கள் ஆயத்தம்தானா?" என்று விக்கிள்ஸ்வொர்த் அந்த அம்மாவை கேட்டார்.

"ஆம், நான் ஆயத்தமாக இருக்கின்றேன். நீங்கள் எனது அறையைவிட்டு சென்ற பின்னர் நீங்கள் என்னிடம் சொன்ன வார்த்தைகளால் நான் உள்ளத்தில் குத்தப்பட்டேன். நீங்கள் சொன்னது சரியே" என்று கூறினார்கள். அந்த இராக்காலமே அவர்கள் பூரண சுகத்தை தேவனிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.