ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் (1859 - 1947) 10

Sathish




ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் (1859 - 1947) 10



இந்த தேவ மனிதனின் பரலோக பயணம்



நான் (ராபர்ட் கிப்பர்ட்) சென்று கொண்டிருந்த தேவாலயத்தின் குருவானவர் ரிச்சர்ட்சன் மரணம் அடைந்தார். நான் தேவ மனிதர் விக்கிள்ஸ்வொர்த்தை கடைசியாக சந்தித்து ஒரு வாரம் சென்ற பின்னர்தான் குருவானவர் ரிச்சர்ட்சனின் அடக்க ஆராதனை நடைபெற்றது.




ரிச்சர்ட்சனின் பிரேதப் பெட்டியை தூக்கிச் செல்ல எனது மூன்று அண்ணன்மார்கள் அழைக்கப்பட்டிருந்தனர். நாங்கள் நால்வரும் தேவாலயத்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்தோம். தே
வாலயம் திருச்சபை மக்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அப்பொழுது விக்கிள்ஸ்வொர்த் தேவாலயத்தினுள் வந்தார். கூடி வந்த மக்கள் யாவருடைய பார்வையும் அவர் மேலேயே இருந்தது. அவர் தேவாலயத்தினுக்குள் வந்து நாங்கள் அமர்ந்திருந்த முன் வரிசைக்குப் பின்னால் வந்து உட்கார்ந்தார்.

மரித்துப் போன குருவானவர் ரிச்சர்ட்சனை குறித்துப் பேசுவதற்காக எனது தகப்பனார் தேவாலயத்தின் குருவானவர் அறையில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் விக்கிள்ஸ்வொர்த்தும் தனது இருக்கையிலிருந்து எழுந்து படிக்கட்டுகளில் ஏறி குருவானவர் அறைக்குச் சென்றார். 87 வயதான அவர் 60 வயதான மனிதரைப் போன்று அத்தனை துடிதுடிப்பான வேகத்தில் நிமிர்ந்த நெஞ்சினனாக போனார். குருவானவரின் அறையில் அவர் என் தந்தையைக் கண்டதும் அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டுவிட்டு அப்பொழுது சுகயீனமாக இருந்த எனது அக்காளுடைய சுக நலத்தை கேட்டு விசாரித்திருக்கின்றார். எனது தகப்பனார் அவரோடு பேசிக்கொண்டிருந்த வேளையில் தானே அவர் சற்று தடுமாறியிருக்கின்றார். எனது தகப்பனார் உடனே அவரை அரவணைத்துப் பிடித்து அப்படியே தரையில் தாழ்த்தி படுக்க வைத்திருக்கின்றார். அதற்குள்ளாக அவரது ஜீவன் பிரிந்துவிட்டது.

ரிச்சர்ட்சனின் அடக்க ஆராதனையை நடத்துவதற்காக வந்திருந்த விக்கிள்ஸ்வொர்த்தின் மருமகன் ஜேம்ஸ் சால்ட்டர் என்பவர் குருவானவர் அறையிலிருந்து நேராக பிரசங்க பீடத்திற்கு ஏறிச்சென்று "எனது மாமா விக்கிள்ஸ்வொர்த் சில நிமிடங்களுக்கு முன்பாக இங்கே நமது தேவாலயத்திலேயே மரித்து தன்னுடைய நித்திய பரம இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்துவிட்டார்கள் என்ற செய்தியை நான் உங்களுக்குத் தெரிவிக்கின்றேன்" என்று கூடிவந்திருந்த திரள் கூட்டத்தினருக்கு அறிவித்தார். அது 1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் நாளாகும்.

அதைக் கேட்ட திருச்சபை மக்களின் இருதயங்கள் உடைந்து நொறுங்கிப்போனது. ஆம், சற்று நேரத்திற்கு முன்பாகத்தான் கெம்பீரமாக ஆலயத்தின் நடுவாக நடந்து சென்று முன் இருக்கையில் தேவ மனிதர் உட்கார்ந்திருந்ததை அவர்களுடைய கண்கள் கண்டிருந்தன. அவருக்கு எந்த ஒரு உடல் நலக் குறைவும், வியாதி, வேதனையும் கிடையாது. மாபெரும் தேவ மனிதர் விக்கிள்ஸ்வொர்த் தனது பரம எஜமானரின் வீட்டுக்கு ஒரு நொடிப் பொழுதில் கடந்து சென்று விட்டார்.




எனக்கு நன்றாகத் தெரிந்த டாக்டர் ஒருவர் உடனடியாக தேவாலயத்துக்கு அழைக்கப்பட்டார். அவர் வந்து விக்கிள்ஸ்வொர்த்தை பரிசோதித்துவிட்டு "மானிடத்தின் எத்தனை அழகான மாதிரி உருவம். மரணம் அவரை சந்தித்ததற்கான எந்த ஒரு வெளிப்படையான காரணமே தென்படவில்லை. ஒரு வேலையாள் தனது வேலையை முடித்து வீடு வந்து தனது மேல் சட்டையை கழற்றி மாட்டி வைத்து விட்டு சற்று நேரம் ஓய்வு எடுப்பதற்காக படுத்திருப்பதைப் போன்றே விக்கிள்ஸ்வொர்த் காணப்படுகின்றார்" என்று கூறினார்.


விக்கிள்ஸ்வொர்த்தின் அடக்க ஆராதனையின்போது அவரது கல்லறையண்டை நான் நின்று கொண்டிருந்தேன். சுதேச மிஷன் ஸ்தாபனத்தின் சுவிசேஷகனாக தேவ ஊழியம் செய்யும் ஒரு சகோதரனும் என்னருகில் நின்று கொண்டிருந்தார். அவர் என்னைப் பார்த்து "அல்பர்ட், நாம் இனி என்ன செய்யப் போகின்றோம்?" என்று என்னைப் பார்த்து கேட்டார். அவருடைய குரலில் வேதனையின் துயரம் காணப்பட்டது. அவர் ஆண்டவர் பேரில் கொண்டிருந்த நம்பிக்கைகள் அனைத்தும் தேவ மனிதரின் கல்லறையில் அவருடன் கூட அடக்கம் செய்யப்படப் போவதாக எனக்குத் தெரிந்தது.

மாபெரும் தேவ மனிதர் விக்கிள்ஸ்வொர்த்தை பார்த்து அவருடைய மாதிரியைப் பின்பற்ற தேவன் நம்மை விரும்பவில்லை. உண்மைதான், அவர் ஒரு விசேஷித்த தேவ பக்தன். அநேக விதத்தில் அவர் ஒரு ஒப்பற்ற உத்தம பக்தர்தான். ஆனால், தேவன் நம்மை நாமாகவே இருக்க விரும்புகின்றார். நாம் தேவனோடு இருக்கும்போது நாம் எத்தனை வல்லமையுள்ளவர்களாக இருப்போம் என்ற பரம தரிசனத்தை நாம் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க தேவன் நம்மைத் தூண்டுகின்றார். தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் கிரயத்தை நாம் செலுத்த ஆயத்தமாக இருக்கும் பட்சத்தில் அவர் நம்மை நம்முடைய ஊழியப்பணிகளிலே அந்த வல்லமையுள்ள தேவ மனிதர் விக்கிள்ஸ்வொர்த்தைப் போலவோ அல்லது அதற்கும் மேலாகவே நம்மை தமது நாம மகிமைக்காக பயன்படுத்த ஆயத்தமுடையவராக இருக்கின்றார்.




எந்த ஒரு முக்கியத்துவமும், சிறப்பான எந்த ஒரு திறமையுமற்ற ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் என்ற வெகு சாதாரணமான மனிதரைக் கொண்டு தேவன் இந்த உலகத்தை அசைத்தார். தன்னுடைய 26 ஆம் வயது வரை எழுதப்படிக்க தெரியாத ஒரு கல்வி ஞானமற்ற கொத்தனாரைக் கொண்டு வேதசாஸ்திர வல்லுனர்களையும், தேவ பண்டிதர்களையும் திகைப்படையச் செய்து, திரள் திரள் கூட்டமான மக்களை அவர்களுடைய வியாதிகளிலிருந்தும், பாடுகள், வேதனைகளிலிருந்தும், பிசாசின் பிடிகளிலிருந்தும் அவர்களை விடுவித்து அநேகரை ஆண்டவருடைய மந்தையின் ஆடுகளாக்கி அவர்களை நித்திய ஜீவனுக்கு பங்குள்ளவர்களாக்கினார். இத்தனை அற்புதமான விதத்தில் தேவன் அவரைப் பயன்படுத்த அவரிடமிருந்த ஒரே ஒரு எளிய காரணம் "தனது பரலோக எஜமானரின் பயன்படுத்துதலுக்கு அவர் எப்பொழுதும் தன்னை முழுமையாகக் கையளித்திருந்ததுதான்."


Thank you - தேவ எக்காளம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.