ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் (1859 - 1947) 5
பரிசுத்த தேவ மனிதர்
ஒரு கிறிஸ்தவன் தனது மன உணர்ச்சிகளுக்கு அதாவது மனோபாவங்களுக்கு ஒருபோதும் அடிமைப்பட்டு ஆளப்படக்கூடாது என்று விக்கிள்ஸ்வொர்த் சொல்லுவார். அநேக கிறிஸ்தவர்கள் தங்களுடைய கோபத்துக்கு அடிமைகளாக இருக்கின்றனர். ஏன்? விக்கிள்ஸ்வொர்த்தும் கூட ஒரு காலத்தில் இந்த அருவருப்பான கோபத்துக்கு அடிமைப்பட்டுத்தான் கிடந்தார். அதிலிருந்து ஒரு நிரந்தர விடுதலையைப் பெற்றுக் கொள்ள அவர் தனது ஆண்டவரோடு அதிகமாக தனித்திருந்து அதின்மேல் ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றுக் கொண்டார். அதின் பின்னர் அவர் நீடிய பொறுமைசாலி
யாக விளங்கினார். தனக்கு விரோதமாக எழுந்த குற்றச்சாட்டுகள், உபத்திரவங்கள் யாவிலும் அவர் அசாதாரணமான பொறுமையை காண்பித்து தேவ நாமத்தை மகிமைப்படுத்தினார். அவர் எவரையும் குற்றங்கூறி குறைகள் பேசவில்லை.
"உலக கவர்ச்சி எனது ஆண்டவர் பேரிலுள்ள எனது அன்பை குளிர்ச்சியடையப் பண்ணி அனல் குன்றச் செய்துவிடும்" என்ற பக்தன் ஜாண் வெஸ்லியின் வார்த்தைகளை அப்படியே ஏற்று நடந்தார். அவர் மாபெரும் தேவ மனிதராக இருந்ததற்குக் காரணம், எது எதற்கு, எந்த எந்த வரிசையில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்திருந்தார்.
நான் ஒரு தடவை அவரைப் பார்த்து எப்பொழுதாவது அவர் செய்தித் தாட்களை வாசித்தது உண்டுமோ என்று கேட்டேன். அதற்கு அவர் "செய்தித் தாட்களின் தலைப்பு செய்திகளுக்கு மேல் நான் எதையும் வாசித்ததில்லை" என்று சொன்னார். நான் திரும்பவுமாக அவரைப் பார்த்து "ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? செய்தித் தாட்களை வாசிப்பதில் நம்பிக்கை இல்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர் மாறுத்தரமாக "அது எனது காரணம் அல்ல, செய்தி தாட்களை வாசிக்க எனக்கு நேரம் கிடையாது. அத்துடன் பாதி உண்மையை மாத்திரம் எனக்குக் கொடுக்கக்கூடிய செய்தி தாட்களை நான் ஏன் வாசித்து எனது பொன் போன்ற காலத்தை வீண் விரயம் செய்ய வேண்டும்? அதைக் காட்டிலும் முழு சத்தியத்தையும் நமக்குத் தெரிவிக்கக்கூடிய ஆண்டவருடைய வேத புத்தகத்தை வாசிக்கலாமே" என்றார். "மனிதனுடைய வார்த்தையைவிட தேவனுடைய வார்த்தையே தெரிந்து கொள்ளப்படத்தக்கது" என்று அவர் சொல்லுவது வழக்கம். தேவனுக்கு முற்றுமாக ஒப்புக் கொடுத்தலை அவர் விசுவாசித்தார். "நமது பழைய பாவ மனுஷனை நாம் அடக்கி ஆள முயற்சிக்கின்றோம். அது நம்மால் முடிவதில்லை. ஆனால் நாம் நம்மை முழுமையாக ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கும் போது அது இலகுவில் சாத்தியமாகும்" என்று அவர் சொல்லுவார். தனது அருமை இரட்சகர் இயேசுவைப் போல மாற்றம் அடைய வேண்டும் என்ற அவரது கட்டுக்கடங்கா தாகம் ஒன்றுதான் அவரது தேவ ஊழியங்களை வெற்றியாக்கிக் கொடுத்தது.
விக்கிள்ஸ்வொர்த் எந்த ஒரு பள்ளிக்கும் சென்று முறையாக கல்வி பயின்றவர் அல்ல. வீட்டின் வறுமை காரணமாக அவர் தனது பிஞ்சு வயதான 6 ஆம் வயதிலேயே தனது தாயாருடன் மற்றவர்களுடைய வயல்களில் முள்ளங்கி தோண்டச் சென்றார். அவரது 7 ஆம் வயதில் அவரது பெற்றோர் அவரை ஒரு நூற்பு ஆலைக்கு வேலைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தினமும் 12 மணியிலிருந்து 14 மணி நேரங்கள் வரை கடினமாக வேலை செய்தார். பள்ளிக்குப் போவதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவர் தனது 26 ஆம் வயதில் தனது மனைவி மூலமாக எழுத வாசிக்கக் கற்றுக் கொண்டார். ஒரு காலத்தில் விக்கிள்ஸ்வொர்த்தின் மனைவி மேரி ஜேன் அம்மையார்தான் பிரசங்கியார் அம்மாவாக இருந்தார்கள். விக்கிள்ஸ்வொர்த், வீட்டின் மற்ற வேலைகளையும், ஏன், களிப்பறையை சுத்தம் செய்வது வரை அவரது வேலையாக இருந்தது. ஆனால், விக்கிள்ஸ்வொர்த் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டதும் நிலைமை தலை கீழாக மாற்றம் அடைந்தது. அடுத்து வந்த நாட்கள் ஒன்றில் தனது கணவருடைய பிரசங்கம் ஒன்றைக் கேட்டுவிட்டு மேரி ஜேன் அம்மையார் "இது எனது ஸ்மித் அல்ல (கணவரை "ஸ்மித்" என்றுதான் அழைப்பார்கள்) ஆண்டவர் அவரிலிருந்து பேசுகின்றார்" என்று கூறி கண்ணீர் விட்டு ஆனந்தத்தால் கதறி அழுதார்கள்.
1913 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் முதல் தேதி புது வருட பிறப்பு அன்று விக்கிள்ஸ்வொர்த்தின் அருமை மனைவி மேரி ஜேன் தேவ ஊழியம் காரணமாக வெளி ஊர் சென்றிருந்தார்கள். அவர் தனது மனைவியை "பாலி" என்றே அன்புடன் அழைப்பார். அந்த தேவ ஊழியப்பாதையில் அம்மையார் சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென்று மரித்துப் போனார்கள்.
அவருடைய உத்திரவின்படி அம்மையாரின் ஜீவனற்ற சடலம் அவர்களது அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே அவர்களது படுக்கையில் கிடத்தி வைக்கப்பட்டது. அவர்களின் சரீரத்தை சுமந்து வந்தவர்கள் கடந்து சென்றதும் விக்.கிள்ஸ்வொர்த் தனியனாக அம்மையாரின் அறைக்குச் சென்று, தனக்குப் பின்னாக அறையை மூடிவிட்டு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மரணத்தைக் கடிந்து கொண்டு தனது மனைவியைவிட்டு அது கடந்து செல்லக் கட்டளையிட்டதும் அம்மையார் தனது கண்களைத் திறந்து முதற் பார்வையாக தனது கணவனையே பார்த்து
"இதை ஏன் செய்தீர்கள் ஸ்மித்?" என்று கேட்டார்கள்.
"என் அன்பே பாலி, நீ எனக்குத் தேவை" என்றார் விக்கிள்ஸ்வொர்த்.
"ஸ்மித், எனது தேவப் பணி நிறைவு பெற்றுவிட்டது. தேவன் என்னை அழைக்கின்றார்" என்று அம்மையார் கூறினார்கள். அவர்கள் இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்கப்பால் தேவ மனிதர் தன் மனைவியைப் பார்த்து "நல்லது பாலி, நான் உங்களைப் போக அனுமதிக்கின்றேன்" என்று சொன்னார். பின்னர் மேரி ஜேன் அம்மையார் தனது தலையை தலையணையில் வைத்துப் படுத்து தனது ஆண்டவரண்டை கடந்து சென்றார்கள். தனது மகிழ்ச்சிக்கும், வாழ்வின் தேவைக்கும் அவசியமான மிக முக்கியமான சந்தர்ப்பத்தில் விக்கிள்ஸ்வொர்த் தனது ஆண்டவருடைய திருவுளச் சித்தத்துக்கு மாறாக எதுவும் ஆண்டவரோடு பேசி வாதாடி தனது ஆவலை நிறைவுசெய்யாமல் தனது தலையைத் தாழ்த்தி தேவனுடைய சித்தத்தை அப்படியே ஏற்றுக் கொண்டார்.
