ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் (1859 - 1947) 3
மிகவும் எளிமையான தேவ மனிதர்
தேவபக்தன் விக்கிள்ஸ்வொர்த் ஒரு பெரிய செல்வச் சீமானாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், அவர் தனக்கென்று எதையும் சொந்தம் பாராட்டிக் கொள்ளவில்லை. தானும், தனக்குள்ளதெல்லாம் தனது அருமை இரட்சகருக்கே சொந்தமானது என்று அவர் எண்ணினார். அவர் ஒரு அரண்மனையில் உலகப்பிரகாரமான எல்லா ஆடம்பரங்களோடும் வாழ்ந்திருக்க முடியும். ஆனால், இங்கிலாந்து தேசத்தில் யார்க்ஷையர் என்ற இடத்திலுள்ள பிராட்ஃபோர்ட் என்ற பகுதியில் ஒரு சிறிய கல் வீட்டில் வாழ்வதை அவர் பெரும் திருப்தியாகக் கொண்டார். அது ஒரு கல் வீடாக இருந்தபோதினும், தேவனுடைய சிங்காசனம் அங்கு இருக்கும் பட்சத்தில் அது எப்ப
டிப்பட்ட மகிமையில் இலங்குமோ அந்த பரலோக மகிமையில்தான் அது இருந்தது. நான் அந்த தேவ மனிதரை அந்த சிறிய கல் வீட்டில் சந்திப்பதை ஒரு பரலோக ஆனந்தமாக எண்ணுவேன். தேவனுடைய ஆசரிப்புக்கூடாரத்தை மூடியிருந்த மகிமையின் மேகத்துக்குள் சென்று வருவதைப் போன்ற ஒரு பரலோக அனுபவம் ஒவ்வொரு தடவையும் எனக்குக் கிடைக்கும்.விக்கிள்ஸ்வொர்த் மிகவும் நடை முறையான ஒரு தேவ மனிதனாவார். எனக்கு நன்கு நினைவிருக்கின்றது. ஒரு குளிரான நாளின் மாலை நேரம் நான் அவரது வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்துவிட்டு புறப்படும்போது அவர் தனது கரத்தை என் மீது வைத்து என்னை ஆசீர்வதித்ததுடன் "இதோ பார், உனது மேல் கோட்டின் பொத்தான்களை எல்லாம் சரியாக அதினதின் துவாரங்களில் போட்டு, கோட்டின் கழுத்துப்பட்டை காலரையும் குளிர் புகாத வண்ணம் மேலே தூக்கிவிட்டுக் கொள்ள வேண்டும். உனது உடல் நலத்தை நீ நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். உனது சரீரம் உனக்கு அல்ல, உனது ஆண்டவருக்குச் சொந்தமானது. நியாயத்தீர்ப்பு நாளில் அது குறித்து நீ தேவனுக்கு கணக்கு கொடுக்க வேண்டும்" என்று சொன்னார்.
விக்கிள்ஸ்வொர்த் எப்பொழுதும் சுத்தமாகவும், நேர்த்தியான ஒழுங்கோடும் தனது ஆடைகளை உடுத்தியிருப்பார். ஒழுங்கீனமான ஆடைகளை அணிவது ஆண்டவருக்கு மகிமை சேர்க்காது என்று அவர் சொல்லுவார். அவர் வாழ்ந்த சமுதாயத்தின் பொருளாதார நெருக்கடி காலங்களிலும் அவர் அப்படியேதான் அழகாக தனது உடைகளை உடுத்தியிருப்பார். அது குறித்து மக்கள் அவரை குறை சொன்னதும் உண்டு. ஆண்டவர் இயேசுவுடைய முழு நேர தேவ பணிக்காக தனது கொத்தனார் வேலையை விட்டுவிட்டு வெளியே வந்த சமயம் தனது ஆண்டவரைப் பார்த்து "ஆண்டவரே, எனது சப்பாத்துக்கள் கிழிந்து பொத்தலாகி வேறு சப்பாத்துக்களை வாங்க எனக்கு வழியில்லாமல் போகும் பட்சத்தில் அல்லது எனது வஸ்திரங்கள் பழைமையாகி கிழிவுண்டாகி அதற்கு தையற்காரர் ஒட்டுப்போட தேவை நேரிடும் பட்சத்தில் நான் எனது பழைய கொத்தானார் வேலைக்கே போய்விடுவேன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளும்" என்று தனக்கே உரித்தான பரம தந்தை அவருடைய பிள்ளை என்ற பாசத்தில் கூறினார். அவருடைய வார்த்தைப்படியே எந்த ஒரு தாழ்ச்சியும் இல்லாமல் கர்த்தர் அவரை நிறைபூரணமாக வழி நடத்தினார். ஒரு மனிதன் தேவனை பூரணமாக நம்பும்போது அவன் அவரிடத்தில் எதையும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. அவனது தேவைகள் என்னவென்பதை அவர் அறிந்து அவரே அவைகளைச் சந்தித்து அவனை அற்புதமாக வழிநடத்துவார் என்று அந்த தேவ மனிதர் கூறுவார்.
அவரது வார்த்தைப்படியே அவர் தனது வாழ்வில் அதை நிரூபித்தும் காண்பித்தார். விக்கிள்ஸ்வொர்த் தனது தேவை குறித்து எந்த ஒரு மனிதனிடமும் ஒரு தடவைகூட கேட்டது கிடையாது. திரும்பவும் அவர் கொத்தனார் வேலைக்குப் போய்விடாதவாறு தேவனும் அவரைக் காத்துக் கொண்டார். இதற்கிடையில் தனது குடும்பத்தைப் போஷித்து பராமரிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கவே இருந்தது. தேவன் ஒரு கஞ்ச பிரபு அல்ல, அவர் தனது பரிபூரணத்திலிருந்து தமது மக்களுக்கு வாரி வழங்குபவர். அதைக் கொண்டு தேவ ஊழியன் தனது சுய தேவைகளை நிறைவு செய்து கொண்டு மற்றவர்களுக்கும் தாராளமாக உதவி செய்யலாம் என்று அவர் சொல்லுவார். அதை தனது வாழ்வில் மெய்ப்பித்தும் காண்பித்தார்.