பிரசங்கம்


பிரசங்கம்
L.ஜோசப்
இதமான வார்த்தைகளைக் கண்டு பிடிக்கப் பிரசங்கி வகைதேடினான், எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள்.
பிரசங்கி 12:10



பிரசங்கி என்பவர் முக்கியமாக பிரசங்கத்தின் ஒவ்வொரு முறைமைகளையும் அதன் நுணுக்கங்களையும் நன்கு கற்று இருக்க வேண்டியது அவசியம். இது பிரசங்கியாரின் பிரசங்க ஊழியத்திற்கு பரந்த அணுகுமுறைகளை அளித்து, ஒவ்வொரு முறையும் அவரது பேச்சை கேட்கிற ஜனங்களை இன்னும் அதிகமாக ஆர்வத்துடன் கவனிக்கும் படி செய்யும். காலப்போக்கில் வேத சத்தியங்களை இன்னும் அதிகமாக விரிவாக எடுத்துரைக்க உதவுவதாக அமையும். எந்த பிரசங்கி யாருடைய ஊழியம் பலதரப்பட்ட வகையில் உள்ளதாக இருக்கிறதோ அதற்கு வளமும் அழகும் மதிப்பும் அதிகரிக்கிறது.
எழுதி வைத்து பிரசங்கித்தல்:-
முதலில் வேதத்தில் உள்ள பொருத்தமான ஒரு கூற்றை தெரிந்தெடுக்க வேண்டும். அதைப் பகுத்து ஆராய்ந்து அறிந்து அதில் உள்ள எல்லா சத்தியங்களையும் கண்டுபிடித்து அதை கவனமாய் எழுதி வைக்க வேண்டும். பின்பு பகுத்தாராய்ந்து சத்தியத்தை ஒழுங்கும் கிரமமாக வரிசைப்படுத்தி கேட்கிறவர்கள் மிக எளிதில் விளங்கிக் கொள்ளும் வண்ணமும் அதை அப்படியே தங்கள் மனதில் பதிய வைக்கும் விதத்திலும் பிரசங்கிக்க வேண்டும்.
குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிக் கூறுதல்:-
நம் பிரசங்கிக்க இருக்கும் பிரசங்கத்தின் முக்கிய விஷயங்களை கேட்கிறவர்கள் நன்கு புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துரைப்பது பிரசங்கி யாருடைய நோக்கமாய் இருக்க வேண்டியது அவசியம்.

உதாரணமாக:
“நீதிமானாக்கப்படுதல்” என்ற தலைப்பில் பிரசங்கிக்க விரும்புகிறோம் என்றால் இதை குறித்து பரிசுத்த வேதாகமம் சொல்லக்கூடிய விளக்கங்களை ஆராய்ந்து அறிய வேண்டியது மிகவும் அவசியம். அதன் பின்பு சேகரித்து வைத்துள்ள எல்லா வேத குறிப்புகளையும் அதைப்பற்றிய எண்ணங்களையும் சீராக வடிவமைக்க வேண்டியது அவசியம். பின்பு அவற்றை ஜனங்களுக்கு புரியும் வண்ணம் பகுத்து போதிக்க நன்கு அறிந்திருக்க வேண்டும். சில நேரங்களில் ஒரே கூட்டத்தில் இதை சொல்லி முடியாமல் போகலாம் ஆகவே அதே பொருளில் ஒரு தொடர் கூட்ட செய்திகளாக அல்லது போதனைகளாக அவற்றை தயாரிக்கலாம் இப்படி செய்யும்போது இந்த பொருள் பற்றி இன்னும் முழுமையான ஆராய்ச்சி நிச்சயமாக்கப்படுகிறது.

வகைப்படுத்துதல்:-
இது வேதாகமத்தில் உள்ள வெவ்வேறு வகையில் அடிப்படையில் மறைந்திருக்கும் சத்தியத்தை வெளிப்படுத்தி அறிவிக்கும் பிரசங்கம் ஆகும். வகை என்பது ஒரு நபர் அல்லது ஒரு பொருள் அல்லது இனி வர இருக்கும் யாரையாவது எதையாவது குறித்த தீர்க்கதரிசன அடையாளமாக இருக்கக்கூடிய நிகழ்ச்சியாக இருக்கலாம். வேதாகம வசனங்களின் கருத்தை நன்கு விபரித்தல் விவரங்களோடு விளக்கம் கொடுத்தல் இவற்றுக்கு சிறந்த கவனம் தேவை. வேதத்தில் சிறந்த ஞானமும் முதிர்ச்சியும் பெற்றவர்களின் திறமை இதற்கு தேவைப்படுகிறது. அனுபவமற்ற புதியவர்கள் ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த செய்திகளை பிரசங்கம் செய்ய முயற்சிப்பதை சில நாட்கள் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் திறனற்ற கருத்து விளக்கங்கள் வருந்தத்தக்க தவறுகளுக்கு நேராய் வழிநடத்த கூடும். வேத வசனங்களின் அர்த்தங்களை விரிவுரை செய்ய முயல்பவர்கள் வேதத்தை குறித்த ஆழ்ந்த அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.
விவரங்களை விளக்குதல்:-
இது வேதத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள சத்தியத்தையும் அதன் பொருளையும் பற்றி விரிவாக எடுத்துக் கூறுவதும், வேத வசனத்தில் மறைந்துள்ள சத்தியத்தை வெளியே கொண்டுவர முயற்சிப்பதுமாகும். இது தேவனுடைய ஆலோசனையை பற்றி முழுமையாக போதிக்கும் மிகச்சிறந்த முறையாக கருதப்படுகிறது. இதில் வேதாகமத்தின் ஒரு புத்தகத்தை தெளிவு செய்து அதனுடைய பொருளையும் உட்கருத்தையும் ஒவ்வொரு அதிகாரமாக விளக்கலாம் அல்லது ஒரு அதிகாரத்தை தெரிவு செய்து அதை ஒவ்வொரு வசனமாக பார்த்து அதில் ஆவிக்குரிய அர்த்தங்களையும் தேவை வெளிப்பாடுகளையும் விளக்கிக் கொண்டே போகலாம். இது ஒரு தொடர் வேதாகம ஆராய்ச்சியாக பல வாரங்கள் அல்லது வருடங்களாக தொடரலாம்.
வாழ்க்கை வரலாறு:-
ஒரு நபருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களே அவருடைய வாழ்க்கை வரலாறு ஆகும். இந்த வகையான பிரசங்கத்திற்கு வேதாகமத்தில் நாம் வாசிக்கும் அனேகன் நபர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து படிக்க வேண்டும். ஏனெனில் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு நபருடைய வாழ்க்கை வரலாறு நமக்கு ஒரு விசேஷித்த கருத்தை வலியுறுத்துகிறதாய் இருக்கிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அனேகம் உண்டு. வேதாகம கதாபாத்திரங்களைப் பற்றி ஆராய்ந்து படிப்பது மிகவும் ஆர்வத்தைத் தூண்டும். ஒரு குறிப்பிட்ட நபரை தெரிந்துகொண்டு அவரைப்பற்றி வேதத்தில் இருக்கிற எல்லா குறிப்புகளையும் கருத்தாய் வாசித்து அவரைக் குறித்து மனதிற்குள் வரும் ஒவ்வொரு எண்ணத்தையும் குறிப்பு எழுதி அதை ஜனங்களுக்கு சிறந்த முறையில் விளக்கமாக போதிப்பது இவ்வகை பிரசங்கத்தின் தன்மையாகும்.
பகுத்தாராய்தல்:-
இவ்வகையான பிரசங்கம் ஒரு பொருளிலிருந்து மிக அதிகமான சத்தியத்தை பிரித்தெடுக்க அதை விரிவுபடுத்தி ஆராய்வதோடு சம்பந்தப்பட்டது. இந்த சத்தியத்திலிருந்து சம்மந்தப்பட்ட வேதாகம கொள்கைகளை போதிக்க முடியும். அப்போஸ்தலனாகிய பவுல் திமொத்தேயுவுக்கு சத்திய வசனத்தை பகுத்து போதிக்கிறவனாய் இருக்கும்படி வலியுறுத்துவதை நாம் காணலாம்.
ஒப்பிட்டு கூறுதல்:-
வேதாகமத்தின் அதிகமான பகுதி இந்த ஒற்றுமையை காட்டும் வகையில் தான் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு சத்தியத்தை இணையான பல்வேறு காரியங்கள் மூலம் போதிக்கிறது. எழுத்தாளர்கள் அனேகமாக ஒரு ஆவிக்குரிய சத்தியத்தை போதிக்க ஏதேனும் ஒரு இயற்கைப் பொருளை உபயோகிக்கிறார்கள். இது ஒரே மாதிரியான செயல்பாட்டை ஒப்பிடுதல், இணையான காரியத்திலிருந்து பகுத்தறிதல் இவற்றின் அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மொழியில் உள்ள சத்தியத்தை தெரியப்படுத்த முயற்சிப்பது இவ்வகை பிரசங்கம் ஆகும்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.