Type Here to Get Search Results !

திருக்குறள் & பைபிள் - கடவுள் வாழ்த்து

திருக்குறள் & பைபிள் - கடவுள் வாழ்த்து

திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்து இறைவனை போற்றி புகழ்கிறது. இந்த பத்து குறள்களோடு பொருந்தும் பைபிள் வசனங்களை இந்த பதிவில் காணலாம். வள்ளுவர் இறைவனை கண்ணோக்கும் விதமும் அதற்கு இணையான பைபிள் வசனங்களும் நிச்சயமாக மெய் சிலிர்க்கச் செய்கின்றன. குறள்களின் விளக்கத்திற்கு சாலமன் பாப்பையா உரையும், மு.வரதராசனார் உரையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து 
(அறத்துப்பால், பாயிரவியல்)

குறள் 1: 
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

சாலமன் பாப்பையா உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; அது போல உலகம் கடவுளில் தொடங்குகிறது.

பைபிள் வசனம்:
நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாய் இருக்கிறேன் - வெளிப்படுத்தின விசேசம் 1:8

விளக்கம்:
பைபிளின் இறுதி நூலான வெளிப்படுத்தின விசேசம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. கிரேக்க மொழியின் முதல் எழுத்து அல்பா, இறுதி எழுத்து ஒமெகா. இயேசு தன்னை அல்பா ஒமெகாவோடு ஒப்பிட்டு சிருஷ்டியின் முதலும் முடிவுமாய் தான் இருப்பதை நினைவு கூறுகிறார்.

குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

சாலமன் பாப்பையா உரை:
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

பைபிள் வசனம்:
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் - நீதிமொழிகள் 9:10

குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

சாலமன் பாப்பையா உரை:
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.

பைபிள் வசனம்:
கர்த்தருக்கு பயப்படுதல் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணும் - நீதிமொழிகள் 10:27

குறள் 4:
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

சாலமன் பாப்பையா உரை:
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

பைபிள் வசனம்:
கர்த்தரை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது - நீதிமொழிகள் 34:10

குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.

பைபிள் வசனம்:
நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் - யோவான் 8:12

குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

மு.வரதராசனார் உரை:
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்து இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

பைபிள் வசனம்:
மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள் - ரோமர் 8:13

விளக்கம்:
பரிசுத்த ஆவியான இறைவனின் துணை கொண்டு சரீரத்தின் இச்சையான செயல்களை அழித்தால் பிழைப்போம். அவ்வாறன்றி, மாம்ச இச்சைகளில் நிலைத்திருந்தால் மரணம் உண்டாகும் என இவ்வசனம் கூறுகிறது.

குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

சாலமன் பாப்பையா உரை:
தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

பைபிள் வசனம்:
நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக் கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் - மத்தேயு 11:29

குறள் 8:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

சாலமன் பாப்பையா உரை:
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.

பைபிள் வசனம்:
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் - யோவான் 14:6

குறள் 9:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

மு.வரதராசனார் உரை:
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

பைபிள் வசனம்:
கண்களிருந்தும் குருடராயிருக்கிற ஜனத்தையும் காதுகளிருந்தும் செவிடராய் இருக்கிறவர்களையும் புறப்பட்டு வரப்பண்ணுங்கள் - ஏசாயா 43:8

விளக்கம்:
கடவுளை அறியாத மக்கள் கண்களுள்ள குருடராகவும், காதுகளுள்ள செவிடராகவும் உள்ளனர் என இவ்வசனம் குறிப்பிடுகிறது.

குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

மு.வரதராசனார் உரை:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

பைபிள் வசனம்:
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் - யோவான் 14:6

------------------------------------------------------

குறிப்பு: திருக்குறள் கிறிஸ்தவஞ் சார்ந்த இலக்கியம் என எடுத்துக்கூற இயற்றப்பட்ட பதிவு அல்ல இது. மாறாக, திருக்குறளுக்கும் பைபிளுக்கும் உள்ள ஒரு சில ஒற்றுமைகளே இந்த பதிவில் பதிக்கப்பட்டுள்ளன.

------------------------------------------------------

இது இவர் யார் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.