எஸ்ரா 9 விளக்கவுரை

எஸ்றா 9

(10) இஸ்ரவேலர் பாவம் செய்தனர்.
வசனம் 9:1-2

இவைகள் செய்து முடிந்தபின்பு, பிரபுக்கள் என்னிடத்தில் சேர்ந்து: இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும் லேவியரும் ஆகிய இவர்கள், கானானியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், அம்மோரியர் என்னும் இந்தத் தேசங்களின் ஜனங்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை. எப்படியென்றால், அவர்களுடைய குமாரத்திகளிலே தங்களுக்கும் தங்கள் குமாரருக்கும் பெண்களைக் கொண்டார்கள். இப்படியே பரிசுத்த வித்துத் தேசங்களின் ஜனங்களோடே கலந்துபோயிற்று. பிரபுக்களின் கையும், அதிகாரிகளின் கையும், இந்தக் குற்றத்தில் முந்தினதாயிருக்கிறது என்றார்கள்.


தேவனுடைய வல்லமையான வார்த்தைகள், மனிதர்களின் இருதயதங்கிலே கிரியை செய்ய வல்லமை உள்ளதாய் இருக்கிறது. வேதத்தில் இதற்குச் சான்றாக, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து நான் அதை அனுப்பிய காரியம் ஆகும்படி வாய்க்கும், என்று ஏசாயா தீர்க்கதரிசியினால் கூறப்பட்டுள்ளதைக் காண்கிறோம் (ஏசாயா 55:11). இதன்படி எஸ்றாவின் போதனைகள் செயல்பட்டதைக் காண்கிறோம். எஸ்றா, எருசலேமுக்கு வந்து சேர்ந்த சில நாட்களிலேயே சில பிரபுக்கள் அவனிடத்தில் சில காரியங்களைக் கூற வந்து நின்றனர். இஸ்ரவேலரில் சிலர், விக்கிரகங்களை வணங்குகின்ற அந்நியர்களிலிருந்து விலகியிருக்கத் தவறி விட்டனர். அவர்களுடைய பிள்ளைகளுக்குப் புறஜாதியினரிடமிருந்து அவர்கள் பெண் கொண்டனர். அவர்களில் இக்குற்றத்தைச் செய்தவர்கள் ஆசாரியர் லேவியர் ஆன இஸ்ரவேலின் தலைவர்களே.
மோசே இதனை மறுபடியும், மறுபடியுமாக பலமுறைத்தடுத்திருக்கிறார். உபா.7:14 இல் மோசே, இத்தகையோர் சிலரைக்குறிப்பிட்டு, அவர்களிடம் சம்மந்தம் கலவாயாக... அவர்ககளோடு பெண் கொள்ளவும், கொடுக்கவும் வேண்டாம், எனக் கட்டளையிட்டுள்ளார். ஆனால் இப்போது இஸ்ரவேலர் அதைப்புறக்கணித்து விட்டனர். இஸ்ரவேலர் பாபிலோனைவிட்டு எருசலேமுக்குப் புறப்பட ஒரு நல்ல முடிவை மேற்கொண்டனர். எருசலேமிலே பல இனத்துப் புறஜாதியினரை நாம் காணமுடிகிறது. ஆனால் அவர்கள் தேவனின் பரிசுத்த திட்டங்களைப் பின்பற்றுவதை விடுத்து அவர்களோடு பெண் கொண்டு, பெண் கொடுத்து சம்மந்தம் கலந்தனர். பிரித்தறிய முடியாதபடி அவர்களோடு கலந்தும் விட்டனர்.
வசனம் 9:3-4

இந்த வர்த்தமானத்தை நான் கேட்டபொழுது, என் வஸ்திரத்தையும் என் சால்வையையும் நான் கிழித்து, என் தலையிலும் என் தாடியிலுமுள்ள மயிரைப் பிடுங்கித் திகைத்தவனாய் உட்கார்ந்திருந்தேன். அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் இஸ்ரவேலுடைய தேவனின் வார்த்தைகளுக்கு நடுங்குகிற யாவரும் என்னோடேகூட கூடிக்கொண்டார்கள். நானோ அந்திப்பலி செலுத்தப்படுமட்டும் திகைத்தவனாய் உட்கார்ந்துகொண்டிருந்தேன்.

இதைக் கேட்ட மாத்திரத்தில் எஸ்றா திடுக்கிட்டுத் திகைத்தான். வஸ்திரத்தையும் சால்வையையும் கிழித்துக்கொண்டான். தலையிலும் தாடியிலும் உள்ள மயிரைப்பிடிங்கிக்கொண்டு திகைப்பில் உட்கார்ந்துக் கொண்;டான். இத்தகைய ஒரு நிகழ்ச்சியைக் கண்டவுடன் எஸ்றா எவ்வாறு செயற்பட்டான் என்பது கவனிக்கத் தகுந்தது. அவன் கோபத்தால் துடித்தெழுந்து அவனைச் சூழ இருந்தவர்களைத் திட்டித் தீர்த்தானா? இல்லை! அவனுடைய சொந்த ஆடைகளையும், முடியையும் பிய்த்துக்கொண்டான். அவன் சென்று மூட்டை முடிச்சுகளைக்கட்டி, புறப்பட்டு இஸ்ரவேலரை அவர்களின் வழியிலே விட்டுச் சென்றானா? இல்லைவே இல்லை! அவன் அமர்ந்து, உபவாசித்து, பிரார்த்தனை செய்தான். தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபித்தான். இதைப் பார்த்த மாத்திரத்தில், அவ்வாறான பெரிய குற்றத்தைச் செய்யாத சிலரும் மற்றும் பலரும் அவனோடு சேர்ந்து பிரார்த்தனை செய்தனர். இஸ்ரவேலினுடைய தேவனின் வார்த்தைகளுக்கு நடுங்குகிற யாவரும் எஸ்றாவோடு சேர்ந்தும் கொண்டனர்.
கர்த்தர் தமது வார்த்தைகளுக்கு நடுங்குகிறவர்களை ஏற்றுக்கொள்ளுகிறார். சிறுமைப்பட்டு, ஆவியில் நொருங்குண்டு, உன் வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன் என்று வேதம் கூறுகிறது (ஏசாயா 66:2).
கர்த்தராகிய தேவனின் வார்த்தைகளுக்கு நடுங்காதவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருப்பவன் காயீன். முதலாவது, அவன் தேவனுக்குப் பிரியமில்லாத காணிக்கையைத் தனது விருப்பப்படியே செலுத்தத் துணிந்தான் (ஆதி. 4:5). அத்தகைய நிகழ்ச்சியை மாற்றிக் கொள்ள தேவன் அளித்த சந்தர்ப்பத்தை அவன், பின்பு புறக்கணித்தான் (ஆதி. 4:7). பின்பு ஆபேலை, அவன் கிரியைகள் நீதியுள்ளவைகளாயிருந்ததினிமித்தம், கொலை செய்தான் (1.யோவான் 3:12, நீதி. 29:10). அவன் பொல்லாங்கனால் உண்டானவன், என்று வேதம் கூறுகிறது. கர்த்தருடைய வார்த்தைகளைப் புறக்கணித்தபின் அவனுடைய வழிகள் யாவும் விழத் தள்ளப்பட்டுப்போயின.
வசனம் 9:5-6

அந்திப்பலி நேரத்திலே நான் துக்கத்தோடே எழுந்து, கிழித்துக்கொண்ட வஸ்திரத்தோடும் சால்வையோடும் முழங்காற்படியிட்டு, என் கைகளை என் தேவனாகிய கர்த்தருக்கு நேராக விரித்து: என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன். எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்குமேலாகப் பெருகிற்று. எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று.

அன்று மாலை எஸ்றா முழங்கால்படியிட்டு ஜெபித்தான். என் தேவனே! நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக்கலங்குகிறேன்.. ..என்று எஸ்றா தன்னைத் தேவனுக்கு முன்பாகத் தாழ்த்துகிறான்.. ஆனால் புறஜாதியாரிடையே பெண்கொண்ட குற்றத்தை எஸ்றா செய்யவில்லை. ஆம், ஆனாலும் குற்றம் செய்த மற்றோருடன் தானும் ஒருவன் என்ற அளவில் தன்னைத் தாழ்த்தி தேவனிடத்தில் வேண்டுதல் செய்கிறான் எஸ்றா. தானியேலும் ஒருமுறை அவ்வாறே செய்தான். தானியேல் பாவம்செய்ததாக நாம் வேதத்தில் வாசிப்பதில்லை. ஆனாலும் குற்றம் செய்தவர்களுடன், தேவனுக்குமுன்பாக, அவன் தன்னைம் இணைத்துக்கொள்ளுகிறான். எங்கள் பாவங்களினாலும்.. என்று கூறும் வசனங்களை தானி. 9:16இல் நாம் வாசிக்கிறோம். இதற்கு மேலாக பாவமே அறியாத கர்த்தராகிய இயேசுவைக் குறித்து நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு பாவம் அறியாத அவரை நமக்காக (தேவன்) பாவமாக்கினார் என்று 2.கொரி. 5:21 இல் நாம் வாசிக்கிறோம். தேவன் அவரே. பாவத்தில் இருந்தவராக, சிலுவைக்கு ஒப்புக்கொடுத்தார் அல்லவா?.
வசனம் 9:7-9

எங்கள் பிதாக்களின் நாட்கள்முதல் இந்நாள்மட்டும் நாங்கள் பெரிய குற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறோம். எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நாங்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் ஆசாரியர்களும், இந்நாளிலிருக்கிறதுபோல, அந்நியதேச ராஜாக்களின் கையிலே, பட்டயத்துக்கும், சிறையிருப்புக்கும், கொள்ளைக்கும், வெட்கத்துக்கும் ஒப்புக்கொடுக்கப்பட்டோம். இப்பொழுதும் எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களிலே தப்பின சிலரை மீதியாக வைக்கவும், தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தில் எங்களுக்கு ஒரு குச்சைக் கொடுக்கவும், இப்படியே எங்கள் தேவன் எங்கள் கண்களைப் பிரகாசிப்பித்து, எங்கள் அடிமைத்தனத்திலே எங்களுக்குக் கொஞ்சம் உயிர் கொடுக்கவும், அவராலே கொஞ்சநேரமாவது கிருபைகிடைத்தது. நாங்கள் அடிமைகளாயிருந்தோம். ஆனாலும் எங்கள் அடிமைத்தனத்திலே எங்கள் தேவன் எங்களைக் கைவிடாமல், எங்களுக்கு உயிர்கொடுக்கவும், நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தை எடுப்பித்து, பாழாய்போன அதைப் புதுப்பிக்கும்படிக்கும் எங்களுக்கு யூதாவிலும் எருசலேமிலும் ஒரு வேலியைக் கட்டளையிடும்படிக்கும், பெர்சியாவின் ராஜாக்கள் சமுகத்தில் எங்களுக்குத் தயைகிடைக்கச்செய்தார்.

எஸ்றா, தனது ஜெபத்தில் இஸ்ரவேலர் ஆரம்பமுதலே பாவம் செய்தனர் என்று அறிக்கையிடுகிறான். அவர்கள் எல்லாரும் பாவம் செய்தார்கள் என்று கூறுகிறான். ஆகவே தேவன், இஸ்ரவேலின் இராஜ்யத்தையும், இராஜாக்களையும், அவர்களின் ஆசாரியர்களையும், அவர்களின் சத்துருக்களின் கைகளிலே ஒப்புக்கொடுத்தார். அநேகர் கொல்லப்பட்டனர். பலர் சிறைப்பிடிக்கப்பட்டனர் அல்லது வெட்கப்படுத்தப்பட்டனர். ஆனால் தேவனாகிய கர்த்தரோ மேலும் மேலும் கிருபை கடாட்சித்தருளினார். இஸ்ரவேலரில் பலரை மீதியாக வைத்து, எருசலேமுக்குத் திரும்பிவரச் செய்தார். அதுமட்டுமன்றி அவர்களுக்குப் பாதுகாப்பான அரணாக தேவனுடைய ஆலயத்தைக் கட்டும் வாய்ப்பினையும் அளித்தார். எருசலேமில் ஒரு வேலையைக் கட்டளையிட்டார் என்று வேதம் கூறுகிறது. அதுமட்டுமன்றி, தம்முடைய பரிசுத்த ஸ்தலத்திலே எங்களுக்கு ஒரு குச்சைக் கொடுக்கவும் கிருபை கிடைத்தது என்று எஸ்றா கூறுகிறான். அத்தகைய குச்சிலேதான் விலையுயர்ந்த பொருட்கள் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. ஏசாயாவின் தீர்க்கதரிசனப் புத்தகத்திலே, அவனை உறுதியான இடத்திலே ஆணியாகக் கடாவுவேன்.. அதன்மேல் அவன் தன் தகப்பன் வீட்டிற்கு சிங்காசனமாயிருப்பேன்.. என்று கர்த்தராகிய இயேசுவைப்பற்றி முன்னறிவிக்கப்பட்டுள்ளது (ஏசா. 22:23-24). இம்மாதிரிக் கூறும்போது, எஸ்றா, தேவனைத் தொழத்தக்கதாய், அவர் அருளிய ஆசீர்வாதங்களைக் குறித்து விளக்குகிறார். எஸ்றா கூறுவதாவது:
1. தேவனாகிய கர்த்தர் அவர்களைப் புறக்கணிக்கவில்லை. 2. பெர்சியாவின் இராஜாக்களின்மூலம் தேவன் கருணைசெய்துள்ளார். 3. தேவனுடைய ஆலயத்தைக் கட்ட தேவன் வழி நடத்தினார். 4. யூதாவிலும், எருசலேமிலும், இடிந்து பாழாய்க்கிடந்த அலங்கங்களை பழுது பார்த்துக் கட்ட தேவன் கிருபை செய்தார்.
தேவனாகிய கர்த்தருக்கு எஸ்றா, இந்த ஆசீர்வாதங்களுக்காக, எல்லா மகிமையையும் செலுத்தத் தவறவில்லை.
வசனம் 9:10

இப்பொழுதும் எங்கள் தேவனே, நாங்கள் இனி என்னசொல்லுவோம். தேவரீர் உமது ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு கற்பித்த உமது கற்பனைகளை விட்டுவிட்டோம்.

எஸ்றாவைப்போலவே மற்ற இஸ்ரவேலரும் கர்த்தருக்கு நன்றியோடே மகிமையைச் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அது மட்டுமன்றி கர்த்தர் அருளிச் செய்த கற்பனைகளையும் அவர்கள் புறக்கணித்து விட்டனர். எஸ்றா அவர்களுக்கு இரங்கல் ஏதும் காட்டவில்லை. கர்த்தரின் பெரிதான கிருபையையும், ஆசீர்வாதங்களையும் எண்ணிப் பார்க்குமிடத்து அவர்கள் செய்த பாவம் மிகவும் துரோகமானது என்று கூறினான்.
வசனம் 9:11-12

நீங்கள் சுதந்தரிக்கிறதற்கு உட்பிரவேசிக்கும் தேசமானது, தேசா தேசங்களுடைய ஜனங்களின் அசங்கியத்தினாலும், அவர்கள் அதை ஒரு முனை தொடங்கி மறுமுனைமட்டும் நிறையப்பண்ணின அவர்களுடைய அருவருப்புகளினாலும் அவர்களுடைய அசுத்தத்தினாலும், தீட்டுப்பட்டதாயிருக்கிறது. ஆதலால் நீங்கள் பலத்துக்கொண்டு, தேசத்தின் நன்மையைப் புசித்து, அதை நித்தியகாலமாக உங்கள் பிள்ளைகளுக்கு உம்பிளிக்கையாகப் பின்வைக்கும்படிக்கு, நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்களுடைய குமாரருக்குக் கொடாமலும், அவர்களுடைய குமாரத்திகளை உங்கள் குமாரருக்குக் கொள்ளாமலும், அவர்களுடைய சமாதானத்தையும் நன்மையையும் ஒருக்காலும் நாடாமலும் இருப்பீர்களாக என்றீரே.

எஸ்றா தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் குறிப்பிட்டு, அங்கு வசித்து வந்த மக்களின் அசிங்கத்திலும், அவர்கள் நடப்பித்த அருவருப்புகளினாலும், அந்தத் தேசமானது மிகவும் தீட்டுப்பட்டதாய் உள்ளது. ஆகையால் தேவனாகிய கர்த்தர், இஸ்ரவேலர்கள், அந்த மக்களோடு எந்தவிதமான திருமண உறவு கொள்ளாமலும் பெண்கொண்டு, பெண் கொடுக்காமலும், அவர்களுடைய சமாதானத்தையும், நன்மையையும் ஒருக்காலும் நடாமலும் இருக்க வேண்டும் என்றும், அப்போதுதான் அந்தத் தேசத்தின் நன்மையைப் புசித்து, அதை நித்திய காலமாக உங்கள் பிள்ளைகளுக்குச் சுதந்திரமாய்ப் பெறமுடியும் என்றும் கூறினான்.
வசனம் 9:13

இப்பொழுதும் எங்கள் தேவனே, எங்கள் பொல்லாத செய்கைகளினாலும், எங்கள் பெரிய குற்றத்தினாலும், இவைகளெல்லாம் எங்கள்மேல் வந்தும், தேவரீர் எங்கள் அக்கிரமத்துக்குத் தக்க ஆக்கினையை எங்களுக்கு இடாமல், எங்களை இப்படித் தப்பவிட்டிருக்கையில்,

எஸ்றா கர்த்தரிடத்தில் தன்னைத் தாழ்த்தி, தேவன் அவர்களுடைய அக்கிரமத்திற்கு ஏற்ற ஆக்கினையை அவர்களுக்கு இடாமல், அவர்களுக்கு வந்த தண்டனை மிகவும் சொற்பமானதே என அறிக்கையிட்டு ஜெபித்தான். கர்த்தர் எப்போதும் கருணை வடிவமானவர். அவர் நமது பாவங்களுக்குத் தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார், என்று கூறினான் (சங். 103:10). ரோமர் 4:25 இல் உள்ளபடி அவர் (கர்த்தர்) நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டு, நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.
வசனம் 9:14

நாங்கள் உமது கற்பனைகளை வீணாக்கவும், இந்த அருவருப்புகளுள்ள ஜனங்களோடே சம்பந்தங்கலக்கவும் தகுமோ? அப்படிச் செய்தால், எங்களில் ஒருவரும் மீந்து தப்பாதபடிக்கு, தேவரீர் எங்களை நிர்மூலமாக்குமட்டும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரல்லவோ ?

இந்த மகத்துவமான தேவ அன்பின் சூழ்நிலையில், இந்த அருவருப்புகளுள்ள ஜனங்களோடு சம்மந்தம் கலக்கத் தக்கதாய் தேவனுடைய கற்பனைகளை வீணாக்கலாமோ? அப்படியானால் ஒருவனும் மீந்து தப்பாதபடி நிர்மூலமாக்கும்படி தேவ கோபாக்கினை அவர்கள்மீது வருமன்றோ?
வசனம் 9.15

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் நீதியுள்ளவர். ஆகையால் இந்நாளில் இருக்கிறதுபோல, நாங்கள் தப்பிமீந்திருக்கிறோம். இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள்ளானவர்கள். இதினிமித்தம் நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல என்று பிரார்த்தித்தேன்.

எஸ்றா இந்த எல்லா உண்மைகளையும் உள்ளபடி தேவ சந்நிதானத்தில் வெளியிட முன்வந்தான். இஸ்ரவேலர் பாவம் செய்தார்கள். அவர்களுக்கு மன்னிப்பே தகாது. தேவன் நீதிபரர். ஜனங்கள் யாவரும் தேவனுக்கு முன் தலைகுனிந்து நிற்க வேண்டியவர்கள். தங்கள் குற்றங்கள் நிமித்தம் நடுங்க வேண்டியவர்கள். தேவன், தமது சித்தத்தின்படி அவர்களுக்கு யாது செய்ய வேண்டுமென்று நினைக்கிறாரோ அதையெல்லாம் செய்ய வல்லவர் என்று எஸ்றா இந்த நிலையில் தாவீதைப்போல் நடந்துகொண்டான். தாவீது குற்றம் செய்தபோது தண்டனைகளாக ஏற்றுக்கொள்வதற்கு மூன்று நிலையில் நிறுத்தப்பட்டான். அன்று அவன் கூறியது இப்போது நாம் கர்த்தருடைய கைகளில் விழுவோமாக. அவருடைய இரக்கங்கள் மகா பெரியது. மனுஷன் கையில் விழாதிருப்பேனாக.. என்று (2.சாமு.24:11-14). அதுபோல் எஸ்றாவும், முழுத்தீர்ப்பையும் கர்த்தருடைய சித்தத்திற்கு விட்டுவிட்டான். யாதொரு மன்னிப்பிற்கும் மன்றாடவில்லை.
By Tamil christian Assembly

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.