எஸ்ரா 8 விளக்கவுரை

எஸ்ரா 8

(9) எஸ்றாவின் பயணம்

வசனம் 8:1-14

அர்தசஷ்டா ராஜா அரசாளும் காலத்தில் பாபிலோனிலிருந்து என்னோடே வந்த தங்கள் பிதாக்கள் வம்சங்களின் தலைவரும் அவர்கள் வம்ச அட்டவணைகளுமாவன: பினெகாசின் புத்திரரில் கெர்சோம், இத்தாமாரின் புத்திரரில் தானியேல், தாவீதின் புத்திரரில் அத்தூஸ், பாரோஷின் புத்திரரில் ஒருவனான செக்கனியாவின் புத்திரரில் சகரியாவும், அவனோடேகூட வம்ச அட்டவணையில் எழுதியிருக்கிற நூற்றைம்பது ஆண்மக்களும், பரகாத்மோவாபின் புத்தரரில் செராகியாவின் குமாரனாகிய எலியோனாயும், அவனோடேகூட இருநூறு ஆண்மக்களும், செக்கனியாவின் புத்திரரில் யகசியேலின் குமாரனும், அவனோடேகூட முந்நூறு ஆண்மக்களும், ஆதினீன் புத்திரரில் யோனத்தானின் குமாரனாகிய ஏபேதும், அவனோடேகூட ஐம்பது ஆண்மக்களும், ஏலாமின் புத்திரரில் அதலியாவின் குமாரனாகிய எஷாயாவும், அவனோடேகூட எழுபது ஆண்மக்களும், செப்பதியாவின் புத்திரரில் மிகவேலின் குமாரனாகிய
செப்பதியாவும், அவனோடேகூட எண்பது ஆண்மக்களும், யோவாபின் புத்திரரில் யெகியேலின் குமாரனாகிய ஒபதியாவும், அவனோடேகூட இருநூற்றுப் பதினெட்டு ஆண்மக்களும், செலோமித்தின் புத்திரரில் யொசிபியாவின் குமாரனும், அவனோடேகூட நூற்றறுபது ஆண்மக்களும், பெயாயின் புத்திரரில் பெயாயின் குமாரனாகிய சகரியாவும், அவனோடேகூட இருபத்தெட்டு ஆண்மக்களும், அஸ்காதின் புத்திரரில் காத்தானின் குமாரனாகிய யோகனானும், அவனோடேகூட நூற்றுப்பத்து ஆண்மக்களும், அதோனிகாமின்கடைசிப் புத்திரரான எலிபேலேத், ஏயெல், செமாயா என்னும் நாமங்களுள்ளவர்களும், அவர்களோடேகூட அறுபது ஆண்மக்களும், பிக்வாயின் புத்திரரில் ஊத்தாயும், சபூதும், அவர்களோடேகூட எழுபது ஆண்மக்களுமே.

அதிகாரம் 2ல் கூறப்பட்டுள்ளபடி, இந்த எட்டாம் அதிகாரத்திலும் எருசலேமுக்குச் சென்ற குடும்பங்களின் தலைவர்களின் பெயர்கள் விளக்கப்பட்டுள்ளது. அது முதலாவது இரண்டு ஆசாரியர்களின் பெயர்களுடன் ஆரம்பமாகிறது எனலாம். அவர்கள் தாம் பினெகாசின் புத்திரர்களும், இத்தாமாரின் புத்திரர்களுமாம். 1.நாளா. 24:1-2 வசனங்களில் இத்தாமார், ஆரோனின் வழிதோன்றிய ஆசாரியன் என்பதும், 1.சாமு 4:4 இல் பினெகாசைப்பற்றியும் கூறப்பட்டுள்ளதையும் நாம் வேதத்தில் காண்கிறோம். அந்த அறிவிப்பில் அதாவது, இந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பட்டியல்களின் அடிப்படையில் 1496 பேர் கூறப்பட்டுள்ளதைக் காண்கிறோம். அவர்களில் பலர் தலைவர்களாக தங்களின் குடும்ப வம்சா வழியில் தோன்றிய பலருடன் சேர்ந்து புறப்பட்டனர். மேலும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த மற்றும் பலரும் இதற்கு முன்பே, கோரேஸ் இராஜாவின் காலத்திலே எருசலேமுக்குச் சென்று இருந்தனர். அவர்களின் பெயர் பட்டியலை நாம் எஸ்றா 2ம் அதிகாரத்தில் காண்கிறோம். ஆகையால் இரண்டு தலைமுறையினரின் காலத்திற்குப் பின்சென்ற கூட்டத்தினரும், அவர்களுக்கு முன் சென்றவர்களுடன் இணைந்துக்கொள்ளுவர். எனவே முதல் கூட்டத்தார் வழி காட்டினர் என்றும், பிந்திய கூட்டத்தினர் 60 ஆண்டுகளுக்குப்பின் அவர்களைப்பின் தொடர்ந்து சென்றனர் என்றும் கொள்ளலாம்.
வசனம் 8:15

இவர்களை நான் அகாவாவுக்கு ஓடுகிற நதியண்டையிலே கூட்டிக்கொண்டுபோனேன். அங்கே மூன்றுநாள் தங்கியிருந்தோம். நான் ஜனங்களையும் அசாரியரையும் பாhவையிடும்போது, லேவியின் புத்திரரில் ஒருவரையும் அங்கே காணவில்லை.

எஸ்றா தனது கூட்டத்தாருடன் சென்று ஒரு நதியோரத்தில் மூன்று நாட்கள் தங்கினான். அது அகாவுக்கு அடுத்து ஓடுகிற நதி. அங்கே அவர்களைக் குடும்பங்களாக வகைப்படுத்திக் கணக்கெடுக்கையில் அவர்களில் லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரையும் காணவில்லை. அது, அந்தப் பயண திட்டத்தில் ஒரு பெரிய குறைபாடு. லேவியின் கோத்திரத்தார் சேர்ந்து வராததன் காரணம் ஏதும் இங்குக் கூறப்படவில்லை. வீடுகளைவிட்டு நெடும் தொலைவுப்பயணம் மேற்கொள்ளுவதென்பது மிகக்கடினமே. அதுபோலவே அது லேவியர்களுக்கும் கடினமாக இருந்திருக்க முடியும். லேவியர்களும் மற்றோரும் தங்கள் தினசரிக்கடமைகளைச் செய்ய வேண்டிய நிலையில், சிறைப்பட்ட அந்தச் சூழ்நிலை அவர்களின் பணிகளை மிகவும் பாதித்திருக்கலாம். இப்போது இந்தப் பயணத்திலே, லேவியர்கள் தங்கள் லேவியர் பணியைக்கட்டாயமாக செய்ய வேண்டியிருந்திருக்கும். இது அவர்களின் மனோ நிலையை மிகவும் பாதித்திருக்கக்கூடும். ஆகையால் அவர்கள் மிகவும் பின் தள்ளப்பட்டிருக்கக்கூடும்.

வசனம் 8:16

ஆகையால் நான் எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரிப், எல்நாத்தான், நாத்தான், சகரியா, மிசுல்லாம் என்னும் தலைவரையும், யோயாரிப், எல்நாத்தான் என்னும் புத்திமான்களையும் அழைப்பித்து,

ஆனால் எஸ்றாவோ, அவர்களை விட்டுச்செல்லப்போவதில்லை. அவர்களும், லேவியரும், உடன்வரவேண்டும் என்று மிகவும் விரும்பினான். ஆனால் அதை எவ்வாறு செய்வது? இப்போதுதான் எஸ்றா தனது ஞானத்தை விளங்கச் செய்கிறான். சிறந்த பதினோரு பேரைத்தெரிந்துக்கொண்டு, அவர்கலை லேவியரிடம் பேச அனுப்புகிறான். இது திறமையின் அடிப்படையில் மட்டுமே செயல்படமுடியும். ஆகையால் எஸ்றா புத்திமான்களை அழைப்பித்தான். வேதத்தில் புத்திமான்களின் விவேகம்பற்றி பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. சாலொமோனின் நீதிமொழிகளின் புத்தகத்திலே, புத்திமான் இவைகளைக்கேட்டு, அறிவில் தேறுவான். விவேகி நல்லாலோசனைகளையடைவான் (நீதி. 1:5) எனக் கூறப்பட்டுள்ளது. மற்றும் நாபாலின் மனைவியாகிய அபிகாயில் ஒரு புத்திசாலி என்று விளக்கப்படுவதை வேதத்தில் நாம் வாசிக்கிறோம் (1.சாமு.2:5). இன்னும் தானியேலும் அவனுடைய மூன்று உடன் நண்பர்களும், ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்திலும், மற்றயாவரையும்விட பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான், என்று வாசிக்கிறோம் (தானி. 2:20). மேலும் புதிய ஏற்பாட்டுக்காலத்தில்கூட, லூக்கா 4:27 இல் இயேசுவைப்பற்றி, அவர் பேசக்கேட்டயாவரும் அவருடைய புத்தியையும்.... குறித்து பிரமித்தார்கள் என வாசிக்கிறோம். ஞானம் என்பது மிகவும் அவசியமே. ஆனால் அது புத்தியுடனும் சேர்ந்து அமைந்திருக்க வேண்டும். கர்த்தராகிய இயேசு அவ்விரண்டையும் பெற்றிருந்தார்.
வசனம் 8:17-20

கசிப்பியா என்னும் ஸ்தலத்திலிருக்கிற தலைவனாகிய இத்தோவிடத்திற்குச் செய்தி கொண்டுபோக அவர்களுக்குக் கற்பித்து, நமது தேவனுடைய ஆலயத்துப் பணிவிடைக்காரரை எங்களிடத்திற்கு அழைத்துவரும்படி, அவர்கள் கசிப்பியா என்னும் ஸ்தலத்திலிருக்கிற தங்கள் சகோதரனாகிய இத்தோவுக்கும், நிதனீமியருக்கும் சொல்லவேண்டிய வார்த்தைகளைச் சொல்லிக்கொடுத்தேன். அவர்கள் எங்கள்மேலிருந்த எங்கள் தேவனுடைய தயையுள்ள கரத்தின்படியே, இஸ்ரவேலுக்குப் பிறந்த லேவியின் குமாரனாகிய மகேலியின் புத்திரரில் புத்தியுள்ள மனுஷனாகிய செரெபியாவும் அவன் குமாரரும் சகோதரருமான பதினெட்டுப்பேரையும், மெராரியின் புத்திரரில் அஷபியாவும் அவனோடேகூட எஷாயாவும் அவன் சகோதரரும் அவர்கள் குமாரருமான இருபதுபேரையும், தாவீதும் பிரபுக்களும் லேவியருக்குப் பணிவிடைக்காரராக வைத்த நிதனீமியரில் இருநூற்று இருபதுபேரையும், எங்களிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தார்கள். அவர்கள் எல்லாருடைய பேர்களும் குறிக்கப்பட்டன.

எஸ்றா அனுப்பிய, ஞானமுள்ள பதினோருபேரும் லேவியரைக் குறித்துப் பேசும்படிக்கு, கசிப்பியா என்னும் ஸ்தலத்திலிருக்கிற தலைவனாகிய இத்தோவினிடத்திற்குச் சென்றார்கள். தேவனுடைய ஆலயத்துப்பணிவிடைக்காரரை அனுப்பும்படி கேட்டனர். இத்தோ அதைச் செய்தான். அந்தப் பணிக்காக 258 பேரைக் சேகரித்து அவன் அனுப்பினான். எஸ்றா அனுப்பிய 11 புத்திமான்களின் பணி நிறைவேறியது. ஆனால் எஸ்றா யாருக்கு நன்றிசொல்ல வேண்டும் என்று நன்கு அறிந்திருந்தான். இவையனைத்தும் நடந்தது எங்கள் மேலிருந்த எங்கள் தேவனுடைய தயையுள்ள கரத்தின்படியே, என அவன் நன்கு அறிவான் (எஸ்றா 8:18).
வசனம் 8:21

அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன்.

எஸ்றா, இப்போது எருசலேமுக்குச் செல்ல, தேவனுடைய பணியைச் செய்ய வேண்டிய அனைவரையும் சேர்த்துக் கொண்டான். இப்போது அவன் அவர்களை உபவாசத்திலும் ஜெபத்திலும் ஒன்றுபடுத்தும் முயற்சியை மேற்கொண்டான். இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பின்பற்றிய ஒரு முன்மாதிரியான வழி. உலகத்திலே தமது திருப்பணியை ஆரம்பிக்கும்முன் அவர் 40 நாள்கள் இரவும் பகலும் உபவாசித்தார் என நாம் வாசிக்கிறோம் (மத்.4:2). அது மட்டுமன்றி அவர் தமது சீஷர்களைத் தேர்ந்தெடுக்குமுன் இராமுழுவதும் ஜெபித்தார் என வேதம் கூறுகிறது (லூக்கா 6:12).
அதுபோலவே எஸ்றாவும், அவனைச் சேர்ந்த இஸ்ரவேலர் அனைவரும் உபவாசித்துத் தங்களைத் தாழ்த்தினார்கள். எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும், எங்கள் சகல பொருள்களுக்காகவும், செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும் நான் அங்கே உபவாசத்தைக் கூறினேன் என்று எஸ்றா கூறுகிறான்.
வசனம் 8:22-23

வழியிலே சத்துருவை விலக்கி, எங்களுக்குத் துணைசெய்யும்படிக்கு, நான் ராஜாவினிடத்தில் சேவகரையும் குதிரைவீரரையும் கேட்க வெட்கப்பட்டிருந்தேன். எங்கள் தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரை விட்டு விலகுகிறவர்கள் எல்லார்மேலும் இருக்கிறதென்றும், நாங்கள் ராஜாவுக்குச் சொல்லியிருந்தோம். அப்படியே நாங்கள் உபவாசம்பண்ணி, எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம். எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.

அந்த நெடுந்தொலைப் பயணத்திலே, தேவனுடைய உதவியை நாடவேண்டடியது ஏன் என்பதை எஸ்றா தெளிவாக இங்கு கூறுகிறான். அவனைக் காப்பாற்ற சேனைகள் வீரர்கள் யாவரும் அவனுடன் இல்லை. நெகேமியாவின் நாட்களிலே இத்தகைய பயணத்திலே நெகேமியாவோடு இராஜா இராணுவ சேர்வைக்காரரையும், குதிரை வீரரையும், அனுப்பினான் என்று வேதம் கூறுகிறது (நெகே.2:9). ஆனால் எஸ்றாவை அனுப்பிய இராஜா, அதைப்பற்றி ஏனோ எண்ணங்கொள்ளவில்லை. அதைப்பற்றி இராஜாவிடம் கேட்கவில்லை. இதைப்பற்றி எஸ்றா, இராஜாவிடத்தில் வீரரைக் கேட்க நான் வெட்கப்பட்டிருந்தேன். எங்கள் தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார் மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய கோபம் அவரை விலகுகிறவர்கள் எல்லார் மேலும் இருக்கிறதென்றும், நாங்கள் இராஜாவுக்குச் சொல்லியிருந்தோம். இந்த நிலையில் நான் எவ்வாறு இராஜாவினிடத்தில் வீரரைக் கேட்க முடியும்? அப்படி கேட்டால் நான் தேவனிடத்தில் நம்பிக்கையற்றவன் ஆவேன். ஆகையால் நான் அதைச் செய்யக்கூடாது, என்று கூறினான்.
ஆகவே அவர்கள் உபவாசித்து ஜெபித்தார்கள் மேலும் எஸ்றா கூறுவது, தேவன் எங்கள் ஜெபத்தைக் கேட்டார். கர்த்தர் இராஜாக்களின் மூலம் உதவிசெய்வார், அல்லது வேறு விதமாய் உதவி செய்வார்: அது அவருடைய திட்டம் என்று எஸ்றா நம்பினான்.

வசனம் 8:24-27

பின்பு நான் ஆசாரியரின் தலைவரிலே பன்னிரண்டுபேராகிய செரெபியாவையும், அஷ்பியாவையும், அவர்கள் சகோதரரிலே பத்துப்பேரையும் பிரித்தெடுத்து, ராஜாவும், அவருடைய ஆலோசனைக்காரரும், அவருடைய பிரபுக்களும், அங்கேயிருந்து சகல இஸ்ரவேலரும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று எடுத்துக்கொடுத்த காணிக்கையாகிய வெள்ளியையும், பொன்னையும், பணிமுட்டுகளையும் அவர்களிடத்தில் நிறுத்துக் கொடுத்தேன். அவர்கள் கையிலே நான் அறுநூற்று ஐம்பது தாலந்து வெள்ளியையும், நூறுதாலந்து நிறையான வெள்ளிப் பணிமுட்டுகளையும், நூறுதாலந்து பொன்னையும், ஆயிரம் தங்கக்காசு பெறுமான இருபது பொற்கிண்ணங்களையும், பொன்னைப்போல எண்ணப்பட்ட பளபளப்பான இரண்டு நல்ல வெண்கலப் பாத்திரங்களையும் நிறுத்துக்கொடுத்து,

எஸ்றா தனது பணியை துவக்கினான். ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் வேலைகள் பிரித்துக் தரப்பட்டன. அவரவர் பணியை அவரவர் புரிந்து செயல்பட்டனர். இராஜாவும் மற்றோரும் கொடுத்த வெள்ளியையும், பொன்னையும், பணிமூட்;டுக்களையும், எஸ்றா, அவர்களிடத்தில் நிறுத்துக் கொடுத்தான். 650 தாலந்து வெள்ளியும், 100 தாலந்து பொன்னும், 20 பொன் கிண்ணங்களையும், 2 பளபளப்பான வெண்கலப் பாத்திரங்களையும், அவன் நிறுத்து அவர்களிடம் கொடுத்தான். தாலந்துகள் என்ற வார்த்தை இப்போது நாம் பயன்படுத்துவதில்லை. ஒரு தாலந்து எனப்படுவது சுமாராக 35 கிலோ நிறைக்குச் சமமாகக்கொள்ளலாம். இந்தச் சுமை, அந்த ஆசாரியரின், லேவியரின் சொந்த சுமைகளுடன் சேர்ந்து மிகவும் பெரிய பளுவாக இருந்ததெனனலாம். தேவனுடைய வேலையைச் செய்கிறவர்களுக்கு எப்போதுமே பல சுமைகள் இருப்பதுண்டு. ஆசாரியர்களுக்கு பொறுப்பான வேலைகள் உடனடியாகவே கொடுக்கப்பட்டுவிட்டது.
வசனம் 8:28

அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருக்குப் பரிசுத்தமானவர்கள். இந்தப் பணிமுட்டுகளும், உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தருக்கு மனஉற்சாகமாய்ச் செலுத்தப்பட்ட இந்த வெள்ளியும், இந்தப் பொன்னும் பரிசுத்தமானவைகள்.

எஸ்றா ஆசாரியர்களைத் தனிமைப்படுத்தி, மற்ற கூட்டத்தாரான எல்லா இஸ்ரவேலர்களிலும், நீங்கள் தூய்மையானவர்கள் என்பதை அவர்களுக்;கு உணர்த்திக் காட்டினான். லேவியராகம புத்தகத்தில் மோசே, (லேவி 21:6-8) அவர்கள் தேவனுக்குப்பரிசுத்தமானவர்கள் என்று தேவனால் உணர்த்தப்பட்டதை விளக்கியுள்ளார். அது மட்டுமன்றி, இஸ்ரவேலர் அனைவருக்கும் இதே வார்த்தைகள் உரைக்கப்பட்டு அவர்கள் பரிசுத்தமானவர்கள் என்பது உணர்த்தப்பட்டுள்ளது (லேவி. 11:44). அதுவுமல்லாமல், எல்லா விசுவாசிகளும், தங்கள் நடக்கைகளினால் பரிசுத்தமாக இருக்கத் தக்கவர்கள் எனபதனை பேதுரு 1:15 நமக்கு நன்கு உணர்த்துகிறது. நாம் ஒவ்வொருவரும், நமது தேவனாகிய கர்த்தர் இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக, அவரைப் போல் பரிசுத்தமாக நம்முடைய நடக்கைகளெல்லாவற்றிலேயும், இருக்க வேண்டுமன்றோ? பரிசுத்தமாக வாழ்வதென்றால், உலக சமுதாயம் முழுவதையும் விட்டு தனியாகச் சென்று வாழ்வது என்பதல்ல. கர்த்தராகிய இயேசு பாவிகளான யாவரோடும் கலந்தே ஜீவித்தார். ஆனால் அவர்களின் யாதாகிலும் ஒரு பாவ வழியில் அவர் தம்மை உட்படுத்திக் கொள்ளவில்லை.
வசனம் 8:29

நீங்கள் அதை எருசலேமிலிருக்கிற தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் அசாரியர் லேவியருடைய பிரபுக்களுக்கும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவர்களுக்கும் முன்பாக நிறுத்து ஒப்புவிக்குமட்டும் விழிப்பாயிருந்து, அதைக் காத்துக்கொள்ளுங்கள் என்றேன்.

எஸ்றா, அந்த ஆசாரியர்களின் விசேஷமான பணிபங்குகளை, அவர்களுக்கு விவரித்துச் சொன்னான். அவர்கள் பணிமுட்டுகளைப் பொறுப்புடன் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது. நாமும்கூட சில பொறுப்புக்களைக் கவனித்துக் காத்துக்கொள்ள வேண்டி, சில சமயங்களில் நேரிடுகிறது. காத்திருந்து, விழித்திருந்து, ஜெபம் செய்ய வேண்டியும், சில சமயங்களில், உள்ளது (மத். 26:41). நம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்டவவைகளை நாம் காத்துக்கொள்ளவேண்டியுள்ளது (1.தீமோ. 6:20). அப்படியாக அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டவையனைத்தையும், மறுபடியும், எருசலேமில், தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியர், லேவியர் ஆகியோரின் தலைவர்களிடம் நிறுத்துத் திருப்பித் தரவேண்டிய அவர்களின் பொறுப்புக்கடன் ஆகும். எவ்வளவு நிறை உள்ள பொருள்கள் ஒவ்வொருவரிடமும் ஒப்படைக்கப்பட்டதோ, அவை சரி நிறையாகத் திரும்ப, நிறுத்து, ஒப்படைக்கப்படுதல் வேண்டும். இதுவே நமது வாழ்க்கையில் நியதியமாகும். தேவனால் நமக்கு அருளப்பட்டவைகள் அனைத்தும், தாலந்துகளோ, பணமோ, நேரமோ, பதவியோ, கல்வியோ, எதுவாயினும் நாம் திரும்பவும் தேவனிடம் ஒப்படைக்கவேண்டியுள்ளது.
வசனம் 8:30

அப்படியே அந்த ஆசாரியரும் லேவியரும், அந்த வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் எருசலேமிலிருக்கிற எங்கள் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகும்படிக்கு, நிறுத்து வாங்கிக்கொண்டார்கள்.

எஸ்றாவினால் ஒப்படைக்கப்பட்ட செல்வங்களனைத்தையும், அந்த ஆசாரியர்களும், லேவியரும் பெற்றுக்கொண்டனர். அதுவுமின்றி அவற்றை எருசலேமுக்குக் கொண்டு செல்லும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டனர்.
வசனம் 8:31-32

நாங்கள் எருசலேமுக்குப்போக, முதலாம் மாதம் பன்னிரண்டாந்தேதியிலே, அகாவா நதியைவிட்டுப் பயணம் புறப்பட்டோம். எங்கள் தேவனுடைய கரம் எங்கள்மேலிருந்து, வழியிலே சத்துருவின் கைக்கும், பதிவிருக்கிறவர்களின் கைக்கும் எங்களைத் தப்புவித்தது. நாங்கள் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாள் இருந்தபின்பு,

இத்தகைய எல்லா ஒழுங்குகளும் செய்து முடித்தப்பின்பு, எஸ்றா, முதலாம் மாதம் 12ம் தேதியிலே, அகாவா நதியை விட்டு எருசலேம் நோக்கிப்புறப்பட்டான். அவனுடன் அனைவரும் புறப்பட்டனர்.
இந்தப் பயணத்தின் கடுமைகளைப்பற்றி எஸ்றா ஒன்றும் கூறவில்லை. எந்தவித தொல்லைகள், அல்லது கஷ்டங்கள் பற்றி அவன் எதுவும் எழுதவில்லை. ஆனால் தேவனுடைய கரம் எங்கள் மேலிருந்தது, வழியிலே சத்துருவின் கைக்கும் பதிவிருக்கிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவித்தது, என்று அவன் கூறுகிறான். எஸ்றா, கர்த்தர் உடனிருப்பதால், எருசலேம் சேர்ந்தவுடன், அனைத்துத் தொந்தரவுகளும் மறைந்து போகும், என்பதை நன்கு உணர்ந்திருந்தான். கர்த்தரின் பிள்ளைகள் அனைவருக்கும் இத்தகைய ஆசீர்வாதமே உண்டாகும். உலகில் நாம், நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடரும்போது, கர்த்தருடைய கரம் நம்மைத் தாங்கி நடத்த வல்லமை படைத்ததாக உள்ளது. ஒரு சில தொல்லைகள் நேரிட்டாலும் முடிவில் தேவனுடைய சந்நிதானத்தில் சேரும்போது, அவை அனைத்தும் மறைந்து போகும்.
அவர்கள் அனைவரும் எருசலேம் சேர்ந்தனர். அங்கு மூன்று நாட்கள் ஓய்வெடுத்தபின் தங்கள் பணிகளைத் துவங்கினர்.
வசனம் 8:33-34

நாலாம் நாளிலே அந்த வெள்ளியும் பொன்னும், பணிமுட்டுகளும், எங்கள் தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியனாகிய உரியாவின் குமாரன் மெரேமோத்தின் கையிலும், பினெகாசின் குமாரன் எலெயாசாரின் கையிலும், எல்லாவற்றிற்கும் இருந்த நிறையின்படியேயும் நிறுத்து, ஒப்புவிக்கப்பட்டது. யெசுவாவின் குமாரன் யோசபாத்தும், பின்னூயின் நொவதியாவும் என்கிற லேவியரும் அவர்களோடேகூட இருந்தார்கள். அந்த நிறையெல்லாம் அக்காலத்தில் எழுதப்பட்டது.

ஒவ்வொருவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொன், வெள்ளியையும், பணிமூட்டுகளையும், நிறுத்து, நிறை குறித்து தேவனுடைய ஆலயத்தில் திரும்ப ஒப்படைத்தனர். குறைபட்டுப் போனதாக எதுவும் காணப்படவில்லை. ஆசாரியர்களிடம் வைத்துக் கொள்ளவும், பாதுகாக்கவும் பல விலைமிக்கப் பொருள்கள் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் பொறுப்புடன் அவைகளைக் கொண்டு வந்து சேர்த்தனர்.
வசனம் 8:35

சிறைப்பட்டு மீண்டவர்கள் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளாக இஸ்ரவேல் அனைத்தினிமித்தம் பன்னிரண்டு காளைகளையும், தொண்ணூற்றாறு ஆட்டுக்கடாக்களையும், எழுபத்தேழு ஆட்டுக்குட்டிகளையும், பாவநிவாரணத்துக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும்பலியிட்டு, அவையெல்லாம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனலியாகச் செலுத்தினார்கள்.

அடுத்து, தேவனுக்குப் பலிகள் செலுத்தப்பட்டன. இஸ்ரவேலர் நிமித்தம் 12 காளைகள் பலி செலுத்தப்பட்டன. எல்லாருக்காகவும் அந்தக் காணிக்கை செலுத்தப்பட்டது. முதல் பணியாக கர்த்தருக்கு ஸ்தோத்திரமும் காணிக்கையும் செலுத்தப்பட்டது. இது தான் நாம் செய்ய வேண்டியதும் கூட. ஆனால் இதனை மறந்து, தவறி விடுகிறோம்.
வசனம் 8:36

பின்பு ராஜாவின் சன்னதுகளை நதிக்கு இப்புறத்திலிருக்கிற ராஜாவின் தேசாதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஒப்புவித்தார்கள். அப்பொழுது அவர்கள் ஜனங்களுக்கும் தேவனுடைய ஆலயத்துக்கும் உதவியாயிருந்தார்கள்.

பிறகு அவர்கள் இராஜாவின் உத்தரவுகளை சன்னதுகளை இராஜாவின் தேசாதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் ஒப்புவித்தார்கள். அதனால் எஸ்றா தேவனுடைய பணியைச்செய்ய இராஜாவின் அனுமதியைப் பெற்றுள்ளான் என்று விளங்கச் செய்தனர். முடிவாக, ஒரு மகிழ்ச்சியான குறிப்பினை நாம் காண்கிறோம். எஸ்றாவும், அவனுடன் வந்தவர்களும், அங்கு முன்பு சென்று இருந்தவர்களுக்கும் தேவனுடைய ஆலயத்திற்கு உதவியாயிருந்தார்கள். தேவனுடைய காரியங்கள் குறித்துத் தடுமாறிக் கொண்டிருக்கும் ஓர் ஊழியக்காரனுக்கு, எங்கேனும் நீ உதவியாகச் சென்று உதவ முடியுமா?
By Tamil christian Assembly

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.