எஸ்றா 6 விளக்கவுரை

எஸ்றா 6

(7) தரியு இராஜாவின் கடிதம்.
வசனம் 6:1-3

அப்பொழுது ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜானாவிலுள்ள தஸ்திர அறையைச் சோதித்தார்கள். மேதிய சீமையிலிருக்கிற அக்மேதா பட்டணத்தின் அரமனையிலே ஒரு சுருள் அகப்பட்டது. அதிலே எழுதியிருந்த விதமாவது: ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்தில், கோரேஸ் ராஜா எருசலேமிலிருந்த தேவாலயத்தைக் குறித்துப் பிறப்பித்த உத்தரவு எனன்வென்றால்: தேவாலயமானது பலிசெலுத்தப்பட்டுவந்த ஸ்தானத்திலே கட்டப்படக்கடவது. அதின் அஸ்திபாரங்கள் பலமாயிருப்பதாக. அது அறுபது முழ உயரமும், அறுபது முழ
அகலமுமாயிருக்கவேண்டும்.

அர்த்தசஷ்டா இராஜாவைப் போலவே தரியு இராஜாவும் உடனே செயல்ப்படத்துவங்கினான். அவனது இராஜ்யத்திலே ஏற்கெனவே சில குழப்பங்கள் ஏற்பட்டிருந்த சூழ்நிலையில், மேலும் குழப்பங்பளை வளரவிடாமல், பாபிலோன் அரண்மணை கஜானாவில் உள்ள தஸ்திர அறைறை சோதிக்க உத்தரவிட்டான். பாபிலோனிலே எந்தவிதமான ஆவணங்களும் கிடைக்கவில்லை. ஆனால் மேதிய சீமையிருந்த அக்மேதா பட்டணத்தின் அரண்மணையிலே ஒரு சுருள் அகப்பட்டது. தேடும்பணிக்கு சில காலம் பிடித்தது. அந்தக்காலத்தில் யூதர்கள் தங்களின் ஆலயப்பணியில் நன்கு முன்னேறிச்சென்றனர்.

வசனம் 6:4-5:

அது மூன்று வரிசை பெருங்கற்களாலும், ஒரு மச்சுவரிசை புது உத்திரங்களாலும் கட்டப்படக்கடவது. அதற்குச் செல்லும் செலவு ராஜாவின் அரமனையிலிருந்து கொடுக்கப்படுவதாக. அன்றியும் நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்த ஆலயத்திலிருந்து எடுத்து, பாபிலோனுக்குக் கொண்டுவந்த தேவனுடைய ஆலயத்துக்கடுத்த பொன் வெள்ளிப் பணிமுட்டுகள் எருசலேமிலுள்ள தேவாலயமாகிய தங்கள் ஸ்தானத்திற்குப் போய்ச் சேரும்படிக்குத் திரும்பக் கொடுக்கப்படக்கடவது. அவைகளைத் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகக்கடவர்கள் என்று எழுதியிருந்தது.

அந்தச் சுருள், கோரேஸ் இராஜாவின் முதலாம் வருடத்திலே எழுதப்பட்டது (எஸ்றா 1:1). அது கோரேஸ் அக்மேதா நகரத்திலே தங்கியிருந்தபோது எழுதப்பட்டதாகும். அது தேவாலயத்தின் பணியைக்குறித்து விளங்கச்செய்தது. அது எருசலேமில் இருந்த தேவாலயம் என விளக்கிக் கூறியது. அது பலிசெலுத்தப்பட்டு வந்த ஸ்தானத்திலே கட்டப்படக்கடவது என உத்திரவிட்டது. அதில் அஸ்திபாரங்கள் பலமாயிருப்பதாக என்றது. அது அறுபதுமுழ உயரமும் அறுபதுமுழ அகலமுமாய் இருக்கவேண்டும். மேலும் அது, மூன்று வாரிசை பெருங்கற்களாலும், ஒரு மச்சுவரிசை புது உத்திரங்களாலும், கட்டப்படவேண்டும் எனவும் விளக்கிக் கூறியது. அந்தச் சுருளில் எழுதப்பட்டடிருந்த ஆணைகள், தத்னாய்க்கு சற்று அதிர்ச்சியாக இருந்திருக்கக் கூடும். அவனும் அவனது சக அதிபதிகளும் அதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மேலும் அதில், அதற்கு ஆகும் செலவு இராஜாவின் அரண்மனையிலிருந்து கொடுக்கப்படுவதாக என்றும் நேபுகாத்நேச்சார் இராஜா எருசலேமிலிருந்த ஆலயத்தில் இருந்து எடுத்து, பாபிலோனுக்குக்கொண்டுவந்த தேவனுடைய ஆலயத்துக்கடுத்த பொன், வெள்ளி பணிமுட்டுகள் யாவும் திரும்பக்கொடுக்கப்பட்டு ஆலயத்திற்குக்கொண்டு போகப்படவேண்டும் எனத்தெளிவாக எழுதப்பட்டு இருந்தது.

வசனம் 6:6-7:

அப்பொழுது தரியுராஜா எழுதியனுப்பினதாவது: இப்பொழுதும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும் சேத்தார்பொஸ்னாயுமாகிய நீங்களும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான உங்கள் வகையரா யாவரும் அவ்விடத்தைவிட்டு விலகியிருங்கள். தேவனுடைய ஆலயத்தின் வேலையை அவர்கள் செய்யட்டும். யூதருடைய அதிபதியும், யூதரின் மூப்பரும், தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே கட்டக்கடவர்கள்.

தரியு இராஜாவிற்கு, இந்தச் சுருளினால் இருந்த விளக்கங்கள் போதுமானதாக இருந்தது. இந்த விளக்கங்களைத் தரியு இராஜா தனது அதிபதியான தத்னாய்க்கு விளக்கிடாகக்குறிப்பிட்டு பதிலிறுத்தான். அது மட்டுமன்றி, தன் சொந்த கருத்தாக தத்னாய்கு, நீயும் உங்கள் வகையரா யாவரும் அவ்விடத்தைவிட்டு விலகியிருங்கள் என்று கட்டளையிட்டு எழுதினான். மேலும் அவன் தேவனுடைய ஆலயத்தின் வேலையை அவர்கள் செய்யட்டும்: யூதர்கள் ஆலயத்தை அதன் ஸ்தானத்திலே கட்டக்கடவர்கள் என்று எழுதியனுப்பினான். அது மிகத்தெளிவாக இருந்தது.

அது கர்த்தருடைய பலமான கிரியை. ஓர் இராஜாவின் ஆவியைக் கர்த்தர் ஏவினதால் இதெல்லாம் நடந்தது.

எரேமியா தீர்க்கதரிசியின் காலத்திலும் இவ்வாறே நடந்தது. இஸ்ரவேலர் விரும்பாத, ஆனால் கத்தியமான தேவனுடைய வார்த்தைகளை, எரேமியா தீர்க்தரிசனமாகச் சொன்னான். கல்தேயரோவென்றால், திரும்பி வந்த இந்த நகரத்திற்கு விரோதமாய் யுத்தம் பண்ணி, அதைப் பிடித்து அக்கினியால் சுட்டெரிப்பார்கள், என்று உரைத்துச் சொன்னான் (எரேமி. 37:8). ஆனால் அதை அவர்கள் விரும்பவில்லை. தனது சொந்த இராஜாவினால், இஸ்ரவேலின் இராஜாவினால் அவன் சிறையில் அடைக்கப்பட்டான் (எரேமி.37:21). சீக்கிரமே அது நிறைவேறியது. கல்தேயரின் இராஜாவாகிய நேபுகாத்நேச்சார், எருசலேமின் மீது படையெடுத்து, அதைக் கைப்பற்றி, இராஜாவின் அரண்மனையையும், ஜனத்தின் வீடுகளையும் அக்கினியால் சுட்டெரித்து, நேபுகாத்நேச்சாரின் சேனைகள் நகரத்தில் நுழைந்தபோது எரேமியா அரண்மனைக் காவலில் இருந்தான். நகரம் முழுதும் அழிக்கப்பட்டது. ஆனால் எரேமியா தனது காவற் சேனாதிபதிக்கு, அவனுக்கு ஒரு பொல்லாப்பும் செய்யாமல் அவனைப் பத்திரமாய்ப் பார்த்து, அவன் உன்னோடே சொல்லுகிறபடியெல்லாம் அவன் நடத்தென்று கட்டளை கொடுத்தான் (எரேமி. 39:12-14). என்ன வியத்தகு கட்டளை! எந்தவொரு இராஜாவைப்பற்றி தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டதோ அதே இராஜாதானே அந்தக் கட்டளைளைக் கொடுத்தான். எரேமியாவின் சொந்த மக்கள், அவனுடைய முன்னறிவிப்புக்களை விரும்பாமல், அவனைச் சிறையில் அடைத்தனர். ஆனால்,வேறு ஒரு புறஜாதியானான இராஜா, கர்த்தரால் கிரியை செய்யப்பட்டு, அவனை வி;டுவித்து, அவனுக்கு உணவளித்து, அவனைத் தனது சொந்த மக்களிடத்திற்கு அனுப்புகிறான் (எரேமி.40:5). அந்த வல்லமையான கர்த்தரின் கிரியைக்கு நாம் தலைவணங்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.

வசனம் 6:8

தேவனுடைய ஆலயத்தை யூதரின் மூப்பர் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்குச் செய்யத்தக்கதாய், நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதருக்கு தடை உண்டாகாதபடிக்கு, நதிக்கு அப்புறத்தில் வாங்கப்படும் பகுதியாகிய ராஜாவின் திரவியத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் செல்லும் செலவு கொடுக்கவேண்டும்.

7ம் வசனத்திலே, தேவனுடைய ஆலயம் என்ற வார்த்தைகள் நாம் இரண்டு முறை வாசிக்கிறோம். தேவனுடைய ஆலயத்தின் வேலைகளை அவர்கள் செய்யட்டும். இரண்டாவது தேவனுடைய ஆலயத்தை அதன் ஸ்தானத்திலே கட்டக்கடவர்கள். இது தேவனுடைய சித்தம். மேலும் தரியு இராஜாவின் உத்தரவிலே, தத்னாயும் மற்ற அரசு அதிகாரிகளும், தேவனுடைய ஆலயம் கட்டப்படுவதை தடுக்க முயன்றவர்கள். அதே ஆலயத்தின் கட்டுமான பணிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது தெளிவாக்கப்பட்டிருந்தது. மேலும், வசூலிக்கப்படும் பகுதியாகிய இராஜாவின் திரவியத்திலே, அவர்களுக்குத் தாமதமில்லாமல் செல்லும் செலவுகள் கொடுக்கவேண்டும், என்று கூறியது அந்த உத்தரவு. ஏன் தரியு இராஜாவிற்கு எழுதினோமோ, என அவர்கள் எண்ணியிருப்பர்.

வசனம் 6:9

பரலோகத்தின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளையிடத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சரசம், எண்ணெய் முதலானவை தினந்தினம் அவர்கள் சொற்படி தாழ்ச்சியில்லாமல் கொடுக்கப்படக்கடவது.

தரியு இராஜா எழுதிய குறிப்புகளிலே பணம் தரப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, அந்த ஆலயப் பணியைச் செய்து கொண்டிருந்த யூதர்களுக்கத் தேவையான அனைத்துப் பொருள்களும் கொடுக்கப்படவேண்டும் எனவும் தரியு இராஜா எழுதினான். பலிசெலுத்தப்படுவதற்கான காளைகள், ஆட்டுக்குட்டிகள், முதலியனவும், மற்றும் ஆசாசரியர்கள் கேட்கிறபடி கோதுமை, உப்பு, திராட்சரசம், எண்ணெய் முதலியன தினம்தினம் அவர்களின் சொற்படி தாழ்ச்சியில்லாமல் கொடுக்கப்படவேண்டியிருந்தது.

வசனம் 6:10

எருசலேமிலிருக்கிற ஆசாரியர்கள் பரலோகத்தின் தேவனுக்குச் சுகந்த வாசனையான பலிகளைச் செலுத்தி, ராஜாவுக்கும் அவர் குமாரருக்கும் தீர்க்காயுசுண்டாக மன்றாடும்படிக்கு இப்படிச் செய்யப்படுவதாக.

யூதர்கள் தங்களின் பலிகளுக்கு எவ்வெப்பொருள்களை விரும்பினர், அல்லது தேவைப்பட்டன என்பது தரியு இராஜாவுக்கு நன்கு தெரிந்திருந்தது. அவர்கள் ஏன் பலி செலுத்தினர் என்பதற்கான காரணத்தையும் தரியு அறிந்து குறிப்பிட்டிருந்தார். அதாவது, பரலோகத்தின் தேவனுக்குச் சுகந்த வாசனையான பலிகளைச் செலுத்தி ராஜாவுக்கும் அவன் குமாரருக்கும் தீர்காயுசுண்டாக மன்றாடும்படிக்கு இப்படி செய்யப்படுவதாக என்று அவன் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தான். அவன் ஒரு யூதனல்லாத இராஜா. அவன் யூதர்கள் தங்கள் பலிகளுக்குத் தேவையானதனைத்தையும் கொடுக்கம்படி கட்டளையிட்டு எழுதுகிறான். ஏன் பலியிடவேண்டும்? இராஜாவுக்கும் அவன் குமாரருக்கும் தீர்காயுசுண்டாக தேவனிடத்தில் பிராத்தனை செய்து மன்றாட. இது மிகவும் வியத்தகு கடிதம். தேவனிடத்தில் அதே நேரத்தில் விக்கிரகங்களிலும் அவன் நம்பிக்கை வைத்திருந்தானா அல்லது? அவன் பாதுகாப்பு முயற்சிகள் செய்துகொண்டிருந்தானா?

விக்கிரக ஆராதனைக்காரர்களும்கூட தேவனைத் தொழமுன்வருவதை நாம் இங்கு வாசிக்கிறோம். யோனா, தன்னைக் கடலில் தூக்கி எறிந்துவிட மாலுமிகளிடத்தில் கேட்டுக்கொண்டபோது அவர்கள் முதலில் அவ்வாறு செய்யத்துணியவில்லை. பின்னும் சமுத்திரம் அதிகமாய்க் கொந்தளித்துக் கொண்டிருந்தபடியால் அவ்வாறு செய்யத் துணிந்தனர். ஆனால் முதலில் அவர்கள் யோனாவின் தேவனாகிய கர்த்தரிடத்தில் பிராத்தனை செய்து, அவரை நோக்கிக்கூப்பிட்டு, கர்த்தாவே, இந்து மனுஷனுடைய ஜீவனிமித்தம் எங்களை அழித்துப்போடாதேயும்.....என வேண்டுதல் செய்தனர். யோனாவை எடுத்து சமுத்திரத்தில் போட்டபின்பு சமுத்திரம் தன் மும்முரத்தை விட்டு அமர்ந்தது, அப்பொழுது அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து கர்த்தருக்குப்பலியிட்டுப் பொருந்தனைகளைப்பண்ணினார்கள். (யோனா 1:14-16).

வசனம் 6:11-12

பின்னும் நம்மால் பிறப்பிக்கும் கட்டளை என்னவென்றால்: எந்த மனிதனாவது இந்தக் கட்டளையை மாற்றினால், அவன் வீட்டிலிருந்து ஒரு உத்திரம் பிடுங்கி நாட்டப்பட்டு, அவன் அதில் தூக்கிப்போடவும், அதினிமித்தமாக அவனுடைய வீடு குப்பைமேடாக்கப்படவுங்கடவது. ஆகையால் இதை மாற்றவும், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கெடுக்கவும், தங்கள் கையை நீட்டப்போகிற சகல ராஜாக்களையும் சகல ஜனங்களையும் தம்முடைய நாமத்தை அங்கே விளங்கப்பண்ணின தேவன் நிர்மூலமாக்கக்கடவர். தரியுவாகிய நாம் இந்தக் கட்டளையைக் கொடுத்தோம். இதின்படி ஜாக்கிரதையாய்ச் செய்யப்படக்கடவது என்று எழுதியனுப்பினான்.

மேதியர், பாரசீகர்களின் இராஜாக்கள் ஆட்சி செய்த நாள்களிலே தங்களின் கட்டளைகள் முழுக்க முழுக்க நிறைவேற்றப்படுகின்றனவா என்பதனை நன்கு ஆராய்ந்துக்கவனித்தனர். அப்படி யாராவது கட்டளைகளைப் புறக்கணித்தால், அவனுடைய வீடு குப்பை மேடாக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்து பிடுங்கி நாட்டப்பட்ட ஓர் உத்திரத்திலே அவன் தூக்கில் போடப்படுவான். அது போல தரியு இராஜாவும் எருசலேமில் உள்ள தேவனுடைய ஆலயத்தைக் கெடுக்கவும், தங்கள் கையை நீட்டப் போகிற சகல இராஜாக்களையும், சகல ஜனங்களையும் தம்முடைய நாமத்தை அங்கே விளங்கப்பண்ணின தேவன் நிர்மூலமாக்கக்கடவர் என்று எழுதுகிறான். நேபுகாத்நேச்சார் இராஜாவும் இம்மாதிரியான கொள்கைகளைத்தான் பின்பற்றியுள்ளான். நேபுகாத்நேச்சாரின் அக்கினிச் சூளையினின்று தேவன் சாத்ராக், மேஷாக், ஆபெத்நேகோ என்பவர்களைக் காப்பாற்றினதின் பிறகு அவன் தேவனாகிய கர்த்தரிடத்தில் பக்தி மிகுந்தவனாகமாறி, நாட்டின் மக்கள் அனைவரும் அவ்வாறே மாறவேண்டும் என நினைத்தான். உடன் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு விரோதமாக தூஷணவார்த்தையைச் சொல்லுகிற எந்த மனுஷனும் துண்டித்துப்போடப்படுவான் என்று அவனுடைய வீடு எருக்களமாகப்படும் என்றும் கட்டளைப்பிறப்பித்தான் என்று வேதத்தில் வாசிக்கிறோம்.

வசனம் 6:13

அப்பொழுது நதிக்கு இப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும், சேத்தார்பொஸ்னாயும், அவர்கள் வகையராவும், தரியுராஜா கட்டளையிட்ட பிரகாரம் ஜாக்கிரதையாய்ச் செய்தார்கள்.

தரியு இராஜாவின் கட்டளைகள் முழுவதும் நிறைவேற்றப்பட்டன. தத்னாயும் மற்ற அதிபதிகளும் தரியு இராஜா கட்டளையிட்ட பிரகாரம் ஜாக்கிரதையாய்ச் செய்தார்கள். அவர்கள் முதலில் மேற்கொண்ட முயற்சிகள் முற்றிலும் தோல்வியடைற்தது. அதற்கு நேர் எதிரிடையான, மொத்த உருவங் கொண்ட, இராஜாவின் கட்டளைகள் அனைத்தையும் நிறைவேற்ற அவர்கள் முற்பட்டனர்.

தத்னாயும் அவனுடனிருந்த மற்ற அதிகாரிகளும் செய்த முயற்சிகள் அனைத்தும் யூதருக்கும், அவர்களுடைய ஆலயப் பணிகளுக்கும் நேர் எதிரிடையானதே ஆனால் தேவனாகிய கர்த்தர் அதை அவர்கள் விரும்பாத செயல்களைச் செய்ய வேண்டியதாக மாற்றிப்போட்டார். பரிசுத்த வேதாகமத்தில் இது போன்ற தீய நோக்கங்கள் நிறைவேற்றப் படத்தக்கதாக எழுதப்பட்ட வேறு பல கடிதங்களை நாம் காண்கிறோம். ஆனால் தத்னாவின் கடிதங்களைப்போலவே, அந்தக் கடிதங்களும் நேர் எதிரிடையான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளமையை நாம் வேதத்தில் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக, தாவீது, யோவாபுக்கு எழுதிய கடிதத்தைப்பற்றி வேதம் நமக்குக் கூறுகிறது. அதிலே, மும்முரமாய் நமக்கிற போர் முகத்திலே, முன் வரிசையிலே உரியாவை நிறுத்தி அவனைக் கொல்வதற்கு வழிசெய்யும்படி எழுதப்பட்டதை நாம் வாசிக்கிறோம் (1.சாமு.11:14,15). ஆனால் அதன் விளைவாக தாவீது தேவனால் எவ்வாறு தண்டிக்கப்பட்டான் என்பதனை வேதம் கூறுகிறது. தாவீதின் மகன் பாலகன் செத்துப் போனான் (1.சாமு.12:18). அவனுடைய மற்றக் குமாரர்கள் அவனுக்கு விரோதமாய் கலகம் செய்தார்கள் (1.சாமு. 15, 1.இராஜா.1:5). அவன் பல பேர்களை எதிர்நோக்கவேண்டியிருந்தது (1.சாமு. 12:10). அடுத்து, அசீரியா இராஜவாகிய சனகெரிப், யூதாவின் இராஜாவாகிய எசேக்கியாவிற்கு ஒரு கடிதம் எழுதினான். அதில், நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்த (ஏமாற்ற) ஒட்டாதே. நான் மற்ற ராஜாக்களைத் தோற்கடித்து போல உன்னையும் தோற்கடிப்பேன் (2.இராஜா.19:10-13). எசேக்கியா செய்தது என்ன? கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று அந்தக் கடிதத்தைக் கர்த்தருக்குமுன் வைத்து ஜெபித்தான். தேவனிடத்தில் இருந்து எசேக்கியாவிற்கு பதில் கிடைத்தது. அவன் (சனகெரிப்) இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை. இதின்மேல் அம்பு எய்வதில்லை........ நான் இந்த நகரத்தை இரட்சிப்பேன்.... என்று வெளிப்படுத்தினார் (2.இராஜா.19:32-34). கர்த்தர் தமது வாக்கை நிறைவேற்றினார். கர்த்தருடைய தூதன் புறப்பட்டு அசீரியாவின் பாளையத்தில், அன்று இராத்திரியிலே, லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான், என்று வேதம் கூறுகிறது (2.இராஜா. 19:35). சனகெரிப் திரும்பி சென்றுவிட்டான். அவனுடைய சொந்த குமாரர்களே அவனைப் பட்டயத்தால் வெட்டிப் போட்டார்கள் என்று நாம் வாசிக்கி;றோம் (19:37).

மேலும் இது போன்ற கடிதம் எழுதிய யேசபேலைப் பற்றியும் வேதம் கூறுகிறது. யேசபேல் இஸ்ரவேலின்மேல் இராஜ்யபாரம்பண்ணிய சமாரியாவின் இராஜாவாகிய ஆகாபின் மனைவி, அவள் ஆகாபின் பெயராலே கடிதம் எழுதி அதை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடே குடியிருக்கிற மூப்பரிடத்திற்கும், பெரியோரிடத்திற்கும் அனுப்பினாள். அக்கடிதத்தில் பொய்யாக, நீங்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி, இரண்டு பொய்யர்களைக்கொண்டு, தேவனையும் இராஜாவையும் தூஷித்தான் என்று அவன்மேல் பொய்சாட்சி சொல்ல வைத்து, அவனை வெளியே கொண்டுபோய் சாகும்படி கல்லெறியுங்கள்...... என்று எழுதியிருந்தாள் (1.இராஜா. 21:9-10). ஆனால் இந்த கொடுரமான பொய்க்கடிதத்தின் விளைவாக, அவள், பின்னொரு நாளில் அவளது சொந்தவேலைக்காரர்களாலேயே, ஜன்னல் வழியாக கீழே தள்ளப்பட்டு குதிரைகளால் மிதிக்கப்பட்டு நசுங்கி கொல்லப்பட்டாள் என்று வேதம் கூறுகிறது (2.இராஜா. 9:30-37).

வசனம் 6:14

அப்படியே யூதரின் மூப்பர் கட்டினார்கள். தீர்க்கதரிசியாகிய ஆகாயும் இத்தோவின் குமாரனாகிய சகரியாவும் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தபடியினால் அவர்களுடைய காரியம் கைகூடி வந்தது. அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைப்படியேயும், கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளைப்படியேயும் அதைக் கட்டி முடித்தார்கள்.

மேலும், யூதர்கள் தங்களின் கட்டுமானப் பணியைத் தொடர்ந்தனர். கர்த்தர் வழி நடத்தினார், கட்டிமுடித்தார்கள். வேலையை முழுமுயற்சியோமு முதலில் ஆரம்பித்தனர். தங்கள் எல்லா பொருள்களையும், எல்லா நேரத்தையும் முழுமனதுடன் அந்தப் பணிக்காகவே அர்ப்பணித்தனர். இப்போது அப்பணியை முடித்தனர். நம்மில் பலர் அநேககாரியங்களை ஆரம்பிக்கிறோம். ஆனால் தொல்லைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டால், சோர்வடைந்து பணியை நிறுத்தி விடுகிறோம். கர்த்தர் நம்மிடத்தில் எதிர்ப்பார்த்து நிற்பது என்ன? லூக்கா 9:62 இல் கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கிற எவனும் தேவனுடைய இராஜ்யத்திற்குத் தகுதியுடையவனல்ல, என்று இயேசு கூறியுள்ளார். யோவான் எழுதிய சுவிசேஷத்திலே ஆண்டவராகிய இயேசு தமது ஊழியத்தைத் துவங்கி, ஆரம்பித்ததை நாம் வாசிக்கிறோம். இவ்விதமாய் இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக்க கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார் (யோவான் 2:11). மூன்று ஆண்டுகளுக்குப்பின் தமது பணியை அவர் முடித்துக்கொண்டார். அவர் தமது பிதாவை நோக்கி: நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையை செய்து முடித்தேன், என்று பிரார்த்தனை செய்து கூறுகிறார். சிலுவையில் அறையப்பட்டு நமது பாவங்களைச் சுமந்து தீர்க்க முற்பட்டபோது, முடிந்தது.... என்று சொன்னார் (யோவான் 18:30).

யூதர்கள் ஆலையத்தைக் கட்டி முடித்தார்கள். கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டு காரியம் கைக் கூடிவந்தது. சாலொமோன் இராஜா முதலாம் தேவாலயத்தைக்கட்டி முடித்தபோது இந்த மூன்று நிகழ்ச்சிகளை நாம் காண முடிகிறது. அவன் ஆரம்பித்தான். வேலையெல்லாம் முடிந்தது. (1.இரா 7:51). கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டான், அவன் பாக்கியசாலியாயிருந்தான் (1. நாளா. 29:23).

இந்த ஆலயத்திருப்பணி செய்து முடிக்கப்பட, ஆகாய் மற்றும் சகரியா ஆகியோரின் தீர்க்கதரிசனங்கள் மிகவும் முக்கியமாக இருந்தன என்பது நிச்சயமே. பரிசுத்தவான்களின் திடப்படுத்துதல் தேவ பணிகளுக்கு மிகவும் முக்கியமானவையாகும். கர்த்தர் மோசேயினிடத்தில், அவனைத் திடப்படுத்து, என்று யோசுவாவைப்பற்றிக் கூறுகிறார் (உபா. 1:38). பவுல் அப்போஸ்தலன் ஒருமுறை, கர்த்தரோ எனக்குத் துணையாயிருந்து......... என்னைப் பலப்படுத்தினார் என்று கூறுகிறார் (2. தீமோ.4:17). கர்த்தரின் ஆசீர்வாதமும் வழி நடத்துதலும் நமக்கு எல்லா காரியங்களிலும் மிக மிக அவசியமாகும்.

அதே நேரத்தில், இந்தத் தீர்க்கதரிசிகள், யூதர்ளைச் சிற்சில வேளைகளில் கடிந்து கொண்டார்கள் என்றும் நாம் வாசிக்கிறோம். பவுல் தீமோத்தேயுவைக்கூட கடிந்து கொள்ளுதலைச் செய்யவேண்டுமென்று கூறுகிறார். எல்லா நீடிய சாந்தத்தோடும், உபதேசத்தோடும், கண்டனம் பண்ணி கடிந்துக்கொண்டு, புத்தி சொல்லு...... (2.தீமோ.4:2) யூதர்களும் அவர்களுக்குச் செவி கொடுத்தார்கள். சாலொமோனும் இதையே வலியுறுத்தி, ஒருவன் மூடரின் பாட்டைக்கேட்பதிலும், ஞானியின் கடிந்துக்கொள்ளுதலைக் கேட்பது நலம்.... என்று கூறுகிறான் (பிர.7:5). மேலும் இந்த வசனத்தில், யூதர்கள் ஆலயத்தைகட்டி முடித்த வரலாற்றினை நாம் காண்கிறோம். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து, அதை அவர்கள் முடித்தார்கள். அதோடு கோரேஸ் தரியு, அர்த்தசஷ்டா ஆகிய இராஜாக்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தும் அந்த வேலை செய்யப்பட்டது. கர்த்தருடைய கட்டளைக்கு முதலில் கீழ்ப்படியப்பட்டது. பிறகு உலகப்பிரகாரமான இராஜாக்களின் கட்டளைகளும் நிறைவேற்றப்பட்டன.

வசனம் 6:15

ராஜாவாகிய தரியு அரசாளுகிற ஆறாம் வருஷம் ஆதார் என்னும் மாதம் மூன்றாந்தேதியிலே அந்த ஆலயம் கட்டி முடிந்தது.

தேவனுடைய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. யூதர்களுக்கு எவ்வளவு சந்தோஷமும் மனத்திருப்பியும் ஏற்பட்டிருக்குக்கூடும்! அது பெரிய வேலை- உடலுழைப்பு- பொருள் தியாகம்- பெரியமுயற்சிகள் எல்லாம் சேர்ந்து, கடைசியாக அப்பணி முடிவடைந்தது.

வசனம் 6:16

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரும், ஆசாரியரும், லேவியரும், சிறையிருப்பிலிருந்து வந்த மற்றவர்களும், தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சந்தோஷமாய்க் கொண்டாடினார்கள்.

அடுத்து ஆலயப்பிரஷ்திடையைச் செய்ய வேண்டியிருந்தது. அப்படியென்றால் தாங்கள் புதிதாகக்கட்டி முடித்ததொன்றை தேவனுடைய பணிக்காக, தொழுகைக்காக தேவனுக்குச் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. மோசேயின் காலத்தில்கூட இத்தகைய பிரதிஷ்டைகளைப்பற்றி நாம் வாசிக்கிறோம் (உபா. 20:53). நாமும் நமது வாழ்க்கையில், நமது புதிய படைப்புகளைத் தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்கிறோமா?

இத்தகைய பிரதிஷ்டை முறைமைகளிலும் ஓர் ஒற்றுமைப்பாணியை நாம் காணமுடிகிறது. இந்த மகிழ்ச்சியான விழாவினிலே கலந்துக்கொள்ள அனைவரும் வரவேற்கப்பட்டார்கள். இஸ்ரவேல் புத்திரரும் ஆசாரியரும் லேவியரும் சிறையிருப்பிலிருந்து வந்த மற்றவர்களுமாகிய அனைவரும் கலந்துகொண்டார்கள். சந்தோஷமாய்க் கொண்டாடினார்கள். வேதத்தில் பல இடங்களில் சந்தோஷமான என்ற சொற்களை நாம் வாசிக்கிறோம். ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய அன்றாடக வாழ்க்கiயிலே சந்தோஷம் பொங்க வேண்டும். ஆவியின் கனிகளைப்பற்றி வேதத்தில் கூறப்பட்டுள்ள வரிசையில் இரண்டாவது இடத்தில் சந்தோஷம் இருப்பதை நாம் வாசிக்கிறோம் (கலா.5:22). அதுமட்டுமன்றி தீர்க்கதரிசனப்புத்தகத்திலே உன் தேவனாகிய கர்த்தர்.... உன் பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து..... களி கூருவார்- என்று நாம் வாசிக்கிறோம் (செப்பனியா 3:17). நெகேமியா தீர்க்கதரிசியும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்று கூறுகிறார் (நெகே.8:10). மேலும் அவர் தமக்கு முன்வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு...... சிலுவையைச் சகித்தார் என்று எரேமியாவில் 12:2 இல் வாசிக்கிறோம். மேலும் பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதின முதலாம் நிருபத்திலே, நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு எங்களையும் கர்த்தரையும் பின்பற்றினீர்கள் என்று சந்தோஷத்தைப்பற்றி விளக்கிக்கூறுகிறார் (1.தெச.1:6).

வசனம் 6:17

தேவனுடைய ஆலயத்தின் பிரதிஷ்டைக்காக நூறு காளைகளையும், இருநூறு ஆட்டுக்கடாக்களையும், நானூறு ஆட்டுக்குட்டிகளையும், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, இஸ்ரவேல் அனைத்தின் பாவநிவாரணபலிக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்குட்டிகளையும் பலியிட்டு,

தேவாலயப்பணி முற்றுப் பெற்றதனால் ஏற்பட்ட சந்தோஷத்துடன் தேவனுடைய ஆலயத்தைப் பிரதிஷ்டை செய்தார்கள். இந்தப் பிரதிஷ்டைக்காக 100 காளையும், இருநூறு ஆட்டுக் கடாக்களையும், 400 ஆட்டுக்குட்டிகளையும் பலியாகச் செலுத்தினார்கள். சாலொமோன் இராஜா, தனது முதலாவது தேவாலயத்தைக் கட்டி முடித்தபோது, அவன் செலுத்திய பலிகளுடன் ஓப்பிட்டுப்பார்த்தால் இது மிகவும் சொற்பமே. அப்பொழுது சாலொமோன் 22000 மாடுகளையும், 120,000 ஆடுகளையும் பலியிட்டான் என வேததில் வாசிக்கிறோம் (1.இரா 8:63). அப்போது இருந்த வெண்கல பலிபீடம் பலிகளைக் கொள்ளக்கூடாமையால், ஆலயத்தின் முன்னிருக்கிற பிரகாரத்தின் நடுமையத்தை அதற்காகப் பயன்படுத்தினான் என வாசிக்கிறோம். அவர்கள் சாலொமோனிடமிருந்து பணம் பெறவில்லை. ஆனால் தங்களிடமிருந்து கொடுத்தார்கள். கர்த்தருடைய சந்நிதானத்தில் ஒவ்வொருவரும் கொடுக்க வேண்டும். நாம் வேதத்தில், உங்களில் அவனவன் தன் தன் வரவுக்குத்தக்கதாக .... எதையாகிலும் (காணிக்கைக்கு) சேர்த்து வைக்க வேண்டாம்..... என்று கூறப்பட்டுள்ளதை வாசிக்கிறோம் (1.கொரி. 16:2).

இந்தப் பலிகளுக்குப்பின் அவர்கள், இஸ்ரவேல் அனைத்திற்கும் பாவ நிவாரண பலிகளைச் செலுத்தினார்கள். அந்த 12 கோத்திரத்தாருக்காகவும் அது செலுத்தப்பட்டது. ஆனால் அவர்கள் பெரும்பாலும் யூதகோத்திரத்திலும் சேர்ந்தவர்களாக இருந்தனர். இதைச் செய்ததினால் அவர்கள் எல்லாரும், தங்களைப் பாவிகள் என்று அறிக்கைசெய்தது போலாகும் (ரோமர் 3:23). இது நாம் எல்லாருக்கும் ஒரு நல்ல முன்மாதிரி. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்... என வேதம் கூறுகிறது (ஏசாயா 53:6).

வசனம் 6:18

மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே, அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆராதனைக்கென்று ஆசாரியரை அவர்கள் வகுப்புகளின்படியும், லேவியரை அவர்கள் முறைவரிசையின்படியும் நிறுத்தினார்கள்.

மோசேயின் பிரமானங்களின் கட்டளைப்படி ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும், தேவனுடைய ஆராதனைக்கென்று குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்காக அவர்களை வரிசையாக நிறுத்தினர் (எண். 18). பின்னர் தாவீது இராஜா அமைத்துக் கொடுத்த சட்ட திட்டங்களின்படி, ஆலயப்பணிகளுக்காக நிறுத்தப்பட்டனர் (1.நாளா.23:6). பல ஆண்டுகளுக்கு முன்னர் குறித்து வைக்கப்பட்ட முறைமைகளின்படி அவர்கள் செயல்பட்டனர் எனலாம்.

வசனம் 6:19

சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்காவை ஆசரித்தார்கள்.

15ம் வசனத்திலே, ஆதார் மாதம் மூன்றாம் தேதியிலே ஆலயப்பணி முடிவுபெற்றதென்று நாம் வாசிக்கிறோம். ஆதார் மாதம் என்பது ஆண்டின் கடைசி மாதமாகும். ஆறு வாரங்கள் கழித்து, அடுத்த ஆண்டின் முதல் மாதத்தில் 14- ஆம் தேதியிலே அவர்கள் பஸ்கா பண்டிகையை ஆசரிக்க முற்பட்டனர். இஸ்ரவேலர்கள், தங்கள் உடமைகளுடன், எகிப்து தேசத்திலிருந்து எவ்வாறு மீண்டனர் என்ற வரலாற்றிணை, யாத்திராகமம் 12- ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். அந்த நாளின் நிகழ்சிகளை அவர்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது என்பது தேவனின் கட்டளை. அந்த நாளை நினைவுகூர்ந்து, ஆண்டுதோறும் அவர்கள் கொண்டாட வேண்டியிருந்தது. அவர்களுக்குப் பின்னர் பிறக்கும் குழந்தைகள் அந்த விழா ஏன் என்று கேட்டால் அவர்கள் சொல்ல வேண்டியது யாதெனில், இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி. எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்தில் இருந்த இஸ்ரவேலருடைய வீடுகளைக் கடந்து போனார் என்பதாகும் (யாத்.12:24-28).

1.கொரி.5:7 ம் வசனத்திலே, நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே என வாசிக்கிறோம். பஸ்காவின் பலி ஆடு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தில் உட்பொருளாக விளங்குகிறது. அது சரியான பொருத்தம், யாத் 12:5, எபி 9:14 இலும் உள்ளது போல பழுதற்றதாக, குற்றமற்றதாக இருக்கவேண்டும். யாத். 1:6, அப். 2:23 இலும் உள்ளதுபோல அது அடிக்கப்பட கொல்லப்படவேண்டும். யாத். 13:7, லூக். 22:20 இலும் உள்ளதுபோல இரத்தம் தெளிக்கப்படவேண்டும். அது பழுதற்றதாகவும் எலும்புகள் முறிக்கப்படாமலும் இருக்கவேண்டும். யாத். 12:46, சங். 34:20, யோவா. 19:36 தேவன் அந்த யூதர்களின் மனங்களை நன்கு அறிந்திருந்தார். ஆகையால் ஆண்டுதோறும் அதை நினைவுகூற வேண்டுமென அவர்களுக்கு கட்டளையிட்டிருந்தார். அவ்வாறே தேவன் நமது இருதயங்களையும் நன்கு அறிந்திருக்கிறார். ஆகையால் நாம் அவரை நினைவுகூர வேண்டுமென்று கூறுகிறார். 1.கொரி. 11:24-25 உண்மையில் அது ஒரு சிறிய காரியமே. நாம் சேர்ந்து பாடி தேவனைத் துதித்து அந்த பஸ்காவின் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டியவர்களாக இருக்கிறோம்.

வசனம் 6:20

ஆசாரியரும் லேவியரும் ஒருமனப்பட்டுத் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டதினால், எல்லாரும் சுத்தமாயிருந்து, சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாருக்காகவும், ஆசாரியரான தங்கள் சகோதரருக்காகவும், தங்களுக்காகவும் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்.

ஆசாரியர்களும் லேவியர்களும் சேர்ந்து பஸ்காப் பலியைச் செலுத்துவார்கள். அதற்கு முன்னர் அவர்கள் தங்களைத் தாங்களே பரிசுத்தம் செய்துகொள்ளவேண்டும். அந்த ஆசாரியர்கள் ஆரோனின் பின் சந்ததியினர். அவர்கள் தான் பலியிடும் பணியைச் செய்வார்கள். லேவியர்கள் எனப்படுவோர் லேவியின் கோத்திர வழி வந்தவர்கள். அவர்கள் தேவனுடைய ஆலயத்தின் பணிகளைச் செய்பவர்கள். (எண் 3).

இந்த இருதரத்தாரும் மற்றவர்களுக்குரிய ஆசாரிப்புப் பணிகளைச் செய்ய ஒன்றுசேரும்முன் தங்களை தூய்மைப்படுத்திக்கொள்ளும் பணியை சரிவரச் செய்து முடிக்கவேண்டியிருந்தது. இது ஒரு நல்ல ஆரம்பம். மற்றவர்களுக்காகவும், தேவனுடைய மகிமைக்காகவும் பணியாற்ற விரும்புகிறர்கள் முதலில் தங்களை தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மத்தேயு எழுதிய சுவிசேஷத்தில் இதை நாம் காண்கிறோம், முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின் உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய் (மத்.7:5, 2.நாளா.29:15) தங்களை சுத்திகரித்துக்கொண்டபின்பு, ஆசாரியரும் லேவியரும் சேர்ந்து, மற்ற இஸ்ரவேலர் அனைவருக்காவும், தங்களுக்காகவும்கூட, பஸ்காவின் ஆட்டை பலியிட்டனர், அந்த பலி யாவருக்காகவும் செலுத்தப்படுகின்ற பலி.

வசனம் 6:21-22

அப்படியே சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த இஸ்ரவேல் புத்திரரும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நாடும்படி, பூலோக ஜாதிகளின் அசுத்தத்தை விட்டு, அவர்களண்டையிலே சேர்ந்த அனைவரும் அதைப் புசித்து, புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளாகச் சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள். கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்கள் கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாய் ஆசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்டசத்தில் சார்ந்திருக்கப்பண்ணினார்.

இங்கு அந்த ஆசாரியர், லேவியர், இஸ்ரவேலர் தவிர மற்றுமொரு கூட்டத்தினரை நாம் காண்கிறோம், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நாடும்படி சேர்ந்து அனைவரும்... எனக் கூறப்பட்டுள்ளது, அங்கு வாழ்ந்த அனேகர், புறஜாதிகளின் விக்கிரகவழிபாடுகள் மிகவும் கேடு நிறைந்தவைகள் என உணர்ந்து, அதை விட்டு, கர்த்தராகிய தேவனை வணங்க முன்வந்தனர், அப்படி முன்வந்தவர்கள் பஸ்கா பலியில் சேர்ந்துகொள்ளவும், பஸ்காவைப்புசிக்கவும், பண்டிகையை ஆசாரிக்கவும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அதை சந்தோஷத்துடனே ஆசாரித்தார்கள் என வேதம் கூறுகிறது, கர்த்தராகிய தேவன் அவர்களை ஆசீர்வதித்து சந்தோஷப்படுத்தினார், தேவனுடைய ஆலயத்தைக் காணும்போதெல்லாம் தங்களின் விடாமுயற்சியின் நற்பலனை அதிலே அவர்களால் காணமுடிந்தது, அவர்களுடைய விசுவாசம், மற்றவர்கள் புறஜாதியினர் வழிபாட்டு முறைமைகளை விட்டுச்செல்ல அவர்களைத் தூண்டியது, இந்த நிலை, அவர்கள் அனைவரும், தேவனுக்குள் ஒன்றுசேர்ந்து, தேவனைத்தொழவும், துதிசெய்யவும் நல்லதொரு பாதையாக அமைந்தது. இந்த வசனத்தில் நாம் மேலும் காண்கிற செய்தி யாதெனில் ஆசீரியாவின் இராஜா, தனது இருதயத்தை தேவனுக்கு நேராகத் திருப்பி அவர்களின் தேவ ஆலயத்தின் பணிக்கு ஒத்தாசை செய்யத் தூண்டியது என்பதாகும். நீதி. 21:1 இல் கூறப்பட்டுள்ளபடி அது நடைபெற்றது, கடுகளவு விசுவாசமிருந்தால், ஆரம்பிக்கப்படும் எந்தப்பணியும், கர்த்தரால் நிச்சயம் நிறைவேறும், எதிர்ப்புக்கள் மலைகளாயினும் தகர்க்கப்பட்டுப்போம் என நாம் அறிவோமாக.
By Tamil christian Assembly

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.