எஸ்றா 5 விளக்கவுரை

எஸ்றா 5

(6) ஆலயத் திருப்பணி மீண்டும் துவக்கம
வசனம் 5:1

அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

சில ஆண்டுகள்வரை ஆலயத் திருப்பணி நிறுத்தப்பட்டிருந்தது. யூதாவிலும் எருசலேமிலும் இருந்த யூதர்களுடன் பேசி, தமது பிள்ளைகளான ஆகாய் தீர்க்கதரிசியையும், சகரியா தீர்க்க தரிசியையும் தேவன் தெரிந்துக் கொண்டார். அவர்கள் தேவனுடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள். இதுதான் தேவனுடைய வழி. தேவனுக்கடுத்த எல்லாக் காரியங்களும் கர்த்தருடைய வார்த்தைகளை முன்வைத்துத்தான் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆகாய் தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி அவன், இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப் பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ....? என்றுரைத்தான். இது ஒரு நல்ல கேள்வி. யூதர்கள் தங்கள் சொந்த வீடுகளைக் கட்டி முடிக்க ஏராளமான செல்வத்தையும் நேரத்தையும் செலவழித்துள்ளனர். ஆனால் தேவனுடைய ஆலயமோ சுவர்கள் எழுப்பப்படாமல், கூரைகள் ஒன்றும் பாவப்படாமல் அஸ்திபாரத்தோடே நின்றுவிட்டிருக்கிறது.


நாம் நமது சொந்தக் காரியங்களுக்கு முதலிடம் கொடுத்து தேவனுடைய காரியங்களைப் புறக்கணிக்கிறோமா? இதைத்தான் ஆகாய், தீர்க்கதரிசனமாய் உரைத்து உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டு வருகிறீர்கள். நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை. குடித்தும் பரிபூரணமடையவில்லை.... உடுத்தியும் குளிர்விடவில்லை. கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்... என்று கூறுகிறான் (ஆகாய் 1:4-8). பின்னும் கர்த்ருடைய வார்த்தை ஆகாய்க்கு உண்டாகி அவன், உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் பரிபூரணமடையவில்லை. நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய் மரங்களை வெட்டிக்கொண்டுவந்து ஆலயத்தைகட்டுங்கள். அதின் பேரில் நான் பிரியமாய் இருப்பேன். நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக் கொண்டு வருகிறீர்கள் என்றான். தேவனுக்குரிய காரியங்களுக்கு நாம் முதலிடம் தராததினால் இந்த இழிநிலை நமக்கு ஏற்படுகிறது. இதைக்குறித்து, கர்த்தராகிய இயேசு கூறுகிறதாவது, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித் தேடுகிறார்கள். இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும் என்பதே (மத்.6:31-33). இந்த வேதத்தின் விதியை நாம் நமது வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டியவர்களாய் இருக்கிறோம். முதலாவது தேவனுக்கடுத்த காரியங்களைச் செய்தால், மற்றவைகள் யாவும் நமக்கு நிறைவேறும்.

இது குறித்துத்தான் சகரியாவும், செருபாபேலின் கைககள் இந்த ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டது. அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்....... என்று தீர்க்கதரிசனம் உரைத்தான். இங்கே கர்த்தரின் ஆறுதலான வார்த்தைகளை நாம் கேட்கிறோம். இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திலே ஆகாயும், சகரியாவும் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். இங்கு தேவனுடைய வார்த்தைக்கு மறுபடியும் மனப்பூர்வமாய் செருபாபேலும், யெசுவாவும் கீழ்ப்படிந்ததை நாம் காண்கிறோம். தேவனுடைய ஆலயத்தைக்கட்டும் பணியை அவர்கள் மீண்டும் தொடங்கினார்கள். கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் அவர்களுடனேகூட இருந்தார்கள்.

வசனம் 5:2

அப்பொழுது செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள். அவர்களுக்குத் திடன் சொல்லத் தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.

இங்கு ஒரு நல்ல உதாரணத்தை நாம் காணமுடிகிறது. இந்தத் தீர்க்கதரிசிகள் போதித்துக்கொண்டு எழுதிக்கொண்டு மாத்திரம் இருக்கவில்லை. மற்றவர்களுடன் சேர்ந்து பணிசெய்தார்கள் என நாம் வாசிக்கிறோம். வெளியில் நின்றுக்கொண்டு ஆலோசனைகள் கூறுவதாக மட்டும் இவர்கள் நிற்கவில்லை. கருவிகளை எடுத்துப்பிடித்து பணியில் நேரடியாக ஈடுபட்டனர். பவுல் அப்போஸ்தலனிடத்திலும் இத்தகையதோர் அரியபண்பினை நாம் காணமுடிகிறது. ஒரு முறை பவுல், ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் என்கிற கூடாரம்பண்ணுகிற தொழிலாளர்களாகிய ஒரு யூத குடும்பத்தில் தங்கியிருந்தார். பவுல் ஒரு கூடாரத்தொழில் செய்கிறவனானபடியால் அவர்களுடன் அந்த வேலையைச் செய்து வந்தான் என்று வேதம் கூறுகிறது (அப்.18:3). பிறகு பவுல் தனது நிருபங்களிலே, எங்கள் கைகளினாலே வேலைசெய்து பாடுபடுகிறோம் என்று கூறுகிறான் (1.கொரி.4:12). மறுபடியுமாக ஆரம்பித்து, தேவனுடைய ஆலயத்தைக்கட்டும் பணியைச் செய்யும் தலைவர்களுடன் ஆகாயும், தீர்க்கதரிசியான சகரியாவும் சேர்ந்துக்கொண்டனர். இந்த வசனத்தின் கடைசிப்பகுதியிலே அனைத்துப் பணிக்கும் காரண கர்த்தாவாக இருப்பவர் யார் என நாம் நன்கு புரிந்துகொள்ளமுடிகிறது. கர்த்தராகிய தேவனுடைய தீர்க்கதரிசிகள், எனக் கூறும்போது, அனைத்துக்காரியங்களிலும் அவருடைய பிள்ளைகளுக்கும் துணைசெய்கிறவராய் இருப்பது, கர்த்தராகிய தேவனே.

வசனம் 5:3

அக்காலத்திலே நதிக்கு இப்புறத்தில் இருக்கிற நாடுகளுக்கு அதிபதியாகிய தத்னாய் என்பவனும், சேத்தார்பொஸ்னாயும், அவர்கள் வகையராவும் அவர்களிடத்துக்கு வந்து, இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் என்று அவர்களைக் கேட்டார்கள்.

மறுபடியும் ஆலயப்பணி துவக்கப்பட்டபோது, மறுபடியும் தொல்லைகள் ஏற்பட ஆரம்பித்தன. யூதர்களின் சத்துருக்கள் ஒன்று சேர்ந்து தேசாதிபதியினிடத்திற்குச் சென்று முறையிடத்துவங்கினர். யூதர்களை விசாரிக்கும்படி அதிபதிகள் புறப்பட்டனர். தேசாதிபதியாகிய தத்னாய் என்பவனும் மற்றொரு அதிபதியான சேத்தார் பொஸ்னாயும் யூதர்களைச் சந்தித்து இந்த ஆலயத்தைக் கட்டவும் இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் எனக் கேட்டதுமன்றி இதைச் செய்கிறவர்களின் பெயர்களைக் கூறும்படியும் கேட்டனர்.

வசனம் 5:4

அப்பொழுது அதற்கு ஏற்ற உத்தரவையும், இந்த மாளிகையைக் கட்டுகிற மனிதரின் நாமங்களையும் அவர்களுக்குச் சொன்னோம்.

இத்தகைய கேள்வி அந்த யூதர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். ஒரு கூட்டமாகத் தாக்கப்படுவது மிகவும் சிக்கலான ஒரு காரியமே. ஆயினும் பிழை செய்தவர்களின் ஒரு பட்டியலில் ஒரு குறிப்பிட்ட பெயர் பதியப்பெறுவது மிகவும் அச்சம் ஏற்படுத்தக்கூடியது. உண்மையில் அந்தப் பெயரை உடையவன் யாதொரு தவறையும் செய்யவில்லையென்றபோதிலும் அந்தப் பட்டியலை வைத்துக்கொண்டு, ஒரு நியாயமற்ற முறையில், அவனுக்கு எந்த ஒரு கெடுதியையும் அதிகாரிகள் செய்யமுடியுமன்றோ?

வசனம் 5:5

ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய், எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் தடுக்காதபடிக்கு, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது இதைக்குறித்து அவர்கள் சொன்ன மறுமொழியைக் கடிதத்தில் எழுதியனுப்பினார்கள்.

ஆனால், அந்த யூதர்களளோவெனில் சிறிதும் தயங்கவில்லை. அந்தத் தேசாதிபதியினிடத்தில் தங்கள் பெயர்களைப் பட்டியலாகக் கொடுத்தனர். ஆனால் இங்கு கர்த்தரின் ஆறுதலான வார்த்தைகளை நாம் காணமுடிகிறது. அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது..... 1.பேதுரு 3:12 இல் நாம் மறுபடியும் கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது என்ற ஆறுதலான வசனங்களை வாசிக்கிறோம். நம்மை எப்போதும் தேவன் கவனத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரது கவனமான, பாதுகாப்பான, பார்வையிலிருந்து, ஒரு நாழிகை நேரம்கூட நாம் விலகியிருக்கப் போவதல்லை! இத்தகைய தேவனுடைய கவனமான ஆசீர்வாதத்தின் பலனாக, அந்தச் தேசாதிபதியும் மற்ற அணையதிபதிகளும், யூதருடைய மூப்பரின் வேலையைத் தடுக்காதபடிக்கு, அவர்களுடைய தேவனின் கண்கள் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை அந்த யூதர்கள் பயத்தினால் அந்த வேலையை நிறுத்தி இருக்கலாம். அல்லது அந்த அதிபதிகளிடத்தில் தங்களின் பெயர்களைக் கொடுக்க மறுத்துவிட்டுச் சில குழப்பங்களை உண்டாக்கியிருக்கலாம். ஆனால் தேவனுடைய சித்தம் அதுவல்ல. ஒழுங்காக அந்த அதிபதிகளுக்குக் கீழ்ப்படிந்து பெயர்களைக் கொடுத்தனர். தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது. ஆலயத்தைக் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

வசனம் 5:6

நதிக்கு இப்புறத்திலிருக்கிற தத்னாய் என்னம் தேசாதிபதியும், சேத்தார்பொஸ்னாயும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அபற்சாகியரான அவன் வகையராவும், ராஜாவாகிய தரியுவுக்கு எழுதியனுப்பின நகலாவது:

அதிபதிகளும், தங்கள் தடுக்கும் பணியை விட்டபாடில்லை. மறுபடியும் மற்றுறொரு கடிதத்தினைத் தயாரித்து, இரண்டாம் தரியு இராஜாவிற்கு அனுப்பினர். அவர்கள் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? ஆலயப் பணியினால் அவர்களுக்கு எந்தவிதமான கெடுதியோ, தொல்லைகளோ, அல்லது பணக் கஷ்டமோ ஏற்படப்போவதில்லை. கர்த்தரின் மகிமைக்கென்று கட்டப்பட்ட ஓர் ஆலயமேயன்றி, அது வேறொன்றுமில்லை. அதுதான் அவர்கள் விரும்பாதது. அவர்களின் கலப்பு வழிபாட்டிற்கு அது ஒரு இடைஞ்சலேயன்றோ?

வசனம் 5:7-8-10

ராஜாவாகிய தரியுவுக்குச் சகல சமாதானமும் உண்டாவதாக. நாங்கள் யூதர் சீமையிலுள்ள மகா தேவனுடைய ஆலயத்துக்குப் போனோம். அது பெருங்கற்களால் கட்டப்படுகிறது. மதில்களின்மேல் உத்திரங்கள் பாச்சப்பட்டு, அந்த வேலை துரிசாய் நடந்து, அவர்களுக்குக் கைகூடிவருகிறதென்பது ராஜாவுக்குத் தெரியலாவதாக. அப்பொழுது நாங்கள் அவர்கள் மூப்பர்களை நோக்கி: இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டது யார் என்று கேட்டோம். அதுவுமல்லாமல், அவர்களுக்குள்ளே தலைவரான மனிதர் இன்னாரென்று உமக்கு எழுதி அறியப்படுத்தும்படி அவர்கள் நாமங்கள் என்னவென்று கேட்டோம்.

அவர்கள் இராஜாவுக்கு, அந்த நிலையை மிகைப்படுத்தி எழுதினர். அவர்கள், யூதர் சீமையிலுள்ள மகா தேவனுடைய ஆலயத்திற்குப் போனோம் என்று குறிப்பிட்டு எழுதினர். அந்தக் கட்டடம் எதற்குரியதென்பது அவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும். அது பெருங்கற்களால் கட்டப்பட்டு மதில்களின்மேல் உத்திரங்கள் பாய்ச்சப்படுகிறது, என்று எழுதினார்கள். அது சாலொமோன் கட்டிய பண்டைய ஆலயத்தின் அமைப்பிலேதான் ஒரு வேளைக் கட்டப்பட்டிருக்க வேண்டும். 1.இராஜா.6:36 உட்பிரகாரத்தை மூன்று வரிசை வெட்டினகற்களாலும், ஒரு வரிசை கேதுரு பலகைகளினாலும் கட்டினான், என்று சாலொமோனின் ஆலயத்தைப் பற்றி நாம் வாசிக்கிறோம். மேலும் அவர்கள் அந்த வேலை துரிதமாய் நடந்து, அவர்களுக்குக் கைக்கூடி வருகிறது, என்று எழுதினார்கள். அந்த ஆலயக் கட்டடம் அழகாகவும் உறுதியாகவும் கட்டப்படுகிறது என்கிற செய்தி அவர்களுக்கு மிகவும் மனக்கஷ்டமாய் இருந்தது போலும்! ஆலயம் கட்டப்படுகிறது என்பதைத்தவிர அதில் அவர்களுக்கு எந்தவிதமான நேரடி பாதிப்பும் இருக்கவில்லை. ஆலயப்பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அப்பணி, மீண்டும் துவங்கப்பட்டு விட்டதே என்பதைக் குறித்து மிகவும் கலங்கினார்கள். கற்களின் பெரிய அளவிலான அமைப்புகள் அங்கு பயன்படுத்தப்படுவதும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அங்கே ஆலயப் பணி நடக்கிற இடத்திற்குச் சென்றது பற்றியும், அங்கு பணியில் அமர்த்தப்பட்டிருந்தவர்களின் பெயர்ப்பட்டியல் பற்றியும் இராஜாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டனர். அந்த யூதர்கள் அளித்த மாறுத்தரத்தை நேர்மையான அவர்களின் மாறுத்தரததைத் தங்கள் கடிதத்தில் அவர்கள் குறித்து எழுதினர்.

வசனம் 5:11

அவர்கள் எங்களுக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனாயிருக்கிறவருக்கு அடியாராயிருந்து, இஸ்ரவேலின் பெரிய ராஜா ஒருவன் அநேக வருஷங்களுக்குமுன்னே கட்டித்தீர்த்த இந்த ஆலயத்தை நாங்கள் மறுபடியும் கட்டுகிறோம்.

முதலாவது அந்தப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தவர்கள் யாவர் என்பதனைக் குறிப்பிட்டு, பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் தேவனாயிருக்கிறவருக்கு அடியார் எனக் கூறியிருந்தனர். என்றா, நெகேமியா, மற்றும் தானியேல் ஆகிறோரின் புத்தகங்களிலே பரலோகத்தின் தேவன் என்ற வார்த்தைகளை நாம் காண்கிறோம். சிறைப்பட்டுப் போயிருந்த யூதர்களிடத்திலிருந்து தம்மைச் சற்று தூரப்படுத்திக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கே, பரலோகத்திற்கும், பூலோகத்திற்கும் தேவன், என்ற வார்த்தைகளைக் காண்கிறோம். ஒருவேளை தத்னாய் என்ற அதிபதி தனது கடிதத்தில், யூதர்கள் கூறிய வார்த்தைகளைச் சரிவர குறிப்பிடவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. மேற்கூறிய மூன்று புத்தகங்களிலும் இவ்வாறு, பரலோகத்திற்கும், பூலோகத்திற்கும் தேவன், என்ற வார்த்தைகளை இந்த ஓரிடத்தில் மட்டுமே காண முடிகின்றது. ஆனால் சகரியா தீர்க்கதரிசியின் புத்தகத்திலே இவ்வார்த்தைகளின் தொகுப்பு இருமுறை காணப்படுகிறது (சக.4:14, 6:5).

யூதர்கள் இதுகுறித்து வெட்கப்படவில்லை. அவர்கள் செய்தது யாதென்று விளங்கக் கூறினார்கள். ஆலயத்தைக் கட்டுகிறோம், எந்த ஆலயம்? இஸ்ரவேலின் இராஜா ஒருவன் கட்டித் தீர்ந்த ஆலயம்.

வசனம் 5:12

எங்கள் பிதாக்கள் பரலோகத்தின் தேவனுக்குக் கோபமூட்டினபடியினால், அவர் இவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் கல்தேயன் கையில் ஒப்புக்கொடுத்தார். அவன் இந்த ஆலயத்தை நிர்மூலமாக்கி, ஜனத்தைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.

தேவனிடத்தில் அவர்கள் செய்த தவற்றினை ஒப்புக்கொள்கின்றனர். எங்கள் பிதாக்கள் பரலோத்தின் மேவனுக்குக் கோபமூட்டினபடியினால் அவர், இவர்களை பாபிலோன் இராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கைகளில் ஒப்புக்கொடுத்தார், என்கின்றனர். நேபுகாத்நேச்சார் ஒரு மாவீரன் என்பதால் இந்தத் தோல்வி அவர்களுக்கு ஏற்படவில்லை. கர்த்தர் அவர்களை, அவன் கையில் ஒப்புக்கொடுத்தார். அவன் அந்த ஆலயத்தை நிர்மூலமாக்கி ஜனத்தைப் பாபிலோனுக்குச் சிறைப்படுத்திக் கொண்டு போனான்.

வசனம் 5:13-16

ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே கோரேஸ் ராஜாவானவர் தேவனுடைய இந்த ஆலயத்தைக் கட்டும்படி கட்டளையிட்டார். நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்த தேவாலயத்திலிருந்து எடுத்து, பாபிலோன் கோவிலில் கொண்டுபோய் வைத்திருந்த தேவனுடைய ஆலயத்தின் பொன் வெள்ளிப் பணிமுட்டுகளையும் ராஜாவாகிய கோரேஸ் பாபிலோன் கோவிலிலிருந்து எடுத்து, அவர் தேசாதிபதியாக நியமித்த செஸ்பாத்சாரென்னும் நாமமுள்ளவனிடத்தில் அவைகளை ஒப்புவித்து, அவனை நோக்கி: நீ இந்தப் பணிமுட்டுகளை எடுத்து, எருசலேமிலிருக்கும் தேவாலயத்துக்குக் கொண்டுபோ. தேவனுடைய ஆலயம் அதின் ஸ்தானத்திலே கட்டப்படவேண்டும் என்றார். அப்பொழுது அந்தச் செஸ்பாத்சார் வந்து, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தைப் போட்டான். அந்நாள்முதல் இதுவரைக்கும் அது கட்டப்பட்டுவருகிறது. அது இன்னும் முடியவில்லை என்றார்கள்.

மேலும் அந்த யூதர்கள் தத்னாய் என்ற அதிபதியினிடத்தில் முதலாம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள செய்திகளைக் கூறியதை நாம் காண்கிறோம். கோரேஸ் இராஜா அவர்களை அனுப்பியதையும் அவர்கள் தத்னாயிடம் கூறியிருப்பர். அந்தத் தேவாலயப்பணி துவக்கப்பட்டு சில ஆண்டுகள் கடந்து விட்டதனாயும் விளக்கிக்கூறியிருப்பர். ஆனால் அப்பணி இன்னும் முடிவுபெறவில்லையென்பது அவர்களுக்கு ஒருவேளை வருத்தமான செய்தியாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால் அவைகள்தாம் அப்பணிபற்றிய உண்மைகள் ஆகும்.

வசனம் 5:17

இப்பொழுதும் ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆயலத்தைக் கட்ட, ராஜாவாகிய கோரேஸ் கட்டளையிட்டதுண்டோ என்று பாபிலோனில் இருக்கிற ராஜாவின் கஜானாவிலே ஆராய்ந்து பார்க்கவும், இந்த விஷயத்தில் ராஜாவினுடைய சித்தம் இன்னதென்று எங்களுக்கு எழுதியனுப்பவும் உத்தரவாகவேண்டும் என்று எழுதியனுப்பினார்கள்.

அதிபதியான தத்னாயும், அவனுடைய உடன்அதிகாரிகளும் இரண்டாம் தரியு இராஜாவுக்கு எழுதிய கடிதத்திலே ஆலோசனையாக ஒரு செய்தியையும் கூட்டி எழுதியிருந்தனர். அதாவது, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக்கட்ட, இராஜாவாகிய கோரேஸ் கட்டளையிட்டதுண்டோ, என்று பாபிலோனில் இருக்கிற இராஜாவின் கஜானாவிலே ஆராய்நது பார்க்கவும், இந்த விஷயத்தில் இராஜாவினுடைய சித்தம் என்னவென்று எங்களுக்கு எழுதியனுப்பவும் உத்தரவாகவேண்டும் என்று எழுதி அனுப்பியிருந்தனர். அவர்கள் உண்மையில் என்ன செய்ய விரும்பினார்கள் என்பது தெளிவு. ஆலயபணியை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்பது அவர்களின் முடிவு. அர்த்சஷ்டா இராஜா ஆளுகைக்கு வருமுன் அந்த ஆலயப்பணி நிறுத்தப்பட்டது. மறுபடியும் துவங்கப்பட்டபணி ஏன் மறுபடியும் நிறுத்தப்படக்கூடாது என்று எண்ணினர். அதிபதியான தத்தனாயும் அவனது சக அதிகாரிகளும், முன்பு எழுதப்பட்ட மனுவில் 4ஆம் அதிகாரத்தில் உள்ளபடியான,- பொய்களைத் தங்கள் கடிதங்களில்; எழுதத்துணியவில்லை. ஆனால் அதற்குப்பதில் கோரேஸ் ஆணைகள் ஏதேனும் உண்டோவென்று இராஜாவின் கஜானாவிலே ஆராய்நது பார்க்கவேண்டும், என்று கோரினர். இத்ததையதொரு கடிதம் முன்பு பயனளித்துள்ளது. ஆனால் பெர்சியாவின் இராஜாவான கோரேஸ் போன்ற ஒருவன், யூதர்கள் தங்களின் சொந்த நகரமான எருசலேமுக்குத்திரும்பி, அந்த ஆலயத்தைக்கட்ட அனுமதியளித்திருப்பான் என அவர்களால் நம்ப முடியவில்லை. அவர்களை எருசலேமுக்குப்போக விட்டதுமட்டுமல்ல எருசலேமிலிருந்து நேபுகாத்நேச்சார் இராஜாவால் கொண்டு செல்லப்பட்ட அனைத்துப்பொக்கிஷங்களையும்கூட அவர்களுக்கு அளித்தனுப்பினான் என்பதை அவர்களால் நம்பக்கூடுமோ? அது முடியாததுதான். சாதாரண நிலையில் அப்படியொரு காரியம் நடந்திருக்கவே முடியாது. ஆனால் தேவனுடைய கரம் உடனிருந்ததினால் மட்டுமே அவ்வாறு நடந்தது.
By Tamil christian Assembly

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.