யோவான் நற்செய்திக்கான அறிமுகம்
கிறிஸ்து தன்னுடைய சீடர்கள் தனக்குச் சாட்சிகளாயிருக்கும்படி அழைத்தார். அவர் தன்னுடைய வாழ்க்கைச் சரிதையைத் தானே எழுதவும் இல்லை, சபைகளுக்குக் கடிதங்கள் எழுதவும் இல்லை. ஆனாலும் அவருடைய ஆளத்துவம் அவரைப் பின்பற்றியவர்களில் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணியது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்தும்படி அவர்கள் பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டார்கள். அவர்கள் அவருடைய அன்பிலும், தாழ்மையிலும், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலிலும் பிதாவுக்கு ஒரே பேறான குமாரனுடைய மகிமையைக் கண்டார்கள். அவர் கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராயிருந்தார். மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய நற்செய்தியாளர்கள் இயேசுவின் பேச்சுக்களையும் செயல்களையும் தெளிவுபடுத்தியதோடு, அவருடைய வருகையின் நோக்கம் இறைவனுடைய அரசை நிறுவுவதே என்றும் எடுத்துக்கூறினார்கள். யோவான் இயேசுவின் உள்ளான நபரையும் அவருடைய பரிசுத்த அன்பையும் முன்வைத்தார். இந்தக் காரணத்தினால்தான், வேதாகமத்தின் நூல்கள் அனைத்தின் மகுடமாக விளங்கும் யோவான் நற்செய்தி நூல் முதன்மையான நற்செய்தி நூல் என்று
அழைக்கப்படுகிறது.இந்த நற்செய்தியின் ஆசிரியர் யார்?
இந்த தனித்துவமான நூலின் ஆசிரியர் இயேசுவின் சீடரான யோவான்தான் என்று இரண்டாம் நூற்றாண்டு திருச்சபைப் பிதாக்கள் ஒத்த கருத்துடன் ஏற்றுக்கொண்டனர். யோவான் நற்செய்தியாளர் பல அப்போஸ்தலருடைய பெயர்களைக் குறிப்பிடுகிறார். ஆனால் தன்னுடைய பெயரையோ அல்லது தன்னுடைய சகோதரனாகிய யாக்கோபின் பெயரையோ குறிப்பிடவில்லை. தன்னுடைய கர்த்தரும் இரட்சகருமானவரின் பெயருடன் தன்னுடைய பெயரைச் சேர்த்துக் குறிப்பிடுவதற்கு தனக்குத் தகுதியில்லை என்று அவர் கருதினார். இருப்பினும் பிரான்ஸ் நாட்டின் லையான் நகரத்து பிஷப் இரேனியஸ் இவ்வாறு எழுதுகிறார்: கடைசி இராப்போஜனத்தில் இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த சீடனாகிய யோவான்தான் இந்த நற்செய்தியை உருவாக்கினார். அவர் துரோஜான் என்ற பேரரசருடைய (கி.பி. 98 - 117) காலத்தில் அனதோலிய எபேசுவில் பணிபுரியும்போது இதை எழுதினார்.
சில விமரிசகர்கள் இயேசுவோடிருந்த சீடனாகிய யோவான் இந்த நற்செய்தி நூலை எழுதவில்லை என்றும் யோவானுடைய சீடனும் எபேசு திருச்சபையின் மூப்பர்களில் ஒருவருமாகிய இன்னொருவரால் பிற்காலத்தில் எழுதப்பட்டது என்றும் கூறுகின்றனர். இந்த விமரிசகர்கள் கனவு காண்பவர்களாகவும் பொய்யுரையாத சத்திய ஆவியை அறியாதவர்களாகவும் இருக்கிறார்கள், ஏனெனில் யோவான், நாம் அவருடைய மகிமையைக் கண்டோம் என்று தன்மையில் (first person) எழுதுகிறார். இவ்வாறு இந்த நற்செய்தி நூலை எழுதியவர் இயேசுவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு கண்கண்ட சாட்சியாக இருக்கிறார். யோவானுடைய நற்செய்தியின் முடிவில் அவருடைய நண்பர்கள் இவ்வாறு சேர்த்தார்கள்: அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம் (21:24). இயேசு யோவானை அதிகமாக நேசித்தார் என்பதும் முதலாவது திருப்பந்தியில் அவரைத் தன்னுடைய மார்பில் சாய்ந்திருக்க அனுமதித்திருந்தார் என்பதும் அவரை மற்ற சீடர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது என்ற உண்மையை அவர்கள் வலியுறுத்தினார்கள். அவர் மட்டுமே இயேசுவிடம் தைரியமாக, (அவரைக் காட்டிக்கொடுப்பவனைப் பற்றி) ஆண்டவரே அவன் யார்? என்று கேட்கக்கூடியவராக இருந்தார் (13:25).
இயேசு தன்னைப் பின்பற்றும்படி யோவானை அழைத்தபோது யோவான் வலிபனாக இருந்தார். பன்னிரெண்டு அப்போஸ்தலர்களில் அவரே இளையவராகக் காணப்பட்டார். அவருடைய தகப்பனுடைய பெயர் செபுதேயு, தாயின் பெயர் சலோமி. திபேரியாக் கடற்கரையிலிருந்த பெத்தசாயிதாவில் அவர் தன்னுடைய குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவர் தன்னுடைய சொந்த சகோதரனாகிய யாக்கோபுடனும், பேதுரு, அந்திரேயா மற்றும் பிலிப்பு, நத்தானியேல் ஆகியோருடன் சேர்ந்து, யோர்தான் பள்ளத்தாக்கில் மனந்திரும்புதலுக்கு அழைப்பு விடுத்த யோவான் ஸ்நானகனிடத்தில் சென்றார். மக்களோடு நின்றுகொண்டிருந்த செபுதேயுவின் மகனான யோவானும் பாவமன்னிப்பையும் ஸ்நானகனுடைய கையினால் ஞானஸ்நானத்தையும் கேட்டார். அவர் ஒருவேளை பிரதான ஆசாரியனாகிய அன்னாவின் உறவினராக இருந்திருக்கலாம். ஏனெனில் அவர் மாளிகைக்குள் நுழைய உரிமைபெற்றவராக இருந்தார். இவ்வாறு அவர் ஆசாரியக் குடும்பத்திற்கு நெருக்கமானவராகக் காணப்பட்டார். அதனால் அவர் இயேசுவைக் குறித்து யோவான் ஸ்நானகன் சொன்னதில் மற்ற நற்செய்தியாளர்கள் சொல்லாதவை இவர் சொன்னார். அதாவது இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்ற செய்தி. இந்த வகையில் யோவான் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் மூலம் மற்றவர்களைக் காட்டிலும் இயேசுவை அவருடைய அன்பில் புரிந்துகொண்ட சீடனானார்.
யோவானுக்கும் மற்ற மூன்று நற்செய்தியாளர்களுக்கும் இடையிலான தொடர்பு
யோவான் இந்த நற்செய்தியை எழுதியபோது, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோரின் நற்செய்திகள் எழுதப்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு திருச்சபையில் நன்கு அறியப்பட்டிருந்தது. வருடங்கள் கடந்துபோனபோது, குறிப்பாக கர்த்தருடைய வருகை தாமதமானபோது, இயேசுவின் பேச்சுக்கள் தொலைந்து போய்விடாதபடி, அப்போஸ்தலர்கள் மத்தேயுவின் மூலமாக அவற்றைச் சேகரித்து எழுதி வைத்த ஒரு மூல எபிரெய புத்தகம் ஒன்றிலிருந்து மூன்று நற்செய்தியாளர்களும் தங்களுடைய நற்செய்திகளை உருவாக்கினர். அநேகமாக இயேசுவின் செயல்களும் அவருடைய வாழ்க்கை நிகழ்வுகளும் தனிப்பட்ட முறையில் எழுதி வைக்கப்பட்டிருக்க வேண்டும். நற்செய்தியாளர்கள் இந்த எழுத்துக்களை உண்மையுடன் அடுத்த சந்ததிக்கு கொடுப்பதில் அதிக கவனம் செலுத்தினார்கள். மருத்துவராகிய லூக்கா இயேசுவின் தாயாகிய மரியாளையும் வேறு சில கண்கண்ட சாட்சிகளையும் சந்தித்த காரணத்தினால் அவருக்கு வேறு ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன.
யோவானைப் பொறுத்தவரை நாம் ஏற்கனவே மேலே கூறிய ஆதாரங்ளுடன் அவரே ஒரு சிறந்த ஆதாரமாகக் காணப்பட்டார். ஏற்கனவே திருச்சபையில் அறியப்பட்டிருந்த இயேசுவைக் குறித்த செய்திகளையும் அவருடைய பேச்சுக்களையும் திரும்பக்கூறுவதற்கு அவர் விரும்பவில்லை. அவர் அதோடு சில காரியங்களைச் சேர்க்க விரும்பினார். முதல் மூன்று நற்செய்திகளும் இயேசுவின் ஊழியம் கலிலேயாவிலேயே நடைபெற்றதென்றும், அவர் தன்னுடைய பணிக்காலத்தில் எருசலேமுக்கு ஒரே முறைதான் போனார் என்றும் அப்போது அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்றும் கூறுகின்றன. ஆனால் நான்காவது நற்செய்தி நூல் இயேசு தன்னுடைய கலிலேய ஊழிய காலத்திலும் அதற்குப் பிறகும் எருசலேமில் என்ன செய்தார் என்பதை நமக்குக் காட்டுகிறது. இயேசு நாட்டின் தலைநகரமாகிய எருசலேமில் மூன்றுமுறை காணப்பட்டார் என்றும் தலைவர்கள் அவரைத் திரும்பத்திரும்ப புறக்கணித்தார்கள் என்றும் யோவான் சாட்சியிடுகிறார். எதிர்ப்பு வலுவடைந்தபோது அவர்கள் அவரைச் சிலுவையில் அறையும்படி ஒப்புக்கொடுக்கிறார்கள். பழைய ஏற்பாட்டுக் கலாச்சாரத்தின் மையமாயிருந்த எருசலேமின் யூதர்கள் நடுவில் இயேசுவின் ஊழியத்தைக் காண்பிப்பதுதான் யோவானுடைய முக்கியத்துவம். நான்காவது நற்செய்தியாளன் இயேசு செய்த அற்புதங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவற்றில் ஆறை மட்டுமே குறிப்பிடுகிறார். இதன் மூலம் யோவான் தெளிவுபடுத்த விரும்புவது என்ன? நான் இருக்கிறேன் என்று சொல்லும் ஒருவருடைய பாணியில் இயேசுவின் வார்த்தைகளை எடுத்துக்கூறி அவரது ஆளத்துவத்தை யோவான் விளக்குகிறார். முதல் மூன்று நற்செய்தியாளர்களும் இயேசுவின் வார்த்தைகளையும் செயல்களையும் குறித்து அதிக கவனம் செலுத்துகிறார்கள். யோவான் நம்முடைய கண்களுக்கு முன்பாக இயேசுவின் ஆளத்துவத்தின் மகிமையைக் கொண்டுவந்து நிறுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறார். இயேசு தன்னைப் பற்றி பேசிய, ஆனால் மற்றவர்கள் பயன்படுத்தாத வார்த்தைகளை யோவான் எங்கிருந்து பெற்றுக்கொண்டார்? பெந்தகொஸ்தே நாளுக்குப் பிறகு பரிசுத்த ஆவியானவரே அவற்றை அவருக்கு நினைப்பூட்டினார். ஏனெனில் இயேசுவின் உயிர்த்தெழுதல் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வருகை ஆகியவற்றிற்கு முன்பாக இயேசு கூறிய காரியங்கள் சிலவற்றை சீடர்கள் புரிந்துகொள்ளவில்லை என்று யோவானே சில இடங்களில் அறிக்கை செய்துள்ளார். இந்த வகையில் இயேசு நான் இருக்கிறேன் என்று சொல்லிய சொற்றொடரிலிருந்த உட்பொருளை அவர் பின்னாட்களில் அறிந்துகொண்டார். இவைதான் இந்த தனித்துவமாக நற்செய்தியின் தனிப்பட்ட தன்மைகள்.
ஒன்றுக்கொன்று எதிரிடையாயிருந்த வார்த்தைகளையும் இயேசு பேசினார் என்று யோவான் குறிப்பிடுகிறார். ஒளியும் இருளும், ஆவியும் சரீரமும், சத்தியமும் பொய்யும், வாழ்வும் மரணமும் மற்றும் மேலானவைகள் கீழானவைகள் போன்றவையே அவை. இந்த வகையான எதிரிடை வார்த்தைகளை நாம் மற்ற நற்செய்திகளில் காண்பது அரிது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் கர்த்தர் சொன்ன வார்த்தைகளை பலவருடங்களுக்குப் பிறகு கிரேக்கக் கலாச்சாரத்தின் தாக்கத்தில் வாழ்ந்துகொண்டிருந்த யோவானுக்கு நினைப்பூட்டினார். இயேசு செமத்திய எபிரெய வழியில் மட்டும் பேசவில்லை என்றும் அவர் மற்ற இனங்களுக்காக கிரேக்க மொழிநடையையும் பயன்படுத்தினார் என்றும் பரிசுத்த ஆவியானவர் அவருக்குத் தெளிவுபடுத்தினார்.
நற்செய்தியின் நோக்கம் என்ன?
யோவான் இலக்கிய தத்துவ ரீதியாகவோ அல்லது கற்பனைக்குரிய ஆன்மீக நிலையிலோ இயேசுவை முன்வைக்க விரும்பவில்லை. ஆனால் மற்றவர்களைக் காட்டிலும் இயேசுவின் மனுவுருவாதல், சிலுவையில் தொங்கும்போது அவருக்கிருந்த பெலவீனம் மற்றும் தாகம் போன்ற காரியங்களில் அதிக கவனம் செலுத்தினார். மேலும் இயேசு யூதர்களுடைய மீட்பர் மட்டுமல்ல, முழு உலகத்தின் மீட்பர் என்பதையும் யோவான் தெளிவுபடுத்தி, அவர் உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்றார். இறைவன் முழு உலகத்தையும் எவ்வாறு அன்புசெய்கிறார் என்பதைக் காட்டுகிறார்.
இவை இயேசு கிறிஸ்துவே இறைமகன் என்ற நற்செய்தியின் இதயத்தை அல்லது கருவை அடைவதற்கான ஒரு வழிமுறையும் ஆதாரங்களுமாக இருக்கின்றது. அவருடைய நித்தியத்துவம் அவருடைய உலக வாழ்விலும், அவருடைய தெய்வீகம் அவருடைய மனிதத்துவத்திலும், அவருடைய அதிகாரம் அவரது பெலவீனத்திலும் வெளிப்பட்டது. இவ்வாறு இயேசுவின் மூலமாக இறைவன் மனித குலத்தின் நடுவில் தோன்றினார்.
இயேசுவை தத்துவ ரீதியாகவோ அல்லது கற்பனை ரீதியாகவோ அறிவதற்கு அல்ல, ஒரு அர்ப்பணமுள்ள விசுவாசத்தின் அடிப்படையில் கர்த்தரை பரிசுத்த ஆவியின் மூலமாக அறியும்படியான விளக்கங்களையே யோவான் முன்வைக்கிறார். இயேசு தேவனுடைய குமாரன் என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது (20:31) என்ற பிரபலமான வார்த்தைகளோடு யோவான் தன்னுடைய நற்செய்தியை முடிக்கிறார். இயேசுவின் தெய்வத்துவத்தின் மீது வைக்கப்பட வேண்டிய உயிருள்ள விசுவாசமே யோவான் நற்செய்தியின் நோக்கமாகும். இந்த விசுவாசம் நம்மில் தெய்வீக, பரிசுத்த, முடிவற்ற வாழ்வை உண்டுபண்ணும்.
யோவானுடைய நற்செய்தி யாருக்கு எழுதப்பட்டது?
கிறிஸ்துவைப் பற்றிய சத்தியப் பிரகடனங்கள் நிறைந்த இந்த நூல், அவிசுவாசிகளுக்கு நற்செய்தியறிவிக்கும்படியாக எழுதப்படாமல், திருச்சபையைக் கட்டியெழுப்பி, பரிசுத்த ஆவிக்குள் அவர்களை முதிர்வடையச் செய்வதற்காக எழுதப்பட்டது. ரோமாபுரியில் பவுல் சிறைப்படுவதற்கு முன்பாகவே அனதோலியாவில் பல்வேறு திருச்சபைகளை ஸ்தாபித்திருந்தார். கைவிடப்பட்ட திருச்சபைகளுக்கு பேதுரு சென்று அவர்களை உற்சாகப்படுத்தினார். பேதுருவும் பவுலும் மரித்தபோது (நீரோ பேரரசனுடைய காலத்தில் இது நிகழ்ந்திருக்க வேண்டும்), அவர்களுடைய பணியைத் தொடரும்படி யோவான் அந்நாட்களிலிருந்த கிறிஸ்தவர்களுடைய மையமாகிய எபேசுவுக்குச் சென்று அங்கு வாழ்ந்தார். அவர் மத்திய ஆசியாவிலிருந்த பல்வேறு திருச்சபைகளை ஆயராக இருந்து கண்காணித்து வந்தார். அவருடைய கடிதங்களையும், வெளிப்படுத்திய விசேஷத்தின் இரண்டாம் மூன்றாம் அதிகாரங்களையும் வாசிக்கும் எவரும் இந்த அப்போஸ்தலனுடைய உள்ளக்கிடக்கைகளையும் நோக்கங்களையும் புரிந்துகொள்வர். இந்த அப்போஸ்தலன் இயேசு கிறிஸ்துவில் மனுவுருவான இறைவனின் அன்பை நமக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறார். தத்துவத்தைப் போதித்த சில விசுவாசிகள், மந்தைக்குள்ளே ஓநாய்களைப் போல புகுந்து, வீணான சிந்தனைகள், கடுமையான விதிமுறைகள் மற்றும் அசுத்தமான சுதந்திரம் ஆகியவற்றினால் மந்தையைக் கெடுத்துவிட்டார்கள். ஏனெனில் அவர்கள் சத்தியத்தை வீணான சிந்தனைகளுடன் கலந்து போதித்தார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு எதிராக அப்போஸ்தலன் போராடினார்.
யோவான் ஸ்நானகனுடைய சீடர்கள் சிலரும் அனதோலியாவில் வாழ்ந்தார்கள். அவர்கள் இயேசுவைக் காட்டிலும் மனந்திரும்புதலுக்கு அழைத்தவனாகிய யோவான் ஸ்நானகனையே அதிகம் கனப்படுத்தினார்கள். அவர்கள் மேசியா இன்னும் வரவில்லை என்று கருதி அவருக்காகக் காத்திருந்தார்கள். இயேசுவை குறித்து விளக்கும்போது அந்நாட்களில் காணப்பட்ட கிறிஸ்துவுக்கெதிரான போதனைகள் அனைத்தையும் யோவான் கண்டித்தார். இந்த எதிர்க்கும் ஆவிகளுக்கு விரோதமாக அவர் தன்னுடைய குரலை உயர்த்தியபோது, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராக நமக்குள்ளே வாசம்பண்ணின அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது என்று சாட்சிபகர்ந்தார்.
இந்த நற்செய்தி நூலைப் பெற்றுக்கொண்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் புறவினத்து மக்களாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் யூதர்களுடைய வாழ்க்கை முறைகள் பற்றி காணப்படும் குறிப்புகள் யூத வாசகர்களுக்கு அவசியமானவையாக இருந்திருக்காது. மேலும், மற்ற நற்செய்தியாளர்களைப்போல யோவான் அந்நாட்களில் அராமிக் மொழியில் எழுதப்பட்டிருந்த இயேசுவின் வார்த்தைகளை கிரேக்கத்தில் மொழிபெயர்த்துப் பயன்படுத்தவில்லை. மாறாக அவர் அவருடைய திருச்சபை அறிந்திருந்த கிரேக்கச் சொற்றொடர்களை எடுத்து, அவற்றை நற்செய்தியின் ஆவியினால் நிறைத்து, இயேசுவின் வார்த்தைகளுக்குச் சாட்சியிட, தூய்மையான கிரேக்கத்தை, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின்கீழ் தாராளமாகப் பயன்படுத்தினார். இவ்வாறு அவருடைய நற்செய்தி எளிமையாகவும் ஆழமாகவும் எல்லா கலைத்திறமைகளுக்கும் மேலாக சிறந்த சொல்வன்மையுடன் காணப்படுகிறது. ஆகவே சிறுவர்கள் கூட நற்செய்தியின் நிலையான பொருளைப் புரிந்துகொள்வதற்காக, பரிசுத்த ஆவியானவர் சத்தியத்தின் அரும்பொருளை இந்த நற்செய்தியில் எளிமையாகக் கொடுத்துள்ளார்.
இந்த தனித்தன்மை வாய்ந்த நற்செய்தி எப்போது எழுதப்பட்டது?
பல வருடங்களுக்கு முன்பாக கிழக்கத்திய தொல்லியல் ஆய்வாளர்கள் கி.பி 100ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு நாணற்புற்தாள் கையெழுத்துப்படி ஒன்றைக் கண்டுபிடிக்க அவர்களை வழிநடத்திய கர்த்தராகிய இயேசுவுக்கு நாம் நன்றி சொல்லுத்துவோமாக. அத்தாளில் யோவான் நற்செய்தி நூலின் சில சொற்றொடர்கள் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. இந்தக் கண்டுபிடிப்புடன் நீண்ட விவாதம் முடிவுக்கு வந்ததுடன் விஷத்தன்மை வாய்ந்த விமரிசனமும் காணாமல் போனது. அந்த தொல்லியல் ஆய்வு, யோவானுடைய நற்செய்தி, மத்திய ஆசியாவில் மட்டுமல்ல, வட ஆப்பிரிக்காவிலும் கி.பி. 100ம் ஆண்டுகளில் அறியப்பட்டிருந்தது என்பதை நிரூபித்து விட்டது. அது ரோமாபுரியிலும் அறியப்பட்டிருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த உண்மை பரிசுத்த ஆவியில் நிறைந்தவராக இந்த நற்செய்தியை எழுதினவர் அப்போஸ்தலனாகிய யோவான்தான் என்ற நம்முடைய விசுவாசத்தை உறுதிசெய்வதாயுள்ளது.
இந்த நற்செய்தியின் உள்ளடக்கம் என்ன?
பரிசுத்த ஆவியின் அகத்தூண்டுதலினால் எழுதப்பட்ட வேதாகமத்தை ஒழுங்குமுறைப்படுத்துவது மனிதருக்கு இலகுவானதல்ல. அதிலும் யோவானுடைய நற்செய்தி நூலை தனிப்பட்ட பகுதிகளாகப் பிரிப்பது கடினமானது. இருப்பினும் கீழ்க்காணும் பொருட்சுருக்கத்தை நாம் முன்வைக்கிறோம்:
1. தெய்வீக ஒளியின் பிரகாசம் (1:1 - 4:54)
2. ஒளி இருளில் பிரகாசிக்கிறது, இருளோ அதைப் பற்றிக்கொள்ளவில்லை (5:1 - 11:54)
3. அப்போஸ்தலர்களுடைய வட்டாரத்தில் ஒளி பிரகாசிக்கிறது (11:55 - 17:26)
4. ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (18:1 - 21:25)
நற்செய்தியாளர் தன்னுடைய சிந்தனைகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட வலையங்கள் போல ஒழுங்குபடுத்தியுள்ளார். ஆவிக்குரிய சங்கிலியில் வரும் இவ்வலையங்கள் ஒவ்வொன்றும் ஒன்று அல்லது இரண்டு கருத்துக்கள் அல்லது வார்த்தைகளினால் சூழப்பட்டுள்ளது. இந்த வலையங்கள் முற்றிலும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்திருப்பதில்லை. ஆனால் சிலவேளைகளில் அவற்றின் பொருள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வருவதுண்டு.
யோவானுடைய செமித்திய எபிரெய சிந்தனை, அதன் ஆழமான ஆவிக்குரிய தரிசனத்தோடு, கிரேக்க மொழியின் உயிரோட்டத்தோடு இரண்டறக் கலக்கும்போது, ஒரு தனிச்சிறப்பான மகிமையின் ஒருமை வெளிப்படுகிறது. இன்றுவரை இந்த நற்செய்தியின் சொற்றொடர்களை பரிசுத்த ஆவியானவர் தெளிவுபடுத்திக்கொண்டுதான் இருக்கிறார். நமக்கு இந்த நற்செய்தி அறிவுக்கும் ஞானத்திற்குமான முடிவற்ற ஆதாரமாக மாறியிருக்கிறது. யாரெல்லாம் இந்த நூலை ஆழ்ந்து படிக்கிறார்களோ அவர்கள் இறைமகனுக்கு முன்பாக விழுந்து வணங்கி, நன்றியோடும், துதியோடும், நிரந்தர விடுதலையோடும் அவருக்குத் தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுப்பார்கள்.