யோவான் 1 விளக்கவுரை

1. இறைவனுடைய வார்த்தை இயேசுவில் மனுவுருவாதல் (யோவான் 1:1-5)


யோவான் 1:1
1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
மனிதன் வார்த்தைகள் மூலம் தன்னுடைய சிந்தனைகளையும் உள்நோக்கங்களையும் தெரிவிக்கிறான். உங்களுடைய வார்த்தைகளே உங்களுடைய ஆளத்துவத்தின் சாரமாகவும் உங்களுடைய ஆவியின் வெளிப்பாடாகவும் காணப்படுகின்றன.
ஒரு உயர்ந்த பொருளில் இறைவனுடைய வார்த்தை அவருடைய தெய்வீக ஆளத்துவத்தையும் அவருடைய பரிசுத்த வார்த்தையிலுள்ள அனைத்து வல்லமைகளையும் தெரிவிக்கிறது. ஏனென்றால் ஆதியிலே இறைவன் தன்னுடைய வல்லமையுள்ள வார்த்தையின் மூலமாகவே உலகத்தைப் படைத்தார். அவர் உண்டாகக்கடவது என்று சொன்னார், அது அப்படியே ஆயிற்று. அவருடைய வார்த்தைகளுக்கு இன்றுவரை வல்லமையிருக்கிறது. உங்கள் கரங்களில் இருக்கும் இந்த நற்செய்தி முழுவதும் இறைவனுடைய அதிகாரத்தினால் நிறைந்தது என்று நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? இது எந்த அணுகுண்டையும்விட வலுவானதாக செயல்பட்டு உங்களிலுள்ள தீமையை அழித்து உங்களில் நன்மையானதைக் கட்டியெழுப்புகிறது.
யோவானுடைய நற்செய்தியில் இடம்பெறும் வார்த்தை என்ற பதத்தின் உள்ளான இரகசியம் என்னவென்றால், கிரேக்க மொழியில் அதற்கு இரண்டு பொருள் இருக்கிறது. முதலாவது நம்முடைய வாயிலிருந்து நமது சத்தத்தைச் சுமந்துவரும் மூச்சுக்காற்று. இரண்டாவது ஆண்பாலில் வரும் ஆவிக்குரிய நபர். வார்த்தைத் தொடர்ந்து வரும் வினையின் பாலைப் பொறுத்து (ஆண்பாலா பெண்பாலா என்பதைப் பொறுத்து) இந்த இரண்டு பொருளும் அரபு மொழியில் தோன்றும். ஆங்கில மொழியில் அந்த வார்த்தை ஆண்பாலா அல்லது பாலற்றதா என்பது அதற்குப் பயன்படுத்தப்படும் பிரதிப் பெயர்ச்சொல்லைப் பொறுத்து பிரித்தறியப்படும். இவ்வாறு, ஆதியிலே வார்த்தை இருந்தது என்று நற்செய்தியாளன் சொல்லிவிட்டு, அவர் ஆதியிலே இருந்தார் என்று இரண்டாம் வசனத்தில் விளக்கப்படுத்தும்போது, கிறிஸ்துவின் ஆளத்துவத்தைக் குறித்த மறைபொருட்களில் ஒன்றை இது காண்பிக்கிறது. ஒரு மனிதனுடைய வாயிலிருந்து வார்த்தை வருவதுபோல, கிறிஸ்து பிதாவினிடத்திலிருந்து வருகிறார். கிறிஸ்து இறைவனுடைய வார்த்தையாகவும் அவரிடத்திலிருந்து வரும் ஆவியாகவும் இருக்கிறார் என்ற பயன்பாட்டை நாம் மற்ற சமயங்களிலும் காணலாம். கன்னி மரியாளிடத்தில் பிறந்தவராகிய அவரைத் தவிர வேறு எந்த மனிதனும் இந்த பரலோக குணாதிசயங்களைப் பெற்றுக்கொள்வதில்லை.
கிறிஸ்து பெத்தலகேமில் மனுவுருவானது அவருடைய இருப்பின் ஆரம்பமல்ல, ஏனெனில் அவர் அநாதி காலமாக உலகங்கள் உருவாவதற்கு முன்பாகவே பிதாவிலிருந்து புறப்பட்டவர். இவ்வாறு பிதா நித்தியராயிருப்பதுபோல, கிறிஸ்துவும் நித்தியமானவராயிருக்கிறார். இறைவனுடைய வார்த்தை எந்த வகையிலும் மாறாததைப் போல அவரும் மாறாதவராயிருக்கிறார்.
கிறிஸ்துவுக்கும் அவருடைய பிதாவுக்கும் உள்ள அடிப்படை உறவை யோவான் நமக்குக் காண்பிக்கிறார். ஒரு மனிதனுடைய வார்த்தை அவனுடைய உதடுகளை விட்டு வெளியேறியவுடனே காற்றிலே கரைந்து விடுவதைப் போல, கிறிஸ்து பிதாவிலிருந்து பிரிந்து போய்விடுவதில்லை. கிறிஸ்து இறைவனோடிருந்து அவருக்குள் நிலைத்திருக்கிறார். தேவனோடு என்ற கூற்றுக்கு எபிரெய மொழியில் இறைவனை நோக்கிச் செல்லுதல், இறைவனுக்குள் செல்லுதல் என்று பொருள். இவ்வாறு கிறிஸ்து எப்போதுமே இறைவனை நோக்கியே இயங்கினார். பரிசுத்த ஆவியினால் பிறந்த எவருக்குமே இவ்விதமாகவே இயங்குவார்கள். ஏனெனில் அவரே அன்பின் ஆதாரமாக இருக்கிறார். இந்த அன்பு தனித்தியங்க ஒருநாளும் விரும்பாது. அது எப்போதும் அதன் ஆதாரத்தை நோக்கி இயங்கி அதற்குள்ளேயே செல்லும்.
இறைவன் தன்னுடைய வார்த்தையினால் அனைத்துப் படைப்புகளையும் ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்கியதுபோல அவர் கிறிஸ்துவை உருவாக்கவில்லை. குமாரன் தன்னில்தானே படைப்பாற்றலுள்ள வார்த்தையாகவும் பிதாவின் அதிகாரத்தைத் தன்னில் சுமந்தவராகவும் காணப்பட்டார். இந்த வசனத்தின் இறுதிப் பகுதியில் வார்த்தை இறைவனாகவே காணப்பட்டார் என்ற வித்தியாசமான, ஆனால் முடிவான சொற்றொடரைக் காண்கிறோம். இந்த வழியில் நற்செய்தியாளனாகிய யோவான் தன்னுடைய நற்செய்தியின் முதல் வசனத்தில் கிறிஸ்து கடவுளிடத்திலிருந்து வந்தவர் என்றும், ஒளியினிடத்திலிருந்து வந்த ஒளியென்றும், மெய்யான இறைவனிடத்திலிருந்து வந்த இறைவன் என்றும், பிறந்தவர் உருவாக்கப்பட்டவரல்ல என்றும், பிதாவுடன் தன்மையில் ஒன்றானவர் என்றும், நித்தியமான, வல்லமையுள்ள, பரிசுத்த, இரக்கமுள்ள கடவுள் என்றும் கூறுகிறார். கிறிஸ்துவை இறை வார்த்தை என்று அறிக்கையிடும் எவரும், அவருடைய தெய்வத்துவத்தைக் குறித்த இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்வர்.

யோவான் 1:2-4
2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. 4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
கிறிஸ்து தனக்காக வாழாமல் எப்போதும் இறைவனுக்காகவே வாழ்ந்தார். அவர் பிதாவிலிருந்து பிரிந்து வராமல், அவரை நோக்கி இயங்கிக் கொண்டிருந்தார், அவரில் வாழ்ந்தார், அவரில் நிலைத்திருந்தார். தன்னுடைய பிதாவை நோக்கிய கிறிஸ்துவின் இந்த இயக்கம் நற்செய்தியாளனாகிய யோவானுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்ததால், தன்னுடைய நற்செய்தியின் ஆரம்பத்தில் இந்தப் பொருள் வரும்படியான காரியங்களைத் திரும்பத்திரும்பக் கூறுகிறார். கிறிஸ்துவுக்கும் அவருடைய பிதாவுக்குமிடையிலிருந்த இந்த நிரந்தர ஐக்கியமே பரிசுத்த திரித்துவத்தின் இரகசியமாகும். ஒருவரிலிருந்து ஒருவர் பிரிந்திருக்கும் மூன்று தனித்தனி கடவுள்களை நாம் விசுவாசிப்பதில்லை. ஆனால் அன்பினால் நிறைந்த ஒரே இறைவனை நாம் விசுவாசிக்கிறோம். நித்திய இறைவன் ஒதுங்கி தனிமையில் வாழ்வதில்லை. அவருடைய குமாரன் எப்போதும் அவருடன் இருக்கிறார். அவருடன் பூரணமாக ஒத்திசைந்து வாழ்கிறார். ஒருவர் தன்னுடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்ட அனுபவத்தைப் பெறாவிட்டால், இறைவனுடைய அடிப்படைத் தன்மையைக் குறித்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியாது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியை ஒரே கடவுளாக ஐக்கியப்படுத்துவது தெய்வீக அன்புதான்.
ஆதியில் இறைவன் உலகத்தைப் படைத்தபோது, அதை அவர் தனிமையில் அமைதியாக செய்யவில்லை. மாறாக அவர் தன்னுடைய வார்த்தையின் மூலமாகவே உருவாக்கினார். கிறிஸ்துவே இறைவனுடைய வார்த்தையாக இருப்பதால், உலகம் அவர் மூலமாகத்தான் அதை உருவானது. இதற்கு கிறிஸ்து இரட்சகரும், பரிந்துபேசுபவரும், மீட்பரும் மட்டுமல்ல சிருஷ்டிகரும் அவரே என்று பொருள். அவர் படைக்காத எதுவும் இருக்க முடியாது என்பதால் அவர் சர்வ வல்லவர். அவர் செய்யாத எதுவும் நடைபெறாது என்பதால் அவரே அனைத்தையும் கட்டுப்படுத்துபவர். கிறிஸ்து யார் என்பதை உணர்ந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் போதிய அளவு பெரிய இருதயத்தை கடவுள் நமக்குக் கொடுக்க வேண்டும். அனைத்து நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளும், அனைத்து ஆதார சக்திகளும், விண்மீன் கூட்டங்களும் கிறிஸ்துவின் வல்லமையையும் மகிமையையும் தாழ்மையுடன் வெளிப்படுத்துபவைகளேயன்றி வேறல்ல. உங்களுடைய குரல், உங்களுடைய கட்டுடல், உங்களுடைய உடலமைப்பு, இதயத் துடிப்பு ஆகிய அனைத்தும் அவர் உங்களுக்கருளிய கொடைகளே. அப்படியானால் நீங்கள் எப்போது அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்?
இறைவனையும் அவருடைய வார்த்தையையும் அவருடைய ஆவியையும் தவிர அனைத்துப் பொருட்களும் படைக்கப்பட்டவை. அவர் தன்னில் உயிருள்ளவராகவும், நித்தியராகவும், பரிசுத்தராகவும் காணப்படுகிறார். இறைவன் தன்னில் ஜீவனுள்ளவராயிருப்பது போலவே, கிறிஸ்துவும் உண்மையான வாழ்வின் ஆதாரமாகவும், உயிர்ப்பிக்கும் உண்மையுள்ளவராகவும், நம்முடைய பாவம், குற்றம் ஆகிய மரணத்திலிருந்து நம்மை உயிர்ப்பித்து, நம்மில் நித்திய வாழ்வை நிலைநிறுத்துகிறவராகவும் காணப்படுகிறார். கிறிஸ்துவில் உள்ள இந்த தெய்வீக ஜீவன் மரணத்தை மேற்கொண்டது; அவர் தன்னுடைய தெய்வீக உயிரின் வல்லமையினாலே கல்லறையை விட்டு வெளியேறினார். கிறிஸ்து சிருஷ்டிகர் மட்டுமல்ல, தன்னில்தான் ஜீவனின் ஆதாரமாகவும் காணப்படுகிறார். பரிசுத்தராயிருக்கிறார் என்ற நிலையில் அவர் ஒருபோதும் மரிப்பதில்லை. இறைவனிலோ அல்லது அவருடைய குமாரனிலோ எந்தப் பாவமும் காணப்படாது, அதனால் அவர் எப்போதும் உயிரோடிருக்கிறார். கிறிஸ்துவின் ஜீவனைக் குறித்த சிந்தனைகளை யோவானுடைய நற்செய்தியின் அதிகாரங்களில் நாம் திரும்பத்திரும்பக் காண்கிறோம். அவருடைய அடிப்படையான கொள்கைகளில் இந்த ஜீவனும் ஒன்று.
சூரியனுடைய ஒளி பூமிக்கு உயிரைக் கொடுக்கிறது. கிறிஸ்துவைப் பொறுத்தவரை இதற்கு எதிரிடையாக காணப்படுகிறது: வெளிச்சத்திற்குக் காரணமே கிறிஸ்துவின் ஜீவன்தான். அவர் மூலமாக நாம் அனுபவிக்கும் உயிர்மீட்சி நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது. நம்முடைய சமயம் மரணத்தையும் நியாயத்தீர்ப்பையும் உண்டுபண்ணும் நியாயப்பிரமாணத்திற்குரியதல்ல, அது ஜீவன், ஒளி, நம்பிக்கை ஆகியவற்றின் செய்தி. மரணத்திலிருந்து கிறிஸ்து உயிர்தெழுந்ததன் மூலம் அனைத்து அவநம்பிக்கையும் நீங்கிவிட்டது. பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம்செய்வதனால் நாம் இறைவனுடைய ஜீவனில் பங்குடையவர்களாக மாற்றப்பட்டுள்ளோம்.
பாவத்தினால் உலகம் இருளடைந்திருக்கிறது, ஆனால் கிறிஸ்து ஒளியில் அன்பாயிருக்கிறார். எந்தவித இருளோ, தவறோ, தீமையோ அவரிலில்லை. இதனால் கிறிஸ்து முழு மகிமையுடன் காணப்படுகிறார். அவர் ஒளியைக் காட்டிலும் அதிகமாகப் பிரகாசிக்கிறார். இருப்பினும் நற்செய்தியாளனாகிய யோவான் அவருடைய மகிமையின் பிரகாசத்தைக் கூறி ஆரம்பிக்காமல், அவருடைய பலத்தையும் ஜீவனையும் குறிப்பிடுகிறார். ஏனெனில் கிறிஸ்துவின் பரிசுத்தத்தைக் குறித்த அறிவு, நம்முடைய பாவங்களை நமக்கு வெளிப்படுத்தி, நம்மை நியாயந்தீர்த்து, நம்மை அழித்துவிடும். ஆனால் அவருடைய ஜீவனை நாம் உணர்ந்துகொள்வது நமக்கு வாழ்வைக் கொடுக்கும். கிறிஸ்துவைத் தியானித்தல் உண்மையில் நம்மை ஆறுதல்படுத்தி நமக்குப் புத்துணர்வூட்டும்.
இயேசுவே மனிதர்களுக்கு ஒளியானவர். அவர் தனக்காக ஒளிவீசி, தன்னுடைய சொந்தப் பெயரை கனப்படுத்துவதில்லை. மாறாக அவர் நமக்காக ஒளிவீசுகிறார். நம்மிலிருந்து ஒளிவீசுவதில்லை, இருள்தாள் புறப்பட்டுவரும். மனுக்குலமனைத்தும் தீமையுள்ளதாயிருக்கிறது. ஆனால் நாம் கிறிஸ்துவை அறிந்துகொண்டு நம்முடைய இருளை உணரும்படி கிறிஸ்து நமக்கு ஒளியூட்டுகிறார். அவருடைய நற்செய்தியின் மூலம் நாம் மரணத்திலிருந்து எழுந்து நித்திய வாழ்வுக்குள் நுழைகிறோம். நம்முடைய நம்பிக்கையற்ற நிலையை விட்டுவிட்டு அவரிடம் வரும்படி அவருடைய வாழ்வின் ஒளியின் மூலமாக நம்மைக் கவர்ந்து அழைக்கிறார். நாம் தீர்மானத்தோடும் நம்பிக்கையோடும் அவரிடத்தில் சேர்கிறோம்.

யோவான் 1:5
5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
இறைவனோடிருப்பதெல்லாம் முற்றிலும் வெளிச்சமாகவும் தூய்மையாகவும் காணப்படும். அவருடைய செல்வாக்குள்ள இடத்தில் எதுவும் இருளாக இருக்காது. எல்லாம் தெளிவாகவும், நேர்மையாகவும், உண்மையாகவும் பரிசுத்தமாகவுமே இருக்கும். பரிசுத்த ஆவியானவர் தூய்மையானவர். கர்த்தருடைய வெளிச்சம் கடுமையாகப் பிரகாசிக்காமல் மென்மையாகப் பிரகாசிக்கும். அது ஆறுதலளித்து குணப்படுத்தும்.
கிறிஸ்துவின் ஒளிக்கதிர் பரலோகத்திற்கு மட்டும் உட்பட்டதல்ல. அது இருளை ஊடுருவிச் சென்று மீட்பை உண்டாக்க வல்லது. கிறிஸ்து இன்று எல்லா இருளின் நடுவிலும் ஒளி வீசுகிறார் என்பது அவருடைய கிருபை. தொலைந்து போனவர்களை அவர் கைவிட்டு விடாமல், அவர்களை விடுவித்து அவர்களுக்கு ஒளியூட்டுகிறார். ஒளியின் உலகத்திற்கு எதிராக இருக்கும் இருளின் உலகம் என்று ஒன்றிருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இருள் எவ்வாறு வந்தது என்ற முழுமையான விவரம் நமக்குத் தெரியாது. நற்செய்தியாளனாகிய யோவான் இந்த மறைபொருளை நமக்கு வெளிப்படுத்தவில்லை. ஒளியை நாம் அறிய வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் இருளை நாம் ஆழமாகப் பார்ப்பதை அவர் விரும்பவில்லை. அனைத்து மனிதர்களும் படைப்புகளும் இருளுக்குள் விழுந்துபோனது, முழு உலகமும் பொல்லாங்கானுடைய செல்வாக்குக்குட்பட்டுவிட்டது. ஒருவேளை நீங்கள்: கிறிஸ்து இறைவனோடு இசைந்ததாகவும் நன்மையானதாகவும் அண்டத்தைப் படைத்திருந்தால், இருள் அதற்குள் எவ்வாறு நுழைய முடியும் என்று கேட்கலாம். இறைவன் தன்னுடைய மகிமையில் சாயலில் நம்மைப் படைத்திருந்தால் இன்று நாம் அந்த மகிமைக்கு ஏற்றவர்களாயிராததெப்படி என்றும் கேட்கலாம்.
சாத்தான் கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல் அவருடைய ஒளியை அழிக்க முயற்சித்தான் என்று சாத்தானுடைய பெயரை யோவான் குறிப்பிடுகிறதில்லை. சாத்தான் எப்பொழுதும் கிறிஸ்துவுக்கு எதிரானவன். எனவே அவனுக்குக் கொடுக்கப்பட்ட ஒளியை அவன் இழந்துபோனான். அவன் பெருமையுள்ளவனாகி இறைவனின்றி மேன்மையை அடைய நாடினான். அவரை மேற்கொள்ள அவருக்கு மேலாக தன்னை உயர்த்த விரும்பினான். அதன்பிறகுதான் அவன் இருளின் அதிபதியானான்.
அன்புச் சகோதரனே, உங்களுடைய வாழ்வின் நோக்கம் என்ன? நீங்கள் இறைவனை விட்டுவிட்டு, மேன்மையையும், புகழையும், சுய திருப்தியையும் நாடுகிறீர்களா? அப்படியானால் இருளில் இருக்கும் பொல்லாங்கானைப் போன்றவர்களோடு நீங்களும் சேர்ந்துகொள்ளுகிறீர்கள். தெருக்களில் உங்களைத் தாண்டிச் செல்லும் மக்களுடைய முகங்களைப் பாருங்கள். அவர்களுடைய கண்களில் இருளையா அல்லது ஒளியையா, எதைப் பார்க்கிறீர்கள்? அவர்களுடைய இருதயம் இறைவனின் மகிழ்ச்சியை பிரதிபலிக்கிறதா? சாத்தானுடைய சோகத்தைப் பிரதிபலிக்கிறதா?
இறைவனுடைய பரிசுத்த வெளிச்சம் பொல்லாங்கனை நியாயம் தீர்ப்பதால் அவன் இறைவனை வெறுக்கிறான். ஒளி அவனுடைய கொடூரத்தை வெளிக்கொண்டு வருவதை அவன் விரும்புவதில்லை. அதனால் அவன் ஒளிந்துகொள்கிறான், தன்னை மறைத்துக்கொள்கிறான். கிறிஸ்துவையும் அவரது ஒளியைப் பின்பற்றுபவர்களையும் மேற்கொள்ள முயற்சிக்கிறான். இந்தத் துரோகி கர்த்தருடைய வெளிச்சத்தைத் தாங்க முடியாமல் அதை வெறுக்கிறான். வெளிச்சத்தைப் பார்க்கக்கூடாது என்பதற்காகவே அவன் தன்னுடைய முகத்தை மறைத்துக்கொள்கிறான். கிறிஸ்துவின் சூரியன் இலட்சக் கணக்கான மக்களுடைய பாவ இருளில் ஒளிரும்போது அவர்கள் அதைப் பார்க்காமல் இருப்பதுதான் பயங்கரமானது. சூரியன் என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். அதை நாம் விளக்கப்படுத்தத் தேவையில்லை. சூரியன் தானாகவே ஒளியூட்டுகிறது, தெளிவாயிருக்கிறது, கதிர்வீசுகிறது. அதுதான் வாழ்வின் ஆதாரம் என்று ஒவ்வொரு சிறு பிள்ளையும் அறியும்.
ஆனால் எண்ணற்ற மக்கள் கிறிஸ்துவின் மகிமையையும் வல்லமையையும் காண்பதில்லை. ஏனெனில் அவர்கள் அதைப் புரிந்துகொள்ள விரும்புவதில்லை. வஞ்சனையான கருத்துக்கள் அவர்களுடைய கண்களை திரைபோட்டு மறைத்து விடுகிறது. ஆகவே அவர்கள் கிறிஸ்துவின் தெய்வீகத்தைக் குறித்த மெய்யான செய்தியை புறக்கணிக்கிறார்கள். உண்மையில் அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிய விரும்பவில்லை. அவர்கள் ஒளியினிடத்தில் வர விரும்பாமல், இருளிலேயே இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் தங்களை மறுதலிப்பதுமில்லை, தங்கள் பாவங்களை அறிக்கை செய்வதுமில்லை. கிறிஸ்துவினுடைய வெளிச்சத்தின் கிருபைக்கு அவர்கள் குருடர்களாகவே நிலைத்திருக்கிறார்கள். இருள் ஒளிக்கெதிராகப் போட்டியிடுகிறது, ஆனால் ஒளி அன்பினால் அதை மேற்கொள்ளுகிறது. ஆகவே நீங்கள் யார்? கர்த்தரிடத்திலிருந்து வரும் ஒளியா அல்லது பொல்லாங்கனிடத்திலிருந்து வரும் இருளா?

யோவான் 1:6-8
6 தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான். 7 அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான். 8 அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.
தெய்வீக வெளிச்சத்திற்குள் வரும்படி மக்களை அழைக்க இறைவன் யோவான் ஸ்நானகனை இருண்ட உலகத்திற்குள் அனுப்பினார். இருளில்தான் பல பாவங்கள் செய்யப்படுகின்றது என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் யாரெல்லாம் தங்களுடைய குற்றத்தை, மனந்திரும்பிய, உடைந்த இதயத்தோடு அறிக்கை செய்கிறார்களோ அவர்கள் ஒளியினிடத்திற்கு வந்திருக்கிறார்கள். நீங்கள் எப்படி? நீங்கள் ஒளியினிடத்தில் வந்திருக்கிறீர்களா? அல்லது இன்னும் இருளில் ஒளித்துக்கொண்டிருக்கிறீர்களா?
அடையாளமாக யோர்தான் நீரோட்டத்தின் அந்த ஞானஸ்நானம் மக்களுடைய இருதயத்தின் நிலையை யோவான் ஸ்நானகன் மக்களுக்கு விளக்கப்படுத்தினார். கடவுளுடைய சட்டத்தைப் பொறுத்தவரை அவர்கள் அனைவரும் தீயவராயிருக்கிறார்கள். அவர்கள் கர்த்தருடைய நாளில் அழியாமல் இருக்கும்படியாக அவர்களுக்கு மனந்திரும்புதலும் ஒரு அடிப்படையான மாற்றமும் தேவையாயிருக்கிறது. யோவான் ஸ்நானகனுடைய அழைப்பு பெருந்திரளான மக்களை அசைத்தது. வனாந்தரத்தில் வந்து தங்களை மனந்திரும்பும்படி அழைத்தவரிடத்தில் அவர்கள் விரைந்தோடினார்கள். அவர்கள் தங்கள் பாவங்களை வெளிப்படையாக அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்படுவதற்கும், தங்களுடைய சுயநலம் மூழ்கிப்போவதற்கும் அடையாளமாகக் காணப்பட்டது.
யோவான் ஸ்நானகனைத் தெரிந்துகொண்டார். அவர் யோவானுக்கு அறிவூட்டி, மக்கள் தங்களை உணர்ந்து, மாற்றிக்கொண்டு, கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படும்படி மக்களை அசைக்கும்படியான கட்டளையைக் கொடுத்தார். கர்த்தருடைய நாமத்தினால் வருகிறவரைப் பற்றி பழைய ஏற்பாட்டு மக்களுக்கு அதிகம் தெரியும். இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்கள் மேல் வெளிச்சம் பிரகாசித்தது (ஏசாயா 9:2) என்று தீர்க்கதரிசியாகிய ஏசாயா அவரைப் பற்றிச் சொன்னார். மேலும் அவர், எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் வந்தது (ஏசாயா 60:1) என்று கர்த்தருடைய நாமத்தில் சொன்னார். இருளிலிருந்து ஒளியினிடத்திற்கு வருவது பழைய ஏற்பாட்டு மக்களுக்கு மட்டுமுரியதல்ல, எல்லா மக்களுக்குமுரியது என்று ஸ்நானகன் சொன்னார். இவ்வாறு ஸ்நானகனுடைய செய்தி முழு உலகத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது. அதனால் சின்ன ஆசியாவிலும் மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள எல்லாப் பகுதிகளிலிருந்தும் பலர் அவருடைய மரணத்திற்குப் பிறகு பல வருடங்களாக அவரைப் பின்பற்றினர்.
தான் ஒளியல்ல என்றும் அந்த ஒளியைக் குறித்து முன்னறிவிப்பவர் என்றும் அவர் கூறிய போதிலும் ஆயிரக்கணக்கானவர்கள் அவரைப் பின்பற்றினர். அவர் மக்களை தன்னிடம் வழி நடத்தாமல், கிறிஸ்துவிடம் வழிநடத்தினார். இது இறைவனுடைய உண்மைத் தூதுவர்களின் தெளிவான அடையாளம் ஆகும், அவர்கள் தங்களைச் சுற்றி மக்களைக் கட்டியமைக்காமல், கிறிஸ்துவைச் சுற்றிக் கட்டியமைப்பார்கள்.
யோவானுடைய சேவையின் நோக்கம் மனிந்திரும்புதலும் ஞானஸ்நானமுமல்ல, கிறிஸ்துவின் மீது மக்கள் வைக்கும் விசுவாசம். அவர் தன்னைக் கிறிஸ்து என்று அறிவிப்பார் என்ற மக்களின் எதிர்பார்ப்பை அவர் அறிந்திருந்தார். ஆனால் அவர் அந்தச் சோதனையில் விழுந்துவிடாமல் கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தினார். வரப்போகிற கிறிஸ்துவே மக்களுக்குப் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பவர் என்று அவர் அறிந்திருந்தார். பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றாலும் வெறும் உளவியல் ரீதியான மனந்திரும்புதல் மனிதர்களுக்கு போதுமானதல்ல என்றும் யோவான் அறிந்திருந்தார். மாறாக நம்முடைய உள்ளான மனிதனில் ஒரு முழுமையான மாற்றம் நிகழ வேண்டும் என்றும் அவர் அறிந்திருந்தார். இவ்வாறு மனிதர்களை மாற்றும் அதிகாரம் எந்தப் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளுக்கும் கொடுக்கப்படாததைப் போலவே யோவான் ஸ்நானகனுக்கும் கொடுக்கப்படவில்லை. இந்த சிறப்புரிமை படைப்பின் செயலைச் செய்யும் ஆதி வெளிச்சத்திற்கே கொடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் நாமத்தை விசுவாசித்து, அவருடைய வெளிச்சத்திற்கு திறந்துகொடுக்கும் மக்களை உயிர்ப்பிக்கும் இந்த அதிகாரம் வாழ்வழிக்கும் வார்த்தையாகிய அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வழியில், விசுவாசம் மட்டுமே புதிய காலத்திற்குள் மக்களை நடத்திச்செல்லும் என்று அறிந்து யோவான் ஸ்நானகன் பெருந்திரளான மக்களை கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்திற்கு வழிநடத்தினார்.
பின்பற்றிய தீவிரமான மற்றும் கருத்தாழமுள்ள தத்துவஞானியாக இருந்தான். புதிய உடன்படிக்கையின் வெளிச்சத்தை மெய்யாக அனுபவிக்காமலேயே கிறிஸ்துவுக்காக அவன் சிறப்பாகப் பிரசங்கித்தான். அவன் தன்னை கிறிஸ்துவிடம் ஒப்படைத்தபோது, வெளிச்சம் அவனுடைய மனதில் நுழைந்தது, அவன் கர்த்தருக்குள் வெளிச்சமாகி, இருளில் கலங்கரை விளக்கமானான். அவன் பலருக்கு வெளிச்சத்தைக் கொடுத்தான் (அப். 18:2428).

யோவான் 1:9-10
9 உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. 10 அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.
கிறிஸ்துவே உலகத்திலுள்ள மெய்யான ஒளியாவார். பரிசுத்த ஆவியானவர் தீர்க்தரிசிகள் மூலமாக அவருடைய வருகையைப் பற்றி பலவருடங்களுக்கு முன்பாகவே முன்னுரைத்திருந்தார். பழைய ஏற்பாட்டு நூல்கள் அனைத்தும் அவர் நம்முடைய உலகத்திற்கு வருவதைக் குறித்த விவரங்களால் நிரம்பியுள்ளன. இதோ, இருள் பூமியையும், காரிருள் வானங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும் (ஏசாயா 60:2) என்று இதைப் பற்றி ஏசாயா குறிப்பிடுகிறார்.
நம்முடைய தியானப் பகுதியில் உலகம் என்ற வார்த்தை நான்கு முறை திரும்பத்திரும்பக் கூறப்பட்டுள்ளது. நற்செய்தியாளனாகிய யோவானுக்கு உலகம் என்ற வார்த்தை கிட்டத்தட்ட இருள் என்ற பொருளைத் தருவதாயிருந்தது. ஏனெனில், உலகம் முழுவதும் பொல்லாங்கானுக்குள் கிடக்கிறது என்று அறிந்திருக்கிறோம் (1 யோவான் 5:19) என்று அவர் எழுதுகிறார்.
இறைவன் உலகத்தை நல்லதாகப் படைத்தபடியால் அது ஆரம்பத்தில் தீமையானதாகக் காணப்படவில்லை. அவர் அண்டத்தை தன்னுடைய அழகினாலும் நன்மையினாலும் நிரப்பியிருந்தார். அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது (ஆதி. 1:31). இறைவன் மனிதனைத் தன்னுடைய சாயலில் படைத்து, கண்ணாடியைப் போல சிருஷ்டிகரைக் பிரதிபலிக்கும் மனுக்குலத்தின் பெற்றோருக்கு தன்னுடைய மகிமையைக் கொடுத்தார்.
ஆனால் பெருமையின் காரணமாக அனைவரும் தீமையானவர்களாகவும் கலகக்காரர்களாகவும் மாறிப்போனார்கள். அவர்கள் தங்களை இருளின் ஆவிக்குத் திறந்துகொடுத்தபடியால், தங்கள் இருதயத்தில் இறைவனுடன் இருந்த ஐக்கியத்தை விட்டுவிட்டார்கள். இறைவனைவிட்டு தங்களை விலக்கிக்கொள்பவர்கள் தங்களைத் தீயவர்களாக்கிக்கொள்கிறார்கள். இதைத்தான் தாவீது, தேவன் இல்லையென்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்கிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை (சங். 14:1) என்று சொல்லுகிறார். ஆனால், எவ்வாறு சூரியன் மெதுவாக எழுந்து வரும்போது, தனக்கு முன்னுள்ள வெளிச்சத்தைத் துரத்துகிறதோ, அதேபோல கிறிஸ்து இந்த தீய உலகத்திற்குள் வருகிறார் என்று நற்செய்தியாளனாகிய யோவான் சாட்சி பகர்கிறார். குருடாக்கும் மின்னலைப் போல கிறிஸ்துவின் ஒளி இந்த உலகத்தில் நுழைவதில்லை. அது மெதுவாக உலகத்திற்குள் வந்து எல்லா மக்களுக்கும் ஒளிகொடுக்கிறது. அதாவது கர்த்தர் இவ்வுலகத்திற்கு நியாயாதிபதியாக அல்லது தண்டனையை நிறைவேற்றுபவராக வரவில்லை. அவர் இரட்சகராகவும் மீட்பராகவும் வந்தார். எல்லா மக்களும் கிறிஸ்துவின் ஒளியைப் பெற வேண்டும். இந்த ஒளியின்றி அவர்கள் இருளில் நிலைத்திருப்பார்கள். கிறிஸ்து மட்டுமே மெய்யாக ஒளிகொடுப்பவர்; இதைச் செய்யத்தக்கவர் வேறு யாருமில்லை. யாரெல்லாம் இந்த ஒளியைப் பெற்றிருக்கிறார்களோ அவர்களுடைய குணாதிசயம் மாற்றப்பட்டு, நல்லவர்களாகி மற்றவர்களுக்கு ஒளிகொடுப்பார்கள்.
சிருஷ்டிகர் இந்த உலகத்திற்கு வந்தார் என்ற கூற்றின் பொருள் உங்களுக்குப் புரிகிறதா? சொந்தக்காரர் தனக்குச் சொந்தமானதற்கு வந்தார், அரசன் தன்னுடைய மக்களிடம் நெருங்கி வந்தார். யார் விழித்திருந்து அவருடைய வருகைக்கு ஆயத்தம் செய்வார்கள்? அவருடைய வருகையையும், அவருடைய நோக்கங்களையும், தன்மையையும் ஆய்வு செய்பவர்கள் யார்? யார் வீணானதும் உலகத்திற்குரியதுமான நோக்கங்களை விட்டுவிட்டு, வருகிற இறைவனை அணுகி, அவரை வரவேற்பார்? இறைவன் வரும் இந்த புரட்சிகரமான, சிறப்பான நேரத்தை உணர்பவர்கள் யார்?
இவ்வாறு கர்த்தர் திடீரென பாவிகள் நடுவில் காணப்பட்டார்; அவர் எளிமையாக, அமைதியாக மற்றவர்களால் கவனிக்கப்படாமல் வந்தார். அவர் தன்னுடைய மேன்மை, வல்லமை மற்றும் மகிமையினால் இவ்வுலகத்திற்கு ஒளிகொடுக்க நினைக்காமல், அவர் தம்முடைய தாழ்மையையும், அன்பையும், சத்தியத்தையும் வெளிப்படுத்தினார். படைப்பின் தொடக்கத்திலிருந்தே மனிதனுடைய வீழ்ச்சிக்குப் பெருமைதான் காரணமாயிருந்தது. ஆகவே சர்வ வல்லவர் தன்னை தாழ்மையானவராக முன்வைத்தார். சாத்தான்கூட கடவுளைவிட தன்னை பெலமுள்ளவனாகவும், மகிமையுள்ளவனாகவும், அறிவுள்ளவனாகவும் காட்டிக்கொள்ள விரும்புகிறான். ஆனால் கிறிஸ்து பெலவீனமான குழந்தையாக தாழ்மையான மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார். இவ்வாறு மனுக்குலமனைத்துக்கும் விடுதலையைக் கொண்டுவரும்படி அவர் தன்னுடைய தாழ்மை, மென்மை, மற்றும் கீழ்ப்படிதல் மூலமாக எவ்வளவாக தன்னைத் தாழ்த முடியுமோ அவ்வளவாகத் தன்னைத் தாழ்த்தினார்.
அனைத்து மக்களும் கவனியுங்கள்! இந்த நற்செய்திக்குப் பிறகு ஒரு பயங்கரமான செய்தியை வாசிக்கிறோம். உலகம் அந்த ஒளியை அறிந்துகொள்ளவுமில்லை உணரவுமில்லை. இறைமகன் அவர்களுக்கு அருகில் வந்து அவர்கள் நடுவில் காணப்பட்டார் என்பதை உலகம் அறியவில்லை. மக்கள் தத்துவ ஞானங்கள், அறிவியல்கள் மற்றும் உலகத் திறமைகள் ஆகியவற்றைப் பெற்றிருந்தும் குருடர்களாகவே காணப்பட்டார்கள். இறைவனே தங்களுக்கு முன் நிற்கிறார் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை, அவர்கள் தங்கள் சிருஷ்டிகரை அறியவில்லை, தங்கள் இரட்சகரை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த வேதனையான உண்மையிலிருந்து, இறைவனுடைய இராஜ்யத்திற்கான ஒரு முக்கியமான கொள்கையை நாம் கண்டுகொள்ளலாம். அதாவது நாம் நம்முடைய மூளையறிவினால் அல்லது மனித திறமைகளினால் மட்டும் இறைவனை புரிந்துகொள்ள முடியாது. கிறிஸ்துவின் அன்பைக் குறித்த எல்லா அறிவும் மெய்யான கிருபையாகவும் இறைவனிடமிருந்து வரும் கொடையாகவுமே காணப்படுகிறது. ஏனெனில் பரிசுத்த ஆவியானவரே நம்மை நற்செய்தியினால் அழைப்பவரும், அவருடைய வரங்களினால் நமக்கு ஒளிகொடுப்பவரும், நம்மை உண்மையான விசுவாசத்தில் காப்பவருமாக இருக்கிறார். ஆகவே, நாம் மனந்திரும்பி நம்முடைய சொந்த அறிவை நம்பாமலும், நம்முடைய ஆத்துமாவின் உணர்வுகளைச் சாராமலும் இருக்க வேண்டும். ஒரு பூ சூரியனுடைய வெளிச்சத்திற்கு தன்னை எப்படித் திறந்துகொடுக்கிறதோ அப்படியே நாமனைவரும் மெய்யான வெளிச்சத்திற்கு நம்மைத் திறந்துகொடுக்க வேண்டும். இந்த வழியில் கிறிஸ்துவிலுள்ள விசுவாசம் மெய்யான அறிவை உருவாக்கும். விசுவாசத்தின் தொடக்கம் நம்மிலிருந்து வருவதல்ல, அவருக்குக் கீழ்ப்படிபவர்களில் கர்த்தருடைய ஆவியானவருடைய செயலாகக் காணப்படுகிறது.

யோவான் 1:11-13
11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். 13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
பழைய ஏற்பாட்டு மக்கள் இறைவனுக்குரியவர்களாகக் காணப்பட்டார்கள். ஏனெனில் பாவிகளாகிய அவர்களைப் பரிசுத்தப்படுத்தி உடன்படிக்கையின் மூலமாக அவர் அவர்களைத் தன்னுடன் இணைத்திருந்தார். பல நூறு வருடங்களாக அவர் அவர்களை வழிநடத்தினார். அவர்களுடைய இருதயங்களை நியாயப்பிரமாணம் என்னும் கலப்பையினால் உழுது நற்செய்தி என்னும் விதைக்காக அவர்களை ஆயத்தப்படுத்தியிருந்தார். இந்த வகையில் ஆபிரகாமுடைய சந்ததியின் வரலாறு கிறிஸ்துவின் வருகையை நோக்கி இயங்கிக்கொண்டிருந்தது. அவருடைய தோற்றமே பழைய ஏற்பாட்டின் நோக்கமாகவும் பொருளாகவும் காணப்பட்டது.
கர்த்தராகிய இயேசுவை வரவேற்கும்படி தெரிந்துகொள்ளப்பட்ட மக்களே அவரைப் புறக்கணித்துவிட்டார்கள் என்பதும் அவர்கள் அந்த ஒளியைப் பெற்றுக்கொள்ளவில்லை என்பதும் விசித்திரமான உண்மைகள். அவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு கீழாக நியாயத்தீர்பை நோக்கி ஓடும் இருளின் வாழ்க்கை விரும்பித் தெரிந்துகொண்டார்கள். ஆகவே அவர்கள் கிருபையை முற்றிலும் இழந்து கிறிஸ்துவிலுள்ள இரட்சிப்பைக் காட்டிலும் தங்களுடைய சொந்த நற்செயல்களை அதிகம் நேசித்தார்கள். அவர்கள் மனந்திரும்பாமல், சத்தியத்தின் ஆவிக்கு எதிராக தங்களைக் கடினப்படுத்தினார்கள்.
பழைய ஏற்பாட்டு மக்கள் மட்டுல்ல, முழு மனுக்குலமும் கடவுளுடைய சொத்துதான். ஏனெனில் அவரே கற்களையும், தாவரங்களையும், மிருகங்களையும், முழு மனுக்குலத்தையும் படைத்தவர். இந்தக் காரணத்தினால் பழைய ஏற்பாட்டு மக்களுக்கிருக்கும் அதே பொறுப்பை எல்லா மக்களும் பெற்றிருக்கிறார்கள். நம்முடைய இரட்சகரும் நமக்குச் சொந்தக்காரருமானவர் நம்முடைய இருதயத்தில் நுழைய விரும்புகிறார், யார் அவரை வரவேற்பார்? நீங்கள் இறைவனுக்குச் சொந்தமானவர்கள். நீங்கள் உங்களைக் கர்த்தருடைய விருப்பத்திற்கு விட்டுக் கொடுத்திருக்கிறீர்களா? இன்று பெரும்பாலான மக்கள் இனம் கிறிஸ்துவின் வெளிச்சத்திற்குத் தங்களைத் திறந்துகொடுக்க விருப்பமற்றிருப்பது அவலத்திற்குரியது. அவர்களுடைய இருதயத்தின் கடினத்தை மேற்கொள்ளும் அவருடைய ஒளிக்கதிர்கள் அவர்களுக்குத் தேவையில்லை. இந்த வழியில் இன்று மறுபடியும் அவர்கள் இறைமகனைப் புறக்கணிக்கிறார்கள்.
ஆபிரகாமுடைய சந்ததியோ அல்லது மனித குலத்தில் வரும் யாராக இருந்தாலும் கிறிஸ்துவுக்குத் தங்கள் இருதயத்தைத் திறந்து, அந்த வல்லமையுள்ள இரட்சகரின் கரத்தில் தங்களை ஒப்புக்கொடுத்தால், அந்த நபர் மாபெரும் அற்புதத்தை அனுபவிப்பார். பரலோகத்தின் ஒளி அவரை தெய்வீக ஒளியினால் நிரப்பும், அவருடைய இருதயத்தில் இருக்கும் இருளை அது மேற்கொள்ளும். மேலும் இறைவனுடைய வல்லமை அவருக்குள் வந்து அவருடைய உள்ளான மனிதனைப் புதுப்பிக்கும். கிறிஸ்து உங்களைப் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, இறைவனுடைய பிள்ளைகளுக்குரிய விடுதலைக்குள் உங்களைக் கொண்டுவருவார். நீங்கள் கிறிஸ்துவை நேசித்தால், பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வந்து, உங்களுடைய வாழ்வில் அவருடைய விடுதலையின் செயலைத் தொடங்குவார்.
நற்செய்தியாளனாகிய யோவான், நாங்கள் இறைவனுடைய பிள்ளைகள் ஆவோம் என்றோ, இறைவனுடைய பிள்ளைகள் ஆகியிருக்கிறோம் என்றோ சொல்லவில்லை. நாம் இறைவனுடைய பிள்ளைகள் ஆகிறோம் என்று நிகழ்காலத்தில் கூறுகிறார். அதாவது நாம் அவிக்குரிய வாழ்வில் வளருகிறோம் என்று சொல்லுகிறார். இந்த வார்த்தைகளில் நாம் இரண்டு காரியங்களைக் காண்கிறோம். ஒன்று நாம் புதிய வாழ்க்கைக்குள் நுழைகிறோம். இன்னொன்று நம்முடைய ஆவிக்குரிய வாழ்வின் பூரணத்துவத்தை நோக்கிய வளர்ச்சியின் செயல்பாடு ஒன்று அங்கு ஆரம்பமாகிறது. கர்த்தருடைய வல்லமை நம்மைப் புதிய சிருஷ்டிகளாகப் படைத்திருக்கிறது. இதே வல்லமை நம்மைப் பரிசுத்தப்படுத்தி பூரணப்படுத்தும். இறைவன் நம்மைத் தத்தெடுப்பதினால் மட்டும் நாம் அவருடைய பிள்ளைகளாகாமல் ஆவிக்குரிய பிறப்பினாலும் நாம் அவருடைய பிள்ளைகளாகிறோம். கிறிஸ்துவின் ஆவியானவர் நமக்குள் இறங்குகிறார் என்றால் அதற்கு நாம் கர்த்தருடைய அதிகாரத்தினால் நிரப்படுகிறோம் என்று பொருள். விசுவாசிகளுக்குள் இந்த தெய்வீக அதிகாரம் ஊற்றப்படுவது, இந்த உலகத்திலோ அல்லது உலகத்தின் முடிவிலோ எந்த சக்தியினாலும் அவர்கள் முழுமையான தெய்வீக குணாதிசயங்களைப் பெற்றுக்கொள்வதைத் தடைசெய்ய முடியாது என்பதைக் காட்டுகிறது. விசுவாசத்தைத் தொடக்குகிறவரும் முடிப்பவரும் கிறிஸ்துவே. இவ்வுலகின் பிள்ளைகளையும் இறைவனுடைய பிள்ளைகளையும் நாம் ஒப்பிட முடியாது. நம்முடைய பெற்றோர் தங்களுடைய விருப்பத்தின்படியும் திட்டத்தின்படியும் நம்மைப் பெற்றெடுத்தனர். ஒருவேளை அவர்கள் விண்ணப்பம்பண்ணி, தூய ஆவியானவரின் வழிகாட்டலுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்திருக்கலாம். ஆனால் நம்முடைய பெற்றோரிடத்திலிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் ஆன்மீக, உளவியல் மற்றும் உடலியல் காரியங்கள் எதற்கும் இறைவனிடத்திலிருந்து வரும் புதிய பிறப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏனெனில் ஆவிக்குரிய புதுப்பித்தல் என்பது தொடக்கத்திலிருந்தே பரிசுத்தமானதாகவும், எந்தவொரு கிறிஸ்தவனையும் நேரடியாகப் பிறப்பிக்கிற இறைவனிடத்திலிருந்து வருவதாகவும் இருக்கிறது. ஏனெனில் அவரே நம்முடைய ஆவிக்குரிய தகப்பன்.
எந்தக் குழந்தையும் தன்னைத் தானே பிறப்பித்துக்கொள்ள முடியாது. அதேபோல நம்முடைய ஆவிக்குரிய பிறப்பும் முற்றிலும் இறைவனுடைய கிருபையே. கிறிஸ்து தன்னுடைய நற்செய்தியின் விதைகளை நம்முடைய இருதயங்களில் விதைக்கிறார். யாரெல்லாம் இந்த விதைகளை நேசிக்கிறார்களோ, அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு, அதை வைத்துக்கொள்கிறார்கள். அவர்களில் இறைவனுடைய நித்திய வாழ்வு வளர்ச்சியடையும். யாரெல்லாம் இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு அதைக் கைக்கொள்கிறார்களோ அவர்கள் பாக்கியவான்கள்.
கிறிஸ்தவ குடும்பத்தில் பிறப்பதோ, கிறிஸ்தவர்களோடு இணைந்திருப்பதோ ஒருவனைக் கிறிஸ்தவனாக்காது, கிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசம் வைப்பதே ஒருவனைக் கிறிஸ்தவனாக்கும். இந்த விசுவாசத்தின் பொருள் அவருக்கு நெருக்கமாக வருவது, அவருடைய குணாதிசயங்களுக்குள் மூழ்கிவிடுவது, அவருடைய சாந்தகுணத்தைக் கற்றுக்கொள்வது மற்றும் அவருடைய வல்லமையில் தங்கியிருப்பதில் வளருவது. அவர் நம்மை விடுவித்து அவருடைய சாயலாக நம்மை மறுரூபப்படுத்துகிறார் என்பதை நம்பி, நம்மை அவருடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கும்போது இந்த வளர்ச்சி நடைபெறுகிறது. விசுவாசம் என்பது அவருக்கும் நமக்கும் இடையிலான உள்ளபூர்வமான உறவாகவும் ஒரு நித்திய உடன்படிக்கையாகவும் உள்ளது. இந்த ஆவிக்குரிய வளர்ச்சி விசுவாசத்தின் மூலமாகவே அன்றி நமக்குள் நடைபெறாது. மறுபடியும் பிறப்பது விசுவாசத்தைவிட பெரியதோ கடினமானதோ அல்ல. அதேபோல விசுவாசம் மறுபிறப்பைவிட இலகுவானதோ குறைவானதோ அல்ல. அவையிரண்டும் ஒன்றுதான்.
வருவதற்கு முன்பாக நற்செய்தியாளனாகிய யோவான் இயேசுவின் பெயரைச் சொல்லவில்லை. இதற்குப் பதிலாக அவருடைய ஆளத்துவத்தை பல இனங்களைச் சேர்ந்த விசுவாசிகளுக்கு அவர்கள் புரியக்கூடிய மொழிநடையில் விளக்கப்படுத்தினார். இந்த நற்செய்தியாளன் தன்னுடைய திருச்சபைக்கு முன்வைக்கும் கிறிஸ்துவின் ஆறு தன்மைகளின் பொருள் உங்களுக்குப் புரிகிறதா? இந்த குணாதிசயங்களின் வல்லமைக்கு உங்கள் இருதயத்தை திறந்து அவற்றின் முன் நீங்கள் பணிந்துகொள்கிறீர்களா? அப்பொழுது நீங்கள் மெய்யாகவே இறைவனுடைய பிள்ளையாவீர்கள்!

யோவான் 1:14
14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
இயேசு கிறிஸ்து யார்? அவர் மெய்யான கடவுளாகவும் மெய்யான இறைவனாகவும் இருக்கிறார். இந்த மாபெரும் இரகசியமே தன்னுடைய நற்செய்தியின் அடிப்படை நோக்கம் என்று நற்செய்தியாளனாகிய யோவான் காட்டுகிறார். அவர் இறைவனுடைய வார்த்தையின் மனுவுருவாதலைப் பற்றிப் பேசும்போது, தன்னுடைய செய்தியின் அடித்தளத்தை அவர் நமக்குக் காட்டுகிறார். இதற்குப் பின் வருகின்ற செய்திகள் அனைத்துக்குமே இந்தப் 14ம் வசனம்தான் திறவுகோலாகும். நீங்கள் இந்த ஆவிக்குரிய முத்தின் முழுமையான பொருளைப் புரிந்துகொண்டுவிட்டால், இனிவரும் அதிகாரங்களைக் குறித்த அறிவின் ஆழத்தை அடைவீர்கள்.
கிறிஸ்துவின் மனுவுருவாதல் நம்முடைய ஆவிக்குரிய புதுப்பித்தலிலிருந்து அடிப்படையில் வேறுபடுகிறது. நாம் அனைவரும் ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் பிறந்தவர்களாகவும் ஒரு சரீரத்தை உடையவர்களாகவும் இருக்கிறோம். அதன்பிறகு நற்செய்தியின் வார்த்தை நம்மை வந்தடைந்து, நம்மில் நித்திய வாழ்வை உண்டுபண்ணியது. ஆனால் கிறிஸ்துவோ உலகத்திலுள்ள ஒரு தகப்பனால் பிறக்கவில்லை. இறைவனுடைய வார்த்தை தேவ தூதன் மூலமாக மரியாளுக்கு வந்தது. அவன், பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும் (லூக்கா 1:35) என்றான். இந்த அற்புதமான செய்தியை அந்தக் கன்னிகை விசுவாசத்தினால் ஏற்றுக்கொண்டபோது, பரிசுத்த ஆவியும் மனித இரத்தமும் சேர்ந்த தனிச்சிறப்பு வாய்ந்த கருவை மரியாள் தன்னுடைய கர்ப்பத்தில் உருவாகி இருக்கக் கண்டார். இவ்வாறுதான் இறைவன் மனிதனானார். இந்த மெய்ம்மைக்கு முன்பாக நம்முடைய சிந்தனை நின்றுபோய்விடுகிறது. இந்த இரகசியத்தை உயிரியல் தெளிவுபடுத்த முடியாது. மனித அனுபவம் இதைப் புரிந்துகொள்ள முடியாது. விஞ்ஞான பூர்வமான சிந்தனையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சில இறையியளாலர்கள், இயேசுவின் பிறப்பிலுள்ள புரிந்துகொள்ள முடியாத தன்மையை குறைத்துக் காட்ட, அவருக்கு உடலைப் போன்ற தோற்றம்தான் இருந்தது என்றும் வேதனையையும் வலியையும் உணரக்கூடிய உண்மையான சரீரம் இருக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். ஆயினும் கிறிஸ்து ஒரே வேளையில் முழுவதும் மனிதனாகவும் முழுவதும் தெய்வமாகவும் காணப்பட்டார் என்று அறிக்கையிடுகிறோம்.
இந்த அற்புதமான பிறப்பிற்கு மனுவுருவாதலே இருப்பதில் சிறப்பான விளக்கமாக இருக்கிறது. நித்தியமான இறை மைந்தன், காலங்களுக்கு முன்பாகவே பிதாவினிடத்திலிருந்து தோன்றியவர், பாவமில்லாமல் நம்முடைய சரீரத் தன்மையில் பங்கெடுத்தார். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் பாவத்தை நோக்கிய எல்லா உள்ளுணர்வுகளையும் அவரில் மேற்கொண்டார். இவ்வாறு இவ்வுலகில் வாழ்ந்த மனிதர்களிலேயே குற்றமில்லாதவரும், மாசற்றவரும், தூய்மையுள்ளவருமாக வாழ்ந்த ஒரே மனிதன் இயேசு மட்டுமே.
கலக குணமுள்ளவர்களும், இரக்கமற்றவர்களும், தீமையானவர்களும், மரணத்திற்குரியவர்களுமாகிய மனிதர்களுடன் இறைமகன் தன்னை இணைத்துக்கொண்டார். ஆயினும் அவர் நித்தியமானவர், தன்னுடைய தெய்வத்துவத்தினால் மரிக்கக்கூடாதவர். அவர் உயர்ந்தவராக காணப்பட்டும், தம்முடைய ஆதி மகிமையை விட்டு, நம் நடுவில் இறங்கி வந்து தாழ்மையில் வாழ்ந்தார். அவர் நம்மைப் போன்ற ஒருவராகி நம்முடைய சூழ்நிலைகள் அனைத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்ளக்கூடியவரானார். அவர் பாடுபட்டதினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். இவ்வாறு அவர் நமக்காக பரிதபிக்கிறவரானார். தீமை நிறைந்தவர்களாகிய நம்மை அவர் புறக்கணிக்கவில்லை. நம்மை இறைவனிடம் கொண்டு செல்லும்படியாக மனிதர்களாகிய நம்மிடம் அவர் வந்தார்.
கிறிஸ்துவின் சரீரம் பழைய ஏற்பாட்டில் இறைவன் மக்களைச் சந்தித்த ஆசரிப்புக்கூடாரத்திற்கு ஒத்ததாயிருக்கிறது. இறைவன் தன்னுடைய எல்லா தன்மைகளுடனும், கிறிஸ்துவில், மனித வடிவில் வெளிப்பட்டார். கிரேக்க மொழியின்படி அவர் நம்மத்தியில் கூடாரம் போட்டார் என்றிருக்கிறது. அதாவது அவர் நம்முடன் என்றும் இவ்வுலகில் வாழும்படி ஒரு அரண்மனையைக் கட்டவில்லை; ஆனால் நாடோடிகள் கூடாரத்தில் தற்காலிகமாக வாழ்வதைப்போல அவர் வாழ்ந்தார் என்று பொருள். அதேபோல கிறிஸ்துவும் பரலோகத்திற்குப் போவதற்கு முன்பாக நம்மத்தியில் சில காலம் வாழ்ந்தார்.
அப்போஸ்தலர்கள் எல்லாருமே ஒன்றாகச் சேர்ந்து அவர்கள் கிறிஸ்துவின் மகிமையைக் கண்டதாக சாட்சியிடுகிறார்கள். அவர்களுடைய சாட்சி சந்தோஷமும் மகிழ்ச்சியுமானதாக காணப்படுகிறது. அவர்கள் இறைமகன் மனித உடலில் வாழ்ந்ததற்கு கண்கண்ட சாட்சிகள். இயேசுவின் அன்பையும், பொறுமையையும், தாழ்மையையும், பற்றுறுதியையும், தெய்வீகத்தையும் காணும்படி அவர்களுடைய விசுவாசம் அவர்களுடைய கண்களைத் திறந்தது. அவருடைய தூய்மையில் அவர்கள் இறைவனையே கண்டார்கள். அவருடைய மகிமை என்ற பதம் பழைய ஏற்பாட்டில் அனைத்து தெய்வீகக் குணாதிசயங்களையும் குறிக்கும் ஒன்றாகும். அப்போஸ்தலனாகிய யோவான் தன்னுடைய சாட்சியில் இந்த அனைத்துக் குணாதிசயங்களையும் தைரியமாக முன்வைத்துள்ளார். அவருடைய மேன்மையையும் அழகையும் மட்டுமல்ல, அவருடைய மறைவான மகத்துவத்தையும் அவர் உணர்ந்துள்ளார்.
பரிசுத்த ஆவியானவரால் தூண்டப்பட்டவராக அவர் இறைவனைப் பிதா என்றும் இயேசுவைக் குமாரன் என்றும் அழைத்தார். இந்த வார்த்தைகளை நாம் விட்டுவிட்டுச் செல்ல முடியாது. பரிசுத்த ஆவியின் அகத்தூண்டுதல் இறைவனுடைய நாமத்தை மறைத்திருக்கும் திரையை விலக்குகிறது. நித்திய பரிசுத்தரும், வல்லமையுள்ள சிருஷ்டிகருமான பிதாவையும், பரிசுத்தமும் மகிமையும், நிலையான அன்பும் நிறைந்தவருமாகிய குமாரனையும் பற்றி நமக்கு நிச்சயத்தை அது தருகிறது. இறைவன் தன்னுடைய வல்லமையினாலே மக்களை அழித்துப் பழி தீர்க்கும் ஒருவர் அல்ல. அவர் இரக்கமுள்ளவரும், மென்மையானவரும், பொறுமையானவருமாக இருப்பதைப் போலவே அவருடைய மகனும் இருக்கிறார். நாம் பிதாவையும் குமாரனையும் புரிந்துகொள்வதன் மூலமாக புதிய ஏற்பாட்டின் கருப்பொருளைப் புரிந்தகொள்ளுகிறோம். குமாரனைக் காண்கிறவன் பிதாவைக் காண்கிறான். இந்த வெளிப்பாடு மற்ற மதங்களிலுள்ள கடவுளின் சாயலை மாற்றியமைக்கிறது. அன்பின் யுகத்திற்கு நம்முடைய கண்களைத் திறந்துவிடுகிறது.
நீங்கள் இறைவனை அறிய வேண்டுமா? அப்படியானால் கிறிஸ்துவின் வாழ்க்கைப் படியுங்கள்! இயேசுவில் அவருடைய சீடர்கள் என்னத்தைக் கண்டார்கள்? அவர்கள் கடவுளின் அன்பு கிருபையோடும் சத்தியத்தோடும் கிறிஸ்துவில் இணைந்திருந்ததைப் பார்த்தார்கள். இந்த மூன்று அர்த்தங்களையும் சிந்தித்துக்கொண்டு விண்ணப்பியுங்கள், அப்பொழுது இறைவனுடைய மகிமையின் முழுமையும் கிறிஸ்துவில் இருப்பதை நீங்கள் உணருவீர்கள். சுகமாக்கும் கிருபையுடன் அவர் வருகிறார், அதற்கு நாம் அருகதையற்றவர்கள். நாம் அனைவருமே குற்றவாளிகள்; நம்மில் யாரும் நல்லவர்கள் அல்ல. நாம் கெட்டவர்களாயிருந்தாலும் அவருடைய வருகை நமக்கு கிருபையைப் பொழிந்தருளுகிறது. அவர் நம்மைத் தன்னுடைய சகோதரர் என்று அழைப்பதற்கு அவர் வெட்கப்படாமல், அவர் நம்மைக் கழுவி, சுத்திகரித்து, புதுப்பித்து, அவருடைய ஆவியினால் நம்மை நிரப்பியிருக்கிறார். இந்த இரட்சிப்பின் செயல்கள் எல்லாம் கிருபையின் மேல் கிருபையல்லவா? அதிலும் மேலாக நாம் ஒரு புதிய உரிமையைப் பெற்றிருக்கிறோம். ஏனெனில் கிறிஸ்து நம்மை அவருடைய கிருபையில் ஊன்றி, இறைவனுடைய பிள்ளைகளாகும் உரிமையை நமக்குக் கொடுத்திருக்கிறார். கிருபையின் செய்தி என்பது ஏமாற்று வேலையோ கற்பனையோ அல்ல; அது ஒரு புதிய உரிமை. இறைவன் தம்முடைய இரட்சிப்பில் நம்மைப் பூரணப்படுத்தும் அவருடைய செயலின் அத்தாட்சியே மனுவுருவாதல் ஆகும்.

யோவான் 1:15-16
15 யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான். 16 அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
ஸ்நானகன் பலத்த சத்தத்தோடு, எனக்குப் பின் வந்த கிறிஸ்து எனக்கு முன்னிருந்தவர் என்று எல்லா மனித வம்ச வரலாறுகளையும் மிஞ்சத்தக்க வகையில் அறிவித்தார். இவ்வாறு அறிவித்ததன் மூலம் கிறிஸ்துவின் நித்தியத்தை அவர் வலியுறுத்தினார். அவர் இடத்திற்கும் காலத்திற்கும் அழிவிற்கும் அப்பாற்பட்ட அழிவற்ற இறைவன் என்ற உண்மைக்கு சாட்சி பகர்ந்தார். வனாந்தரத்தில் ஸ்நானகன் மனிதர்களுடைய பாவத்தின் அளவைப் பார்த்து துயரப்பட்டார். பாவமன்னிப்பு ஏற்ற மனந்திரும்புதலை அவர்களுக்கு அவர் கற்பித்தார். அவர் இயேசுவைப் பார்த்தபோது தன்னுடைய இருதயத்திலே துள்ளிக் குதித்தார். ஏனென்றால் மரணம் அவர் மேற்கொள்ள முடியாத சத்தியத்தினால் நிறைந்த நித்திய மனிதனாகப் பிறந்திருந்தார். கிறிஸ்துவின் மனுவுருவாதல் அல்லது அவருடைய பிறப்பு மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. காரணம் அதன் மூலமாகவே இறைவனுடைய நித்திய வாழ்வு மனித உடலில் தோன்றியது. இதோடு மரணத்தின் மீதான ஜீவனின் வெற்றி ஆரம்பமானது. ஏனென்றால் மரணத்திற்குக் காரணமான பாவம் அவருக்குள் நீக்கப்பட்டிருந்தது. இந்தக் கிருபையின் ஆழத்தை உணர்ந்தவராக, ஸ்நானகன் கிறிஸ்துவில் இருந்த இறைவனின் நிறைவை உயர்த்தி மகிழ்கொண்டாடினார். தெய்வத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது என்று பவுல் அறிக்கை செய்தார். அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின் மேல் கிருபை பெற்றோம் என்ற உன்னத வார்த்தைகளில் யோவான் இந்த சத்தியங்களை ஒருங்கிணைத்துக் கூறுகிறார்.
கிறிஸ்துவின் நிறைவு என்பது என்ன? அவரிடமிருந்து நாம் எதைப் பெற்றுக்கொண்டோம்? இதுவரை நாம் பார்த்த 14 வசனங்களிலும் நாம் பார்த்த கிறிஸ்துவின் ஆளத்துவத்தைக் குறித்த யோவானுடைய விளக்கங்களை நீங்கள் நினைத்துப் பார்த்தால், அவருடைய ஆளத்துவத்தின் மேன்மையையும் அனுதினமும் நம்மை வந்தடையும் அவருடைய கிருபைப் பிரவாகத்தையும் நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்: மனிதர்களுடைய வாயிலிருந்து வார்த்தைகள் புறப்பட்டு வருவதைப்போல, கிறிஸ்து பிதாவின் வாயிலிருந்து புறப்பட்டுவரும் இறைவார்த்தையாக இருக்கிறார். அவர்தான் இறைவனுடைய உள்ளான இதயமாகவும், அவருடைய சித்தமாகவும், சாரமாகவும், மகிழ்ச்சியாகவும் காணப்படுகிறார். நற்செய்தியின் வார்த்தைகள் நம்மிடத்தில் வந்து, நம்முடைய சிந்தைக்குள் நுழைந்து, நம்முடைய சித்தங்களை மாற்றும்போது, கிறிஸ்துவும் நம்முடைய இருதயத்திற்குள் நுழைந்து அவருடைய மேன்மையின்படி நம்மை மாற்றுகிறார். இது உன்னதமான கிருபையில்லையா?
கிறிஸ்து இறைவனுடைய ஜீவன்; விஞ்ஞானிகள் வீடுகளையும், பாலங்களையும், பெரிய குண்டுகளையும் உருவாக்க முடியும், ஆனால் உயிரை உருவாக்க முடியாது. இறைவன் தங்களுக்குக் கொடுத்த உயிரை தங்கள் சந்ததிக்கு கொடுக்கும் பொறுப்பை பெற்றோர் பெற்றிருக்கிறார்கள். இது கிருபையில்லையா? இந்த உயிர் சீக்கிரத்தில் போய்விடும் என்பதால் கிறிஸ்து நித்திய ஜீவனாகிய தம்முடைய ஆவியானவரை விசுவாசிகளுக்குக் கொடுக்கிறார். எல்லா கிறிஸ்தவர்களும் இறைவனுடைய உயிரில் பங்குள்ளவர்களாக இருப்பதால் ஒருபோதும் மரிப்பதில்லை. இது கிருபையில்லையா?
கிறிஸ்துவே உலகின் ஒளியாயிருக்கிறார். அவரே இருளை வென்றவராகவும் காரிருளில் வெளிச்சத்தைப் படைப்பவராகவும் இருக்கிறார். இருளில் இருக்கும் உலகத்திற்கு அவர் நம்பிக்கையைக் கொடுக்கிறார், பெலவீனத்தில் முனகிக்கொண்டிருக்கும் உலகத்திற்குள் வல்லமையை அனுப்புகிறார். கிறிஸ்துவின் ஒளி தன்னுடைய பிரகாசத்தினால் உலகத்திலுள்ள கடுமையான இருளை விரட்டும் வல்லமை படைத்தது. மனிதர்கள் அவரை விசுவாசித்தால், அரசியலிலும் தொழிற்சாலைகளிலும், குடும்பங்களிலும் திருச்சபைகளிலும் உண்மையையும் நேர்மையையும் அவர் கொடுக்கிறார். இது கிருபையின் மேல் உண்டாகும் கிருபையில்லையா?
கிறிஸ்துதான் இவ்வுலகத்தின் சிருஷ்டிகர். அவரில் இறைவனுடைய வல்லமையின் முழுமையும் குடியிருக்கிறது. அவருடைய அற்புதங்கள் அவருடைய அதிகாரத்தைக் காட்டும் அடையாளங்களாக இருந்தன. அவருடைய ஜீவனுக்கு மரணத்தின் மீது அதிகாரம் இருக்கிறது என்பதையே அவருடைய உயிர்ததெழுதல் நிரூபிக்கிறது. அவருடைய உடலில் அவர் புவியீர்ப்பு சக்தியை தோற்கடித்து தண்ணீரின் மீது நடந்தார். ஐந்து அப்பங்களை அவர் பிட்டு ஐயாயிரம் பேர் திருப்தியாகும் வரை உணவளித்தார். உங்களுடைய தலையிலுள்ள மயிர்களின் எண்ணிக்கையையும் அவர் அறிவார். அவருடைய பராமரிக்கும் கிருபைக்கு நீங்கள் எப்போது அடிபணிவீர்கள்? இன்னும் நீங்கள் கிறிஸ்துவின் பரிபூரணத்தை அதிகமாக அறிய விரும்புகிறீர்களா? அவர்தான் இந்த உலகங்களுக்குச் சொந்தக்காரர். அனைத்து பொருட்களும், செல்வங்களும், உங்களுடைய வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும், உங்கள் முழுமையுமே அவருக்குத்தான் சொந்தம். அவர்தான் உங்களை உருவாக்கினார், உங்களைக் காப்பவரும் அவரே. கிறிஸ்துவே அனைத்துக்கும் சொந்தக்காரர். அவருக்காக காரியங்களை நிர்வகிக்கும்படி அவரே எல்லாவற்றையும் உங்கள் கரங்களில் கொடுத்திருக்கிறார். உங்களுடைய உடல்கட்டமைப்பு, உங்களுடைய சிந்தனைகள், உங்களுடைய பெற்றோர் அனைத்துமே கர்த்தரால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கொடைகள். அவருடைய கிருபைக்காக நீங்கள் எப்போது அவருக்கு நன்றி செலுத்தப் போகிறீர்கள்? மனுவுருவாதலையும் கிறிஸ்துவின் பிறப்பையும் குறித்த அற்புதமான காரியம் யாதெனில் தெய்வத்துவத்தின் பரிபூரணமெல்லாம் ஒரு குழந்தையில் மாம்சமானதே. இந்த அற்புதம் நிகழ்வதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஏசாயா பரிசுத்த ஆவியின் அகத்தூண்டுதலினால் தீர்க்கதரிசனமாக உரைத்திருக்கிறார்: நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேல் இருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்னப்படும் (ஏசாயா 9:6). மனிதன் படைக்கப்படும்போது இருந்த தூய சாயலை, கிறிஸ்துவில் இறைவன் மீட்டெடுத்திருக்கிறார் என்ற உண்மையை மனிதர்களுடைய மனம் புரிந்துகொள்ளுவதற்கு மந்தமாயுள்ளது என்பது மிகவும் துக்கமானது. இயேசுவே ஞானமும் மகிமையும் நிறைந்தவர், ஒளியூட்டும் ஆலோசகர், வல்லமையுள்ள நித்திய இறைவன். மாட்டுத்தொழுவத்தில் இருந்த குழந்தையில் இறைவனுடைய எல்லா குணாதிசயங்களும் வரங்களும் காணப்பட்டது. இயேசுவில் இறைவன் நம்மிடத்தில் வந்தார் என்ற அற்புதமான கிருபையை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? இப்போது இறைவன் நம்முடனிருக்கிறார் என்று சொல்ல முடியும்!
கிறிஸ்து தன்னுடைய நற்குணங்களைத் தன்னிலேயே வைத்திருக்க விரும்பவில்லை. அப்படியிருந்தால் அவர் பரலோகத்திலேயே இருந்திருப்பார். அவர் பரலோகத்தின் பாதையை நமக்குக் காண்பிக்கும்படியாக, பிதாவோடு நம்மைச் சேர்த்து, அவருடைய முழுமையினால் நம்மை நிறைக்கும்படியாக, அவர் இந்த உலகத்தில் வந்து, நம்முடைய சாயலை அணிந்துகொண்டு, நம்முடைய தாழ்வான சாயலை அவர் எடுத்துக்கொண்டார். இறைவனுடைய முழுமையைத் திருச்சபைக்குக் கொண்டுவருவதே அவருடைய நோக்கம் என்று இவ்வாறே பவுலும் சாட்சியிடுகிறார். எபேசியர் 1:23; 4:10 மற்றும் கொலோசெயர் 2:10 ஆகிய வசனங்களை வாசித்துப் பாருங்கள். அப்பொழுது நீங்கள் துதியின் நீரோட்டத்தினால் இழுத்துச் செல்லப்பட்டு, உங்களுடைய கர்த்தரின் கிருபையை மேன்மைப்படுத்துவீர்கள். நீங்கள் பரிதாபகரமாக உங்கள் பாவத்தில் வாழ வேண்டாம், கிறிஸ்துவின் நிறைவுக்காக உங்கள் இருதயங்களைத் திறவுங்கள். மாட்டுத்தொழுவத்தின் குழந்தையிடம் வாருங்கள், அப்பொழுது எண்ணற்ற ஆசீர்வாதங்கள் உங்களிடம் வந்து சேரும். உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு கிருபையின் ஊற்றாக அவர் உங்களை மாற்றுவார்.

3. வார்த்தை மாம்சமானதின் மூலமாக இறைவனுடைய முழுமையும் உலகத்தில் தோன்றியது (யோவான் 1:14-18)


யோவான் 1:17-18
17 எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. 18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங்கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையிலான வித்தியாசம் நியாயப்பிரமாணத்தினால் உண்டாகும் நீதிக்கும் கிருபையினால் உண்டாகும் நீதிக்கும் இடையிலான வித்தியாசம் என்று கூறலாம். பத்துக்கட்டளைகளையும், இரத்த பலிகளைக் குறித்த கட்டளைகளையும், வாழ்க்கையில் ஒழுங்கைக் கொண்டுவரும் கட்டளைகளையும் இறைவன் மோசேக்குக் கொடுத்தார். யாரெல்லாம் இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டார்களோ அவர்கள் வாழ்வை பலனாகப் பெற்றார்கள். ஆனால் அவற்றில் ஏதாவதொன்றையாகிலும் மீறியவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இவ்வாறு ஒரு மனிதனும் முழுமையானவனாக இல்லாத காரணத்தினால் நியாயப்பிரமாணம் மரணத்திற்கேதுவான நியாயத்தீர்ப்பாக இருந்தது. நியாயப்பிரமாணத்தின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாத காரணத்தினால் அதற்கு முன்பாக மிகவும் பக்தியுள்ளவர்கள்கூட மனந்திரும்பினவர்களாகவும் தங்கள் பாவத்துக்காக துக்கப்பட்டவர்களாகவும் உடைந்துபோய் காணப்பட்டார்கள். அரைகுறையானவர்கள் தங்களுடைய வாழ்க்கை இறைவனைப் பிரியப்படுத்துகிறது என்பதுபோல தங்களைப் பற்றி மேன்மையாக எண்ணிக்கொண்டார்கள். இது அவர்களை சுய மேன்மைக்கும் நியாயப்பிரமாண அடிப்படைவாதத்திற்கும் நடத்திச் சென்றது. அவர்கள் அன்பை மறந்து தங்களுடைய சுயநலச் செயல்களைப் பற்றி பெருமைபாராட்டினார்கள். நியாயப்பிரமாணம் தன்னில் தான் பரிசுத்தமாயிருக்கிறது, ஏனெனில் அது பரிசுத்தமுள்ள கடவுளைப் பிரதிபலிக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக ஒவ்வொரு மனிதனும் தீமையானவனாகக் காணப்படுகிறான். இந்த வகையில் நியாயப்பிரமாணம் நம்மை இழிவுக்கும் மரணத்திற்கும் நடத்திச் செல்லுகிறது.
இவ்வாறு மரணத்தினால் முழு மனுக்குலமும் நிறைந்து காணப்படுகிற சூழ்நிலையில் நற்செய்தியாளனாகிய யோவான் தன்னுடைய நற்செய்தியில் முதல் முறையாக இயேசு கிறிஸ்துவை இழிவிலிருந்து மீட்பவராகவும் இறைவனுடைய கோபத்திலிருந்து இரட்சிப்பவராகவும் முன்வைக்கிறார். நாசரேத்திலிருந்து வரும் மனிதனாகிய இயேசு பரிசுத்த ஆவியின் நிறைவினால் அபிஷேகிக்கப்பட்ட மேசியா ஆவார். அவரே இராஜாதி இராஜாவும், இறைவனுடைய வார்த்தையும் பிரதான ஆசாரியருமாயிருக்கிறார். அவரே நம்பிக்கைக்கும் இரட்சிப்புக்குமான அனைத்து சாத்தியக்கூறுகளின் தொகுப்பு.
கிறிஸ்து ஒரு புதிய சட்ட முறையைக் கொண்டுவராமல், நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து நம்மை மீட்டார். அவருடைய மேலான அன்பினால் நமக்காக நியாயப்பிரமாணத்தின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றினார். நம்முடைய பாவங்களையும் உலகத்திற்கெதிரான நியாயத்தீர்ப்பையும் அவர் தன்னுடைய தோள்களில் சுமந்து, நம்மை இவ்வாறு இறைவனுடன் ஒப்புரவாக்கினார். நம்முடைய பாவங்களினிமித்தமாக இறைவன் இனிமேல் நமக்கு எதிராக இருப்பதில்லை. ஆனால் நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாம் இறைவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். மனிதனாகிய இயேசு பரலோகத்திலிருக்கிற தமது பிதாவினிடத்திற்கு எழுந்தருளி, தம்முடைய பரிசுத்த ஆவியை நம்மீது பொழிந்திருக்கிறார். அவர் நியாயப்பிரமாணத்தை நம்முடைய இருதயங்களில் பதித்து, நம்முடைய உள்ளுணர்வுகளை தூய்மையும், உண்மையும், கனமுமுள்ள சிந்தனைகளினால் நிரப்பியிருக்கிறார். நாம் இனிமேல் நியாயப்பிரமாணத்தின்படி வாழ்வதில்லை, கிறிஸ்து நமக்குள் இருக்கிறார். இந்த வகையில் இறைவன் அவருடைய அன்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குரிய வல்லமையை நமக்குக் கொடுக்கிறார்.
கிறிஸ்துவினுடைய வருகையுடன் கிருபையின் காலம் ஆரம்பித்திருக்கிறது, நாம் அதில்தான் வாழ்கிறோம். நம்முடைய சுயநீதியை ஆதரிப்பதற்காக இறைவன் நம்மிடம் காணிக்கைகளையோ, பலிகளையோ கேட்பதில்லை, நமக்கு தெய்வீக நீதியைக் கொடுக்கும்படியாக அவர் தம்முடைய குமாரனையே அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் முழுமையாக நீதிமானாக்கப்படுகிறான். இதனிமித்தம் நாம் அவருக்கு நன்றி சொல்லுகிறோம், அவரை நேசிக்கிறோம், நம்மையே அவருக்கு ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்கிறோம்.
கிறிஸ்து நம்மைத் திக்கற்றவர்களாக விடுவதில்லை, அவர் நம்முடன் இருக்கிறார், நமக்கு தன்னுடைய வரங்களைப் பொழிந்தருளுகிறார். பாவமன்னிப்புக்கோ, பரிசுத்த ஆவியுடனான ஐக்கியத்திற்கோ நாம் பாத்திரவான்கள் அல்ல. அவரிடத்திலிருந்து எந்தவொரு வரத்தையோ ஆசீர்வாதத்தையோ பெற்றுக்கொள்ளவும் நமக்குத் தகுதியில்லை. எல்லாமே அவரிடமிருந்து நமக்குக் கிருபையாகக் கிடைக்கிறது. உண்மையில் நாம் அவருடைய கோபத்திற்கும் அழிவிற்குமே தகுதியானவர்கள். ஆனால் நாம் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கிற காரணத்தினால், அவர் தம்முடைய கிருபையைப் பொழிந்தருளும் இறைவனுடைய பிள்ளைகளானோம். பாவத்தின் அடிமைகளாயிருப்பதற்கும் கிருபையின் பிள்ளைகளாயிருப்பதற்கும் இடையிலான வித்தியாசத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இந்தக் கிருபை பரிசுத்தருடைய இருதயத்தில் எழும் ஒரு உணர்வு மட்டுமல்ல. மாறாக இது சட்ட உரிமையின்படியான அன்பு. பாவியின் பாவம் அவனுடைய உடனடியான மரணத்தைக் கோரி நிற்கிற காரணத்தினால், இறைவன் தான் விரும்புகிற எவரையும் மன்னித்துவிட முடியாது. ஆயினும் நமக்கான கிறிஸ்துவின் பதிலாள் சிலுவை மரணம் எல்லா நீதியையும் நிறைவேற்றியிருக்கிறது. இவ்வாறு கிருபை நம்முடைய உரிமையாகவும், இறைவனுடைய இரக்கம் அசைக்கமுடியாத ஒரு மெய்மையாகவும் மாறியிருக்கிறது. கிறிஸ்துவிலுள்ள கிருபையே இறைவனுடனான நம்முடைய வாழ்க்கைக்கு சட்டப்படியான ஆதாரம். செயலில் சுதந்திரமுள்ளவரும் நியாயத்தினால் கட்டுப்பட்டவருமாகிய இந்தக் கடவுள் யார் என்று நீங்கள் கேட்கலாம். நாங்கள் இவ்வாறு உங்களுக்கு பதிலளிக்கிறோம்: பல மதங்கள் கருத்தோடும் தீவிரமாகவும் கடவுளை அறிய முயற்சி செய்திருக்கிறது. ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் பூமியில் வைக்கப்பட்ட, ஆனால் வானத்தை எட்ட முடியாத ஏணிகளுக்குச் சமமாயிருக்கின்றன. ஆனால் கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி வந்து பூமியில் பொறுத்தப்பட்ட ஏணியாவார். அவர் மூலமாக இறைவனைச் சந்திக்கும் எவரும் கைவிடப்படுவதில்லை
நம்முடைய பாவங்கள் பரிசுத்த இறைவனிடமிருந்து நம்மைப் பிரிப்பதால் யாரும் நித்திய சிருஷ்டிகரைப் பார்த்ததில்லை. இறைவனைப் பற்றி அனைத்துக் கூற்றுக்களும் மனிதருடைய தெளிவற்ற கற்பனைகளே. ஆனால் கிறிஸ்து இறைவனுடைய குமாரன், ஆதியிலிருந்தே அவருடன் இருப்பவர், தெய்வீக திரித்துவத்தின் ஒரு ஆள். இவ்வாறு பிதா யார் என்பதை குமாரன் அறிந்திருந்தார். அதற்கு முந்திய வெளிப்பாடுகள் அனைத்தும் குறைவுள்ளது. ஆனால் கிறிஸ்துவே இறைவனுடைய முழுமையான வார்த்தையாகவும், அனைத்து சத்தியத்தின் தொகுப்பாகவும் காணப்படுகிறார்.

கிறிஸ்துவினுடைய செய்தியின் மையம் என்ன?

பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே என்று இறைவனை அழைக்கும்படி அவர் நமக்குக் கற்பித்திருக்கிறார். இவ்வாறு அழைப்பதன் மூலம் இறைவனுடைய அடிப்படைத் தன்மையே பிதா என்ற தன்மைதான் என்பதை அறிவித்தார். கடவுள் ஒரு சர்வாதிகாரியோ, ஆக்கிரமிப்பாளரோ, அழிப்பவரோ அல்ல. அதேவேளையில் அவர் அக்கறையற்றவரோ அலட்சியமானவரோ அல்ல. ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளைகளைக் கவனிப்பதைப் போல அவர் நம்மைப் பராமரிக்கிறார். இந்தப் பிள்ளை சேற்றில் விழுந்தால், அதைத் தூக்கிவிட்டு சுத்தப்படுத்துகிறார். பாவமும் குற்றமும் உள்ள உலகில் அவன் தொலைந்து போகட்டும் என்று அவர் விட்டுவிடுவதில்லை. இறைவன் நம்முடைய தகப்பன் என்பதை நாம் அறிந்துகொண்டபடியால், நம்முடைய கவலைகளினாலும் பாவங்களினாலும் ஏற்படும் வேதனை அகன்று போகிறது. நம்முடைய தகப்பனிடத்தில் திரும்பும்போது, நாம் சுத்திகரிக்கப்பட்டு வரவேற்கப்படுகிறோம். நாம் இறைவனுடன் என்றென்றும் வாழ்கிறோம். பிதாவினுடைய நாமத்தினால் இவ்வுலகத்தில் வெடித்த சமயப்புரட்சி, கிறிஸ்து கொண்டுவந்த புதிய கிறிஸ்தவ சிந்தனையாகும். இந்த தகப்பன் என்னும் வார்த்தை கிறிஸ்துவினுடைய வார்த்தைகளையும் செயல்களையும் தொகுத்துக் கூறுகிறது.
கிறிஸ்து தன்னுடைய மனுவுருவதலுக்கு முன்பாக தன்னுடைய பிதாவுடன் இருந்தார். இந்த மென்மையான படம் கிறிஸ்துவுக்கும் பிதாவுக்கும் இடையிலுள்ள அன்பின் உறவைக் காண்பிக்கிறது. மரித்து எழுந்த பிறகு குமாரன் தன்னுடைய பிதாவினிடத்தில் திரும்பினார். அவர் இறைவனுடைய வலது பாரிசத்தில் மட்டும் உட்காரவில்லை, பிதாவினுடைய மடியிலும் அமர்ந்தார். இது அவர் பிதாவோடு ஒன்றானவர், அவர்தான் பிதா என்பதைக் காண்பிக்கிறது. இவ்வாறு இறைவனைப் பற்றிய கிறிஸ்துவின் கூற்றுக்கள் எல்லாமே உண்மையானவை. இறைவன் யார் என்பதை நாம் கிறிஸ்துவில் காண்கிறோம். பிதாவைப் போல குமாரன் இருக்கிறார், குமாரனைப் போல பிதாவும் இருக்கிறார்.

பகுதி 1 - தெய்வீக ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)
ஆ - கிறிஸ்து சீடர்களை மனந்திரும்புதல் என்ற நிலையிலிருந்து திருமண மகிழ்ச்சி என்ற நிலைக்குக் கொண்டு செல்லுகிறார் (யோவான் 1:19 - 2:12)

1. சனகதரின் சங்கத்தால் அனுப்பப்பட்டவர்கள் ஸ்நானகனைக் கேள்வி கேட்கிறார்கள் (யோவான் 1:19-28)


யோவான் 1:19-21
19 எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, 20 அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். 21 அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு : நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.
ஸ்நாகனை மையமாக வைத்து யோர்தான் பள்ளத்தக்கில் ஒரு எழுப்புதல் ஏற்பட்டது. ஆயிரக் கணக்கானவர்கள் வனாந்தரமான பாதைகளில் அச்சமின்றி நடந்து, உயர்ந்த மலைகளிலிருந்து வறட்சியான பள்ளத்தாக்கிற்கு வந்தார்கள். அவர்கள் புதிய தீர்க்கதரிசியின் குரலைக் கேட்கவும் தங்கள் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெறவும் யோவான் ஸ்நானகனிடத்தில் வந்தார்கள். மக்கள் கூட்டம் அறியாமையுள்ளவர்கள் என்றே பெருமையுள்ளவர்கள் பெரும்பாலும் கருதுவார்கள். ஆனால் அவர்கள் தெய்வீக வழிநடத்துதலை ஆவலுடன் நாடுபவர்கள். அதிகாரத்தையும் வல்லமையையும் பெற்றிருப்பவர்களை அவர்கள் சீக்கிரத்தில் அடையாளம் கண்டுகொள்வார்கள். அவர்கள் சடங்குகளைப் பற்றியோ விதிமுறைகளைப் பற்றியோ கேட்க விரும்பவில்லை, அவர்கள் இறைவனைச் சந்திக்க விரும்பினார்கள். இந்த எழுப்புதலைக் குறித்து யூதர்களின் நீதிமன்றமான சனகதரின் அறிந்துகொண்டது. பலி செலுத்தப்படும் மிருகங்களைக் கொலைசெய்யும் கடினமான உதவிக்காரர்களாகிய சில ஆசாரியர்களை அவர்கள் அனுப்பினார்கள். யோவான் ஸ்நானகன் தேவ தூஷணம் சொல்லுபவனாகக் காணப்பட்டால் அவனை அழித்துப் போடும்படி அவர்கள் அவனிடத்தில் கேள்விகள் கேட்க வேண்டும்.
ஆகவே இந்த சனகதரின் சங்கத்திலிருந்து அனுபப்பட்டவர்களுக்கும் யோவான்ஸ்நானகனுக்கும் இடையிலான இந்த சந்திப்பு சட்டபூர்வமானதாகவும் ஆபத்து நிறைந்ததாகவும் காணப்பட்டது. இந்த மனிதர்கள் எருசலேமிலிருந்த யூதர்களிடத்திலிருந்து வந்தார்கள் என்று இவர்களைப் பற்றி நற்செய்தியாளனாகிய யோவான் குறிப்பிடுகிறார். இந்தப் பெயரின் மூலமாக யோவான் தன்னுடைய நற்செய்தியின் கருப்பொருட்களில் ஒன்றைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறார். ஏனெனில் அந்த நாட்களில் யூதர்கள் நியாயப்பிரமாணத்தைப் பொறுத்த மட்டில் கண்டிப்புடனும், எழுத்தின்படியும், அடிப்படைவாதத்தோடும் பொறாமையோடும் சிந்தித்தார்கள். அதனால் எருசலேம் கிறிஸ்துவின் ஆவியை எதிர்க்கும் மையமாக மாறியது. பழைய ஏற்பாட்டின் மக்கள் அனைவரும் அல்ல, அவர்களில் ஒரு கூட்டம் ஆசாரியர்கள், குறிப்பாக பரிசேயர்கள், தங்கள் திட்டத்தையும் கட்டுப்பாட்டையும் விட்டு விலகிச் செல்லும் எந்த சமய நடவடிக்கையையும் கவனித்துக்கொண்டிருக்கும் எதிரிகளாயிருந்தார்கள். அதனால்தான் தங்களுடைய கேள்விகளினாலே யோவான் ஸ்நானகனை அகப்படுத்த முடிவு செய்தார்கள். யோவானுடைய பிரசங்கத்தை பொருத்தமான மக்கள் கருத்துடன் கேட்டுக்கொண்டிருக்கும்போது, நீர் யார்? என்ற முதல் கேள்வியை அவர்கள் யோவானிடம் கேட்டார்கள். பேசுவதற்கு உனக்கு அதிகாரம் கொடுத்தது யார்? நீ நியாயப்பிரமாணத்தையும் இறையியலையும் படித்திருக்கிறாயா? கடவுள் உனக்கு கட்டளை கொடுத்து அனுப்பினார் என்று கருதுகிறாயா? அல்லது நீதான் மேசியாவா? என்று கேட்டார்கள்.
இக்கேள்விகளுக்குப் பின்னாலுள்ள வஞ்சனைகளை அறிந்தவனாக யோவான ஸ்நானகன் பொய்யுரையாமல் பதிலுரைத்தான். நான்தான் மேசியா என்று அவன் சொல்வானானால், அவர்கள் அவனை நியாயம் தீர்ப்பார்கள், மக்கள் அவனைக் கல்லெறிந்து கொலை செய்வார்கள். நான் மேசியா அல்ல என்று சொன்னால், மக்கள் அவனை விட்டு விலகிச் சென்று விடுவார்கள், இனி ஒருபோதும் அவனை முக்கியமான நபராகக் கருதமாட்டார்கள். அந்தக் காலத்தில் ஆபிரகாமுடைய சந்ததியார் ரோமர்களுடைய காலனியாதிக்கத்தின் கீழ் அவமானத்தையும் துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். ரோமர்களிடமிருந்து தங்கள் அடிமை நுகத்தைத் தகர்த்தெறியும் ஒரு விடுதலையாளருக்காக அவர்கள் ஏங்கினார்கள்.
தான் மேசியாவுமல்ல இறைமைந்தனுமல்ல என்று ஸ்நானகன் வெளிப்படையாகச் சொன்னார். பரிசுத்த ஆவியானவருடைய வழிநடத்துதலுக்கு எதிரான ஒரு பட்டப்பெயரை அவர் தனக்கென்று எடுத்துக்கொள்ளவில்லை. இறைவன் தன்னுடைய செய்தியை ஏற்ற நேரத்தில் உறுதிப்படுத்துவார் என்ற நம்பிக்கையில், அவர் தாழ்மையுடனும் உண்மையுடனும் தன்னுடைய அழைப்பை நிறைவேற்றினார்.
தங்களுடைய இந்த முதலாவது முயற்சிக்குப் பிறகு அவர்கள், நீர் எலியாவா? என்ற கேள்வியைக் கேட்டார்கள். இந்தப் பெயர் மல்கியா 4:5லிருந்து வருகிறது. அந்த வாக்குத்தத்தம் மேசியாவின் வருகைகக்கு முன்பாக, வானத்திலிருந்து தன்னுடைய எதிரிகளின் மேல் அக்கினியை வரவழைத்தவரும் இறைவனுடைய அனுமதியின் பேரில் இறந்தவனை உயிர்ப்பித்தவருமாகிய புகழ்பெற்ற எலியா என்ற தீர்க்கதரிசியின் வல்லமையையும் ஆவியையும் உடையவனாகிய ஒரு தீர்க்கதரிசி தோன்றுவான் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அற்புதமான கதாபாத்திரம் தங்களுடைய தேசத்தின் தலைவன் என்று எல்லாரும் கருதினார்கள். பின்னாட்களில் கிறிஸ்து குறிப்பிட்டதுபோல, யோவான்தான் அந்தத் தீர்க்கதரிசியாக இருந்தபோதிலும், அவர் தன்னைத் தாழ்த்தினார் (மத். 11:14). அதன் பிறகு அவர்கள், மோசே தனக்குப் பின், தன்னைப்போல ஒரு பெரிய தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார் என்றும் அவர் ஒரு புதிய மேலான உடன்படிக்கையை அருளுவார் என்றும் சொன்ன அந்த குறிப்பிட்ட தீர்க்கதரிசி நீர்தானா என்று கேட்டார்கள் (உபா. 18:15). இந்தக் கேள்விக்குப் பின்னால் யோவானை ஒரு தீர்க்கதரிசியைப் போல பேசும்படி அனுப்பிய அதிகாரம் எது என்பதை அறியும் அவர்களுடைய விருப்பம் மறைந்திருந்தது. ஆகவே அவர்கள் அவர் யார் என்றும் யார் அவரை அனுப்பியது என்றும் அவரே சொந்தமாகப் பேசுகிறாரா அல்லது வெளிப்படுத்தியதைப் பேசுகிறாரா என்று அறியும்படி தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
மோசேயின் பதவியையும் தரத்தையும் தான் எடுத்துக்கொள்ள ஸ்நானகன் மறுத்துவிட்டார். இறைவனுடைய கட்டளையைப் பெறாமல் ஒரு புதிய உடன்படிக்கையைச் உருவாக்க அவர் விரும்பவில்லை. அந்த மக்களை இராணுவரீதியாக வழிநடத்தவும் அவர் விரும்பவில்லை. அவர் தனக்கு ஏற்பட்ட பாவச் சோதனையில் உண்மையுள்ளவராக இருந்தார், பெருமையடையவோ இறுமாப்படையவோ இல்லை. அதேவேளையில் அவர் ஞானமுள்ளவராக தன்னுடைய எதிரிகளுக்கு தேவையான வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தி பதிலளித்தார். இந்த கொள்கைகளை நாம் நம்முடைய வாழ்வில் பயன்படுத்த வேண்டியது முக்கியம்.

1. சனகதரின் சங்கத்தால் அனுப்பப்பட்டவர்கள் ஸ்நானகனைக் கேள்வி கேட்கிறார்கள் (யோவான் 1:19-28)


யோவான் 1:22-24
22 அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள். 23 அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான். 24 அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள்.
அனுப்பப்பட்டவர்கள் யோவான் ஸ்நானகனை நோக்கி கேள்விக் கனைகளைத் தொடுத்துக்கொண்டிருந்தார்கள். மேசியாவின் மெய்யான வருகைக்கு முன்பாக வரும் என்று அவர்கள் எதிர்பார்த்த தவறான உபதேசங்களைப் பற்றியதாகவே இந்தக் கேள்விகள் காணப்பட்டது. ஆனால் யோவான் தான் மேசியாவுமல்ல, எலியாவுமல்ல, மோசேயினால் முன்னுரைக்கப்பட்ட தீர்க்கதரிசியுமல்ல என்று கூறியதால், அவர்களுடைய பார்வையில் அவர் தன்னுடைய முக்கியத்துவத்தையும் ஆர்வத்தையும் இழந்தார். ஆயினும் அவர்கள் அவர் யார் என்றும் அவருடைய செய்தியை கொடுத்தது யார் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சூழ்நிலையை முழுவதும் அறிந்துகொள்ளாமல் தங்களை அனுப்பியவர்களிடம் திரும்பச் செல்லக்கூடாது என்பதுதான் அவர்களுடைய நோக்கமாயிருந்தது.
அந்தக் கேள்விகளுக்கும் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்திற்கும் (ஏசாயா 40:3), எந்தத் தொடர்புமில்லை, ஆனால் ஆவியானவர் ஸ்நானகனை அந்த வேதப்பகுதிக்கு வழிநடத்தினார். கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தும்படி வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம் என்று அவர் தன்னை வருணித்தார். அவர் பரிசுத்த வேதாகமத்திலிருந்து அவர்களுக்கு யோவான் எடுத்துக் கூறியிருக்காவிட்டால், அவர் தன்னைத்தானே அங்கீகரித்து சொந்த வெளிப்படுத்தல்களைக் கூறுகிறான் என்று அவரைக் குற்றஞ்சாட்டியிருப்பார்கள். அதன்பிறகு அவரை தேவதூஷணத்திற்காக நியாயந்தீர்த்திருப்பார்கள். ஆகவே யோவான் தன்னைத் தாழ்த்தி, பழைய ஏற்பாட்டிலுள்ள மிகவும் தாழ்மையான நிலையை எடுத்துக்கொண்டு, தான் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்றார்.
நாம் அனைவரும் நம்முடைய உலகம் என்னும் வனாந்தரத்தில் வாழ்கிறோம். நம்மைச் சுற்றி குழப்பங்களும் ஒழுக்கமின்மையும் காணப்படுகிறது. ஆனால் இறைவன் நம்முடைய ஏழ்மையான உலகத்தையும் கெட்டுப்போன மக்களையும் அப்படியே விட்டுவிடுவதில்லை. அவர் மனுக்குலத்தைச் விடுவிக்கும்படி அவர்களிடம் வருகிறார். பரலோகத்திலிருந்து பூலோகத்திற்கு வரும் இந்த கிருபை மிகவும் பெரியது. பரிசுத்தர் நமக்கு உரிய அழிவைக் கொடாமல், தொலைந்துபோன நம்மைத் தேடிவருகிறார். அவருடைய அன்பை நாம் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அது பெரியது. இந்த வனாந்தரத்தை நந்தவனமாக மாற்றுவதையும் அவருடைய இரட்சிப்பின் இறுதி நோக்கம் உள்ளடக்கியிருக்கிறது.
கிறிஸ்துவில் இறைவன் இவ்வுலகிற்கு வருகிறார் என்பதை ஸ்நானகன் பரிசுத்த ஆவியின் மூலம் புரிந்துகொண்டார். வருகிறவரை வரவேற்கும்படி மக்கள் தங்கள் சிந்தையில் தெளிவடைய வேண்டும் என்று மக்களை அழைக்க ஆரம்பித்தார். கிறிஸ்துவுக்கு பாதையை ஆயத்தப்படுத்துவதில் அவருக்கிருந்த வைராக்கியம் அவரை நம்முடைய வனாந்தரமான உலகத்தில் ஒரு சத்தமாக மாற்றியது. அவர் தன்னை ஒரு செய்தியாளர் என்றோ தீர்க்கதரிசி என்றோ அழைக்காமல் வெறும் சத்தம் என்று அழைத்தார். ஆனால் இந்த சத்தத்தை இறைவன் அங்கீகரித்தார், அது மனசாட்சிகளை உறங்கவிடவில்லை, மக்களை மகிழ்ச்சியோடு பாவம் செய்யவிடவில்லை.
இந்தச் சத்தம் என்ன சொன்னது? அவருடைய செய்தியின் கருப்பொருள் இதுதான்: எழுந்திருங்கள், இறைவனுடைய இராஜ்யம் உங்கள் மேல் வந்திருக்கிறது! உங்கள் வாழ்க்கையைச் சரிப்படுத்திக்கொள்ளுங்கள்! இறைவன் பரிசுத்தமானவர் அவர் உங்களை நியாயம்தீர்ப்பார். ஒவ்வொரு பொய்க்கும், களவுக்கும், குற்றத்திற்கும், அநீதிக்கும் இறைவன் உங்களிடத்தில் கணக்குக் கேட்டு உங்களை நரகத்தில் தண்டிப்பார். இறைவன் உங்கள் பாவங்களை கவனியாமல் விட்டுவிட மாட்டார். ஒரு தீமையான மனிதன் தன்னுடய அனைத்துப் பாவங்களுடனும் இறைவனுடைய பார்வையில் தீமையானவனாகவே காணப்படுவான். பார்வைக்கு நல்லவனாக இருப்பவனும் ஒரு தீயவனைக் காட்டிலும் சிறந்தவன் அல்ல, ஏனெனில் அவருக்கு முன்பாக குற்றமற்றவன் ஒருவனுமில்லை.
ஸ்நானகனுடைய இந்தக் கடினமான கோரிக்கைகள் மூலம் சுய பரிசோதனைக்கும், ஒருவனுக்குள் இருக்கும் தீமையைக் குறித்த அறிவிற்கும், பெருமை அழிப்பதற்கும், மனம்மாறுவதற்கும் மக்களை வழிநடத்தினார். நீங்கள் நல்லவர் என்றும் ஏற்றுக்கொள்ளப்படத் தக்கவர் என்றும் உங்களைப் பற்றி கருதுகிறீர்களா சகோதரர்களே? நேர்மையாக உங்கள் குற்றங்களை அறிக்கையிடுங்கள்! நீங்கள் ஏதாவது ஒரு சிறிய காரியத்திலாவது யாரையும் ஏமாற்றியிருந்தால், உடனடியாக உரியதை அதன் சொந்தக்காரரிடம் திருப்பிச் செலுத்திவிடுங்கள். உங்கள் பெருமைக்கு மரித்து இறைவனுக்காக வாழுங்கள். உங்கள் நடத்தையில் கோணலானதைச் சரிசெய்யுங்கள். நீங்கள் தீமை செய்தவராகையால் தாழவிழுந்து இறைவனைப் பணிந்துகொள்ளுங்கள்.
யூதர்கள் அனுப்பியவர்களில் பெரும்பான்மையானவர்கள் பரிசேயர்களாயிருந்தார்கள். ஸ்நானகனுடைய தைரியத்தைப் பார்த்து அவர்கள் கோபமடைந்தார்கள். ஏனெனில் அவர்கள் தங்களை நீதிமான்கள் என்றும் பக்தியுள்ள நல்லவர்கள் என்றும் எல்லையற்ற திறமையுடன் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்பவர்கள் என்றும் பெருமையாக எண்ணிக்கொண்டார்கள், ஆனால் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பக்தியுள்ளவர்களைப்போல நடித்தார்கள். ஆனால் உள்ளாக அவர்கள் சீர்கெட்டவர்களும், தங்கள் உள்ளான சிந்தையில் இருக்கக்கூடிய தீமையான எண்ணங்களை அவர்கள் கருத்தில்கொள்ளாத விரியன்பாம்புக் குட்டிகளுமாக காணப்பட்டார்கள். அவர்களுடைய விறைத்த முகத்தைப் பார்த்து யோவான் பயந்துவிடவில்லை. அவர்களும் சீக்கிரத்தில் வரும் கர்த்தருக்கு வழியை ஆயத்தம்செய்யும்படி இறைவனிடத்தில் திரும்ப வேண்டிய அவசியத் தேவையிலிருக்கிறார்கள் என்று யோவான் அவர்களை எச்சரித்தார்.

யோவான் 1:25-28
25 அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங்கொடுக்கிறீர் என்று கேட்டார்கள். 26 யோவான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார். 27 அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான். 28 இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன.
யூதர்கள் பஞ்சாகமத்திலிருந்து தூய்மைப்படுத்துதல், மேனியைக் கழுவுதல் மற்றும் ஒரு வகையான முழுக்குதல் ஆகியவற்றைக் கற்றிருந்தார்கள். மேனியைக் கழுவும் சடங்கு ஒழுக்க ரீதியாக ஏற்பட்ட அசுத்தத்தை நீக்குவதாகும். ஆனால் திருமுழுக்கு என்பது யூதரல்லாதவரைச் சுத்திகரிப்பதாகும். யூதரல்லாதவர்கள் தூய்மையற்றவர்கள் என்று அவர்கள் கருதினார்கள். எப்படியிருந்தாலும் திருமுழுக்கைப் பெற்றுக்கொள்வது தாழ்மைக்கும் இறைவனுடைய மக்களோடு சேர்ந்துகொள்ளுவதற்கும் அடையாளமாகும்.
எருசலேமிலிருந்து வந்தவர்கள் ஏன் குழப்பமடைந்தார்கள் என்பதை இது விளக்குகிறது. விருத்தசேதனம் செய்யப்பட்டு முழுவதும் உடன்படிக்கையில் நிலைநிறுத்தப்பட்ட விசுவாசிகளை நீ ஏன் மனந்திரும்பும்படி அழைக்கிறாய்? நம்முடைய இனத்தின் பொறுப்புள்ள தலைவர்களாகிய எங்களை, பரிசுத்தக் குலைச்சலுள்ளவர்களும் இறைவனுடைய கோபத்திற்குரியவர்களும் என்று நீ கூறுகிறாயா? யோவானுடைய ஞானஸ்நானம் பக்தியுள்ள யூதர்களுக்கு இடறலாயிருந்தது. அது அவர்களை இரண்டு பிரிவாகப் பிரித்தது. முதலாவது குழு தங்களை மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தினால் சுத்திகரித்துக்கொண்டது. அவர்கள் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாக கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தமாயிருந்தார்கள். இரண்டாவது குழு தாங்கள் ஏற்கனவே கிறிஸ்துவை வரவேற்க ஆயத்தமானவர்கள் என்று கருதி ஞானஸ்நானத்தைப் புறக்கணித்தார்கள். அவர்கள் கிறிஸ்துவின் வருகை, அரசியல் அல்லது சட்டரீதியான காரணங்களுக்காக அமையும் என்று கருதினார்கள்.
அதிகாரிகள் யோவானைச் சோதித்த இந்தச் சம்பவம் நடைபெறும்போது ஒருவேளை நற்செய்தியாளனாகிய யோவானும் அங்கிருந்திருக்கலாம். அவர்களுக்கிடையில் நடைபெற்ற இந்த உரையாடல் அவரை ஆழமாகத் தொட்டது. குறிப்பாக யோவான் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, வாக்குப்பண்ணப்பட்ட தீர்க்கதரிசியுமல்ல என்ற அறிக்கைக்குக் காரணமாயிருந்த அவர்களுடைய கேள்விகள் அவரை ஆழமாகத் தொட்டிருக்க வேண்டும். இந்தக் கேள்விகள் மூலமாக யோவான் ஒரு முக்கியமான நபரல்ல என்று அவர்கள் அவரை அவமானப்படுத்தினார்கள்.
ஆனால் என்ன செய்யப்பட வேண்டும் என்பதை அறிந்த ஸ்நானகன் புன்முறுவலுடன், ஆம். நீங்கள் சொல்வது சரிதான். நான் ஒரு முக்கியமான நபரில்லை. நான் எந்த அதிசயமோ அற்புதமோ இன்றி தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். நான் செய்வதெல்லாம் எனக்குப் பின் வருபவரைக் சுட்டிக்காட்டும் அடையாளமே என்றார்.
அதன்பிறகு, ஒட்டக உடை தரித்திருந்த ஸ்நானகன் எழுந்து நின்று, பலத்த சத்தமாக, எருசலேமிலிருந்து வந்திருந்தவர்களையும், மக்கள் கூட்டத்தையும் பார்த்து, நீங்கள் குருடர்கள். உங்கள் நடுவில் நடைபெறும் ஒரு வரலாற்று நிகழ்வை கவனிக்கத் தவறுகிறீர்கள். ஒரு சாதாரண மனிதனாகிய என்னை நீங்கள் ஆராய்ந்து பார்க்கிறீர்கள். ஆனால் கிறிஸ்து வந்திருக்கிறார். அவரைப் பாருங்கள். மனந்திரும்பினவர்களின் கூட்டத்தின் நடுவில் அவர் இருக்கிறார். யோவான் ஸ்நானகனாகிய எனக்கு எதையும் செய்யும் வல்லமையில்லை. நான் செய்ய வேண்டிய சேவை எல்லாம் ஒன்றுதான். நான் ஒரு சத்தமாக மட்டும் இருக்கிறேன். இப்பொழுது வந்திருக்கிற கிறிஸ்துவைப்பற்றி பரிசுத்த ஆவியானவர் எனக்குச் சொல்லியிருக்கிறார். அவர் இங்கே இருக்கிறார். இப்பொழுதே இரட்சிப்பின் நாள். சீக்கிரமாக மனந்திரும்புங்கள், ஏனென்றால் இறுதிக்காலம் வேகமாக போய்க்கொண்டிருக்கிறது என்றார்.
இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் கூட்டம் திடுக்கிட்டது. அவர்கள் கிறிஸ்துவை வரவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் அங்கு கூடிவந்திருந்தார்கள். ஆனால் கிறிஸ்து ஏற்கனவே வந்துவிட்டார். அவர்கள் அவரைக் காணவும் இல்லை. அவருடைய வருகையை அறியவுமில்லை. அவர்கள் முற்றிலும் ஆச்சரியமடைந்தவர்களாக ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
கிறிஸ்துவைக் குறித்த தனது புகழ்பெற்ற விளக்கத்தை ஸ்நானகன் அறிவித்தார். இது அவர் ஏற்கனவே 15ம் வசனத்தில் கூறியிருந்த, எனக்குப் பின் வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர் என்பதைக் காட்டிலும் வெளிப்படையான கூற்றாகும். இதன் மூலமாக ஸ்நானகன் கிறிஸ்துவின் நித்தியத்தை மட்டுமல்ல, மனிதர்கள் நடுவில் அவர் இருக்கிறார் என்பதையும் குறிப்பிடுகிறார். கிறிஸ்து வெளிப்பிரகாரமாக சாதாரண மனிதரைப் போல தான் காணப்பட்டார் என்றும் மற்றவர்களைவிட அவரை வேறுபடுத்திக் காட்டும் ஒளிவட்டத்தையோ, வித்தியாசமான உடையலங்காரத்தையோ, ஒளிவீசும் கண்களையோ அவர் பெற்றிருக்கவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார். அவர் மற்ற எல்லாரைப் போலவும் சாதாரணமாகவே காணப்பட்டார். எந்தவகையிலும் வித்தியாசமாயிருக்கவில்லை. ஆனால் அவருடைய உண்மையான தன்மையில் அவர் எல்லாரையும்விட வித்தியாசமானவர்: அவர் காலங்களுக்கு முற்பட்டவர், பரலோகத்துக்குரிய தெய்வீகமானவர். ஆனால் அவர்கள் நடுவில் எளிமையான மனிதனாக நின்றுகொண்டிருந்தார்.
கிறிஸ்துவின் ஊழியக்காரனாக இருப்பதற்குத் தான் தகுதியற்றவன் என்பதை ஸ்நானகன் குறிப்பிடுகிறார். அந்நாட்களின் வழக்கத்தின்படி வீட்டிற்கு ஒரு விருந்தாளி வரும்போது, ஒரு வேலைக்காரன் அவருடைய காலைக் கழுவுவான். இயேசு மக்கள் கூட்டத்தின் நடுவிலிருந்து தன்னிடம் திருமுழுக்குப் பெற வருவதைப் பார்த்த ஸ்நானகன், அவருடைய காலைக் கழுவுவதற்கு அவருடைய பாதணிகளைக் கழற்றுவதற்குக் கூட எனக்குத் தகுதியில்லை என்று கூறுகிறார். இந்த வார்த்தைகள் மக்கள் கூட்டத்தைக் கலக்கியது. இங்கே நின்றுகொண்டிருக்கும் இந்த அந்நியன் யார்? கர்த்தர் எவ்வாறு சாதாரண மனிதராயிருக்க முடியும்? பெரிய மனிதனாகிய யோவான் ஸ்நானகன் இவருடைய பாதணிகளின் வாரை அவிழ்க்கவும் நான் பாத்திரனல்ல என்று ஏன் சொல்ல வேண்டும்? என்று ஒருவரையொருவர் பார்த்துக் கேட்டார்கள். ஒருவேளை எருசலேமிலிருந்து வந்தவர்கள் யோவானை இகழ்ந்து, இவன் ஒரு இழிவான ஏமாற்றுக்காரன் என்று சொல்லிச் சென்றிருக்கலாம். யோவானுடைய சீடர்களிலும் சிலர் அவர்களைப் போலவே, கிறிஸ்து தலைநகரமாகிய எருசலேமில் மேன்மையுடன் வருவாரே தவிர, வனாந்தரத்தில் எளிமையானவராக வரமாட்டார் என்று சொல்லிச் சென்றிருக்கலாம். இவ்வாறு அவர்கள் இறைவனுடைய கிறிஸ்துவைச் சந்திக்கும் ஒப்பற்ற வாய்ப்பை இழந்தார்கள்.
இந்த நிகழ்வுகள் யோர்தானுடைய கிழக்குக் கரைப்பகுதியில் நடைபெற்றது. அது சனகதரின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியல்ல, ஏரோது அந்திப்பாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதி. ஆகவே அவர்கள் யோவான் ஸ்நானகனைக் கைதுசெய்து எருசலேமிற்குக் கொண்டுபோய் நியாயம்தீர்க்க முடியாமல் போயிற்று.

2. கிறிஸ்துவைக் குறித்து மேலும் ஊக்கமளிக்கும் ஸ்நானகனுடைய சாட்சிகள் (யோவான் 1:29-34)


யோவான் 1:29-30
29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. 30 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.
எருசலேமிற்குத் திரும்பிய பிரதிநிதிகள், ஸ்நானகனைக் குறித்த தங்களுடைய வெறுப்புணர்ச்சியை அப்படியே வைத்து வைத்திருந்தார்கள். அந்தத் தருணம் வரையில் கிறிஸ்து தம்முடைய மக்களை புடைத்துத் தூய்மைசெய்யும் ஒரு சீர்திருத்தவாதி என்று யோவான் ஸ்நானகன் நினைத்திருந்தார். கிறிஸ்துவாகிய கர்த்தர் நோயுற்ற மரத்தை வெடியெறியும் கோடரி என்று எண்ணினார். இவ்வாறு கிறிஸ்துவின் வருகை இறைவனுடைய கோபத்தின் நாளை அறிவிக்கிறது. மேசியா நம் நடுவில் இருக்கிறார் என்று அவர் சொன்னதும் சீடர்கள் தங்களுடைய பாவங்களை நினைத்து மனவேதனையடைந்தார்கள். நியாயத்தீர்ப்பாகிய இடி எச்சரிப்பின்றி அவர்கள் நடுவில் விழும் என்று அவர்கள் கருதினார்கள்.
முப்பது வயது வாலிபனாகிய கிறிஸ்து யோவானிடத்தில் அமைதியாக வந்து தனக்கு திருமுழுக்குத் தரும்படி கேட்கிறார். இந்தத் தாழ்மை யோவானை ஆச்சரிப்படுத்தியது. அவன் தயங்கி, இயேசுவே தன்னுடைய பாவத்தை மன்னித்து தனக்கு ஞானஸ்நானம் தரவேண்டும் என்று கேட்டார். ஆனால் நீதியை நிறைவேற்றும்படி கிறிஸ்து ஞானஸ்நானத்தை வலியுறுத்தினார்.
அதன்பிறகு பரிசுத்தர் மனிதகுலத்தை அழிக்க வரவில்லை என்றும் பாவத்தைச் சுமக்கத்தான் வந்திருக்கிறார் என்றும் யோவான் அறிந்துகொண்டார். அவர் மனித குலத்தின் பிரதிநிதியாக ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டார். கர்த்தருடைய வருகை கோபத்தோடு நிறைந்திருக்கக்கூடாது, ஒப்புரவாக்குதலினாலும் பாவமன்னிப்பினாலும் நிறைந்திருக்க வேண்டும். யோவான் ஸ்நானகன் பழைய உடன்படிக்கையின் விளிம்பில் நின்றுகொண்டு, புதிய உடன்படிக்கையின் ஆழத்தை உணர்ந்துகொண்டார். இந்த தீவிரமான மாற்றம் அவருடைய புரிந்துகொள்ளுதலை மாற்றியமைத்தது.
அடுத்த நாள் இயேசு வந்தபோது, உங்கள் கண்களைத் திறந்து, பார்த்து உணருங்கள் என்று யோவான் அவரைக் காட்டிச்சொன்னார். அங்கே இடி விழவில்லை, தூதர்கள் கூட்டம் தோன்றவில்லை, மாறாக அனைவரும் அனுபவிக்கும்படி வார்த்தை பொழியப்பட்டது. இந்த வாலிபன்தான் எதிர்பார்க்கப்பட்டவர், அவரே கர்த்தர், உலகின் நம்பிக்கை. இனி தன்னைச் சுற்றியுள்ள மக்கள் கூட்டம் அரசியல் மற்றும் இராணுவரீதியான பழைய மேசியா என்ற கருத்தைப் பற்றிக்கொண்டிருப்பதை யோவான் விரும்பவில்லை. இவர் வல்லமயுள்ளவரும் வெற்றிவாகை சூடக்கூடியவருமாகிய யூதாவின் சிங்கம் அல்ல, தாழ்மையும் மென்மையுமான இறைவனுடைய ஆட்டுக்குட்டி.
இந்த இயேசு உலகத்தின் பாவத்தைச் சுமப்பவர். பழைய பலி முறைகளை நினைவுகூரும்படி தெரிந்துகொள்ளப்பட்ட தேவஆட்டுக்குட்டி ஆவார். அவர் அனைத்து மனிதர்களுக்கும் பதிலாளாயிருப்பதற்குத் தகுதியானவர். அவருடைய அன்பு வல்லமையும் செயல்திறனும் உள்ளது. அவர் பரிசுத்தமுள்ளவர், எல்லாருடைய பாவங்களையும் சுமந்தாலும் அவர் பரிசுத்தமுள்ளராகவே இருப்பார் என்று யோவான் பரிசுத்த ஆவியினால் நிறைந்து அறிவித்தார். நாம் அவரில் இறைவனுடைய நீதியாகும்படி, பாவமற்ற கிறிஸ்து நமக்காக பாவமானார்.
யோவான் ஸ்நானகனுடைய இந்த சாட்சி நற்செய்தியின் உச்சகட்டமாகவும், முழு வேதாகமத்தின் கருப்பொருளாகவும் இருக்கிறது. கிறிஸ்து நமக்காகப் பாடுபடுவதே அவருடைய மகிமை என்பதை அவர் அறிந்துகொண்டார். கிறிஸ்துவின் இரட்சிப்பு எல்லாரையும் உள்ளடக்கும் உலகளாவியது. சிகப்பு, மஞ்சள், கருப்பு வெள்ளை ஆகிய அனைத்து இனத்திற்கும் பொதுவானது. அது ஏழைக்கும் பணக்காரனுக்கும், அறிவாளிக்கும் மூடனுக்கும், வாலிபனுக்கும் வயோதிபனுக்கும், கடந்த காலத்திற்கும், நிகழ் காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் பொதுவானது. அவருடைய பதிலாள் பிராயச்சித்தம் முழுமையானது.
ஆட்டுக் குட்டியாக அவர் வந்த நாளிலிருந்து தீமையின் விளைவுகளை அவர் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறார், ஆனாலும் அவர் இழிவானவர்களைத் துரத்தியடிக்காமலும், பெருமையுள்ளவர்களைப் புறக்கணிக்காமலும் அவர்களை நேசித்தார். அவர்களுடைய அடிமைத்தனத்தின் அளவை அவர் அறிந்தவராக அவர்களுக்காக மரிக்க ஆயத்தமாயிருந்தார்.
இறைவனுடைய ஆட்டுக்குட்டி தன்னுடைய செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களின் மேலிருந்த இறைவனுடைய கோபத்தை நீக்குகிறது என்று யோவான் அறிவித்தார். அவர்களுக்குப் பதிலாக மரிக்கப்போகும் பலிகடா அவர்தான். அங்கிருந்தவர்கள், ஒரு மனிதன் எவ்வாறு அனைவருடைய பாவத்தின் தண்டனையையும் சுமக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டார்கள். யோவானுடைய வார்த்தைகள் அவர்களுடைய கண்களைத் திறந்தது, ஆனாலும் கிறிஸ்துவின் சிலுவை இன்னும் தெளிவாகக் காணப்படவில்லை. கிறிஸ்துவில் உள்ள இறைவனுடைய திட்டத்தை ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி நிறைவேற்ற வேண்டும்.
அவர் எனக்கு முன்னிருந்தவர், அவர் என்னிலும் பெரியவர் போன்ற வார்த்தைகள் மூலமாக, அவர் நித்தியமான கர்த்தராயிருக்கிறபடியால் இந்த இரட்சிப்பை இயேசுவே முடிப்பார் என்று மறுபடியும் யோவான் கூறுகிறார்.
கிறிஸ்துவின் மகிமை மிகவும் பெரியது, ஆனால் சிலுவையில் வெளிப்பட்ட அவருடைய அன்பு அவருடைய மகிமையின் மையத்தை வெளிப்படுத்தியது. நாங்கள் அவருடைய மகிமையைக் கண்டோம்; அவர் உபத்திரவப்பட்டு சிலுவையில் தொங்கியதன் மூலம் நம்மை விடுதலை செய்யும் அன்பின் அளவை வெளிப்படுத்தினார் என்று நற்செய்தியாளன் அறிக்கையிடுகிறான்.

யோவான் 1:31-34
31 நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றான். 32 பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன். 33 நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். 34 அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான்.
யோவான் ஸ்நானகனுடைய முப்பதாவது வயதில் இறைவன் அவரை அழைத்து, கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தப்படுத்தவும் மக்களுக்கு அவரைத் தெரியப்படுத்தவும் அனுப்பினார். இது அவருடைய ஞானஸ்நான சமயத்தில் நடைபெற்றது, அப்போது மனந்திரும்பிய மக்கள் கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாக அவரை வரவேற்கத் தயாராக இருந்தனர். இதுவரை யாரும் கண்டிராத காட்சியை யோவான் பார்ப்பார் என்று இறைவன் அவருடன் பேசி வாக்குப்பண்ணியிருந்தார். பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் மீது இறங்கும் காட்சியே அது. பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் மேல் தங்கினார் என்பதுதான் கவனிக்கத்தக்கது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் ஒரு குறிப்பிட்ட காலம் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டுப் பேசினார்கள், ஆனால் கிறிஸ்துவோ நிரந்தரமாக பரிசுத்த ஆவியினால் நிறைந்திருந்தார். அடிக்கடிவரும் வசந்த காலம் போல ஆவியானவர் விசுவாசிகளைப் தெய்வீக வல்லமையினால் நிரப்புவார்.
இரண்டு வாலிபர்களும் யோர்தானுடைய நதிக்கரையில் அருகருகே நின்றுகொண்டிருந்தார்கள்; வானம் அமைதியாகத் திறந்துகொண்டது; திடீரென பரிசுத்த ஆவியானவர் புறாவடிவில் வருவதை யோவான் கண்டார். நீல வானத்தில் வெள்ளைப் புறா சமாதானத்திற்கும் தாழ்மைக்கும் அடையாளமாக இறங்கி வந்தது.
இறங்கிவந்த பரிசுத்த ஆவியானவர், யோவான் ஸ்நானகன் மீதோ, மனந்திரும்பிய பாவிகள் மீதோ வந்து அமரவில்லை. நேரடியாக இயேசுவின் மீது வந்தமர்ந்தது. நசரேயனாகிய இயேசு எல்லா தீர்க்கதரிசிகளையும்விட, அனைத்துப் படைப்புகளையும்விட பெரியவர் என்பதற்கு இது ஒரு நேரிடையான அடையாளம். அப்போது தனக்கு முன்பாக நிற்பவர் எதிர்பார்க்கப்பட்ட நித்தியமான இறைவன் என்பதை யோவான் அறிந்துகொண்டார்.
மரியாள் யோவான் ஸ்நானகனுடைய தாயாகிய எலிசபெத்தைச் சந்தித்து வாழ்த்துச் சொல்லியபோது, அவளுடைய வயிற்றிலிருந்து மகிழ்ச்சியில் துள்ளிய யோவான் இப்போதும் துதியினாலும் மகிழ்ச்சியினாலும் நிரம்பியிருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை (லூக்கா 1:36-45).
கிறிஸ்துவே ஆவியைக் கொடுப்பவர் என்று ஸ்நானகன் அறிந்துகொண்டார். ஆனால் அவர் அந்த காட்சியை மறைக்கவில்லை. வெளிப்படையாக அறிவித்தார்: கர்த்தர் வந்திருக்கிறார்; அவர் நம் நடுவில் இருக்கிறார்; அவர் நம்மை நியாயம் தீர்க்க வரவில்லை. அன்பையும் நல்லெண்ணத்தையும் காண்பிக்க வந்திருக்கிறார். அவர் சாதாரண மனிதன் அல்ல, பரிசுத்த ஆவியினால் நிரம்பிய இறைமைந்தன். யாரெல்லாம் இயேசு இறைவனிடத்திலிருந்து வரும் ஆவி என்று அறிக்கையிடுகிறார்களோ அவர்கள் அவர் இறைமைந்தன் என்றும் அதேவேளையில் அறிக்கையிடுகிறார்கள். இவ்வாறு கிறிஸ்துவின் வருகையின் நோக்கத்தை யோவான் தெளிவுபடுத்தினார்: மனந்திரும்புகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பதற்காகவே அவர் வந்திருக்கிறார். இறைவன் ஆவியாயிருக்கிறார், அவருடைய மைந்தனாகிய கிறிஸ்து மாம்சத்தில் வந்த தேவஆவியானவர். இறைவனுடைய அன்பு என்னும் தெய்வீக மெய்மையினால் அவரைப் பின்பற்றுபவர்களை நிரப்புவது அவருடைய திருச்சித்தம்.
அன்புள்ள சகோதரனே, பரிசுத்த ஆவியினால் நீங்கள் நிரம்பியிருக்கிறீர்களா? கிறிஸ்துவின் வல்லமையை உங்கள் வாழ்வில் நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? கிறிஸ்துவின் சிலுவைப் பலியை நீங்கள் விசுவாசிப்பதன் மூலமாக, உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு இந்த தெய்வீக குணாதிசயம் உங்களுடையதாகும். யாரெல்லாம் இந்தப் பாவ மன்னிப்பை தேவ ஆட்டுக்குட்டியிடம் பெற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிறார்கள். எல்லா விசுவாசிகளுக்கும் இந்த ஆவிக்குரிய ஆசீர்வாதத்தைக் கொடுக்க இறைமகன் ஆயத்தமாயிருக்கிறார்.

3. முதல் ஆறு சீஷர்கள் (யோவான் 1:35-51)


யோவான் 1:35-39
35 மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது, 36 இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவஆட்டுக்குட்டி என்றான். 37 அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள். 38 இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம். 39 அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.
கிறிஸ்து மாம்சத்தில் வந்த இறைவனுடைய வார்த்தை, அவரே இறைவன், அவரே வாழ்வும், ஒளியின் ஆதாரமுமானவர். இவ்வாறுதான் அவரை நற்செய்தியாளன் அடிப்படையில் விளக்கியிருக்கிறார். அவர் இயேசுவின் ஊழியத்தையும் செயல்களையும்கூட விளக்கியிருக்கிறார். அவரே அனைத்தையும் படைத்துப் பராமரிப்பவர். இறைவனை அன்புள்ள தகப்பனாக அறியும் புதிய அறிவை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்த அடிப்படைக் கருத்தின்படி, அவருடைய தன்மைகள் அனைத்தையும் தொகுத்துக் கூறும் விதமாக, மீண்டும் இதோ தேவ ஆட்டுக்குட்டி என்றும் குறிப்பிடுகிறார். 14ம் வசனத்தில் கிறிஸ்துவின் அடிப்படைத் தன்மையையும் ஆதாரத்தையும் விளக்குகிறார், 29 மற்றும் 33 ஆகிய வசனங்களில் கிறிஸ்துவினுடைய சேவையின் நோக்கத்தைக் குறிப்பிடுகிறார்.
தன்னுடைய மகனையே நம்முடைய பாவத்தைச் சுமக்கும்படியாகக் கொடுத்து, நியாயத்தீர்ப்பிலிருந்து நம்மை விடுவிக்கும் இறைவனுடைய கரங்களில் தன்னைப் பலிகடாவாகக் கொடுக்கும்படி கிறிஸ்து மனிதனானார். இறைவன் இந்த பலியை விரும்பினார் மட்டுமல்ல, அதை ஆசீர்வதித்து ஏற்றுக்கொண்டதைப் போலவே, அதைச் செலுத்தியவரும் அவர்தான். பவுலுடைய வார்த்தைகளில் சொன்னால், இறைவன் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்.
இன்றைய தலைமுறைக்கு தேவ ஆட்டுக்குட்டி என்ற பதத்தைப் புரிந்துகொள்வது கடினமானது, ஏனெனில் நாம் இன்று பாவத்தின் பரிகாரத்திற்காக பலிசெலுத்துவதில்லை. பழைய ஏற்பாட்டு பலிமுறைகளில் அனுபவமுள்ள ஒருவர் கூறுகிறார், இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்று. இறைவன் நம்முடைய பாவங்களுக்கு நம்முடைய இரத்தத்தைச் சிந்தாமல் தன்னுடைய மகனுடைய இரத்தத்தைச் சிந்துவது ஆச்சரியமானது. நம்மைப் போன்ற கலகக்காரர்களுக்காக பரிசுத்தர் மரித்தார். குற்றமுள்ள மக்கள் பரலோக பிதாவின் நீதியுள்ள பிள்ளைகளாக வேண்டும் என்பதற்தாக இறைவனுடைய குமாரன் நம்முடைய பாவங்களுக்காக கொலை செய்யப்பட்டார். நம்மை விடுவிக்கும் அவரையும் குமாரனையும் பரிசுத்த ஆவியானவரையும் சேர்த்து நாம் கனப்படுத்துவோம்.
தேவ ஆட்டுக்குட்டி என்ற சொற்றொடரின் ஆழத்தை இரண்டு சீஷர்களும் உடனடியாகப் புரிந்துகொள்ளவில்லை. ஸ்நானகன் தேவ ஆட்டுக்குட்டியை விழித்தததைப் பார்த்த அவர்களும், கர்த்தரும் உலகத்தின் நியாயாதிபதியும், அதேவேளையில் மனுக்குலத்துக்கான பரிகார பலியுமாக இருக்கும் இயேசுவை அறிய விரும்பினார்கள். இந்த இரண்டு சீஷர்களும் கவனமாகக் கவனித்தபோது இந்தக் சிந்தனைகள் அவர்களுடைய இருதயத்தை நிரப்பியது. இயேசு யோவானுடைய சீஷர்களை அபகரிக்கவில்லை, யோவானே அவர்களை இயேசுவிடம் வழிநடத்துகிறார். சீஷர்கள் முழு மனதோடு அவரைப் பின்பற்றத் தொடங்கினார்கள்.
இயேசு அவர்களுடைய ஏக்கங்களையும் நோக்கத்தையும் உணர்ந்துகொண்டார். இயேசுவின் அன்பையும் கிருபையையும் அவர்கள் கண்டார்கள், இந்த நற்செய்தியிலுள்ள இயேசுவின் முதல் பேச்சைக் கேட்டார்கள்: நீங்கள் எதைத் தேடுகிறீர்கள்? இயேசு அவர்களுக்கு கடினமான உபதேசங்களைப் போதிக்காமல், அவர்களுடைய இருதயத்தை திறந்துகாட்டும் வாய்ப்பைக் கொடுத்தார். நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் சகோதரரே? உங்கள் வாழ்வின் நோக்கம் என்ன? உங்களுக்கு இயேசு வேண்டுமா? ஆட்டுக்குட்டியை நீங்கள் பின்பற்றுவீர்களா? உங்கள் பள்ளிப் பரீட்சைக்குப் படிப்பதைக் காட்டிலும் தீவிரமாக இந்த மேன்மையான சத்தியங்களைப் படியுங்கள்.
இரண்டு சீஷர்கள் இயேசுவின் வீட்டிற்குப் போக விரும்புகிறார்கள். அவர்கள் மக்கள் கூட்டத்தின் தொந்தரவு இல்லாத ஒரு இடத்தில் சென்று சத்தியங்களைக் கேட்க நினைத்தார்கள். வந்து பாருங்கள் என்று இயேசு அவர்களுக்கு பதிலுரைத்தார். வந்து என்னுடன் சேர்ந்து படியுங்கள் என்று அவர் சொல்லவில்லை. உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள், என்னுடைய உண்மையான ஆளத்துவத்தையும், என்னுடைய செயல்களையும் வல்லமையையும், இறைவனுடைய புதிய சாயலையும் அறிந்தகொள்வீர்கள் என்று கூறினார். கிறிஸ்துவுக்கு அருகில் வருபவன் உலகத்தைக் குறித்த புதிய தரிசனத்தைக் காண்பதோடு இறைவனை அவர் இருக்கிறவண்ணமாகவே காண்பான். கிறிஸ்துவைக் குறித்த தரிசனம் நம்முடைய அறிவின் அமைப்பு முறையையே தலைகீழாக மாற்றிவிடும். அவர் நம்முடைய சிந்தனையின் மையமாகவும் நம்முடைய நம்பிக்கையின் இலக்காகவும் மாறிவிடுவார். ஆகவே இந்த சீஷர்களுடன் நீங்களும் வந்து பார்ப்பீர்களானால், அவர்களோடு சேர்ந்து கூடிய விரைவில், அவருடைய மகிமையைக் கண்டோம்; அது கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்த பிதாவின் ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது என்று சாட்சிபகருவீர்கள். இரண்டு சீஷர்களும் இயேசுவோடு ஒரு நாள் முழுவதும் தங்கியிருந்தார்கள். அந்த கிருபையின் மணித்துளிகள் எத்தனை அருமையானதாக இருந்திருக்கும்! அந்தத் தருணம்தான் தன்னுடைய வாழ்க்கையை மாற்றியது என்று நற்செய்தியாளன் சாட்சிபகருகிறான். அப்போது அவர் இயேசுவைப் பற்றிய உண்மையைப் பரிசுத்த ஆவியின் அகத்தூண்டுதலினால் அறிந்துகொண்டார். அவருடைய கர்த்தர் அவருடைய விசுவாசத்தை ஏற்றுக்கொண்டு, அவருக்கு நீதியை வழங்கின போது, இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதை அவர் நிச்சயமாக அறிந்துகொண்டார். உங்கள் ஆத்துமாவிலுள்ள இருளில் கிறிஸ்துவின் ஒளி என்றாவது பிரகாசித்திருக்கிறதா? அவரை நீங்கள் பின்பற்றுகிறீர்களா?

யோவான் 1:40-42
40 யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். 41 அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். 42 பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப்பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.
பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா, திபேரியாக் கடற்கரைக் கிராமமாகிய பெத்சாயிதாவிலுள்ள ஒரு மீனவன். பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானத்தைப் பெறுவதற்காகவும், மேசியாவின் வருகைக்காக காத்திருப்பதற்காகவும் அவர் ஸ்நானகனிடத்தில் வந்திருந்தார். அவருடைய இருதயம் மகிழ்ச்சியினால் நிறைந்திருந்தது; அவர் முதலில் கண்டுகொண்டதை தன்னோடு வைத்திருக்க அவரால் முடியவில்லை. அவர் அந்நியர்களிடம் அதை அறிவிக்காமல் முதலில் தன்னுடைய சகோதரனைத் தேடுகிறார். ஆகவே, தன்னுடைய ஆர்வம் மிகுந்த சகோதரனாகிய பேதுருவைப் பார்த்து, அந்திரேயா நற்செய்தியைச் சொல்லுகிறார், நாங்கள் வாக்குப்பண்ணப்பட்ட கிறிஸ்துவை, இரட்சகரைக் கண்டோம், அவர் கர்த்தரும் தேவஆட்டுக்குட்டியுமானவர். பேதுருவுக்கு ஒருவேளை சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் அந்திரேயா அவரை நம்பவைக்கிறார். அதன்பிறகு, பேதுருவும் சற்றுத் தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டு இயேசுவிடம் செல்கிறார்.
பேதுரு வீட்டிற்குள் நுழைந்தபோது, அவர் பேதுருவைப் பெயர்சொல்லி அழைத்தார். இயேசு பேதுருவின் மனதில் இருந்த காரியங்களை அறிந்தவராக அவருக்கு பாறை என்ற ஒரு பட்டப்பெயரைக் கொடுக்கிறார். இயேசு அவருடைய இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தையும் அவருடைய துடுக்குத்தனத்தையும் அறிந்திருந்தார். இயேசுவுக்கு அனைத்து இருதயங்களையும் தெரியும், அவை அவருக்கு முன்பாக திறந்தவைகளாகக் காணப்படுகின்றன. பேதுரு புரிந்துகொண்டு, இயேசுவின் பார்வையிலேயே அவருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டார். அவசரக்குடுக்கையான இந்த மீனவனை இயேசு பொறுமையோடு ஒரு உறுதியான பாறையாக மாற்றினார். கிறிஸ்துவில் அவர் திருச்சபையின் அடித்தளமானார். ஆகவே ஒருவகையில் ஆரம்பப்பணியைச் செய்த சீஷன் அந்திரேயாதான்.
இன்னொரு சீஷனும் தன்னுடைய சொந்த சகோதரனை கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்தினார். யோவான் தன்னுடைய சகோதரனாகிய யாக்கோபை இயேசுவினிடத்தில் வழிநடத்தினார். ஆனால் தாழ்மையின் காரணமாக இந்த இரண்டு பெயர்களையும் அவர் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. உண்மையில் யோவானும் அந்திரேயாவும்தான் காலத்தின்படி பார்த்தால் முதல் சீஷர்கள்.
இந்த அறிமுக வசனங்களின் அழகை ஒரு சூரிய உதயத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆம் இது ஒரு புதிய யுகத்தின் ஆரம்பம். இந்த சீஷர்கள் சுயநலமற்றவர்களாக தங்களுடைய சகோதரர்களை கிறிஸ்துவிடம் நடத்தினார்கள். இந்தக் காலத்தில் அவர்கள் வேறு இடங்களுக்குப் பிரயாணம் செய்து நற்செய்தியறிவிக்கவில்லை, தங்களுடைய உறவினர்களை கிறிஸ்துவிடம் நடத்தினார்கள். அவர்கள் நம்பிக்கைற்றவர்களையோ அரசியல்வாதிகளையோ தேடாமல், உடைந்த இருதயத்தோடும் மனந்திரும்புதலோடும் இறைவன்மேல் பசிதாகமுள்ளவர்களைத் தேடினார்கள். இவ்வாறு கிருபையின் நற்செய்தியை, அளவுக்கதிகமான வைராக்கியத்தினால் அல்ல, இயேசுவுடனுள்ள தொடர்பிலிருந்து வரும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். இந்த ஆரம்ப சீஷர்கள் ஒரு இறையியல் கல்லூரியை நிறுவவில்லை, தங்களுடைய சுயசரிதையையும் எழுதவில்லை, தங்களுடைய அனுபவத்தின் சாட்சியை தங்கள் வாயின் வார்த்தையினால் அறிவித்தார்கள். யோவான் இயேசுவைப் பார்த்தார், அவர் பேசியதைக் கேட்டார், அவரைத் தொட்டார், அவரை நம்பினார். இந்த நெருக்கமான உறவிலிருந்துதான் அவர்களுடைய அதிகாரம் பிறந்தது. இயேசுவை அவருடைய நற்செய்தியில் நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? உங்களுடைய நண்பர்களை பொறுமையுடனும் வெற்றியுடனும் கிறிஸ்துவிடம் நடத்தியிருக்கிறீர்களா?

யோவான் 1:43-46
43 மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக் கண்டு: நீ எனக்குப் பின்சென்றுவா என்றார். 44 பிலிப்பென்பவன் அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான். 45 பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். 46 அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.
இதற்கு முந்திய வசனங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற சம்பங்களை நாம் பார்க்கிறோம். முதல் நாளில் எருசலேமிலிருந்து அனுப்பப்பட்டவர்கள் வந்திருந்தார்கள்; இரண்டாவது நாளில் இயேசுவே தேவனுடைய ஆட்டுக்குட்டி என்று யோவான் அறிவித்தார்; மூன்றாவது நாளில் இயேசு நான்கு சீஷர்களைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டார். நான்காவது நாளில் பிலிப்பையும் நாத்தான்வேலையும் சீஷர்களுடைய வட்டாரத்திற்குள் அழைத்தார்.
பிலிப்பைத் தேடியவர் இயேசுதான். ஸ்நானகன் மூலமாக இயேசு அவர்கள் நடுவில் இருக்கிறார் என்பதை நிச்சயமாக பிலிப்பு ஏற்கனவே கேட்டிருப்பார். இயேசுவே தேவ ஆட்டுக்குட்டி என்று யோவான் ஸ்நானகன் சுட்டிக்காட்டியபோது பிலிப்பும் ஆச்சரியப்பட்டிருப்பார். பிலிப்பு கர்த்தரை அறிய விரும்பியபோதிலும், இயேசுவிடம் நேரடியாகச் செல்ல அவர் துணியவில்லை. தெய்வீக ஐக்கியத்திற்கு தான் தகுதியற்றவர் என்று அவர் நினைத்தார். ஆகவே இயேசு அவரிடம் சென்று அவருடைய ஐயப்பாட்டை நீக்கி, எழுந்து என்னைப் பின்பற்றிவா என்று அழைத்தார். மனிதர்களைத் தனக்கென்று தேரிந்துகொள்வதற்கு இயேசுவுக்கு உரிமையிருந்தது, ஏனெனில் அவரே அவர்களைப் படைத்தவர், நேசிக்கிறவர், விடுவிக்கிறவர். அவரை ஏற்றுக்கொள்வது நாமல்ல, அவரே நம்மைத் தெரிந்துகொள்கிறார். அவரே நம்மை முதலில் பார்க்கிறார், தேடுகிறார், கண்டுபிடிக்கிறார், அவருடைய சேவைக்கு நம்மை அழைக்கிறார்.
அவருடைய அழைப்பில்லாமல் நாம் அவரைப் பின்பற்ற முடியாது, கிறிஸ்துவிடம் இருந்து கட்டளையைப் பெறாவிட்டால் நாம் அவருக்குப் பயனுள்ள சேவை செய்ய முடியாது. தெரிவுசெய்யப்படாமல் இறைவனுடைய இராஜ்யத்தில் பணிசெய்பவன் தனக்கும் மற்றவர்களுக்கும் தீங்கு செய்கிறான். ஆனால் யாரெல்லாம் கிறிஸ்துவின் சத்தத்தைக் கேட்டு, உடனடியாகக் கீழ்ப்படிகிறார்களோ அவர்கள் கிறிஸ்துவின் மென்மையான பராமரிப்பை அனுபவிப்பார்கள். எல்லா நேரத்திலும் கிறிஸ்து அவர்களுக்குப் பொறுப்பாளியாயிருப்பார்.
பிலிப்பு சீக்கிரமாகவே நற்செய்தியறிவிக்கச் சென்றுவிட்டார்; தன்னுடைய நண்பனாகிய நாத்தான்வேலைப் பார்த்து அவருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்கிறார்; திருச்சபையின் செய்தியை அறிவிக்கிறார். நாங்கள் அவரைக் கண்டோம் என்கிறார். நான் அவரைக் கண்டேன் என்று கூறவில்லை. அவர் திருச்சபையின் விசுவாச அறிக்கையுடன் தன்னைத் தாழ்மையோடு இணைத்துக்கொள்கிறார்.
இயேசு தன்னுடைய பணியைக் குறித்து இந்த சீஷர்களுக்குச் சொல்லியிருப்பார் போல தெரிகிறது. யோசேப்புதான் இயேசுவை வளர்த்த தகப்பன். இயேசு பெத்தலகேமில் நடைபெற்ற தன்னுடைய பிறப்பைப் பற்றி எதுவும் சொல்லவில்லை, இந்த நிலையில் சீஷர்களுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது.
நத்தான்வேல் வேதாகமத்தில் தெளிந்த அறிவுடையவனாயிருந்தான். ஆகவே அவன் மோசே மற்றும் தீர்க்கதரிசிகளுடைய புத்தகங்களை ஆராய்ந்து, கிறிஸ்துவைக் குறிக்கும் வாக்குத்தத்தங்களை அறிந்துகொண்டான். வரப்போகிறவர் தாவீதின் சந்ததியில் வந்து பெத்தலகேமில் பிறப்பார் என்று அறிந்திருந்தான். மேசியா நாசரேத்திலிருந்து வருகிறார் என்ற உண்மையை நாத்தான்வேலால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாசரேத் ஒரு சிறிய ஊராயிருந்ததோடு, அதைப்பற்றி எந்தத் தீர்க்கதரிசனமும் பழைய ஏற்பாட்டில் இடம்பெறவில்லை. மேலும் அவருக்கு கலிலேயா மாகாணத்திலிருக்கும் இந்த நகரமானது செலோத்தியர்களுடைய கலகத்திற்கும் ரோமர்களுக்கு எதிரான தேசபக்திக்கும் பேர்போன இடம் என்பதும் தெரியும். அங்கு ஏற்பட்ட கலகம் அடக்கப்பட்டது, பெருமளவிலான இரத்தம் சிந்தப்பட்டது.
இந்தத் தகவல்களைக் குறித்து பிலிப்பிற்கு எந்தக் கவலையும் இல்லை. கிறிஸ்துவைக் கண்டதில் அவருக்கிருந்த மகிழ்ச்சி பெரிதாயிருந்தது. அவருடைய ஆர்வம் நாத்தான்வேலுடைய சந்தேகங்களை மேற்கொண்டது. எந்த வாதத்திற்குள்ளும் அவர் நுழையாமல், வந்து பார் என்று குறிப்பிட்டார். சத்தியத்திற்காக அனுபவத்தின் அடிப்படையில் நற்செய்திப்பணி செய்யும்போது இந்த விதிமுறை மிகவும் முக்கியமானது. மக்களை வந்து பாருங்கள் என்று நாம் அழைக்க வேண்டும். இயேசுவைப் பற்றி வாதம் செய்யாதீர்கள். அவருடைய அனுபவமே அவருடைய வல்லமையாகவும் ஐக்கியமாகவுமிருக்கிறது. நம்முடைய சாட்சி கற்பனையான சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டிராமல், உண்மையான கர்த்தராகிய ஒரு நபரை அடிப்படையாகக் கொண்டது.

யோவான் 1:47-51
47 இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். 48 அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார். 49 அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். 50 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். 51 பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இயேசு தன்னுடைய உள்ளான காரியங்களை அறிந்திருக்கிறார் என்பதைக் கண்ட நாத்தான்வேல் திகைப்புற்றான். பழைய ஏற்பாட்டுத் தரத்தின்படி நாத்தான்வேல் ஒரு விசுவாசியாகக் காணப்பட்டான். ஏனெனில் அவன் தன்னுடைய பாவங்களை ஸ்நானகனிடம் அறிக்கை செய்திருந்தான், இறைவனுடைய இராஜ்யம் வருவதற்கு முழுமனதுடன் காத்திருந்தான். இது அவனுடைய சுய நீதியான ஒரு செயலல்ல, தங்கள் பாவங்களினிமித்தம் மனமுடைந்து, இறைவன் தங்களுக்கு மேசியாவாகிய இரட்சகரை அனுப்ப வேண்டும் என்று கூப்பிடும் மக்களுடைய மனநிலை. இயேசு இந்த விண்ணப்பத்தைக் கேட்டார், ஒரு மர நிழலில் முழங்கால்படியிட்டு விண்ணப்பிக்கும் நபரையும் அவர் பார்த்தார். இவ்வாறு மனிதருக்குள்ளிருக்கும் காரியங்களை அறியும் சக்தி இறைவனுக்குரியது. இயேசு அவனைப் புறக்கணியாமல் நீதிமானாக்கினார். கிறிஸ்துவின் வருகைக்காக எதிர்பார்த்திருக்கும் பழைய ஏற்பாட்டு விசுவாசிகளுக்கு அவன் மாதிரியானவன் என்றும் குறிப்பிட்டார்.
கிறிஸ்துவின் பாராட்டு அவனுடைய சந்தேகங்களை நீக்கிவிட்டது. அவன் இயேசுவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து, வேதாகமத்தில் அவருக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள பட்டங்களாகிய இறைமகன், இஸ்ரவேலின் இராஜா போன்ற பட்டங்களைச் சொல்லி அவரைக் கனப்படுத்தினான். வேதபாரகரும் யூத ஆலோசனைச் சங்கத்தாரும் இறைவனுக்கு மகன் இல்லை என்று மறுதலிப்பதால், நாத்தான்வேலின் இந்தப் பதங்கள் அவனுக்கு மரண தண்டனையைக்கூட கொடுத்திருக்கும். அப்படிப்பட்ட கூற்றுக்கள் தேவதூஷணமாகக் கருதப்படும். ஒரு மனிதன் தன்னை இஸ்ரவேலின் இராஜா என்று சொன்னால் அவனை ஏரோது துன்புறத்துவான், அதேபோல ரோம அதிகாரங்களும் சிறைப்பிடிக்கும். இவ்வாறு தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட முக்கியமான வாக்குத்தத்தங்களின் பொருளை இந்த உண்மையான விசுவாசி எவ்வளவு தெளிவாக அறிந்திருந்தான் என்பது வெளிப்படுகிறது. அவன் மனிதருக்குப் பயப்படுவதைக் காட்டிலும் இறைவனுக்குப் பயந்தவனாக பிதா கொடுத்த பட்டங்களைச் சொல்லி கிறிஸ்துவை மகிமைப்படுத்தினான். அதற்காக அவன் எந்த விலையையும் கொடுக்க ஆயத்தமாயிருந்தான்.
இதற்கு முன்னிருந்த சீஷர்களில் எவரும் நாத்தான்வேல் கூறிய நாமங்களைக் கூறுவில்லை. இயேசு இந்தப் பட்டங்கள் எதையும் மறுதலிக்காமல், வானங்கள் திறக்கப்படுவதன் மூலமாக அவனுடைய அறிவை இன்னும் அதிகப்படுத்தினார். இந்த சம்பவங்கள் நடைபெறும்போதே காணப்படாத தேவதூதர்கள், கிறிஸ்துவின் அற்புதங்களை பிதாவிடம் சொல்லுவதும், பிறகு குமாரனிடத்தில் இறங்கி வருவதுமாக, கைநிறைய ஆசீர்வாதங்களுடன் போய்வந்துகொண்டிருந்தனர். இவ்வாறு யாக்கோபின் தரிசனம் நிறைவேறியது. ஏனெனில் இயேசுவில்தான் ஆசீர்வாதங்கள் அனைத்தும் நிறைவடைகிறது. பவுல் எழுதியதைப் போல, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்தரம் உண்ரவதாக. அவர் உன்னதங்களிலே சகல ஆசீர்வாதங்களினாலும் நம்மை அசீர்வதித்திருக்கிறார். இயேசுவின் பிறப்பினிமித்தமாகவும் அவருடைய ஞானஸ்நானத்தின் நிமித்தமாகவும் பரலோகம் திறந்திருந்தது. அதற்கு முன்பாக பரலோகம் இறைவனுடைய கோபத்தின் காரணமாக மூடப்பட்டிருந்து, தேவதூதர்கள் உருவின பட்டயத்துடன் அதன் வாசலில் காவல் இருந்தார்கள். இறைவனிடம் செல்லும் வாசல் இப்போது கிறிஸ்துவுக்குள் திறக்கப்பட்டுள்ளது.
இங்கே முதல் தடவையாக இயேசு திரும்பத்திரும்பக் கூறிய சொற்றொடரை யோவான் பயன்படுத்துகிறார், மெய்யாகவே, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். இந்தக் கிருபையின் காலத்தின் மெய்மை மனித அறிவுக்கு அப்பாற்பட்டது. ஆனாலும் இதுவே நம்முடைய விசுவாசத்திற்குத் தேவையான தெய்வீக அடிப்படை. எப்பொழுதெல்லாம் இயேசு இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்துகிறாரோ அப்பொழுது நாம் கவனமாக கவனிக்க வேண்டும். ஏனெனில் அதன்பிறகு மனித சிந்தைக்கு அப்பாற்பட்ட ஒரு ஆவிக்குரிய வெளிப்பாட்டை இயேசு கூறுவார்.
இந்த அறிவித்தலுக்குப் பிறகு கிறிஸ்து அவருக்கும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் வரப்போகும் உபத்திரவங்களைக் குறித்த எச்சரிக்கையாக நாத்தான்வேலின் சாட்சியைச் சரிசெய்கிறார். இயேசு தன்னை வாக்குப்பண்ணப்பட்ட இராஜா என்றும் இறைவனுடைய மகன் என்றும் கூறாமல் மனித குமாரன் என்று அழைத்தார். இந்தப் பட்டப்பெயரைத்தான் இயேசு பொதுவாக தனக்குப் பயன்படுத்தினார். அவருடைய மனுவுருவாதல் ஒப்பற்றது; அவர் நம்மைப்போல மாறினார் என்பது மிகப்பெரிய அற்புதம், தேவகுமாரன் மனித குமாரனானார். தேவஆட்டுக்குட்டியாக நமக்காக மரிப்பதற்காக அப்படியானார்.
அதேபோல மனித குமாரன் என்ற பட்டப்பெயர் தானியேலின் புத்தகத்திலுள்ள ஒரு இரகசியத்தைக் குறிக்கிறது. இறைவன் நியாயம் தீர்க்கும் பொறுப்பை மனித குமாரனுக்குக் கொடுத்திருக்கிறார். இயேசு சாதாரணமாக இராஜாவோ குமாரனோ மட்டுமல்ல, உலகங்களை நியாயம்தீர்க்கும்படி மனித உருவில் வந்த தெய்வம் என்பதை நாத்தான்வேல் உணர்ந்துகொண்டான். இவ்வாறு துக்கம் நிறைந்த விசுவாசியை விசுவாசத்தின் உயர்ந்த நிலைக்கு இயேசு அழைத்துச் சென்றார். இயேசு கிராமப்புறத்திலிருந்து வந்த வாலிபனாக இருப்பதால், அப்படிப்பட்ட விசுவாசம் இலகுவான ஒன்றல்ல. வானங்கள் திறக்கப்படுவதன் மூலமாக அவரில் மறைந்திருந்த மகிமையை விசுவாசத்தினால் சீஷர்கள் கண்டார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.