எஸ்றா அறிமுகம்

(1) எஸ்றா அறிமுகம்

பரிசுத்த வேதாகமத்தில் - பழைய ஏற்பாட்டில் உள்ள எஸ்றாவின் புத்தகத்தைத் திறந்த மாத்திரத்தில் சில வியத்தகு வார்த்தைகளால் அப்புத்தகம் ஆரம்பிக்கப்படுவதை நாம் காணமுடிகிறது. அதாவது கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினார் எனக் காண்கிறோம். கர்த்தர் ஏன் ஒரு யூதனல்லாத புறஜாதியான இராஜாவின் ஆவியை ஏவவேண்டும்?


யூதர்கள் 70 ஆண்டுகாலம் சிறையிருப்பில் இருந்தபின்னர் இது எழுதப்பட்டது. கர்த்தர் தமது ஜனங்களின் இத்தனைக்கால சிறையிருப்பை அனுமதித்தது ஏன்?

இஸ்ரவேலர்களின் வரலாறு ஆபிரகாம் முதல் ஆரம்பமாகிறது.

வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள மிகப்பெரிய சிலரில் ஆபிரகாமும் ஒருவன். அவன் தேவனுடைய சிநேகிதன் எனப்பட்டான் (யாக்.2:23) அவன் முதல் முதலில் தேவனை வணங்காத மக்களாகிய கல்தேயருடைய நகரமாகிய ஊர் என்ற பட்டணத்திலே வாழ்ந்து வந்தான் (ஆதி. 11:31). அங்கே தேவன் அவனோடே பேசி அந்தத் தேசத்தையும் அவனுடைய இனத்தையும் விட்டுப்புறப்பட்டு புதியதொரு தேசத்திற்குப் போகக் கட்டளையிட்டார். ஒரு புதிய ஜாதியை உண்டாக்குவேன் என்றும் அவர்களுக்கு ஆபிரகாம் தலைவனாக இருப்பான் என்றும் தேவன் சொன்னார் (ஆதி.12:1-3). அதற்குப் முன்பு இது போன்றதொரு நிகழ்ச்சி நடந்ததில்லை என்றபோதிலும் ஆபிரகாம் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து கானான் தேசத்திற்குச் சென்றான். அப்போது அவனுக்கு 75 வயது. அவன் மனைவி சாராளுக்கு 65 வயது. அவர்களுக்குக் குழந்தையில்லை. அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்று தேவன் சொன்னது எப்படி நடக்கும்? ஆனால் தேவன் சொன்னதை ஆபிரகாம் விசுவாசித்தான். அவன் கர்த்தருக்கு கீழ்ப்படிந்தான். அவன் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து தனது தேசத்தை விட்டுப் புறப்பட்டான். கர்த்தருடைய வாக்;குத்தத்தங்கள் நிறைவேறின (யாக்.2:23). தேவன் செய்த அற்புதத்தினால் சாராள் முதிர்வயதிலே ஈசாக்கைப் பெற்றாள். உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன், என்று கர்த்தரால் உரைக்கப்பட்டது ஆரம்பமாயிற்று (ஆதி.21:1,2).

ஆபிரகாம் மரித்தபின்பு அந்தப் புதிய தேசத்தாருக்கு நேரிடப்போவது என்ன என்றும் கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொல்லியிருந்தார். உன்னுடைய சந்ததியார் தங்களுடைய அல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து அத்தேசத்தாரை சேவிப்பர் என்றும் அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும் நீ நிச்சயமாய் அறியக்கடவாய். இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயம் தீர்ப்பேன். பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள். நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்திற்குத் திரும்புவார்கள் (ஆதி. 15:13-14). நடைமுறையில் நடந்த வரலாறுகள் அதுவே. ஆபிரகாமின் தேசத்து மக்கள் இஸ்ரவேலர், எகிப்து தேசத்திலே அடிமைகளாக இருந்து, பின்னர் தேவன் அவர்களை மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டுவரச்செய்தார் (யாத்.12:36). அவர்கள் மோசேயினால் செங்கடலைக்கடந்து பத்திரமாய் அழைத்து வரப்பட்டார்கள். அவர்களைத்துரத்திக்கொண்டு வந்த எகிப்தியரோ செங்கடலில் மூழ்கி அழிந்து போனார்கள் (யாத். 14)

இது கர்த்தரின் உன்னதமான அற்புதத்தில் ஒன்றாகும். கழுகுகளின் செட்டைகளின்மேல் வைத்து அவர்களைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொன்னார். அப்படியே அடிமைத்தனத்தினின்று அவர்களை மீட்டு வந்தார். அவ்வாறு மீட்டதில் கர்த்தர் குறிப்பிட்டதொரு நோக்கம் கொண்டிருந்தார். ஆபிரகாமைத் தனது பிள்ளையாக அவர் பிரித்து அழைத்ததுபோல தேவன் அவர்களையும் தனது சொந்தப்பிள்ளைகளாக்க எகிப்திலிருந்து பிரித்து அழைத்து வந்தார். அவர்களை ஒரு தனிப்பட்டவர்களாக, ஒரு தூய இனத்தினராக, கர்த்தரை நேசித்து கர்த்தருக்கு கீழ்ப்படிகிற மக்களுக்கு அவர் என்ன நன்மை செய்கிறார் என்பதனை வெளிப்படுத்த அவர்களைப் பிரித்து அழைத்துவந்தார். மற்ற எல்லாரையும்விட அவர்களுக்காக தேவன் அதிக அக்கறை கொண்டு ஆசீர்வதித்து அவர்களைத் தனது பொக்கிஷமாக அவர் தனக்காக அவர்களைப் பிரித்து அழைத்து வந்தார். எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள் என்று தேவன் அவர்களைப் பார்த்து சொன்னார் (யாத்.19:5,6).

ஆகையால் கர்த்தராகிய தேவன், அவர்கள் தங்கள் விருப்பத்தின்படியே ஓர் இராஜாவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுவதற்கு அனுமதியளித்தார். ஆனால் அத்தகைய ஒரு செயலின் விளைவுகளைக் குறித்து சாமுவேல் அவர்களை எச்சரித்தான். அந்த ராஜா உங்களைத் தன் ரதத்திற்கு முன் ஓடும்படி...... ரதசாரதிகளாகவும் தன் குதிரை வீரர்களாகவும் வைத்துக்கொள்வான்..... தன் நிலத்தை உழுகிறவர்களாகவும்.... வைத்துக்கொள்வான். உங்கள் குமாத்திகளைச் சமையல் பண்ணுகிறவர்களாகவும்...... வைத்துக்கொள்வான். உங்கள் வயல்களில் ..... நல்லவைகளை எடுத்துக்கொண்டு தன் வேலைக்காரருக்குக் கொடுப்பான்.. என்றெல்லாம் விளக்கிக் கூறினான் (1சாமு. 8:11-15). ஆனால் அந்த இஸ்ரவேலர் சாமுவேலின் வார்த்தைகளுக்குச் செவி சாய்க்கவில்லை. எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும் (1.சாமு.8:19) என்று கூக்குரலிட்டனர். அவர்களைத் தடுக்க முடியவில்லை. அவர்கள் தங்கள் ராஜாவை வேண்டிப் பெற்றனர். அதோடு கர்த்தர் கூறியபடி அதனுடன் பல தொல்லைகளையும் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒரு சில ராஜாக்கள் மட்டுமே கர்த்தரைச் சேவித்தனர். மற்றவர்களோ தேவனை மறந்து, மக்களும் கர்த்தரின் வழிகளை விட்டு விலக காரணமாயிருந்தனர். சில இராஜாக்கள் இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரத்தார் தங்களுக்குள்ளே போரிட காரணமாகவும் இருந்தனர். அந்தப் பன்னிரண்டு கோத்திரத்தார் இரு பிரிவாகப் பிரியும் நிலை ஏற்பட்டு பத்து கோத்திரத்தைச் சேர்த்தவர்கள் இஸ்ரவேலர். மற்ற இரண்டு கோத்திரத்தைச் சேர்த்தவர்கள் யூதா என்றும் பிரிந்து போயினர். இஸ்ரவேலரைச் சேர்ந்த பல மன்னர்கள் தேவனுடைய தீர்க்கதரிசிகளைப் புறக்கணித்து, விக்கிரகங்களைப் பணிந்துகொள்ளத் தலைப்பட்டனர். தேவன் அவர்களைப் பல ஆண்டுகளாக எச்சரித்து பொறுமையாலே திருத்த முயன்றார். நெடுநாள் துன்பங்களை அனுபவித்து அவர்கள் அசீரியர்களினால் தோற்கடிக்கப்பட்டு, அந்தப் பத்து கோத்திரத்தாரும் சிறைப்பிடிக்கப்பட்டனர். தேவன் இதை அனுமதித்தார் (2.இரா.17:5-23). இந்த இழிநிலை அவர்களுக்கு ஏன் ஏற்பட்டதென்று வேதம் நமக்குக் கூறுகிறது. தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இஸ்ரவேல் புத்திரர் பாவம் செய்து அந்நிய தேவர்களுக்குப் பயந்து நடந்தார்கள் (2.இரா.17:7).

பத்து கோத்திரத்தார் அசீரியரால் சிறைப்பிடிக்கப்பட்ட பின்பு மீதியிருந்தவர் யூதா கோத்திரத்தாரும் பென்யமீன் கோத்திரத்தாருமே. அவர்களும் கர்த்தரைச் சேவிக்க தவறிவிட்ருந்தனரென்றும் கர்த்தர் அவர்களுக்குச் சம்பவிக்கப் போகிறவைகளைக் குறித்து எச்சரிக்கத் தமது தீர்க்கதரிசிகளை அனுப்பியிருந்தார் (2.இரா.21:20-15). ஆனால் அவர்களோ தீர்க்கதரிசிகளின் எச்சரிக்கைகளுக்குச் செவிசாய்க்கவில்லை. யூதாவின் இராஜாக்கள் தீர்க்கதரிசிகளைச் சிறையிலடைத்து துன்புறுத்தினதுமல்லாமல் அவர்களில் சிலரைக் கொலை செய்துவிட்டனர் (எரே.37:15, 26:20-23). கடைசியாக சிதேக்கியா இராஜாவின் ஆட்சியின் காலத்தில் பாபிலோனிய மன்னரான நேபுகாத்நேச்சார் யூதாவின் மக்களையும் பென்யமீன் கோத்திரத்து மக்களையும் தோற்கடித்து சிறைபிடித்து செல்லும்படி கர்த்தர் செய்தார் (2.இராஜா.25) கர்த்தர் தமது கோபத்தைக் குறித்தும் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் அவர்களின் விக்கிரக ஆராதனையின் இழித்தனம்பற்றியும் விளைவுகள் பற்றியும் பின்னர் ஆட்சிசெய்த நான்கு இராஜாக்களையும் கடுமையாக எச்சரித்தார். ஏசாயா, அவர்கள் காடுகளையும் தோப்புக்களையும் வெட்டி எரித்தும் மீதியுள்ள மரங்களினால் விக்கிரகங்கள் செய்து வணங்கியது பற்றியும் கூறி அவர்களை எச்சரித்து ஒரு துண்டு அடுப்பில் எரிக்கிறான். குளிர் காய்கிறான்... மீதியான துண்டை விக்கிரகமாகச் செய்து.... அதை வணங்குகிறான்...என்று பகடியாய் பேசி கேலி செய்தான் (ஏசாயா. 44:15-17). அப்போது இருந்த மற்றத் தீர்க்கதரிசிகளான ஓசியா, மீகா, ஆகியோரும் அவர்களுடைய விக்கிரக ஆராதனைப்பற்றி அவர்களை எச்சரித்தனர்.

அதற்குப்பின்னர் ஆட்சி செய்த மூன்று இராஜாக்களின் காலத்தில் எரேமியா தீர்க்கதரிசி அவர்களை மேலும் நம்பிக்கையோடு எச்சரித்தான். மனுஷன் தனக்கு தேவர்களை உண்டுபண்ணலாமோ? அவைகள் தேவர்கள் அல்லவே. ஆதலால், இதோ இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப் பண்ணுவேன், என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன். என் நாமம் யேகோவா என்று அறிந்து கொள்வார்கள்.. (எரே.16:20-21). என்றெல்லாம் எரேமியா அவர்கள் சிறைப்பட்டுப்போகும் காலம் வரைக்கும் அவர்களை எச்சரித்தான்.

அப்போஸ்தலனாகிய பவுல் அதைக்குறித்து கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்ல (அப்.19:26) என்று கூறியுள்ளார். அவர் விக்கிரக வணக்கத்தை எதிர்த்துப் போதித்துள்ளார். ஆகையால் விக்கிரகங்களைத் தொழுவது எவ்வளவு மதியீனம் என்பது நன்கு புரியும். நமது வீடுகளில் விக்கிரகங்கள் இல்லையெனில் இத்தகையதொரு பாவத்தினின்று நாம் விடுபட்டவர்கள் என்று நாம் எண்ணலாம். ஆனால் விக்கிரகம் எனப்படுவது கல்லினாலும், கட்டையினாலும் மட்டும் செய்யப்படும் உருவங்களே என்பதல்ல. ஆனால் கர்த்தருக்கும் நமக்கும் இடையில் இடையூறாக வரும் ஒரு மனிதனோ அல்லது ஒரு பொருளோ கூட விக்கிரகமே. அது ஒரு நல்ல பொருளாகக்கூட இருக்கலாம். ஆனால் நமது கால நேரம் அப்பொருளினால் கவரப்பட்டு கடவுளுக்கு நாம் செலவிடும் நேரத்தைக் கெடுப்பதாயின் அதுவும் ஒரு விக்கிரகமே. இப்பொழுது நீர் சிந்தித்து முடிவு கூறும். உமக்கு ஒரு விக்கிரகம் உண்டோ?.

அடுத்து மற்றுமொரு தேவ கட்டளையை இஸ்ரவேலர் புறக்கணித்து வந்தனர். அது அவர்கள் உழுது பயிரிட்ட நிலங்களைப் பற்றியதாகும். ஒவ்வொரு ஏழாம் வருஷத்திலும் வயலை விதைக்காமல் திராட்சை தோட்டத்தைக் கிளை கழிக்காமலும் இருக்கவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டிருந்தார் (லேவி.25:4). ஆனால் அவர்கள் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை அந்தக் கீழ்ப்படியாமையின் விளைவாக என்ன நேரிடும் என்று தேவன் தனது பிள்ளையான மோசேயின் மூலம் அவர்களுக்கு எச்சரித்திருந்தார். நான் தேசத்தைப் பாழாக்குவேன். அதிலே குடியிருக்கிற உங்கள் சத்துருக்கள் பிரமிப்பார்கள்... அப்பொழுது தேசம் ஓய்வடைந்து- பாழாய் கிடக்கும் நாளெல்லாம்... ஓய்வு நாட்களை ரம்மியமாய் அநுபவிக்கும்... (லேவி. 25:32-35) என்று எச்சரித்தனர்.

பிறகு கர்த்தர் யூதாவைச் சிறைப்படுத்திப் போட்டார். தனது ஓய்வு வருஷங்களை இரம்மியமாய் அனுபவித்துத்தீருமட்டும்... எழுபது வருஷம் முடியும் மட்டும்... (2.நாளா.36:21) தீர்க்கதரிசியாகிய எரேமியாவும் இந்த எழுவது ஆண்டுகளைப் பற்றி தீர்க்கதரிசனம் உரைத்துள்ளான் (எரே. 25:1). ஆனால் அவர்களோ கர்த்தருடைய கட்டளைக்குச் செவிசாய்க்கவில்லை. அவர்களை யார் சிறைப்படுத்திக் கொண்டுபோவான் என்று எரேமியா தீர்க்கதரிசி உரைத்துள்ளான் (எரே. 21:4-10). கர்த்தருடைய கடுமையான வார்த்தைகளை எரேமியா உரைத்துக் கூறி நான் நீட்டின கையினாலும் பலத்த புயத்தினாலும் கோபமும் உக்கிரமும் மகா கடுமையாக உங்களோடு யுத்தம் பண்ணி---- (எரே.21:5) என்று கர்த்தரின் கோபத்தை வெளிப்படுத்தினான். ஆனால் அவர்களோ கர்த்தருக்குப் பயந்து தங்கள் வழிகளை மாற்றிக்கொள்ளவில்லை.

கர்த்தர் இன்று கூறுவது யாதெனில், இதோ நான் உங்கள் முன்னே ஜீவ வழியையும் மரணவழியையும் வைக்கிறேன், என்பதாகும். மேலும் கர்த்தர் எச்சரித்துக் கூறுவதாவது, அவரை (தேவ குமாரனாகிய கிறிஸ்துவை) விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டான். விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரே பேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவாக இராதபடியால் அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.... (யோவான்,3:18). என்ற போதிலும் உலகம் இந்தக் கடும் வழிகளை மாற்றிக் கொள்ள மக்கள் மறுக்கின்றனர். உன்னைப் பற்றி நீ யாது கூறுகிறாய்? நீ கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிய விரும்புகிறாயா?

கர்த்தர் இஸ்ரவேலில் அல்ல. ஒரே புற ஜாதியினானான இராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைத் தெரிந்து கொண்டு, தனது மக்களுக்கு விரோதமான திட்டங்களைச் செயல்படுத்த சித்தங் கொண்டார். அந்தப் புறஜாதி ராஜாவை தேவன், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என அழைக்க விரும்புகிறார் (எரே.25:9, 27:6). கர்த்தராகிய தேவன் தாம் தெரிந்து கொண்ட யார் ஒருவனையும் கொண்டு தமது சித்த்ததை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார். சகல இயற்கைச் சத்துருக்களின் மேலும் தேவன் அதிகாரம் கொண்டவராய் இருக்கிறார் (யாத்.10:21). அதுமட்டுமன்றி, எல்லா பிராணிகள் மேலும் (எண்.22:28), தேவ தூதர்களின் மேலும் (தானி.6:22), அசுத்த ஆவிகளின் மேலும் (மாற்.9:25,26) அதிகாரமுடையவராயிருக்கும் தேவன் இங்கே ஒரு புறஜாதி இராஜாவை தனக்குக் கீழ்ப்படிந்தவராகத் தெரிந்து கொண்டார். இதுபோலவே, பல வேளைகளில் தனது பிள்ளைகளுக்கு உதவி செய்யவும் புறஜாதி இராஜாக்களைத் தேவன் தெரிந்துகொண்டுள்ளார். எகிப்தின் இராஜாவாகிய பார்வோன் மன்னரைத் தெரிந்து கொண்டு அவனுக்கு குழப்பத்தை உண்டாக்கிய சொர்ப்பனங்களை ஏற்படுத்தினார். அந்தச் சொர்ப்பனங்களின் அர்த்தங்களை விடுவித்துச்சொன்னவன் யோசேப்பு என்ற யூதன். அவன் அந்த இராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்திற்கு அந்த அரண்மனையில் உயர்த்தப்பட்டு, யூதர்களின் முற்பிதாக்களாகிய அவனுடைய குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்வளிக்கக் கர்த்தர் கிருபை செய்தார் (ஆதி.41)

அது போலவே கர்த்தர் தமது பிள்ளையாகிய தானியேலை நேபுகாத்நேச்சார் இராஜாவின் சிறையிருப்பில் இருந்து உயர்ந்ததொரு பதவிக்கு உயரச் செய்தார் (தானி.2). பெர்சியாவின் இராஜாவாகிய அர்த்சஷ்டா அரசாளுகிற காலத்தில் (இவரும் ஒரு புறஜாதி இராஜா) கர்த்தரின் சித்தத்தன்படி நெகேமியா எருசலேம் நகரின் அலங்கங்கள் அனைத்தையும் கட்டி முடிக்க அந்த இராஜா எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தான் (நெகே.2). கர்த்தர் எல்லா இராஜாக்களுக்கும் மேலானவர். அவர் தமது சித்தத்தை நிறைவேற்ற யாரையும், அல்லது எந்த சக்தியையும் அசைக்க வல்லவராய் இருக்கிறார்.

எஸ்றாவின் புத்தகம் எழுத துவக்கப்படும்போது, எரேமியா தீர்க்கதரிச முன்னறிவித்தபடி யூதா இராஜ்யங்கள், எழுபது ஆண்டுகால சிறையிருப்பில் புறஜாதி இராஜாக்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இத்தகைய சிறையிருப்பும் பாபிலோனிய இராஜாக்களின் ஆட்சியும் கர்த்தரின் சித்தம் நிறைவேறத்தக்கதாக முடிவு பெறும் நாள் வந்தது (தானி.5:26).

கர்த்தர் நம்மைக்குறித்தும் அவ்வாறே நினைக்கிறார். நாம் பிரத்தியேகமானவர்களாகவும் பரிசுத்த ஆசாரியக் கூட்டமாகவும் (1பேது.2:5) இருக்கவேண்டுமென்று தேவன் விரும்புகிறார். நாம் அவரை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அப்பொழுது அவர் தேவ அன்பையும் தேவ இரக்கத்தையும் நமக்கு வெளிப்படுத்துவார். கிறிஸ்தவர்களாகிய நமக்கு தேவ அன்பும் இரக்கமும் ஏற்பட இவ்வுலகத்தில் மத்தியில் இருந்து நாம் புறப்பட்டுப் பிரிந்து போகவேண்டும் (2கொரி.6.17). பிரிந்து என்று சொல்லும்போது உலகை விட்டுச் சென்றுவிடுதல் அல்ல. அன்றாட வாழ்க்கையில் நாம் மறைந்து ஒளிந்து கொள்ளுதலும் அல்ல (யோவான் 17:15) உலகத்தில் இருந்து நாம் வேறுபட்டவர்களாகக் காணும்படி நமது வாழ்க்கையை நாம் அமைத்துக்கொள்ளவேண்டும். நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று மற்றவர்கள் புரிந்து கொள்ளும்படி வாழவேண்டும். இத்தகையதான நமது தூய வாழ்க்கை மற்றவர்களையும் கிறிஸ்தேசுவின் அன்பிற்குள் அழைத்து வரமுடியும் (அப்.16:25-33).

கர்த்தர் அவர்களை எகிப்திலிருந்து மீட்டு வந்தார். அதற்குப் பதிலாக அந்த இஸ்ரவேலரும் கீழ்ப்படிந்து கர்த்தருடைய கட்டளைகளைப் பின்பற்றினார்கள். (யாத்.19:8) கர்த்தர் சொன்னவைகளைச் செய்வோம் என்றார்கள். ஆகையால் கர்த்தர் மோசேக்கு தனது கட்டளைகளைக் கொடுத்தார். அந்தக் கட்டளைகள் இஸ்ரவேலருக்கு அருளப்பட்டது.

அந்தக் கற்பனைகளில் பிரதானமான முதல் கற்பனையாதெனில் என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். யாதொரு சொரூபத்தையாகிலும் விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். இவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம் என்பதே... (யாத் 20:3-5, மாற்.12:30). இது ஒரு நியாயமான சட்டமும் கூட ஏனெனில் எகிப்து தேசத்தில் இருந்து அவர்களை அழைத்து வந்தவரும் காத்து வந்தவருமான கடவுள் அவரே. ஆகையால் அவர்கள் தொழவேண்டிய கடவுளும் அவரேயாகும்.

ஆனால் இஸ்ரவேலரோ இந்த வாக்குறுதியை மறந்து இந்த முக்கியமான கற்பனையைப் புறக்கணித்தார்கள். எகிப்தின் எல்லைகளைவிட்டு அவர்கள் கடந்து வந்தபோது, தேவன் மறந்து பொன்னணிகளையும் ஆபரணங்களையும் உருக்கி விக்கிரகங்களை வார்ப்பித்தார்கள். வார்ப்பித்த விக்கிரகத்தை வணங்கவும் செய்தார்கள் (யாத்.32:8). அவ்வாறு செய்தவர்களில் பலர் எகிப்திலே, தேவனுடைய வல்லமையால் எகிப்தியர் வாதைகளுக்கு உட்படுத்தப்பட்டதைக் கண்டார்களே. அத்தகைய வாதைகளினால் எகிப்தியரின் தலைச்சன் பிள்ளைகள் அழிக்கப்பட்டபோது, கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வாசலின் நிலைக்கால்களில் இரத்தம் தெளிக்கப்பட்டபோது இஸ்ரவேலரின் தலைப்பிள்ளைகள் கொல்லப்படாமல் இருந்ததனையும் நேரில் கண்டவர்களே (யாத்.12). செங்கடலைப் பிளந்து, நீரைத் தேக்கி கட்டாந்தரை வழியாக கடந்து வந்தபோது பின் தொடர்ந்து வந்த எகிப்தியரை தேவன் அழித்த அற்புதங்களையும் இவர்கள் கண்டவர்களே. என்றபோதிலும் இவை யாவற்றையும் மறந்து தங்கள் சொந்தக் கைகளினால் படைத்த, பேசக்கூடாத விக்கிரகங்களை அவர்கள் வணங்கினார்கள். கர்த்தர் கோபம் கொள்ளாரோ! மோசேயை நோக்கி, இந்த ஜாதியை அழித்து புதியதொரு ஜாதியை உண்டாக்குவேன். அதற்கு நீயே தலைவனாக இருப்பாய் என்று தேவன் கூறினார். ஆனால் மோசே கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். ஆண்டவரே உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால் எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருள வேண்டும் என்று மன்றாடினான் (யாத்.24:9). கர்த்தர் அவனுடைய மன்றாட்டுக்குச் செவிகொடுத்தார். அவர்களோடு தேவன் சென்றார். தொடர்ந்து அவர்களை நேசித்து அவர்களுக்குத் துணை புரிந்தார். அவர்கள் வனாந்தரங்களில் சுற்றித் திரிந்த 40 ஆண்டு காலமும் தேவன் அவர்களை நேசித்துத் துணைபுரிந்தார்.

மோசே மரணமடைந்தபின்பு யோசுவா இஸ்ரவேலர்களை வழி நடத்திச் சென்று, கர்த்தரால் வாக்களிக்கப்பட்ட கானான் தேசத்தில் சேரச் செய்தான். யோசுவா இறந்த பின்பு இஸ்ரவேலர் மறுபடியும் அன்னிய தேவர்களைப் பின் பற்றிச் சோரம் போய் அவைகளைப் பணிந்து, கொண்டார்கள் (நியா.2:17) அதனால் கர்த்தர் கோபம் கொண்டு, தோற்கடிக்கப்படும்படி, மறுபடியும் மறுபடியும் அவர்களை நியாயம் விசாரிக்க நியாயாதிபதிகளை கர்த்தர் ஏற்படுத்தினார். ஆனால் அவர்கள் திரும்பவும் கர்த்தரைப் புறக்கணித்து அந்நிய தேவர்களைத் தங்களுக்கு தேவனாக ஏற்றுக் கொண்டார்கள் (நியா.8:33).

பின்பு கர்த்தர் சாழுவேல் தீர்க்கதரிசியை அவர்களுக்கு அனுப்பினார். சாமுவேல் கர்த்தரின் வார்த்தைகளை அவர்களுக்கு உபதேசித்து அவர்களை வழிநடத்தினார். சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் அவர்கள் வேறு விக்கிரகங்களையோ அந்நிய தெய்வங்களையோ நாடவில்லை. சாமுவேல் முதிர் வயதானபோது அவர்கள் சாமுவேலினிடத்தில் வந்து, சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு ஒரு இராஜா ஏற்படுத்த வேண்டும் என்றார்கள் (1சாமு.8:5). சாமுவேல் இது குறித்து மிகவும் குழப்பம் அடைந்து கர்த்ரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். கர்த்தர் அவர்கள் இருதயத்தை நன்கு அறிந்திருந்தார். யாரை இராஜாவாக்க வேண்டும் என்று அறிந்திருந்தார் (உபா.17;14). கர்த்தர் சாமுவேலை நோக்கி, .......அவர்கள் உன்னைத் தள்ளவில்லை. நான் அவர்களை ஆளாதபடிக்கு என்னைத்தான் தள்ளினார்கள். நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள் முதல் இந்நாள் மட்டும் அவர்கள் என்னை விட்டு, வேறே தேவர்களைச் சேவித்து வந்த தங்கள் எல்லா செய்கைகளின்படியும் செய்ததுபோல் அவர்கள் உனக்கும் செய்கிறார்கள் (1சாமு.8:7-8) என்றார். அந்த ஆட்சியை முடிவுறச் செய்வதற்கு தேவன் மற்றொரு புறஜாதி இராஜாவை தெரிந்துகொண்டார். அவர்தான் பெர்சியாவின் இராஜாவை தெரிந்துக் கொண்டார். அவர்தான் பெர்சியாவின் இராஜாவாகிய கோரேஸ் என நாம் காண்கிறோம் (எஸ்றா.1:1)

உண்மையில் தேவன் இந்தக் கோரேசை வெகு காலத்திற்கு முன்பே தெரிந்துகொண்டார். ஏசாயா தனது வியத்தகு தீர்க்கதரிசன வார்த்தைகளினால் உரைத்து, கோரேஸ் என்பவன் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றவும், எருசலேம் நகரத்தையும் தேவனுடைய ஆலையத்தையும் மறு நிர்மாணம் செய்வான் என்று கூறுகிறான். கர்த்தர் இந்தக் கோரேசைக்குறித்து, அவன் என் மேய்ப்பன் என்றும், நான் அபிஷேகம் பண்ணின கோரேஸ்..... என்றும் கூறுகிறார் (ஏசாயா 44:28, 45:1). ஒரு புறஜாதியினனைப்பற்றி அபிஷேகம் பண்ணப்பட்டவன் எனக் கூறப்படுவது இதுவென்றேயாகும். கர்த்தராகிய இயேசுவைப்பற்றிக் குறிப்பிட மட்டுமே இந்த இரண்டு சொற்றொடர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன (சங் 23:1, யோவான் 10:11, சங் 2:2). ஆகையால் கோரேசும் இயேசுவின் ஒரு நிழல் எனக்கருதலாம். இந்தப்புறஜாதி இரராஜா யார்? வரலாறு கூறுகிறபடி அவன் மேதியா என்ற ஒரு சிறிய நாட்டின் இராஜா. அவன் தனது சேனையுடன் அருகில் இருந்த இராஜ்யங்களை வென்று மேதிய பெர்சிய இராஜ்யங்களின் இராஜாவாக தன்னை உயர்த்திக்கொண்டான். அவனுக்கு எதிராக பல இராஜ்யங்களின் இராஜாக்கள் திரண்டு எதிர்த்தபோது அவர்கள் அனைவரையும் வென்று, சின்ன ஆசிய பிரதேசம் முழுமைக்கும் பெரிய இராஜாவாகத் தன்னை உயர்த்திக் கொண்டான். பழைய ஏற்பாட்டின் ஆகம புத்தகங்களில் அவனது பெயர் 24 முறை கூறப்பட்டுள்ளது.

அடுத்து கோரேஸ் பாபிலோன் நாட்டின்மேல் படையெடுக்க எண்ணினான். பாபிலோன் இராஜ்யம் நேபுகாத்நேச்சார் இராஜாவினால் சிரமைக்கப்பட்டு, அவரது பேரனான பெல்ஷாத்சார் இராஜாவினால் ஆளப்பட்டு வந்தது. இந்தப் பாபிலோனையும் ஆட்சி செய்ய அவனுக்கு எண்ணம் ஏற்பட்டது. ஒருவேளை கோரேஸ், ஏசாயாவின் தீர்க்கதரிசன வார்த்தைகளைப் படித்திருந்தானோ, நமக்குத் தெரியவில்லை. கோரேஸ் பாபிலோனைக் கைப்பற்றி ஆட்சி செய்த காலத்தில், தேவனுடைய பிள்ளையான தானியேல் மிகவும் வயது சென்றவராக பாபிலோனிலே இருந்தார் (தானி 10:1). ஒருவேளை ஏசாயாவின் தீர்க்கதரிசன வார்த்தைகளையும், அதில் தேவன் கோரேசின் பெயரை தீர்க்கதரிசிக்கு உணர்த்தியுள்ள வல்லமையையும் தானியேல் கோரேசுக்கு கூறியிருக்கலாம் என சிலர் எண்ணுகின்றனர். ......கர்த்தராகிய நான் அபிஷேகம் பண்ணின கோரேசுக்கு........ சொல்லுகிறதாவது, உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே.....(ஏசாயா 45:1-3). கர்த்தர் சொல்லுகிறதாவது, கோரேசைக்குறித்து, அவன் என் மேய்ப்பன்...... எனக்குப் பிரியானதையெல்லாம் நிறைவேற்றுவான், என்று சொல்லுகிறவர் நானே... கர்த்தர் எருசலேமைக் குறித்துச் சொல்லுகிறதாவது: நீ கட்டப்படு, என்றும் தேவாலயத்தை நோக்கி, நீ அஸ்திபாரப்படு, என்றும் கூறுகிறார் (ஏசாயா 44:28).

பெல்ஷாத்சார் இராஜா தனது அரண்மணையில் விருந்து பண்ணி திராட்சை ரசம் குடித்துக் கொண்டிருக்கையில் கோரேசின் சேனைகள் பாபிலோனியாவைக் கைப்பற்றின (தானி.5). கோரேஸ் இராஜா தனது பரந்த இராஜ்யத்துடன் பாபிலோனியாவையும் சேர்த்துக் கொண்டான். அவன் பல இராஜ்யங்களை வென்று இராஜாக்களின் அதிகாரங்களைக் கைப்பற்றினான் (ஏசாயா 45:1). கர்த்தர் பெல்ஷாத்சாரின் அரண்மனைச் சுவர்களில், எழுதுவித்து நடக்கப் போகிறவைகளைக்குறித்து அவனை எச்சரித்தார். அந்த எழுதப்பட்டவைகளைப் பெல்ஷாத்சார் கண்ட மாத்திரத்தில் அவன் மிகவும் பயந்தான். அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. ஆனால் பெல்ஷாத்சார் கர்த்தரின் எச்சரிக்கையைப் புறக்கணித்து, தனது இராஜ்யத்தையும் தனது இன்னுயிரையும் இழந்தான். அந்தக் கோரேசு கர்த்தருடைய வார்த்தைகளை நிறைவேற்றுவதில் கர்த்தருக்கு உகந்தவனாய் இருந்தான். இருவிதங்களில் கர்த்தரின் வார்த்தைகளை நிறைவேற்றினான். இதற்குரிய நேரம் வந்துவிட்டது. அவர் இராஜ்யங்களை ஜெயித்து ராஜாக்களின் அதிகாரங்களைப் பிடுங்கிப் போடுவார் (சங்.2, சங் 47:1-3, வெளி 17:14). எஸ்றாவைப்பற்றிய தீர்க்கதரிசன வசனங்கள் அனைத்தும் நிறைவேறவேண்டிய தருணம் வந்துவிட்டது. இங்குதான் எஸ்றாவின் புத்தகம் எழுதத் துவங்கப்பட்டுள்ளது.

By
Tamil christian Assembly

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.