எஸ்றா 1
(2) ஆலையத்தைச் சீரமைத்துக் கட்ட தேவனுடைய கட்டளை
வசனம் 1:1-4
எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனோடே அவனுடைய தேவன் இருப்பாராக. அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன். எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன். அந்த ஜனங்களில் மீதியாயிருக்கிறவன் எவ்விடத்தில் தங்கியிருக்கிறானோ, அவ்விடத்து ஜனங்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆயலத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாய்க் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமன்றி, அவனுக்குப் பொன் வெள்ளி முதலிய திரவியங்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து, உதவிசெய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் ராஜ்யமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணுவித்தான்.
சில வரலாற்று ஆசிரியர்கள் பெர்சியாவின் இராஜாவாகிய கோரேசை நல்லவன் என்பர். அவன், தான் ஜெயித்த நாட்டின் மக்கள், அவரவருக்குப் பிரியமான தேவர்களை வணங்கிக்கொள்வதை அனுமதித்தான். யூதர்களுக்கு அதனிலும் பெரியதொரு நன்மை செய்தான். பாபிலோன் இராஜ்யம் எங்கும் ஒரு விளம்பரத்தையெழுதியனுப்பினான். அதில், பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் இராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி யூதாவில் உள்ள எருசலேமிலே தமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார், என்று எழுதியிருந்தது. என்ன ஆச்சரியமான விளம்பரம்! அவன் ஒரு யூதனல்லாத இராஜா. புறஜாதியனான இராஜா. பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் இராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளினார் என்றும், எருசலேமில் தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்றும் கூறுகிறார். அவர்தான் கோரேஸ். அவர் அதை நிறைவேற்றப் போகிறார்.
இது எவ்வாறு நடந்தது? முதலாம் வசனத்திலே கூறப்பட்டுள்ளபடி கோரேசின் ஆவியைக் கர்த்தர் ஏவினார். அது ஏன் நடந்தது? முதலாம் வசனத்தில் மேலும் எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி.... என்று கூறப்பட்டுள்ளது. கர்த்தர் தமது வார்த்தைகளை ஒன்றாகிலும் (நிறைவேறாமல்) ஒழிந்துபோக விடார் (மத் 24:35). அறிந்தும், அறியாமலும் அதிகாரிகள், அன்றும் இன்றும் அவர் சித்தத்தை நிறைவேற்றி வருகின்றனர். தேவன் அவர்களுக்கு சுய நிர்ணயத்தை அளித்துள்ளார். எனினும் அவர்களின் வழிமுறைகள் தேவ திட்டத்திற்குட்பட்டவைகளேயாகும்.
அடுத்துள்ள எஸ்றாவின் வார்த்தைகள், அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவனோடே அவனுடைய தேவன் இருப்பாராக. அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன்..... என்பதாகும். கோரேஸ் தனது ஜனங்களுக்குப் போகும்படி கட்டளையிடவில்லை. அவரவர் விருப்பத்திற்கே இது விடப்பட்டது. எழுபது ஆண்டு கால சிறையிருப்பிற்குப்பின் ஏரேமியாவும், ஏசாயாவும் உரைத்ததீர்க்கதரிசன வார்த்தைகளை நிறைவேற்றும்படி ஒருவன் எழுப்பப்பட்டான். அவன், செல்லுங்கள் ........ கட்டுங்கள்..... என்று அவர்களை வாய்ப்பளித்துத் துரிதப்படுத்தினான். மேலும் கோரேஸ், கட்டப்படவேண்டியது யாருடைய வீடு என்பதை மிகவும் திட்டமாக, எருசலேமில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய,- அவர் கர்த்தர்,- ஆலயம்..... என்று கூறுகிறான்.
நேபுகாத்நேச்சார் மன்னரும், கோரேஸ் இராஜாவும் தேவனைப்பற்றி மிகவும் உன்னதமான வார்த்தைகளைக் கூறியுள்ளனர். நான் உன்னதமானவரை ஸ்தோத்தரித்து என்னென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன், என்று நேபுகாத்நேச்சார் கூறியுள்ளான் (தானி 4:34). எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன், என்று கோரேஸ் கூறியுள்ளான். இவர்கள் இருவரும் யூதர்களை அரசாண்ட புறஜாதி இராஜாக்களாக இருந்தும் யூதர்களின் தேவனைப் போற்றிப் பேசியுள்ளனர். இவர்கள் கர்த்தரை நேருக்கு நேர் அறிந்தவர்களாவென்பது நமக்குத் தெரியாது.
யூதர்கள் போக கோரேஸ் அனுமதியளித்தான். அதுவும் அவரவர் விருப்பத்தின்படி நடக்க அனுமதித்தான். ஒருவேளை அவர்கள் விரும்பினால், அவர்கள், தங்களுடைய வீடுகளிலேயே இருந்து விடலாம். நேபுகாத் நேச்சார் மன்னரால் சிறைப் பிடிக்கப்பட்டு, 70 ஆண்டுகள் கடந்து விட்டிருந்ததால் சிலரே உயிருடன் இருந்திருக்கக்கூடும். பலர் மிகவும் வயது சென்றோராக இருந்திருப்பர். மற்றவர் அந்நிய நாட்டிலே வசதியுடன் வாழ்ந்துகொண்டிருந்தால் திரும்பிச் செல்வது அவ்வளவு எளிதும் அல்ல. அவர் அறிந்திருந்ததனைத்தையும், அவர்கள் பெற்றிருந்தவைகளில் பெரும்பகுதியையும் அந்த நாட்டிலேயே விட்டுச் செல்லவேண்டும். அவர்களுடைய பயணம் மிகக்கடினமானதாகும். ஆலயத்தைக் கட்டுவதென்பது கடினமான உடலுழைப்பு. இது பலருக்குத் தெரியும். ஆனால் அது ஒரு மீட்சி. ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம். அழைப்பு வந்தவுடன் அவர்கள் புறப்பட்டுச் சென்றவனர். இதைச் செய்ய அவர்களுக்கு ஒரு தரிசனம் தேவைப்பட்டது. கடின உழைப்பு, தியாகம், ஆகிய எல்லா இக்கட்டுக்களையும் கடந்து செல்லவேண்டிருயிந்தது. தங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்ளக் கூடிய அழகிய ஆலயத்தின் அமைப்பை நினைத்துப்பார்க்க வேண்டியும் இருந்தது. அதற்காக அவர்கள் எந்தவொரு தியாகத்தையும் செய்ய வேண்டியிருந்தது. நாமும் நமது வாழ்வைப் புதிப்பிக்க விரும்பினால் சகலத்தையும் சகித்துக் கொண்டு எந்த வகைத் தியாகத்தையும் செய்ய ஆயத்தமாக இருக்கவேண்டும்.
சிலர் ஆலயத்தைக் கட்டும் இடத்திற்குச் செல்லக் கூடாமல் இருக்கலாம். வியாதியின் காரணமாகவும், குடும்பத் தொல்லைகளின் காரணமாகவும், தடைப்பட்டுப் போகலாம். அவர்களைக் கட்டாயப்படுத்தி அனுப்புதல் முறையன்று. ஆனால் அப்படிப் போகக்கூடாமல் தடைப்பட்டுப் போனவர்கள், போகிறவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். பொன்னும் வெள்ளியுமான விலையுயர்ந்த பொருள்களும், பணிக்குத் தேவையான இதர பொருள்களும் பலியிடுவதற்குத் தேவையான, காளைபோன்ற விலங்குகளும், மற்றும் இதுபோன்ற பல பொருள்களையும் ஆலயத்தைக் கட்ட செல்கிறவர்களுக்கு, செல்ல முடியாமல் இருக்கிறவர்கள் கொடுத்து அனுப்பவேண்டியுள்ளது. இது அனைவரும் சேர்ந்து செய்யவேண்டியதொரு பெருமுயற்சியேயாகும்.
நம்மில் அநேகர் முழுநேர சுவிசேஷ ஊழியர்கள் அல்ல. ஆனாலும் நாம் எல்லாரும் இந்தத் திருப்பணியில் பங்கு கொள்ள முடியும். அவ்வாறு நேரடியாகச் சுவிசேஷ ஊழியத்தில் பங்கு கொள்ள முடியாதவர்கள் தங்கள் பகுதிகளில் நடக்கும் ஊழியத்திற்குக் கொடுத்து உதவுவதோடன்றி, பிற இடங்களில், தூரத்திலும், வேறு நாடுகளிலும் நடக்கும் ஊழியங்களுக்கும்கூட, பொன்;னும் வெள்ளியுமாக, மற்றும் முடிந்த பொருள்களுமான உதவி செய்தல் வேண்டும்.
வசனம் 1:5
அப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி யூதா பென்ஜமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியருமன்றி, எவர்கள் ஆவியைத் தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள்.
இங்கே, கோரேஸ் இராஜாவின் விளம்பரத்தினால் ஏற்பட்ட விளைவுகளை நாம் காண்கிறோம். பல யூதர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் சிறை பிடிக்கப்பட்டு போனதும், பலர் கொல்லப்பட்டதுமான வரலாறுகளையும், தேவனுடைய ஆலயம் இடிக்கப்பட்டு எரிக்கப்பட்டுப் போனதும், எருசலேமின் அலங்கங்கள் இடிக்கப்பட்டுப் போனதுமான வரலாறுகளைத் தங்கள் காலத்திலெல்லாம் கதை கதையாகப் பேசக் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் புதிய தலைமுறையினரான யூதர்களை எண்ணிப் பாருங்கள். அவ்வாறு சிறைப்பிடித்துக் கொண்டு போகப்பட்ட பலர் நேபுகாத்நேச்சார் இராஜாவின் அரண்மனையில் அரசனுக்கும் அவனுடைய பிள்ளைகளுக்கும் வேலைக்காரராகப் பணியாற்றி வந்தனர். ஆனால் இத்தகைய எல்லா கொடுமைகள் மத்தியிலும், தேவனுடைய சிலராக யூதர்கள், தேவ கிருபையைப்பற்றியும், எவ்வாறு எருசலேம் நகரம் தங்களுக்குத் திருப்பித் தரப்படும் எனற தேவ வாக்குறுதிகள் பற்றியும், ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் உரைக்கப்பட்டுள்ள, கோரேஸ் என்ற இராஜா, எவ்வாறு இதைச் செய்வார் என்பதுபற்றியும் அடிக்கடி பேசி வந்தனர். இப்போதோ நாம் அதே பெயர் கொண்ட கோரேஸ் இராஜாவின் விளம்பரத்தையும், அதே யூதர்கள், விரும்பினால் சிறையிருப்பிலிருந்து மீண்டு, எருசலேமுக்குச் சென்று தேவாலயத்தைக் கட்டலாம், என்ற அந்த இராஜாவின் அனுமதியையும் காண்கிறோம். மேலும், யூதா, பென்ஜமீன் வம்சங்களின் தலைவரும், ஆசாரியரும், லேவியருமன்றி, எல்லாரும் எழும்பினார்கள், என்று இந்த வசனத்தில் நாம் வாசிக்கிறோம். தாவீதின் வம்சத்தைச் சேர்ந்த பல மன்னர்களைத் தங்கள் இராஜாக்களாகக் கொண்ட இரு கோத்திரத்தாரை நாம் இங்கு காண்கிறோம். அந்த இராஜாக்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். கர்த்தர் தமது வாக்குத்தத்தங்களை அவர்களுக்கு நிறைவேறப்பண்ணினதால், யூதர்களான அவ்விரு கோத்திரத்தாரும், ஆசாரியர்களுடனும், லேவியர்களுடனும் சேர்ந்து தேவனால் அருளப்பட்டபடி செய்ய முற்பட்டனர். அவர்கள் எருசலேமுக்குப் புறப்பட்டபோது அவர்கள் இருதயம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்க வேண்டுமன்றோ!
வசனம் 1:6
அவர்களைச் சுற்றிலும் குடியிருக்கிற யாவரும் மனஉற்சாகமாய்க் காணிக்கை கொடுத்ததுமன்றி, வெள்ளிப் பணிமுட்டுகளையும் பொன்னையும் மற்ற வஸ்துக்களையும் மிருகஜீவன்களையும் உச்சிதமான பொருள்களையும் கொடுத்து, அவர்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.
புறப்பட்டவர்கள் அனைவரும் தலைவர்களே. அவர்கள் சேர்ந்து புறப்பட்போது மற்றும் பலர் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டனர். நல்ல தலைவர்கள் எழும்பி காரியங்களைச் செய்ய முற்படும்போது பலர் சேர்ந்து வருதல் இயற்கையே. மோசேயும் ஆரோனும் சேர்ந்து கர்த்தருடைய அழைப்பிற்குக் கீழ்ப்படிந்து பார்வோனிடம் சென்றபோது ஒரு தேசமே, எகிப்து நாட்டின் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு, அவர்களின் பின்னே செல்லத் தயாரானது (யாத் 12:5-51). அதுமட்டுமல்ல, நெகேமியா, துணிவுடன் வென்று அர்தசஷ்டா இராஜாவிடம், எருசலேமின் அலங்கங்களைப் புதுப்பித்துக்கட்ட அனுமதி கேட்டபோது, அதைக் கேட்ட அனைவரும, எழுந்து கட்டுவோம் வாருங்கள், என்று சொல்லி அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள் (நெகே.2:18) என்று காண்கிறோம்.
இப்போது புறப்பட்ட தலைவர்களையும் அவர்களுடன் சேர்ந்துகொண்டவர்களையும் உற்சாகப்படுத்தப் பலரும், பொன், வெள்ளி ஆகிய பரிசுகளையும், தேவையான பணிமுட்டுகளையும், பலியிடுவதற்கு தேவையான காளை, ஆடு முதலியனவைகளையும், மற்றும் பல விலையுயர்ந்த பொருள்களையும் முகமுவந்தளித்தனர். இவைகள் அனைத்தும் அவர்கள் முறைப்படியளித்த காணிக்கைகளுடன் சேர்ந்தவைகளே. போக முடியாதவர்களும், போக விரும்பாதவர்களுமே இவ்வாறு கொடுத்தவர்கள். போக விரும்பியவர்களுக்கு அவர்கள் மன உற்சாகமாய்க் கொடுத்து அவர்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள். ஒரு வாசஸ்தலத்தைக் கட்டும்படி கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபொழுது, மோசே இஸ்ரவேலரை நோக்கி, உங்களுக்கு இஷ்டமான காணிக்கைகளைக் கொண்டு வாருங்கள் என்றுகேட்டுக் கொண்டான். அப்பொழுது அவர்கள், கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களைக் கொண்டுவந்தார்கள், என்று வேதம் கூறுகிறது (யாத்.36:5). அப்போது மோசே அவர்களைத் தடுக்க வேண்டியதாயிற்று. அதுபோல், இன்று, தடுக்கும் அளவில் நாம் காணிக்கைகளை கொண்டுவர முடியுமா?
வசனம் 1:7
நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்த, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்துப் பணிமுட்டுகளையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான்.
யூதர்கள் எருசலேமுக்குப்போக புறப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், வியத்தகு காரியம் ஒன்று நடந்தது. 70 ஆண்டுகளுக்கு முன்பு நேபுகாத்நேச்சார் இராஜா எருசலேம் மீது போர்தொடுத்து, இஸ்ரவேலர்களைத் தோற்கடித்து, தேவாலயத்தில் இருந்த சகல பொன், வெள்ளிப் பணிமுட்டுகளையும், தூபகலசங்களையும் கொள்ளைப் பொருளாகக் கொண்டு சென்றதுமன்றி ஆலயத்தையும் எரித்துப்போட்டான் (1.இராஜா.25:13-19). அவன் அவைகளைக் கொண்டு சென்று அந்நிய தேவர்களின் ஆலயத்திலே, பாபிலோனிலே வைத்திருந்தான் (தானி.5:2). இப்பொழுது பாபிலோனிலே இராஜாவாக இருந்த கோரேஸ் அந்த அனைத்து பொன், வெள்ளி பணிமுட்டுகளைக் கொண்டுவரச் செய்து, எருசலேமுக்குச் செல்லப்புறப்பட்டுக் கொண்டிருந்த இஸ்ரவேலரிடம் கொடுத்து, புதியதாக எருசலேமில் கட்டப்படவிருக்கும் தேவாலத்தில் வைத்துவிடும்படி கொடுத்துவிட்டான். ஆலயம் இனி கட்டப்படவுள்ள நிலையில் இது போன்றதொரு கொடை நிகழ்ச்சி, அபூர்வமானதும் தெய்வீகமானதுமன்றோ?
வசனம் 1:8-11
அவைகளைப் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் பொக்கிஷக்காரனாகிய மித்திரேதாத்தின் கையினாலே எடுக்கச்செய்து, யூதாவின் அதிபதியாகிய சேஸ்பாத்சாரிடத்தில் எண்ணிக்கொடுத்தான். அவைகளின் தொகையாவது: பொன் தட்டுகள் முப்பது, வெள்ளித்தாலங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது. பொற்கிண்ணங்கள் முப்பது, வெள்ளிக்கிண்ணங்கள் நானூற்றுப்பத்து, மற்றப் பணிமுட்டுகள் ஆயிரம். பொன் வெள்ளிப் பணிமுட்டுகளெல்லாம் ஐயாயிரத்து நானூறு, இவைகளையெல்லாம் சேஸ்பாத்சார், சிறையிருப்பினின்று விடுதலைபெற்றவர்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குப் போகையில், எடுத்துக்கொண்டு போனான்.
பெர்சியாவின் இராஜாவாகிய கோரேஸ், இவைகளைப் பொக்கிஷக்காரனாகிய மித்திரேதாத்தின் கையில் கொடுத்து ஜாக்கிரதையுடன் எண்ணச் செய்து, யூதாவின் அதிபதியாகிய சேஸ்பாத்சாரிடத்தில் கொடுக்கச் செய்தான் (எஸ்றா 5:14). இந்தச் சேஸபாத்சார் தாவீதின் வம்ச வழியில் வந்தவனெ;று கருதப்பட்டதனால் இப்பொருட்கள் எழுத்துச் செல்ல மிகவும் தகுதியானவன் என்று கருதப்பட்டான். அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பொருள்களில் 30 பொன் தட்டுகள், வெள்ளித்தாலங்கள் 1000, கத்திகள் 29, பொற்கிண்ணங்கள் 30, வெள்ளிக்கிண்ணங்கள் 410, மற்றப் பணிமுட்டுகள் 1000, ஆகியனவும் அடங்கும். இந்தப் பொருள்கள் அனைத்தும் சேஸ்பாத்சாரிடம் நம்பிக்கையுடன் ஒப்படைக்கப்பட்டு எருசலேமுக்கு எழுத்து செல்லப்பட்டன (வச.11). சேஸ்பாத்சார் இவைகளைக் கொண்டு செல்வதற்கென எந்தத்தனிப்பட்ட சலுகையும் தகுதியும் பெற்றவனல்லன். அவன் யூதாவின் அதிபதியாக இருந்தவன். சிறைப்படுத்தப்பட்ட மற்றும் பலரில் இவனும் ஒருவன். இவன் எருசலேமுக்குத் திருப்பினான். மற்றும் பலருடன், நம்பிக்கைக்கு பாத்திரமுள்ள ஒருவனாக பொன், வெள்ளிப்பணிமுட்டுகளுடன் எருசலேமுக்குச் செல்லுகிறான்.
போத்திப்பாரின் அரண்மனையில், எகிப்தில் இருந்த யோசேப்பினிடத்தில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்ததுபோல், சேஸ்பாத்சாரிடத்தில் இப்போது பொறுப்பு ஒன்று ஒப்படைக்கப்பட்டிருக்கக் காண்கிறோம் வேதத்தில். போத்திப்பார், தனக்கு உண்டான யாவற்றையும் அவன் (யோசேப்பின்) கையில் ஒப்புவித்தான், என நாம் காண்கிறோம் (ஆதி.39:4-6). இயேசு கிறிஸ்து, கண்களை வானத்திற்கு ஏறெடுத்து ஜெபிக்கும்போது, நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.... என்று தமது பதினொரு சீடர்களைப்பற்றி கூறுகிறார் (யோவான் 17:12). அது போலவே இந்த யூதாவின் அதிபதியான சேஸ்பாத்சார் விளங்குகின்றான். நாம், நமது எல்லா காரியங்களிலும் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கிறோமா ???
By
Tamil christian Assembly