எஸ்தர் 7 விளக்கவுரை
எஸ்தரின் வேண்டுகோள்
வசனம் 7:1-2ராஜாத்தியாகிய எஸ்தருடனே விருந்துண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது,
இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும். நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.
மொர்தெகாயைப்பற்றிய நடவடிக்கைகளில் குழம்பிப்போயிருந்த ஆமான், இன்னும் மகிழ்ச்சிப் பெருமையில் திளைத்துக்கொண்டுதான் இருந்தான். இராஜாவுடனும் இராஜாத்திடனும் விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்தவன் அவன் ஒருவன் மட்டுமேயல்லவா? அது அவனைச் சீமானாக்கிக் காட்டவில்லையா? ஆகையால் அவன் இராஜாத்தியின் விருந்து மண்டபத்திற்குள், அந்த அரச விருந்தில் கலந்துகொள்ள, மௌ;ள நுழைந்து வந்து கொண்டிருந்தான். பணியாளர்கள் சூழ அரச தம்பதிகளுடன் அமர்ந்து விருந்துண்பது அவனுக்கு மிக்க மகிழ்ச்சிதானே. அவன் வீட்டிற்குத் திரும்பிவந்தவுடன் அவன் அதைப்பற்றி வீட்டில் உள்ளவர்களிடம் கூறிப் பெருமையடித்துக்கொள்ளமுடியுமன்றோ?
விருந்து பரிமாறல் தொடங்கியது. இராஜா எஸ்தரை வாழ்த்தி, இராஜாத்தியே உன் வேண்டுதல் என்ன என்று தனது பழைய வாழ்த்துதலை மறுபடியும் ஆரம்பித்தான். நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ இராஜ்யத்தில் பாதி மட்டும் கேட்டாலும் அது உனக்குக் கிடைக்கும் என்று மறுபடியும் அவன் கூறுகிறான். இராஜாத்தியாகிய எஸ்தர் நடத்தும் விருந்துகளைப்பற்றி அவனுக்கு ஒரே விந்தையாகவே இருந்ததெனலாம்.
வசனம் 7:3-4
அப்பொழுது ராஜாத்தியாகிய எஸ்தர் பிரதியுத்தரமாக: ராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்தது, ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக.
எங்களை அழித்துக் கொன்று நிர்மூலமாக்கும்படி நானும் என் ஜனங்களும் விற்கப்பட்டோம். அடிமைகளாகவும் வெள்ளாட்டிகளாகவும் விற்கப்பட்டுப்போனாலும் நான் மவுனமாயிருப்பேன். இப்பொழுதோ ராஜாவுக்கு உண்டாகும் நஷ்டத்துக்கு அந்தச் சத்துரு உத்தரவாதம்பண்ண முடியாது என்றான்.
இப்போது பதில் பேசவேண்டியவள் எஸ்தரே. அவளுடைய நேரமும் வந்துவிட்டதென்றே நாம் கூறலாம். அவள் கேட்கவேண்டியதை இன்னும் அவள் தாமதப்படுத்தக்கூடாதன்றோ? அவள் தனது பதிலை ஆரம்பிக்கிறாள். எல்லா மரியாதைகளுடனும் அவள் பேசத் துவங்கி, இராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்தது, இராஜாவிற்குச் சித்தமாயிருந்தால்......, மிகவும் பண்புள்ள, அடக்கமுள்ள, ஒழுங்குள்ள பதிலாக அவள் ஆரம்பிக்கிறாள். அந்த வேண்டுதல் கிடைக்க, இராஜா செய்வதாக இருந்தால், அது அவனுடைய கருணை நெஞ்சத்தினால் மட்டுமே என்று பொருள்படும்படி அவள் பேசுகிறாள். அடுத்து அவள் கூறிய வாக்கியம் மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது. என் வேண்டுதலுக்கு என் ஜீவனும் என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக..... என்று அவள் கூறுவது எதனைப் பற்றியது? இதனைப் புரிந்து கொண்டிருந்தால் ஆமான் பயத்தால் உறைந்துபோயிருப்பான். பாவம்! எஸ்தர் தொடர்ந்து, எங்களை அழித்துக்கொன்று நிர்மூலமாக்கும்படி, நானும் என் ஜனங்களும் விற்கப்பட்டோம். அடிமைகளாக விற்கப்பட்டுப்போயிருந்தாhல்கூட நான் மவுனமாயிருந்திருப்பேன். இப்பொழுதோ இராஜாவுக்கு உண்டாக்கும் நஷ்டத்திற்கு அந்தச் சத்துரு உத்தரவாதம் பண்ணமுடியாது..... என்று கூறிய எஸ்தர், அந்த யூதர்கள் நல்ல குடிமக்கள் என்றும், நாட்டிற்கு மிகவும் உதவக்கூடியவர்கள் என்றும் இராஜாவுக்கு உணர்;தி அவள் பதில் கூறுகிறாள். அதுமட்டுமன்றி, இப்போது நானும் எனது ஜனங்களும் அழித்துக்கொன்று நிர்மூலமாக்கும்படிக்கு விற்கப்பட்டோம் - என்று அவள் விளக்கி இராஜாவிடம் கூறுகிறாள்.
வசனம். 7:5-8
அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே என்றான்.
அதற்கு எஸ்தர்: சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்த துஷ்ட ஆமான்தான் என்றாள். அப்பொழுது ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான்.
ராஜா உக்கிரத்தோடே திராட்சரசப்பந்தியை விட்டெழுந்து, அரமனைத் தோட்டத்திற்குப் போனான். ராஜாவினால் தனக்குப் பொல்லாப்பு நிர்ணயிக்கப்பட்டதென்று ஆமான் கண்டு, ராஜாத்தியாகிய எஸ்தரிடத்தில் தன் பிராணனுக்காக விண்ணப்பம்பண்ண எழுந்துநின்றான்.
ராஜா அரமனைத் தோட்டத்திலிருந்து திராட்சரசம் பரிமாறப்பட்ட இடத்துக்குத் திரும்பிவருகையில், எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான். அப்பொழுது ராஜா: நான் அரமனையிலிருக்கும்போதே என் கண்முன்னே இவன் ராஜாத்தியைப் பலவந்தம் செய்யவேண்டுமென்றிருக்கிறானோ என்றான். இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து பிறந்தவுடனே ஆமானின் முகத்தை மூடிப்போட்டார்கள்.
இப்போது இராஜா வியப்பில் ஆழ்ந்துபோகிறான். அவன் குழப்பமடைகிறான். எஸ்தர் எதைப்பற்றிக் கூறிக்கொண்டிருக்கிறாள். அவன் கேள்வி கேட்கிறான். இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே? உடனே எஸ்தர் ஆமானிடம் திரும்பி, இராஜாவிடம், சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்த துஷ்ட ஆமான்தான், என்று எஸ்தர் கூறினாள். அத்தனை விசாரணைக்கூட்டங்களும் இப்போது ஆமானுக்கு எதிராக திரும்பிவிட்டன. ஆமான் அழிந்துபோனான். இராஜாவிற்கும் இராஜாத்திக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான் என்று வேதம் கூறுகிறது. இதிலே வியப்பொன்றுமில்லை. உண்மைச் செய்தி வெளிவந்தது. எஸ்தர் இராணி ஒரு யூதஸ்திரி. ஆமான் ஓர் இனத்தையே, யூத இனத்தையே எஸ்தர் இராணியின் இனமாகிய அந்த யூத இனத்தையே , அழிக்க திட்டம் தீட்டினான். ஆமானுக்கு இதைவிட மோசமான ஒரு நிலை ஏற்படப்போவதில்லை. அவன் நடுக்கங்கொண்டான்.
இராஜா உக்கிரக்கோபம் கொண்டான். திராட்சரச பந்தியைவிட்டெழுந்து, அரண்iனைத் தோட்டத்திற்குள் போனான். ஆமோன் இராஜ நம்பிக்கையைப்பெற இடங்கொடுத்தவன் இந்த அகாஸ்வேரு இராஜாதானே. அவனுக்கு இராஜ சமஸ்தானத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தைக் கொடுத்தவன் யார்? தவறான ஒருவன் இராஜாவின் அதிகாரப் பொறுப்பிலேற்பட்டது எங்கனம்? இப்படித்தான் நாம் நமது வாழ்க்கையின் நிலைகளில் தேவனுக்குக் கிடைக்கவேண்டிய இடத்தில் சாத்தானை அமர்த்திவிடுகிறோம் அன்றோ? இராஜாவின் உக்கிரகோபம் இப்போது ஆமானை நோக்கிப் பாயத் தலைப்பட்டது. அன்று அவன் இராணியின் உயிருக்கு உலைவைத்து இராஜாவை முட்டாளாக்கப்பார்த்தானன்றோ?
ஆமானுக்கு பிராணாபத்து நெருங்கிவிட்டதை நன்கு உணர்ந்தவுடன் இராஜாத்தியாகிய எஸ்தரிடம் தனது உயிருக்காக மன்றாட முயற்சி செய்கிறான். மற்றவர்களின் உயிரை வாங்க அதற்காகப் பரிதாபப்படாதவன் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்றபோது ஒரு மாறுபட்ட நடைமுறையைப் பின்பற்றுகிறானன்றோ? இங்கே, ஒருவன் மகிழ்ச்சியுடன் ஆயிரக்கணக்கானோரடங்கிய, குற்றமற்றோரான, ஓரினத்தையே தன்னை இழிவு படுத்தின ஒருவனுக்காக கொன்று ஒழிக்க திட்டம் தீட்டி நிறைவேற்றும் நிலைக்கு வருகிறான். ஆனால் அவன் ஒருவனின் சொந்த உயிருக்கே ஆபத்து வரும் நிலையில் தாழ விழுந்து கெஞ்சி மன்றாடவும் தயாராக இருக்கிறான். அப்படியே இராஜாத்தி எஸ்தர் உட்கார்ந்திருந்த மெத்தையின்மேல் விழுந்து கிடந்தான். ராஜா அரண்மனைத் தோட்டத்திலிருந்து திரும்பிவந்து பார்க்கும்போது அவன் அந்த நிலையில் விழுந்து கிடந்ததைப்பார்த்து, நான் அரண்மனையிலிருக்கும்போதே என் கண்முன்னே இவன் இராஜாத்தியைப் பலவந்தம் செய்யவேண்டுமென்றிருக்கிறானோ என்று உரக்கக் கத்தினான். இது ஒரு நியாயமில்லாத குற்றச்சாட்டுத்தான். அங்கிருந்த யாவருக்குங்கூட அந்த உண்மைதெரியும். ஆனால் ஆமானுக்காக யாரொருவனும் முன்வந்து உண்மையைக்கூறி வாதாட விரும்பவில்லை. இராஜா ஆமானைக் கடுமையாகக் குற்றப்படுத்தியவுடன் ஆமோனின் முகத்தைப் பணியாட்கள் மூடிப்போட்டார்கள். அவனுடைய முடிவு அதுதான். அது அவனுடைய மரணத் தீர்ப்பு.
வசனம் 7:9
அப்பொழுது ராஜசமுகத்தில் இருக்கிற பிரதானிகளில் அற்போனா என்னும் ஒருவன்: இதோ, ராஜாவின் நன்மைக்காகப் பேசின மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானின் வீட்டண்டையில் நாட்டப்பட்டிருக்கிறது என்றான். அப்பொழுது ராஜா: அதிலே அவனைத் தூக்கிப்போடுங்கள் என்றான்.
அதோடு முடியாமல், ஆமானுக்கு வெகு தீங்கு காத்திருந்தது. இராஜ சமுகத்தில் இருக்கிற பிரதானிகளில் அற்போனா என்னும் ஒருவன் இதோ இராஜாவின் உயிரைக் காப்பாற்றிய மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ தூக்குமரம் ஆமானின் வீட்டண்டையில் நாட்டப்பட்டிருக்கிறது என்று இராஜாவிடம் கூறினான். அப்பொழுது இராஜா ஆமானை அதிலே தூக்கிப்போடுங்கள் என்று உத்தரவிட்டான். ஆகவே, பணியாளர்கள் ஆமோனைக் கொண்டுபோய், அவன் மொர்தெகாய்க்காகச் செய்வித்திருந்த தூக்குமரத்தில் தூக்கிப் போட்டனர். படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம் அல்லவா (நீதி.26:27). மோசம் போகாதிருங்கள். தேவன் தம்மைப் பிரயாசம் பண்ணவொட்டார். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் என்று வேதம் கூறுகிறதல்லவா (கலா.6:7).
ஆமான் தூக்கிலிடப்பட்டான். ஆனால் நாம் அவனுக்காகப் பரிதாபம் கொள்ள முடிவதில்லை. அவன் பொய் உரைத்தான். தற்பெருமை தலைக்கேறி நின்றான். ஒரு தனிப்பட்டவனைப் பழிவாங்க, பல்லாயிரம் பேரடங்கிய ஓரினத்தையே அவன் கொன்று ஒழிக்கத் திட்டமிட்டான். அது நிறைவேறுமட்டும் காத்திராமல், அந்த ஒருவனுக்காக ஒரு தூக்குமரத்தையே செய்வித்தான். அந்த ஒருவனைக் கொல்ல ஏற்பாடு செய்த பின், அந்த இனத்தை, குற்றமில்லாத இனத்தை காப்பாற்ற அவன் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஆகையால் அந்த இனம் அழிந்தே போயிருக்கும். ஆனால் ஒரே நாளில் அனைத்து தீய தி;ட்டங்களும் கவிழ்க்கப்பட்டுப்போய், அவனே அவன் செய்வித்த அந்த உயரமான தூக்கு மரத்திலேயே தூக்கிப் போடப்பட்டான்.
வசனம் 7:10
அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானைத் தூக்கிப்போட்டார்கள். அப்பொழுது ராஜாவின் உக்கிரம் தணிந்தது.
இராஜா கோபவெறி கொண்டிருந்தான். ஆமான் கொல்லப்பட்ட பின்புதான் அமைதியடைந்தான். முழு அரசியல் செல்வாக்கில் அதிகார ஏணியின் உச்சியில் இருந்தவன் ஒழிக்கப்பட்டான். அந்தப் பதவிக்கு இப்போது யார்? இந்த முறை இராஜா, தன் முழு அதிகாரத்தையும் ஒருவனிடம் ஒப்படைப்பதானால் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பானன்றோ? தேவனுடைய பிள்ளைகளும்கூட, பிசாசின் தந்திரங்களுக்கு விலகி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டுமன்றோ! விழித்திருங்கள். ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமொவென்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான் (1.பேது.5:8).