எஸ்தர் 6 விளக்கவுரை

எஸ்தர் 6 விளக்கவுரை

மொர்தெகாய் பெற்ற மாட்சிமை
வசனம் 6:1-3

அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான், அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.


அப்பொழுது வாசற் காவலாளரில் ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோடப்பார்த்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது.

அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்குக் கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவைச் சேவிக்கிற ஊழியக்காரர்: அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்.

அன்று இராத்திரியிலே இராஜாவிற்கு நித்திரை வரவில்லை. இந்த நிலை இராஜாக்களுக்கும் ஏற்படுகிறதாதோ? ஆம், இராஜாக்களுக்குத் தூக்கம் வராத நிலையைப்பற்றி நாம் வேதத்தில் மூன்று இடங்களில் காணமுடிகிறது. ஒவ்வொரு நிலையிலும், ஒரு தேவனுடைய மனிதன் ஆசீர்வதிக்கப்படுவதைக் காணமுடிகிறது. ஆதியாகமம்41:4-8ல் எகிப்தின் இராஜாவாகிய பார்வோன் சொப்பனங்கள் கண்டு தூக்கம் கலைந்து எழுந்து கலக்கம் அடைவதைக் காணமுடிகிறது. காலையில் இராஜா மந்திரவாதிகளையும் சகல சாஸ்திரிகளையும் அழைப்பித்துத் தன் சொப்பனத்தின் அர்த்தத்தைக் கூறும்படி கேட்க, அவர்களால் கூடாமற்போனதினால், அவர்கள் எபிரெயனாகிய யோசேப்பை அழைப்பிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டு, சிறையிலிருந்து அவனை அழைத்துவந்து, இராஜாவின் சொப்பனத்தை விடுவிக்கக் கோருகின்றனர். அதன் அர்த்தத்தை அவன் தெளிவுறக்கூற இராஜா அவனை அரண்மனையின் மிக உன்னத பதிவியில் அமர்த்தும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கிறது. அது யோசேப்பிற்கு கர்த்தரால் கிடைத்த ஆசீர்வாதம்.

தானியேலின் புத்தகம் 2:1ல் நேபுகாத்நேச்சார் இராஜா சொப்பனம் கண்டு நித்திரை கலைந்து கலக்கம் அடைந்தபோது ஒருவராலும் அந்தச் சொப்பனத்தின் அர்த்தத்தை விடுவிக்கக்கூடாதிருந்தது. அப்போதும் ஓர் எபிரெய அடிமையின் பெயர் குறிப்பிடப்பட்டு, தானியேல் கொண்டுவரப்பட்டு சொப்பனத்தின் அர்த்தத்தை விடுவித்து, அதன் விளைவாக தானிNலும் அவனுடனிருந்த மூன்று நண்பர்களும் மிக உயர்ந்த ஸ்தானத்தில் அமர்த்தப்பட்டதைக் காண்கிறோம். அதுவும் அவர்கள் பெற்ற தேவனுடைய ஆசீர்வாதமே. மற்றுமொருமுறை தரியு இராஜாவின் நாட்களில் தானியேல் சிங்கங்களின் கெபியிலே அடைக்கப்பட்டபோது, மிகத் துயரமடைந்த இராஜா இரவெல்லாம் நித்திரையில்லாமலிருந்து அதிகாலையிலே சிங்கங்களின் கெபியருகே சென்று தானியேலைக் கூப்பிட்டுப்பார்த்து உயிரோடிருக்கக்கண்ட வரலாற்றைத் தானியேல் புத்தகம் 6:18-20ல் நாம் வாசிக்க முடிகிறது. அதுமுதல் தரியுவின் ஆட்சியிலும் கோரேசின் ஆட்சியிலும் தானியேல் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்த வரலாற்றை நாம் காண்கிறோம்.

அதுபோல, இப்போதும் அகாஸ்வேரு தூக்கம் கலைந்து இருக்கும் நிலை ஏற்படும்போது அது தேவனுடைய மனிதன் ஒருவனை எவ்வாறு பாதிக்குமோ என அறிய நாம் அதிக ஆவலுள்ளவர்களாக இருக்கிறோம். இரவு, அவனுக்கு மிகவும் தொல்லை நிறைந்ததாகக் காணப்பட்டதால் தூக்கம் வராமல் அவன் அவதிப்பட்டதால் காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற புத்தகத்தைக் கொண்டுவந்து வாசிக்கச்செய்வது இராஜாக்களின் அந்நாளைய வழக்கமாக இருந்தது. அவனுக்கு நித்திரை வரவில்லை. ஏதாகிலும் வேலையாவது செய்யலாமோவென்று அவன் நினைத்தான். வாசிக்கும்படி கேட்டான். வர்த்தமானங்கள் வாசிக்கப்பட்டது. அதிலே மொர்தெகாய் இராஜாவின் உயிரைச் சில துரோகிகளின் சூழ்ச்சியிலிருந்து காப்பாற்றிய வரலாறு வாசிக்கப்பட்டது. இரண்டு துரோகிகள் இராஜாவைக் கொல்லச் சதிசெய்ததை அறிந்த மொர்தெகாய் அதை இராஜாவுக்கு அறிவித்ததினால் இராஜா உயிர்தப்ப முடிந்தது. அந்த இரண்டு துரோகிகளும் தூக்கிலிடப்பட்டு ஒழிக்கப்பட்டு விட்டனர். இராஜா இதைக் கவனித்துக் கேட்டான்.

இதற்காக மொர்தெகாய்க்குக் கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா? என்று மிகவும் அனுசரணையுடன் கேட்டான் இராஜா. அப்படி அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள் அந்தப் பிணிவிடைக்காரர்கள். இது மிகவும் விசனப்படவேண்டிய வார்த்தைகள். ஒரு மனிதன் இராஜாவின் உயிரைக் காப்பாற்றியுள்ளான். ஆனால் முற்றிலுமாக அவனுக்கு எந்தவித சலுகைகளும், நன்றி பாராட்டுதலும் செய்யப்படவில்லை. மொர்தெகாய்க்கு நடந்ததுபோலே நமது ஆண்டவராகிய இயேசுவிற்கும் நடந்ததை நாம் அறிந்திருக்கிறோம். அவர் உலகத்திலே மனுஷகுமாரனாக அவதரித்தாh. வியாதியஸ்தர்களைக் குணமாக்கினார். ஏழைகளுக்குப் பல உதவிகள் செய்தார். மரித்தோர் சிலரை உயிருடன் எழுப்பினார். நமக்காகப் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார். ஆனால் அவருக்கு நாம் கைமாறாய் ஏதும் செய்யவில்லை. ஏரேமியா தனது புலம்பலிலே சிலுவையில் தொங்கிய ஆண்டவரைக் காட்டி வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே இதைக் குறித்து உங்களுக்குக் கவலையில்லையா?.. என்னைச் சஞ்சலப்படுத்தினால் எனக்குண்டான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப் பாருங்கள் என்று தீர்க்கதரினமாய்ப் புலம்புகிறான் (புல.1:12). ஆம். உண்மைதான். அவருக்கு நாம் ஏதும் செய்யாமல் அவரை சஞ்சலப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். விரைவிலே, தேவன் கடாட்சித்தருளும்போது, அந்த நாளிலே வானத்திலும் பூமியிலுமிருந்து சகல மகிமையும் அவருக்கு உண்டாகும்.

வசனம் 6:4-6

ஆமான் தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிப்போடவேண்டுமென்று, ராஜாவினிடத்தில் பேசும்படி ராஜ அரமனையின் வெளிமுற்றத்திலே வந்திருந்தான். அப்பொழுது ராஜா: முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்டான்.

ராஜாவின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, ஆமான் முற்றத்திலே நிற்கிறான் என்றார்கள். ராஜா: அவன் உள்ளே வரட்டும் என்றான்.

ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்னசெய்யப்படவேண்டும் என்று கேட்டான். அதற்கு ஆமான், என்னையன்றி யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன் மனதிலே நினைத்து,

அகாஸ்வேரு மொர்தெகாய்க்கு முறைப்படி செய்யவேண்டியதைக் காட்டாயம் செய்யவேண்டும் என்று எண்ணினான். அது என்ன? ஒருவேளை அவனுடைய பிரதானிகள் அதை அறிந்திருப்பர் என்று எண்ணினான் போலும். இரவு கழிந்தது, காலை மலர்ந்தது. இராஜா நன்றாக விழித்துக்கொண்டு முற்றத்தில் இருக்கிறது யார்? என்று கேட்டான். முற்றத்தில் ஆமான் வந்து நின்றுகொண்டிருந்தான். மொர்தெகாயை, புதிதாகச் செய்து நிறுத்தியிருந்த தூக்குமரத்திலே தூக்கிப்போட, இராஜாவினிடத்தில் பேசி முடிவெடுக்கவே அவன் அங்கு வந்து இராஜாவை சந்திக்க காத்து நின்றான். ஆமான்தான் வந்து நிற்கிறார் இது இராஜாவின் கேள்விக்கு அவனுடைய ஊழியக்காரர் உவந்தளித்த பதில். அவன் உள்ளே வரட்டும்., இது இராஜாவின் சித்தம். உள்ளே வந்த ஆமான் தனது எண்ணத்தை, நோக்கத்தை, கோரிக்கையை, வேண்டுதலை இராஜாவினிடம் கேட்குமுன்பே, இராஜா ஆமானை நோக்கி, இராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான். பெயரொன்றும் குறிப்பிடப்படாமலிருந்தது இராஜாவின் கேள்வி. ஆமானுக்கு ஒரே மகிழ்ச்சி. என்னைத்தானே - அவன் எண்ணுகிறான். என்னைத் தவிர வேறு யாரை இராஜா கனம்பண்ண விரும்புகிறார்? அவனுடைய வீண் பெருமை அவனைச் சிந்திக்கவைக்கவில்லை. ஒருவேளை வேறொருவனைக் கூட இராஜா கனம்பண்ண விரும்பலாமேயென்று அவன் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. இது நேற்று அவனுக்குக் கிடைத்த புகழ்ச்சியைவிட மிக அதிகமானதென அவனுக்குப்பட்டது. மிக உன்னதமான ஒரு நேரம் வந்துதித்ததாக அவன் எண்ணுகிறான். அவன் விரும்பும் எந்த ஒரு புகழ்ச்சியையும் அவன் இப்போது இராஜாவிடமிருந்து பெறமுடியும். பதில் சொல்லுமுன் சிந்திக்க சில நிமிடங்களே அவனுக்கு இருந்தன.

வசனம் 6:7-9

ராஜாவை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்,

ராஜா உடுத்திக்கொள்ளுகிற ராஜவஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிப்பிக்கப்படும் ராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும்.

அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும். ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின், அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்.

ஆமான் இராஜாவிற்குப் பதில் கூறத் தயாரானான். பதில் கூறுகிறான். இராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால், இராஜா உடுத்திக்கொள்ளுகிற இராஜவஸ்திரமும், இராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசில் தரிப்பிக்கப்படும் இராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும். அவனை அந்த ஆடையால் அலங்கரித்து, அந்தக் குதிரையின்மேலேற்றி நகர வீதிகளில் உலாவ வைக்கவேண்டும். அப்போது பிரதானிகளில் ஒருவன் இராஜா கனம் பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறியபடி செல்லவேண்டும் என்று ஆமான் கூறினான்.

வசனம் 6:10-11

அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: சீக்கிரமாய் நீ சொன்னபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரமனையின் வாசலிலே உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்பிரகாரம் செய். நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான்.

அப்படியே ஆமான் வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறினான்.

ஆமானுக்கு நிலைகொள்ளவில்லை. இராஜவஸ்திரம் தரித்தவனாகவும், இராஜமுடியை அணிந்தவனாகவும் குதிரையின்மீதமர்ந்து உலாவத் துடித்தான். அவ்வாறு ஆமான் வருவதாகவும், மக்கள் சூழநின்று அவனைக் காண்பதாகவுமிருந்தால் அது அவனுக்கு ஒரு பொன்னாளாகுமன்றோ? அவனும் அவ்வாறே எண்ணிக்கொண்டிருந்தபோது இராஜாவின் குரல் ஒலித்தது. மிகவும் நன்று ஆமான். சீக்கிரமாய் நீ சொன்ளனபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய் இராஜஅரண்மனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்பிரகாரம் செய். நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார்... என்று கட்டளையிட்டான் அந்த இராஜா. ஆமானுக்கு ஒரே அதிர்ச்சி. அவன் காதுகளை அவனால் நம்பக்கூட முடியவில்லை. யூதனாகிய மொர்தெகாய் தான் இராஜாவால் கனம்பண்ணப்படப்போகிறவன். ஆனால் மகா பெரியவனாகிய ஆமான்? ஆமான்தான் அதை மொர்தெகாய்க்கு நடத்திவைக்கவேண்டும். அது நடக்குமா, நடக்காதா? நடந்தே தீரவேண்டும். ஆமானின் முகம் எவ்வளவு விகாரமாக மாறிவிட்டிருக்கக்கூடும். மொர்தெகாயைத் தூக்குமரத்தில் தூக்கிப்போடுவது குறித்துப்பேசவே அவன் இராஜாவினிடத்திற்கு வந்தான். அதே மொர்தெகாய்க்கு இராஜவஸ்திரம் தரித்து, இராஜமகுடம் சூட்டி குதிரைமீதேற்றி நகரவீதியில் உலாவவிட்டு அந்தப் பவனிக்கு முன்னால் நடந்தவனாக ஆமான். இது இராஜாவினால் அளிக்கப்பட்ட கனம் என்று அவன் கூறிச்செல்லவேண்டும். ஆமான் ஏதும் பேசியதாக வேதம் கூறவில்லை. ஆமான் பேசக்கூடாதவனாகிவிட்டான் போலும். இராஜா சொன்னபடியே ஆமான் செய்தான் என்று வேதம் கூறுகிறது. பாவம்! ஆமானுக்குத்தான் எத்தகைய கெட்டநாள் அன்று.

வசனம் 6:12

பின்பு மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலுக்குத் திரும்பிவந்தான். ஆமோனோவென்றால் சஞ்சலப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன் வீட்டுக்குத் தீவிரித்துப்போனான்.

மொர்தெகாயும்கூட ஆமானைப்போலவே திகைப்பிலாழ்ந்தவனானான். மொர்தெகாயை அவனுடைய இனத்தார்களான யூதர்களனைவரையும்கூட கொல்வதற்குக் கட்டளைகள் பிறப்பித்தவனாகிய அதே ஆமான், அதே மொர்தெகாயைச் சகல இராஜமரியாதைகளுடனும் வீதியில் உலாவ அழைத்து வருகிறான். சூசான் நகர மக்களனைவருமே வியப்பில் ஆழ்ந்துபோயிருப்பாரன்றோ? என்னவெல்லாமோ நடந்து முடிந்துவிட்டன. இது முடிவுபெற்றபின் மொர்தெகாய் மறபடியும் இராஜ அரண்மனை வாசலண்டைக்கே திரும்பிவந்துவிட்டான் என்று வேதம் கூறுகிறது. ஆமான் செய்ததுபோல் அவன் தன் நண்பர்களைக் கூட்டிவைத்துக்கொண்டு பெருமையடித்துக்கொள்ளவில்லை.

வசனம் 6:13-14

ஆமான் தனக்கு நேரிட்ட எல்லாவற்றையும் தன் மனைவியாகிய சிரேஷ{க்கும் தன் சிநேகிதர் எல்லாருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரரும் அவன் மனைவியாகிய சிரேஷ{ம் அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் தொடங்கினீர். அவன் யூதகுலமானால், நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள்.

அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராஜாவின் பிரதானிகள் வந்து, எஸ்தர் செய்த விருந்துக்கு வர ஆமானைத் துரிதப்படுத்தினார்கள்.

ஆமானுக்கோ அனைத்து நடைமுறைகளும் மாறிப்போய்விட்டிருந்தது. அவன் சஞ்சலப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன் வீட்டிற்குத் தீவிரித்துப் போனான். விட்டிலே தன் மனைவியாகிய சிரேசையும், தனது நண்பர்களையும் அழைத்து தனக்கு நேரிட்டு எல்லாவற்றையும் அவர்களுக்கு அறிவித்தான். அதற்கு முன்தினம் அவன் அவர்களிடம் கூறிய கதையென்ன? இன்று கூறுவது என்ன? எத்தனை பெரிய வித்தியாசம். அவனுடைய மனைவியும் நண்பர்களும் அவனுக்கு நல்ல செய்தி கூறமுடியவில்லை. ஆமானுக்குக் கேடுகள் சூழ்ந்தவரத் தொடங்கிவிட்டதை அவர்களால் நன்கு உணரமுடிந்தது. மொர்தெகாய் யூத குலமானால் நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்று அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் நீர் தாழ்ந்துபோய்க் கொண்டிருக்கிறதைச் சுட்டிக்காட்டினார்கள். யோபு, தனது நண்பர்களைக் கூறியதுபோல் (யோபு 6:2) ஆமானும் தனது நண்பர்களை அலட்டுண்டாக்குகிற தேற்றரவாளர்கள் என்று கூறியிருக்கலாம். ஆனால் இவர்கள் கூறியவை யாவும் முற்றும் உண்மையே. அவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது இராஜாவின் உழியக்காரார்கள் அங்கு வந்து சேர்ந்தனர். இராஜாத்தியாகிய எஸ்தரின் விருந்திற்கு ஆமோனை அழைத்துப்போகவே அவர்கள் இங்கு வந்திருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.