எஸ்தர் 8 விளக்கவுரை
இராஜாவின் புதிய கட்டளை
வசனம் 8:1-2அன்றையதினம் அகாஸ்வேரு ராஜா யூதரின் சத்துருவாயிருந்த ஆமானின் வீட்டை ராஜாத்தியாகிய எஸ்தருக்குக் கொடுத்தான். மொர்தெகாய் ராஜசமுகத்தில் வந்தான். அவன் தனக்கு இன்ன உறவு என்று எஸ்தர் அறிவித்திருந்தாள்.
ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிப்போட்ட தம்முடைய மோதிரத்தை எடுத்து, மொர்தெகாய்க்குக் கொடுத்தான். எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரமனைக்கு அதிகாரியாக வைத்தாள்.
அடுத்த முதல் நடவடிக்கையாக, ஆமானின் குடியிருப்பை இராஜா எஸ்தருக்குக் கொடுத்தான். எஸ்தர் இராஜாவிடம் மொர்தெகாய் தனக்கு என்ன உறவு என்பதனையும், சிறுவயதுமுதல் அவள் பாதுகாத்து வளர்ந்து வந்த வரலாற்றையும் கூறியிருந்தாள். ஆகையால் அவன் இராஜசமூகத்தில் வரவழைக்கப்பட்டான். இராஜா, ஆமானிடம் கொடுத்திருந்த இராஜ மோதிரத்தை அவனிடமிருந்து வாங்கிவிட்டிருந்தான். அதனை இப்போது மொர்தெகாயிடம் கொடுத்தான். இங்கே நாம் காணும் மொர்தெகாய், இராஜாவைக் கொலை சதியிலிருந்து காப்பாற்றியவன். இராஜாத்தி எஸ்தரை சிறுபிராயமுதல் குழந்தையாகத் தத்தெடுத்து அன்போடு வளர்த்து ஆளாக்கியவன். தனிமையாக நின்ற ஆமானை எதிர்த்து அழித்தவன். அவன் இராஜாவின் பொறுப்புமிக்க உயர்ந்த அதிகாரத்தில் இருக்கத் தகுதியுள்ளவனே. மொர்தெகாயின் இந்தச் செயல்களையெல்லாம் நாம் பார்க்கும்போது நமதாண்டவராகிய இயேசுவை நினைவுகூர வேண்டியவர்களாக இருக்கிறோம். அவர் நம்மை அன்போடு பராமரித்து வளர்த்து வருகிறார். எல்லா பாவங்களையும் ஒருவராகவே எதிர்த்து நிற்கிறார். ஒருவர் என்றால் ஒருவராகவேதான் அவர் இருக்கிறார். நமக்காக ஒருவராகவே இருந்து பாடுபட்டு சிலுவையில் மரித்தார். ஒருவராகவே நமது இருதயதங்களின் வாசலருகே காத்து நிற்கிறார். நாம் அழைத்தாலன்றி அவர் நமது இருதயத்திலே உள்ளே வரமாட்டார்.
இராஜா மொர்தெகாயை அழைக்கிறான். தன் இராஜ்யத்தின் சகல அதிகாரங்களையும் அவனிடத்தில், இராஜா ஒப்படைத்தான். இதுபோலவேதான் யோசேப்பிற்கும் எகிப்து தேசத்தின் பார்வோன் இராஜா செய்தானன்றோ (ஆதி.41:42-43). தானியேலும் இதுபோலவே கௌரவம் செய்யப்பட்டான் (தானி.2:48).
வசனம் 8:3
பின்னும் எஸ்தர் ராஜசமுகத்தில் பேசி, அவன் பாதங்களில் விழுந்து, அழுது ஆகாகியனாகிய ஆமானின் தீவினையையும் அவன் யூதருக்கு விரோதஞ்செய்ய யோசித்த யோசனையையும் பரிகரிக்க அவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினாள்.
இப்போது ஆமான் எழுதியனுப்பின கடிதம், யூதர்களனைவரையும் கொல்லவெண்டுமென்று நாடெங்கிலும் எழுதியனுப்பப்பட்ட கடிதம், என்வாயிற்று? அது இராஜாவினால் முத்திரையிடப்பட்டு இருந்ததே! மேதிய, பெர்சியரின் சட்டங்கள் மாற்றப்படக்கூடாதவைகளாயிற்றே. அச்சட்டத்தின்படி யூதர்களுக்கு மரணம் நிச்சயம் காத்துக்கொண்டுதானேயிருந்தது. இது எஸ்தருக்கும் தெரியும். ஆகவே, அவள் இராஜாவிடம் சென்று, கண்ணீரோடு மன்றாடுகிறாள். ஆமான் அனுப்பியிருந்த அந்தக் கொடுரமான இராஜ கட்டளையை மாற்ற என்ன செய்வது?
வசனம் 8:4-8
அப்பொழுது ராஜா பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்டினான். எஸ்தர் எழுந்திருந்து ராஜசமுகத்தில் நின்று:
ராஜாவுக்குச் சித்தமாயிருந்து அவர் சமுகத்தில் எனக்குக் கிருபைகிடைத்து, ராஜசமுகத்தில் நான் சொல்லும் வார்த்தை சரியென்று காணப்பட்டு, அவருடைய கண்களுக்கு நான் பிரியமாயிருந்தால், ராஜாவின் நாடுகளெல்லாம் இருக்கிற யூதரை அழிக்கவேண்டும் என்று அம்மெத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன் தீவினையாய் எழுதின கட்டளைகள் செல்லாமற்போகப்பண்ணும்படி எழுதி அனுப்பப்படவேண்டும்.
என் ஜனத்தின்மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக்கூடும்? என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படிச் சகிக்கக்கூடும் என்றாள்.
அப்பொழுது அகாஸ்வேரு ராஜா ராஜாத்தியாகிய எஸ்தரையும் யூதனாகிய மொர்தெகாயையும் நோக்கி: இதோ, ஆமானின் வீட்டை எஸ்தருக்குக் கொடுத்தேன். அவன் யூதர்மேல் தன் கையைப்போட எத்தனித்தபடியால் அவனை மரத்தில் தூக்கிப்போட்டார்கள்.
இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தினால் யூதருக்காக எழுதி, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடுங்கள். ராஜாவின்பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடப்பட்டதைச் செல்லாமற் போகப்பண்ண ஒருவராலும் கூடாது என்றான்.
இராஜா எஸ்தருக்கு, பொற்செங்கோலை நீட்டினான். எஸ்தர் இராஜ சமுகத்தில் நின்றாள், பேசினாள். இராஜா எஸ்தரிடத்திலும் மொர்தெகாயினிடத்திலும் பேசி, ஆமானின் குடியிருப்பை எஸ்தருக்குக்கொடுத்தேன். ஆமான் யூதர்மேல் தன் கையைப்போட எத்தனித்தபடியால் அவனை மரத்திலே தூக்கிப்போட்டார்கள். இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி ஒரு புதிய உத்தரவை நீங்கள் இராஜாவின் நாமத்தினால் எழுதி, இராஜாவின் மோதிரத்தால் முத்திரைபோடுங்கள் என்றான். இராஜாவின் பேரால் எழுதப்பட்டு, மோதிரத்தினால் முத்திரைபோடப்பட்ட அந்த ஆமானின் கடிதம் மாற்றப்படாமல்போனாலும் இக் கடிதம் புதிய உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம் படைத்தது.
வசனம் 8:9-10
சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள். மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கு அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.
அந்தக் கட்டளைகள் அகாஸ்வேரு ராஜாவின் பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டபின், குதிரைகள்மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறிப்போகிற அஞ்சற்காரர் கையில் அனுப்பப்பட்டது.
எஸ்தருக்கும், மொர்தெகாய்க்கும், முன்பு ஆமானுக்கு இருந்த அதே அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. என்ன செய்யமுடியும் என்று அவர்கள் யோசிக்க நேரமில்லை. மொர்தெகாய் உடனே செயல்ப்பட்டான். இராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள். புதியதொரு கட்டளை எழுதிமுடிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தின் நகல்கள் அந்தந்த நாட்டின் எழுத்திலும் பாஷையிலும் எழுதப்பட்டன. இராஜாவின் பேரால் எழுதப்பட்டு முத்திரையிடப்பட்டன. இராஜ்யமெங்கிலுமுள்ள 127 நாடுகளுக்கும், இராஜாவின் குதிரைகளிலும் ஒட்டகங்களிலும் ஏறிப்போகிற அஞ்சற்காரார் கையில் கொடுத்தனுப்பப்பட்டன. 127 நாடுகளின் தேசாதிபதிகளுக்கும் அந்த நாட்டின் அதிகாரிகளுக்கும் கொடுத்தனுப்பப்பட்டன.
அந்தப் புதிய கடிதத்திலே எழுதப்பட்டிருந்தது என்ன? அந்தப் பட்டணத்திலிருக்கிற யூதர் ஒன்றாய் சேர்ந்து, தங்கள் பிராணனைக் காப்பாற்றவும் தங்களை விரோதிக்கும் சத்துருக்களாகிய ஜனத்தாரும் தேசத்தாருமாகிய எல்லாரையும் அவர்கள் குழந்தைகளையும், ஸ்திரீகளையும் அழித்துக்கொன்று நிர்மூலமாக்கவும், அவர்கள் உடமைகளைக் கொள்ளையிடவும், இராஜா யூதருக்குக் கட்டளையிட்டார் என்று எழுதியிருந்தது. அது ஒரே ஒரு நாளைக்குமட்மே செயல்ப்படுத்தப்படவேண்டும். 12ம் மாதம் 13ம் தேதி மட்டும். அதன் படிவங்கள் ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம் பண்ணப்படவேண்டும். யூதர்கள் தங்களைக் காத்துக்கொள்ள ஆயத்தப்படும்படி இப்படிச் செய்யப்படவேண்டும். இந்த உத்தரவின் அடிப்படையிலான செயல்ப்பாடுகள் மிகவும் துரிதப்படுத்தப்பட்டன. அது யூதர்களின் ஜீவன் சம்பந்தப்பட்ட உத்தரவானபடியால் மிகவும் வேகத்துடனும் விவேகத்துடனும் செயல்ப்படுத்தப்பட்டது. அதுபோலவே இரட்சிப்பைத் தேடி நிற்போருக்கு தேவையான ஜீவ வசனங்களைப் பகிர்ந்து கொள்வதில் நாம் அதிக அக்கறையுடன் நடந்துகொள்ள வேண்டும். தேவனுடைய தூதன் அப்போஸ்தலரிடத்தில், நீங்கள் போய் தேவாலயத்தில் நின்று, இந்த ஜீவ வார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்று கூறியதாக நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம் (சங்.5:20). உன் மூலம் ஜீவ வார்த்தைகளை எத்தனைபேர் கேட்டிருக்கக்கூடும்?
வசனம் 8:11-15
அவைகளில், அகாஸ்வேரு ராஜாவுடைய எல்லா நாடுகளிலும் ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியாகிய அந்த ஒரே நாளிலே,
அந்தந்தப் பட்டணத்திலிருக்கிற யூதர் ஒன்றாய்ச் சேர்ந்து, தங்கள் பிராணனைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் சத்துருக்களாகிய ஜனத்தாரும் தேசத்தாருமான எல்லாரையும், அவர்கள் குழந்தைகளையும், ஸ்திரீகளையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதருக்குக் கட்டளையிட்டார் என்று எழுதியிருந்தது.
யூதர் தங்கள் பகைஞருக்குச் சரிக்குச் சரிக்கட்டும்படி நியமித்த அன்றையதினத்தில் ஆயத்தமாயிருக்கவேண்;டுமென்று அந்தந்த நாட்டிலுள்ள சகல ஜனங்களுக்கும் கூறப்படுகிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே. இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம்பண்ணப்பட்டது.
அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறிய அஞ்சற்காரர் ராஜாவின் வார்த்தையினால் ஏவப்பட்டு, தீவிரத்தோடே புறப்பட்டுப்போனார்கள். அந்தக் கட்டளை சூசான் அரமனையில் கொடுக்கப்பட்டது.
அப்பொழுது மொர்தெகாய் இளநீலமும் வெள்ளையுமான ராஜவஸ்திரமும், பெரிய பொன்முடியும், பட்டும் இரத்தாம்பரமும் அணிந்தவனாய் ராஜாவினிடத்திலிருந்து புறப்பட்டான். சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திருந்தது.
ஆகவே, மொர்தெகாய் ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்து, யூதர்கள் தாமாகவே தங்களின் உயிர்களைக் காத்துக்கொள்ள வகைசெய்வித்தான். பின்னர் அவன் இராஜசமூகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றான். இப்போது அவன் எவ்வளவு வேறுபட்டவனாகக் காணப்பட்டான். அவன் இளநீலமும் வெள்ளையுமான இராஜவஸ்திரமும், பெரிய பொன்முடியும், பட்டு இரத்தாம்பரமும் அணிந்தவனாகக் புறப்பட்டான். மிகவும் தாழ்மையாக இராஜ அரண்மனையின் வாசலிலே காத்திருந்த மொர்தெகாய், இராஜ கெம்பீரத்துடன் குதிரைமீதமர்ந்து அதே வாசல் வீதியாய் இப்போது செல்கிறான். இந்த மாற்றம், இந்தப் புதிய உத்தரவின் விளைவுகள் , மக்கள் அனைவர்மீதும் மகிழ்ச்சி ஆரவாரமாகப் பிரதிபலித்தது. சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்தது. இராஜ அதிகாரத்தின் பொறுப்பில் இப்போது தகுதியும் திறமையும் வாய்ந்தவன் இருக்கிறான். அப்படியானால் யாவும் நலமாகவே அமையும். இயேசு கிறிஸ்துவுக்கு தனது இருதயத்திலே முழு இடமளிக்கிறவன் எப்போதும் மகிழ்ந்து களிகூருவான். கிறிஸ்துவைத் தாபரமாகக்கொண்ட ஒருவன் அவ்வாறிருக்க, இராஜாக்களுக்கு இராஜனாகவும் கர்த்தாதி கர்த்தராகவும் அவர் எற்றுக்கொள்ளப்படும்போது, வெளி 19:12 ல் கூறியுள்ளபடி கண்கள் அக்கினி ஜீவாலையைப்போலவும், சிரசின்மேல் அநேக கிரீடங்களுடனும், இருப்பவரவரன்றோ? ஏற்றக்கொள்கிறவன் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவானல்லவா?
அப்பொழுது வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன் (வெளி 5:13). அது என்ன மகிமையான நாள்!
வசனம் 8:16
இவ்விதமாய் யூதருக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமும் உண்டாயிற்று.
இந்தப் புதிய இராஜ கட்டளையைக் கண்டு யூதர்கள் மிக்க வெளிச்சமும், மகிழ்சியும், களிப்பும், கனமும் அடைந்தனர். வேதத்தில் அவர்களின் மட்டற்ற மகிழ்ச்சியைக் காட்ட வார்த்தைகள் அடுக்கிக்கொண்டே போகப்பட்டுள்ளது. சங்கீதக்காரன் சங்கீதம் 97:11ல் நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது என்று பாடுகிறான். 16ம் வசனத்தில் அடுக்கியுள்ள வார்த்தைகளில் கடைசியாகக் கூறப்பட்டுள்ள கனமும் என்ற வார்த்தை சில அரிய கருத்துக்களை விளக்குவதாய் உள்ளது. அதுவரை யூதர்களுக்கு நேரிடப்போவது குறித்து யாரொருவரும் இரக்கப்படவோ அல்லது வருத்தப்படவோ இல்லையெனலாம். ஆனால் இந்த மாற்றத்திற்குப் பிறகு யூதர்களில் ஒருவன் (மொர்தெகாய்) இராஜ அதிகாரத்தின் உச்சியிலும், ஒருத்தி (எஸ்தர்) இராஜஸ்திரியாகவும் அமர்த்தப்பெற்றனர். இந்த நிலைமாற்றம் முழுமையாகவும், எதிர்பார்ப்பற்றதாகவும் வந்தது. அவர்கள் இனி யாருக்கும் அஞ்ச வேண்டும்? கிறிஸ்தேசு நமது இருதயங்களில் ஆட்சிசெய்யும்போது, யாருக்கும் அஞ்சவேண்டாம். பயப்படாதீர்கள் என்றுரைக்கிறார் அன்றோ?
வசனம் 8:17
ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும் யூதருக்குள்ளே அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாயிருந்தது. யூதருக்குப் பயப்படுகிற பயம் தேசத்து ஜனங்களைப் பிடித்ததினால், அவர்களில் அநேகர் யூதமார்க்கத்தில் அமைந்தார்கள்.
இராஜாவின் வார்த்தைகளையும், கட்டளைகளையும் போய்ச் சேர்ந்த எல்லா நாடுகளிலும், யூதர்கள் விருந்துண்டு மகிழ்ச்சியும் களிப்பும் பொங்க வீட்டிற்கு வீடு கொண்டாடி மகிழ்ந்தார்கள். அவர்களின் களிப்பு நமக்கு நன்கு விளங்குகிறதாய் உள்ளது. அதுபோலவே அந்த அரசின் குடிமக்களும் யூதர்களின் நிலையைப் புரிந்துகொண்டு, கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த மாற்றத்தினால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் மனதைப் பறிகொடுத்த சிலர், அவர்களும் யூதர்களாக மாறிவிடத் துடித்துக்கொண்டிருந்தனர். எந்த நேரத்தில் என்ன நேரிடுமோவெனப் பயந்துபோன அவர்கள், ஆபத்தைத் தவிர்ப்பதற்காக, அந்த யூதர்களுடன் இணைந்துவிடத் துணிந்துவிட்டனர். ஆனால் அவர்கள் அப்படி யூதர்களுடன் இணைந்துவிடத் துடித்ததன் உண்மையான காரணம் அவர்கள் தேவனாகிய கர்த்தரை விசுவாசித்ததேயாகும் என்று நாம் அறியக்கூடுமானால் நலமாக இருக்கும். ஆனால் நாம் இதை இந்தப் புத்தகத்திலே வாசிப்பதில்லை.