எஸ்தர் 5 விளக்கவுரை
எஸ்தரின் மன்றாட்டு
வசனம் 5:1-2மூன்றாள் நாளிலே எஸ்தர் ராஜவஸ்திரந் தரித்துக்கொண்டு, ராஜ அரமனையின் உள்முற்றத்தில், ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றாள். ராஜா அரமனை வாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் ராஜாசனத்திலே வீற்றிருந்தான்
.
ராஜா ராஜஸ்திரீயாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவன் கண்களில் தயை கிடைத்ததினாலே, ராஜா தன் கையிலிருக்கிற பொற்செங்கோலை எஸ்தரிடத்திற்கு நீட்டினான். அப்பொழுது எஸ்தர் கிட்டவந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள்.
இராஜாத்தி (இராணியின்) கட்டளையை மொர்தெகாய் சூசான் நகரம் முழுவதிலுமிருந்த யூதர்களுக்குத் தெரிவிக்கிறான். எஸ்தர் உபவாசித்தபடியினால் அவளுடைய தாதிமார் அனைவரும், இராணிக்காக மூன்றுநாள் உபவாசித்திருந்தனர். எஸ்தர் செயல்ப்படவேண்டிய மூன்றாம் நாள் வந்தது. அவன் இராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, இராஜா அரண்மனையின் உள்முற்றத்தில், இராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்திற்கு எதிராக வந்து நின்றாள். அங்கே இராஜா என்னசெய்வாரோவென்று கவனித்தவளாக அமைதியாக நின்றிருந்தாள். அரச கொலுமண்டபத்திலே, சிம்மாசனத்தில் அகாஸ்வேரு இராஜா வீற்றிருந்தான். அவன் நிமிர்ந்து பார்க்கிறான். எதிரே எஸ்தர் இராஜாத்தியைக் கண்டு மகிழ்வு அடைகிறான். அவன் கண்களில் அவளுக்குத் தயை கிடைக்கிறது. அவன் தன் கையிலிருந்த பொற்செங்கோலை எஸ்தரிடத்திற்கு நீட்டினான். அதன் பொருள் என்ன? எஸ்தரின் வருகையை இராஜா ஆமோதிக்கிறான். எஸ்தர், அந்த நிலையில் எவ்வாறு உணர்ச்சி வசப்படுகிறாள் என்று வேதாகமம் நமக்குக் கூறவில்லை. ஆனால் தனது பிராணன், ஒருவேளை இராஜாவினால் அந்தச் செயலுக்காக எடுக்கப்பட்டிருக்கக்கூடிய உயிர் தப்பியது என அறிந்த அவள் இராஜாவை நோக்கி சற்று முன்னே நடந்துசென்று, செங்கோலின் நுனியைத் தொடுகிறாள்.
நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தல் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும் தைரியமாய், இரவிலும் பகலிலும் இராஜாதி இராஜன் முன்னிலையில் சேரக்கூடியது நமக்குப் பெரும் மகிழ்ச்சியன்றோ (எபி.4:16).
வசனம்: 5:3
ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்னவேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான்.
இராஜா பேசுகிறான்: எஸ்தர் இராஜாத்தியே, உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிகேட்டாலும் உனக்குக் கொடுக்கப்படும் என்று அவன் கூறுகிறான். அவ்வளவு பெரிய வாக்களிப்பு. இராஜஸ்திரீயாகிய எஸ்தர் இராஜவஸ்திரம் தரித்தவளாய் நின்றபோது அவளைப் பார்த்து அவன் பெருமகிழ்ச்சியடைந்திருந்தவனாய், அகாஸ்வேரு இராஜா அவளுக்குத் தனது இராஜ்யத்தில் பாதி வேண்டுமென்றாலும் கொடுக்க சித்தமாயிருந்தான் என்று நாம் பார்க்கிறோம். வேதத்தின் மற்றொரு பகுதியில் ஓர் இராஜா, ஒரு நடனமாடிய பெண்ணுக்கு இதேபோன்றதொரு வாக்களிப்பை வெளியிடுகிறான் என்று பார்க்கிறோம். ஆனால் அந்த மாது பணம், பொருள், பொன், நிலம் ஆகியவை யாதொன்றையும் கேட்காமல் யோவான்ஸ்நானகனின் தலையை மட்டுமே கேட்டாள். அந்த இராஜாவாகிய ஏரோது, மற்றவர்கள் தன்னைப்பற்றி தன் வாக்கை காப்பாற்றாமல் போனான் என்று கூறிவிடாதபடியிருக்க, அந்தக் குற்றமற்ற யோவான்ஸ்நானகனைக் கொன்று அவனுடைய தலையை வெட்டி ஒரு தட்டில் வைத்து அவளிடம் கொடுத்தான் என்று வேதத்தில் வாசிக்கிறோம்.
வசனம் 5:4
அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமானால், நான் தமக்குச் செய்வித்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் வரவேண்டும் என்றாள்.
எஸ்தர் இங்கே உடனே எதையும் கேட்டு விடவில்லை. ஆனால் அவள் ஓர் அற்புத அழைப்பை இராஜாவிற்கு விடுக்கிறாள். இராஜாவும் ஆமானும் அவள் செய்வித்த விருந்துக்கு அன்றைய தினம் வரவேண்டுமாம். ஆமானுக்கு விருந்தா? இராஜாவுடனும் இராஜாத்தியுடனும். எஸ்தர் என்ன நினைத்துக்கொண்டு இதனையெல்லாம் செய்கிறாள். அவளுக்கு ஓர் அசைக்கமுடியாத நம்பிக்கை. நல்லதெல்லாம் நடக்கும் என்ற எண்ணத்தில்தானே அவள் அந்த விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தாள். எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன் என்று வேதம் கூறுகிறதன்றோ (யாக்.1:6).
வசனம் 5:5
அப்பொழுது ராஜா எஸ்தர் சொற்படி செய்ய, ஆமானைத் தீவிரித்து வரும்படி சொல்லி, எஸ்தர் செய்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் வந்தார்கள்.
இராஜா மிகவும் மகிழ்ந்து போனான். இராஜாத்தி செய்த விருந்திற்கு தீவிரித்து வரும்படி ஆமானை அழைத்துவர, அவன் தனது பணியாட்களை அனுப்பினான். ஆமானிடம் அளவுகடந்த சந்தோஷத்தை நினைத்துப்பார்ப்போமாக. இராஜாத்தியாகிய எஸ்தர் அவனை விருந்திற்கு அழைத்திருக்கிறாளே.
வசனம் 5:6
விருந்திலே திராட்சரசம் பரிமாறப்படுகையில், ராஜா எஸ்தரைப் பார்த்து: உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும். நீ கேட்கிறது என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.
விருந்திலே அவர்கள் அமர்ந்திருந்தனர். இராஜா மறுபடியும் எஸ்தருக்கு வாக்குறுதி, வாழ்த்து வழங்குகிறான். நீ கேட்கிறது என்ன? நீ இராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்று கூறுகிறான். ஆனாலும் மறுபடியும் எஸ்தர் எதையும் கேட்கத் துணியவில்லை. ஆனால் மிகவும் பணிவுடன், ராஜாவின் கண்களில் எனக்குக் கிருபை கிடைத்தது..... ராஜாவுக்கு சித்தமானால்...... என்பன போன்ற மதிப்பிற்குரிய வார்த்தைகளால் பதிலளித்தாள். வேதத்தில் நாம் வாசிக்கும் தேவனுக்குப் பயந்திருங்கள் ராஜாவைக் கனம்பண்ணுங்கள் என்ற வார்த்தைகளை நினைவுகூருவோமாக. (1.பேது.2:17). அடுத்து எஸ்தர் மற்றுமொரு வியத்தகு அழைப்பை விடுவிக்கிறாள். இராஜாவும் அமானும் நான் இன்னும் தங்களுக்குச் செய்யப்போகும் விருந்திற்கு நாளை வரவேண்டும் என்பதே என் வேண்டுதலும் விண்ணப்பமுமாகும். நாளைக்கு இராஜாவின் சொற்படி செய்வேன். அதாவது இராஜாவின் சொற்படி எனது வேண்டுதலை அறிவிப்பேன் என்று எஸ்தர் கூறினாள். ஆமானுக்கு இன்னுமொரு விருந்தா? என்னதான் நடக்கப்போகிறதோ?
வசனம் 5:7-9
அதற்கு எஸ்தர் பிரதியுத்தரமாக:
ராஜாவின் கண்களில் எனக்குக் கிருபைகிடைத்தது, என் வேண்டுதலைக் கட்டளையிடவும், என் விண்ணப்பத்தின்படி செய்யவும், ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், ராஜாவும் ஆமானும் நான் இன்னும் தங்களுக்குச் செய்யப்போகிற விருந்துக்கு வரவேண்டும் என்பதே என் வேண்டுதலும் என் விண்ணப்பமுமாயிருக்கிறது. நாளைக்கு ராஜாவின் சொற்படி செய்வேன் என்றாள்.
அன்றையதினமே ஆமான் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் புறப்பட்டான். ஆனாலும் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற மொர்தெகாய் தனக்கு முன் எழுந்திராமலும் அசையாமலும் இருக்கிறதை ஆமான் கண்டபோது, அவன் மொர்தெகாயின்மேல் உக்கிரம் நிறைந்தவனானான்.
ஆமான் இவைகளைப்பற்றியெல்லாம் யாது கூறினான் என்று வேதத்தில் யொதொன்றும் கூறப்படவில்லை. ஆனால் ஆமான் மிகவும் மகிழ்ச்சியடைந்திருந்தான் என்று மட்டும் பார்க்கிறோம். அரண்மனையிலிருந்து மிகவும் மகிழ்சியோடே வெளியில் புறப்பட்டான். இராஜாத்தியாரே நேரில் அவனை அழைத்துள்ளாரே. அதைவிட வேறென்ன கேளரவம் ஒருவனுக்கு வேண்டும்? ஆனால் அவன் அரண்மனைவாசல் வழியே வெளியே செல்லுகையில், அங்கே மறுபடியும் மொர்தெகாய் உட்கார்ந்திருப்பதைக் கண்டான். ஆமான் கடந்து வரும்போது அங்கேயிருந்த அனைத்து ஊழியக்காரர்களும், பிரபுக்களும் அவனை வணங்கி நிற்க, அருகில் இருந்த மொர்தெகாயை உற்று நோக்குகிறான். அவனும் நிச்சயமாக இந்த முறை வணங்கியே தீருவான். நல்ல பாடம் புகட்டப்பட்டுவிட்டது என்றெல்லாம் அவன் நினைக்கிறான். ஆனால் அதுதான் நடக்கவில்லை. மொர்தெகாய் எழுந்துகூட நிற்கவில்லை. வேதத்தில் எழுந்திராமலும், அசையாமலும் இருந்தான் என்று கூறப்பட்டுள்ளது. அவன் மொர்தெகாயின்மேல் உக்கிரம் நிறைந்தவனானான். மொர்தெகாய் மரணத்தை எதிர்நோக்கியிருந்த நிலையியும்கூட ஆமான் போன்ற ஒரு மனிதனுக்கு தலை வணங்க மறுத்துவிட்டான்.
வசனம் 5:10-13
ஆகிலும் ஆமான் அதை அடக்கிக்கொண்டு, தன் வீட்டுக்கு வந்து, தன் சிநேகிதரையும் தன் மனைவியாகிய சிரேஷையும் அழைத்து, தன் ஐசுவரியத்தின் மகிமையையும், தன் பிள்ளைகளின் திரட்சியையும், ராஜா தன்னைப் பெரியவனாக்கி, தன்னைப் பிரபுக்கள்மேலும் ராஜாவின் ஊழியக்காரர்மேலும் உயர்த்தின எல்லாவற்றையும் ஆமான் அவர்களுக்கு விவரித்துச்சொன்னான். பின்னையும் ஆமான்: ராஜஸ்திரீயாகிய எஸ்தரும் தான் செய்த விருந்துக்கு ராஜாவுடனேகூட என்னைத்தவிர வேறொருவரையும் அழைக்கவில்லை. நாளைக்கும் ராஜாவுடனேகூட நான் விருந்துக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறேன். ஆனாலும் அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணுமளவும் அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லையென்றான்.
ஆமானுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அவன் அதை அடக்கிக்கொண்டே வீடு நோக்கி விரைந்தான். வீடு சேர்ந்ததும் தன் மனைவியாகிய சிரேஷை அழைத்தான். தனது நண்பர்களை அழைப்பித்தான். தனது ஐசுவரியத்தின் மகிமையைக் குறித்து அவர்களிடத்தில் பெருமையடித்துக்கொண்டான். மேலும் அவன் தன் பிள்ளைகளின் திரட்சியையும், இராஜா அவனை எல்லா பிரபுக்கள்மேலும் பெரியவனாக உயர்த்திவைத்துள்ள அனைத்தையும் கூறி பெருமைப்பட்டுக் கொண்டான். அதுமட்டுமின்றி, இராஜாத்தியான எஸ்தர் அவனுக்கு கொடுத்த அழைப்பினையும் குறித்துக் கூறுமிடத்து, அவள் செய்திருந்த விருந்திற்கு, அவனையும் இராஜாவையும் தவிர வேறு எவரையும் அழைக்காததையும் கூறியதுமட்டுமன்றி, நாளைக்கு வேறு ஒரு விருந்திற்கு இராஜாத்தியினால் அழைக்கப்பட்டுச் செல்லவேண்டியிருப்பதனையும் கூறி மகிழ்ந்துகொண்டிருந்தான். கேட்டுக்கொண்டிருந்த நண்பர்கள் அவன் கூறியதை ரசித்தார்களோ, இல்லையோ அவன் யாவரும் வியக்கத்தக்கதாய் அவனுடைய மகிமைப் பிரதாபங்களைக் கூறி அவர்களின் பாராட்டுதல்களிலே மகிழ எண்ணிக்கொண்டிருந்தான். ஆனால் இவை அனைத்தையும் கெடுக்கும்படியாக ஓர் ஈ னத்தனம் நடைபெறுவதையும் அவன் கூறாமல் இல்லை. அதுதான் மொர்தெகாய். அவனைப்பற்றிக் குறிப்பிட்ட ஆமான், ஆனால் அந்த யூதனாகிய மொர்தெகாய் இராஜாவின் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணுமளவும் இந்தப் பெருமையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை என்று ஏக்கத்துடன் ஒரு பெருமூச்செறிந்தான். உண்மையாகவே அவனுக்கிருந்த பெருமை, செல்வம் யாவற்றையும் அவனால் இரசிக்கமுடியவில்லை. அவனுடைய பிள்ளைகள், செல்வம், செல்வாக்கு இவையெல்லாம் அந்த ஒரு மனிதன் அவனுக்குத் தலைவணங்காமல் இருக்கும்வரை ஒன்றுமில்லாததுபோலவே காணப்பட்டன. பாவம், அவன் தற்பெருமையால் புடைத்துப்போயிருந்தான்.
வசனம் 5:14
அப்பொழுது அவன் மனைவியாகிய சிரேஷ{ம் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து: ஐம்பதுமுழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும். அதிலே மொர்தெகாயை தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும். பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப் போகலாம் என்றார்கள். இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான்.
அவனுடைய அருமை மனைவி சிரேஷ், அன்பு நண்பர்களும் அவனுக்காகச் சிந்தனைசெய்து ஓரற்புதமான ஆலோசனையை முன்வைத்தார்கள். ஐயா, ஆமான் அவர்களே, அழகான ஒரு தூக்குமரத்தைச் செய்வியும். உறுதியான ஐம்பது முழ உயரமானதுமாக, யாவரும் தலைநிமிர்ந்து பார்க்கக்கூடியதுமாக அது இருக்கவேண்டும். நாளைக்கு, நீர் இராஜாவினிடம் தனித்துப்பேசி, மொர்தெகாயை அதிலே தூக்கிப்போட வகைசெய்யும். இராஜாவினாலே உமது ஆலோசனையின்படியே எல்லா யூதர்களையும் கொலைசெய்விக்க கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதே. யூதர்கள் அனைவரும் கொலைசெய்யப்படவேண்டுமென்று குறிக்கப்பட்டுள்ள நாள், நேரம் வருமுன்பே, அந்த யூதர்களில் மொர்தெகாய் போன்ற ஒருவன், சற்று முன்கூட்டியே தூக்கிலிடப்படுவது இராஜாவிற்கு மிகக் கடினமான சட்டப்பிரச்சனையோ, கடினமானதோ அல்லவே. அதற்குப்பின்பு நீர் மகிழ்ச்சியுடன் இராஜாத்தியின் விருந்திற்குள் நுழையலாமே..... என்று ஆமானை உசுப்பினர். ஆமான் ஒரு கொடியோன். அவனுடைய நண்பர்கள் அவனிலும் கொடியவர் என்பதை நாம் காணமுடிகிறதன்றோ? ஆமான் ஒருகணமே யோசித்தான். இது மிகவும் இனிமையான ஆலோசனையாக அவனுக்குப்பட்டது. அடுத்தகணமே, அந்தத் தூக்குமரம் உயரமானதாக, உறுதியானதாக யாவரும் காணும்படியாக, மொர்தெகாயைத் தூக்கிப் போடும்படியாக செய்வித்து நிறுத்தினான். இராஜா தனது திட்டத்திற்குச் சிறிதளவேனும் மாற்றமோ, அல்லது மறுப்போ சொல்லாமல் அதை நிறைவேற்றச் செய்வான் என்று அவன் நம்பினான். மொர்தெகாயை அதிலே தூக்கிப்போட்டு, அனைவரும் அதைக்கண்டு, ஆமானை எதிர்ப்பவர், அவமதிப்பவர், எவராக இருப்பினும் அவர்களுக்கு யாது நேரிடும் என்பதைப் புரிந்துகொள்ளச்செய்ய அவன் தீர்மானித்தான்.
கொடுமையின் கோரமான கரங்கள் மொர்தெகாயை நெருங்கிக்கொண்டேயிருந்தன. அதையறியாத அவன் அந்தோ, இன்னும் ஒரே ஒருநாள் மட்டுடே உயிருடன் வாழமுடியும். அவனுக்காக உதவிக்கரம் நீட்டுவோர் அன்புக் கரம் நீட்டுவோர் நீதியின் கரம் நீட்டுவோர் யாருமில்லையோ? ஏன் இல்லை? தேவாதி தேவன் இருக்கிறார். இந்தக் கொடுமைகள் எத்தனை துரிதமாக முளைத்தனவோ அத்தனை துரிதமாகவே முற்றிலும் மாறிப்போக அவர் கிருபை செய்தார்.