எஸ்றா 4 விளக்கவுரை

எஸ்றா 4

(5) ஆலயக் கட்டடப்பணி தடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.
வசனம் 4:1-2

சிறையிருப்பிலிருந்து வந்த ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறார்கள் என்று யூதாவுக்கும் பென்ஜமீனுக்கும் இருந்த சத்துருக்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் செருபாபேலிடத்துக்கும் வந்து: உங்களோடேகூட நாங்களும் கட்டுவோம். உங்களைப்போல நாங்களும் உங்கள் தேவனை நாடுவோம். இவ்விடத்துக்கு எங்களை வரப்பண்ணின அசீரியாவின் ராஜாவாகிய எசரத்தோன் நாட்கள் முதற்கொண்டு அவருக்கு நாங்களும் பலியிட்டுவருகிறோம் என்று அவர்களோடே சொன்னார்கள்.


தேவனுடைய பணிகளைப் பொறுத்தமட்டில் ஒன்று மட்டும் நிச்சயம். பணி ஆரம்பிக்கும்போது நிச்சயமாக சத்துரு அங்கே வருவான். பிரதான சத்துரு யாரென்று வேதம் நமக்குக் கூறுகிறது. உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றித் திரிகிறான் (1பேதுரு 5:8). ஆனால் சாத்தான் எப்போதும் சிங்கம் போல் மட்டும் காணப்படுவதில்லை. ஏவாளிடத்தில் அவன் ஒரு சர்ப்பமாக வந்தான் (ஆதி.3:1, வெளி 20:2). யோபுவைத் தாக்க அவன் கர்த்தருடைய சந்நிதியில் தேவ புத்திரரோடு வந்து நின்றான் (யோபு 1:6-12). பவுல் அப்போஸ்தலன் சொல்லுகிறபடி, அவன் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வான் (2கொரி.1:14). படங்களில் காண்கிறபடி கொம்புகளுடனும் வாலுடனும் தோன்றினால் நாம் அவனை எளிதில் கண்டு பிடிக்க முடிகிறது. ஆனால் அதிகமான வேளைகளில் அவன் ஒரு நல்ல நண்பனைப்போல் காணப்படுகிறான். மத்தேயு நம்மை எச்சரித்துக் கூறுகிறதாவது, கள்ள தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாய் இருங்கள். அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள். உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் (மத்.7:15).

முதலாம் வசனத்திலே யூதாவிற்கும் பென்னியமீனுக்கும் இருந்த சத்துருக்கள் என்று குறிப்பிடப்பட்ட சிலரைக் காண்கிறோம். ஆகையால் அவர்கள் சத்துருக்கள் என்று நாம் காண்கிறோம். கர்த்தருடைய பிள்ளைகளுக்குச் சத்துருக்கள் எனப்பட்டவர்கள் சாத்தானைப் போன்றவர்களே. இந்தச் சத்துருக்கள் யார்? அவர்களைப்பற்றி இராஜாக்களின் புத்தகம் 17ம் அதிகாரத்திலே நாம் வாசிக்கிறோம். ஓசெயா இராஜா இஸ்ரவேலின்மேல் இராஜாவாகி அரசாண்டபோது, இஸ்ரவேலர் கர்த்தருடைய வழிகளை விட்டு விலகிப் போனார்கள். கர்த்தர் அவர்கள்மேல் கோபமடைந்து, அவர்கள் தோற்கடிக்கப்பட்டு சிறைப்பட்டுப் போக சித்தங் கொண்டு அவர்ளை அசீரியா இராஜாவின் கையில் ஒப்புக் கொடுத்தார். அவர்கள் சமாரியாவிற்குள் சிதறடிக்கப்பட்டார்கள். அசீரியா இராஜா தான் ஆண்ட வேறு சில புறஜாதி மக்களையும் சமாரியாவிலே குடியேற்றினான். அவர்கள் இஸ்ரவேல் தேவனுக்குப் பயப்படவில்லை. கர்த்தர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார். அவைகள் அவர்களில் சிலரைக் கொன்று போட்டது (2.இராஜா.17:24-25). அவர்கள் இதனைப் புரிந்துகொண்டு அசீரியா இராஜாவினிடத்தில் சென்று, இஸ்ரவேல் தேவனுடைய காரியத்தை அவர்கள் அறியாதபடியினால் அவர்களைச் சிங்கங்கள் கொன்று போடுகின்றன என்று சொன்னார்கள். ஆகையால் அசீரியா இராஜா அங்கேயிருந்து கொண்டு வந்த ஆசாரியர்களில் ஒருவனை அழைத்துக் கொண்டு போய், அவர்களுக்கு தேவனுடைய காரியங்களைப் போதிக்கக் கட்டளையிட்டான்.

அப்படியே ஆசாரியர்களில் ஒருவன் வந்து கர்த்தருக்குப் பயந்து நடக்க வேண்டிய விதத்தை அவர்களுக்குப் போதித்தான். அவர்கள் அதைக் கேட்டுப் பணிந்தனர். எனினும் தொடர்ந்து தங்கள் தேவர்களைத் தங்களுக்கு உண்டு பண்ணி சேவித்தும் வந்தார்கள். அவர்கள் கர்த்தராகிய தேவனைத் துதிப்பவர்களாகக் காணப்பட்ட போதிலும் தங்களின் விக்கிரகங்களையே உண்மையில் ஆராதித்து வந்தனர். இங்கே கர்த்தரின் சத்துருக்களை நாம் காண முடிகிறது.

இவர்கள்தான் யூதாவுக்கும் பென்ஜமீனுக்கும் இருந்த சத்துருக்கள். சிறைப்படுத்தப்பட்டிருந்த யூதர்கள், திரும்பி எருசலேமுக்கு வந்து தேவனுடைய ஆலயத்தைக் கட்டத் துவக்கியுள்ளனர் என்பதை அவர்கள் கேள்விப்பட்டனர். கர்த்தராகிய தேவனை மட்டுமே தொழ இந்த ஆலயம் பயன்படுத்தப்படும் என்று அவர்கள் அறிந்திருந்தனர். தேவனையும், தங்களின் சொந்த விக்கிரகங்களையுமாகிய இரண்டையும் கலந்து தொழ இது பயன்படப் போவதில்லை என்று அறிந்த அவர்கள் செரூபாபேலிடத்திற்கும் தலைவரான பிதாக்களிடத்திற்கும் வந்து உங்களோடேகூட நாங்களும் சேர்ந்து கட்டுவோம் என்று கூறினார்கள். இது ஒரு நல்ல நட்பின் குரலாகத் தோன்றுகிறது. மேலும் அவர்கள் நாங்களும் உங்களைப்போல் உங்கள் தேவனை நாடுவோம். அவருக்குப் பலியிடுவோம் என்றும் கூறினார்கள். இது ஒருபடி மேலான அன்புக் குரலாகத்தான் தோன்றுகிறது. இங்கே கர்த்தராகிய தேவனை நாங்கள் வணங்குகிறோம் என்று சொல்லி ஆலயத்தைக் கட்டும் பணியில் சேர்ந்துகொள்ள முன் வந்த மக்களை நாம் காண்கிறோம். வியப்பே! மேலும் அவர்கள், அசீரியா இராஜாவினால் சமாரியாவிற்கு அனுப்பப்பட்ட நாள் முதலாய் இவ்வாறு செய்து வருவதாகக் கூறினார்கள். யூதர்களுக்கு இப்போது நன்கு புரிந்து விட்டது. இவர்கள் யார் என்பதனை தெளிவாக விளங்கிக் கொண்டனர். தேவனை வணங்கிய அதே நேரத்தில் தாங்கள் வார்ப்பித்த விக்கிரகங்களையும் வணங்கி வந்தவர்கள் இவர்களே. யூதர்கள் உடனே ஒன்றாகச் சேர்ந்து, எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. பெர்சியாவின் இராஜாவாகிய கோரேஸ் இராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம் என்றார்கள்.

வசனம் 4:3

அதற்குச் செருபாபேலும், யெசுவாவும், இஸ்ரவேலில் மற்றுமுள்ள தலைவரான பிதாக்களும் அவர்களை நோக்கி: எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி, நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம் என்றார்கள்.

தங்களுக்குத் தேவையானது, பூரண உற்சாகமேயன்றி விக்கிரங்களை வணங்கும் ஒரு கும்பலின் உதவியல்ல என்பதை அவர்களின் தலைவர்களுக்கு நன்கு தெரியும். அத்தகைய உதவியை உதறித் தள்ளுவதென்பது ஒரு துணிவேயாகும். கிடைக்கக் கூடிய எல்லா உதவிகளையும் பெற்றுக்கொள்வது மிக எளிதானதாகவே காணப்படுகிறது. அதுவும் அவர்கள் தங்கள் நண்பர்கள் எனக் கூறும்போது? ஆலயத்தைப்பற்றிய செய்தி இவ்வாறெனில் நமது வாழ்வின் சாட்சிகளிலும் இவ்வாறே நடைபெறுகிறது. நண்பர்கள் என சிலர் தங்களைக் கூறிக் கொண்டு நமக்கு உதவி செய்யவும் முன்வருவார்கள். அவர்களை நாம் சேர்ந்துக் கொள்ளலாமா? தேவன் நம்மை நன்கு எச்சரித்துள்ளார். இரு எஜமான்களுக்கு வேலை செய்ய உங்களால் கூடாதே... ஒருவரை மட்டும் நாம் நிச்சயமாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.. கர்த்தரின் வழிகளைத் தெரிந்துக் கொள்ளாதோரின் கூட்டத்தில் நாம் சேர முடியாது. அப்படி சேர்ந்தால் தேவனுக்கடுத்த பணிகள் நடைபெறாது.

வசனம் 4:4

அதினாலே அந்தத் தேசத்து ஜனங்கள் யூதா ஜனத்தின் கைகளைத் தளரப்பண்ணி, கட்டாதபடிக்கு அவர்களைச் சங்கடப்படுத்தி,

அந்த இருமனமுள்ளவர்கள், உண்மையில் தாங்கள் யார் என்பதை சீக்கிரமே வெளிப்படுத்தி விட்டனர். அவர்களின் உதவிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு விட்டவுடனே அவர்கள் ஆலயப் பணியைத தடுக்கவும், அந்த யூதர்களைப் பயமுறுத்தி ஆலயப் பணியை நிறுத்தச் செய்யவும் முற்பட்டனர். ஒருவகை நண்பர்கள் அவர்களின் இழிவான உதவியைப் புறக்கணித்தது மிகவும் நியாயமே. ஆனால் அதன் விளைவாக ஆலயப்பணி மிகவும் தாமதப்படத்துவங்கியது. இன்றைய கர்த்தரின் பிள்ளைகளுக்குக்கூட இத்தகைய சிக்கல்களே ஏற்படுகின்றது. முழுமனதோடே கர்த்தரின் பணியைச் செய்ய முற்படுகிற அவர்களுக்குப் பல விதங்களிலும் இடையூறு ஏற்படுகிறது. சிலர் தங்கள் உயிரையும் இழக்க நேரிடுகிறது. ஏரோது பாவம் செய்த போது, யோவான் ஸ்நானனுடைய பரிசுத்தத் தன்மை, அதை அவனுக்கு உணர்த்திக் காட்டச் செய்தது. ஆனால் ஏரோது அவனைச் சிறையில் அடைத்தான். இந்தப் பரிசுத்த செயலுக்காக யோவான் சிரச்சேதம் பண்ணப்பட்டான் (மாற்கு 6:16-29). அதுமட்டுமல்ல. இதே ஏரோது யாக்கோபைப் பட்டயத்தினாலே வெட்டிக்கொலை செய்தான் (அப், 12:1-2).

வசனம் 4:5

பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் காலமுழுதும், தரியு என்னும் பெர்சியா ராஜா அரசாண்டகாலமட்டும், அவர்களை யோசனையை அவத்தமாக்கும்படி அவர்களுக்கு விரோதமாய் ஆலோசனைக்காரருக்கு கைக்கூலி கட்டினார்கள்.

அதனோடு பகைஞரின் காரியங்கள் முடிவுபெறவில்லை. தொடர்ந்து அவர்கள் யூதர்களுக்குத் தொல்லைகொடுத்தனர். யூதருக்கு விரோதமாய் அரசு ஆலோசனைக்காரருக்குக் கைக்கூலிக் கட்டினார்கள். யூதர்கள் மிகவும் துன்பப்படுத்தப்பட்டனர் கர்;ததருடைய ஆலயத்தின் கட்டுமானப் பணியில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டது.

அவர்கள் மேற்கொண்ட வேலை சட்டங்களுக்கு புறம்பானதன்று. புறமதஸ்தர்கள் தங்களின் தெங்வங்களை வணங்கிக் கொள்ள இப்பணி யாதொரு இடையூறும் உண்டாக்கவில்லை. அது தேவனுடைய மகிமைக்காக ஓர் ஆலயம் கட்டப்படும் வேலையாகும். ஆனால் சாத்தானும் தேவனுடைய சத்துருக்களும் அதைச் சகித்துக் கொள்ளக் கூடவில்லை. ஆகையால் அவர்கள் தங்கள் முழு பெலத்தையும் வைத்து அதை எதிர்க்க முற்பட்டனர். யூதர்கள் தங்களுக் வீடுகளைக்க கட்டிக்கொண்டபோது அவர்களை யாரும் தடுக்கவில்லை. ஓர் எதிர்ப்பு வார்த்தை கூட வெளிவரவில்லை. ஆனால் அவர்கள் தேவனுக்கென்று ஒரு பணியைச் செய்ய துவங்கியபோதுதான் இந்தத் தொல்லை ஆரம்பமானது. அந்தத் திருப்பணியைத் தடுக்க, அந்தப் பகைஞர்கள் தங்களால் ஆனதனைத்தையும் செய்ய முற்பட்டு, ஆண்டு கணக்கில் தொல்லைகொடுத்தனர். கோரேஸ் இராஜா மரித்தபின்பு தரியு இராஜா ஆண்ட கால மட்டும் தொல்லை கொடுத்து அதன்பின் அகாஸ்வேரு இராஜாவின் காலமட்டும் இத்தகைய தொல்லைகள் நீடித்தன. நாம் நமது பணிகளிலே ஓருவேளை சோர்வடைந்து போகலாம். ஆனால் நமது ஆத்மீக எதிரிகளோ ஒருக்காலும் சோர்ந்து போவதில்லை. தொல்லைகள் மட்டும் நீடித்தனவேயொழிய தேவனுடைய வேலைகள் நிற்கவில்லை. ஆனால் சிறிய பின்னடைவு ஏற்பட்டது மட்டும் உண்மைதான். சாத்தானின் மிகச் சிறந்தது தந்திரம், யாரையும், யாதொன்று குறித்தும் சோர்வடையச் செய்வதே எனலாம். செய்யத் துவங்குகிற எந்த ஒரு நல்ல வேலையும், மிகப் பெரிதாகவும், மிகக் கடினமானதாகவும், காலமும், பணமும் விரயம்செய்யப்படக் கூடியதொன்றாகவும், காணும்படி அவன் செய்வான். அதனால் சோர்வடைந்து அந்த வேலையை நாம் கைவிட்டுவிடும்படி நம்மைத் தூண்டுவதோடன்றி அம்மாதிரி நாம் கைவிட்டு விட்டது ஒரு நல்ல காரணத்தினால் தான் என்று எண்ணும்படியும் அவன் செய்வான்.

வசனம் 4:6-11

அகாஸ்வேரு அரசாளுகிறபோது, அவனுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகப் பிரியாது எழுதினார்கள். அர்தசஷ்டாவின் நாட்களிலும், பிஸ்லாமும், மித்திரேதாத்தும், தாபெயேலும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவும், பெர்சியாவின் ராஜாவான அர்தசஷ்டாவுக்கு ஒரு மனு எழுதினார்கள். அந்த மனு சீரிய எழுத்திலும் சீரிய பாஷையிலும் எழுதியிருந்தது. ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும் கணக்கனாகிய சிம்சாவும் எருசலேமுக்கு விரோதமாக அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு எழுதின மனுவிலே கையொப்பம் போட்டவர்கள் யாரென்றால்: ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும், கணக்கனாகிய சிம்சாயும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவாகிய தீனாவியர், அபற்சாத்தியர், தர்பேலியர், அப்பார்சியர், அற்கேவியர், பாபிலோனியர், சூஷங்கியர், தெகாவியர், ஏலாமியரானவர்களும், பெரியவரும் பேர்பெற்றவருமான அஸ்னாப்பார் அவ்விடங்களிலிருந்து அழைத்துக்கொண்டுவந்து சமாரியாவின் பட்ணத்திலே குடியேறப்பண்ணின மற்ற ஜனங்களும், நதிக்கு இப்பாலே இருக்கிற மற்ற ஜனங்களுமே. அவர்கள் அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு அனுப்பின மனுவின் நகலாவது: நதிக்கு இப்புறத்தில் இருக்கிற உமது அடியார் முதலானவர்கள் அறிவிக்கிறது என்னவென்றால்,

அத்தகைய தெய்வீகப்பணியின் பகைஞர்கள் அதோடு விடவில்லை. அந்தத் திருப்பணி முற்றிலும் நிறுத்தப்படவேண்டுமென விரும்பினர். செயல்படவும் துணிந்தனர். அகாஸ்வேரு இராஜா அரசாளுகிறபோது யூதாவிலும் எருசலோமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகத் தொடர்ந்து எழுதினார்கள். அதில் யாது எழுதப்பட்டிருந்தது என்று சரியாக தெரியவில்லை. எனினும் அகாஸ்வேரு இராஜா அதை முற்றிலும் புறக்கணித்துப் போட்டான். அதனால் அந்தப்பகைஞர்கள் மனமுடிவு அடையவில்லை. அடுத்துவரும் இராஜாவின் ஆட்சியின் காலத்தில் செயல்படக்காத்திருந்தனர். அடுத்து அர்தசஷ்டா, இராஜா அரசாளத் துவங்கியபோது அவனுக்கு முன்பு எழுதப்பட்டது போன்று மனு எழுதி அனுப்ப்பட்டது. அதை எழுதிய மற்றும் பலருமாக சமாரியாவிலே குடியேறப்பண்ணப்பட்ட ஜனங்கள் யாவரும் அந்த மனுவில் கையொப்பமிட்டார்கள். தேவனுடைய ஆலயம் கட்டப்படுவதனால் உண்மையில் இவர்கள் யாவருக்கும் எந்த விதமான துன்பம் ஏற்படப்போவதில்லை. அவர்களில் பலர் ஆலயம் கட்டப்படும் இடத்தின் அருகாமையில் வசிப்பவர்களும் அல்லர். ஆனால் கர்த்தருடைய பணி என்றபொழுது விரோதிகளின் செயல் அவ்வாறுதான் இருக்கும் என்று வேதம் நமக்குக் கூறுகிறது. கர்த்தருக்கு விரோதமாக பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி........ என்று வாசிக்கிறோம் (சங்.2:2). சமாரியாவின் பட்டணத்திலே குடியேறப்பண்ணின ஜனங்கள் நாங்கள் என்று அதில் ஒப்பமிட்டவர்கள் எழுதியுள்ளவர். அங்கே அவர்கள் பல ஆண்டுகாலம் வாழ்ந்து வருபவர்கள். அவர்கள் அர்த்சஷ்டா இராஜாவுக்கு அந்த மனுவை எழுதி அனுப்பினார்கள்.

வசனம் 4:12

உம்மிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்த யூதர் எருசலேமிலே கூடி, கலகமும் பொல்லாப்புமான அந்தப் பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதின் மதில்களை எழுப்பிக் கட்டுகிறார்கள் என்பது ராஜாவுக்கு அறியலாவதாக.

அந்தக்கடிதத்தின் ஆரம்பத்தில், அந்த யூதர்கள் யார் என்பதனை முதலில் கூறி, அக்கடிதத்தைத் துவக்கியுள்ளனர். அவர்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு வந்தவர்கள் என்று எழுதியிருந்தனர். அடுத்து ஒரு பெரிய பொய்யை எழுதியுள்ளனர். கலகமும் பொல்லாப்புமான அந்தப்பட்டிணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதின் மதில்களை எழும்பிக்கட்டுகிறார்கள் என்று எழுதினார்கள். இது சற்றும் உண்மையானதல்ல. மதில்கள் இடிக்கப்பட்டுப்போய் இன்னும் கட்டப்படவில்லை. அதற்காக எந்த அஸ்திபாரமும் போடப்படவில்லை. செய்யப்பட்டதெல்லாம் தேவாலயத்திற்குப் போடப்பட்ட அஸ்திபாரத்தின் பணியேயாகும். ஆனால் அவர்களின் குற்றஞ்சாட்டுதல் உறுதிப்படும்படியாக, கலகமும், பொல்லாப்புமான எருசலேம் பட்டணத்தின் அஸ்திபாரங்களை எழுப்பிக் கட்டிக்கொண்டிருந்ததாக, யூதர்மேல் பொய்ப் புரளிகிளப்பினர்.

வசனம் 4:13

இப்போதும் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டுத் தீர்ந்தால், அவாகள் பகுதியையும் தீர்வையையும் ஆயத்தையும் கொடுக்கமாட்டார்கள். அதினால் ராஜாக்களின் வருமானத்திற்கு நஷ்டம் வரும் என்று ராஜாவுக்கு அறியலாவதாக.

அந்தப் பொய்மனுவிலே தந்திரமாக வேறொரு செய்தியையும் எழுதியிருந்தார்கள். அது கட்டப்பட்டுத் தீர்ந்தால், அவர்கள் பகுதியையும் தீர்வையையும், ஆயத்தையும் கொடுக்கமாட்டார்கள், என்று எழுதினார்கள். இராஜாவின் வருமானத்திற்கு நஷ்டம் வரும் என்ற எழுதப்பட்டதால், இராஜாவினால் உடனே கவனிக்கப்பட வேண்டியிருக்கும். பணம் பத்தும் செய்யும் அன்றோ?

வசனம் 4:14

இப்போதும் நாங்கள் அரமனை உப்புத் தின்கிறபடியினால், ராஜாவுக்குக் குறைவுவரப் பார்த்திருக்கிறது எங்களுக்கு அடாதகாரியம். ஆகையால் நாங்கள் இதை அனுப்பி, ராஜாவுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

அவர்கள் இராஜாவின் உப்பைத் தின்கிறபடியால் இராஜாவிற்கு எந்த குறையும் வருவதையும் சகித்துக்கொள்ளோம், என்றும் எழுதினார்கள். ஆகையால், அந்தக் கடிதத்தை தங்களின் நடவடிக்கைக்காக எழுதுகிறோம் என்று அவர்கள் அதில் குறிப்பிட்டு எழுதினார்கள். ஆம்! எவ்வளவு காரசாரமாக மன்னருக்கு உணர்த்தப்பட்டுள்ளது! தங்களுக்கு மட்டுமல்ல இராஜாவின் நன்மையைக்கருதியே அவர்கள் செயல்படுவதுபோல் அக்கடிதம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஏழை, எளியவர்களான யூதர்கள், ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடத்துவக்கிய போது எவ்வளவுபெரிய பழிபாவங்களை அவர்கள்மேல் சுமத்த முயற்சிக்கிறார்கள்.

வசனம் 4:15

உம்முடைய பிதாக்களின் நடபடி புஸ்தகங்களில் சோதித்துப்பார்க்க உத்தரவாகவேண்டும். அப்பொழுது இந்தப் பட்டணமும் கலகமும், ராஜாக்களுக்கும் சீமைகளுக்கும் நஷ்டமும் உண்டாக்குகிற பட்டணம் என்றும், பூர்வகாலமுதல் கலாதி உள்ளதாயிருந்தபடியினால் இந்தப் பட்டணம் பாழ்கடிக்கப்பட்டது என்றும், அந்த நடபடி புஸ்தகங்களில் கண்டறியலாம்.

அடுத்து அவர்கள் அந்தக் கடிதத்தில், நடபடிபுத்தகங்களில் சோதித்துப்பார்க்க உத்திரவாக வேண்டும் என்கின்றனர். அப்போது அந்தப்பட்டணம், எருசலேமும்------ கலகமும், இராஜாக்களுக்கும், சீமைகளுக்கம் நஷ்டமும் உண்டாக்குகிற பட்டணம் என அறிய முடியும் என்று எழுதுகின்றனர். அதுமட்டுமன்றி, அப்பட்டணம் பூர்வ காலமுதல் கலகம் நிறைந்ததொன்றாக இருந்தபடியினால்தான் பாழ்க்கடிக்கப்பட்டது என்று அந்த நடபடிகளின் புத்தகத்தில் இராஜா அறியமுடியும் என்று எழுதியிருந்தனர்.

வசனம் 4:16

ஆகையால் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, இதின் அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டுத் தீர்ந்தால், நதிக்கு இப்புறத்திலே உமக்கு ஒன்றும் இராதேபோம் என்பதை ராஜாவுக்கு அறியப்படுத்துகிறோம் என்று எழுதி அனுப்பினார்கள்.

அடுத்து அவர்கள் மேலும் எழுதியது 1. அந்தப்பட்டணம் கட்டப்பட்டால் 2. அதன் அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டு தீர்ந்தால், அப்பகுதியில் இராஜாவுக்கு ஒன்றும் உரித்தாய் இராதே போகும் என்றும் எழுதி உணர்த்தியிருந்தார்கள். இவைகள் அனைத்திலும் தேவனுடைய ஆலயம்பற்றி அவர்கள் ஒரு வார்த்தைகூட குறிப்பிட்டு எழுதவில்லை. ஆனால் அவர்களின் உண்மையான கோபம், அந்த ஆலயம் கட்டப்பட ஆரம்பிக்கப்பட்டதுதான். ஆனால் அவர்களின் கடிதத்தில் அந்த ஆலயம்பற்றிய செய்தி ஒன்றையும் எழுதவேயில்லை. அலங்கங்கள் எழுப்பப்படுகின்றன. நகரம் கட்டத்துவங்கியுள்ளனர். அதனால் தீர்வையும், ஆயமும் நிறுத்தப்பட்டு இராஜாவின் வருமானம் நிறுத்தப்பட்டுவிடும். அந்த எருசலேம் நகரம் கலகம் நிறைந்தது. நாட்டின் பகுதியை இராஜா இழக்க வேண்டிவரும்...என்றெல்லாம் எழுதியவர்கள் ஆலயத்தினைப்பற்றி மட்டும், உண்மையைப்பற்றிமட்டும் யாதொன்றும் எழுதவில்லை.

வசனம் 4:17-20

அப்பொழுது ராஜா ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், சமாரியாவில் குடியிருக்கிற மற்றுமுள்ள அவர்களுடைய வகையராவுக்கும், நதிக்கு அப்புறத்தில் இருக்கிற மற்றவர்களுக்கும் எழுதியனுப்பின பிரதியுத்தரமாவது: உங்களுக்குச் சமாதானம், நீங்கள் அனுப்பின மனு நமது சமுகத்தில் தீர்க்கமாய் வாசிக்கப்பட்டது. நம்முடைய உத்தரவினால் சோதித்துப் பார்க்கும்போது, அந்தப் பட்டணம் பூர்வகாலமுதல் ராஜாக்களுக்கு விரோதமாய் எழும்பினது என்றும், அதிலே கலகமும் ராஜதுரோகமும் காணப்பட்டது என்றும், எருசலேமில் வல்லமையுள்ள ராஜாக்கள் இருந்தார்கள் என்றும், அவர்கள் நதிக்கு அப்புறத்தில் இருக்கிற சகல தேசங்களையும் ஆண்டுவந்தார்கள் என்றும், பகுதியும் தீர்வையையும் ஆயமும் அவர்களுக்குச் செலுத்தப்பட்டது என்றும் தெரியவருகிறது.

அந்தக்கடிதம் இராஜாவின் சமூகத்தில் தீர்க்கமாய் வாசிக்கப்பட்டது. அர்த்தசஷ்டா இராஜாவின் உடனடி கவனத்தைக் கவர்ந்தது. அவன், நடபடிகளின் புத்தகத்தைக் கொண்டு வந்து வாசிக்கக் கட்டளையிட்டான். அவ்வாறே வாசிக்கப்பட்டு யூதர்கள் இராக்களுக்கு விரோதமாக கலகம் செய்த வரலாறுகள் விளக்கப்பட்டன. எருசலேமிலே வலிமை மிக்க இராஜாக்கள் பரிபாலனம் செய்து, அவர்கள் வேறு நாடுகளை வென்று ஆட்சி செய்த வரலாறுகளும், மற்ற நாட்டினரிடமிருந்து அவர்கள் ஆயமும் தீர்வையும் வசூலித்த வரலாறுகளும் வாசிக்கப்பட்டன. ஆனால், நகரம் கட்டப்படுகிறதா அல்லது, அலங்கங்கள் மறுபடியுமாய் எழுப்பப்படுகின்றனவா என்பது போன்ற செய்திகளின் பின்னணிகளைப்பற்றி ஆராய இராஜா சிரமம் கொள்ளவில்லை. முதலில் வாசித்த சில உண்மைகளின் அடிப்படையில் இத்தகைய செய்திகளும் உண்மையாக இருக்கக்கூடும் என்று அவன் எண்ணி செயல்படத் துணிந்தான்.

வசனம் 4:21-22

இப்பொழுது நம்மிடத்திலிருந்து மறுஉத்தரவு பிறக்கும்வரையும் அந்த மனிதர் அந்தப் பட்ணத்தைக் கட்டாமல் நிறுத்திவிடும்படி கட்டளையிடுங்கள். இதிலே நீங்கள் தவறாதபடி எச்சரிக்கையாயிருங்கள். ராஜாக்களுக்கு நஷ்டமும் சேதமும் வரவேண்டியது என்ன என்று எழுதி அனுப்பினான்.

அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இராஜாவின் முத்திரையிடப்பட்டது. நம்மிடத்திலிருந்து மறு உத்தரவு பிறக்கும் வரையும் அந்த மனிதர் அந்தப் பட்டணத்தைக் கட்டாமல் நிறுத்தி விடுங்கள், என்று உத்தரவு இட்டு அனுப்பினான். மேலும் அதில், இதில் நீங்கள் தவறாதபடி எச்சரிக்கையாய் இருங்கள். இராஜாக்களுக்கு நஷ்டமும் சேதமும் வரவேண்டியது என்ன? என்றும் எழுதியிருந்தான். இந்த அரசாணையிலும், தேவனுடைய ஆலயத்தைப்பற்றி யாதொன்றும் எழுதப்படவில்லை. யூதர்கள் நகரத்தைக் கட்டுவதைத் தடை செய்துதான் ஆணைப் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் யூதர்கள் உண்மையில் எருசலேம் நகரத்தைக் கட்டிக்கொண்டிருக்கவில்லை. அது அந்த சமாரியா நாட்டாருக்கு ஒரு காரணமாகவிருக்கவில்லை. அந்த அரசாணை பெறப்பட்டவுடன் அந்தச் சமாரியத் தலைவர்கள் எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றனர். யூதர்களைக் கடுமையாய் எச்சரித்து ஆலயப் பணியின் வேலைகளை நிறுத்தச் செய்தனர்.

வசனம் 4:23

ராஜாவாகிய அர்தசஷ்டாவுடைய உத்தரவின் நகல் ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், அவர்கள் வகையராவுக்கும் முன்பாக வாசிக்கப்பட்டபோது, அவர்கள் தீவிரத்துடனே எருசலேமிலிருக்கிற யூதரிடத்திற்குப் போய், பலவந்தத்தோடும் கட்டாயத்தோடும் அவர்களை வேலைசெய்யாதபடிக்கு நிறுத்திப்போட்டார்கள்.

அந்த விரோதிகள் ஆலயப் பணியைப் பற்றித் தங்கள் கடிதத்தில் யாதொன்றும் எழுதவில்லை. அர்த்தசஷ்டா இராஜாவும் தனது பணி நிறுத்த ஆணையில் தேவாலயத்தைப்பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை. ஆனால் அந்தப் பகைஞரோ தங்களின் சேனைகளின் வல்லமைகளைப் பயன்படுத்தி யூதர்கள் செய்து வந்த ஆலயப் பணியை நிறுத்தும்படிச் செய்தனர்.

வசனம் 4:24

அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைபட்டு, பெர்சியாவின் ராஜாவாகிய தரியு ராஜ்யபாரம்பண்ணின இரண்டாம் வருஷமட்டும் நிறுத்தப்பட்டிருந்தது.

யூதர்களுக்கு இது மிகவும் மனமடிவை உண்டாக்கியிருக்கக்கூடும். அவர்கள், கோரேஸ் இராஜாவினால் அனுப்பப்பட்டு தேவாலயத்திருப்பணியைத் துவக்கினர். சந்தோஷத்தோடே கோரேஸ் இராஜாவின் உத்தரவுக்குப்பணிய முன்வந்தனர். தங்களுக்குண்டான யாவற்றையும் விட்டு பாபிலோனிலிருந்து புறப்பட்டு எருசலேமுக்கு வந்தனர். தங்களிடத்தில் இருந்த கொஞ்சம் பொருள்களை எடுத்துக்கொண்டு நெடுந்தூரப் பயணத்தை மேற்கொண்டனர். ஒரு பலிபீடத்தைக் கட்டி பலி செலுத்தினர். ஆசாரியப் பணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுத்தனர். எருசலேமில் தங்களுக்கென குடியிருப்பைக் கட்டிக் கொண்டனர். கடைசியாக தேவாலயத்திருப்பணியைத் துவங்கச் செய்தனர். ஆனால் அவர்கள் விரோதிகள், பொறாமைகொண்டு, பொய்யுரைத்து, அரசாணையை உண்டாக்கி, அத்திருப்பணியை நிறுத்தச் செய்தனர்.

ஒரு வேளை அவர்கள் அப்பணியை தொடர்ந்து செய்திருந்தால் இக்கேள்விக்கு இந்தச் சூழ்நிலையில் விடையளிப்பது மிகவும் கூடாததொன்றாகும். அதிகாரங்களுக்குக் கீழ்படிய வேண்டுமென்று வேதம் நமக்குக் கட்டளையிடுகிறது (ரோமர் 13:1). ஒருவேளை வேதப் பிரமாணங்களுக்குப் புறம்பானதொரு காரியத்தை நாம் செய்யத் தூண்டப்பட்டால், நாம் சம்மதிக்க வேண்டுமோ? கர்த்தர்தாமே அவர்களுக்குப் பதில் அளிப்பார்.
By Tamil christian Assembly

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.