எஸ்தர் 4 விளக்கவுரை
தேவனிடம் ஜெபித்த யூதர்கள்
வசனம் 4:1-3நடந்த யாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல் போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள மகா சத்தத்துடன் அலறிக்கொண்டு,
ராஜாவின் அரமனை வாசல் முகப்புமட்டும் வந்தான். இரட்டுடுத்தினவனாய் ராஜாவின் அரமனை வாசலுக்குள் பிரவேசிக்க ஒருவனுக்கும் உத்தரவில்லை.
ராஜாவின் உத்தரவும் அவனுடைய கட்டளையும் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே மகா துக்கமும், உபவாசமும், அழுகையும் புலம்பலும் உண்டாய், அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள்.
இராஜாவின் கட்டளையைக் கண்டு மக்களனைவரும் கலக்கம் அடைந்தனர். அப்படியானால் கொல்லப்பட இருந்த யூதர்களின் நிலை என்ன? அந்தக் கொடுமையான இராஜகட்டளையைக் கேள்விப்பட்ட மொர்தெகாய், தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இரட்டுடுத்தி, தனது தலையின்மேல் சாம்பலைத் தெளித்துக்கொண்டான். நகரத்தின் நடுவிலே புறப்பட்டுப்போய், துயரமுள்ள மகா சத்தத்துடன் அலறி அழுதான். அப்படியே இராஜாவின் அரண்மனை வாசல் முகப்பு மட்டும் வந்தான் உள்ளே செல்லவில்லை. இரட்டுடுத்தினவனாய் இராஜாவின் அரண்னை வாசலுக்குள் செல்ல சட்டம் யாரையும் அனுமதிக்காது. அது சட்ட விரோதம்.
மொர்தெகாய் மட்டுமா அப்படிச் செய்தான்? இராஜாவின் கட்டளை வாசிக்கப்பட்ட அனைத்து நகரங்களிலும் இருந்த யூதர்கள் அனைவரும்கூட அவ்வாறே செய்தனர். அவர்களும் அலறியழுது, உபவாசித்து, இரட்டுடுத்தி சாம்பலில் உட்கார்ந்திருந்தனர். இதன் பின்னணியில் நாம் தேவனை காண்கிறோம். அந்த யூதர்கள் தங்களின் உடல் நலம் கருதியா இரட்டுடுத்தி சாம்பலில் அமர்ந்திருந்தனர்? இல்லை, அவர்கள், தங்களைக் காப்பாற்றும்படி தேவனிடத்தில் மன்றாடி ஜெபித்தனர். தானியேல் புத்தகத்திலே, நான் உபவாசம்பண்ணி இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினதலும் விண்ணப்பங்களினாலும் தேட என் முகத்தை அவருக்கு நேராக்கினேன் என்று வாசிக்கிறோம் (தானி.9:3). யூதர்கள், அந்த இராஜாவின் கொடுரமான தீர்ப்பிலிருந்து மீள வழியொன்றும் காணாமல், திகைத்தனர். மேதியரின் சட்டங்கள், தீர்ப்புகள், ஒருபோதும் மாற்றப்பட்டதில்லை. அவர்களுடைய ஒரே நம்பிக்கை தேவனே.
வசனம் 4:4
அப்பொழுது எஸ்தரின் தாதிமார்களும், அவளுடைய பிரதானிகளும்போய், அதை அவளுக்கு அறிவித்தார்கள். அதினாலே ராஜாத்தி மிகவும் துக்கப்பட்டு, மொர்தெகாய் உடுத்திருந்த இரட்டை எடுத்துப்போட்டு, அவனை உடுத்துவிக்கிறதற்கு வஸ்திரங்களை அனுப்பினாள். அவனோ அவைகளை ஏற்றுக்கொள்ளாதிருந்தான்.
இப்போது எஸ்தரின் நிலையென்ன? அவள் ஒரு யூதப் பெண். ஆனால் அப்படி அவள் ஒருவரிடமும் கூறியிருக்கவில்லை. மொர்தெகாய், சில நண்பர்களிடம்தான் தான் ஒரு யூதன் என்பதைக் கூறி வெளிப்படுத்தியிருந்தான். ஆனால் எஸ்தர் ஒருபோதும் அதைக் கூறவில்லை. மேலும் இராஜாவின் புதிய கட்டளையை எஸ்தர் அறிந்துகொள்ளவில்லை. மொர்தெகாயும், இன்னும் சில யூதர்களும், இரட்டுடுத்தி புலம்பிக்கொண்டிருந்த செய்தி மட்டும் அவளுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனால் மிகவும் கவலையடைந்த எஸ்தர், மொர்தெகாய் அணிந்துகொள்வதற்காக வஸ்திரங்களை அனுப்பி, அவன் அணிந்திருந்த இரட்டுடைகளைக் களைந்துபோடச் சொல்லியனுப்பினாள். ஆனால் மொர்தெகாயோவென்றால், அவள் அனுப்பிய ஆடைகளைப் பெற்றக்கொள்ளவுமில்லை, தனது இரட்டுடைகளைக் களைந்துபோடவும் இல்லை.
வசனம் 4:5-8
அப்பொழுது எஸ்தர் தன் பணிவிடைக்கென்று ராஜாவினால் நியமித்திருந்த அவனுடைய பிரதானிகளில் ஒருவனாகிய ஆத்தாகை அழைப்பித்து: காரியம் என்ன? அதின் முகாந்தாரம் என்ன? என்று அறியும்படி, மொர்தெகாயினிடத்தில் விசாரிக்க அவனுக்குக் கட்டளையிட்டாள்.
அப்படியே ஆத்தாகு ராஜாவின அரமனை வாசலுக்கு முன்னான பட்டண வீதியிலிருக்கிற மொர்தெகாயினிடத்தில் புறப்பட்டுப்போனான்.
அப்பொழுது மொர்தெகாய் தனக்குச் சம்பவித்த எல்லாவற்றைப்பற்றியும், யூதரை அழிக்கும்படி ஆமான் ராஜாவின் கஜானாவுக்கு எண்ணிக்கொடுப்பேன் என்று சொன்ன பணத்தொகையைப் பற்றியும் அவனுக்கு அறிவித்ததும் அன்றி,
யூதர்களை அழிக்கும்படி சூசானில் பிறந்த கட்டளையின் நகலையும் அவனிடத்தில் கொடுத்து, அதை எஸ்தருக்குக் காண்பித்துத் தெரியப்படுத்தவும் அவள் அகத்தியமாய் ராஜாவினிடத்திற் போய், அவனிடத்தில் தன் ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணவும் மன்றாடவும் வேண்டுமென்று அவளுக்குச் சொல்லச்சொன்னான்.
ஒன்றும் புரியாத எஸ்தர், தனது பணிவிடைக்கென்று இராஜாவினால் நியமிக்கப்பட்டிருந்த பிரதானிகளில் ஒருவனாகிய ஆத்தாகு என்பவனை அழைத்து, அவனை மொர்தெகாயினிடத்தில் அனுப்பி, மொர்தெகாய் இரட்டுடுத்தி, சாம்பலைத் தூவிக்கொண்டு புலம்பலோடு இருப்பதன் காரணம் யாது என விசாரித்து வரும்படி அவனை அனுப்பினாள். மொர்தெகாயும், ஆமானின் தீய முயற்சிகளாக இராஜாவின் கஜானாவிற்கு எண்ணிக்கொடுப்பேன் என்று சொல்லியிருந்த பணத்தொகையைப்ப்றியும், யூதர்களை அழிப்பதற்காக இடப்பட்டிருந்த கட்டளைகள்பற்றியும், அந்தக் கட்டளையின் நகலைக்கூட அவனிடம் கொடுத்து எஸ்தரிடம் கொடுக்கும்படி கூறினான். அதுமட்டுமின்றி, எஸ்தர் அகத்தியமாய் இராஜாவினிடத்தில் போய் தன் ஜனங்களுக்காக விண்ணரப்பம்பண்ணவும் மன்றாடவும் வேண்டுமென்று அவன் சொல்லி அனுப்பினான். பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது. எஸ்தர் கட்டாயம் சென்று இராஜாவினிடத்தில் பேசவேண்டும் என்று பணிக்கப்படுகிறாள்.
வசனம் 4:9-11
ஆத்தாகு வந்து, மொர்தெகாயின் வார்த்தைகளை எஸ்தருக்கு அறிவித்தான்.
அப்பொழுது எஸ்தர் ஆத்தாகினிடத்தில் மொர்தெகாய்க்குச் சொல்லியனுப்பினது:
யாராவது அழைப்பிக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால், புருஷரானாலும் ஸ்திரீயானாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படிக்கு அவர்களுக்கு ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றப்படி சாகவேண்டும் என்கிற ஒரு தவறாத சட்டமுண்டு, இது ராஜாவினுடைய சகல ஊழியக்காரருக்கும், ராஜாவினுடைய நாடுகளிலுள்ள சகல ஜனங்களுக்கும் தெரியும். நான் இந்த முப்பது நாளளவும் ராஜாவினிடத்தில் வரவழைப்பிக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள்.
அந்தச் செய்தியுடன் ஆத்தாகு எஸ்தரிடம் மீண்டான். மொர்தெகாயின் செய்தியை அறிந்த எஸ்தர் கூறப்போவது வேகமான ஒரே பதில். அப்படிச் செய்யமுடியாது என்பதே. இராஜா அழைப்பித்தாலொழிய ஒருவரும் அவன் முன்னிலையில் போகக்கூடாது என்பதை மொர்தெகாய்க்கு அறிவிக்கிறாள். இராஜஸ்திரீ கூட அந்த நியதியை மீறுதல்கூடாது. அப்படி யாராவது மீறிச் சென்றால் அவர்கள் நிச்சமாய்க் கொல்லப்படுவார்கள். அப்படி ஒருக்கால் சென்றவர்கள் பிழைக்கும்படி, இராஜா தனது பொற்செங்கோலை நீட்டினாலொழிய அவர்கள் சாகவே வேண்டும். இதற்கு முன்புதான் இராஜஸ்திரீயாகவிருந்த வஸ்தி, சகல அந்தஸ்துகளிலிருந்தும் நீக்கப்பட்டவிட்டாள். மற்றொரு இராஜஸ்திரீக்குக்கூட அவன் அவ்வாறே செய்யக்கூடும் அல்லது ஒருவேளை இவள் கொலை செய்யப்படவும் உத்தரவிடமுடியும். ஆகையால் எஸ்தர், இத்தகைய இழிநிலைகள் ஏதும் ஏற்படுவதை விரும்பவில்லை. ஆகையால் மொர்தெகாய் கூறியபடி, யூத ஜனங்களுக்காக மன்றாட அவள், இராஜாவினிடத்தில் செல்லுதல் என்பது முடியாததொன்றாகும் என்ற மறுப்புச் செய்தியோடு ஆத்தாகுவை மொர்தெகாயினிடத்தில் அனுப்பிவைத்தாள்.
வசனம் 4:12-14
எஸ்தரின் வார்த்தைகளை மொர்தெகாய்க்குத் தெரிவித்தார்கள்.
மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே.
நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள். நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.
ஆத்தாகு எஸ்தரின் செய்திகளை மொர்தெகாயினிடம் சென்று அறிவித்தான். மொர்தெகாய் நிதானிக்கவில்லை. இராணியானாலும் சரி அந்த எஸ்தருக்கு அவன் கடுமையான கட்டளை ஒன்றினை கூறியனுப்பினான். நீ இராஜாவின் அரண்மனையில் இருக்கிறதினால், மற்ற யூதர்கள் யாரும் தப்பக்கூடாதிருக்க, நீ மட்டும் தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே. நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால் யூதருக்கு சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும். அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள். நீ இப்படிப்பட்ட காலத்திற்கு உதவியாயிரக்கும்படி உனக்கு இந்த இராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும் என்று மொர்தெகாய், அவளுக்குச் சொல்லியனுப்பினான்.
வசனம் 4:15-17
அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது:
நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள். நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம். இவ்விதமாகச் சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன். நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.
அப்பொழுது மொர்தெகாய் புறப்பட்டுப்போய், எஸ்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான்.
அந்த மொர்தெகாயின் செய்தி அவள் உள்ளத்தில் கிரியைசெய்ததெனலாம். எஸ்தர் ஒரு நல்ல மாறுத்தரம் சொல்லியனுப்புகிறாள். நீர் போய், சூசானிலிருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலும் இருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள். நானும் என் தாதியாரும் உபவாசம்பண்ணுவோம். இவ்விதமாக சட்டத்தைமீறி இராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன். நான் செத்தாலும் சாகிறேன் என்று மொர்தெகாய்க்கு அவள் செய்தி சொல்லியனுப்பினாள். என்னே அவளின் வியத்தகு மாறுத்தரம். தனது இன மக்களைக் காப்பாற்றவதற்காக, தனது உயிரைக்கூடத் தியாகம் செய்யத் துணிந்து நிற்கிறாள் அந்த இராஜஸ்திரீ. உண்மையில் என்னதான் நடக்குமோவென்பது எஸ்தருக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆனால் அதை அவள் செய்யத் துணிந்துவிட்டாள். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலகில் வந்தபோதோ அவர் சிலுவையில் அறையப்பட்டு பாடுபட்டு உயிர்விடவேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும். ஆனால் நமக்காகப் பாடுபட, ஜீவன் விடவே வந்தாரன்றோ. அவரே அன்பின் இரட்சகர்.
எஸ்தர், ஒரு யூத வம்சத்தைச் சேர்ந்தவள் என்பது ஒருவேளை யாருக்கும் தெரியாதுதான். ஆனால் மொர்தெகாய் சரியான உண்மைகளை அவளுக்குத் தெரியப்படுதினான்றோ? ஒருவேளை அந்த உயர் பதிவிக்கு இராஜஸ்திரீயாக அவள் உயர்த்தப்பட்டது ஒரு குறிப்பிட்ட காரணத்திற்குத்தானோ? அந்த யூத இனத்தாரைக் காப்பாற்றுவதற்காக்தானோ? இந்த உன்னத நிலை தேவனாகிய கர்த்தராலேயன்றி வேறு எவராலும் ஏற்பட்டிருக்கும் என அந்த யூதரில் யாரோனும் ஒருவன் நினைத்திருப்பானோ? எஸ்தர் உடனே செயல்ப்படுகிறாள். அரசியாக இருந்து ஒரு கட்டளையை மொர்தெகாய்க்கு அனுப்புகிறாள். மொர்தெகாய் பறப்பட்டுப்போய் எஸ்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான். தேவனுடைய திட்டங்கள் ஒழுங்காக நடைபெறுவதைக் காணமுடிகிறதன்றோ?