எஸ்றா 3 விளக்கவுரை

எஸ்றா 3

(4) இஸ்ரவேலர் தேவாலயத்தைக் கட்ட ஆரம்பிக்கின்றனர
இரண்டாவது அதிகாரம் கூறும் நிகழ்ச்சிகள் முடிந்தும் மூன்றாம் அதிகாரத்தில் உள்ள நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பதற்கும்இடையே இருந்த காலம் சற்று அதிகமாகும். இப்போது ஆண்டின் ஏழாவது மாதமாய் இருந்தது. இஸ்ரவேலர், தங்களது முதற்பணி தேவனுடைய ஆலயத்தைக் கட்ட என்பது தேவனைத் தொழுகிற இடமாகும். மோசேயின் கட்டளைகளின்படி ஸ்தோத்திர பலிகளும், மற்ற பலிகளும் செய்யப்படவேண்டிய இடமும் அதுவே (உபா, 12:5-6) நமது வாழ்க்கையின் எல்லாக் கட்டமைப்புகளும் தேவனுடைய பிரகாரங்களினண்டையில் ஆரம்பிக்கப்படுதல் வேண்டும். ஆபிரகாமின் வாழ்க்கையில் இத்தகையதோர் முன்மாதிரியை நாம் காணமுடிகிறது. அவன் தான் செ
ன்ற இடங்களிலெல்லாம், எகிப்து தவிர, ஒரு பலிபீடத்தைக் கர்த்தருக்கென்று கட்டினான் (ஆதி.12:8, 13:4, 18:26).

வசனம் 3:1

இஸ்ரவேல் புத்திரர் பட்டணங்களிலே குடியேறி, ஏழாம் மாதமானபோது, ஜனங்கள் ஏகோபித்து எருசலேமிலே கூடினார்கள்.

வசனம் ஒன்றில் அவர்கள் எல்லாரும் ஏகோபித்துக் கூடினார்கள் என்று வாசிக்கிறோம். அவர்கள் எருசலேமில் ஒன்று கூடினார்கள். தங்கள் சொந்த வீடுகளையும், வேலைகளையும், தோட்டங்களையும் விட்டு தேவனுக்கென்று பலிபீடத்தைக்கட்ட எருசலேமிலே கூடினார்கள். அவர்கள் செய்ய வேண்டிய பணிகளில் எது மிக முக்கியமானதென்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் தங்கள் வாழ்க்கைகளில் தேவனுக்கென்று ஒரு பலிவீடத்தைக் கட்டுவதை மிக முக்கியமாகக் கருதினார்கள். அதனை அவர்கள் ஒன்று சேர்ந்தே செய்தார்கள். இது நமக்கு ஒரு முன்னோடி படிப்பினையாகும். நாம் நமது வாழ்க்கையில் முதலில் செய்ய வேண்டியவைகளை முதலில் செய்கிறோமா? நமது எண்ண அலைகளில் தேவனைப்பற்றியதும், தொழுகைக்குரியதுமான காரியங்களுக்கு முதலிடம் அளிக்கிறோமா? இத்தகைய தெய்வ வழிபாடுகளிலும், தொழுகைகளிலும் நாம் ஒன்று சேர்ந்து செயல்படுகிறோமா? சங்கீதம் 133ல் நாம் ஒன்று சேரும் பொழுது கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தைக் கட்டளையிடுகிறார் என்று வாசிக்pகறோம். சீஷர்கள் ஒன்று சேர்ந்து ஓரிடத்தில் இருந்தபொழுது இத்தகைய ஆசீர்வாதத்தைப் பெற்றனர். அது உண்மையில் ஒரு சிறந்து ஆசீர்வாதமே. அத்தகைய நிலையில் பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதத்துடன் கிறிஸ்து பிரசங்கிக்கப்பட்டபோது ஏறக்குறைய 3000 பேர் இரட்சிக்கப்பட்டு சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் (அப் 2:41).

வசனம் 3:2


அப்பொழுது யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், அவன் சகோதரராகிய ஆசாரியரும், செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், அவன் சகோதரரும் எழும்பி, தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி சர்வாங்க தகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள்.

இங்கே இஸ்ரவேலர் தங்கள் தலைவர்களின் மூலமாக வேலைகளை ஆரம்பித்ததைக் காண்கிறோம். யெசுவாவும், அவன் சகோதரனாகிய ஆசாரியரும், செருபாபேலுடனும் அவன் சகோதரருடனும் சேர்ந்து செயல்ப்பட்டனர். இந்தத்தலைவர்கள் முன்னின்று பணியாற்றினர். அவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி பணி செய்தனர். தங்கள் சொந்தக்கருத்துக்களை அதில் இணைக்காமல் மோசேயின் கட்டளைகளுக்கு மட்டும் கீழ்ப்படிந்துச் செய்தனர். மோசே தேவனுடைய மனிதன் எனப்பட்டது மிக உன்னதமானதொரு பட்டமாகும் கர்த்தர் மோசேயை அழைத்துத் தமக்கு ஒரு வாசஸ்தலத்தைக் கட்டும்படி சொன்னபோது, மலையிலே உனக்கு காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு என்று உரைத்தார் (யாத்.25:40, எபி.8:5). மோசேயும் அவ்வாறே செய்தான்.

வசனம் 3:3

அவர்கள் அத்தேசத்தின் ஜனங்களுக்குப் பயந்ததினால், பலிபீடத்தை அதின் ஆதாரங்களின்மேல் ஸ்தாபித்து, அதின்மேல் அவர்கள் கர்த்தருக்கு அந்திசந்தி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார்கள்.

இஸ்ரவேலர்களுக்கு இதுபோலச் செய்வது மிக எளிதாக இருக்கவில்லை. தங்களைச் சுற்றிலும் இருந்த அந்நாட்டு மக்களுக்கு அவர்கள் மிகவும் பயந்தார்கள் என்றபோதிலும் அவர்கள் தேவனுக்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள். நாம் நமது வீடுகளில், நம்மைச் சுற்றிலும் உள்ள மற்றவர்களுக்குப் பயந்து நமது தொழுகைகளைத் தவிர்த்துவிடுகிறோமா? இங்கு இஸ்ரவேலர் மற்ற யாவர் முன்னிலையிலும் அந்தப் பலிபீடங்களைக்கட்ட வேண்டியிருந்தது. கட்டி முடிந்தபின் அவைபளைப் பயன்படுத்த வேண்டியும் இருந்தது. தொழுகையின் இடத்தைக் கட்ட வேண்டியது மிக அவசியமாகும். ஆனால் அவற்றைப் பயன்படுத்தித் தொழ வேண்டியது அதனிலும் மிக முக்கியமானதாகும். இஸ்ரவேலர் தாங்கள் கட்டின பலிபீடங்களின்மேல் தங்கள் பலிகளை ஒவ்வொருநாள் காலையிலும், மாலையிலும் செலுத்தினார்கள். அதனை அங்கு சூழ இருந்த புறமதஸ்தரின் கண்களின் எதிரிலே செய்தார்கள்.

வசனம் 3:4

எழுதியிருக்கிறபடியே அவர்கள் கூடாரப்பண்டிகையை ஆசரித்து, நித்திய நியமித்தின்படியும் அன்றாடகக் கணக்கின்படியும் ஒவ்வொருநாளிலும் பலியிட்டார்கள்.

பின்னர் அவர்கள் கூடாரப் பண்டிகைகளைக் கொண்டாடினார்கள். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டுச் சொன்னபடி ஆசரித்த பண்டிகையாகுமிது (லேவி, 23:34). அதன்படி நிலத்தின் பலனைச் சேர்த்துவைத்து ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி முதல் இப்பண்டிகையைக் கொண்டாட வேண்டும். அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்ச ஓலைகளையும் கொண்டுவந்து கூடாரம் அமைத்து, ஏழு நாள்களுக்கு இப்பண்டிகையைக் கொண்டாட வேண்டும். தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலர்களை எகிப்தில் இருந்து மீட்டு வந்து 40 ஆண்டு காலம் வனாந்தரங்களில் கூடாரங்களில் வாழ்ந்ததை நினைத்து தேவனைத் துதிக்கவே இப்பண்டிகை (லேவி.23:39-44, நெகே 8:13-18) கொண்டாடப்பட்டது.

இங்கு கர்த்தருக்குப்ப பலிகள் ஒவ்வொரு நாளும், காலை மாலையும் தொடர்ந்தேர்ச்சியாக, செலுத்தப்பட்டது என்பதனை வேதத்தில் வாசிக்கிறோம். தேவன் நாம் ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார். நாம் தினமும் தேவனுடைய தொழுகை இடங்களில் சேர்ந்து தேவனைத் தொழ வேண்டும். நாள் முழுவதும் தேவன் நம்மோடு இருக்கிறார் என்று உணர வேண்டும்.

வசனம் 3:5

அதற்குப்பின்பு நித்தமும், மாதப்பிறப்புகளிலும், கர்த்தருடைய சகல பரிசுத்த பண்டிகைகளிலும் செலுத்தும் சர்வாங்க தகனபலியையும், கர்த்தருக்கு அவரவர் செலுத்தும் உற்சாகபலியையும் செலுத்தினார்கள்.

அவர்கள் செலுத்தின பலிகளில் உற்சாகபலிகளும் இருந்தன. அவர்களிடத்தில் அதிகமான பொருள்கள் மிகுந்திருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் உடமைகளை பாபிலோன் நாட்டிலேயே விட்டு வந்தனர். ஆனால் தேவனுடைய பலிபீடம் நிறைந்திருக்க வேண்டுமென்று அவர்கள் ஒவ்வொருவரும் உற்சாகமாய் கொடுத்தார்கள். தேவன் அவர்கள்மீது பிரியமாயிருந்திருப்பார். ஏனெனில், உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது (2கொரி.9:7).

வசனம் 3:6-7

ஏழாம் மாதம் முதல்தேதியில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தத்தொடங்கினார்கள். ஆனாலும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் இன்னும் போடப்படவில்லை. அப்பொழுது பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் தங்களுக்குப் பிறப்பித்த உத்தரவின்படியே அவர்கள் கல்தச்சருக்கும் தச்சருக்கும் பணத்தையும், லீபனோனிலிருந்து கேதுருமரங்களைச் சமுத்திரவழியாய் யோபாமட்டும் கொண்டுவரச் சீதோனியருக்கும் தீரியருக்கும் போஜனபானத்தையும் எண்ணெயையும் கொடுத்தார்கள்.

இஸ்ரவேலர் தங்கள் பலிபீடத்தைக் கட்டி பலிகளைச் செலுத்த ஆரம்பித்தனர். அடுத்த ஆலயத்தைக் கட்ட அஸ்திபாரம் போடவேண்டிய வேலை துவக்கப்பட வேண்டும். இதற்குப்பல ஆண்டுகளுக்கு முன்பு சாலொமோன் இராஜா முதலாவது தேவாலயத்தைக் கட்டி முடித்திருந்தார். அது கற்களினாலும் கேதுரு மரங்களினாலும் கட்டப்பட்ட மிக அழகான ஆலயமாகும். அதன் உள்புறம் பொன் தகடுகள் வேய்ந்திருந்தது. உலகெங்கிலும் அதைப் போன்றதொரு அழகிய கட்டடம் இருந்ததில்லை (1.இராஜா.6). சாலொமோன் அதைக்கட்டி முடிக்க சில ஆயிரம் பணியாள்கள் அதில் வேலை செய்தனர். தீருவின் இராஜாவாகிய ஈராமின் பணியாள்களாகிய திறமைமிகுந்த தச்சர்கள் இப்பணிக்குப் பயன்படுத்தப்பட்டனர். ஈராம் தனது வேலையாள்களுக்கு கூலியாக கோதுமையும், ஒலிவ எண்ணெயும் கொடுக்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டான் (1.இராஸா.5:6-11). ஈராமின் சொந்த வேரலக்காரரும் கல் தச்சர்களாக பணியாற்றினர் (1.இராஜா.5:17-18). சாலொமோனின் இந்த ஆலயப்பணி செய்து முடிக்கப்பட 7 ஆண்டுகள் ஆயின (1.இராஜா.6:38). ஆனால் இந்த இஸ்ரவேலர், எஸ்றாவின் காலத்தவர்கள். ஆலயத்தைக் கட்டுவதற்காக எந்தவித உதவியும் பெற முடியவில்லை. அவர்களுக்கு ஆள் பலமுமில்லை. பண பலமுமில்லை. ஆனால் இவர்கள் கூட ஆலயத் திருப்பணிக்குத் தேவையான கேதுரு மரங்களை லீபனோனிலிருந்து கொண்டு வர தீரு சீதோன் பட்டணங்களிலிருந்து ஆள்களை வேலைக்கு பயன்படுத்தினர். அவர்களுக்குக் கூலியாக உணவும், திராட்ரசமும, ஒலிவ எண்ணெயும் கொடுக்கப்பட்டது. ஆனால் கொல்லர்களுக்கும், தச்சர்களுக்கும் பணமாகக் கூலி கொடுக்கப்பட்டது.

வசனம் 3:8

அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதத்திலே, செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் மற்றுமுள்ள அவர்கள் சகோதரராகிய ஆசாரியரும் லேவியரும், சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பஞ்செய்து, இருபதுவயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்.

இஸ்ரவேலர்களுக்கு இப்பணியில் ஓராண்டு காலம் கடந்தது. இரண்டாம் ஆண்டுத் துவக்கத்திலே செருபாபேலும், யெசுவாசும் இவ் வேலையை முன்னின்று நடத்தினர். சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த ஆசாரியரும், லேவியரும் இப்பணியில் கலங்து கொண்டனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து பணியாற்றினர். எல்லா வேலைகளும் சரிவர செய்யப்பட வேண்டுமென்று விரும்பினர். ஆகையால் இருபது வயது முதல் அதற்கு மேற்பட்ட லேவியரைக் கர்த்தருடைய வேலையை நடத்தும்படி வைத்தார்கள். சாதாரணமாக லேவியர்கள் இருபத்தைந்து வயதிற்து மேற்பட்டுத்தான் ஆலயப்பணியில் ஈடுபடவேண்டும் (எண்.8:24-26). தாவீது இராஜா இதே போன்ற வேலைக்கு அவர்களின் வயதை இருபதாகக் குறித்துக் கொண்டான் என்று வேதத்தில் வாசிக்கிறோம் (1.நாளா.23:24). அப்பொழுது வேலை மிகுதியாக இருந்ததினால் அவ்வாறு செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி தாவீதின் காலத்தில் செய்யப்படவேண்டிய வேலை பெரியதாகவுமிருந்தது. இது சட்டத்திற்குட்டபட்ட மாற்றமேயாகும். தேவனுடைய வேலைகள் அனைத்தும் ஒழுங்கு முறைகளுடன் செய்யப்படல் வேண்டும். ஏனென்றால் தேவன் கலகத்திற்குத் தேவனாயிருக்கவில்லை (1.கொரி.14:33).

வசனம் 3:9

அப்படியே தேவனுடைய ஆலயத்தின் வேலையைச் செய்கிறவர்களை நடத்தும்படி யெசுவாவும் அவன் குமாரரும் சகோதரரும், கத்மியேலின் அவன் குமாரரும், யூதாவின் குமாரரும், எனாதாத்தின் குமாரரும், அவர்கள் சகோதராகிய லேவியரும் ஒருமனப்பட்டு நின்றார்கள்.

ஒன்பதாம் வசனம், ஓர் அழகிய விளக்கத்தைத் தருகிறது. தங்கள் பிள்ளைகளோடும், சகோதரர்களோடும், மற்றுமுள்ள லேவியரோடும் ஒருமனப்பட்டு நின்ற மூன்றுபேர் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்கள் ஒருமனப்பட்டு நின்றனர். இது மிகவும் சரியான முறையாகும். தேவனுடைய ஆலயத்தின் வேலையைச் செய்கிறவர்களை மேற்பார்வை செய்ய வேண்டியது இவர்களது பணி. அவர்கள் அதைத்தான் செய்தார்கள். தங்கள் தங்கள் விருப்பப்படியல்லாமல் ஒருமனப்பட்டு பணியாற்றினார்கள். அத்ததைய ஒற்றுமைக்கு மனத்தாழ்மையும், சாந்தமும் அவசியம். அப்போதுதான் சமாதானக் கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக் கொள்ள முடியும் (எபேசி.4:1-3). அது, அவ்வாறு தான் இருக்க வேண்டும். ஏனென்றால் அது தேவனுடைய திருப்பணி. நம்முடையதல்ல.

வசனம் 3:10

சிற்பாச்சாரிகள் கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடுகிறபோது, இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதுடைய கட்டளையின்படியே, கர்த்தரைத் துதிக்கும்படிக்கு, வஸ்திரங்கள் தரிக்கப்பட்டு, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியரையும், தாளங்கள் கொட்டுகிற ஆசாபின் குமாரராகிய லேவியரையும் நிறுத்தினார்கள்.

பின்பு சிற்பாசாரிகள் கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டார்கள். இது ஒரு சிறந்த நேரம். முதலாம் ஆலயம் இடிபாடுகளின் குவியலாக இருந்தது. அவைகளை அவர்கள் அகற்ற வேண்டியிருந்தது. புதிய திட்டங்களை வகுத்து சிறந்த தொழிலாளர்களையும் பொருள்களையும் சேகரித்துப் பணியை ஆரம்பிக்க வேண்டியிருந்தது. இதுபோலவே நமது வாழ்க்கையும் இருக்க வேண்டும். நமது ஆன்மீக எழுச்சியிலே இடையூறாகயிருக்கும் சகல கழிவுகளையும் அகற்றி, நன்கு திட்டமிட்டு, பின்பு நமது முயற்சிகளைத் துவங்கவேண்டும். அவர்களது சிறையிருப்பின் காலத்தில் தங்களது சொந்த நாட்டையும், மக்களையும், தேவாலயத்தையும் எண்ணிப்பார்த்திருப்பர். ஆனால் இப்பொழுதோ தங்கள் சொந்த நாட்டிலே புதிய ஆலயத்திற்கான அஸ்திபாரங்கள் போடப்படுவதைத் தங்கள் கண்களின் எதிரிலே காணமுடிந்தது.

வசனம் 3:11

கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில் மாறிமாறிப் பாடினார்கள். கர்த்தரைத் துதிக்கையில், ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுகிறதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்.

ஆசாரியர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆசாரிய வஸ்திரங்களைத் தரித்துக் கொண்டார்கள் (எஸ்றா 2:69). அவர்கள் பூரிகைகளை ஊதினார்கள். தாளங்களைக் கொட்டுகிற ஆசாபின் குமாரராகிய லேவியரையும் நிறுத்தினார்கள். அவர்கள் தாவீது இராஜா கர்த்தரின் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவந்தபோது செய்தது போல் வாத்தியங்கள் முழங்கவும், சந்தோஷம் உண்டாகவும், பாடவும் தங்கள் சத்தத்தை உயர்த்தினார்கள் (1.நாளா.15:16,24).

குறிப்பிட்ட நேரம் வந்தது. கர்த்தரைப்பாடித் துதித்து மகிமைப்படுத்தினார்கள். அது அவர்களுக்கு மகிழ்ச்சியான நேரம். கர்த்தர் செய்த யாவற்றையும் அவர்கள் எண்ணிப்பார்த்தனர். அவைகள் மாபெரும் நன்மைகள் கர்த்தருடைய பெட்டியை தாவீது இராஜா எருசலேமுக்குக் கொண்டுவந்தபோது துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடத்தில் கொடுத்த சங்கீதத்தின் ஒரு பகுதியாகவே இவர்களது பாடல்கள் அமைந்திருந்தன (1.நாளா. 16:7-34). இங்கே எளிமையும், சிறுமையுமான ஒரு சிறு கூட்டத்தாரைக் காண்கிறோம். அவர்களது பணியோ மிகப் பெரியதாகும். அவர்கள் செய்யவேண்டியது யாதென்று கர்த்தர் அவர்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார். அது மிகப்பெரிய வேலை என்று அவர்கள் முறுமுறுக்கவில்லை. அவர்கள் அப்பணியை ஆரம்பித்தார்கள். நாமும் நமது வாழ்க்கையில் செய்ய வேண்டியது பணி எதுவாயிருந்தாலும் மகிழ்ச்சியுடன் அதனை செய்யவேண்டும்.

வசனம் 3:12-13

முந்தின ஆலயத்தைக் கண்டிருந்த முதிர்வயதான ஆசாரியரிலும், லேவியரிலும், பிதாக்களின் வம்சங்களின் தலைவரிலும் அநேகர் இந்த ஆலயத்துக்குத் தங்கள் கண்களுக்கு முன்பாக அஸ்திபாரம் போடப்படுகிறதைக் கண்டபோது, மகா சத்தமிட்டு அழுதார்கள். வேறே அநேகம்பேரோ கெம்பீர சந்தோஷமாய் ஆர்ப்பரித்தார்கள். ஜனங்கள் மகா கெம்பீரமாய் ஆர்ப்பரிக்கிறதினால், அவர்கள் சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது. ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், ஜனங்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறியக்கூடாதிருந்தது.

ஆலயத் திருப்பணி ஆரம்பித்தபோது அவர்கள் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள். அவர்களில் பலர்: மிக வயது சென்றவர்களாயிருந்து சாலொமோன் இராஜாவின் கம்பீரமான ஆலயத்தைப் பார்த்தவர்கள் (1.இராஜா.6). அவர்கள் சாலொமோனின் ஆலயத்தை இச்சிறு அஸ்திபாரத்துடன் ஒப்பிட்டு, துயரப்பட்டு, மற்றவர்கள் மகிழ்சியால் ஆரவாரித்தபோது இவர்கள் மிகவும் துயரப்பட்டு அழுதார்கள். ஆனால் இவ்வழுகுரலும் மகிழ்சி ஆரவாரமும் ஒன்றிலிருந்தொன்று பிரிக்கப்பட முடியாமல் பெருந்தொனியாய் வெகு தூரம் வரையில் கேட்டது.

ஆகாய் தீர்க்கதரிசி இது குறித்து, இந்த ஆலயத்தின் முந்தின மகிமையைக் கண்டவர்களில் உங்களுக்குள்ளே மீந்திருக்கிறவர்கள் யார்? இப்பொழுது இது உங்களுக்கு எப்படிக்காணி;கிறது? அதற்கு இது உங்கள் பார்வையில் ஒன்றுமில்லாததுபோல் காண்கிறதல்லவா? என்றான் (ஆகாய் 2:3). ஆனால் ஆகாய் மேலும் கூறுகிறதாவது, தேசத்தின் எல்லா ஜனங்களே நீங்கள் திடன்கொள்ளுங்கள்...... என்று கர்த்தர் சொல்லுகிறார். வேலையை நடத்துங்கள். நான் உங்களுடனே இருக்கிறோன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.......பயப்படாதிருங்கள்.... (ஆகாய் 2:4-5).

உன்னுடைய வாழ்க்கையில் அல்லது உனது ஆலயத்தில் ஒருவேளை புதியதொரு வேலை ஆரம்பமாகி இருக்கலாம். அது மிகப்பெரியதாகவுமிருக்கலாம். ஒவ்வொரு வேலைக்கும் ஓர் ஆரம்பம் உண்டு. உனது ஆரம்பம் மிகச் சிறியதாக ஒரு வேளை இருக்கலாம் நீ திடன் கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் உங்களுடனே இருக்கிறேன். வேலையை நடத்துங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இதுவே நமக்கு மிகத் தேவையானதாகும்.
By , Tamil Christian Assembly

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.