எஸ்தர் 3 விளக்கவுரை
ஆமானின் சதித்திட்டம்
வசனம் 3:1இந்த நடபடிகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்திவைத்தான்.
யாவும் நலமுhகவே நடந்தேறின. அகாஸ்வேரு இராஜா எஸ்தரை அதிகம் நேசித்து, அவளைச் சகல இராஜ அந்தஸ்துடன் இராஜஸ்திரீயாக எற்படுத்தினான். அவளது வளர்ப்புத் தந்தையான மொர்தெகாய், இராஜாவினால், மதிப்பிற்குரிய ஒரு பதவிக்கு நியமனம் பெற்று, இராஜ விசுவாசமுள்ள குடிமகனாய் விளங்கினான். கவலைப்படும்படி யாதொன்றும் ஏற்படவில்லை என்று நினைத்துச் சொல்லி முடியுமுன்பே, அந்தோ! அது போன்ற சுமூக நிலை எங்குமிருக்கவே முடியாது, அல்லது கூடவே கூடாது என்னும் அளவில் ஒரு வஞ்சகன் நமது சரித்திரத்தின் உள்ளே நுழைந்துவிட்டதைக் காணமுடிகிறது. ஆமான் என்பது அவன் பெயர். அரசு ஆட்சியாளர்களுடன் சகல பிரபுக்களுக்கும், இளவரசர்களுக்கும் மேலாக அவன் அமர்த்தப்பட்டிருந்தான். இந்த ஆமான் யார்? அவன் ஓர் ஆகாகியன் என்பதைத் தவிர வேறnhன்றும் அவனைப்பற்றி பூர்வீகம் இங்கு கூறப்படவில்லை. ஆகாகியன் எனப்படும்போது, அமலேக்கியர்களின் இராஜாவாக இருந்த ஆகாக் என்பவனின் வம்ச வழி வந்தவன் என நாம் அறியமுடிகிறது (1.சாமு.15:32). இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுபட்டு வந்த காலத்தில் வனாந்தரங்களில் திரிந்து அலைந்த நாட்களில் அவர்களை மூர்க்கமாய் எதிர்த்துப் போரிட்டவர்கள் இந்த அமலேக்கியர் (யாத்17:8-16). தேவன் இஸ்ரவேலரிடத்தில் இந்த அமலேக்கியரைப்பற்றி எச்சரித்து, அவர்களையும், அவர்கள் செய்தவைகளையும் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். அவர்கள் யூதர்களின் பகைஞர் ஆவர்.
ஆனபடியால், இங்கே, யூதர்களுக்குப் பகைவனான ஒருவன்- ஆமான் இராஜாவிற்கு அடுத்தபடியான ஓர் உயர்ந்த பதவியில் இருக்கும் இந்த நிலையில், இராஜஸ்திரீயான எஸ்தர் ஒரு யூத இனப் பெண்மணியாயிருக்கிறாள். ஆனால் நல்லவேளையாக அந்த உண்மை யாரொருவருக்கும் தெரியாமலிருந்தது. எனவே யாவும் அமைதியாக அமையும் என நாம் எண்ணக்கூடும். ஆனால் அதுதான் இல்லை!
வசனம் 3:2-4
ஆகையால் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள். அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான். ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை.
அப்பொழுது ராஜாவின் அரமனைவாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் மொர்தெகாயைப் பார்த்து: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள்.
இப்படி அவர்கள் நாளுக்குநாள் அவனுடனே சொல்லியும், அவன் தங்களுக்குச் செவிகொடாதபோது, தான் யூதன் என்று அவன் அவர்களுக்கு அறிவித்திருந்தபடியால், மொர்தெகாயின் சொற்கள் நிலைநிற்குமோ என்று பார்க்கிறதற்கு, அதை ஆமானுக்கு அறிவித்தார்கள்.
ஆமான், இந்த அகாஸ்வேருவின் அரண்மனையில் மிகமுக்கியமானதொரு பதவியில் இருந்ததினால், அவன் அரண்மனை வாசல் வழியாகக் கடந்து செல்லும்போது இராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும் ஆமானை வணங்கி, நமஸ்கரிக்க வேண்டுமென்று இராஜா கட்டளை விதித்திருந்தான். அதற்குக் கீழ்ப்படிந்து, எல்லாரும், ஆமான் இரதத்திலாவது, குதிரையிலமர்ந்தாவது வெளியிலே செல்லும்போது அவனை வணங்கி நமஸ்கரித்து வந்தனர். எல்லாரும் வணங்கினார்கள். மொர்தெகாய் தவிர, மொர்தெகாய் மட்டும் ஆமானை வணங்கினதுமில்ல அவனை நமஸ்கரித்ததுமில்லை. ஆமான் யார் என்பது மொர்தெகாய்க்குத் தெரியாதா, என்ன? நன்றாகத் தெரியும். ஆனாலும் அவனை வணங்கவேண்டும் என்ற எண்ணம் சிறிதும்கூட அவனுக்கு ஏற்படவில்லை.
அரண்மனை வாசலில் நின்ற ஊழியக்காரார், தாங்கள் ஆமானைத் தாழ வணங்கி நிற்கும்போது மொர்தெகாய் மட்டும் வணங்காமலிருந்ததைக் கண்டு அவனைக் கேள்விகேட்க ஆரம்பித்தனர். அவர்கள் ஓயாமல் நச்சரித்துக் கேட்டுக்கொண்டேயிருந்தபடியினால், தான் ஒரு யூதன் என்பதனைக் கூறி வணங்காததன் காரணத்தை விளங்கினான். யூதர்களின் பகைஞனான ஆமானை (3:10) அவன் ஒருபோதும் வணங்கப்போவதில்லை. (பாவத்திற்கு ஒருபோதும் தலைவணங்காத நமது ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவைப்போல்)
அன்று முதல் மொர்தெகாயின் சொற்கள் நிலைநிற்குமோ என்று பார்க்கிறதற்கு, மொர்தெகாயின் வணங்காமையையும் அவன் யூதன் என்று சொன்னதையும் அவர்கள் ஆமோனிடம் சொன்னார்கள்
வசனம் 3:5-6
ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான்.
ஆனாலும் மொர்தெகாயின்மேல்மாத்திரம் கைபோடுவது அவனுக்கு அற்பக்காரியமாகக் கண்டது. மொர்தெகாயின் ஜனங்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால், அகாஸ்வேருவின் ராஜ்யமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் ஜனமாகிய யூதரையெல்லாம் சங்கரிக்க அவன் வகைதேடினான்.
ஆகவே, அடுத்தமுறை வாசலைக் கடந்து செல்லுகையில், ஆமான் அங்கு நின்றிருந்த ஊழியக்காரர்களைக் கவனத்துடன் நோக்கலானான். யாவரும் வணங்கி நமஸ்கரிக்கிறார்களே! ஆம், ஒருவன் மட்டும்? யார் அவன்? அவன்தான் யூதனான மொர்தெகாய். என்ன துணிச்சல்! ஆமானுக்கு மூர்க்கவெற்றி ஏற்பட்டது. என்ன திமிர்! என்னை இந்த ஆமானை இராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் மகிமைப் பிரதாபம் விளங்க இருக்கும் என்னை வணங்காமல் இருக்கும் இவனை நான் பழிவாங்காமல் இருப்பேனோ? என்றெல்லாம் எண்ணக்கூடிய ஆமானை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா? உண்மையிலேயே உயர்ந்தநிலையில் இருக்கும் ஒருவன், தன்னை வணங்கவில்லை என்ற குற்றம் செய்யத ஒரு யூதனைப் புறக்கணித்து விட்டுப் போயிருப்பான். ஆனால் இந்த ஆமானின் பெருமை பண்பிற்கு இது ஒரு சவாலாக இருந்தது.
பெருமை என்பது எத்தனை கொடியது என்பதை வேதம் விளக்கிக்கூறுகிறது. சாத்தானின் வீழ்ச்சிக்குக் காரணம் இந்த பெருமையே (ஏசா.14:12-15). இந்த மேட்டிமைதான் கர்த்தர் வெறுக்கும் காரியங்களில் முதன்மையானது (நீதி.6:16-17, 1.யோ.2:16). ஆனாலும் நாமும் சில வேளைகளில் பெருமை கொள்கிறோமன்றோ?
ஆமான் எத்தகையவன் என்பதை நாம் அறியமுடிகிறது. அவன் பழிவாங்க நினைக்கிறான். அனால் மொர்தெகாய் மீதல்ல. அந்த இராஜ்யத்தில் இருந்த அனைத்து யூதர்களையும் பழிவாங்க எண்ணினான். பழிவாங்க என்று சொல்லும்போது ஒரு சிறு தண்டனை மூலமல்ல, மரணம் விளைவிக்கவே அவன் எண்ணுகிறான். மரணமா? ஒரு யூதன் தன்னை வணங்கவில்லையென்பதற்காக அனைத்து யூதர்களையும் கொன்று குவிக்க ஒருவன் எண்ணுவானோ? இருக்கமுடியாது என்றுதான் நாம் எண்ணுவோம். ஆனால் அவன் யூதர்கள் அனைவரையும் கொல்லவே நினைத்தான். ஒரே ஓர் ஆளை மட்டுமே கொன்றால் அது அவனுடைய சுய கௌரவத்திற்கு இழுக்கு என்று அவன் எண்ணினான்போலும். அனைத்து யூதர்களையும் கொல்ல நினைத்தான். அந்த அனைத்து யூதர்களையும் அழிக்க எண்ணினான். ஏன்? ஒரு யூதன் அவனை வணங்கவில்லையெனில் அனைத்து யூதர்களுமே அவனை வணங்கமாட்டார்கள் என்று அவன் எண்ணினான்.
அப்படி அனைத்து யூதர் இனத்தையும் அழிக்க அவனால் கூடுமா? பார்வோன் இராஜா எகிப்திலே, யூதர்கள் பலுகிப் பெருகுவதைப் பார்தபோது, மருத்துவச்சிகளோடு பேசி பிறக்கும் ஆண்பிள்ளைகள் அனைத்தையும் கொன்றுபோடும்படி கட்டளையிட்டானன்றோ (யாத்.1:16). எருசலேமின் இராஜாவாகிய ஏரோது, யூதருக்கு இராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே என்று சாஸ்திரிகள் கூறக்கேட்டபோது, தனது சிம்மாசனம் பறிபோகும் என்று பயந்து இரண்டு வயதிற்குட்பட்ட ஆண்பிள்ளைகளைலெ;லாம் கொன்று போட்டதை வேதம் கூறுகிறதல்லவா (மத்.2:16)? இங்கே குழந்தைகள். எல்லா காலங்களிலும் சாத்தான் யூதர்களை அழிக்க எப்போதுமே செயல்பட்டுவந்துள்ளான் இங்கே ஆமான் மூலம் அதைச் செய்ய முயற்சிக்கிறான்.
வசனம் 3:7-8
ராஜாவாகிய அகாஸ்வேருவின் பன்னிரண்டாம் வருஷம் நிசான் மாதமாகிய முதலாம் மாதத்திலே ஆமானுக்கு முன்பாகப் பூர் என்னப்பட்ட சீட்டு ஒவ்வொரு நாளையும் குறித்துப் போடப்பட்டு, ஆதார்மாதமான பன்னிரண்டாம் மாதத்தின்மேல் விழுந்தது.
அப்பொழுது ஆமான் அகாஸ்வேரு ராஜாவைப் நோக்கி: உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள். அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது. அவர்கள் ராஜாவின் சட்டங்களைக் கைக்கொள்ளுகிறதில்லை. ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல.
இதுபோன்றதொரு கொலை திட்டத்தை ஒருவன் செய்ய முற்படும்போது அந்த அரசில் அவனுக்கு எத்தகைய செல்வாக்கு இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்க முடிகிறதல்லவா? இந்தக் கொடுமையான திட்டத்தை நிறைவேற்றத் தக்கதருணம் வரும்வரை அவன் பொறுமையோடே காத்திருந்தான். அந்தச் சரியான நாளைக் கண்டுபிடிக்க அவன் சீட்டுப்போட்டான் என்று வேதம் கூறுகிறது. அந்த நன்னாள் வந்தபோது ஆமான் அகாஸ்வேரு இராஜாவை நோக்கி, யூதர்களைக் குற்றஞ்சுமத்தி, உம்முடைய இராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள். அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது. அவர்கள் இராஜாவின் கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதில்லை. ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது இராஜாவுக்கு நியாயமல்ல என்று கூறினான்.
அவன் குற்றுஞ்சுமத்திக் கூறியதை மறுபடியும் கூர்ந்து கவனித்தால், அவன் முதலில் கூறிய வாசகம், அதாவது சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள் என்பது உண்மையே. அவர்களின் வழக்கங்கள் வேறானவை என்பது உண்மையே. ஏனெனில் அவை பரிசுத்த தேவனின் சட்டங்களான வழக்கங்கள். அவை யாரையும் பாதிக்காதவை. அடுத்து, உள்ள கூற்று அப்பட்டப் பொய்யாகும். அவர்கள் இராஜாவின் கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதில்லை என்பது உண்மையல்ல. அவர்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தனர். அவர்கள் நல்ல குடிமக்கள். அவர்கள் நாட்டில் இருப்பது நாட்டிற்கு நன்மையேயாகும். யூதர்களை மதித்து நடத்துகிற எந்த நாடும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவே இருக்கும். இங்கே சாத்தான் ஆமானை தனக்கு ஒரு கருவியாகவே பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறான். உண்மையும் பொய்யும் கலந்த ஒரு கூற்றைப் பொழிகிறான். இதுபோன்ற புரட்டுக்கள் செய்வதில் வல்லவனான சாத்தானின் செய்கைளுக்கு நாம் மிகவும் எச்சரிக்கையாயிருக்கவேண்டுமன்றோ?
வசனம் 3:9
ராஜாவுக்கு சம்மதியானால், அவர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பவேண்டியது. அப்பொழுது நான் ராஜாவின் கஜானாவில் கொண்டுவந்து செலுத்த பதினாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணிக் காரியக்காரர் கையில் கொடுப்பேன் என்றான்.
ஆமான், தான் கண்டு மன்னருக்கு அறிவித்த சிக்கலுக்குப் பதிலும் அளிக்கத் தயாராக இருக்கிறான். அவர்கள் அழியவேண்டும் என்கிறான். அதுமட்டுமா? அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட நான் இராஜாவின் கஜானாவிலே கொண்டுவந்து செலுத்த பதினாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணிக் காரியக்காரர் கையில் கொடுப்பேன் என்று கூறுகிறான். இப்போது இராஜா, பணம் கொடுக்கும் ஆமானுக்காக, அவன் வெறுக்கும் சிலரை ஒழித்துக்கட்ட முற்படுகிறான். எத்தனை எளிதாகக் காரியங்கள் நடைபெறுகின்றன.
வசனம் 3:10-11
அப்பொழுது ராஜா தன் கையிலிருக்கிற தன் மோதிரத்தைக் கழற்றி, அதை ஆகாகியனான அம்மெதாத்தின் குமாரனும் யூதரின் சத்துருவுமாகிய ஆமானிடத்தில் கொடுத்து,
ஆமானை நோக்கி: அந்த வெள்ளியை நீ வைத்துக்கொள். அந்த ஜனத்துக்கு உன் இஷ்டப்படி செய்யலாம் என்றான்.
இராஜா அதற்குமேல் அதைப்பற்றி ஏதும் சிந்திக்கவில்லை. இந்த ஆமான் வெறுக்கும் இவர்கள் யார் என்றுகூட அவன் விசாரித்தறிய விரும்பவில்லை. அவனுடைய முத்திரை மோதிரத்தைக் கழற்றி அதனை முத்திரையிடுவதற்காக ஆமானிடத்தில் கொடுத்துவிட்டான். அந்த ஜனத்திற்கு உன் இஷ்டப்படி செய்யலாம் என்று அவன் கூறினான். அவன் அனுமதி வழங்குகிறான் என்றால் ஓரினமே அழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதன்றோ?
இப்புத்தகத்தின் முதல் அதிகாரத்தில், வஸ்தியைப்பற்றி கடுங்கோபங்கொண்டபோது, தேசத்தின் சட்டப்படி அவளுக்குச் செய்ய வேண்டியது என்ன என்று விசாரித்ததை நாம் வாசித்தோமன்றோ? ஆனால் இங்கே அவர்கள் செய்த தவறுதான் என்ன என்பதனைக்கூட அறிந்து கொள்ளுமுன்பே ஆயிரக்கணக்கிலான யூதர்களை மரணத்திற்கு தீர்க்கிறான். ஏன் அப்படி?
அரசின் அதிகாரம் தவறான ஒருவன் கையில் இருக்கிறது. உனது வாழ்க்கையில் உன்மேல் அதிகாரம் செலுத்தக்கூடியவர் யாரேனும் உளரோ?
அவன் பொய்யையும் மெய்யையும் கலந்து சொல்லப்பட்ட ஆமானின் கூற்றை முழுவதும் நன்பினானல்லவா? இப் பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான் என்று வேதமே கூறுகிறதே (2.கொரி.4:4).
செல்வத்தின் சக்தி அவனை வளைய வைத்ததெனலாம். அந்த அகாஸ்வேரு எவ்வளவு செல்வமுடையவன் என்பதை நாம் முதலாம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அவன் அந்தச் செல்வத்திலேயே உழலவிரும்பினான். ஆனால் இராஜாவின் கஜானாவிற்கு ஆமானே பொறுப்பாளனாகவும் இருந்ததினால் அவனுடைய தீய திட்டங்களுக்கு அரசின் செல்வத்தைக்கூட பயன்படுத்தக்கூடிய நிலையில் அவன் இருந்தான்.
ஆமானுக்கு இராஜாவின் முத்திரை மோதிரம் ஏராளமான வெள்ளி மற்றும், அவனுடைய திட்டங்களில் அவனுக்குக் கீழ்ப்படிந்து நிற்கும் ஏவலாளர் ஆகிய அனைத்தும் கிடைத்துவிட்டன. ஒரே வாக்கியத்தில் சொல்லப்போனால் இராஜாவின் அதிகாரம் அனைத்தும் அவன் கையில் கொடுக்கப்பட்டிருந்தது எனலாம். இவையனைத்தும் மிகக் குறுகிய காலத்திலே நடந்து முடிந்துவிட்டன. ஆனால், நிதானமாகவும், அமைதியாகவும் ஆமான் இராஜாவின் நம்பிக்கைக்குத் தன்னை உரியவனாக்கிக் கொண்டிருந்தான். இது சாத்தானுடைய வேலையே. உண்மைகளையும் பொய்யையும் கலந்து நமது சிந்தனைகளைத் தொடக்கூடியதாய் அவன் செயல்படுவான்.
வசனம் 3:12
முதலாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே, ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள். ஆமான் கற்பித்தபடியெல்லாம் ராஜாவின் தேசாதிபதிகளுக்கும், ஒவ்வொரு நாட்டின்மேல் வைக்கப்பட்டிருந்த துரைகளுக்கும், ஒவ்வொரு ஜனத்தின் பிரபுக்களுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும் எழுதப்பட்டது. ராஜாவாகிய அகாஸ்வேருவின் பேரால் அது எழுதப்பட்டு, ராஜாவின் முத்திரை போடப்பட்டது.
ஆமான் மிகவும் துரிதமாகச் செயல்ப்பட்டான். அவன் இராஜாவின் சம்பிரதிகளை அழைத்து, அந்த நாட்டில் வழங்கும் அஷரத்திலும், மொழியிலும், இராஜாவின் பேரால் கடிதங்கள் எழுதி, மோதிரத்தினால் முத்திரையிட்டு, அதிகாரிகளுக்கும், நாட்டில் இருந்த பிரபுக்களுக்கும் அந்தக் கடிதங்களை அஞ்சல்காரர் மூலம் அனுப்பிவைத்தான்.
அவன் அவ்வளவு அவசரமாக எழுதியனுப்பிய செய்திதான் என்ன? 12ம் மாதம் 13ம் தேதியாகிய ஒரே நாளிலே, சிறியோர், பெரியோர், குழந்தைகள் ஸ்திரீகள் ஆகிய சகல யூதரையும் கொன்று நிர்மூலமாக்கவேண்டும் என்பது அந்தக் கட்டளை. கொல்ப்பட்டபின் அவர்களுடைய பொன்னும் பொருளும் கொள்ளையிடப்படவேண்டும். ஒருவேளை அந்தக் கொள்ளையின் மூலம்தான் ஆமான் இராஜாவிற்குக் கொடுப்பதாகச் சொன்ன வெள்ளியைப் பெற எண்ணினான்போலும்!
வசனம் 3:13-15
ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியாகிய ஒரே நாளிலே சிறியோர் பெரியோர் குழந்தைகள் ஸ்திரீகள் ஆகிய சகல யூதரையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்களைக் கொள்ளையிடவும், அஞ்சற்காரர் கையிலே ராஜாவின் நாடுகளுக்கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது.
அந்த நாளுக்கு ஆயத்தப்பட்டிருக்கவேண்டும் என்று சகல ஜனங்களுக்கும் கூறி அறிவிக்கிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே, இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம்பண்ணப்பட்டது.
அந்த அஞ்சற்காரர் ராஜாவின் உத்தரவினால் தீவிரமாய்ப் புறப்பட்டுப் போனார்கள். அந்தக் கட்டளை சூசான் அரமனையில் பிறந்தது. ராஜாவும் ஆமானும் குடிக்கும்படி உட்கார்ந்தார்கள். சூசான் நகரம் கலங்கிற்று.
அது அரச கட்டளையென மதிக்கப்பட்டதால், அந்தக் கடும் கட்டளை காற்றெனப் பறந்துசென்றது. அந்தக் கட்டளை, அஞ்சல்காரர்களின்மூலம், குதிரைகளின்மீதும், ஒட்டகங்களின்மீதும் வேகமாய் அனுப்பப்பட்டு ஒவ்வொரு நகரத்திலும் பட்டணத்திலும் எல்லா மொழிகளிலும், மக்கள் மத்தியில் வாசிக்கப்பட்தை எண்ணிப் பாருங்கள். தலைநகரான சூசான் நகரத்திலும் அந்தக் கட்டளை அறிவிக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட நாளில் ஒவ்வொரு நகரத்திலும், மக்கள் கொதித்தெழும்பி, யூதர்களான நண்பர்களையும், அயலகத்தார்களையும் கொன்று குவிக்கவேண்டுமென்பது இராஜகட்டளை. ஒருவேளை அவர்கள் திருமண உறவுகளினால் உறவினர்களாகவும் இருந்திருக்கக்கூடும். நீ ஒருவேளை அங்கேயிருந்தவர்களில் ஒருவனாய் இருந்திருந்தால் என்ன எண்ணியிருப்பாய். அதிர்ச்சிடைந்திருப்பாயன்றோ? அன்று அங்கேயிருந்தவர்களும் அப்படித்தான். சூசான் நகரம் கலங்கிற்று என்று வேதம் கூறுகிறது. இந்தக் கடுமையான, கொடுமையான கட்டளை அன்று அவர்களுக்கும், யாருக்குமே புரியவேயில்லை.
ஆனால் ஆமானும், இராஜாவும் அப்படியல்ல. அவர்கள் இருவரும் குடிக்கும்படி உட்கார்ந்தார்கள் என்று வேதம் கூறுகிறது. ஆயிரக்கணக்கான, குற்றமற்ற பலரைக் கொன்று குவிக்க உத்தரவிட்டபின், அந்த இருவரும், சேர்ந்து குடித்து மகிழ உட்கார்ந்தனர். அந்த ஆமான் ஒரு செல்வச் சீமான். மற்ற எல்லாப் பிரபுக்களுக்கும் மேலாக உயர்த்தப்பட்டு பதவி வகித்தான். இராஜாவிற்கு அடுத்தவன் அவனே. அந்தப் பதவியில் நிலையாகவும் அவனிருந்தான். அவனுடைய செயல்கள், அவன் திறமையும் கொடுமையும் நிறைந்தவன் என்பதனை நன்கு விளக்குகிறதன்றோ? ஆயினும் அவனுடைய பெருமைக்கு இழுக்கு எற்பட்ட நிலையில்தான் அவனுடைய கொடிய பண்புகள் வெளிவரத்த தலைப்பட்டன. இராஜா ஏனோ இதனைக் கவனிக்கவில்லை. அவனுடைய கொடுமைப் பண்புகளுக்கு, இராஜா ஓரந்தகனாகவேயிருந்தான். அவனை அறியாதவன் என்று கூறமுடியாது. இத்தனைக் கொடுமைகள் நடக்க அனுமதித்தவன் அவனேயன்றோ? ஆமான் செய்ய நினைத்ததனைத்திற்கும் அவன் அனுமதியளித்தானன்றோ? இராஜ ஆளுகையின் அனைத்து அதிகாரங்களiயும் கொடியவனான ஆமானிடம், அவன் அளித்திருந்தானல்லவா? நமது வாழ்க்கiயின் திறவுகோலை நாம் யாரிடம் கொடுத்துவைத்துள்ளோம்? தேவனாகிய கர்த்தர் நமது வாழ்க்கையின் பிதாவாயிராவிட்டால் நாம் அகாஸ்வேரு இராஜாவைவிட எத்தவிதத்தில் சிறந்தவராக முடியும்?