எஸ்தர் 2 விளக்கவுரை

எஸ்தர் 2 விளக்கவுரை

புதிய பட்டத்து அரசி
வசனம் 2:1

இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் உக்கிரம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான்.


இராஜஸ்திரியாகிய வஸ்தி அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுவிட்டதைக் குறித்து அகாஸ்வேரு இராஜா மனம் வருந்தினானா? முதலாவது வசனத்தை நாம் வாசிக்கும்போது அவ்வாறுதான் தோன்றும். இவைகளுக்குப்பின்.... இராஜாவாகிய அகாஸ்வேருவின் உக்கிரம் தணிந்தபோது....என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். அந்த இராஜா, அவனிந்த நிலையினை நன்கு உணர்ந்தான். அவன் நினைவுகூர்ந்தவை (1) வஸ்தி (2) அவன் செய்தது (3) அவளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு - இவைகளிலிருந்து அவன் மனம் வருந்தியதாக ஏதேனும் ஒரு குறிப்புக் காணக்கிடக்கிறதா? அப்படியிருப்பினும் அது காலங்கடந்ததொன்றாகும். ஏனென்றால் மேதிய பெர்சிய சட்டங்கள் மாற்றப்படக்கூடாதவையாகும்.

வசனம் 2:2-4

அப்பொழுது ராஜாவைச் சேவிக்கிற அவனுடைய ஊழியக்காரார் அவனை நோக்கி: ரூபவதியாயிருக்கிற கன்னிப்பெண்களை ராஜாவுக்காகத் தேடவேண்டும்.

அதற்காக ராஜா தம்முடைய ராஜ்யத்தின் நாடுகளிலெல்லாம் விசாரிப்புக்காரரை வைக்கவேண்டும். இவர்கள் ரூபவதிகளாயிருக்கிற சகல கன்னிப்பெண்களையும் கூட்டி, சூசான் அரமனையிலிருக்கிற கன்னிமாடத்துக்கு அழைத்துவந்து, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாயின் வசத்திலே ஒப்புவிக்கவேண்டும். அவர்களுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும்.

அப்பொழுது ராஜாவின் கண்களுக்குப் பிரியமான கன்னி வஸ்திக்குப் பதிலாகப் பட்டத்து ஸ்திரீயாகவேண்டும் என்றார்கள். இந்த வார்த்தை ராஜாவுக்கு நலமாய்த் தோன்றினபடியால் அப்படியே செய்தான்.

இராஜாவுடனிருந்த சிலர், அவனுக்கு நெருக்கமாயிருந்த அவர்கள், இராஜாவுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மனவருத்தத்தின் அறிகுறிகளைக்கண்டு அவனுக்குச் சில நல்லாலோசனைகளைக் கூறத் தலைப்பட்டனர். இராஜஸ்திரியான வஸ்திக்குப் பதிலாக தகுதியான இளவரசியை இராஜா ஏன் தெரிந்தெடுக்கக்கூடாதென்று அவர்கள் கேட்டனர். இராஜா விசாரிப்புக்காரரை ஏற்படுத்தி, தம்முடைய இராஜ்யத்தின் நாடுகளிலெல்லாம் ரூபவதிகளாயிருக்கிற கன்னிப்பெண்களை இராஜாவிற்காகத் தேடவேண்டும் என்று கட்டளை இட்டான். இதிலே அறிவுள்ளவளாகவும், பண்புள்ளவளாகவும், திறமை உள்ளவளாகவும் இருக்கவேண்டும் என்று ஒன்றும் கூறப்படவில்லை. ரூபவதிகளாக இருக்கவேண்டும் என்று மட்டுமே கூறினார்கள். ரூபவதிகளாயிருக்கிற சகல கன்னிப்பெண்களையும் கூட்டி சூசான் அரண்மனையிலிருக்கிற கன்னிமாடத்திற்கு அழைந்துவந்து பிரதானியாகிய யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்படவேண்டும் என்றும், இராஜா தன் கண்களுக்குப் பிரியமான கன்னியை வஸ்திக்குப் பதிலாக பட்டத்து ஸ்திரீயாக்கவேண்டும் என்றும் கூறினாhகள். இந்த வார்த்தைகளும், திட்டமும், இராஜாவுக்கு நலமாய்த் தோன்றினபடியால் அவ்வாறே செய்ய ஆரம்பிக்கும்படி உத்தரவிட்டான்.

வசனம் 2:5-7

அப்பொழுது சூசான் அரமனையிலே பென்ஜமீனியனாகிய கீசின் குமாரன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் குமாரன் மொர்தெகாய் என்னும் பேருள்ள ஒரு யூதன் இருந்தான்.

அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டு போகிறபோது, அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான்.

அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான். அவளுக்குத் தாய்தகப்பனில்லை. அந்தப் பெண் ரூபவதியும் சௌந்தரியமுடையவளுமாயிருந்தாள். அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மெர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான்.

எஸ்தரின் சரித்திரத்தில் வருகிற மிகமுக்கியமான நபராகிய மொர்தெகாய் என்ற ஒருவரை நாம் இந்த வசனங்களில் காண்கிறோம். அவன் பென்ஜமீன் கோத்திரத்தில் தோன்றிய ஒரு யூதனாக இருந்தான். மொர்தெகாயும் அவன் குடும்பத்தினரும், பாபிலோனிய இராஜாவாகிய நேபுகாத்நேச்சாரினால் பல ஆண்டுகளுக்கு முன்பு யூதாவிலிருந்து சிறைப்படுத்திக் கொண்டு போகப்பட்டவர்களாயிருந்தனர். அப்போது அவன் எந்த வயதினன், அல்லது அவனைப் பற்றிய செய்தி ஒன்றும் இங்கு கூறப்படவில்லை. ஆனால் அவன் அன்பு உள்ளங்கொண்டவனாயிருந்ததைத் தனது சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னப்பட்டவளைத் தத்து எடுத்து வளர்த்துவந்தான் என்கிற செய்தியிலிருந்து நாம் அறிகிறோம். அந்த எஸ்தர் தாயையும் தந்தையையும் இழந்தவளாயிருந்தபடியால் மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்து வளர்த்துவந்தான். சங்.146:9ல் கர்த்தர் திக்கற்ற பிள்ளையையும் விதவைகளையும் ஆதரிக்கிறார் என்று கூறப்பட்டுள்துபோல் மொர்தெகாய் ஆதரவற்ற எஸ்தரை எடுத்து வளர்த்தான். அவளுடைய பெயர் எஸ்தர் அல்லது அத்சாள் என்றும், அவள் சௌந்தரியமுடையவளும் ரூபவதியுமாயிருந்தாள் என்று வேதம் கூறுகிறது.

வசனம் 2:8-9

ராஜாவின் கட்டளையும் தீர்மானமும் பிரசித்தமாகி, அநேகம் பெண்கள் கூட்டப்பட்டு, சூசான் அரமனையிலுள்ள யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்படுகிறபோது, எஸ்தரும் ராஜாவின் அரமனைக்கு அழைத்துக்கொண்டுபோகப்பட்டு, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்பட்டாள்.

அந்தப் பெண் அவன் பார்வைக்கு நன்றாயிருந்ததினாலே, அவளுக்கு அவன் கண்களிலே தயைகிடைத்தது. ஆகையால் அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரமனையிலிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு நியமிக்கவும் ஜாக்கிரதைப்பட்டுக் கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவள் தாதிமார்களையும் வைத்தான்.

இராஜாவின் ஆட்கள் தேடி, சௌந்தரியமுள்ள பெண்களைக்கூட்டி யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கிறபோது எஸ்தரும் அழைத்துவந்து ஒப்புவிக்கப்பட்டாள். அவளுக்கு அவன் கண்களிலே தயை கிடைத்தது என்று வேதம் கூறுகிறது. அந்தப் பெண் அவன் பாhவைக்கு நன்றாயிருந்தாள். ஆகையால் அவளுடைய சுத்திகரிப்பிற்கு வேண்டியவைகளையும் அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுத்தான். இராஜ அரண்மனையிலிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு நியமித்தான். கன்னிமாடத்தில் சிறந்த ஓரிடத்தில் அவளையும் அவளுடைய தாதிமார்களையும் வைத்தான் அந்தப் பாதுகாவலன்.

வசனம் 2:10

எஸ்தரோவென்றால் தன் குலத்தையும், தன் பூர்வோத்தரத்தையும் அறிவிக்காதிருந்தாள். மொர்தெகாய் அதைத் தெரிவிக்கவேண்டாமென்று அவளுக்குக் கற்பித்திருந்தான்.

எஸ்தரின் சரித்திரத்தில் இந்த 10 வது வசனம் முக்கியமானதொரு செய்தியைத் தருகிறது. தான் யூதகுலத்தவள் என்பதனையும், தன் பூர்வோத்திரத்தையும் ஒருவருக்கும் அறிவிக்கவேண்டாம் என்று மொர்தெகாய் அவளுக்குக் கற்பித்திருந்தான்.

வசனம் 2:11

எஸ்தருடைய சுகசெய்தியையும் அவளுக்கு நடக்குங்காரியத்தையும் அறிய மொர்தெகாய் நாடோறும் கன்னிமாடத்து முற்றத்துக்கு முன்பாக உலாவுவான்.

மொர்தெகாய் எஸ்தரைக் குறித்து என்ன நினைத்தான்? எஸ்தருக்கு எற்பட்டவைகளைக்குறித்து அவன் மகிழ்ச்சியடைந்தானா? நாமறியோம். ஆனால் எஸ்தருடைய சுக செய்தியையும், அவளுக்கு, நடக்குங்காரியத்தையும் அறிய மொர்தெகாய் நாடோறும் கன்னிமாடத்து முற்றத்துக்கு முன்பாக உலாவுவான் என்று வேதத்தில் வாசிக்கிறோம். அவள் அவனுக்கு ஓர் அன்பு மகளாகவிருந்ததாள், மிகக் கவனத்துடன் தொடர்ந்து அவளைக் கவனித்து வந்தான். கலா.4:4-7ல் கூறப்பட்டுள்ளபடி தேவனாகிய கர்த்தர், நாம் புத்திர சுவிகாரத்தையடையும்போது.... தேவனுடைய சுதந்தரவாளியாயிருக்கச் செய்வதுபோல்.... மொர்தெகாயும் எஸ்தருக்குச் செய்துவந்தான் எனலாம்.

வசனம் 2:12-13

ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதம் வெள்ளைப்போளத்தினாலும், ஸ்திரீகளுக்குரிய மற்றச் சுத்திகரிப்புகளினாலும் ஜோடிக்கப்படுகிற நாட்கள் நிறைவேறி, இவ்விதமாய் ஸ்திரீகளின் முறைமைப்படி பன்னிரண்டுமாதமாகச் செய்யப்பட்டுத் தீர்ந்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடத்தில் பிரவேசிக்க அவளவளுடைய முறை வருகிறபோது,

இப்படி ஜோடிக்கப்பட்ட பெண் ராஜாவினிடத்தில் பிரவேசிப்பாள். கன்னிமாடத்திலிருந்து தன்னோடேகூட ராஜ அரமனைக்குப்போக, அவள் தனக்குவேண்டுமென்று கேட்பவையெல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும்.

இராஜா, தெரிந்தெடுக்கப்பட்டுக் கன்னிமாடத்தில் வைக்கப்பட்டிருந்த பெண்களைக் காண, உடனே செல்லவில்லை. முதலில் அவர்களைச் சுத்திகரித்து, அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆறுமாதம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறுமாதம் சுகந்தவர்க்கங்களினாலும், ஸ்திரீகளுக்குரிய சுத்திகரிப்புகளினாலும் ஒவ்வொரு பெண்ணும் சுத்திகரிக்கப்பட்டாள். அகாஸ்வேரு இராஜாவினால் பார்க்கப்படுமுன் ஓராண்டுகாலம் கடக்கவேண்டியதாயிருந்தது. ஆனால் இராஜா எவ்வாறு தன்னைச் சுத்திகரித்துக்கொண்டான் என்பதைப்பற்றி ஏதும் கூறப்படவில்லை.

வசனம் 2:14

சாயங்காலத்திலே அவள் உள்ளே பிரவேசித்து, காலமே, அபிமான ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய சாஸ்காசுடைய இரண்டாம் மாடத்துக்குத் திரும்பிவருவாள். ராஜா தன்னை விரும்பிப் பேர்சொல்லி அழைப்பித்தாலொழிய அவள் ஒருபோதும் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கக்கூடாது.

இராஜாவினால் பார்க்கப்படவேண்டிய அவளவளுடைய முறைவருகிறபோது, தன்னோடேகூட இராஜ அரண்மனைக்குப்போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவைகளையெல்லாம் அவளுக்குக் கொடுக்கப்பட்டன. சாயங்காலத்திலே அவள் உள்ளே பிரவேசித்து, காலமே, அபிமான ஸ்திரீகளைக் காவல் பண்ணகிற இராஜாவின் பிரதானியாகிய சாஸ்காசுடைய விசாரிப்புக்ளுள்ளிருந்த இரண்டாம் மாடத்திற்கு அவள் வந்துவிட வேண்டும். இராஜா தன்னை விரும்பிப் பேர் சொல்லி அழைப்பித்தாலொழிய, அவள் மறுபடியும் ஒருபோதும் இராஜாவினிடத்தில் பிரவேசிக்கக்கூடாது. இது ஒரு சிறந்த அமைப்பு முறை என்று கூறப்பட இயலாது. இராஜஸ்திரீயாக ஏற்றுக்கொள்ளப்படாத அழகிகள் தங்களின் வாழ்நாளெல்லாம் ஒரு கன்னிமாடத்திலே தங்கியிருக்க வேண்டியதுதான். எஸ்தரை அன்பு மகளாய் எண்ணியிருந்த மொர்தெகாயும் இந்த நிலையில் எஸ்தரை எண்ணிப்பார்க்க மிகவும் கவலைகொண்டிருப்பானன்றோ?

வசனம் 2:15

மொர்தெகாய் தனக்குக் குமாரத்தியாய் ஏற்றுக்கொண்டவளும், அவன் சிறியதகப்பனாகிய அபியாயேலின் குமாரத்தியுமான எஸ்தர் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கிறதற்கு முறைவந்தபோது, அவள் ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாய் நியமித்த காரியமேயல்லாமல் வேறொன்றும் கேட்கவில்லை. எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லார் கண்களிலும் தயை கிடைத்தது.

எஸ்தர் இராஜாவைக் காணச் செல்லவேண்டிய முறை வந்தது. இந்த இளம் அழகியைப்பற்றிய வேறோரு செய்தியை நாம் இங்கு வாசிக்கிறோம். அவள், பிரதானியாகிய யேகாயின் நல்லாலோசனையை ஏற்றுச் செல்கிறாள். அவன் சொன்ன காரியமேயல்லாமல் வேறொன்றையும் அவள் கேட்கவில்லை. இதுபோன்று நாம் யாவரும் செய்வது மிகவும் கடினம். ஒரு காரியத்தைச் செய்யும்போது, அதற்குரியதான மிகவும் சிறந்தவழி எது என்று நமக்குத் தெரியும் என நாம் எண்ணுகிறோம். ஆனால் இங்கே ஓரிளம் பெண்ணை நாம் பார்க்கிறோம். அவளுடைய சொந்த அழகின் காரணமாகத்தான் அவள் தேர்ந்தெடுக்கப்பட்டாள். ஆனால், எதை அணிந்து செல்லவேண்டும், எதை உடன்கொண்டு சென்று இராஜாவைக் காணல் நலம், என்பவைகளுக்காக மற்றொருவர் கூறும் ஆலோசனையைப் பொறுமையுடன் கேட்டு அதற்கு உடன்படும் பண்பினை அவளிடம் காண்கிறோம். யேகாய் நியமித்த காரியமேயல்லாமல் வேறொன்றும் அவள் கேட்கவில்லை என்று வேதம் கூறுகிறது. அதன் விளைவாக, எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லார் கண்களிலும் தயை கிடைத்தது எனக்காண்கிறோம். அது அவளுடைய சரீர அழகு மட்டுமல்ல- அவளுடைய அகத்தின் அழுகும்கூட.

வசனம் 2:16-17

அப்படியே எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருஷம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே ராஜாவினிடத்தில் அரமனைக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டாள்.

ராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தர்மேல் அன்புவைத்தான். சகல கன்னிகைகளைப்பார்க்கிலும் அவளுக்கு அவன் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது. ஆகையால் அவன் ராஜகிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரியாக்கினாள்.

இராஜா சம்மதிக்கிறான், ஏனென்றால் சகல ஸ்திரீகளைப் பார்க்கிலும் எஸ்தர்மேல் அன்புவைத்தான். சகல கன்னிகைகளைப் பார்க்கிலும் அவளுக்கு அவன் சமூகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது என்று இந்த வசனம் கூறுகிறது. எஸ்தரின் புத்தகத்தில் இந்த வசனத்தில்தான் அன்பு, பட்சம் என்று வாசிக்கிறோம். இதைவிட அதிக முக்கியமாக அவன் இராஜகிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரீயாக்கினான். ஆம், இங்கே அனாதையான ஒரு யூத பெண்பிள்ளை, வேறு ஒரு நாட்டில், தத்துப் பிள்ளையாக ஒரு சகோதரனால் வளர்க்கப்பட்ட எஸ்தர், அதே நாட்டில் பட்டத்து இராணியாக அமர்த்தப்படுகிறாள் என்றால் இவை அனைத்திலும் கர்த்தருடைய கரம் வலுவாக இருப்பதை யாரால் மறுக்கமுடியும்?

வசனம் 2:18

அப்பொழுது ராஜா தன்னுடைய எல்லாப் பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும், எஸ்தரினிமித்தம் ஒரு பெரிய விருந்துசெய்து, நாடுகளுக்குச் சலக்கரணை உண்டாக்கி, ராஜஸ்திதிக்குத்தக்க வெகுமானங்களைக் கொடுத்தான்.

அப்போது இராஜா, இராஜஸ்திரீயாகிய எஸ்தரினிமித்தம் பெரிய விருந்து ஒன்றை நடத்தினான். அந்த விருந்திற்கு தன்னுடைய எல்லாப் பிரபுக்களையும், ஊழியக்காரரையும் அழைப்பித்திருந்தான். எஸ்தரின் விருந்து என்று அழைக்கப்பட்ட அந்த விருந்து நாளை அரசு விடுமுறை நாளாக அறிவித்து, இராஜஸ்திதிக்குத் தக்க வெகுமானங்களைக் கொடுத்தான். எஸ்தரைக் குறித்து மிகவும் மகிழ்ந்திருந்தான் இராஜா.

வசனம் 2:19-20

இரண்டாந்தரம் கன்னிகைள் சேர்க்கப்படும்போது, மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருந்தான்.

எஸ்தர் மொர்தெகாய் தனக்குக் கற்பித்திருந்தபடி, தன் பூர்வோத்திரத்தையும் தன் குலத்தையும் தெரிவிக்காதிருந்தாள். எஸ்தர் மொர்தெகாய் இடத்திலே வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்துவந்தாள்.

எஸ்தர், மொர்தெகாய் தனக்குக் கற்பித்திருந்தபடி, தான் யூதகுலத்தைச் சேர்ந்தவள் என்பதை யாருக்கும் அறிவிக்காதிருந்தாள். எஸ்தர் மொர்தெகாயினிடத்தில் வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோல், இப்போதும் வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்துவந்தாள் என்று வேதம் கூறுகிறது. எஸ்தரின் உயர்ந்த பண்புகளில் ஒன்றை நாம் இங்கு காணமுடிகிறது. அவள் கீழ்ப்படிதலுள்ளவளாக இருந்தாள். இப்போது அவள் ராஜஸ்திரீ. அவள் தனது வளர்ப்புத்தந்தையின் கட்டளைகளையும், அவனுடன் தனது வீட்டில் இருக்கும் போது அவனுக்கக் கீழ்ப்படிந்து இருந்ததுபோலவே இப்போதும் கீழ்ப்படிந்து இருந்தாள். அவளுடைய நன்மதிப்பையும் அன்பையும் மொர்தெகாய் பெற்றிருந்தான். அதை அவள் விளங்கப்பண்ணவும் விரும்பினாள். இங்கே தேவனுடைய பிள்ளைகளாகிய நமது பெற்றோரும் உற்றோரும் நம்மை அன்பாக காத்து வளர்த்ததை எண்ணி நாம் அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமையைப்பற்றி உணர்ந்துகொள்ள முடிகிறதல்லவா?

வசனம் 2:21-23

அந்நாட்களில் மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும் தேரேசும் வர்மம் வைத்து, ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோட வகைதேடினார்கள்.

இந்தக் காரியம் மொர்தெகாய்க்குத் தெரியவந்ததினால், அவன் அதை ராஜாத்தியாகிய எஸ்தருக்கு அறிவித்தான். எஸ்தர் மொர்தெகாயின் பேரால் அதை ராஜாவுக்குச் சொன்னாள்.

அந்தக் காரியம் விசாரிக்கப்படுகிறபோது, அது மெய்யென்று காணப்பட்டது. ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள். இது ராஜ சமுகத்தில் நாளாகமப்புஸ்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது.

அந்நாட்களில் மொர்தெகாய் ராஜாவின் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது... என்று கூறப்பட்டுள்ள வார்த்தைகள், அவனுக்கு ஒரு பதவி உயர்வு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. வாசலில் உட்காருதல் என்பது அந்த இடம் மதிப்பிற்கும் கௌரவத்திற்கும் உரிய இடம் என்பதை விளக்கும் வார்த்தைகளாகும். நகரங்களின் வாசலில் உட்கார்ந்திருந்த பல பெயர்களை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். லோத்து (ஆதி.19:1) போவாஸ் (ரூத் 4:1) அடுத்து இராஜாவின் வாசல் காக்கிற இருவரான, பிக்தானும், தேரேசுமான ஒரு பிரதானிகளான வாசற்காவலாளர் (ரூத் 6:2) களைப் பற்றி நாம் வாசிக்கிறோம். அவர்கள் ஏதோ சில காரணங்களுக்காக அகாஸ்வேரு இராஜாவின்மேல் மிகக் கோபமடைந்து அவனைக் கொலைசெய்ய ஒரு சதித்திட்டம் தீட்டினார்கள். இது மெல்ல மொர்தெகாயின் காதுக்கெட்டியது. இராஜா கொலை செய்யப்பட இருப்பது மொர்தெகாய்க்குத் தெரிந்தவுடன், அவன் அதை எஸ்தருக்கு அறிவித்தான். எஸ்தர் அந்தச் செய்தியை மொர்தெகாயின் பேரால் இராஜாவுக்குச் சொன்னான்

இராஜா உடனே இதுபற்றி விசாரிக்க கட்டளையிட்டான். அது விசாரிக்கப்பட்டு உண்மைதான் என்று கண்டுபிடிக்கப்பட்டது. சததித்திட்டம்போட்ட இருவரும் தூக்கிலே போடப்பட்டனர். இந்த வர்த்தமானங்கள் இராஜசமுகத்திலே அவன் நாளாகப் புத்தகத்தில் எழுதி பதிவுசெய்து வைக்கப்பட்டது. ஆனால் மொர்தெகாய்க்கு எந்தவிதமான கௌரவமும் அளிக்கப்பட்டதாக வேதத்தில் இல்லை. அல்லது மொர்தெகாய் இதைப்பற்றி என்ன எண்ணினான் என்றும், வேதத்தில் கூறப்படவில்லை. இது ஒரு ருசிகரமான சம்பவம் மட்டுமே. இதற்கு அவ்வளவு முக்கியத்துவம் ஏதுமில்லை என நினைக்கத்தோன்றும். அப்படியாயின் அது ஏன் வேதத்தில் குறிக்கப்படவேண்டும்.? ஆம், அதற்கு ஒரு நல்ல காரணமுண்டு. அது தேவனுடைய திட்டத்தின் அடுத்தபடியாகும்.

By
Tamil christian assembley

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.