எஸ்தர் 1 விளக்கவுரை

எஸ்தர் 1 விளக்கவுரை

இராஜாவின் விருந்து
வசனம்: 1:1-4

1. இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களில் சம்பவித்ததாவது:


2. ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரமனையிலிருக்கிற தன் ராஜ்யத்தின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்.

3. அவன் தன் ராஜ்யபாரத்தின் மூன்றாம் வருஷத்திலே தன்னுடைய பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும் விருந்துபண்ணினான். அப்பொழுது பெர்சியா மேதியா தேசங்களிலுள்ள மகத்தானவர்களும், நாடுகளின் அதிபதிகளும், பிரபுக்களும், அவன் சமுகத்தில் வந்திருந்தார்கள்.

4. அவன் தன் ராஜ்யத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன் மகத்துவத்தின் சிறந்த பிரதாபத்தையும் அநேக நாளாகிய நூற்றெண்பதுநாளளவும் விளங்கச்செய்துகொண்டிருந்தான்.

சத்திய வேதத்திலுள்ள எஸ்தரின் அழகான சரித்திரத்தை எழுதியவர் யார் என்பது தெரியவில்லை. பரிசுத்தவேதாகமத்திலுள்ள மற்ற ஆகமங்களுக்கும் எஸ்தரின் ஆகமத்துக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அதாவது தேவன் அல்லது கர்த்தர் என்ற வார்த்தை இந்தப் புத்தகத்தில் எங்கும் கூறப்படவில்லை. அப்படியானால் இப்புத்தகம் ஏன் வேதாகமத்தில் இடம்பெற்றுள்ளது? இஸ்ரவேல் நாட்டின் வரலாற்றில், ஒரு முக்கியமான காலகட்டத்தில் - ஒரு பகையரசன் இஸ்ரவேலர் என்ற யூதரை முற்றும் அழித்து ஒழிக்கமுற்பட்ட காலத்தில் - எஸ்தரின் சரித்திரம் அடங்கிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. ஆனால் தேவன் தெரிந்துகொண்ட ஒரு மனிதனின்மூலமும் அவனது இனத்தாளாகிய அழகிய எஸ்தர்மூலமும் கிரியைசெய்து, தமது ஜனத்தை இரட்சித்தார். அவ்வரலாறே பின்வரும் எஸ்தரின் வியத்தகு சரித்திரமாகும்.

பாபிலோன் மன்னர் நேபுகாத்நேச்சாரினால் யூதர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்களில் மிகச்சிறந்த பலர் சிறைப்படுத்திக் கொண்டுபோகப்பட்டனர். தேவன் இதை அனுமதித்தார் (2.இரா.24:14). நேபுகாத்நேச்சார் இறந்துபோனபின் அவனது பேரனான பெல்ஷாத்சார் தோற்கடிக்கப்பட்டான் (தானி.5:30,31). மேதியர்களுக்கும் பெர்சியர்களுக்கும் இராஜாவாக இருந்த அகாஸ்வேரு என்பவன் இந்துதேசம் முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்திஏழு நாடுகளை ஆண்டுவந்த காலத்தில் எஸ்தரின் வரலாறு ஆரம்பமாகிறது. அகாஸ்வேரு இராஜாவின்நாடு கல்தேயரும் மேதியரும், பெர்சியரும், யூதரும் மற்றும் அவனால் ஜெயிக்கப்பட்ட வேற்று இனத்தவர் பலரும் அடங்கிய நாடாக இருந்தது.

அகஸ்வேரு இராஜா தனது மிகப்பரந்த நாட்டைப்பற்றியும் மகிமையான ஐஸ்வரியத்தைப் பற்றியும் அதிக பெருமை கொண்டு அவனுடைய இராச்சியத்திலிருந்த பல நாடுகளைச் சேர்ந்த மகத்தானவர்களுக்கும், அதிபதிகளுக்கும் இளவரசர்களுக்கும் இவற்றை விளங்கச்செய்யவிரும்பினான். அதுமட்டுமின்றி, அவன் மற்றுமொரு போருக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்ததை அவனுடைய இராஜ்யத்தைச் சேர்ந்த அதிபதிகளுக்கும் இளவரசர்களுக்கும் அறிவிக்க விரும்பினான். அவன் தன் இராஜ்யத்தின் மகிமையான ஐஸ்வரியத்தையும் தன் மகத்துவத்தின் சிறந்த பிரஸ்தாபத்தையும் காண்பிக்கும்பொருட்டு, அவர்களனைவரையும் தான் செய்வித்த அரண்மனை விருந்துக்கு அழைப்பித்திருந்தான். அகாஸ்வேரு இராஜா ஒரு பெரும் பெருமைக்காரன். அவன் தற்பெருமையில் .... இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால் .......நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா....? என்று கூறிய நேபுகாத்நேச்சார் இராஜாவைப் போன்றவன் (தானி.4:30).

அகாஸ்வேரு தன் மகிமைப் பிரஸ்தாபத்தை நூற்றெண்பது நாளளவும்- ஆறுமாதகாலமாக விளங்கச்செய்துகொண்டிருந்தான். பல நாடுகளிலிருந்து வரவேண்டிய தூரம் மிக அதிகமாக இருந்தாலும் பயணம் அக்காலத்தில் மிகக் கடினமாக இருந்தபோதிலும், பலரும் கூட்டங் கூட்டமாக வந்தும் சென்றதுமாக இருந்தனர் - நிரந்தரமாக விழாவில் தங்கியிருந்தவர் மிகச்சிலரே.

வசனம் 1:5

5. அந்த நாட்கள் முடிந்தபோது, ராஜா சூசான் அரமனையில் வந்திருந்த பெரியோர்முதல் சிறயோர்மட்டுமுள்ள சமஸ்த ஜனங்களுக்கும் ராஜ அரமனையைச்சேர்ந்த சிங்காரத்தோட்டத்திலுள்ள மண்டபத்தில் ஏழுநாள் விருந்துசெய்வித்தான்.

ஆறுமாதங்களாக ஓய்வின்றி நடந்த விழாவின் முடிவில் இராஜா, அயராது செய்த விருந்தோம்பல்களுக்கு அணி செய்யுமாறு, ஓர் ஏழுநாள் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அதற்கு அரண்மனையில் இருந்த பெரியோர் முதல் சிறியோர் வரையிலானவர்களை அழைப்பித்தான். இத்தகையோர் உபசரணைகளுக்குப் பெரும்பணம் செலவாகியிருக்கக் கூடுமன்றோ!

வசனம் 1:6-7

6. அங்கே வெண்கலத் தூண்களின்மேலுள்ள வெள்ளி வளையங்களில் மெல்லிய நூலும் சிவப்புநூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் விதானித்திருந்தது. சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின்மேல் பொற்சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தது.

7. பொன்னால் செய்யப்பட்ட நானாவித பாத்திரங்களில் பானம் கொடுக்கப்பட்டது. முதல்தரமான திராட்சரசம் ராஜஸ்திதிக்கு ஏற்கப் பரிபூரணமாய்ப் பரிமாறப்பட்டது.

இந்த வசனங்களில் இராஜாவின் அரண்மனையும் அரண்மனையைச் சேர்ந்த சிங்காரத்தோட்டத்திலுள்ள மண்டபமும் வருணிக்கப்பட்டுள்ள விதங்களிலிருந்து இராஜாவின் செல்வநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. இராஜா ஏற்பாடு செய்திருந்த விருந்து, இராஜாவின் அரண்மனையைச் சேர்ந்த சிங்காரத்தோட்டத்திலிருந்த ஓர் அழகிய மண்டபத்தில்தான் நடந்தது.

அந்த மண்டபம் மிகவும் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கே வெண்கலத்தூண்களின்மேலுள்ள வெள்ளிவளையங்களில் மெல்லிய நூலும் சிவப்புநூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இள நீலமுமாகிய தொங்குதிரைகள் விதானித்திருந்தன. விருந்தினர் அமர்வதற்காக வெள்ளையும் கறுப்புமான சலவைக்கற்களால் அமைக்கப்பட்டிருந்த தளவரிசைகளின்மேல் பொற்சரிகையும், வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் விரிக்கப்பட்டிருந்தன. இராஜஸ்திரிக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருந்த விருந்து வரிசையிலே பொன்னினாற் செய்யப்பட்ட நானாவித பாத்திரங்களிலே முதற் தரமான திராட்சரசம் பரிமாறப்பட்டது. அந்தப் பாத்திரங்கள் மற்றவைகளினின்று வேறுபட்டு அழகிய வேலைப்பாடுகளுடன் கூடினவைகளாக இருந்தன. அவைகளிலே பரிபூரணமான அளவுக்கு திராட்சரசம் பரிமாறப்பட்டது.

வசனம் 1:8

8. அவரவருடைய மனதின்படியே செய்யலாம் என்று ராஜா தன் அரமனையின் பெரிய மனுஷருக்கெல்லாம் கட்டளையிட்டிருந்தபடியினால், முறைப்படி பானம்பண்ணினார்கள். ஓருவனும் பலவந்தம் பண்ணவில்லை.

அரண்மனையின் விருந்துமுறைச் சட்டங்களுக்கேற்ப யாரொருவனும் தான் விரும்பியபடி குடிக்கலாம் அல்லது குடிக்காமல் இருக்கலாம். இராஜா எல்லா வேலைக்காரரிடத்திலும் இந்த விருந்துமுறைச்சட்டத்தை நினைவுபடுத்தி ஒருவனும் பலவந்தம்பண்ணாமல் அவரவர் மனதின்படியே பானம்பண்ண அனுமதிக்கப்பட்டனர். இராஜாவும் விருந்தில் பங்குகொண்டு திராட்சரசம் குடித்துக்கொண்டிருந்தான். விருந்தினரும் அவனுடன் குடித்துக் கொண்டாடினர்.

வசனம் 1:9

9. ராஜஸ்திரீயாகிய வஸ்தியும் ராஜாவாகிய அகாஸ்வேருவின் அரமனையிலே ஸ்திரீகளுக்கு ஒரு விருந்துசெய்தாள்.

இராஜாவின் அரண்மனையிலே விருந்தில் கலந்துகொண்டிருந்த அனைவரும் ஆண்களே என்று தோன்றுகிறது. ஏனென்றால் பெண்களுக்கு, இராஜாவின் அரண்மனையிலே, வேறு ஒரு பகுதியில், அதே நேரத்தில் இராஜஸ்திரியாகிய வஸ்தி வேறு ஒரு விருந்து கொடுத்துக்கொண்டிருந்தாள். வஸ்தி என்ற வார்த்தைக்கு அன்புள்ளவள் என்பது பொருள். அப்பெயர், இராஜாவுக்கு அவள் மிகவும் பிரியமான மனைவியாக இருந்தாள் என்பதனை விளக்குகிறது.

வசனம் 1:10

10. ஏழாம் நாளிலே ராஜா திராட்சரசத்தினால் களிப்பாயிருக்கும்போது, மகா ரூபவதியாயிருந்த ராஜஸ்திரீயாகிய வஸ்தியின் சௌந்தரியத்தை ஜனங்களுக்கும் பிரபுக்களுக்கும் காண்பிக்கும்படி, ராஜகிரீடம் தரிக்கப்பட்டவர்களாக அழைத்துவரவேண்டுமென்று,

அன்று அந்த விருந்தின் கடைசித்தினம். இராஜா திராட்சை மதுவை அளவுக்கு அதிகமாகக் குடித்திருந்தான். மிகவும் மகிழ்ந்து போய் இருந்தான். அப்போது அவன் செய்த ஒரு காரியம், ஒருவேளை குடியாமல் இருந்திருந்தால் செய்திருக்கமாட்டான். அந்த நாட்கள் முடியுமுன்பு, கடைசியாக ஒரு நல்ல காட்சி,- கண்ணுக்கு விருந்து,- ஏற்படுத்த விரும்பினான் போலும்! தனது செல்வத்தையும் அரண்மனை அழகுகளையும் அதிகாரத்தின் ஐஸ்வரியங்களையும் காண்பித்த அவன் அவைகளுக்குச் சிகரமாக எதைச் செய்யமுடியும் என எண்ணினான். அவனுக்கு ஒரு எண்ணம் உதித்தது. தனது அழகிய இராணியை,- மனைவியாகிய வஸ்தியை,- முன்கொண்டு வந்து நிறுத்திக்காட்ட விரும்பினான். அப்போது இராஜாவுக்கு அனைத்துச் செல்வமும் இருந்ததை அவனது அதிபதிகள் கண்டு மகிழ்வர் என்று அவன் எண்ணினான் போலும்!

உடனே அவன் ஏழு பிரதானிகளை அழைத்து, இராஜ
ஸ்திரியாகிய வஸ்தியை, இராஜஅலங்காரங்களுடன், இராஜகிரீடம் தரிக்கப்பட்டவளாக இராஜாவுக்கு முன்பாக அழைத்துவரவேண்டுமென்று, அவர்களுக்குக் கட்டளையிட்டான். உடனே இராஜாவின் கட்டளைப்படி, இராஜ ஸ்திரியான வஸ்தியை அழைத்துவர அந்த ஏழு பிரதானிகளும் புறப்பட்டுச் சென்றனர்.


வசனம் 1:11-12

11. ராஜாவாகிய அகாஸ்வேருவின் சமுகத்தில் சேவிக்கிற மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் என்னும் ஏழு பிரதானிகளுக்கும் கட்டளையிட்டான்.

12. ஆனாலும் பிரதானிகள் மூலமாய் ராஜா சொல்லியனுப்பின கட்டளைக்கு ராஜஸ்திரீயாகிய வஸ்தி வரமாட்டேன் என்றாள். அப்பொழுது ராஜா கடுங்கோபமடைந்து, தனக்குள்ளே மூர்க்கவெறிகொண்டான்.

இராஜஸ்திரியான வஸ்தியின் எண்ணமோ வேறுபட்டிருந்தது. அவள் அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டாள். ஆனால் அது இராஜாவினிடத்தில் பிறந்த அரச கட்டளையாயிற்றே! மிகவும் மோசமான ஒரு கட்டளை. அவள் அந்த ஏழு பிரதானிகளையும் இராஜாவாகிய அகாஸ்வேருவினிடத்துக்குத் திரும்ப அனுப்பிவிட்டாள். அவள் அவர்களுடன் செல்லவில்லை.

அவள் ஏன் போகவில்லை? வஸ்தியின் நிலையை எண்ணிப் பார்ப்போமாக. பெண்களுக்காக, அரண்மனையில் மற்றொரு பகுதியில், அவள் ஒரு விருந்துவிழாவைத் தலைமை நடத்திக்கொண்டிருந்தாள். அந்த நிலையில் திடீரென்று அரசகட்டளை பிறக்கிறது. அவளுக்கு அழைப்பு வருகிறது. இராஜ கிரீடம் தரிக்கப்பட்டவளாக, ஆண்களின் விருந்து மண்டபத்துக்கு வந்து, அவளுடைய அழகை, அந்த இராஜாவின் விருந்தினர்களுக்குக் காண்பிக்க வேண்டுமாம். ஆனால் இராஜா நடத்திக்கொண்டிருந்த அந்த விருந்துவிழா ஆண்களுக்குமட்டுமே. அந்த நாளில் அவர்களுடைய மரியாதைப் பழக்கத்தின்படி ஒரு ஸ்திரி முக்காடிட்டுக் கொள்ளாமல் ஆண்களின் மத்தியில் வந்து நிற்பது கிடையாது. மேலும் அந்த விருந்து விழாவில் ஆண்கள் ஏழு நாட்களாக குடித்து வெறித்துக்கொண்டிருந்தனர். ஒரு ஸ்திரி எவ்வாறு அங்கே செல்லமுடியும்? அவள் போகமறுத்துவிட்டாள்.

திருப்பி அனுப்பப்பட்ட ஏழுபேரும் இராஜசமுகத்தில் திரும்பி வந்தனர், கசப்பான அந்தச் செய்தியுடன். மேன்மைதங்கிய இராஜாவே! இராஜ ஸ்திரியான வஸ்தி வரமறுத்துவிட்டார்கள். .... என்ன? என்னுடைய கட்டளையைப் புறக்கணிக்க அவளுக்கு என்ன துணிச்சல்! இராஜா அகாஸ்வேரு கடுங்கோபத்துடன் மூர்க்கவெறி கொண்டான். ஏன்? இந்த இராஜா- அகாஸ்வேரு இராஜா- மேதியர், பெர்சியர் முதலான 127 நாடுகளுக்கு இராஜா. செல்வமும் அதிகாரமும் நிறைந்த அவன், விருந்து மண்டபத்திலே எல்லா விருந்தினரான பிரதானிகளின் முன்னிலையிலே இழிவுபடுத்தப்பட்டுவிட்டான். அப்பொழுது இராஜா கடும் கோபமடைந்து தனக்குள்ளே மூர்க்கவெறி கொண்டான் என்று வேதம் கூறுகிறது. வஸ்தியின் வரமுடியாமை ஒரு நல்ல காரணத்தின் அடிப்படையிலானதே என அவன் சிந்திக்கவில்லை. அவனுடைய கௌரவம் பாதிக்கப்பட்டுவிட்டதே என்பது அவனால் பொறுத்துக்கொள்ளமுடியாததாயிருந்தது.

வசனம் 1:13-15

13. அச்சயமத்தில் ராஜசமுகத்தைத் தரிசிக்கிறவர்களும், ராஜ்யத்தின் முதல்ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான கர்ஷேனா, அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ் மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர் மேதியருடைய எழு பிரபுக்களும் அவன் சமீபத்தில் இருந்தார்கள்.

14. ராஜா நியாயப்பிரமாணத்தையும் ராஜநீதியையும் அறிந்தவர்களிடத்தில் பேசுவது தனக்கு வழக்கமானபடியால், காலாகால வர்த்தமானங்களை அறிந்த பண்டிதர்களை நோக்கி:

15. ராஜாவாகிய அகாஸ்வேரு பிரதானிகள் மூலமாய்ச் சொல்லியனுப்பின கட்டளையின்படி ராஜஸ்திரீயாகிய வஸ்தி செய்யாமற்போனதினிமித்தம், தேசச்சட்டத்தின்படி அவளுக்குச் செய்யவேண்டியது என்ன என்று கேட்டான்.

வஸ்தி தண்டிக்கப்படவேண்டுமென்றே அவன் எண்ணினான். அவனது கோபத்தில் அவன் தனித்துச் செயற்படவில்லை. அவனுடைய ஆலோசனைக்காக, அவனுடைய சமுகத்தில் உட்காருகிற ஏழு பிரபுக்களை அவன் அழைத்துப் பேசுகிறான். இந்த விஷயத்தில், தான் கோபமடைந்தபோது, இதற்குமுன் கோபமடைந்து மூர்க்கத்தனமாக நடந்துகொண்ட நேபுகாத்நேச்சார் இராஜாவைப்போல் ( தானி.3:19,20 ) அவன் நடந்துகொள்ளவில்லை. அவன் ஏழு பிரதானிகளை அழைப்பித்தான். அந்த ஏழுபேரும், நியாயப்பிரமாணத்தையும் இராஜநீதியையும், காலாகாலா வர்த்தமானங்களையும் அறிந்த பண்டிதர்களாயிருந்தார்கள். அவன் அவர்களை நோக்கி, இராஜாவின் கட்டளையின்படி இராஜஸ்திரியாகிய வஸ்தி செய்யாமற்போனதினிமித்தம் தேசச் சட்டப்படி அவளுக்குச் செய்யப்படவேண்டியது என்ன? என்று கேட்டான். அவன் சட்டத்தின்படி செய்ய விரும்பினான். ஆனால் வராமையின் காரணத்தை விளக்கும்படி வஸ்தியிடம் கேட்கவில்லை. இது குறித்து யாரும், இராஜாவாகிய அகாஸ்வேரு செய்வது சரியல்ல என்று கூறத் துணிவார்களோ? ஒருபோதுமில்லை.

வசனம் 1:16-18

16. அப்பொழுது மெமுகான் ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்னே பிரதியுத்தரமாக: ராஜஸ்திரீயாகிய வஸ்தி ராஜாவுக்கு மாத்திரமல்ல, ராஜாவாகிய அகாஸ்வேருவினுடைய சகல நாடுகளிலுமுள்ள சகல பிரபுக்களுக்கும் சகல ஜனங்களுக்குங்கூட அநியாயஞ்செய்தாள்.

17. ராஜாவாகிய அகாஸ்வேரு ராஜஸ்திரீயாகிய வஸ்தியைத் தமக்கு முன்பாக அழைத்துவரச் சொன்னபோது, அவள் வரமாட்டோம் என்கிற செய்தி எல்லா ஸ்திரீகளுக்கும் பிரசித்தமானால், அவர்களும் தங்கள் புருஷரைத் தங்கள் பார்வையில் அற்பமாய் எண்ணுவார்கள்.

18. இன்றையதினமே பெர்சியாவிலும் மேதியாவிலுமுள்ள பிரபுக்களின் ஸ்திரீகள் ராஜஸ்திரீயின் செய்தியைக் கேட்கும்போது, ராஜாவின் பிரபுக்களுக்கெல்லாம் அப்படியே சொல்லுவார்கள். மிகுந்த அசட்டையும் எரிச்சலும் விளையும்.

அப்போது, அந்த ஏழு பிரதானிகளில் ஒருவனாகிய மெமுகான் எனப்பட்டவன் இராஜாவுக்கு மாறுத்தரமாக, இராஜஸ்திரியாகிய வஸ்தி, இராஜாவுக்கு மாத்திரமல்ல, இராஜாவாகிய அகாஸ்வேருவினுடைய சகல நாடுகளிலுமுள்ள சகல பிரபுக்களுக்கும் சகல ஜனங்களுக்கும் கூட அநியாயம் செய்தாள் என்றான். அவன் அவ்வாறு நினைக்கக் காரணம் என்ன? அடுத்த சில வாக்கியங்களிலிருந்து அதன் காரணம் நமக்குப் புரிகிறது. இராஜாவாகிய அகாஸ்வேரு இராஜஸ்திரியாகிய வஸ்தியை தமக்கு முன்பாக அழைத்துவரச் சொன்னபோது அவள் வரமாட்டேன் என்கின்ற செய்தி எல்லா ஸ்திரிகளுக்கும் பிரசித்தமானால் அவர்களும் தங்கள் புருஷரைத் தங்கள் பார்வையில் அற்பமாய் எண்ணுவார்கள்..... அதனால் மிகுந்த அசட்டையும் எரிச்சலும் விளையும்..... என்று அவன் மேலும் கூறினான். அதுதான் காரணம். வஸ்தி செய்தது சரிதானே என்று எண்ணுவார் யாருமேயில்லை. அல்லது ஏன் வரவில்லை என்ற காரணத்தைக் கூற அவளுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கவும் யாரும் எண்ணிப்பார்க்கவில்லை. அது நாடெங்கிலும் உள்ளவர்களுக்கு, ஆண்களுக்குத் தொல்லையுண்டாக்கும், எரிச்சலும் அசட்டையும் விளையும்- என்று அவர்கள் எண்ணினார்கள். விசாரணை முடிந்து விட்டது.


வசனம் 1:19

19. ராஜாவுக்குச் சம்மதியாயிருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக்கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைப் பார்க்கிலும் உத்தமியாகிய மற்றொரு ஸ்திரீக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை பிறந்தது, அது மீறப்படாதபடிக்கு, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசச் சட்டத்திலும் எழுதப்படவேண்டும்.

மெமுகான், வஸ்திக்கு வழங்கப்படவேண்டிய தண்டனை என்னவாயிருக்கலாம் என்பதனையும் கூறுகிறான். இராஜமேன்மையிலிருந்து அவள் நீக்கப்படவேண்டுமென்று இராஜகட்டளை பிறப்பிக்கலாமென்று அவன் கூறுகிறான். இராஜஸ்திரி பதவியிலிருந்தும் அவள் நீக்கப்படுதல் வேண்டும. அவள் இராஜாவின் மனைவி என்ற ஸ்தானத்திலிருந்தும் நீக்கப்பட்டு இராஜா வேறொரு ஸ்திரியை தெரிந்தெடுக்கலாம் என்றும் மெமுகான் கூறுகிறான். இது மிகவும் கடுமையான தண்டனை. வஸ்தி இராஜ சட்டத்தை மீறிவிட்டாள் என்று யாரும் கூறவில்லை. அவர்களின் மனதினிலே சுயநலமான சில எண்ணங்கள் இருந்தன.

மெமுகான் அந்தச் சுயநலத்தை வெளியிட்டுக் கூறுகிறான். இப்படி இராஜா தீர்த்தகாரியம் ... கேட்கப்படும்போது ... எல்லா ஸ்திரிகளும் தங்கள் புருஷரைக் கனம்பண்ணுவார்கள் என்று அவன் கூறுகிறான். ஆனால் ஒரு சட்டம் வெளியிடப்படுவதால் மட்டும், மனைவிமார்கள் உடனே தங்கள் கணவரைக் கனம்பண்ண ஆரம்பித்துவிடுவார்கள் என நினைப்பது சரியில்லை. எப்படியோ அது இராஜாவுக்கும் பிரதானிகளுக்கும் ஏற்றதாக இருந்ததுபோலும். இந்த வார்த்தை இராஜாவுக்கும் பிரதானிகளுக்கும் நலமாய்த் தோன்றினது என வேதம் கூறுகிறது. இராஜா அந்தக் கட்டளையை, அவ்வாறே எழுதி முத்திரையிட்டான். அது பின் அந்த நாட்டில் வழங்குகின்ற எல்லா அட்சரங்களிலும், பாஷைகளிலும் மொழிபெயர்த்து எழுதியனுப்பப்பட்டு அவனுடைய 127 நாடுகளுக்கும் பிரசித்தம்பண்ணப்பட்டது. வஸ்தியை யாரும் விசாரித்துக் கேட்கவில்லை. அவள் பேச அவளுக்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. கட்டளை பிறப்பிக்கப்பட்டுவிட்டது. அது மீறப்படாதபடி சட்டத்தில் எழுதப்பட்டது (தானி.6:12,15). அதுதான் மேதியாவுக்கும்,பெர்சியாவுக்கும் உரிய தேசச்சட்டம். ஆனால் வஸ்தி ராஜப்பண்பு என்ற உயர்ந்த நிலையில் அமைதிகொண்டாள். அவள் தன் கணவனையும் அரசின் உயர்ந்த அந்தஸ்தையும் இழந்துவிட்டபோதிலும், அரசு கடத்தப்பட்டு வாழாவெட்டியாக்கிவிடப்பட்டபோதிலும் அமைதியையே அவள் மேற்கொண்டாள். அரசகட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டதனால் அவளுக்கு ஒரு பேரிழப்பு ஏற்பட்டது. ஆனால் அறிந்தும் அறியாமலும் ஒரு பெரிய நாட்டினைக் காக்கச் செயற்பட்டிருந்த தேவனுடைய திட்டமாகிய நிகழ்ச்சிகளின் சங்கிலித்தொடரில் அவள்தான் ஆரம்பநிலை. தேவன் தமது சித்தத்தைச் செயற்படுத்த, எதனையும், யாரையும், இராஜா, அல்லது இராஜ ஸ்திரி ஆகிய எவரையும் பயன்படுத்திக்கொள்ள வல்லவராயிருக்கிறார். நீதி.21:1 இல் உள்ளபடி இராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது. ஆனால் விருந்துச்சாலைக்குவர இராஜஸ்திரி மறுத்துவிடுவது, எந்தவிதத்தில் ஒரு பெரிய நாட்டைப் பாதுகாக்கும் திட்டத்தின் ஆரம்பமாக அமையக்கூடும்? மேலும் படிப்போமாக.....!

By
Tamil christian assembley

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.