யோவான் 19 விளக்கவுரை

யோவான் 19 விளக்கவுரை


ஈ) கிறிஸ்துவின் தெய்வீக சுபாவத்தால் பிலாத்துவிடம் ஏற்பட்ட பயம் (யோவான் 19:6-7)


யோவான் 19:8-11
8 பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாய்ப் பயந்து,9 மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.10 அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.11 இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.

இயேசுவின் ஆள்தன்மையைக் குறித்து நிச்சயமற்றவனாக பிலாத்து இருந்தான். அவரது நேர்மை, தூய்மை, மற்றும் அன்பு ஆளுநரிடம் மாற்றத்தை ஏற்படுத்தியது. இயேசு ராஜா என்று போற்றப்பட வேண்டியவர் மட்டுமல்ல, அவர் இறைவனின் குமாரன் என பிலாத்து அறிந்தான். தெய்வங்கள் மனு உருவம் எடுத்து மக்கள் மத்தியில் வரும் என்று ரோமர்கள் மற்றும் கிரேக்கர்கள் நம்பியிருந்தார்கள். அவன் கருத்துடன் சிந்தித்தான், “அப்படிப்பட்ட மனு உருவில் வெளிப்பட்ட இறைவனா இவர்?” ஆகவே அவன் கேட்டான். “நீ எங்கேயிருந்து வருகிறாய்?”.
தண்டனையில் இருந்து தப்பிக்கும் தருணமாக இச் சந்தர்ப்பத்தை இயேசு பயன்படுத்தவில்லை. மாறாக அவர் அமைதியுடன் காணப்பட்டார். இந்த அமைதி ஏதோ ஒன்றை உணர்த்தியது. தர்க்க சாஸ்திரங்கள், வெற்று ஆர்வங்களின் கேள்விகளுக்கு இறைவன் பதில் அளிக்கிறதில்லை. ஆனால் அவரில் நம்பிக்கை வைக்கும் விசுவாசிக்கு அவர் தன்னை வெளிப்படுத்துகிறார். அவரைக் குறித்த கிரேக்க, ரோம அனுமானங்களுக்கு அப்பாற்பட்டவராக அவர் காணப்பட்டார். அவரைப் போல ஒருவரும் இல்லை. இந்த அமைதியின் தருணத்தில் பிலாத்து கோபத்துடன் கேட்டான், “நீ என்னுடன் பேசுகிறது இல்லையா? உன்னைக் கொல்லவும், விடுவிக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு. நீ என்னுடைய அதிகாரத்தில் இருக்கிறாய். உனது எதிரிகள் உன்னைச் சிலுவையிலறைய கூச்சலிடுகிறார்கள். நான் ஒருவன் மாத்திரமே உன்னைக் காப்பற்ற முடியும், அல்லது உன்னை சிலுவையில் தொங்க வைக்க முடியும்.”
இயேசு இவ்விதம் பதிலளித்திருப்பார். “உண்மைதான் நீர் அதிகாரம் உடையவர், என் பிதா உமக்கு அந்த அதிகாரத்தை தந்துள்ளார். உன்னைப் பொறுத்தமட்டில் நீ முக்கியமற்றவன். நீதியற்ற தீர்ப்பின் மூலம் உனது கையாலாகாத தன்மை விரைவில் வெளிப்படும். பரலோகத்தில் இருக்கும் என் பிதா சர்வ வல்லமை உள்ளவர். நானும் அப்படித் தான்: அவருடைய அனுமதி இல்லாமல் இந்த பூமியில் எந்த அதிகாரமும் இல்லை. இறைவனின் அனுமதியினால் வல்லமை பெற்றவன் தான் இந்த பிலாத்து. இப்போது அதன் விளைவாக, பிலாத்து மூலம் அழிவு ஏற்பட்டது. இறைவன் வரலாற்றை கட்டுப்படுத்துகிறார். மக்கள் தங்கள் செயல்களுக்கான பொறுப்பில் ஒரு பங்கை நிறைவேற்ற பொறுப்புள்ளவர்கள் ஆவார்கள்.
இயேசு பிலாத்துவிடம் கூறினார் “நீ பெரிய பாவம் செய்திருக்கிறாய். ஆனால் அக் குற்றச் செயலில் நீ தனியாக இருக்கவில்லை, எல்லாரும் பாவங்களின் வலையில் பிடிக்கப்பட்டருக்கிறீர்கள். நீ என்னை சிலுவையில் அறைய விரும்பவில்லை. ஆனால் உனது கோழைத்தனமும், காய்பாவைக் குறித்த பயமும் என்னை நியாயம் தீர்க்கும்படி செய்தது. பொறாமை மற்றும் வெறுப்பினால் பிரதான ஆசாரியன் இயேசுவை சிலுவையில் அறைய விரும்பியதால் மிகப் பெரிய பாவத்தின் குற்ற உணர்வுடன் இருந்தான். அவன் உயர்ந்த பதவியை வகித்ததால், எதிரிகள் மீது இரக்கத்தைக் காண்பித்து, இறைவனுடன் அவர்களை ஒப்புரவாக்குவது அவசியமாய் இருந்தது. அவனோ தீய ஆவிகளுக்குக் கட்டுப்பட்டிருந்தான். இயேசுவைக் கொலை செய்யுமளவிற்கு அவரை வெறுத்தான்

உ)இயேசுவின் மீதான பிலாத்துவின் நேர்மையற்ற தீர்ப்பு (யோவான் 19:12-16)


யோவான் 19:12
12 அதுமுதல் பிலாத்து அவரை விடுதலைபண்ண வகைதேடினான். யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.
பிலாத்து இயேசுவை விடுவிக்க விரும்பினான். ஏனெனில் சிறைக்கைதியானவர் அவனது அதிகாரத்தை ஏற்றுக் கொண்டிருந்தார். கிறிஸ்துவின் மகத்துவம் மற்றும் இறைப்பற்று அந்த அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தது. இயேசு பிலாத்துவை பயமுறுத்தவில்லை. அவனை மென்மையாகக் கடிந்து கொண்டார். பிலாத்துவின் பாவத்திற்கும், காய்பாவின் குற்றச்செயலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை தெளிவுபடுத்தினார். அவரை அடைய விரும்புபவன் மற்றும் இறைவனின் உண்மைகளுக்கு நேராக கவரப்படுபவனுக்கு இயேசு நியாயாதிபதியாக இருக்கிறார்.
யூத ஆசாரியர்கள் பிலாத்துவின் இருதயத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்தார்கள். அவர்கள் அரசியலுக்கு நேராக தங்கள் குற்றச்சாட்டைத் திசை திருப்பினார்கள். இயேசு இறைவனுக்கு சமமாய் தன்னை தன்னை உயர்த்தியது பற்றிய குற்றச்சாட்டு ரோம வழக்கு மன்றத்தில் பயனற்றதாய் போய்விட்டது. ஆகவே பிலாத்து இயேசுவுக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கவில்லையென்றால், ஆளுநர் சீஷருக்கு (இராயனுக்கு) விரோதி என்று பயமுறுத்தினார்கள்.
“சீஷருக்கு சிநேகிதன்” என்பது இராஜாவுக்கு நெருக்கமானவர் என்று பொருள்படும். அவனது தூதுவர்களுக்கு மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டது. பிலாத்துவின் மனைவி ஒரு வேளை நெருங்கிய உறவினர்களில் ஒருத்தியாக இருக்கலாம். திபேரியு சீஷர் ஒருவனையும் நம்பாதவர் மற்றும் எதிலும் குறை காணும் குணத்தை உடையவர். தன்னைப் பின்பற்றுபர்களின் உண்மையை சந்தேகிக்கத்தக்கதாய் தனது மனதை திருப்பியவர் ஆவார். எப்போதுமே மற்றவர்கள் மூலம் ஏற்படும் கலகத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.சீஷரின் சிநேகிதனை குற்றம் சாட்டுபவர் தண்டனையை உறுதிப்படுத்திக் கொள்கிறார். அவர் தன் மீது அழிவைக் கொண்டுவருகிறார். அவர் நாடு கடத்தப்படுகிறார்.
யூதத் தலைவர்கள் தங்கள் கலகத்தினால் வெறுப்புற்று, “யூதர்களின் ராஜா”வை பிலாத்து விடுவித்தார் என்று ரோமிற்கு எழுதினார்களா? அப்படியென்றால் அவன் சீஷருக்கு விரோதமாக எதிரிகளை உருவாக்குகிறான் என்று அர்த்தம். அதைத் தொடர்ந்து பிலாத்துவின் பதவி ஆட்டம் காணும். இயேசுவின் பக்கம் உண்மை இருந்தாலும், அவன் தனது பதவியை இயேசுவிற்காக விட்டுக் கொடுக்க விருப்பமற்று இருந்தான். இந்த அச்சுறுத்தல் அவனது எதிர்த்து நிற்கும் தன்மையைக் குலைத்தது. அவன் இயேசுவின் மீது அதிகாரப்பூர்வ தீர்ப்பை வழங்க ஆயத்தப்பட்டான். கிறிஸ்துவின் இரத்தப்பழிக்கு தான் நீங்கலானவன் என்பதற்கான சடங்குகளை செய்யத் திரும்பினான். அவன் தீர்ப்பை வழங்கும் படி வந்தான். அவன் நீதியற்ற தீர்ப்பை வழங்கப்போவதை(தனது இருதயத்தின் ஆழத்தில்) அறிந்திருந்தான.
யோவான் 19:13-16அ
13 பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான்.14 அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.15 அவர்கள்: இவனை அகற்றும், அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள்.16 அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான்.
யூதர்களின் மேசியாவைக் குறித்த நம்பிக்கையை இகழ்பவனாக பிலாத்து இருந்தான். ரோமர்களிடம் அவர்கள் அடைந்த வீழ்ச்சியைப் பற்றிக் கூறி பரியாசம் செய்தான். “தன்னை ராஜா என்று கூறும் இயேசுவை நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். உங்களது உறுதியற்ற அரசை அகற்றுங்கள், நீங்களும் அவனைப் போலவே எதற்கும் பயனற்றவர்களாக உள்ளீர்கள்.
இந்த பரியாசத்தின் தன்மையை யூதர்கள் புரிந்துகொண்டார்கள். இயேசுவிற்கு விரோதமாக மக்களின் வெறுப்புணர்வை தூண்டிவிட்டார்கள். அவர்கள் இணைந்து சத்தமிட்டார்கள், “இவனை அகற்றுங்கள், இவன் சபிக்கப்பட்டவன், இவனை சிலுவையில் அறையுங்கள்.
சகோதரரே, இவர்கள் தங்கள் சட்டத்தின்படி பக்தியுடன் கூச்சலிட்டவர்கள். இவர்கள் குருடாக்கப்பட்டவர்கள், இவர்கள் மனுவுருவில் வெளிப்பட்ட அன்பையும், தெய்வீக அருள் பொழிவையும் புரிந்து கொள்ளத் தவறியவர்கள். இயேசுவில் வெளிப்பட்ட இறைவனின் பரிசுத்தத்தையும் இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் இயேசுவை வெறுத்தார்கள், அவரை விட்டு விலக விரும்பினார்கள். மதவெறி அல்லது பேரார்வம் மக்களை இறைவன் பக்கம் ஈர்க்க முடியும். ஆனால் இயேசுவில் வெளிப்பட்ட அன்பு மாத்திரமே அவரது இரக்கம் மற்றும் தியாகப் பலியைப் புரிந்து கொள்ள உங்கள் கண்களை திறக்கும்.
கோபம் நிறைந்த யூதர்கள் மீது தனது பரியாசத்தை பிலாத்து வெளிப்படுத்தினான். மீண்டும் இயேசுவை “இராஜா” என்று அழைத்தான். எல்லா மக்களும் இயேசுவைக் கொல்லும்படி தீர்மானித்திருந்தார்கள். தனது குற்றப்படுத்தும் மனச்சாட்சியில் இருந்து தப்பிக்கும் வழியைக் காண பிலாத்து முயற்சித்தான். ஆனால் இயேசுவை சிலுவையில் அறையும் நோக்கத்தில் கூச்சலிட்ட கூட்டம் ஒரே நோக்கமாய் இருந்தார்கள். அந்த மக்களின் சத்தம் இறைவனின் சத்தமாய் இருக்கவில்லை. அவர்கள் தங்களுடைய நோக்கங்களில் தவறினார்கள். உலக எண்ணங்களால் நிறைந்திருந்தார்கள். இந்த தோல்விகளை சாத்தான் தனக்காக பயன்படுத்திக் கொண்டான்.
பிலாத்துவின் தொடர்ச்சியான பரியாசத்தால் ஆசாரியர்கள் கோபமுற்றார்கள். அவர்கள் ஆச்சரியமூட்டும் ஓர் அறிக்கையை வெளியிட்டார்கள். “எங்களுக்கு இராயனைத் (சீஷர்) தவிர வேறு இராஜா இல்லை. இதுவும் ஒரு மாய்மால அறிக்கையாகக் காணப்பட்டது. ஆசாரியக் குடும்பம் மேசியாவைச் சார்ந்த இயக்கங்களைக் கண்டு பயப்பட்டது. மேலும் பொம்மை அரசராக விளங்கிய ஏரோதுவை பகைத்தது. அவர்கள் இராயனுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்ட, கிரேக்க கலாச்சாரத்தின் காவலனாக அவன் இருந்தான். அவர்கள் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் மற்றும் மேசியாவைக் குறித்த எல்லா எதிர்பார்ப்புகளுக்கு துரோகம் இழைத்தார்கள். இறைவனின் மக்கள் மீது பொய்களின் பிதா தாக்கத்தை ஏற்படுத்தினான். அந்த வழக்குமன்றத்தில், சத்தியத்திற்காக, இயேசு தனியாக நின்றார். இறைவனின் சத்தத்தை தனது மனதில் கேட்டு, தன்னுடைய நேர்மையில் உறுதியாக இருந்தார்.
தற்பெருமை, வன்மம் மற்றும் வஞ்சகத்தினால் உந்தப்பட்டு, பிலாத்து கடினமான தீர்ப்பை வழங்கினான். பிதாவின் வழிநடத்தலை சார்ந்து குமாரனாகிய இறைவன் அமைதி காத்தார். தனது குமாரனை சிலுவையிலறைய அவர் ஆளுநரை அனுமதித்திருந்தார். இந்த நீதியற்ற தீர்ப்பின் மூலம் இயேசு இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையே ஒப்புரவாக்குதலின் பணியை நிறைவேற்றி முடித்தார். பிசாசின் ஆவிகள் தாங்கள் வெற்றி பெற்றதாக கற்பனை பண்ணின. நரகத்தின் வல்லமைகள் வெளிப்பட்ட வஞ்சகம் நிறைந்த செயல்கள் வெளிப்பட்டாலும், அது நிறைவேற வேண்டிய இறைவனுடைய திட்டமாயிருந்தது.

4. சிலுவையும் இயேசுவின் மரணமும் (யோவான் 19:16b-42)

அ) சிலுவையிலறையப்படுதல்&அடக்கம்பண்ணப் பயன்படுத்திய துணிகள் (யோவான் 19:16ஆ-22)


யோவான் 19:16ஆ-18
அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள்.17 அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.18 அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
இரண்டு கள்வர்களை சிலுவையிலறைய போர்வீரர்களின் ஒரு குழு ஆயத்தமாய் புறப்பட்டது. அப்போது மூன்றாவது கைதியாக இயேசுவை பிலாத்து ஒப்புவித்தான். வீரர்கள் மூன்று பேர் மீதும் சிலுவையை சுமத்தினார்கள். ஒவ்வொருவரும் அந்த கொலைக் கருவியை சுமக்க வேண்டியதாய் இருந்தது. மூன்று பேரும் நகரவீதிகளில், மூச்சுதிணற அதை சுமந்து வடமேற்கு வாசலை அடைந்தார்கள். பின்பு கொல்கதா மலைக்கு வந்தார்கள். அது கபாலத்தைப் போல தோன்றிய கற்பாறையாய் இருந்தது. நகர சுற்றுச் சுவர்களை விட சற்று உயரமாய் காணப்பட்டது. நகரத்தில் வசிக்கும் மக்கள் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் குற்றவாளிகளை பார்க்கக் கூடியதாய் காணப்பட்டது.
சிலுவையைப் பற்றிய விவரங்களை யோவான் விவரிக்கவில்லை. அவரது எழுதுகோல் திகில் நிறைந்த அக் காட்சியை எழுத மறுத்தது. தெய்வீக அன்பை மனிதர்கள் புறக்கணித்தார்கள். அவர்கள் மீது நரகத்தின் வெறுப்பு காணப்பட்டது. தங்கள் பாவங்களினால், ஆவியினால் பிறந்த அவரை அவர்கள் விலக்கினார்கள். அவர்களது பாவங்களுக்கான முழுமையான பலியாகிய கிறிஸ்துவை வேண்டாமென்று விலக்கினார்கள். இயேசு சபிக்கப்பட்ட சிலுவைமரத்தில் தங்க நிற ஒளிவட்டத்தைப் பெற்றிருக்கவில்லை. பொறுமை மற்றும் பரிசுத்த சுயமறுப்பின் மூலமாக தன்னுடைய தாழ்மையில் ஆழங்களில், அவர் தனது மகிமையை வெளிப்படுத்தினார். இரு கள்வர்கள் மத்தியில் இயேசு தொங்கியதின் மூலம், அவமதிக்கப்பட்டார். அவர்கள் சிலுவையில் தொங்கியவர்களை சபித்தார்கள்.
அந்தக் கடைசி தருணத்திலும் இரக்கம், பரிசுத்தம் நிறைந்த அவர் பாவிகளின் சிநேகிதனாக தன்னை அடையாளப்படுத்தினார். இதற்காகத் தான் குமாரனாகிய இறைவன் மனுஷகுமாரனாக பிறந்தார். இதன் மூலம் இறைவனின் மக்கள் நீதிமானாக்கப்பட்ட இறைவனின் மக்களாக மாறினார்கள். என் அளவுக்கு இயேசு இறங்கி வரவில்லை என்று எவரும் சொல்ல முடியாத அளவிற்கு, அவர் அவமதிப்பின் ஆழங்கள் வரை இறங்கினார். நீங்கள் எங்கேயிருந்தாலும், எப்படி வீழ்ச்சியடைந்திருந்தாலும், கிறிஸ்து உங்கள் குற்றத்தை மன்னிப்பார். உங்களைக் கழுவி முழுமையாக பரிசுத்தப்படுத்துவார்.
யோவான் 19:19-20
19 பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.20 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது.
இயேசு தன்னை இராஜா என்று கூறியதால், அவரைப் பரியாசத்தின் அடையாளமாக இரு கள்வர்கள் மத்தியில் இயேசுவை தொங்க வைத்தார்கள். தனது மனச்சாட்சிக்கு விரோதமாக தீர்ப்பளிக்க தன்னைத் தூண்டிய யூத ஆலோசனைச் சங்கத்தாரை பிலாத்து தொடர்ந்து பரியாசம் செய்தான். யூதர்கள் வைத்த குற்றச்சாட்டை தலைப்பாக மாற்றி சிலுவை மரத்தின் மீது பிலாத்து வைத்தான்.
யூதர்களை நியாயந்தீர்க்க சிலுவையின் மீது இருந்த இந்த அறிவிப்பை இறைவன் பயன்படுத்தினார். இயேசு மெய்யாகவே அவர்கள் இராஜாவாய் இருந்தார். நீதி, அன்பு, இரக்கம், தாழ்மையுடன் வெளிப்பட்ட உண்மையான இராஜாவாக இயேசு இருக்கிறார். அவர் பூமியில் பரலோகத்தை நிறுவினார். யூதர்கள் நரகத்தை தெரிவு செய்தார்கள். தங்கள் சமூகத்தை விட்டு தங்கள் தெய்வீக அரசரை புறக்கணித்தார்கள். அவர் இப்போது அனைத்து தேசங்களின் அரசராக இருக்கிறார். ஆனால் சிலுவையிலறையப்பட்ட அரசரை இன்று நாடுகள் ஏற்றுக் கொள்கிறதா? அல்லது கர்த்தரின் அன்பை மறுபடியும் புறக்கணிக்கிறதா?.
யோவான் 19:21-22
21 அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.22 பிலாத்து பிரதியுத்தரமாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.
பிலாத்துவின் பரியாசம் மற்றும் பயமுறுத்தல் இவைகளின் அர்த்தத்தை பிரதான ஆசாரியர்கள் புரிந்து கொண்டார்கள். அவர்கள் தங்கள் அரசரைப் புறக்கணித்திருந்தார்கள். பிலாத்து கூறியதின் அர்த்தத்தை கண்டார்கள். அவர்கள் இன்னும் அதிகமாக சிலுவையிலறையப்பட்டவரை வெறுத்தார்கள்.
அந்த அறிவிப்பு இராயனின் விருப்பத்திற்கு இசைந்ததாக இருக்கும் என்று பிலாத்து உணர்ந்தான். ஆகவே மூன்று மொழிகளில் அதை எழுதினான். ரோமை எதிர்க்கும் கலகக்காரன் எவனும் இதைப் போன்ற முடிவை அடைவான் என்று படித்தவர்கள், தேசமக்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் அது உணர்த்தியது. கி.பி 70-ல் யூதர்கள் ரோமிற்கு எதிராக கலகம் செய்தார்கள். அப்போது எருசலேமின் சுற்றுச் சுவரைச் சுற்றி ஆயிரக்கணக்கானோர் சிலுவையில் தொங்கவிடப்பட்டார்கள்.

ஆ) வஸ்திரங்களைப் பங்கிடுதல் மற்றும் சீட்டுப்போடுதல் (யோவான் 19:23-24)


யோவான் 19:23-24
23 போர்ச்சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது.24 அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள்.
அவருடைய வஸ்திரத்தைப் பங்கிடுவதற்கு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த நான்கு வீரர்களும் உரிமை பெற்றிருந்தனர். இந்த மட்டுப்படுத்தும் செயலை இவர்களுடன் இணைந்து செய்ய நூற்றுக்கு அதிபதி தன் நிலையில் இருந்து கீழிறங்கி வரவில்லை. எனவே இயேசுவிடம் இருந்த கடைசி பொருளான ஆடையையும் அந்த நான்கு பேர் உரிந்து கொண்டார்கள். பொதுவாக சிலுவையிலறையப்படுபவர்கள் நிர்வாண நிலையில் இருக்கும்படி ஆடைகளை உரிந்துவிடுவார்கள். இந்த தாழ்மை நிலை இயேசுவின் மகத்துவத்தை பறை சாற்றுகிறது. அவருடைய தையலில்லாத அங்கி பிரதான ஆசாரியரை பிரதிபலிக்கிறது. எல்லா மனுக்குலத்திற்கும் பரிந்து பேசுகிற தெய்வீக பிரதான ஆசாரியராக இயேசு இருக்கிறார். இந்த நிலையில் தான் அவர் துன்பப்பட்டார் மற்றும் வேதனைக்குள்ளாக்கப்பட்டார்.
ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் சிலுவையைப் பற்றிய விபரங்களை தீர்க்கதரிசனமாக உரைத்திருக்கிறார். சங்கீதம் 22 இவ்விதம் கூறுகிறது “என் வஸ்திரங்களை தங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொண்டார்கள்.” பரிசுத்த ஆவியானவர் மேலும் கூறுகிறார், “என் உடையின் பேரில் சீட்டுப் போட்டார்கள்”. சிலுவையின் உண்மையை மிகத் துல்லியமாக ஆவியானவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இயேசுவின் சிலுவை மரணம் என்பது இறைவனின் சித்தம் என்று இது உணர்த்துகிறது. இயேசு கூறியிருக்கிறார், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமில்லாமல் உங்கள் தலையில் ஒரு மயிரும் விழாது. சிலுவை மரணம் என்பது நிகழவில்லை என்று எவர் கூறினாலும், அவர் வரலாற்று உண்மைகளை மறுதலிக்கிறார், மேலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முன்னுரைத்த இறைவனின் ஆவியானவருக்கு எதிர்த்து நிற்கிறார். சிலுவையின் அடியில் வீரர்கள் இதை உணராமல், அறியாமையில் செயல்பட்டார்கள். வேதனைப்பட்டவரின் கடைசிப் பொருளுக்காக அவர்கள் சண்டை போட்டுக் கொண்டார்கள். சிலுவையில் உலகத்தின் மீட்பர் இரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறார் என்பதை அவர்கள் உணரவே இல்லை.
சகோதரரே, அவருடைய மரணத்தின் ஐக்கியத்தின் மூலம் நீங்கள் கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறீர்களா? அல்லது செல்வங்கள் மற்றும் புகழின் பின்னால் ஒடுகிறீர்களா? சிலுவையிலறையப்பட்டவரை நேசிக்கிறீர்களா? தெய்வீக நீதியையும், உண்மையான பரிசுத்தத்தையும் அவருடைய மரணத்தின் மூலம் பெற்றிருக்கிறீர்களா? அல்லது மேற்போக்கான பார்வையாளராக உள்ளீரா? சிலுவையிலறையப்பட்டவரை கருத்தூன்றிப் பார்க்காமல் கவலையீனமாய் உள்ளீரா? இறைவனின் மகனுடன் விசுவாசம், அன்பு நம்பிக்கையில் பரிசுத்த ஆவியானவர் நம்மை இணைக்கிறார். அதன் மூலம் நாம் அவருடைய மரணம், உயிர்த்தெழுதல், பலி செலுத்துகிற வாழ்க்கை மற்றும் மகிமையில் பங்கெடுக்கிறோம்.

இ) தனது தாயுடன் கிறிஸ்துவின் வார்த்தை (யோவான் 19:25-27)


யோவான் 19:25-27
25 இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனாமரியாளும் நின்று கொண்டிருந்தார்கள்.26 அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.27 பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார் அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.
முழு உலகத்தையும் மன்னிக்கிற சிலுவையில் இயேசு கூறிய முதலாவது வார்த்தையை யோவான் பதிவு செய்யவில்லை. யூதர்களின் தொடர்ச்சியான பரியாசம் குறிப்பிடப்படவில்லை. வலது பக்கத்தில் இருந்த கள்வனை இயேசு மன்னித்தது இடம் பெறவில்லை. யோவான் இதை எழுதிய போது, இந்தக் காரியங்கள் எல்லாம் திருச்சபையில் நன்கு அறியப்பட்டவையாக இருந்தன. பிதாவின் மன்னிப்பிற்காக இயேசு வேண்டுதல் செய்யும்போது ஆசாரியர்கள் அச் சத்தத்தை கேட்காமல் சிலுவையை விட்டு விலகி சென்றிருந்தார்கள். பஸ்கா பண்டிகைக்காக ஆடுகளைப் பலியிட எருசலேம் நோக்கி ஜனக்கூட்டமும் விரைந்தது. ஆயத்தப்படும் நேரம் மிகவும் குறைவாய் இருந்தது. மிகப்பெரிய அந்த தேசியப் பண்டிகைக்காக, மதச் சடங்குகளை நிறைவேற்றும் படி மதத் தலைவர்களும் சென்றுவிட்டார்கள். நகர சுவர்கள் பக்கம் இருந்து எக்காள சத்தம் தொனித்தது, தேவாலயத்தில் துதிகளின் சத்தம் எதிரொலித்தது. எருசலேமிற்கு வெளியே இறைவனின் ஆட்டுக்குட்டியானவர் சபிக்கப்பட்ட மரத்தில் கைவிடப்பட்டவராய் அசட்டைபண்ணப்பட்டவராய் தொங்கினார். புற இனத்து ரோம காவலாளிகள் சிலுவைகளில் தொங்கிக் கொண்டிருந்த மூன்று பேரை காவல் காத்துக் கொண்டிருந்தார்கள்.
அந்நேரத்தில் சில பெண்கள் மெதுவாக சிலுவையை நோக்கி வந்தார்கள். அமைதியாக அங்கு நின்றார்கள். நடந்த நிகழ்ச்சிகள் அவர்களுடைய மனங்களை குழப்பம் அடையச் செய்தது. சர்வ வல்லமையுள்ளவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது அவர்கள் மனம் மிகுந்த வேதனையில் இருந்தது. ஆறுதலின் வார்த்தைகள் அங்கு காணப்படவில்லை. இருதயங்கள் ஜெபிப்பதற்கு கூட சிரமப்பட்டன. சிலர் சங்கீதங்களின் சில பகுதிகளை முனுமுனுத்துக் கொண்டிருந்தார்கள்.
இயேசு அவரது தாயின் வேதனை நிறைந்த அழுகையைக் கேட்டார். அவர் நேசித்த சீஷன் யோவானின் கண்ணீரைப் புரிந்துகொண்டார். அவர் தனது நிலையை, தனது மரணத்தின் அவமானத்தைக் கூட அதிகமாக சிந்திக்கவில்லை. திடீரென்று அவர்கள் அவருடைய சத்தத்தைக் கேட்டார்கள் “ஸ்திரீயே, அதோ உன் மகன்”
கிறிஸ்துவின் அன்பு மிகவும் உயர்ந்தது. உலகத்தாரின் பாவம் போக்கும் பலியாக, தன்னுடைய துன்பத்தின் மத்தியிலும் அவர் நேசிக்கப்பட்டவர்களின் நலனைக் குறித்து அக்கறை கொண்டார். கன்னிகையைக் குறித்ததான சிமியோனின் முன்னுரைக்கப்பட்ட வார்த்தைகள் நிறைவேறின. உனது ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும். (லூக்கா 2:35)
அவருடைய தாய்க்கு அவர் பணத்தையோ, வீட்டையோ வழங்க முடியவில்லை.அவர் சீஷர்களுக்கு பொழிந்தருளின தன்னுடைய அன்பை அவளுக்கு வழங்கினார். யோவான் இயேசுவின் தாயுடன் வந்தார் (மத்தேயு 27:56). இருப்பினும் யோவான் தனது பெயரையோ, கன்னிகையின் பெயரையோ குறிப்பிடவில்லை. கிறிஸ்து மகிமைப்படும் இந்நேரத்தில், அவருக்கு செலுத்த வேண்டிய கனத்தை திசை திருப்ப யோவான் விரும்பவில்லை. அவர் யோவானை அழைத்தபோது தான் அந்த சீஷன் சிலுவைக்கு வெகு அருகில் வந்தான். தனது தாயை அவனது பராமரிப்பின் கீழ் இயேசு ஒப்புவித்தார். அவன் மரியாளை அணைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு கூட்டிச் சென்றான்.
இந்த அன்பின் செயலை மற்ற பெண்கள் கண்டார்கள். அவர்களில் ஒருவளை ஆண்டவர் ஏழு பொல்லாத ஆவிகளிடம் இருந்து விடுவித்திருந்தார். அவள் மகதலேனா மரியாள் ஆவாள். அவள் தனது ஆத்துமாவில் இயேசுவின் வெற்றியுள்ள வல்லமையை அனுபவித்திருந்தாள். அவள் இரட்சகரை நேசித்தாள், அவரைப் பின்பற்றினாள்.

ஈ)முழுமை (யோவான் 19:28-30)


யோவான் 19:28-29
28 அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.29 காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள்.
மிகப் பெரிய நிகழ்வை ஒரு சில வார்த்தைகளில் சொல்லக்கூடிய திறமையை நற்செய்தியாளர் யோவான் பெற்றிருந்தார். பூமியெங்கும் சூழ்ந்த அந்தகாரத்தைப் பற்றி அவர் ஒன்றும் கூறவில்லை. நமது பாவங்களுக்கான இறைவனின் கோபாக்கினையில் கிறிஸ்துவின் கதறலை நாம் கேட்க முடிகிறதில்லை. கடைசி மூன்று மணி நேரத்தில் அவருடைய மரணப் போராட்டத்தின் முடிவில் அந்த மரணத்தை வெளிப்படுத்துவதை யோவான் உணர்ந்தார். மரணம் இயேசுவை விழுங்குவதாக யோவான் குறிப்பிடவில்லை. ஆனால் இயேசு அதை மனப்பூர்வமாய் ஏற்றுக் கொண்டார். மீட்பின் உலகளாவிய பணியை முடித்ததில் அவருடைய ஆத்துமா சோர்வுற்றிருந்தது. எல்லோருக்கும் பூரணமான இரட்சிப்பு கிடைப்பதை இயேசு கண்டார். மில்லியன் கணக்கான பாவிகளுக்கு, அவர்களது குற்றத்திலிருந்து விடுதலையை அவருடைய மரணம் தந்தது. அவர் அறுவடையைக் கண்டார். அவருடைய கண் முன்பு அவரது மரணத்தின் கனி காணப்பட்டது.
இந்நேரத்தில் அவரது உதடுகள் வழியே பெருமூச்சு வெளிப்பட்டது. “நான் தாகமாய் இருக்கிறேன்.” இவர் இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவர். ஆக்சிஜன், ஹைட்ரஜன் இணைந்திருக்கும் தண்ணீரின் மீது நடந்தவர் இப்போது தாகமாயிருக்கிறார். பிதாவானவர் தனது முகத்தை குமாரனிடமிருந்து மறைத்திருந்தார். அன்பின் உருவானவர் இப்போது பிதாவின் அன்பிற்காக ஏங்குகிறார். சரீரமும், ஆத்துமாவும் புத்துணர்ச்சியை பெற முடியாத, மனிதன் தாகத்துடன் இருக்கிற நரகத்தின் காட்சியை இது வெளிப்படுத்துகிறது. நரகத்தில் நித்திய அக்கினியில் தாகத்துடன் இருந்த ஒரு ஐசுவரியவானைக் குறித்து கிறிஸ்து முன்பு சொல்லியிருந்தார். வறண்டு போன இவனது தொண்டையைக் குளிரப்பண்ணுவதற்காக லாசரு தனது விரலின் நுனியில் தண்ணீரைத் தொட்டுவைக்கும்படி அனுப்புமாறு ஆபிரகாமிடம் வேண்டிக் கொண்டான். உண்மையான தாகத்தை அனுபவித்த உண்மையான மனிதனாக இயேசு இருந்தார். ஆனால் இரட்சிப்பின் பணி நிறைவேறும் வரைக்கும், அவர் அதை வெளிக்காட்டவில்லை. சங்கீதம் 22:13-18-ல் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு முன்னுரைக்கப்பட்ட அவருடைய மீட்பின் பணியைக் குறித்து பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தினார். சங்கீதம்69:21-ல் கசப்பான காடியைக் குடிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. சேவகர்கள் இயேசுவுக்கு திராட்சரசக் காடியை அல்லது தண்ணீரில் கலக்கப்பட்டதைக் குடிக்கும்படி கொடுத்தார்களா என்பது நமக்குத் தெரியாது. அது வெறுப்புடன் அல்லது புலம்பலில் கொடுக்கப்பட்டது. அது தூய்மையான தண்ணீர் அல்ல என்பதை நாம் அறிகிறோம். இறைவனின் மகனாகிய, மானிடர் இயேசு இவ்விதம் உதவியற்றவராக இருந்தார்.
யோவான் 19:30
30 இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
இயேசு கோபாக்கினையின் கசப்பான காடியை ருசித்த பின்பு அவர் வெற்றியின் வார்த்தையை முழங்கினார். “எல்லாம் முடிந்தது” இந்த வெற்றியின் சப்தத்திற்கு ஒரு நாள் முன்பு, குமாரன் பிதாவிடம் தன்னை மகிமைப்படுத்தும்படி வேண்டினார். நம்மை மீட்கும் பொருளாக சிலுவையில் தொங்கிய இயேசுவின் மூலம் பிதாவானவர் மகிமைப்படுத்தப்பட்டார். இந்த விண்ணப்பத்திற்கான பதில் கொடுக்கப்பட்டதை இயேசு விசுவாசத்தினால் அறிக்கை செய்தார். பிதாவானவர் அவருக்கு கொடுத்த பணியை அவர் நிறைவேற்றி முடித்தார். (யோவான்17:1,4)
ஆ! சிலுவையில் தொங்கிய இயேசுவின் தூய்மை ஒப்பற்றது. வெறுப்பின் வார்த்தைகள் அவர் உதடுகளில் இருந்து வெளிவரவில்லை. இரக்கத்தின் பெருமூச்சோ அல்லது அவமதிக்கும் குரலோ அங்கு வெளிப்படவில்லை. ஆனால் அவர் இறைவனின் அன்பைப் பற்றிக்கொண்டு, தனது பகைவர்களை மன்னித்தார். நமது நிமித்தம் அவர் பகைவன் போல சிலுவையில் காணப்பட்டார். மீட்பின் பணியை நிறைவேற்றி முடித்ததை இயேசு அறிந்தார். பாடுகளின் மூலம் நமது இரட்சிப்பின் அதிபதியை இறைவன் பரிபூரணப்படுத்தினார். திரியேக இறைவனின் அன்பின் ஆழங்கள் மற்றும் உயரங்கள் எவராலும் அளவிடப்பட முடியாதவை. பழுதற்ற, உயிருள்ள பலியாக, நித்திய ஆவியானவர் மூலம் இறைவனுக்கு தன்னைத்தானே குமாரன் ஒப்புக்கொடுத்தார். (எபிரெயர்9:14) கிறிஸ்துவின் இந்த இறுதி வார்த்தையின் போது இரட்சிப்பு முழுமையாய் இருந்தது, பூரணமாய் இருந்தது. நம்முடைய பங்களிப்பு, நமது நற்செயல்கள், நமது விண்ணப்பங்கள், நமது நீதியை வெளிப்படுத்தும். பரிசுத்தமாகுதல் அல்லது நமது வாழ்க்கையில் வெளிப்படும் பரிசுத்தம் இவை எதுவும் இரட்சிப்பைத் தராது. எல்லோருக்காகவும் இறைவனின் குமாரன் இதை ஒரே தரம் செய்திருக்கிறார். அவருடைய மரணத்தின் மூலம் ஒரு புதிய யுகம் உதிக்கிறது. சமாதானம் ஆளுகை செய்கிறது, ஏனெனில் பரலோகில் உள்ள பிதாவுடன் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் நம்மை ஒப்புரவாக்கியிருக்கிறார். விசுவாசிப்பவன் எவனோ அவன் நீதிமானாக்கப்படுகிறான். இறுதியான, தெய்வீகமான இயேசுவின் வார்த்தைகளின் விளக்கவுரைகளாக நிரூபங்கள் இருக்கின்றன. “எல்லாம் முடிந்தது”.
இறுதியாக மகிமையில், மகத்துவத்தில் இயேசு தனது தலையை சாய்த்தார். அவரை நேசித்த பிதாவின் கைகளில் தனது ஜீவனை ஒப்புக்கொடுத்தார். இந்த அன்பு அவரை கிருபையின் சிங்காசனத்திற்கு கொண்டு சென்றது. இன்று இயேசு பிதாவின் வலது பாரிசத்தில், அவருடன் ஒன்றாகி வீற்றிருக்கிறார்.

உ) இயேசு விலாவினில் குத்தப்படுதல் (யோவான் 19:31-37)


யோவான் 19:31-37
31 அந்த நாள் பெரிய ஓய்வு நாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.32 அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள்.33 அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை.34 ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.35 அதைக் கண்டவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான்.36 அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது.37 அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.
யூதர்கள் தங்களது நியாயப்பிரமாணத்தின் மேல் கொண்டிருந்த மத வைராக்கியத்தால் மனித உணர்ச்சிகள் அற்று மனம் மரத்துப் போயிருந்தார்கள். சிலுவையில் கொல்லப்பட்டவர்களின் சரீரங்கள் இரவுக்குள்ளாக அகற்றப்பட வேண்டும் என்று மோசேயின் சட்டங்கள் கூறுகிறது. ஆகவே யூதர்கள் இந்த மூன்று பேருக்கும் இதன் படி செய்ய முயற்சித்தார்கள். பண்டிகையின் நேரத்தில் அலங்கோலமாய் காட்சியளித்ததை அவர்கள் வெறுத்தார்கள். அந்த மூன்று பேரின் காலெழும்புகளை முறித்து சீக்கிரமாய் முடிவைக் கொண்டு வரும்படி பிலாத்துவிடம் அவர்கள் கேட்டார்கள். சில நேரங்களில் சிலுவையிலறையப்பட்டவர்கள் மூன்று நாட்கள் வரை உயிருடன் இருப்பதுண்டு. துளையிடப்பட்ட கைகள் மற்றும் கால்களில் இருந்து எப்போதும் அதிகமான இரத்தம் வெளியேறுவதில்லை. ஆகவே கை கால் எலும்புகளை பலமாக அடித்து நொறுக்கும்படி சேவகர்கள் சென்றார்கள்.
இயேசு ஏற்கெனவே மரித்து விட்டதைக் கண்டு சேவகர்கள் அங்கேயே நின்றார்கள். பலத்த அடிகளினால் அவருடைய மென்மையான சரீரம் பலவீனமடைந்திருந்தது. உலகத்தின் மீதான இறைவனின் கோபாக்கினை மற்றும் நமது பாவங்களின் பாரத்தினால் அவரது ஆத்துமா பெருந்துயரம் அடைந்திருந்தது. இறைவனுடன் நம்மை ஒப்புரவாக்கும்படி இயேசு, அவருடைய தீர்மானத்தின் படியே மரித்தார். மத காரியங்களைக் குறித்த அக்கறையுடன் அல்லாமல், யூதர்கள் இயேசு மரித்ததை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஆர்வத்துடன் இருந்தார்கள். சேவகர்களில் ஒருவன் ஈட்டியை எடுத்து கிறிஸ்துவின் இதயத்தின் அருகில் விலாவிலே குத்தினான். நீரும், இரத்தமும் புறப்பட்டு வந்தது. பெரிய வெள்ளியின் ஆறாம் மணி நேரத்திற்கு முன்பே இயேசு மரித்துவிட்டார் என்பதை அது நிரூபித்தது.
இச் சம்பவம் ஒரு கிறிஸ்தவனுக்கு இறைவனின் வெற்றியை மூன்று விதங்களில் கூறுகிறது. முதலாவது யூதர்கள் சாத்தானால் தூண்டப்பட்டு கிறிஸ்துவின் எலும்புகளை முறித்துப்போட எண்ணினார்கள். அப்போது ஒருவரும் சிலுவைப் பலியை தெய்வீகமான பலி என்று உரிமை கோர முடியாது. பஸ்கா பண்டிகையின் போது பலி செலுத்தப்படும் ஆடு பழுதற்றதாக, இருக்க வேண்டும், எலும்புகள் முறிக்கப்படக் கூடாது. (யாத்திராகமம் 12:46) ஆகவே இறைவன் தனது குமாரனை மரணத்திலும் பாதுகாத்தார். அவர் நியமித்த இறைவனின் ஆட்டுக்குட்டியை ஒருவரும் தவறு என்று மறுத்துப் பேச முடியாது.
இரண்டாவது சேவகர்களால் இயேசு விலாவினில் குத்தப்பட்டது குறித்து சகரியா12:10 வசனம் கூறுகிறது. முப்பது வெள்ளிக் காசுகளுக்கு பழைய ஏற்பாட்டு மக்கள் தங்கள் மேய்ப்பரை மதிப்பிட்டதை தீர்க்கதரிசி காண்கிறார். சகரியா11:13, இருப்பினும் இறைவன் தமது கிருபையின் ஆவியை, விண்ணப்பத்தின் ஆவியை தாவீதின் வீட்டார் மேலும், எருசலேம் நகர மக்கள் மீதும் பொழியப்பண்ணுவார். அப்போது அவர்கள் கண்கள் திறக்கப்படும், சிலுவையில் அறையப்பட்டவரை அறிந்து கொள்வார்கள். அவருடைய பிதாவானவரையும் அறிவார்கள். இந்த ஒளியூட்டப்படுதல் இல்லாமல் அவர்கள் இறைவனை அறிய முடியாது அல்லது அவருடைய இரட்சிப்பை அறிய முடியாது. இறைவனின் ஆவியைப் பெற்றவர்கள் சிலுவையில் அறையப்பட்டவரை காண்பார்கள். நாம் வேதத்தில் வாசிப்பது போல, “தாங்கள் குத்தினவரை அவர்கள் நோக்கிப் பார்த்தார்கள்”.
மூன்றாவதாக நடந்த எல்லாவற்றிற்கும் சாட்சியாக சிலுவையினருகே இறுதி வரை உண்மையாக இருந்த சீஷன் பேசியிருக்கிறான். அவன் சேவகர்களை விட்டு தூரமாய் ஒடிப்போகவில்லை. மரணத்தின் பின்பும் ஆண்டவரை விட்டு விலகவில்லை. அவன் இயேசுவின் விலாவினருகே ஈட்டியால் குத்துவதைப் பார்த்தான். நமக்கு இறைவனின் அன்பைக் குறித்து சாட்சி கொடுக்கிறார். திரியேகத்தில் ஒற்றுமை, நித்திய வாழ்வில் விசுவாசம் வைத்து பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரை பெற்றுக் கொள்வோம்.

ஊ) இயேசு அடக்கம் பண்ணப்படுதல் (யோவான் 19:38-42)


யோவான்19:38
38 இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான்.
இயேசுவுக்கு விரோதமாக கொடுக்கப்பட்ட தண்டனைத் தீர்ப்பிற்கு ஆலோசனைச் சங்கத்தில் உள்ள 70 பேரும் சம்மதித்திருக்கவில்லை. சமீபத்திய புதைபொருள் ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பில் இது காணப்படுகிறது. இரண்டு எதிரான வாக்குகள் அந்த தீர்ப்பிற்கு எதிராக இருந்தது. எல்லோரும் அந்த மரணத்தண்டனை தீர்ப்பிற்கு சம்மதித்தார்கள் என்றால், குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான மனிதர்களின் தப்பெண்ணமே காரணம் ஆகும். நீதியை நிலைநாட்டுவதில் அந்த ஆலோசனைச் சங்கம் தவறியதை இது காண்பிக்கிறது. இந்த அடிப்படையில், மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆதாரங்கள் மிகவும் கவனமாக விசாரிக்கப்பட வேண்டும். இயேசுவுக்கு அப்போது இந்த விதி முறை பின்பற்றப்பட்டது என்று வைத்துக்கொண்டால், அப்போது இரண்டு உறுப்பினர்கள் அந்த தீர்ப்பிற்கு எதிராக இருந்தார்கள். ஒருவர் இரகசிய சீஷனான அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு (மத்தேயு27:57, மாற்கு 15:43). அவன் ஆலோசனைச் சங்கத்தில் தனது நிலையை இழந்துவிடாதபடி, மிகவும் கவனமாக நடந்து கொண்டான். தேசிய நிகழ்வில் அவனது தாக்கம் காணப்பட்டது. அவனது முதிர்ந்த ஞானம் போற்றுதலுக்குரியது. காய்பாவின் அநீதியான செயலைக் கண்டு யோசேப்பு கோபப்பட்டான். காய்பா தனது தந்திர ஆலோசனையால் காரியங்களை நடத்திக் கொண்டிருந்தான். யோசேப்பு நடுநிலை வகிப்பதை கைவிட்டான். இயேசுவுடன் தனக்கு இருக்கும் உறவை வெளிப்படையாக அறிக்கை செய்தான். ஆனால் அது மிகவும் தாமதமாய் இருந்தது. ஆலோசனைச் சங்கத்தின் முடிவிற்கு எதிரான தர்க்கமாக அவனது அறிக்கை இருந்தது. ஆனாலும் பிறகு தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் இயேசுவுக்கு சிலுவை மரணத் தண்டனை தீர்ப்பை கொண்டு வந்தது.
இயேசுவின் மரணத்திற்குப் பின்பு யோசேப்பு பிலாத்துவிடம் சென்றான். (அவன் அப்படிச் செய்வதற்கு உரிமை பெற்றிருந்தான்) அவனது வேண்டுகோளுக்கு பிலாத்து சம்மதித்தான். சிலுவையிலிருந்து இயேசுவின் சரீரத்தை இறக்கி, அடக்கம்பண்ணுவதற்கு அனுமதி கொடுத்தான்.
தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் இம்னோம் பள்ளத்தாக்கில் நரிகளுக்கு இரையாகப் போடப்படுவார்கள். அங்கே பிணங்கள் எரிந்து கொண்டிருக்கும். பிலாத்து இப்போதும் யூதர்களுக்கு எதிராக வன்மம் தீர்த்துக் கொண்டான். இறைவன் தனது குமாரனை இந்த அவமானத்திலிருந்து காப்பாற்றினார். அவர் சிலுவையில் நிறைவேற்றப்பட்ட தெய்வீக பலியின் பணியை முடித்திருந்தார். பரலோகத்தில் பிதா மதிப்புமிக்க கல்லறையில் இயேசுவின் சரீரத்தை அடக்கம்பண்ணம்படி யோசேப்பை வழிநடத்தினார்.
யோவான் 19:39-42
39 ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான்.40 அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்.41 அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.42 யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.
திடீரென்று அங்கே நிக்கொதேமுவும் சிலுவையினருகில் நின்று கொண்டிருந்தார். ஆலோசனைச் சங்கத் தீர்ப்பிற்கு எதிராக வாக்களித்த இரண்டாம் உறுப்பினர் இவர். இவன் ஏற்கெனவே இயேசுவிற்கு எதிராக ஆலோசனைச் சங்கம் கொண்டு வந்த இரகசிய தீர்ப்பை செயலிழக்க செய்தவன் ஆவான். உண்மையை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தான். (7:51). இயேசுவிடம் வந்த சாட்சியான இவன் 32 கிலோ எடையுள்ள விலையுயர்ந்த எண்ணெய் பொருளை கொண்டுவந்தான். மேலும் அடக்கம் பண்ணுவதற்கு சரீரத்தை சுற்றிக் கட்டக்கூடிய துணிகளைக் கொண்டு வந்தான். மேலும் சரீரத்தை சிலுவையிலிருந்து இறக்க யோசேப்பிற்கு துணையாக இருந்தான். சரீரத்திற்கு செய்ய வேண்டிய அனைத்துக் காரியங்களும் அடக்கம் பண்ணுவதற்கு ஏதுவாக செய்யப்பட்டது. அடக்கம் பண்ணுவதற்கான இச் செயலை விரைந்து செய்ய வேண்டியது அவசியமாய் இருந்தது. வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு முன்பாக அது முடிக்கப்பட வேண்டும். ஏனெனில் ஓய்வுநாள் ஆரம்பித்துவிட்டால், எல்லா வேலைகளும் தடைசெய்யப்படும். அவர்களுக்கு மிகக் குறுகிய நேரமே இருந்தது.
நமது கர்த்தராகிய இயேசுவின் பிதாவானவர், தனது குமாரனை கனப்படுத்தும்படி இந்த இரண்டு மனிதர்களையும் வழி நடத்தினார். ஏசாயா 53:9-ன்படி வார்த்தைகள் நிறைவேறியது. அவர் ஐசுவரியவானுக்குரிய இடத்தில் அடக்கம் பண்ணப்பட்டார். அந்த கல்லறை இதுவரை ஒருவரும் வைக்கப்படாததாய் இருந்தது. கற்பாறையைக் குடைந்து, கல்லறை செய்வது மிகுந்த செலவுள்ள ஒன்றாக இருந்தது. ஆகவே யோசேப்பு தனது கல்லறையை இயேசுவிற்கு வழங்கிய செயலைவிட, அவரைக் கனப்படுத்தும் சிறப்பான வழி வேறொன்று இல்லாதிருந்தது. அந்தக் கல்லறை நகரத்தின் சுவர்களுக்கு வெளியே சிலுவையிலறையப்பட்ட இடத்திற்கு அருகில் இருந்தது. அவர்கள் அந்தக் கல்லறையில் பெட்டி இல்லாமல், ஒரு கல் போன்ற மேடைப் பகுதியில் இயேசுவின் சரீரத்தை வைத்தார்கள். இயேசுவின் சரீரம் எண்ணெய் பூசப்பட்டு, துணிகள் சுற்றப்பட்டிருந்தது. நிக்கொதேமு கொண்டுவந்த நறுமணத் தைலங்கள் பூசப்பட்டிருந்தது.
இயேசு மெய்யாகவே மரித்தார். முப்பத்து மூன்று வயதுள்ள இளைஞனாக இயேசுவின் உலக வாழக்கை முடிந்தது. அவர் மரிப்பதற்காகவே பிறந்தவர் ஆவார். தம்முடையவர்களுக்காக அவர் கொடுத்த ஜீவனில் காணப்பட்ட அன்பை விட பெரிதான அன்பு வேறொன்றுமில்லை.

By
Wateroflife. org

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.