யோவான் 14 விளக்கவுரை

யோவான் 14 விளக்கவுரை


2. பரிசுத்த திரித்துவம் தேற்றரவாளன் மூலமாக விசுவாசிகளில் இறங்குகிறார்கள் (யோவான் 14:12–25)


யோவான் 14:12
12 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
இறைவனை அறிதல் என்பது ஒரு தத்துவமோ தர்க்க சாஸ்திரமோ அல்ல. மற்ற அனைத்து அறிவுகளும் இறுமாப்பை உண்டுபண்ணும். ஆனால் இந்த அறிவோ இறைவனுடைய அன்பையும் குமாரனுடைய இரட்சிப்பையும் பற்றிய அறிவாகும். அது சேவை செய்வதற்கான விடுதலையைக் குறிக்கிறது. கிறிஸ்து தம்முடைய சீடர்களுக்கு புதிய கட்டளையைக் கொடுத்தார். “வார்த்தையிலும் செயலிலும் தெய்வீக அன்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.”
இயேசு தங்களை விட்டுப் போகப்போகிறார் என்பதைப் புரிந்துகொண்ட சீடர்கள் தங்களுக்குப் பாதுகாப்பும் இறைவனைக் குறித்து இன்னும் அதிக அறிவும் தேவை என்று இயேசுவிடம் கேட்டார்கள். அவர்கள் உலகம் முழுவதும் நற்செய்தியை எடுத்துச் செல்வதற்குத் தகுதியடையும்படி பிதாவின் மீதான அவர்களுடைய விசுவாசத்தை இயேசு உறுதிப்படுத்தினார்.
இப்போதிருக்கும் அவர்களுடைய கவலைகளை நீக்குவதல்ல முக்கியமானது. அவர்களுக்கு இறைவன் வைத்திருக்கும் பணியைச் செய்வதற்கு அவர்களை ஆயத்தம் செய்ய வேண்டும். பிதாவையும் குமாரனையும் குறித்த அறிவு நம்மைப் பெருமையிலிருந்து காத்து, தாழ்மையுடன் பணிசெய்ய வழிநடத்துகிறது. என்னை விசுவாசிக்கிறவன் எவனும் செயல்படுகிறவனாக இருப்பான். வெட்டிப் பேச்சுப் பேசிக்கொண்டிராமல் தியாகத்தின் பாதையில் நடப்பான் என்று இயேசு குறிப்பிட்டார். எவ்வளவு தூரம் ஒரு விசுவாசி தன்னை மறுதலித்து கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறானோ அவ்வளவாக மரித்தோரிலிருந்து எழுந்தவர் அவனில் செயல்பட்டு, பரலோக ஆசீர்வாதங்களை அவன்மீது பொழிந்தருளுவார். பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது பொழிந்தருளப்பட்ட பிறகு அப்படிப்பட்ட விசுவாசத்தோடு அப்போஸ்தலர்கள் பிணியாளிகளைக் குணமாக்கிப் பாவங்களை மன்னித்ததோடு, இறந்தவர்களையும் இயேசுவின் நாமத்தினால் உயிரோடு எழுப்பினார்கள். அவர்கள் தங்களை வெறுத்தார்கள் கிறிஸ்து அவர்களில் வாழ்ந்தார். அவர்கள் தங்கள் முழு ஆள்த்துவத்தோடும் அவரை நேசித்தார்கள்; தங்கள் நடத்தைகளில் எல்லாம் அவரை மகிமைப்படுத்தினார்கள்.
இந்தப் பரிசுத்த ஊழியங்களுமன்றி, அவர் இவ்வுலகத்திலிருந்த சொற்ப காலத்தில் செய்யமுடியாத பல திருப்பணிகளையும் நிறைவேற்றும்படி அவர்களை கிறிஸ்து அனுப்பினார். அவர்களுடைய பிரசங்கத்தினால் பலர் இரட்சிக்கப்படும்படி அவர் பரமேறிய பிறகு தம்முடைய பரிசுத்த ஆவியானவரைப் பொழிந்தருளினார். சூரிய உதயத்தின்போது பனித்துளி விழுவதைப்போல பிதாவுக்கு பிள்ளைகள் பிறப்பார்கள். சிலுவையில் அறையப்பட்டு உயிரோடு எழுப்பப்பட்ட கிறிஸ்துவுக்கு நாம் அளிக்கும் சாட்சியைவிட சிறப்பானது வேறு எதுவுமில்லை. இந்த சாட்சியை நம்புவதன் மூலமாக மக்கள் முடிவற்ற வாழ்வைப் பெற்றுக்கொள்கிறார்கள். விசுவாசத்தோடு யாரெல்லாம் கிறிஸ்துவைப் பற்றிக்கொள்கிறார்களோ அவர்கள் வாழ்நாளெல்லாம் நீதியின் பாதையில் நடந்து தங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் வந்து அவர்களை இறைவனுடைய பிள்ளைகளாக்குகிறார்.
யோவான் 14:13, 14
13 நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். 14 என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.
நீங்கள் விண்ணப்பம் செய்கிறீர்களா? நீங்கள் எவ்வளவு கவலைப்படுகிறீர்களோ, எவ்வளவு பாவம் செய்கிறீர்களோ அவ்வளவு விண்ணப்பம் செய்ய வேண்டும். நீங்கள் இறைவனைத் துதிப்பதற்கும் மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும் எவ்வளவு குறைவான நேரத்தைச் செலவு செய்கிறீர்கள்? நீங்கள் உங்கள் விண்ணப்பங்கள் சுயநலத்துடன் விண்ணப்பிக்கிறீர்களா அல்லது இறைவன் மீதும் மீட்கப்படாதவர்கள் மீதும் முழு அன்புடன் விண்ணப்பிக்கிறீர்களா?
நீங்கள் உங்கள் எதிரிகளையும் ஆசீர்வதிக்கும்படி இறைவனுடைய அன்பு உங்களை மாற்றியிருக்கிறதா? கிறிஸ்துவின் இரட்சிப்பு அவருடைய நாமத்தினால் அநேகரை விடுவிப்பவராக உங்களை மாற்றியிருக்கிறதா? கர்த்தருடைய விண்ணப்பத்திற்கு உகந்தாற்போல உங்களுடைய விண்ணப்பம் இருக்கிறதா? அல்லது இன்னும் நீங்கள் சிலரை மன்னிக்காமல் தொடர்ந்து வெறுக்கிறீர்களா?
நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினால் விண்ணப்பிப்பீர்களாயின் அவர் விரும்புகிறபடியே நீங்கள் அவருடைய ஆவியின்படி வாழவும் சிந்திக்கவும் தொடங்குவீர்கள். உங்கள் இருதயம் இரக்க சிந்தனைகளினால் நிரப்பப்படும்.
பரலோகத்தின் வல்லமைகளையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ளும் வாக்குத்தத்தை கிறிஸ்து நமக்குக் கொடுக்கிறார். அந்த வாக்குத்தத்தத்தோடு ஒரு தெளிவான நிபந்தனையையும் முன்வைக்கிறார். “நான் உங்களை மாற்றும்படி நீங்கள் என்னுடைய வார்த்தைகளுக்கு உங்களைத் திறந்துகொடுத்தால், நான் உங்களில் வலுவாகவும் மேலாகவும் வாசம்செய்வேன். உங்களுடைய விசுவாசத்தினாலும் விண்ணப்பத்தினாலும் அநேகரைத் தீமையிலிருந்து இரட்சிப்பேன். எப்பொழுதெல்லாம் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின்படி என்னிடம் விண்ணப்பிக்கிறீர்களோ அப்போது நான் நேரடியாக பதிலளிப்பேன்.
சகோதரரே, உங்கள் கரங்களில் இயேசு கொடுத்துள்ள இந்த சாவிக்காக நீங்கள் அவருக்கு நன்றி செலுத்துங்கள். பரலோகத்தின் பொக்கிஷங்களை விண்ணப்பத்தினால் திறவுங்கள். “நான் உங்கள் அயலகத்தார் மீதும் நண்பர்கள் மீதும் இரட்சிப்பையும் ஆசீர்வாதத்தையும் பொழிந்தருளி, அவர்களுக்கு இறைவனை அறியும் அறிவையும் மனந்திரும்புதலையும் சகாயத்தையும் அருளுவேன்” என்று அவர் உரைக்கிறார். உங்கள் இனத்திலுள்ள அடிமைகளைத் தெரிந்துகொண்டு அவர்களை இறைவனுடைய பிள்ளைகளாக்கும்படியாக அவரிடம் விண்ணப்பியுங்கள். விண்ணப்பிப்பதில் சோர்ந்து போகாதிருங்கள்; விசுவாசமே அநேகரை இரட்சிப்பதற்கான வழி. உங்கள் விண்ணப்பத்திற்கு பதில் கிடைக்கும் என்ற விசுவாசத்தோடு ஜெபியுங்கள். கிடைக்கப்போகும் பதிலுக்காக முன்கூட்டியே அவருக்கு நன்றி செலுத்துங்கள். உங்கள் விண்ணப்பத்திலும் விசுவாசத்திலும் உங்களோடு இணைந்துகொள்ளும்படி உங்கள் சகோதர சகோதரிகளைக் கேட்டுக்கொள்ளுங்கள். துதிப்பதிலும் ஆராதிப்பதிலும் இளைப்படையாதிருங்கள். அவர் உங்கள் மீது விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றும்படியும் விண்ணப்பியுங்கள்.
இயேசு உங்கள் விண்ணப்பங்களுக்குப் பதிலளிக்கவில்லை என்று நீங்கள் உணர்ந்தால், உங்கள் பாவங்களை அறிக்கை செய்யுங்கள். அவர் உங்களைச் சுத்திகரிக்கும்படி விண்ணப்பத்திற்கான தடைகளைத் தகர்த்தெறியுங்கள். பரலோகத்தின் முழுமையை பூலோகத்திற்குக் கொண்டுவரும் அதிகாரத்தை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். நீங்கள் விசுவாசத்தோடு விண்ணப்பித்துச் சாட்சியிடும்போது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரை மகிமைப்படுத்துகிறீர்கள்.

யோவான் 14:15
15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
நற்செய்திப்பணி கல்வாரிக்கு நன்றி செலுத்தும்பணியாகும். யார் நற்செய்திப் பணியைச் செய்யவில்லையோ அவர்கள் கிறிஸ்துவின் விடுதலையை அறியவில்லை. உங்களுடைய விண்ணப்பங்களும் சாட்சிகளும் கனியற்றதாக இருக்குமானால், நீங்கள் கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்கிறீர்களா அல்லது உங்களுடைய பாவங்கள் ஆசீர்வாதத்தைத் தடைசெய்கிறதா என்று உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். மற்றவர்களின் ஆசீர்வாதத்திற்குத் தடையாயிருக்கிற உங்கள் குறைகளை அவரிடம் அறிக்கை செய்யுங்கள். கர்த்தர் நமக்கு எண்ணற்ற கட்டளைகளைக் கொடுத்திருக்கிறார். உங்கள் எதிரிகளை நேசியுங்கள். நீங்கள் சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து விண்ணப்பம் செய்யுங்கள். உங்கள் பரலோக பிதா பூரணராயிருக்கிறதுபோல நீங்களும் பூரணராயிருங்கள். வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். இந்தக் கட்டளைகள் அனைத்தும் “நான் உங்களை நேசிப்பதைப் போல நீங்களும் ஒருவரையொருவர் நேசியுங்கள்” என்ற கட்டளையில் அடங்கியிருக்கிறது. இந்தக் கட்டளைகள் நமக்குப் பாரமானவைகள் அல்ல. அவை நம்முடைய வாழ்க்கையின் உதவியாகவும் விசுவாசத்திற்கும் அன்பிற்கும் பாலமாகவும் அமைகிறது.
யார் கிறிஸ்துவின் விடுதலையைப் பெற்றிருக்கிறானோ அவன் சுயத்திற்கு சேவைசெய்யும்படி வாழாமல் இரட்சகராகிய கிறிஸ்துவுக்குச் சேவை செய்யும்படி வாழுவான்.
யோவான் 14:16-17
16 நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். 17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
ஒருவன் தன்னுடைய சொந்த முயற்சியினால் இயேசுவின் கட்டளைகளைக் கைக்கொள்ள நினைத்தால் அவனால் அது முடியாது. அந்தக் காரணத்திற்காகத்தான் இயேசு பரிசுத்த ஆவியானவராகிய தேற்றரவாளனை அனுப்ப வேண்டும் என்று பரிந்துபேசுகிறார். அவருக்குப் பல்வேறு பணிகள் இருக்கிறது. அவர் சத்திய ஆவியாக நம்முடைய பாவத்தின் அளவைக் காண்பிக்கிறார். அதன்பிறகு சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை நமக்கு முன்பாகக் காண்பித்து, நம்முடைய பாவங்களை மன்னிக்கும் தெய்வீக குமாரன் அவரே என்பதை உறுதிசெய்கிறார். கிருபையினால் அவர் நம்மை இறைவனுக்கு முன்பாக நீதிமான்களாக்குகிறார். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஆவியானவரே நமக்கு இரண்டாம் பிறப்பைக் கொடுக்கிறார். அவர் நம்முடைய வாய்களைத் திறந்து இறைவனை பிதாவே என்று அழைக்கச் செய்கிறார். இந்த புத்திர சுவிகாரத்தின் ஆவியினால் நாம் உண்மையில் இறைவனுடைய பிள்ளைகள் என்பதை உறுதிசெய்துகொள்கிறோம். இறுதியாக அவர் நமக்கு ஆதரவாகப் பேசுபவராக நம்மைப் பாதுகாக்கிறார். சாத்தானுடைய பொய்கள் நம்முடைய காதுகளில் தொனித்துக்கொண்டிருந்தாலும் நமது இரட்சிப்பு முழுமையானது என்று நமக்குப் பின்னாக இருந்து நமக்கு உறுதிப்படுத்துகிறார். நம்முடைய போராட்டங்களிலோ இவ்வுலகத்திலுள்ள திருப்திகளிலோ நாம் உறுதியைப் பெற்றுக்கொள்ள முடியாது. இயேசு அனுப்பும் தேற்றரவாளனே நமக்கு அந்த நிச்சயத்தைக் கொடுக்கிறார்.
எந்த ஒரு மனிதனும், அவன் எப்படிப்பட்ட அறிவாளியாக இருந்தாலும், கவிஞனாக இருந்தாலும், தீர்க்கதரிசியாக இருந்தாலும் அவன் இயற்கையாக பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதில்லை. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் விசுவாசம் வைப்பவர்களுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலையில் இந்தப் பரிசுத்த ஆவி கொடுக்கப்படுகிறார். இயேசுவை நேசிக்காதவர்கள், அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களில் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்வதில்லை. ஆனால் இயேசுவை நேசித்து அவருடைய இரட்சிப்பைப் பெற்றுக்கொள்பவர்கள் நடைமுறையில் சந்தோஷத்தை அனுபவிக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயத்தில் இருந்தால் நம்முடைய பெலவீனத்திலும் நாம் இறைவனுடைய பெலனை அனுபவிப்போம். மரணத்திலோ, நியாயத்தீர்ப்பிலோ இந்தத் தேற்றரவாளன் உங்களைக் கைவிடமாட்டார், ஏனெனில் அவர் நித்தியமானவர்.
யோவான் 14:18-20
18 நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன். 19 இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள். 20 நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.
காட்டிக்கொடுப்பவன் வெளியே சென்றபிறகு இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து தான் சீக்கிரமாக அவர்களை விட்டுச் செல்லப் போவதாகவும் அவர் செல்லும் இடத்திற்கு அவர்களால் பின்பற்றிச் செல்ல முடியாது என்றும் கூறுகிறார். ஆனாலும் அவர் அவர்களிடத்தில் திரும்பி வருவதாக வாக்களிக்கிறார். அவர்களுடைய பயத்தைத் கருத்தில்கொண்டு இயேசு சொன்ன இந்த வார்த்தைகளுக்கு இரண்டு பொருளுண்டு: முதலாவது, கர்த்தர் ஆவியானவரில் இருப்பதால் இது ஆவியானவரின் வருகையைக் குறிக்கிறது. இரண்டாவதாக காலத்தின் முடிவில் நிகழவிருக்கும் இரண்டாம் வருகையைக் குறிக்கிறது. இந்த இரண்டு காரணங்களுக்காக அவர் அவர்களைவிட்டு தம்முடைய பிதாவினிடத்திற்குச் செல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் பிரிவில்லாமல் பரிசுத்த ஆவியானவர் நம்மிடத்தில் வந்திருக்க முடியாது.
இந்த ஆவியானவரே நம்முடைய கண்களையும் இருதயத்தையும் உடனடியாகத் திறக்கிறவர். இயேசு மற்ற மனிதர்களைப் போல தம்முடைய மரணத்திற்குப் பிறகு தான் வைக்கப்பட்ட கல்லறையிலேயே தங்கிவிடாமல் உயிரோடு எழுந்து இன்று பிதாவுடன் இருக்கிறார். இந்த அண்டசராசரத்திற்கும் நம்முடைய இரட்சிப்புக்கும் ஆதாரமாயிருப்பது அவருடைய ஜீவனே. நாமும் விசுவாசத்தினாலே மரணத்தை மேற்கொண்டு கிறிஸ்துவில் ஒரு நீதியின் வாழ்க்கையை நடத்தும்படி, அவர் மரணத்தை வென்று ஜீவனை நமக்குக் கொடுத்திருக்கிறார். நம்முடைய மார்க்கம் முழுவதும் ஜீவ நம்பிக்கையின் மார்க்கமாகும். நம்மைத் தேற்றும் உண்மையான ஆவியானவர் இறைவனுடைய ஆவியானவராயிருந்து, நம்மில் வந்து வாசம்பண்ணி, குமாரன் பிதாவிலும், பிதா குமாரனிலும் பரிபூரண ஐக்கியத்திலிருப்பதை நமக்கு உணர்த்துகிறார். பரிசுத்த திரித்துவத்தைக் குறித்த அறிவு என்பது கணக்குப் பாடத்தைப் புரிந்துகொள்வதைப் போன்றதல்ல. பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயத்தில் வந்து வாழ்ந்து, குமாரன் பிதாவில் இணைந்திருப்பதைப்போல நம்மையும் பிதாவுடன் இணைக்கிறார். இந்த இரகசியங்கள் மனிதர்களாக நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்டது.
இயேசு நம்மில் தனியாக வந்து வாசம்செய்வேன் என்று குறிப்பிடாமல், “நாங்கள் வந்து வாசம்பண்ணுவோம்” என்று பன்மையில் குறிப்பிடுகிறார். ஒரு தனிப்பட்ட கிறிஸ்தவனில் பரிசுத்த ஆவியானவர் வாசம்பண்ணுவதோடு மட்டுமன்றி, அந்த கிறிஸ்தவன் ஆவிக்குரிய மாளிகையில் ஒரு ஜீவனுள்ள கல்லாக இருக்கிறான். அனைத்து விசுவாசிகளும் அந்த ஆலயத்தில் பங்கடைகிறார்கள். இந்த வாக்குத்தத்தம் பன்மையில் கொடுக்கப்பட்டுள்ளது: “நீங்கள் என்னிலும் நான் உங்களிலும்” விசுவாசிகளின் ஐக்கியத்தில்தான் இயேசு தம்மை வெளிப்படுத்துகிறார். “நான் எங்களை நேசிப்பதைப் போல நீங்களும் ஒருவரையொருவர் நேசியுங்கள்” என்ற கட்டளையுடன் இயேசு இந்த வாக்குத்தத்தத்தை நிறைவு செய்வதைக் கவனித்தீர்களா? இறைவனுடைய முழுமையை நிரப்பப்போவது நான் மட்டுமல்ல, நாம் அனைவரும் சேர்ந்து கிறிஸ்துவிடம் இணைக்கப்படுகிறோம்.

யோவான் 14:21
21 என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
அனைத்துக் காலத்திலும் ஆசீர்வாதம் மற்றும் கிருபையின் நீரூற்று திருச்சபையில் பிரவாகித்து ஓடிக்கொண்டே இருக்கிறது. அனைத்து விசுவாசிகளும் ஆசீர்வாதத்தினால் நிறைந்தாலும், இன்னும் சமுத்திர நிறைவான கிருபை மீந்திருக்கும். இயேசு தாம் மேசியா என்பதற்கும் இறைமகன் என்பதற்கு ஏற்ற நிலையில் அவருடைய எதிரிகளுக்கு முன்பாக நின்றாக வேண்டும். இந்தக் கடைசி மணித்துளிகளில் தமக்கும் பிதாவுக்கும் இருக்கும் ஐக்கியத்தை அவர் தம்முடைய சீடர்களுக்கு வெளிப்படுத்தினார். கிறிஸ்துவின் தெய்வீகத்துவத்தின் முழுமை நம்முடைய இருதயங்களை நிரப்பும்படி அவை திறக்கப்படுவதாக.
சீடர்கள் அவரை நேசிப்பது வெறும் உணர்ச்சிபூர்வமானதாக இராமல் அவருடைய கட்டளைகளுக்கு நடைமுறையில் கீழ்ப்படிவதாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்குச் சொன்னார். இயேசுவின் அன்பில் மறைந்துள்ள ஆலோசனையை சாதாரண மனிதனால் புரிந்துகொள்ள முடியாது. அவர் பரலோகத்தின் பொக்கிஷங்களை நமக்குத் திறந்துகொடுத்து, நாம் இழந்துபோனவர்களுக்குச் சேவை செய்யவும், சகோதரர்களைக் கட்டியெழுப்பவும் நம்மை அனுப்புகிறார். அவர் நமக்காக வைத்திருக்கும் திட்டங்களை அறிந்துகொள்ளும் பெலத்தை நமக்குக் கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவரின் மகிழ்ச்சி நம்மை உந்தித் தள்ளுவதால் அவருடைய கட்டளைகள் பாரமானவைகளோ சாத்தியமற்றவைகளோ அல்ல. நாம் செய்த ஒவ்வொரு தீமையையும் அறிக்கைசெய்யும்படி சத்திய ஆவியானவர் நம்மைத் தூண்டுகிறார். அவர் நம்மை நேசித்து முழுவதுமாக நம்மை இரட்சித்தபடியால், ஆவியானவர் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளும்படி நம்மை பெலப்படுத்துகிறார். ஆகவே நாம் அவரை நேசித்து அவருடைய ஆவியில் நடக்கிறோம்.
நீங்கள் இயேசுவை நேசிக்கிறீர்களா? உடனடியாக “ஆம்” என்று பதிலளிக்காதீர்கள். “இல்லை” என்று சோகத்துடனும் கூறவேண்டாம். நீங்கள் மறுபடியும் பிறந்தவராக இருந்தால், பரிசுத்த ஆவியானவர் உங்களில் இருந்தால், நீங்கள், “கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய மேன்மை, தாழ்மை, தியாகம் மற்றும் பொறுமை ஆகியவற்றுக்காக நான் உங்களை நேசிக்கிறேன். உங்களை நேசிக்கும் பெலத்தை நீர் எனக்குக் கொடுத்திருக்கிறீர்” என்று சொல்வீர்கள். நம்முள் இருக்கிற பரிசுத்த ஆவியுடனான இந்த உரையாடல், வெற்று நம்பிக்கையோ கற்பனையோ அல்ல. அது அன்பின் செயல்களைச் செய்யும்படியான தீர்மானத்தின் மீது கட்டப்பட்டது. கர்த்தர் தமக்குப் பிரியமானவர்களில் அன்பை உண்டுபண்ணி, தம்முடைய கிருபையினால் அவர்களை அதில் உறுதிப்படுத்துகிறார்.
இயேசுவை நேசிக்கிறவர்களை இறைவன் நேசிக்கிறார். குமாரன் மனுக்குலத்தை இரட்சிக்கும்படியாக அவருக்கு அனைத்து வல்லமையையும் இரக்கத்தையும் பிதா கொடுத்திருக்கிறார். இயேசுவை ஏற்றுக்கொள்பவன் இறைவனை ஏற்றுக்கொள்கிறான். இயேசுவை நிராகரிப்பவன் இறைவனை நிராகரிக்கிறான். கிறிஸ்துவின் ஆவியானவர் உங்களை மாற்றி, உங்களை அன்புள்ள நபராக்கியிருப்பதால், இறைவன் உங்களை “பிரியமானவன்” என்று அழைப்பதை நீங்கள் உணருகிறீர்களா? உங்களில் நீங்கள் நல்லவர் அல்ல, இறைவனுடைய அன்பு உங்களைப் புதிய படைப்பாக்குகிறது. கிறிஸ்து உங்களில் செயல்பட்டு, பிதாவிடம் உங்களுக்காகப் பரிந்துபேசுகிறார். அவர் உங்களை நித்தியத்திற்கும் காத்துக்கொள்வார். அவர் உங்களுக்கு ஆவிக்குரிய நிச்சயத்தை வெளிப்படுத்துவார். உங்கள் இரட்சகரைப் பற்றிய அறிவில் நீங்கள் எவ்வளவு வளர்ந்தாலும், கீழ்ப்படிதல், அன்பு, தியாகம், சுய-வெறுப்பு போன்றவற்றில் நீங்கள் வளராவிட்டால் அந்த அறிவு வளர்ச்சி பெலவீனமானதாகவே இருக்கும்.
யோவான் 14:22-25
22 ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான். 23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். 24 என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது. 25 நான் உங்களுடனே தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
ஸ்காரியோத் அல்லாத யூதா என்ற ஒரு சீடனும் இயேசுவுக்கு இருந்தார். காட்டிக்கொடுப்பவன் சென்றதிலிருந்து இயேசு வேறுகாரியங்களைப் பற்றிப் பேசுகிறார் என்பதை அவர் உணர்ந்துகொண்டார். பயங்கரமான சம்பவம் ஏதோ நடைபெறப்போகிறது என்று அவர் சந்தேகித்தார்.
ஸ்காரியோத் அல்லாத யூதா என்ற ஒரு சீடனும் இயேசுவுக்கு இருந்தார். காட்டிக்கொடுப்பவன் சென்றதிலிருந்து இயேசு வேறுகாரியங்களைப் பற்றிப் பேசுகிறார் என்பதை அவர் உணர்ந்துகொண்டார். பயங்கரமான சம்பவம் ஏதோ நடைபெறப்போகிறது என்று அவர் சந்தேகித்தார். இயேசு அவருக்கு நேரடியாக பதிலுரைக்கவில்லை. திருச்சபையின் முக்கிய நோக்கமும் தேவையும் இவ்வுலகத்திற்கு மரிப்பதே என்று அவர் அறிவித்தார். இறைவனை அறியும் உண்மையான அறிவிற்கு வழிநடத்திச் செல்லும் படிநிலைகளை இயேசு காண்பித்தார். இயேசுவை அறிந்து அவரை ஏற்றுக்கொள்ளும்போது நமக்குப் புதுவாழ்வு கிடைக்கிறது. பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நாம் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவருடைய அன்பை அனுபவிப்பவர்களாகவும் மாறுகிறோம். அதன் பிறகு இயேசு ஒரு முக்கிய வாக்கியத்தைக் கூறினார்: “நாங்கள் அவனிடத்தில் வந்து, அவனோடே வாசம்பண்ணுவோம்” இங்கே அவர் திருச்சபையைப் பற்றி மட்டும் பேசாமல் ஒவ்வொரு தனிப்பட்ட விசுவாசியையும் பற்றிப் பேசுகிறார். பரிசுத்த திரித்துவ இறைவன் விசுவாசிக்குள் வந்து அவனில் வாசம்பண்ணுகிறார். இந்த வார்த்தை ஒரு விசுவாசி பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் அரவணைப்பில் இருப்பதைப்போல அவனுடைய உள்ளத்தில் தொனிக்கிறது. இரட்சிப்பின் செயல்பாட்டில் இறைவன் ஒரு மனிதனுக்குள் வந்து வாசம்செய்து அவனை முழுவதும் பாதுகாக்கிறார். இயேசுவை நம்பும் எந்த மனிதனும் இந்த உண்மையான இரகசியத்தை அனுபவிக்கிறான்.

3. கிறிஸ்துவின் பிரியாவிடைச் சமாதானம் (யோவான் 14:26-31)


யோவான் 14:26
26 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
கிறிஸ்துவின் போதனைகள் அனைத்தும் எனக்குப் புரிந்துவிட்டது என்று யார் சொல்லக்கூடும்? அவருடைய வார்த்தைகள் அனைத்தையும் மனப்பாடம் செய்து அவற்றை நடைமுறைப்படுத்தக் கூடியவன் யார்? காட்டிக்கொடுப்பவனுடைய தீய செயலைப் பற்றியும் அவன் என்ன செய்வான் என்பதைப் பற்றியும் சீஷர்கள் கவலையோடு சிந்தித்துக்கொண்டிருந்தனர். யோவானைத் தவிர இயேசு தம்முடைய பிரியாவிடைப் பேச்சில் பேசிய காரியங்களை யாரும் நினைவில்கொள்ளவில்லை.
அவர்களுடைய மறதியைக் குறித்து அவர் அவர்களைத் தேற்றி, பரிசுத்த ஆவியானவர் வந்து அனைத்தையும் அவர்களுக்கு நினைப்பூட்டுவார் என்று வாக்களித்தார். இயேசுவின் சிந்தையோடும் நோக்கத்தோடும் பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் பணியைத் தொடர்ந்து செய்வார். அவர் பெலவீனமானவர்களைப் பாதுகாப்பார். இயேசு அறிஞர்களையும் தர்க்க சாஸ்திரத்தில் தேறியவர்களையும் தம்முடைய சீஷர்களாகத் தெரிவுசெய்யவில்லை. மாறாக உலகத்தின் ஞானிகளை வெட்கப்படுத்தத்தக்கதாக அவர் சாதாரண மீனவர்களையும், வரிவசூலிப்பவர்களையும், பாவிகளையும் தெரிந்துகொண்டார். இரக்கத்தினால் பிதாவானவர் தம்முடைய பரிசுத்த ஆவியானவரை அனுப்பி, இயலாதவர்களைத் தம்முடைய பிள்ளைகளாக்கி, தாழ்மையின் வரங்களை அவர்களுக்குக் கொடுத்து, அவர்கள் சுயத்தை வெறுத்து நீதியுள்ள வாழ்க்கை நடத்தும்படி செய்கிறார்.
இயேசு ஒரு கவிதை நூலை வெளியிடவில்லை. தம்மைப் பற்றிய கருத்துக்களை மறந்துபோகும் நபர்களிடத்தில் அவர் ஒப்புவிக்கவும் இல்லை. அவர் தம்முடைய பரிசுத்த ஆவியானவரே தமது சீடர்களுக்கு நினைப்பூட்டி அவற்றை ஞாபகப்படுத்தி வழிநடத்துவார் என்று அவர் உறுதியுடன் இருந்தார். அவர் திரும்ப வரும்வரை நற்செய்தி நூல்களே பரிசுத்த ஆவியானவருடைய சிறப்பான செயலாக இருக்கிறது. அவர் தம்முடைய இரட்சிப்பின் திட்டத்தை மனிதர்களுடைய மொழியில் சொல்லி, சீடர்களுடைய ஞாபகத்தில் அவற்றை இருத்தினார். பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு அவற்றை நினைப்பூட்டிப் போதித்தார். அப்போஸ்தலர்களுடைய சாட்சிகளினாலே குமாரன் மகிமைப்படும்படி, பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் போதனைகளை அவர்களில் நிலைநிறுத்தினார். கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களால் எழுதப்பட்ட புத்தகங்களைத்தான் நாம் பெற்றிருக்கிறோம். அவர்கள் தாழ்மையோட தாங்கள் பெற்றுக்கொண்ட விசுவாசத்தையும் அறிவையும் நமக்கு எழுதிக்கொடுத்திருக்கிறார்கள். அதற்கு மேலாக அவர்கள் எந்த வார்த்தைகளையும் இயேசு சொன்னதாகச் சேர்த்து எழுதவில்லை. அவர்களுடைய பிரசங்கங்கள் அந்தக் காலத்துடன் அழிந்துபோன வெறும் மனிதப் பேச்சுக்கள் அல்ல. அவர்கள் எழுதிய வரலாற்று நிகழ்வுகளை பரிசுத்த ஆவியானவர் இன்றுவரை புத்துயிருட்டிப் பாதுகாத்து வருகிறார். நாம் நற்செய்திகளை வாசிக்கும்போது இன்று நடந்த நிகழ்ச்சிகளை வாசிப்பதைப்போல இருக்கிறது. கிறிஸ்துவின் வார்த்தைகளை நாம் கேட்கும்போது அது அவருடைய சத்தம் நம்முடைய காதுகளில் விழுவதைப்போல் உள்ளது. சீஷர்கள் ஆரம்ப நற்செய்தியைத் திரித்து எழுதிவிட்டார்கள் என்று கூறுபவர்கள் சத்திய ஆவியைப் புறக்கணிக்கிறார்கள். அவர் அன்பின் ஆவியாகவும் சத்தியத்தின் ஆவியாகவும் இருப்பதால் அவரிடத்தில் எந்த வஞ்சனையும் இல்லை.
யோவான் 14:27
27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
தம்முடைய பிரியாவிடைப் பேச்சின் இறுதியாக, இந்த உலகத்தால் கொடுக்க முடியாத சமாதானத்தை தம்முடைய சீடர்களுக்குத் தருவதாக அவர் வாக்களிக்கிறார். அவர் அவர்களைவிட்டுப் போனாலும் அவருடைய சமாதானம் திருச்சபைகள் மீது தங்கியிருக்கும்படி தம்முடைய சொத்தாக அதை விட்டுச் சென்றார். உணர்ச்சிபூர்வமான பத்திரிகைகளைப் போல அவர் போலிச் சமாதானத்தைப் பற்றி அவர் பேசவில்லை. மக்கள் இறைவனை விட்டு விலகி வாழ்வதாலும் அவருடைய கோபம் மனிதர்களுடைய பாவங்கள் மீது வருவதாலும் சோதனைகள் நிச்சயமாக வரும். இயேசு வேறு வகையான சமாதானத்தைக் குறித்துப் பேசுகிறார். இறைவனோடு நாம் ஒப்புரவாகும்போது பாவங்கள் மன்னிக்கப்படுவதால் பெற்றுக்கொள்ளும் சமாதானத்தை அவர் குறிப்பிடுகிறார். அந்த சமாதானம் மனசாட்சியிலும் திருச்சபையிலும் நிலைத்திருக்கும். இறைவனிடத்திலிருந்து வருபவரும் இறைவனிடம் திரும்புகிறவருமாகிய முடிவற்ற வல்லமையின் ஆவியானவரே கிறிஸ்துவின் சமாதானமாயிருக்கிறார்.
பொய்யும், வெறுப்பும், தீவிரவாதமும், கொலையும், பொறாமையும், பேராசையும், அசுத்தமும் பூமியில் நிரம்பி காணப்படுகிறது. இந்த சாத்தானுடைய அலைகள் நம்மை ஆழ்த்திவிடக்கூடாது என்று இயேசு கூறுகிறார். கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் இறைவனில் வாழ்கிறான். இறைவனும் அவரில் வாழ்கிறார். இது உங்களைப் பொறுத்தவரை உண்மைதானா? பெருங்காற்று வீசி, பெருமழை சொரிந்தபோது இயேசு அமைதலாக படகில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். தண்ணீர் படகை நிரப்பியபோது அனைவரும் பெருங்கலக்கம் அடைந்தார்கள். இயேசு எழுந்து காற்றை அதட்டினார். அது அமைதலாயிற்று. “அற்ப விசுவாசிகளே, ஏன் பயப்பட்டீர்கள்?” என்று தமது சீஷர்களைப் பார்த்து இயேசு கேட்டார்.
யோவான் 14:28-31
28 நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார். 29 இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன். 30 இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில் 31 நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.
இயேசு அவர்களைவிட்டுப் போய்விடுவார் என்பதை மீண்டும் சொன்னபோது சீடர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள். அவருடைய பிரிவுக்கான நேரம் நெருங்கி வந்தது. அவர் போவேன் என்று கூறினாலும் திரும்ப வருவேன் என்பதையும் உறுதிசெய்தார். “நான் என் பிதாவிடம் போகிறபடியால் நீங்கள் மகிழ்ச்சியடையுங்கள். என்னுடைய சொந்த இடத்திற்குப் போவதால் நீங்கள் மகிழ்ந்திருங்கள். என்னுடைய சிலுவைப் பாடுகளைப் போல கடினமானதை நான் உங்கள் மீது சுமத்த மாட்டேன். நான் மரணபயத்திலிருந்து உங்களை விடுவிப்பேன். நீங்கள் பிதாவோடு இணைக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய செய்தியாயிருக்கிறது. நீங்கள் என்னை நேசித்தால் நான் பரலோகத்திற்குப் போகிறேன் என்பதில் நீங்கள் மகிழ்வடைவீர்கள். என் பிதாவை நான் என்னிலும் மேலாகக் கருதுகிறேன். நான் அவரை அதிகமாக நேசிக்கிறேன். உங்கள் மீதான என்னுடைய அன்பும் ஒருபோதும் குறைந்துபோவதில்லை. நான் அவருடைய ஆவியில் உங்களிடத்திற்கு வருவேன்.”
பிதாவின் மேன்மையை சீடர்கள் உணர்ந்து அவரிடம் நெருங்கும்படியாக அவரைக் குறித்த மேன்மையான படத்தை அவர்களுக்கு இயேசு கொடுத்தார். அதோடு அவர்கள் மரணத் தருவாயை நெருங்கிவிட்ட தங்கள் ஆண்டவரையும் பிரிய வேண்டியுள்ளது. அவற்றிற்காக இயேசு அவர்களை ஆயத்தப்படுத்தினார். தாம் மரணத்தைச் சந்திக்கப்போவதால் இறைவன் தனக்கு எதிராக இருப்பதாக சீடர்கள் கருதக்கூடாது என்று இயேசு விரும்பினார். பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலான சமாதானம் நிலையானதாக இருப்பதால் பிதா குமாரனை அவருடைய மரணத்திற்குப் பிறகும் தம்மிடத்தில் சேர்த்துக்கொள்வார்.
இதற்குமேல் பேசவேண்டிய தேவையில்லை. பிதா சொன்னபடி தன்னுடைய சிலுவையின் மூலம் உலகத்தை இரட்சிக்கும் பணியை முடிப்பதற்கு இயேசு எழுந்துவிட்டார். இந்த மீட்பு அனைத்து மனுக்குலத்திற்குமானது. ஒவ்வொரு மனிதனும் இறைவனுடைய முடிவற்ற அன்பை அறிய வேண்டும் என்று அவர் விரும்பினார்.
புதிய உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட அந்த மேலறையைவிட்டு இயேசுவும் அவருடைய சீஷர்களும் புறப்பட்டுச் சென்றார்கள். கிதரோன் பள்ளத்தாக்கைக் கடந்து அவர்கள் காரிருளுக்குள் கடந்து சென்றார்கள். காட்டிக்கொடுப்பவன் வந்து சேரவேண்டிய ஒலிவ மலையிலுள்ள கெத்சமனே தோட்டத்திற்கு அவர்கள் நடந்து சென்றார்கள்.

By
Wateroflife.org

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.