யோவான் 11 விளக்கவுரை
அ) யோர்தானுக்கு அக்கரையில் இயேசு (யோவான் 10:40 – 11:16)
யோவான் 11:11-16
11 இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார். 12 அதற்கு அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள். 13 இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள். 14 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் சொல்லி; 15 நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார். 16 அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான்.
11 இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார். 12 அதற்கு அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள். 13 இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள். 14 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் சொல்லி; 15 நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார். 16 அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான்.
லாசரு இயேசுவுக்குப் “பிரியமானவன்” என்று சித்தரிக்கப்படுகிறான். இயேசுவும் அவருடைய சீஷர்களும் லாசருவின் வீட்டில் விருந்தாளிகளாக வந்திருக்கிறார்கள். ஆகவே லாசரு அனைத்து சீஷர்களுக்கும் சிநேகிதனாயிருந்தான். “இயேசுவுக்குப் பிரியமான” லாசரு ஆபிரகாமைப் போல “இறைவனுடைய சிநேகிதன்” என்று அழைக்கப்படக்கூடியவன். இயேசு மரணத்தைக் குறிப்பிடுவதற்கு “நித்திரை” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம் மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல என்பதைக் குறிப்பிட்டுக் காண்பிக்கிறார். நம்முடைய சரீரம் அழிந்தாலும் நம்முடைய ஆத்துமா அழிவதில்லை. விசுவாசத்தினால் இன்று நாம் கர்த்தருக்குள் ஓய்வைப் பெறுகிறோம். நாம் அவருடைய வாழ்வில் திருப்தியும் அமைதியும் உள்ளவர்களாயிருக்கிறோம். நாம் உயிர்த்தெழுதலின்போது நம்மையும் உயிர்ப்பிப்பார். அவருடன் என்றென்றும் வாழ்வோம்.
“நான் போய் அவனை எழுப்பப் போகிறேன்” என்று இயேசு நம்பிக்கையுடன் கூறினார். “நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் அந்தக் குடும்பத்தை எவ்வாறு ஆறுதல்படுத்த வேண்டும் என்றும் அறியும்படி ஜெபம் செய்வோம்” என்று இயேசு சொல்லவில்லை. அவருடைய நண்பன் மரித்துவிட்டான் என்ற செய்தி அவருக்கு வருவதற்கு இரண்ட நாளைக்கு முன்பிருந்தே இயேசு தன்னுடைய பிதாவுடன் அது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார். தன்னுடைய மகிமையான உயிர்த்தெழுதலுக்கு முன்பாகவே லாசரு உயிரோடு எழுப்பப்படுவான் என்று அவர் அறிந்திருந்தார். தன்னைப் பின்பற்றுகிறவர்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்தவும், தான் மேசியா என்பதை தன்னுடைய எதிரிகளுக்கு நிரூபிக்கவுமே இந்த அற்புதத்தை அவர் செய்யப்போகிறார். பிறகு ஒரு தாய் “பள்ளிக்குச் செல்ல நேரமாகிறது. அதனால் உறங்கிக்கொண்டிருக்கும் என் மகனை எழுப்பப்போகிறேன்” என்று சொல்வதைப்போல தான் லாசருவை எழுப்பப் போவதைப்பற்றி இயேசு நம்பிக்கையோடு பேசினார். அவரே வாழ்வாகவும், மரணத்தின் மீதான அதிகாரியாகவும் இருந்தபடியால் அவருக்கு இந்தக் காரியத்தில் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை.
இயேசுவின் வெற்றி எது என்பதை அவருடைய சீஷர்கள் அத்தருணத்தில் அறிந்திருக்கவில்லை. அவர்கள் லாசரு உறங்கிக்கொண்டிருக்கிறான் என்றும் அவனை எழுப்புவதற்காக போக வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் நினைத்தார்கள். மேலும் அவர்கள் யூதர்களுடைய கரத்தினால் மரிக்கப்போகிறோம் என்பதைக் குறித்தும் பயந்தார்கள்.
அப்போது இயேசு லாசரு இறந்துவிட்டான் என்று வெளிப்படையாகச் சொன்னார். இந்தச் செய்தி சீஷர்களைத் துக்கப்படுத்தியது. ஆனால் இயேசு அவர்களைத் தேற்றி தான் “சந்தோஷப்படுவதாகச்” சொன்னார். மரணத்தைக் குறித்து இறைமைந்தனுடைய செயல்பாடு இதுதான். அவர் வெற்றியையும் உயிர்த்தெழுதலையும் காண்கிறார். இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு தன்னுடைய உயிரையே பகிர்ந்து கொடுப்பதால், மரணம் என்பது அவர்களுக்கு துக்கப்பட வேண்டிய ஒன்றாக இல்லாமல் மகிழ்ச்சிக்கு ஏதுவான ஒன்றாக இருக்கிறது. அவர் வாழ்வாயிருக்கிறார், அவரை விசுவாசிக்கிற எவரும் அவருடைய வாழ்வில் பங்கடைகிறார்கள்.
இயேசு தொடர்ந்து பேசினார். “நான் உங்கள் நிமித்தம் மகிழ்வடைகிறேன். அத்தருணத்தில் நான் அங்கிருந்து லாசருவைக் குணப்படுத்தாத காரணத்தினால் மகிழ்வடைகிறேன். மரணத்தில் இருக்கும் எந்த மனிதனும் அவரில் விசுவாசம் வைக்கும்போது புதிய வாழ்வைப் பெற்றுக்கொள்கிறான். அவனிடத்தில் போவோம் என்றார். இவ்விதமாக மரணவீட்டுக்குப் போகும் செயல் மற்ற மனிதர்களுக்கு கண்ணீரும் துக்கமும் நிறைந்த தருணம். ஆனால் கிறிஸ்துவுக்கு உயிர்த்தெழுதலின் தருணமாயிருந்தது. நாமும் மரிக்கும்போது இயேசு “நாம் அவனிடத்தில் போவோம் என்று சொல்வார். அதற்காக நாம் அவருக்க நன்றி சொல்லுவோம். அவர் நம்மிடத்தில் வருவது விடுழ்லையையும், வாழ்வையும், வெளிச்சத்தையும் நமக்குத் தரும். அப்போஸ்தலனாகிய தோமா இயேசுவை நேசித்து, தைரியத்துடன் அவருடன் செல்கிறார். லாசருவின் உடலைப் பார்க்க இயேசு போவதற்கு முடிவுடன் இருக்கிறார் என்பதை தோமா பார்த்தபோது, கிறிஸ்து அவனை மரணத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப் போகிறார் என்பது அவருக்குத் தெரியாது. ஆகவே அவர் தன்னுடைய தோழர்களைப் பார்த்து உறுதியுடன் சொன்னார். “நாம் இயேசுவைத் தனியாக விட்டுவிடக் கூடாது. நாம் அவரை நேசிக்கிறோம். மரணம்வரை அவருக்குப் பின் செல்வோம். நாம் அவரோடு இணைக்கப்பட்டுள்ளோம்“ என்று கூறி இறுதிவரை தான் விசுவாசமுள்ளவர் என்பதைக் காண்பித்தார்.
ஆ) இயேசு மார்த்தாளையும் மரியாளையும் சந்திக்கிறார் (யோவான் 11:17-33)
யோவான் 11:17-19
17 இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நாலுநாளாயிற்றென்று கண்டார். 18 பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டுமைல் தூரத்திலிருந்தது. 19 யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள்.
17 இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நாலுநாளாயிற்றென்று கண்டார். 18 பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டுமைல் தூரத்திலிருந்தது. 19 யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள்.
லாசருவைக் கல்லறையில் வைத்து நான்கு நாட்கள் கடந்துவிட்டது. லாசரு மரித்த அன்றே அவன் கல்லறையில் வைக்கப்பட்டான். அந்நாளிலேயே இயேசுவுக்குச் செய்தி கிடைத்துவிட்டது. உடனடியாக இயேசு வந்திருந்தாலும் பயனில்லை ஏனெனில் லாசரு ஏற்கனவே அடக்கம்பண்ணப்பட்டுவிட்டான். மரணம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதிசெய்யப்பட்டு விட்டது.
பெத்தானியா ஒலிவமலையிலிருந்து 1000 மீட்டர் தாழ்வாக, கிழக்குப் பக்கமாக அமைந்திருந்தது. அதற்கு அப்பால் சவக்கடல் இருந்தது. கதரோன் பள்ளத்தாக்கிற்கு அப்புறமாக பெத்தானியாவிலிருந்து மேற்கே மூன்று கிலோமீட்டர் தள்ளியுள்ள மலையின் மேல் எருசலேம் அமைந்திருந்தது.
மரித்தவனுடைய உற்றார் உறவினர் பலர் அழுதுகொண்டும் மார்பில் அடித்துக்கொண்டும் அங்கு வந்திருந்தார்கள். அந்த குடும்பத்தை உழைத்துக் காப்பாற்றியவன் லாசருதான் என்பதால் துக்கம் அதிகமாயிருந்தது. மரணத்தின் நிழல் கூடியிருந்தவர்ளைச் சூழ்ந்திருந்தது.
யோவான் 11:20-24
20 இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டுபோனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள். 21 மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். 22 இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். 23 இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். 24 அதற்கு மார்த்தாள்: உயிர்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
20 இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டுபோனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள். 21 மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். 22 இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். 23 இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். 24 அதற்கு மார்த்தாள்: உயிர்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
இயேசு வந்திருக்கிறார் என்பதை மார்த்தாள் கேள்விப்பட்டபோது, வேகமாக எழுந்து அழுதுகொண்டே அவரைச் சந்திக்கப்போனார். அவர் ஏற்ற நேரத்தில் இங்கு வந்திருந்தால் மரணத்தைத் தடுத்திருக்கலாமே என்று நினைத்துக் கொண்டு சென்றாள். இயேசுவை அவள் சந்தித்தபோது, இயேசுவின் காலம் கடந்த வல்லமையைக் குறித்து தன்னுடைய விசுவாசத்தை அறிக்கையிட்டாள். தன்னுடைய துயரத்தை அவரிடம் சொல்லுவதில் காலம் தாழ்த்தாமல், அவர் மரணத்தைத் தடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். அவர் எப்படி அதைச் செய்வார் என்பது அவருக்குத் தெரியாது. அவருடைய முழுமையான அதிகாரத்தை அவள் நம்பினாள். இறைவனுக்கும் அவருக்கும் இருக்கும் தொடர்பையும் இறைவன் எந்த நேரத்திலும் அவருடைய விண்ணப்பத்திற்கு செவிகொடுப்பார் என்பதையும் அவள் அறிந்திருந்தாள்.
இயேசு அவளுடைய விசுவாசத்தைக் கண்டு வல்லமையான ஒரு வாக்குறுதியைக் கொடுத்தார். “உன்னுடைய சகோதரன் எழுந்திருப்பான்.” இந்த வார்த்தைகளின் முழுமையான முக்கியத்தவத்தை அவள் அறியாதவளாக அவர் இறுதி உயிர்த்தெழுதலைக் குறித்துப் பேசுகிறார் என்று நினைத்தாள். மரணம் முடிவல்ல என்று இப்போது அவளுக்க நம்பிக்கை பிறந்தது. உயிர்த்தெழுதலே விசுவாசிகள் எதிர்பார்த்திருக்கும் நம்பிக்கை.
யோவான் 11:25-27
25 இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; 26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். 27 அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
25 இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; 26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். 27 அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
தன்னுடைய சீஷர்கள் கேட்கும்படி இயேசு மார்த்தளிடம் கூறினாள்: “உயிர்த்தெழுதல் நிச்சயமாக உண்டு. நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாயிருக்கிறேன். அவன் உயிர்த்தெழுதலின் நாளில் அவன் உயிரோடு எழுவான் என்று நான் சொல்லவில்லை. இன்றே நான் அவனை உயிரோடு எழுப்புவேன். நானே சிருஷ்டிகர். என்னிடத்திலிருந்தே பரிசுத்த ஆவியானவர் புறப்பட்டு வருகிறார். நான் உங்களுக்காக மரித்து, உங்கள் பாவங்களை எடுத்துப்போட்டு, உங்களுக்கு தெய்வீக வாழ்வைத் தருவேன். மரணம் உங்களை ஆண்டுகொள்ளாது. நான் என்னுடைய உயிர்த்தெழுதலின் மூலம் உங்களுடைய உயிர்த்தெழுதலை உறுதிசெய்வேன். அப்போது நீங்கள் மரித்தாலும் விசுவாசத்தினால் என்னோடு கூட எழுந்திருப்பீர்கள். நீங்கள் என்னில் வாழ்கிறீர்கள் நான் உங்களில் வாழ்கிறேன்”
கிறிஸ்துவின் வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரே நிபந்தனை கிறிஸ்துவுடனான விசுவாச உடன்படிக்கையே. நீங்கள் அவரோடு இணைக்கப்படவில்லை என்றால் அவருடைய ஜீவன் உங்களுக்குள் ஊடுருவிப் பாயாது. கிறிஸ்துவின் மீது நமக்கிருக்கும் விசுவாசமே பிதாவையும் நித்தியத்தையும் குறித்த நமது அறிவுக் கண்களைத் திறக்கும். அவருடைய அன்பு என்றும் அழியாத மகிழ்ச்சியையும், சமாதானத்தையும், அன்பையும் நம்முள்ளத்தில் விதைக்கும். கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்த ஒருவன் மரிப்பதில்லை, ஏனெனில் கிறிஸ்துவின் ஆவி நித்தியமானவர். கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுடைய இருதயங்களில் இந்த ஆவி வாசமாயிருக்கிறார்.
இயேசு லாசருவை எழுப்பும்போது மரணத்தின் மீதான தன்னுடைய வெற்றியைப் பற்றி ஒரு சொற்பொழிவாற்றவில்லை. தன்னுடைய ஆவியினால் உயிர்பெற்றவர்கள் அவருடைய உயிர்த்தெழுதலில் ஏற்கனவே பங்கடைந்த காரணத்தினால் மரணம் அவர்களை ஆண்டுகொள்ளாது என்று இயேசு அவர்களுக்கு உறுதியளித்தார். அவருடைய இந்த நிபந்தனையற்ற வாக்குறுதியின் வல்லமையை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் அவரை விசுவாசித்தால் உங்களுக்கு மரணம் இல்லை. வரப்போகும் மரணத்தையோ அல்லது திறந்திருக்கும் கல்லறையையோ பார்க்காமல், கிறிஸ்துவை நோக்கி உங்களுடைய கண்களைத் திருப்புங்கள். அவர் உங்களை நித்திய வாழ்வில் நிலைநிறுத்துவார் என்பதால் அவருக்கு நன்றி செலுத்துங்கள்.
அன்புள்ள சகோதரனே, வாழ்வுதரும் இயேசுவை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? மரணத்தின் ஆளுகையிலிருந்தும் பாவத்தின் அழிவிலிருந்தும் அவர் உங்களை விடுவித்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் இந்த ஆவிக்குரிய எழுப்புதலை அனுபவிக்கவில்லையென்றால், ஜீவாதிபதி உங்கள் அருகில் நின்று தன்னுடைய ஆதரவின் கரத்தை உங்களை நோக்கி நீட்டுகிறார். அவருடைய வல்லமையையும் அன்பையும் நம்புங்கள். அவருடைய கரத்தைப் பிடியுங்கள் அவர் உங்கள் பாவங்களை மன்னித்து உங்களுக்கு நித்திய வாழ்வைத் தருவார். அவரே உங்களுக்கிருக்கும் உண்மையுள்ள ஒரே இரட்சகர்.
மார்த்தாள் இயேசுவின் வாக்குத்தத்தை ஏற்றுக்கொண்டாள். அவள் நித்திய வாழ்வை மட்டுமல்ல, வாழ்வைக் கொடுக்கும் இரட்சகரையும் அனுபவபூர்வமாக அறிந்திருந்தாள். மரித்தோரையும் உயிரோடு எழுப்பும் வல்லமையுள்ள- வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா இயேசுவே என்றும் அவள் விசுவாசித்தாள். இறுதி நியாயத்தீர்ப்பை நடத்தும் அதிகாரம் அவருக்கிருக்கிறது. அவர் தன்னுடைய வல்லமையினால் அவளை உயிர்ப்பித்து, பரிசுத்தப்படுத்தியிருக்கிறார். இயேசு தன்னை இறைமகன் என்று சொன்னதினால் யூதர்கள் அவரைக் கல்லெறிய எத்தனித்திருந்தபோதிலும், அவர் மீதிருக்கும் தன்னுடைய விசுவாசத்தை அவள் தைரியமாக அறிக்கையிட்டபடி நடந்து சென்றாள்.
இ) லாசருவை உயிரோடு எழுப்புதல் (யோவான் 11:34-44)
யோவான் 11:34-35
34 அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள். 35 இயேசு கண்ணீர் விட்டார்.
34 அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள். 35 இயேசு கண்ணீர் விட்டார்.
இயேசு அவளுக்கு வார்த்தைகளினால் பதிலுரைக்கவில்லை. துயரத்திலுள்ள ஒருவரோடு உரையாடுவதில் பயனில்லை. அந்தத் தருணத்தில் வார்த்தைகளைவிட செயல்களே அதிக பயனளிக்கும். அங்குள்ளவர்களிடத்தில் கல்லறை எங்கிருக்கிறது என்று இயேசு கேட்டார். இவர்கள் “வந்து பாரும்” என்று அவரை அழைத்துச் சென்றார்கள். இதே வார்த்தைகளைப் பயன்படுத்தித்தான் தன்னுடைய ஊழியத்தின் ஆரம்பத்தில் இயேசு சீஷர்களை அழைத்தார். அவர்கள் வாழ்வைக் காண வேண்டும் என்று அவர்களை அழைத்தார். ஆனால் இந்த மக்கள் மரணத்தைக் காணும்படி கர்த்தரை அழைக்கிறார்கள். அவர் அவர்களுடைய அறியாமையையும் அவிசுவாசத்தையும் பார்த்தபோது அழுதார். அவருடைய சிறந்த சீஷர்கள்கூட மெய்யான விசுவாசத்தைக் காண்பிக்கத் தவறினார்கள். மாம்சம் ஒன்றுக்கும் உதவாது. அவர்களுடைய ஆத்துமாவிலும் விசுவாசம் இல்லை. பரிசுத்த ஆவியானவர் இன்னும் அவர்கள் மீது அருளப்படாதிருந்தது. ஆவிக்குரிய மரணம் அவர்களை ஆளுகை செய்த காரணத்தினால் அவர்களுடைய இழிநிலையைப் பார்த்து இறைமகனால் அழத்தான் முடிந்தது.
அழுகிறவர்களுடன் அழுகிறவரும் சந்தோஷப்படுகிறவர்களுடன் சந்தோஷப்படகிறவருமாக இயேசு உண்மையான மனிதனாக இருந்தார். அவர் தன்னுடைய ஆவியில் கலங்கினார். தன்னைப் பின்பற்றுகிறவர்களின் மரண பயத்தையும் ஜீவனுள்ள இறைவன் மீது அவர்களுக்கிருந்த அன்புக் குறைவையும் பார்த்து கவலையுற்றார். இன்றும் நம்முடைய பாவ நிலையையும் ஆவிக்குரிய மரணத்தையும் பார்த்து நமக்காகவும் நம்முடைய சபைகளுக்காகவும் அவர் அழுகின்றார்.
யோவான் 11:36-38
36 அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்! 37 அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர். இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள். 38 அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.
36 அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்! 37 அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர். இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள். 38 அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.
இயேசுவின் கண்ணீரைப் பார்த்த யூதர்கள் லாசருவை அவர் எவ்வளவு நேசித்தார் என்று ஆச்சரியப்பட்டார்கள். அன்பு தர்க்கரீதியானதோ, அறிவுபூர்வமானதோ அல்ல, அது மற்ற ஆத்துமாக்களுடன் உணர்வுரீதியாக இசைந்திருப்பது. கிறிஸ்துவின் அன்பு நம்முடைய அறிவுக்கெட்டாததாகவும் நம்முடைய மரணத்தையும் தாண்டித் தொடர்வதாகவும் இருக்கிறது. மூடப்பட்ட கல்லறையில் வைக்கப்பட்ட லாசருவைப் பார்த்து மரணம் தன்னுடைய நண்பனை வென்று விட்டதற்காக கலங்கினார். ஆனால் அவருடைய இதயம் கல்லறையையும் தாண்டி தன்னுடைய அழைப்பைக் கேட்கும்படி அந்த பிணத்தை ஆயத்தம் செய்தது.
இயேசுவின் செயல்களைப் பார்த்து சிலர் அவருடைய அதிகாரத்தை விமர்சித்தார்கள். அதைக் கண்டு இயேசு கோபம் கொண்டார். நம்முடைய குறுகிய மனப்பான்மையிலிருந்து நம்மைக் காத்து, நம்முடைய துயரத்திலிருந்து நம்மை விடுவிக்கும்படி கிறிஸ்து தீர்மானித்திருக்கிறார். அப்போது நாம் மனித அளவுகோல்களின்படி சிந்தியாமல் அவருடைய வல்லமையை நம்பி அவரில் ஆறுதலடைவோம். பாவத்தில் மரித்திருக்கும் நம்மைச் சுற்றியிருக்கிறவர்களை எழுப்ப அவர் விரும்புகிறார். அவர் உங்கள் அவிசுவாசத்தைக் கண்டு வேதனைப்படுகிறாரா, அல்லது உங்கள் வலுவான அன்பில் மகிழ்ச்சியுறுகிறாரா?
யோவான் 11:38-40
38 அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. 39 இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள். 40 இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.
38 அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. 39 இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள். 40 இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.
எருசலேமில் வாழ்ந்த மக்கள் ஒரு பெரிய பாறையில் வெட்டப்பட்ட கல்லறையில் மரித்தவர்களை வைத்து, அதன் குறுகிய வாயிலை பெரிய வட்டவடிவக் கல்லைக் கொண்டு மூடிவிடுவார்கள். அவர்கள் அந்தக் கல்லறையைத் திறக்க வேண்டுமானால் அந்தக் கல்லை அவர்கள் வலது அல்லது இடது பக்கம் உருட்டித் தள்ளலாம்.
இவ்வாறு பாறையில் வெட்டப்பட்ட ஒரு கல்லறையில்தான் லாசருவையும் வைத்திருந்தார்கள். இயேசு அங்கிருந்தவர்கள் அனைவரையும் மரணத்தின் பயங்கரம் பிடித்திருந்ததை கண்டார். அழிப்பவனுடைய கரத்திலே இறைவன் பாவிகளைக் கொடுத்தவிட்டபடியால் இறைவனுடைய கோபமாக மரணம் அனைத்துப் பாவிகள் மீதும் ஊற்றப்பட்டதை அவர் பார்த்தார். ஆனால் சிருஷ்டிகர் மக்களுடைய மரணத்தை விரும்பாமல் அவர்கள் மனந்திரும்பி வாழ்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.
கல்லறையை மூடியிருந்த கல்லை அகற்றும்படி இயேசு கட்டளையிட்டார். மரித்தவர்களைத் தொடுவது சில காலத்திற்கு அவர்களைத் தீட்டுப்படுத்தும் என்பதால் மக்கள் இயேசுவின் இந்தக் கட்டளையைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள். நான்கு நாட்களாகிவிட்ட காரணத்தினால் பிணம் அழுகி நாற்றமெடுக்கத் தொடங்கியிருக்கும். மார்த்தாள், “ஆண்டவரே, மரித்தவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம். பிணம் நாற்றமடிக்கும்” என்றாள். மார்த்தாளே உன்னுடைய விசுவாசம் எங்கே? இயேசுதான் இறைமைந்தனாகிய மேசியா என்றும் அவர் மரித்தவர்களை உயிர்ப்பிக்க வல்லவர் என்றும் இப்போது அறிக்கையிட்டாயே. மரணத்தின் கொடூரமும் கல்லறையின் காட்சியும் அவளுடைய கண்களை மறைத்துவிட்டன. தன்னுடைய கர்த்தர் என்ன செய்யப்போகிறார் என்பது அவளுக்குத் தெரியவில்லை.
ஆனாலும் இயேசு அவளுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்தி, மனித சக்திக்கு மேலான அவளது நம்பிக்கையை அவர் உற்சாகப்படுத்தினார். இறைவனுடைய மகிமையைக் காணும்படி முழுவதும் தம்மை நம்ப வேண்டும் என்று கோரினார். “விசுவாசி, நான் ஒரு பெரிய அற்புதத்தைச் செய்வேன்” என்று அவர் கூறவில்லை. லாசருவின் சுகவீனம் மரணத்திற்கு ஏதுவானதாக இல்லாமல், இறைவனுடைய மகிமைக்கு ஏதுவானதாக இருக்கும் என்று அவர் ஏற்கனவே தன்னுடைய சீஷர்களிடம் சொல்லியிருந்தார் (யோவான் 11:4). தம்முடைய பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற தான் என்ன செய்ய வேண்டும் என்பதை இயேசு நன்கறிந்திருந்தார். மார்த்தாளின் கவனத்தை மரணத்தைவிட்டு விசுவாசிப்பவர்களுக்கு வெளிப்படுத்தப்படும் மகிமைக்கு நேராகத் திருப்ப இயேசு முயற்சித்தார். தன்னுடைய புகழ் அல்ல பிதாவின் மேன்மையும் மகிமையுமே அவருடைய நோக்கமாயிருந்தது.
அவ்விதமாக கிறிஸ்து உங்களையும் பார்த்து, “நீ விசுவாசித்தால் இறைவனுடைய மகிமையைக் காண்பாய்” என்று கூறுகிறார். பிரச்சனைகளையும் சோதனைகளையும் விட்டுவிட்டு இறைவனை நோக்கிப்பாருங்கள். உங்களுடைய குற்றங்களினாலும் பிரச்சனைகளினாலும் நிறைந்திருக்காமல் கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள். அவருடைய பிரசன்னத்தை நம்புங்கள். ஒரு குழந்தை தாயை அணைத்துக்கொள்வதைப் போல அவருக்கு ஒப்புக்கொடுங்கள். அவருடைய சித்தம் செய்யப்படட்டும், அவர் உங்களை நேசிக்கிறார்.
யோவான் 11:41-42
41 அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். 42 நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார்.
41 அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். 42 நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார்.
மார்த்தாள் இயேசுவின் வார்த்தைகளை விசுவாசித்தாள். அங்கிருப்பவர்களைக் கல்லைப் புரட்டச் சொன்னாள். மக்கள் நடுவில் பரபரப்புண்டானது. அவர் கல்லறைக்குள் சென்று லாசருவின் சரீரத்தைக் கட்டிப்பிடித்து அழப் போகிறாரா, அல்லது என்ன செய்யப்போகிறார்?
இயேசு அமைதியாகக் கல்லறைக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தார். அவர் தம்முடைய கண்களை வானத்திற்கு ஏறெடுத்து மக்கள் கேட்கும்வண்ணம் விண்ணப்பம் செய்தார். இங்கு இயேசுவின் விண்ணப்பம் ஒன்று நமக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இறைவனைத் தன்னுடைய பிதா என்று அழைத்தார். தன்னுடைய முழு வாழ்க்கையும் பிதாவை பரிசுத்தப்படுத்துவதும் மகிமைப்படுத்துவதுமாகவே இருந்தபடியால் அவர் இறைவனுக்கு நன்றி சொன்னார். லாசரு உண்மையில் எழுப்பப்படுவதற்கு முன்பாகவே தம்முடைய விண்ணப்பத்திற்கு பிதா பதில்கொடுத்தார் என்பதற்காக நன்றி சொன்னார். மற்றவர்கள் அழுதுகொண்டிருந்தபோது இயேசு விண்ணப்பித்துக் கொண்டிருந்தார். மரணத்தை வெல்லும் இறைவாழ்விற்கு அடையாளமாக அவர் தன்னுடைய நண்பனை உயிர்ப்பிக்க வேண்டும் என்று அவர் வேண்டிக்கொண்டார். பிதாவும் ஏற்றுக்கொண்டு மரணத்தின் கொடூரத்திற்கு பலியான ஒருவனை விடுவிக்கும் அதிகாரத்தை குமாரனுக்குக் கொடுத்தார். தன்னுடைய விண்ணப்பம் கேட்கப்படும் என்று இயேசு நம்பினார். ஏனெனில் அவர் எப்போதுமே தம்முடைய பிதாவின் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறார். இயேசு தன்னுடைய வாழ்நாளின் ஒவ்வொரு தருணத்திலும் விண்ணப்பித்துக் கொண்டே இருந்தார். ஆனால் இப்போது அங்கு நடைபெறும் இரகசியங்களை மக்கள் அறியும்படி சத்தமாக விண்ணப்பித்தார். பிதா எப்போதும் தம்முடைய விண்ணப்பத்திற்குச் செவிகொடுப்பதற்காக நன்றி செலுத்தினார். எந்தப் பாவமும் பிதாவையும் குமாரனையும் பிரிக்கவில்லை, அவர்களுக்கிடையில் எந்தத் தடையும் இல்லை. குமாரன் தன்னுடைய சொந்த சித்தத்தை இங்கு வலியுறுத்தவில்லை. தனக்குப் புகழையோ வல்லமையையோ அவர் நாடவில்லை. பிதாவின் முழுமையே குமாரனை இயக்கியது. பிதாவின் சித்தமே லாசருவை மரித்தோரிலிருந்து எழுப்பியது. பிதா தம்முடைய குமாரனைத் தங்களிடத்தில் அனுப்பியிருக்கிறார் என்பதை மக்கள் அறிந்துகொள்ளும்படி இயேசு இவற்றை எல்லாம் மக்கள் காதுகள் கேட்கும்படி கூறினார். ஆகவே லாசரு உயிருடன் எழுப்பப்பட்டது பிதாவுக்கு மகிமையாகவும் திரித்துவத்தின் ஒருமைக்குரிய அற்புதமான அடையாளமாகவும் காணப்பட்டது.
யோவான் 11:43-44
43 இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். 44 அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.
43 இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். 44 அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.
இறைவனுக்கு மகிமையைச் செலுத்திய பிறகு, “லாசருவே வெளியே வா” என்று இயேசு சொன்னதும் மரித்தவனுக்கு அந்த சத்தம் கேட்டது (பொதுவாக மரித்தவர்களுக்கு எந்த சத்தமும் கேட்காது). மனிதனுடைய ஆள்த்துவம் மரணத்தில் அழிந்துபோய் விடுவதில்லை. பரலோகத்தில் விசுவாசிகளுடைய பெயர்கள் எழுதப்பட்டுள்ளது. சிருஷ்டிகரின் அழைப்பு, மீட்பரின் சத்தம், உயிரளிக்கும் ஆவியின் செயல்பாடுகள் ஆகியவை மரணத்தின் அடி ஆழத்தையும் ஊடுருவிச் செல்லும். இறைவன் ஒன்றுமில்லாமையிலிருந்து உலகத்தைப் படைத்தபோது ஆழத்தின் மீது பரிசுத்த ஆவியானவர் அசைவாடிக்கொண்டிருந்தார். லாசருவுக்கு இயேசுவின் சத்தம் நன்கு தெரியும். அதற்கு அவன் கீழ்ப்படிந்திருக்கிறான். கல்லறையில் இருக்கும்போதும் அவன் அவருடைய சத்தத்தை விசுவாசத்தினால் கேட்டு கீழ்ப்படிந்தான். கிறிஸ்துவின் வாழ்வின் தத்துவம் அவனுக்குள் ஊடுருவிச் சென்றது. அவனுடைய இருதயம் துடிக்கத் தொடங்கியது, அவனது கண்கள் திறக்கப்பட்டன. அவனுடைய அவயவங்கள் அசைந்தன.
அடுத்து, அற்புதத்தின் இரண்டாவது நிலை நடைபெற்றது. ஏனெனில் லாசரு முழுவதும் சீலைகளினால் சுற்றிக் கட்டப்பட்டிருந்தான். மரித்தவன் முட்டைக்குள் இருக்கும் கூட்டுப் புழுவைப்போல இருக்கிறான். அவன் தன்னுடைய கட்டப்பட்ட கரங்களை அசைத்த முகத்தை மூடிய சீலையை நீக்க முடியாமலிருந்தது. ஆகவே இயேசு அவனுடைய கட்டுகளை அவிழ்த்துவிடும்படி கட்டளையிட்டார்.
லாசருவின் வெளிறிய முகத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். அவன் கட்டப்பட்டிருந்தாலும் அசைந்துகொண்டுதானிருந்தான். அவன் இயேசுவினிடத்தில் நெருங்கிச் சேர்ந்தபோது அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்தக் கூட்டத்தின் நடுவில் லாசருவும் தன்னுடைய வீட்டிற்கு நடந்து சென்றான். அங்கிருந்த மக்கள் இயேசுவைப் பணிந்துகொண்டதைப் பற்றியோ, உயிரோடு எழுந்தவனை உறவினர்கள் கட்டித்தழுவியதையோ, ஆனந்தக் கண்ணீரையோ யோவான் இங்கு குறிப்பிடவில்லை. இந்த உயிர்த்தெழுதலை இரண்டாம் வருகையின்போது விசுவாசிகளின் உயிர்த்ùழுதலோடு யோவான் ஒப்பிடவும் இல்லை. அவை எதுவும் அதிக முக்கியமானவை அல்ல. நாம் உயிரளிக்கும் இயேசுவை விசுவாசித்து நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இயேசுவின் சித்திரத்தை மட்டுமே யோவான் நமக்காகத் தீட்டுகிறார். அந்தக் கூட்டத்தின் நடுவில் இந்த யோவான் இருந்தார். குமாரனில் இறைவனுடைய மகிமையைக் கண்டார். கிறிஸ்துவின் சத்தத்தைக் கேட்டு அவருடைய வல்லமைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தார்.
ஈ) யூதர்களுடைய ஆலோசனைச் சங்கம் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்கிறது (யோவான் 11:45-54)
யோவான் 11:45
45 அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
45 அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
உயிரோடு எழுப்பப்பட்ட லாசரு உணவருந்தினான், குடித்தான், பேசினான். மக்கள் உயிருள்ளவனாக அவனை வீட்டிலும் வீதிகளிலும் கண்டார்கள். இயேசுவின் மகிமையைக் கண்டு பலர் ஆச்சரியப்பட்டு, உயிருள்ள இறைவனின் மகனாகிய மேசியா இவர்தான் என்று விசுவாசித்தார்கள். அவ்விதமாக சீஷர்கள் பெருகினார்கள். இயேசுவையும் லாசருவையும் காணும்படி மக்கள் மரியாளுடைய வீட்டிற்கு விரைந்தார்கள். அவர்கள் லாசருவைப் பார்க்க வந்தார்கள். இயேசுவை விசுவாசித்தவர்களாகத் திரும்பிச் சென்றார்கள்.
யோவான் 11:46-48
46 அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள். 47 அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே. 48 நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப் போடுவார்களே என்றார்கள்.
46 அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள். 47 அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே. 48 நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப் போடுவார்களே என்றார்கள்.
இந்த அற்புதத்தைப் பார்த்தவர்களில் சிலர் இயேசுவின் இந்த செயல்பாட்டைக் குறித்து பரிசேயர்களுக்குத் தகவல் சொன்னார்கள். அவர்கள் இன்னும் அவிசுவாசிகளாகத்தான் இருந்தார்கள். ஐசுவரியவானுடைய உவமையில் இயேசு சொன்னதைப் போல, “அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து எழும்புகிறவனுக்கும் அவர்கள் செவிகொடுக்க மாட்டார்கள்” (லூக்கா 16:31) என்பது இவர்களுக்கு சரியாகப் பொருந்தியது. வல்லமையான அற்புதங்களைப் பார்த்த பிறகும் இயேசவை விசுவாசிக்க மறுக்கும் கல்லான இருதயத்தை இறைவனுடைய ஆவியானவரால் மாற்ற முடியாது.
சமய நடவடிக்கைகளுக்காக உயர்மட்ட ஆலோசனைக் குழுவில் பரிசேயர்களுக்கு அதிக செல்வாக்கு உண்டு. பிரதான ஆசாரியர்கள் அவர்களுக்கு செவிகொடுப்பார்கள். எழுபது அங்கத்துவர்களும் காரியத்தைப் பற்றி விவாதிக்கக் கூடினார்கள். உயிர்தெழுதலை மறுதலித்த சதுசேயர்கள் சங்கம் கூட்டப்பட்டதை வரவேற்றார்கள். கைது செய்வதற்குரிய எந்தக் குற்றத்தையும் இயேசு செய்யாத காரணத்தினால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் அவர்கள் குழப்பமடைந்தார்கள். பஸ்காவுக்காக எருசலேமில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் நடுவில் ஒரு எழுப்புதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த விவாதங்களுக்குப் பிறகு அலோசனைச் சங்கத்தார் இயேசு ஒரு இறைவனுடைய மனிதனோ அல்லது தீர்க்கதரிசியோ அல்ல, சாதாரண மனிதன்தான் என்று முடிவு செய்தார்கள். இவ்வாறு முடிவு செய்தபோதிலும் அவருடைய அற்புதத்தை அவர்களால் மறுதலிக்க முடியவில்லை.
இந்தக் காரியங்கள் நடக்கும்போது, இவற்றை அறிந்து ரோம அரசாங்கம் இதில் தலையிட்டு விடுமோ என்ற அச்சம் ஆலோசனைச் சங்கத்தில் நிலவியது. மேசியாவைப் போல அற்புதங்களைச் செய்யும் ஒருவரைச் சுற்றி மக்கள் கூடினால் ஒரு கலகம் ஏற்பட்டுவிட்டதாகவே ரோமர்கள் கருதுவார்கள். அதனால் அவர்கள் இறைவனுடைய வாசஸ்தலமான தேவாலயத்தை மூடிவிடுவார்கள். அதோடு பலிகள், விண்ணப்பங்கள், ஆசீர்வாதங்கள் ஆகிய தேவாலயத்தின் சேவைகள் தடைப்பட்டுப் போகும்.
யோவான் 11:49-52
49 அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந்தெரியாது; 50 ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான். 51 இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும், 52 அந்த ஜனங்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்.
49 அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந்தெரியாது; 50 ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான். 51 இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும், 52 அந்த ஜனங்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்.
ஆலோசனைச் சங்கத்தில் இவ்விதமான குழப்பம் நிலவியபோது, காய்பா என்ற பிரதான ஆசாரியன் எழுந்து நின்று தேசத்தின் தலைவர்களுடைய அறியாமையைக் கண்டித்துப் பேசினான். அவன் பிரதான ஆசாரியனாயிருந்த காரணத்தினால் அவனே கூட்டத்தை தலைமையேற்று நடத்தியதால் இவ்விதம் பேசுவதற்கு அவனுக்கு அதிகாரமிருந்தது. அவன் பரிசுத்தத்தின் அடையாளமாகிய எண்ணெயினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தாலும் அவன் ஒரு அந்திக் கிறிஸ்துவாயிருந்தான். தேசத்தின் தலைவனாகிய அவன் மூலமாக இறைவன் பேசுவதற்கு அவன் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட வேண்டும். ஆனாலும் அவன் தீமையையும் கேட்டையுமே சிந்தித்தான். பிராதான ஆசாரியனாகிய அவனுடைய நிலையிலிருந்து, தீர்க்கதரிசியாக அனைத்து மக்களும் அறிவீனர் என்று அறிவித்தான்.
காய்பா எப்படிப்பட்ட ஆவியில் பேசினான் என்பது உடனடியாக் வெளிப்பட்டது. சாத்தானே அவன் மூலமாகப் பேசினான். இறைவனுடைய சித்தத்தை அவன் பேசினாலும் நடைமுறையில் இறைவனுக்கு எதிராகவே அவன் பேசினான். மக்களுக்காக இறைவனுடைய ஆட்டுக்குட்டி மரிப்பதன் மூலமாகவே அவர்கள் இறைவனுடைய கோபத்திற்குத் தப்பி, நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பிசாசின் பேச்சாளனாகிய காய்பா அரசியல் காரணங்களுக்காகப் பேசினான். “ரோமர்களுடைய கோபத்திலிருந்து நாம் தப்பிக்கும்படி இயேசு மரிக்கட்டும்” என்று அவன் சொன்னான். இந்த பிசாசுத்தனமான முன்னறிவிப்பின் மூலம் கிறிஸ்துவின் வார்த்தைகள் உறுதிப்படுகிறது. பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாகிய பிசாசு பல யூதர்களுக்குத் தகப்பன் என்று அவர் சொல்லியிருந்தார்.
பிசாசின் மனநிலையைப் பெற்றிருந்த காய்பாவின் கூற்றில் ஒரு தெய்வீக உண்மை இருந்ததை யோவான் கண்டார். அவனுடைய அதிகார பூர்வமான வார்த்தைக்கு மேலான பொருள் இருக்கிறது என்பதை உணராமல் இயேசுவின் மரணம் அனைவருக்கும் விடுதலை என்று அவன் விளக்கினான். கிறிஸ்துவின் பரிகார பலியைக் குறித்த தீர்க்கதரிசனத்தைச் சொல்லும்படி பரிசுத்த ஆவியானவர் அவனை வழிநடத்தியிருந்தாலும், அவன் இயேசுவை விசுவாசியாத காரணத்தினால் அறியாமையுள்ளவனும் சிந்தனையற்றவனுமாக காய்பா காணப்பட்டான். அவன் எதிரிடையான காரியத்தைச் சொன்னதால் தன்னுடைய கூற்றின் மெய்யான பொருள் என்வென்பதை அவன் அறியாதிருந்தான்.
உலகத்தின் இரட்சிப்பைக் குறித்த பரந்த அர்த்தமுடையதாக யோவான் இந்தக் கூற்றைப் பார்த்தார். இயேசு தன்னுடைய மக்களின் பாவங்களுக்காக மட்டும் மரிக்காமல் அனைத்து இனத்தைச் சேர்ந்த மக்களுடைய பாவங்களுக்காகவும் மரித்தார். அவரை விசுவாசிக்கிறவர்கள் அவருடைய பிள்ளைகளாகி, நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
நம்முடைய விசுவாசத்தின் நோக்கம் நம்முடைய தனிப்பட்ட இரட்சிப்பு மட்டுமல்ல, இறைவனுடைய அனைத்து மக்களும் கிறிஸ்துவில் ஒன்றுபடுதல். அவருடைய அன்பே கிறிஸ்தவத்தின் அடையாளமாகவும் வல்லமையாகவும் காணப்படுகிறது. அவருடைய பெயர் அவருடைய சீஷர்களை இணைக்கிறது. அவர்கள் தங்கள் இரட்சகரோடு இணையும்போது ஒருவரோடொருவர் இணைகிறார்கள். நாம் வேகமாக எழுந்து அவரிடம் சென்று, நாம் இறைவனுடைய குடும்பத்தில் சகோதர சகோதரிகள் என்பதை அறிந்துகொள்வோம். இந்த உறவு உலக உறவுகளைவிட நெருக்கமானது.
யோவான் 11:53-54
53 அந்நாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள். 54 ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார்.
53 அந்நாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள். 54 ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார்.
ஆலோசனைச் சங்கத்திலிருந்த சிலருக்கு காய்பாவின் இந்த முன்னறிவிப்பு வேதனையைக் கொடுத்தது. ஆனால் பெரும்பான்மையானவர்கள் இறைவன் காய்பாவின் மூலமாகப் பேசி, ஏமாற்றுக்காரனைத் தண்டித்து தேசத்தைக் காப்பாற்றுகிறார் என்று நினைத்து மகிழ்ச்சியடைந்தார்கள். எல்லாரும் அதை ஏற்றுக்கொண்டு இயேசுவை அவர்கள் கொலைசெய்ய முடிவு செய்தார்கள். அவர்களில் நீதியுள்ள சிலர் அதை எதிர்த்தார்கள். ஆனால் யாரும் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. மக்கள் நடுவில் குழப்பம் ஏற்படாதபடி இரகசியமாக இயேசுவைக் கொல்ல வேண்டும் என்ற திட்டத்தை நோக்கி காய்பா வெற்றிகரமாக சங்கத்தை வழிநடத்திச் சென்றான்.
இயேசு இந்த சதித்திட்டத்தைக் கேள்விப்பட்டு, ஆலோசனைச் சங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அப்பால் சென்று நெபுலசின் கிழக்குப்பகுதியான யோர்தான் பள்ளத்தாக்குப் பகுதியில் தங்கினார். அங்கு அவர் தன்னைப் பலியிடுவதற்கும் உயிர்த்தெழுவதற்குமான நேரத்திற்காகக் காத்திருந்தார்.
அவருடைய போர்க்களம் தெளிவாகக் காணப்பட்டது. தேவாலயத்தைச் சுத்திகரிப்பதில் ஆசாரியர்களுடன் அவருக்கு ஏற்பட்ட முரண்பாடு, சீஷர்களுக்கும் சட்டவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட சர்ச்சை, ஓய்வு நாளில் குணமாக்கியதால் ஏற்பட்ட குழப்பம் ஆகியவை லாசருவை உயிரோடு எழுப்பியதும் உச்ச கட்டத்தை அடைந்தது. ஆகவே தங்களுக்கு நன்மை செய்ய வந்தவரை ஒரேயடியாகக் கொலைசெய்ய வேண்டும் என்று மக்களுடைய தலைவர்கள் முடிவு செய்தார்கள்.
ஒளி இருளில் பிரசாகிக்கிறது, ஆனால் இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. அன்புள்ள சகோதரனே கிறிஸ்துவே ஒளி என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? அவருடைய நற்செய்தி உங்கள் மனதுக்கு ஒளியூட்டி, உங்கள் இருதயத்தைப் புதுப்பித்திருக்கிறதா? நித்திய வாழ்வை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா? பரிசுத்த ஆவி உங்களை மனந்திரும்புதலுக்குள்ளும் பாவ அறிக்கைக்குள்ளும் வழிநடத்தியிருக்கிறாரா? உங்களுக்குள் விசுவாசத்தைக் கொடுத்து உங்களைப் பரிசுத்தப்படுத்தியிருக்கிறாரா? உங்களைப் பரிசுத்த ஆவிக்குத் திறந்துகொடுங்கள். கிறிஸ்தவினிடத்தில் சேர்ந்து உங்கள் வாழ்க்கையை அவருக்கு ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது நீங்கள் அவருடைய எதிரிகளுடன் சேர்ந்து அவரை நியாயம்தீர்ப்பதிலிருந்து தப்பிப்பீர்கள். மாறாக அவருடைய சீஷர்களுடன் சேர்ந்து, பரிசுத்தரை அறிந்து, “நாங்கள் அவருடைய மகிமையைக் கண்டோம். அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஒப்பான மகிமையாக கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்திருந்தது” என்று அறிக்கையிடுவீர்கள்.
1. இயேசு பெத்தானியாவில் அபிஷேகம் செய்யப்படுதல் (யோவான் 11:55 – 12:8)
யோவான் 11:55-57
55 யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்ளும்பொருட்டு நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள்.56 அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கையில், ஒருவரையொருவர் நோக்கி: உங்களுக்கெப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள். 57 பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனாவது அறிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார்கள்.
55 யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்ளும்பொருட்டு நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள்.56 அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கையில், ஒருவரையொருவர் நோக்கி: உங்களுக்கெப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள். 57 பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனாவது அறிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார்கள்.
பழைய ஏற்பாட்டின் முக்கிய பண்டிகை பஸ்கா பண்டிகையாகும். எகிப்தில் எபிரெயர்கள் அனுபவித்த தேவகோபாக்கினையிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டது அப்பண்டிகையில் கொண்டாடப்பட்டது. அவர்களுக்குக் கிடைத்த விடுதலையின் மூலமாக அவர்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்ட தெய்வீக ஆட்டுக்குட்டியின் பாதுகாப்பின்கீழ் அவர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களாக இருந்தபோதிலும் அவர்களுடைய விசுவாசத்தின் நிமித்தம் காக்கப்பட்டார்கள்.
இறைவன் தங்களை தன்னுடைய கோபத்திலிருந்து பாதுகாத்ததற்காக நன்றி செலுத்தும்படி யூதர்கள் வருடந்தோறும் எருசலேமிற்குச் செல்வார்கள். அவர்கள் எண்ணற்ற ஆட்டுக்குட்டிகளைக் கொன்று தின்பார்கள். பலர் சற்று முன்பாகவே எருசலேமிற்குச் சென்று, இறைவனுடைய ஆட்டுக்குட்டியுடன் இணைக்கப்படுவதற்கு மனந்திரும்பி, பஸ்காவிற்காக ஆயத்தப்படுவார்கள். அவர்களில் யாராவது பிணத்தைத் தொட்டுவிட்டால், அவர்கள் தேவாலயத்திற்குள் நுழைவதற்குத் தகுதியடையும்படி ஏழுநாட்களுக்கு தொடர்ச்சியான சுத்திகரிப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும் (எண். 19:11).
இந்தச் சூழ்நிலையில் எருசலேமிற்கு வந்திருந்த யூதர்கள் “அவர் எருசலேமிற்கு வருவாரா, இல்லையா?” என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். சயமத் தலைவர்களின் சங்கம் இயேசுவைக் கொல்லத்திட்டமிட்டுள்ளது என்பதும் அவர்களுக்குத் தெரியும். இயேசுவின் நடமாட்டைத்தைக் கண்காணித்துத் தங்களுக்கு தகவல் தரும்படிய உளவாளிகளையும் அத்தலைவர்கள் நியமித்திருந்தனர். இயேசுவை விழுங்குவதற்கு மரணத்தின் வாய் திறந்திருந்தது.
யோவான் 12:1-3
1 பஸ்கா பண்டிகை வர ஆறுநாளைக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார். 2 அங்கே அவருக்கு இராவிருந்துபண்ணினார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான். 3 அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.
1 பஸ்கா பண்டிகை வர ஆறுநாளைக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார். 2 அங்கே அவருக்கு இராவிருந்துபண்ணினார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான். 3 அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.
இயேசு தன்னுடைய எதிரிகளுடைய தந்திரத்தைக் கண்டு பயப்படவில்லை. தன்னுடைய பிதாவின் சித்தத்தின்படி அவர் எருசலேமை நோக்கிய தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தார். அவர் மரணத்திலிருந்து தப்பித்துக்கொள்ள நாடாமல், பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே எருசலேமிற்குத் திரும்பி வந்தார். எருசலேமிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருந்த பெத்தானியா வழியாக அவர் பயணத்தை மேற்கொண்டார். இறந்து போனவனை உயிருடன் எழுப்பி, தன்னுடைய வல்லமையை வெளிப்படுத்தி, பிதாவை மகிமைப்படுத்திய அந்த வீட்டிற்கு அவர் வந்தார். உயிரோடு எழுப்பப்பட்ட லாசரு உணவருந்தினான், சந்தை வெளியில் நடந்து திரிந்தான். மக்கள் அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டாலும், ஆவிகளைக் குறித்த பயமும் அவர்களுக்கிருந்தது.
மரியாளும், மார்த்தாளும், லாசருவும் இறைவனுடைய மகிமையை அனுபவித்து, ஆலோசனைச் சங்கத்தின் மிரட்டலுக்குப் பயப்படாமல் அதைக் குறித்து சாட்சியிட்டார்கள். லாசரு இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் வரவேற்று, மகிழ்ச்சி பொங்க அவர்களுக்கு விருந்தளித்தான். லாசரு இயேசுவின் நண்பனாக இருந்து, உணவருந்தும்போது தன்னை மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பிய இயேசுவிற்கு அருகில் அமர்ந்திருந்தான். இந்தக் காட்சி பரதீûஸக் குறித்து நமக்கு சில காரியங்களைப் போதிக்கவில்லையா? அங்கு இறைவன் நமக்குத் தூரமானவராக இருக்க மாட்டார். மகிமையில் நாம் அவரோடு அமர்ந்திருப்போம்.
விருந்துபசாரத்தில் சிறந்தவளாகிய மார்த்தாள், இயேசுவே மரணத்தை வெற்றிகொண்ட மெய்யான மேசியா என்பதை அறிந்தவளாக தன்னுடைய வீட்டை அவருக்குத் திறந்துகொடுத்தாள்.
அதிக ஆவிக்குரிய தன்மையுள்ளவாளாகிய மரியாளோ, தனக்கே உரிய பாணியில், ஒரு கூலித்தொழிலாளியின் ஒரு வருட உழைப்பிற்குச் சமனான விலையுள்ள ஒரு வாசனைப் பொருளைக் கொண்டுவந்தாள். மரியாள் தான் அதிகம் போற்றிக் காத்ததை இயேசுவுக்குக் கொடுக்க விரும்பினாள். ஆயினும் அவருடைய தலையை அபிஷேகிக்க தனக்கு தகுதியில்லை என்று உணர்ந்த காரணத்தினால் அவருடைய பாதத்தை அந்த விலைமதிப்புள்ள தைலத்தினால் அபிஷேகம் செய்தாள். அன்பு என்பது ஈனமானதல்ல, பெரிய தியாகங்களைச் செய்யக்கூடியது. அதன் பிறகு அவள் தன்னுடைய தலைமுடியை வைத்து அவருடைய பாதத்தைத் துடைத்தாள். உண்மையோடும் பரிசுத்தத்தோடும் செய்த இந்த அன்பின் செயல் அந்த வீட்டை வாசனையினால் நிரப்பியது. அங்கிருந்த அனைவரும் மரியாளுடைய தியாகத்தின் வாசனையை நுகர்ந்தார்கள்.
யோவான் 12:4-6
4 அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிகொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து 5 இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான். 6 அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.
4 அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிகொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து 5 இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான். 6 அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.
யூதாஸ் இயேசுவை நேசித்ததைவிட பணத்தை அதிகமாக நேசித்தான். மெய்யான விசுவாசத்தைவிட பொருளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தான். ஆகவே அவன் மரியாளுடைய அந்தத் தியாகச் செயலுடன் தொடர்புடைய ஆவிக்குரிய ஆசீர்வாதத்தைப் புறக்கணித்து, அதைப் பொருளாதார ரீதியாகக் கணிப்பிடத் தொடங்கினான். மரியாளுடைய நன்றியுணர்வு, ஆராதனை, இயேசுவிடமான அவளுடைய ஒப்படைப்பு போன்றவற்றை அவன் சற்றும் புரிந்துகொள்ளவில்லை. யார் பணத்தை நேசிக்கிறார்களோ அவர்கள் பிசாசுகளாகிவிடுகிறார்கள். அவன் இயேசுவின் மீதிருந்திருந்த தனது வெறுப்பை மறைக்கும்படி, தான் ஏழைகள் மீது அதிக அக்கறையுள்ளவன் போல தன்னைக் காட்டி, போலியான பக்தியை வெளிப்படுத்தினான். ஆனால் உண்மையில் அவன் ஏழைகளைக் குறித்து அக்கறையுள்ளவனல்ல. அவன் ஏழைகளுக்காக எதையும் கொடுக்க மாட்டான். அனைத்தையும் தானே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவன். தன்னுடைய திருட்டுத்தனத்தை மறைக்க அவன் ஏழைகளைப் பற்றிப் பேசுகிறான். ஆனால் அவன் உண்மையில் எப்போதும் தன்னுடைய பணப்பையை நிறைக்க விரும்பும் திருடன்.
பொருளாளனாயிருந்த அவனுடைய கணக்கை இயேசு ஒருபோதும் சரிபார்க்கவில்லை. இறுதியில் அவனே தன்னுடைய ஏமாற்று வேலையையும் பாவத்தையும் அறிந்துகொள்ளும்படி விட்டுவிட்டார். யூதாஸ் ஒரு கொள்ளைக்காரனாகவும், பணத்தின் மேன்மைகளினால் தன்னை நிறைத்துக்கொள்ள விரும்பிய ஒரு அடிமையாகவும் இருந்தான். சகோதரனே நீங்கள் இறைவனுக்கும் பணத்துக்கும் ஒரே நேரத்தில் சேவை செய்ய முடியாது. நீங்கள் ஒன்றை நேசித்து மற்றதை வெறுப்பீர்கள். உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். இறைவன்தான் உங்களுடைய வாழ்க்கையின் நோக்கமாயிருக்கிறாரா அல்லது சுகபோகமான வாழ்க்கையை நீங்கள் நாடுகிறீர்களா?
யோவான் 12:7-8
7 அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள். 7 தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்றார்.
7 அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள். 7 தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்றார்.
நாம் பணத்தை வீணடிப்பதைக் இறைவன் விரும்புவதில்லை. நாம் ஒருவர் மற்றவருடைய பாதத்தில் இவ்வித விலையுயர்ந்த தைலங்களை ஊற்றவேண்டும் என்றும் அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை. நாம் நம்மைச் சுற்றியுள்ள ஏழைகளுடைய தேவைகளைக் கண்திறந்து பார்த்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். எந்த அரசியல் கட்சியோ, சமயமோ அல்லது தத்துவமோ ஏழைகள் எப்போதும் நம்மிடம் இருப்பார்கள் என்ற கிறிஸ்துவின் வார்த்தைகளை அழித்துப்போட முடியாது. நம்முடைய சுயநலம் பெரியது, நமது அன்போ சிறியது. ஆவிக்குரிய சோசலிசம் இவ்வுலகில் ஏற்பட முடியாது. அனைவரும் தங்களுடைய வரங்கள், செல்வம், மற்றும் மதிப்பு ஆகியவற்றில் ஒன்றுபோல இருக்க முடியாது. நாம் கிழக்கு நோக்கிச் சென்றாலும் மேற்கு நோக்கிச் சென்றாலும், பரிதாபமானவர்களையும், புறக்கணிக்கப்பட்டவர்களையும், தனிமைப்படுத்தப்பட்டவர்களையும் நிச்சயமாகக் காண்போம். நீங்கள் கிராமத்திற்கோ, நகரத்திற்கோ எங்கு சென்றாலும் அங்குள்ள ஏழைகளின் முகத்தில் கிறிஸ்துவைக் காணலாம்.
மனிதருடைய இருதயம் கல்லைப்போலக் கடினமானது என்பது இயேசுவுக்குத் தெரியும். அப்படிப்பட்டவர்களை நேசித்து அவர்களுக்காக தன்னுடைய உயிரைக் கொடுக்கவே அவர் இவ்வுலகத்தற்கு வந்தார். மேலும் தன்னுடைய அடக்கத்திற்கு அடையாளமாகவே மரியாளைக் கொண்டு பரிசுத்த ஆவியானவர் இச்செயலைச் செய்தார் என்பதையும் அவர் அறிவார். தெய்வீக அன்பு மக்களுடைய இதயங்களை நிரப்பும்போது, எதிர்பாராத ஆச்சரியங்களை நிகழ்த்தும்படி அவர் மக்களை நடத்துவார். தெய்வீக விருந்தாளியாகிய மரியாளை மகிமைப்படுத்த மரியாள் எண்ணினாள், ஆகவே பரிசுத்த ஆவியானவர் காலத்திற்கு முன்பாகவே அவரை அபிஷேகிக்கும்படி மரியாளை நடத்தினார். நன்மையும் கிருபையும் நிறைந்த இறைவனோடு இந்த பாவம் நிறைந்த உலகத்தை ஒப்புரவாக்கும் பணியைக் கிறிஸ்து ஆரம்பிக்கிறார்.
நன்றி:
Water of life