இரண்டாம் எருசலேம் பயணம் (யோவான் 5:1-47)

அ - இரண்டாம் எருசலேம் பயணம் (யோவான் 5:1-47) -- கருப்பொருள்: இயேசுவுக்கும் யூதர்களுக்குமிடையில் பகைமை ஏற்படுதல்

1. பெதஸ்தாவில் திமிர்வாதக்காரனைக் குணமாக்குதல் (யோவான் 5:1-16)


யோவான் 5:1-9
1 இவைகளுக்குப்பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார். 2 எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டுவாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு. 3 அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். 4 ஏனெனில் சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கின பின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதியஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான். 5 முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான். 6 படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதியஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார். 7 அதற்கு வியாதியஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான். 8 இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். 9 உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.

இயேசு ஒன்பது மாதங்கள் கலிலேயாவில் செலவு செய்துவிட்டு, கூடாரப் பண்டிகையின்போது எருசலேமிற்குத் திருமபச் சென்றிருக்க வேண்டும். தலைநகரில் தான் விசுவாசத்தின் போராட்டம் ஒரு இறுதிக் கட்டத்தை அடையும் என்று அவர் அறிந்திருந்தார். இயேசு நியாயப்பிரமாண வாதிகளையும் பக்திமார்க்கத்தாரையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தபோதிலும் அவர் உண்மையோடு நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டார். எப்பொழுதெல்லாம் சமயம் வாய்த்ததோ அப்பொழுதெல்லாம் ஒரு வருடத்தில் மூன்று முறை எருசலேமிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார் (உபா. 16:16).
நகரத்தின் நடுவில் ஒரு குளம் இருந்தது, சில கிரேக்க வாசகத்தின்படி எப்பொழுதாவது ஒரு தேவதூதன் வந்து அந்த குளத்தைக் கலக்குவான். எரோது அந்தக் குளத்தைச் சுற்றிலும் தூண்களோடு கூடிய மண்டபங்களைக் கட்டியிருந்தார். இந்த மண்டபங்களின் அழிபாடுகள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அமைப்பு இரக்கத்தின் வீடு என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் சுகவீனமான பலர் அந்த இடத்திற்கு வந்து, சுகமடையும்படி தண்ணீர் கலங்குவதற்காகக் காத்திருப்பார்கள். அவ்வாறு தண்ணீர் கலங்கும்போது தண்ணீருக்குள் இறங்குகிறவர் சுகமடைவார் என்று அவர்கள் நம்பினார்கள்.
சுகவீனமான மக்களால் சூழப்பட்டிருந்த அந்தக் குளத்திற்கு இயேசு சென்று முப்பத்தெட்டு வருடங்களாக சுகவீனமான ஒரு மனிதன் வேதனையும் கசப்பும் நிறைந்தவராக அங்கிருப்பதைக் கண்டார். அந்த முடவனுக்கு மற்றவர்கள் மீது வெறுப்பும் இருந்தது. இந்த இரக்கத்தின் வீட்டில் அனைவரும் தங்களுக்காகவே வந்திருந்தார்கள், இந்த முடவன் மீது இரக்கம் காட்ட ஒருவருமில்லை. ஆனால் அவர் தன்னுடைய நம்பிக்கையை இழந்து விடாமல், தெய்வீக சுகத்தைப் பெற்றுக்கொள்ளும் அரிதான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார். திடீரென்று மனுவுருவான இரக்கம் அவருக்கு முன் வந்து நின்று, குளத்தை நோக்கிக் கொண்டிருந்த அவரை தன்னை நோக்கும்படிசெய்து தன்னுடைய குணமாக்கும் பணியை ஆரம்பித்தார். பிறகு முடவனுடைய சித்தத்தைத் தூண்டி சுகத்தைப் பெற்றுக்கொள்ளும்படி செய்தார். இயேசுவிடம் இந்த முடவன் தன்னுடைய குறைகளைச் சொல்லும் வாய்ப்பை இயேசு அவருக்கு அளித்தார். அவர், யாரும் என்னைக் கவனிப்பதில்லை! பலமுறை நான் சுகத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சித்திருக்கிறேன். ஆனால் என்னுடைய நம்பிக்கை வாடிப்போகிறது. யாரும் என்னை விசாரிப்பதில்லை. ஒருவேளை நீர் தண்ணீர் கலங்கும்வரை எனக்காகக் காத்திருந்து என்னை தண்ணீரில் இறக்கி விடுவீரா? என்றார்.
யாரும் எனக்காகக் கவலைப்படுவதில்லை! சகோதரனே இதுதான் உங்கள் நிலைமையா? மற்றவர்கள் உங்களைப் புறக்கணிக்கிறார்களா? இயேசு உங்களுக்காக நிற்கிறார் என்று நாங்கள் உங்களிடம் கூறுகிறோம். அவர் உங்களைப் பற்றி விசாரித்து உங்களைக் கண்டுபிடிக்கிறார். அவர் உங்களுக்கு உதவிசெய்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த முடவனும் இக்காரியங்களைத்தான் உணர்ந்தான். அவனுடைய கேள்விகள் இயேசுவின் காதில் விழுந்தன. அவருடைய இரக்கம் அன்பின் கர்த்தர் மீது அவனுக்கு நம்பிக்கையை உருவாக்கியது.
இந்த பரிதாபமான மனிதனுடைய சுகமாக வேண்டும் என்ற விருப்பத்தையும் இயேசு தன்னை விடுவிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் கண்டபோது அவர், எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று கட்டளையிட்டார். இது நடக்க முடியாத காரியத்தை நடக்கக்கூடியதாக மாற்றும் தெய்வீக கட்டளை. முடவன் கிறிஸ்துவின் வார்த்தையை நம்பினார், அவரிடமிருந்து புறப்பட்டு வந்த வல்லமையை விசுவாசித்தார். அது அவருடைய எலும்புகளில் ஓடி, அவருடைய சரீரத்தை உயிர்ப்பித்தது. அவர் பெலன் பெற்று சுகமடைந்தார்.
உடனடியாக அந்த மனிதன் சந்தோஷத்தினால் துள்ளி எழுந்து நின்று தன்னுடைய தலைக்கு மேலாக தன் படுக்கையைச் சுமந்தவனாக புறப்பட்டுப் போனான். அவருடைய விசுவாசத்தின் விளைவாக கிறிஸ்துவினுடைய வார்த்தையின் வல்லமை உடனடியான சுகத்தை அவருக்குக் கொடுத்தது.

யோவான் 5:10-13
10 ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள். 11 அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைச் சொஸ்தமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான். 12 அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள். 13 சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னாரென்று அறியவில்லை; அவ்விடத்தில் ஜனங்கள் கூட்டமாயிருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார்.
அடிப்படைவாதிகளும் நியாயப்பிரமாணவாதிகளுமான சிலரைத் தவிர பெதஸ்தா மண்டபத்திலிருந்த அனைவரும் மகிழ்வுற்றனர். இந்த மத வெறியர்களின் பொறாமை பயித்தியக்காரத்தனமானது. அதிலும் இயேசு ஓய்வுநாட்களில் சுகமாக்கும்போது அதிக பொறாமை கொண்டார்கள். இயேசு அந்த மனிதனைச் சுகப்படுத்தியதோடு மட்டுமன்றி, அவர் தன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு தெருவில் நடந்துபோகவும் கட்டளை யிட்டிருந்தார். ஓய்வுநாளில் அனைத்து வேலைகளும் தடை செய்யப்பட்டிருந்த காரணத்தினால் இதுவும் அவர்களுக்குப் பாவமாகத் தெரிந்தது. இந்த சட்டத்தை மீறுபவர்கள் யாரும் கொல்லப்பட வேண்டும் (எண். 15:32 - 36). தங்களது இனம் முழுவதும் ஓய்வுநாளை நுட்பமாகக் கைக்கொண்டால் ஒழிய மேசியா வரமாட்டார் என்று யூதர்கள் நினைத்தார்கள்.
தன் படுக்கையைச் சுமந்துகொண்டு செல்லும் ஒரு மனிதனை யூதர்கள் உடனடியாகக் கல்லெறிய மாட்டார்கள். முதலில் ஒரு எச்சரிப்பைக் கொடுப்பார்கள். இங்கே யூதர்கள் அவருடைய செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததும் இவ்விதமான ஒரு எச்சரிப்பே. ஆனால் சுகமான மனிதன் தன்னுடைய முழு மையான சுகத்திற்கு ஒரு நிபந்தனையாக நான் என் படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்க வேண்டும் என்று இயேசு கட்டளை யிட்டதாக தன்னுடைய செயலை நியாயப்படுத்தினார்.
நியாயப்பிரமாணவாதிகள் கோபப்பட்டார்கள். அந்த மனிதன் சுகமடைந்தது அவர்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை. அந்த சுகமாக்குதலில் இருந்த இயேசுவின் அன்பின் அதிகாரத்தையும் அவர்களால் உணர முடியவில்லை. சுகவீனமாயிருந்த மனிதனை ஓய்வுநாளில் படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்கச்சொன்ன இயேசுவின் மீது பொறாமையும் வெறுப்பும் கொண்டவர்களாக அதைப் பற்றி விவாதித்தார்கள். ஆகவே, அவர்களுடைய கருத் துப்படி இயேசுவே கொலைசெய்யப்பட பாத்திரமான குற்றவாளி.
இயேசு ஒரு அந்நியராயிருந்தபடியால் தன்னைச் சுகப்படுத்தியது யார் என்று சுகமானவருக்குத் தெரியவில்லை. இதுதான் பெத்சாயிதாவுக்கு இயேசு செல்லும் முதல்முறை. சுகமாக்கிய தற்குப் பிறகு அவர் காணமல்போனார். சுகமானருடைய விசுவாசம் அற்புதங்களில் அல்ல, அன்பின் நபராகிய தன்னில் காணப்பட வேண்டும் என்று இயேசு விரும்பினார்.
யோவான் 5:14-16
14 அதற்குப் பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ் செய்யாதே என்றார். 15 அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான். 16 இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்.
இயேசு தான் சுகமாக்கிய மனிதனைத் தேடி, தேவாலயத்தில் அவர் இறைவனைப் புகழ்ந்துகொண்டிருக்கும்போது கண்டு பிடித்தார். அவர் இயேசுவைப் பார்த்தபோது ஒரே வேளையில் பயமும் மகிழ்ச்சியும் உடையவராக காணப்பட்டார். அவருக்கு இயேசு என்ன சொன்னார் என்று நமக்குத் தெரியும்: நீ சுகமாக்கப்பட்டிருக்கிறாய். 38 வருடங்களாக சுகவீனமாயிருந்த உன்னைச் சுகப்படுத்திய அற்புதத்தின் அளவை உணர்ந்துகொள். இது மனிதனுடைய செயல் அல்ல, இறைவனுடைய செயல். மனுவுருவான இறைவனே உன்னுடைய இருதயக் கண்களைத் திறந்திருக்கிறார்.
உன்னுடைய பாவங்கள் உனக்குத் தெரியும். இறைவனற்ற வாழ்க்கையே உனக்கு இந்தப் பேரிடரைக் கொடுத்தது. என்னுடைய சுகமாக்குதலினால் உன்னையும் உன்னுடைய பாவங் களையும் மன்னித்து விட்டேன். அவருடைய உள்ளான மனிதனில் சுகம் கிடைக்க பாவம் செய்யாமல் தனக்குக் கீழப்படிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இனிமேல் அந்தப் பாவத்திற்குத் திரும்ப மாட்டேன் என்ற தீர்மானம் மன்னிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியம். கிறிஸ்துவின் வார்த்தையை ஏற்றுக்கொண்டு, வேதனையோடு மனந்திரும்பி, தெய்வீக வல்லமையைப் பெற்றுக்கொள்ளும் எந்த நபரும் இறை வனுடைய உதவியினால் தீமையை மேற்கொள்ள முடியும். நம்மால் இயலாத காரியத்தைக் கிறிஸ்து நம்மிடத்தில் கேட்ப தில்லை. அவர் தம்முடைய பரிசுத்த ஆவியானவரைத் தருகிறார், அவருடைய வல்லமையின் மூலம் நாம் நம்முடைய சரீர சோதனைகளையும் நமக்கு விருப்பமான பாவங்களையும் மேற் கொள்ள முடியும். சத்திய ஆவியானவர் தீமையைத் தவிர்க்கவும் எதிர்த்து நிற்கவும் நம்மை பெலப்படுத்துகிறார்.
சில வேளைகளில் இறைவன் நம்மை அவரிடம் திரும்பக் கொண்டு வருவதற்கு நோய்களையும் காயங்களையும் அன்போடு அனுப்புவதுண்டு. வேறு சமயங்களில் இறைவனிடமாக நாம் கடினப்படும்போது செல்வமும் சுகபோகமும் இறைவனுடைய தண்டனையாக நமக்கு வரும். அப்போது ஒரு மனிதன் பிசாசின் குணாதிசயங்களை உடையவனாக மாறி நித்திய அழிவைப் பெறுவான். பாவத்தோடு விளையாடாமல், உங்களுடைய குறிப் பான அடிமைத் தனத்தை அவரிடம் ஒப்புக்கொண்டு உங்களை விடுவிக்கும்படி கேளுங்கள். இயேசுவுக்கும் உங்களுடைய பாவத்திற்கும் இடையில் நீங்கள் ஒரு நடுநிலை எடுக்காதீர்கள். பாவத்தின் மீதான உங்கள் நாட்டத்தை உடைத்துப் போடுங்கள். உங்களுடைய இரட்சகரிடம் ஒரு உடன்படிக்கையில் வாக்களி யுங்கள், அவர் உங்களை இறுதிவரை காப்பார்.
என்ன ஆச்சரியம்! இயேசுவின் ஆலோசனையைக் கேட்ட பிறகு சுகமடைந்த மனிதன் யூதர்களிடம் ஓடிச்சென்று நசரேயனாகிய இயேசுவே தன்னைச் சுகப்படுத்தினார் என்றும் அவரே நியாயப்பிரமாணத்தை விட்டு விலகச் செய்தார் என்று அவர்களிடம் கூறினார். அந்த மனிதன் இயேசுவை கைது செய்வதற்கு உதவக்கூடிய ஒரு உளவாளியாகச் செயல்படுவான் என்று யூதர்கள் நம்பியிருக்கலாம்.
இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்த பிறகு ஆசாரியர்கள் காண் பித்த வெறுப்பைவிட, இயேசு இந்த மனிதனைச் சுகமாக்கிய பிறகு பரிசேயர்கள் காண்பித்த பகைமை அதிக கொடூரமானதாக இருந்தது. இயேசு அவர்களுடைய நீதி குறைவானது என்பதைக் காண்பித்தார். சுயநல நோக்கத்திற்காக நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுதல் நீதியாகாது என்று கூறினார். இறைவன் இரக்கத்தையும் அன்பையுமே எதிர்பார்க்கிறார். அன்பற்ற பரிசுத்தம் பொய்யானது. இறைவன் சடங்குகளை அல்ல இரக்கத் தையே நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார். ஆயிரக் கணக்கான சட் டங்களிலிருந்து நம்மை விடுவித்து, அன்பென்னும் ஒரே கட்டளையைக் கொடுத்திருக்கிற இறைவனுக்கு நன்றி.

யோவான் 5:17-20
17 இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்துவருகிறார், நானும் கிரியை செய்துவருகிறேன் என்றார். 18 அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலை செய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.
பெதஸ்தாவின் குணமாக்குதலுக்கு முன்பாக இயேசுக்கிருந்த எதிர்ப்பு சிறிய அளவிலானது. ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அது பெருகியது. அவருடைய எதிரிகள் அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்தார்கள். ஆகவே அந்த அற்புதம் யூதர்களுடனான அந்த உறவைப் பொறுத்தவரை ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இதன் பிறகு இயேசு துன்பங்களை அனுபவித்தார், குற்றவாளியாகக் கருதப்பட்டார். நிகழ்ச்சிகள் இவ்வாறு மாற்றமடைவதற்குக் காரணம் என்ன?
கிறிஸ்துவினுடைய அன்பின் செயல்பாட்டிற்கும் நியாயப் பிரமாணத்தின் அதிகாரத்தினுடைய கடுமைக்கும் இடையில் ஒரு போராட்டம் ஆரம்பித்தது. பழைய ஏற்பாட்டில் மக்கள் சிறைச் சாலையில் இருப்பதைப் போல வாழ்ந்தார்கள். நற்கிரியை களினால் உண்டாகும் நீதியைப் பெற்றுக்கொள்ளும்படி நியாயப் பிரமாணத்தை நுணுக்கமாக மக்கள் கைக்கொள்ள வேண்டும் என்று பல தண்டனைகள் கொடுக்கப்பட்டன. பக்தியுள்ள மக்கள் தெய்வீக அனுக்கிரகத்தைப் பெறும்படி நியாயப்பிரமாணத்தின் சிறிய விவரங்களைக்கூட மீறாதபடி கவனத்துடன் இருந்தார்கள். சுயநலத்திற்கும் அன்பற்ற தன்மைக்கும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுதல் என்பது ஒரு சாக்குப்போக்காகிப் போனது. இறைவனுடனான உடன்படிக்கையில் அந்த இனம் வாழ்ந்த படியினாலும், முழுச்சமுதாயமும் ஒன்றாகக் கருதப்பட்ட படியினாலும் சில தீவிரப் போக்குடையவர்கள் தங்களுடைய எண்ணற்ற விதிமுறைகளுக்கு எல்லாரும் கீழ்ப்படிய வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஓய்வுநாளில் வேலைசெய்வதற்கான தடை மிகவும் முக்கியமானது. ஏழாவது நாளில் இறைவன் தன்னுடைய படைப்பின் செயலைவிட்டு ஓய்ந்திருந்தபடியால், அந்த ஆராதனை நாளில் மனிதர்களும் எந்தவொரு வேலையும் செய்யக்கூடாது என்று தடைசெய்யப்பட்டிருந்தது. மீறுபவர் களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
யூதர்களுக்கும் அவர்களுடைய இறைவனுக்கும் இடையில் காணப்படும் இணக்கத்தின் அடையாளமாக ஓய்வுநாள் கருதப் பட்டது. ஏதோ, அவர்கள் இறைவனுடைய பிரசன்னத்தைக் கெடுக்கும் எந்தப் பாவத்தையும் செய்யாதவர்கள் போல, இந்த ஓய்வுநாள்தான் அவர்கள் நடுவில் அவருடைய பிரசன்னத்திற்கும் அடையாளமாகக் கருதப்பட்டது.
இயேசு ஓய்வுநாளைக் குறித்த கட்டளையை மீறினார் என்ற பரிசேயர்களுடைய குற்றச்சாட்டிற்கு இயேசு கொடுத்த எளிமையான பதில் இறைவன் வேலை செய்கிறார் என்பதே. பரிசேயர்களிடமான இயேசுவின் கூற்றில் ஏழுமுறை வேலை செய்தல் போன்ற, வேலை என்ற வார்த்தையையும் அதிலிருந்து வரும் மற்ற வார்த்தைகளையும் நாம் வாசிக்கிறோம். அவர் களுடைய உணர்ச்சியற்ற நியாயப்பிரமாணவாதத்திற்கு இயேசுவின் பதில் இறைவனுடைய அன்பின் செயல்பாட்டை அறிவிப்பதாகவே இருந்தது. இறைவனுடைய படைப்பின் செயலிலிருந்து அவர் எப்படி ஓய்ந்திருக்க முடியும், அவர் எப்படி தொடர்ந்து வேலை செய்கிறார்? பாவம் உலகத்தில் பிரவேசித்து, அனைத்து படைப்புகளையும் கெடுத்து, அண்டத்தை அதன் ஆதாரத்திலிருந்து பிரித்ததிலிருந்து, வழிதவறியவர்களை இரட்சிப் பதில் இறைவன் வல்லமையோடு செயல்படுகிறார், கலகம் செய்தவர்களைத் தன்னுடனான ஐக்கியத்திற்குள் கொண்டு வருகிறார். நம்முடைய பரிசுத்தமே அவருடைய நோக்கம். நாம் அவருடைய அன்பைத் தூய்மையில் அறிந்திருக்க வேண்டும்.
ஓய்வுநாளில் குணமாக்குவது இறைவனுடைய அடிப்படையான வேலையின் ஒரு படமாயிருக்கிறது. இயேசு கிருபையைப் பிரசங்கித்து அன்பின் செயல்களைச் செய்தார். சில வேளைகளில் அவருடைய செயல்கள் நியாயப்பிரமாணத்திற்கு எதிரானதாகத் தோன்றினாலும் அவர் அதிலிருந்து பின்வாங்கவில்லை. அன்பே நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது. ஓய்வுநாளில் குணமாக்குதல் அன்பற்ற போலியான பக்திக்கு கொடுக்கப்படும் நெற்றியடியாகும்.
இயேசு ஓய்வுநாளை மீறுகிறான்! உதவிசெய்யுங்கள்! உடன்படிக்கையின் தூண்கள் உடைகிறது. நியாயப்பிரமாணத்தின் இந்த எதிரி தேவதூஷணம் சொல்லுகிறான். தன்னைப் புதிய நியாயப்பிரமாணத்தைக் கொடுப்பவனாக நிறுத்துகிறான், நம்முடைய இனத்திற்கே பேரழிவு என்று யூதர்கள் கத்தினார் கள்.
பரிதாபத்திற்குரியவர்கள் மீது கிறிஸ்து காட்டும் அன்பை அவர்கள் யாரும் கவனிக்கவில்லை. இவ்வுலகில் அவருடைய வெற்றியையும் அவர்கள் கவனிக்கவில்லை. அவர்களுடைய மதவெறி அவர்களைக் குருடராக்கியது. அப்படிப்பட்ட மத வெறியினால் இன்றும் மக்கள் இயேசுவை இரட்சகராக அறிந்து கொள்ளத் தவறும்போது ஆச்சரியப்பட வேண்டாம்.
இயேசு இறைவனை தன்னுடைய பிதா என்று அழைத்ததினால் அவர் தேவதூஷணம் சொன்னார் என்றும் யூதர்கள் அவர் மீது கோபப்பட்டார்கள். இது அவர்களுக்கு அருவருப்பாகத் தெரிந்தது. இறைவன் ஒருவரே; அவருக்கு குமாரன் இல்லை. இயேசு தன்னை இறைவனுடைய குமாரன் என்று எப்படி அழைக்கலாம் என்று கத்தினார்கள்.
இது அவர்களுடைய அறியாமையைக் காட்டுகிறது; அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் போதனைக்கோ, வேதாகமத்தின் போதனைக்கோ தங்களை ஒப்புக்கொடுக்கவில்லை. ஏனென்றால் இறைவனுடைய பிதாதன்மையைக் குறித்து அற்புதமான தீர்க்கதரிசனங்கள் அதிலிருக்கிறது. இறைவன் உடன்படிக்கையின் மக்களை என்னுடைய குமாரனே என்று அழைத்திருக்கிறார் (யாத். 4:22; ஓசியா 11:1). இஸ்ரவேல் இனம் இறைவனை பிதாவே என்று அழைக்கிறது (உபா. 32:6; சங். 103:13; ஏசாயா 63:16; எரே. 3:4, 19; 31:9). தன்னை விசுவாசிக்கிறவர்களை இறைவன் என் மகனே என்று அழைக்கிறார் (2 சாமு. 7:14). ஆனால் உடன்படிக்கையின் தனிப்பட்ட அங்கத்துவர் யாரும் இறைவனை பிதாவே என்று அழைக்க முடியாது. ஒரு யூதனுடைய சிந்தைக்கு இது இயலாத காரியம், அகம்பாவமுள்ள செயலாகக் கருதப்பட்டது. மேசியா இறைவனிடத்திலிருந்து வருபவர் என்றும் நித்திய வாழ்வைக் கொண்டு வருபவர் என்றும் யூதர்கள் அறிந்திருந்தார்கள். இயேசுவை அவர்கள் வெறுத்தது அவர்கள் அவருடைய மேசியத்துவத்தை விசுவாசிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
அவருடைய வார்த்தையைக் கேட்டு ஆச்சரியப்பட்ட யூதர்களுக்கு, தானும் பிதாவும் ஞானத்துடனும் அன்புடனும் ஒரே வேலையைச் செய்கிறோம் என்று தெளிவாக பதிலுரைத்தார். இயேசு தான் எல்லாவற்றையும் செய்ய வல்லவர் என்றும் இறைவனுக்குச் சமமானவர் என்றும் உறுதிப் படுத்தினார். இவ்விதமான சிந்தனைகளுக்கு யூதர்களுடைய பதில் கொடூரமானதாகவும் கருணையற்றதாகவும் இருந்தது. யார் தன்னை இறைவனுக்கு இணையாக உயர்த்துகிறானோ அவனை அழித்துவிட வேண்டும். மரணத்திற்குப் பாத்திரமான தேவதூஷ ணக்காரனாகவே இயேசுவைக் கருதி யூதர்கள் எதிர்த்தார்கள்.
யோவான் 5:19-20
19 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். 20 பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.
யூதர்களுடைய வெறுப்புக்கு இயேசு அன்போடு பதிலளித்தார். இறைவனுடைய அன்பின் செயலைச் சுட்டிக்காட்டியதன் மூலம் அவர்களுடைய வெறுப்பை அவர் எதிர்கொண்டார். ஆம், பிதா செய்வதையே குமாரனும் செய்கிறார். இயேசு தாமாக செயல் படுவதில்லை. ஏனென்றால் ஒரு குழந்தை தன் தகப்பனை அருகாமையில் கவனித்து, அவர் எவ்வாறு தன்னுடைய கைகளைப் பயன்படுத்தி காரியங்களைச் செய்கிறார் என்று பார்த்து அப்படியே செய்யுமோ, அதுபோலவே பிதாவுக்கும் அவருக்கும் இடையிலான ஐக்கியம் காணப்படுகிறது. இவ்வாறு அவர் தன்னைத் தாழ்த்தி தன்னுடைய மகிமையை பிதாவுக்குத் திரும்பக் கொடுக்கிறார். அவர் தன்னுடைய பிதாவை மகிமைப் படுத்தினார். நாமும் இயேசுவைப் போல பிதாவின் நாமத்தைப் பரிசுத்தப்படுத்தும்படி அழைக்கப்பட்ட அப்பிரயோஜனமான ஊழியக்காரர் என்பதை உணருவோமாக.
சுய வெறுப்பு மற்றும் தாழ்மையின் மூலமாக பிதாவினுடைய வேலையைச் செய்யும் அதிகாரத்தை இயேசு பெற்றுக் கொண்டார். பிதாவினுடைய தன்மைகள், நாமங்கள் மற்றும் பணிகள் அனைத்தும் அவருக்கும் உரியவைகள். அவர் உண்மையான இறைவனும் நித்தியமும், வல்லமையும், அன்பும், மகிமையுமுள்ள கடவுளுமாயிருக்கிறார். அவருக்கும் இறை வனுக்கும் இடையிலான ஐக்கியம் பரிபூரணமானது.
கிறிஸ்து சுயத்தை வெறுத்து தன்னிடமிருந்து எதையும் மறைக்காமல் இருப்பதால் பிதா அவரை நேசிக்கிறார். பிதா தன்னுடைய உரிமைகள், திட்டங்கள் மற்றும் பணிகள் அனைத்தையும் குமாரனுடன் பகிர்ந்துகொள்கிறார். இந்தக் கூற்றுகளின் மூலமாக நாம் திரித்துவத்திலுள்ள ஒருமையை தெளிவாக உறுதிப்படுத்துகிறோம் அது செயலிலுள்ள அன்பின் ஐக்கியம். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய மூவரும் எல்லாக் காரியத்திலும் ஒன்றாகச் சேர்ந்து இடைவிடாமல் செயல்படுவதால் பரிசுத்த திரித்துவம் இவ்வுலகத்திலுள்ள போர்கள், பகைமைகள் மற்றும் மதவெறிகள் அனைத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் என்ற அறிவு நமக்கு ஆறுதலைத்தர வேண்டும். செயலிலுள்ள அன்பின் ஐக்கியத்திற்கும் செயலற்றி ருக்கும் நியாயப்பிரமாண வாதத்திற்கும் இடையிலுள்ள வித்தி யாசம் எவ்வளவு பெரியது.

யோவான் 5:20-23
20 பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார். 21 பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். 22 அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். 23 குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்.
இந்த வேலைகள் மனிதர்களால் செய்ய முடியாதவைகள், ஆனால் இயேசு அவற்றைச் செய்கிறார். அவற்றைச் செய்து முடிக்கும்படி பிதா குமாரனிடத்தில் ஒப்படைக்கிறார். கிறிஸ்துவின் இரண்டு குணாதிசயங்கள் தீர்க்கதரிசனமாக உரைக் கப்பட்டிருப்பதை நாம் இங்கே பார்க்கிறோம். இந்த இரண்டு காரியங்களையும் செய்யும் மனிதனையே யூதர்கள் எதிர் பார்த்தார்கள். மரித்தோரை உயிரோடு எழுப்புதல், உண்மையாக நியாயம்தீர்த்தல் ஆகியவையே அப்பணிகள். அவையிரண்டும் தன்னால் செய்யப்படும் என்று இயேசு இங்கே வலியுறுத்துகிறார். இயேசு தன்னுடைய எதிரிகளின் முன்னிலையில், அவர்கள் அவரை பைத்தியக்காரன் என்றும் தேவதூஷணக்காரன் என்றும் கருதிய போதிலும், தானே நியாயத்தீர்ப்பை நிறைவேற்றப் போகிற ஜீவனின் அதிபதி என்று முன்னுரைத்தார். அவர்கள் அவரைக் கொலைசெய்ய முடிவு செய்தார்கள். இந்தக் கூற்றின் மூலமாக இயேசு அவர்களை மாற்றி, சரியாகச் சிந்திக்க வைத்து, உண்மையில் மனந்திரும்பச் செய்ய விரும்பினார்.
நம்முடைய இறைவன் அழிப்பவர் அல்ல, ஜீவனைக் கொடுப்பவர். அவர் பாவியின் மரணத்தை விரும்பாமல் அவன் தன்னுடைய பாவ வழிகளைவிட்டு விலகி ஜீவனுக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார். இறைவனைப் புறக்கணிப்பவர் களின் ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகிய அனைத்தும் மெது மெதுவாக அழிந்து போகும். யாரெல்லாம் கிறிஸ்துவினிடத்தில் வருகிறார்களோ அவர்கள் உயிர்ப்பிக்கப்பட்டு நித்திய வாழ்வை அனுபவிப்பார்கள். நீங்கள் எழுப்பப்பட வேண்டும் உயிர்மீட்சி யடைய வேண்டும் என்றே இரட்சகர் விரும்புகிறார். நீங்கள் அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களா? அல்லது பாவமும் குற்றமுமுள்ள வாழ்வில் தொடர்ந்து நிலைத்திருக்கப் போகிறீர்களா?
நித்தியத்திலிருந்தே இந்த அண்டம் சத்தியத்தின்மீது கட்டப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் ஆண்டவரைப் பற்றி கவலையின்றி, ஒருவரையொருவர் வஞ்சித்து, கொன்று வாழ்ந்து வந்தாலும், சத்தியம் மாறுவதில்லை. நியாயத்தீர்ப்பு நாள் கணக்குக் கொடுக்கும் ஒரு மாபெரும் நாள். இறைவனுடைய பழி மிகக்கொடுஞ்செயல் புரியும் அனைவரின்மேலும் விழும், சிறப்பாக விதவைகளையும் பெலவீனரையும் முறைகேடாக நடத்துகிறவர்கள் கடுமையாக பழி தீர்க்கப்படுவார்கள். அனைத்து நியாயத்தீர்ப்பையும் இறைவன் கிறிஸ்துவிடம் கொடுத்திருக்கிறார். அவர் அனைத்து மக்களையும் மதங்களையும் நியாயம் தீர்ப்பார். இயேசு பாவமில்லாத மனிதராகக் காணப் பட்டார். அதனால் அவர் நம்முடைய நிலையைப் புரிந்து கொள்ளக்கூடியவராகவும் நம்முடைய பெலவீனங்களை உணரக் கூடியவராகவும் இருக்கிறார். அவருடைய நியாயத்தீர்ப்பு நீதியான நியாயத்தீர்ப்பு. அவர் மகிமையில் தோன்றும் போது பூமியில் உள்ள கோத்திரங்கள் எல்லாம் நியாயாதிபதியை புறக்கணித்து, வெறுத்து, ஒதுக்கிவிட்டோமே என்று புலம்புவார்கள். இதை நீங்கள் உணருகிறீர்களா?
அப்பொழுது அனைவரும் அவருக்கு முன்பாக தங்களுடைய முழங்கால்களை முடக்குவார்கள். இவ்வுலகில் கிறிஸ்துவின் ஆராதனையைப் புறக்கணித்தவர்கள் அந்நாளில் பயத்தோடும் நடுக்கத்தோடும் அவரைக் கனப்படுத்துவார்கள். கிறிஸ்துவே எல்லா வல்லமைக்கும், ஐசுவரியத்திற்கும், ஞானத்திற்கும், கனத்திற்கும், மகிமைக்கும் பாத்திரர் (வெளி. 5:12). அவர் நமக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக இருக்கிறபடியால் அவர் உலகத்தைப் பிதாவோடு ஒப்புரவாக்கியிருக்கிறார். பிதாவும் குமாரனும் அன்பிலும், வல்லமையிலும், செயல்களிலும் மட்டுமல்ல, அவர்களுக்குச் செலுத்தப்படும் ஆராதனையிலும் கனத்திலும்கூட ஒன்றாயிருக்கிறார்கள். அதனால்தான் இயேசு இவ்வுலகில் இருந்தபோது தன்னைத் தொழுதுகொண்ட யாரை யும் தடைசெய்யவில்லை. நாம் பிதாவைக் கனப்படுத்துவதைப் போலவே குமாரனையும் கனப்படுத்த வேண்டும். நம்முடைய விண்ணப்பங்களில் நாம் பிதாவை நேரடியாக அணுகுவதைப் போல குமாரனையும் அணுக வேண்டும்.
கிறிஸ்துவைப் புறக்கணித்து அவரைக் குறைத்து மதிப்பிடுகிற எவரும் பிதாவைப் புறக்கணிக்கிறார்கள். மக்கள் கிறிஸ்துவின் குமாரத்துவத்தையும் ஆராதனையையும் புறக்கணிப்பதற்கான முக்கிய காரணம் அவர்களுடைய தீமையான மனநிலையே ஆகும். அவர்கள் அவரை அறிய விரும்பவில்லை, ஆகவே அவர் களால் உண்மையில் இறைவனை அறிய முடியாது.
யோவான் 5:24
24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கிறிஸ்துவின் நற்செய்தியை மகிழ்ச்சியோடு கேட்டு, அவருடைய குமாரத்துவத்தை விசுவாசிக்கிறவன் நித்திய வாழ்வைப் பெற்றுக் கொள்கிறான். நித்திய வாழ்க்கை என்பது மரணத்தின் பிறகு ஆரம்பிக்கிற ஒரு வாழ்க்கை அல்ல, அது பரிசுத்த ஆவியானவர் மூலமாக இவ்வுலகிலேயே கொடுக்கப்படும் வாழ்க்கையாகும். நீங்கள் பிதாவிலும் குமாரனிலும் விசுவாசம் வைத்தபடியால் பரிசுத்த ஆவியானவர் உங்கள் மீது இறங்குகிறார். கிறிஸ்துவின் இந்த வார்த்தைகளை ஆயிரம் முறை கேட்டு, அதை வாசித்து, அதன் பொருளை ஆராய்ச்சி செய்தாலும் எல்லாராலும் அதன் பொருளைப் புரிந்துகொள்ள முடியாது. குமாரனுடைய கிருபை யைப் பற்றியும் ஆவியில் நடப்பதைப் பற்றியும் அவர்கள் பேச மாட்டார்கள். கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து அவருடன் இணைந்திருப்பதே மெய்விசுவாசம் ஆகும். கிறிஸ்துவுடன் இப்படிப்பட்ட உடன்படிக்கைக்குள் நீங்கள் நுழையும்போது, நீங்கள் நீதிமான்களாக்கப்பட்டு, நியாயத்தீர்ப்பிலிருந்து விடு விக்கப்படுகிறீர்கள். ஏனெனில் விசுவாசமே உங்களை இரட்சிக் கிறது, உங்களுடைய செயல்கள் அல்ல. சிலுவையில் தஞ்சமடை பவர்களை கிறிஸ்துவின் அன்பு மூடிப்பாதுகாத்து, அவர் களுடைய பாவங்களை அகற்றி, அவர்களுடைய மனசாட்சியைச் சுத்திகரிக்கிறது. நம்முடைய புதிய பிறப்பினால் நித்தியமான இறைவன் நம்முடைய பிதாவாகிவிட்டபடியால் அவரிடம் தைரியமாகச் செல்லும்படி அது நம்மை உற்சாகப்படுத்துகிறது. நாம் நீதிமானாக்கப்படுவதின் விளைவாகவே மறுபிறப்படை கிறோம்.
கிறிஸ்துவின் மாபெரும் வாக்குறுதியை நீங்கள் உணர்ந் திருக்கிறீர்களா? நீங்கள் மரணத்திலும் அதன் பயங்கரங்களிலி ருந்தும் விடுவிக்கப்பட்டு, கிறிஸ்துவின் கிருபையினால் நித்திய வாழ்வைப் பெற்றிருக்கிறீர்கள். இறைவனுடைய கோபம் உங்கள் மேல் விழாது.
கிறிஸ்துவின் மீது உங்களுக்கிருக்கும் விசுவாசம் உங்களை மாற்றியிருக்கிறது. பரிசுத்த நித்திய வாழ்வு இப்பொழுது உங்களுக்குரியது. கிறிஸ்துவோடு நமக்கிருக்கும் தொடர்பு அறிவு பூர்வமானது மட்டுமல்ல, அது நடைமுறைக்குரிய, உண்மை யானது. நாம் கிறிஸ்துவில் நிலைத்திருப்பதைக் காட்டிலும் பெரிய இரட்சிப்பு வேறு எதுவும் கிடையாது. 24ம் வசனத்தை மனப்பாடம் செய்யுங்கள், அவருடைய வாழ்வை உங்களுக்குள் பதிய வையுங்கள், நாம் நித்தியத்தில் முகமுகமாய்ச் சந்திப்போம்.

யோவான் 5:25-26
25 மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 26 ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார்.
மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்வதன் மூலமாக தானே சத்தியமானவர் என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். பழைய ஏற்பாட்டு மக்கள் கற்பனை செய்ததைவிட சிறப்பான முறையில் அவரைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் அவரில் நிறைவேறுகின்றன. அனைவரும் பாவத்திலும் கேட்டிலும் மரித்துப் போயிருக்கிறார்கள், ஆனால் பாவத்தைத் தன்னுடைய சரீரத்தினால் மேற்கொண்டு, விசுவாசத்தின் மூலமாக அவருடைய வாழ்வில் நமக்குப் பங்கு தந்த மனுவுருவில் வந்த இறைமைந்தனாகிய பரிசுத்தர் அவர் ஒருவரே. இன்று யார் இந்த இரட்சிப்பின் நற்செய்திக்குச் செவிகொடுத்து, அதைப் புரிந்துகொண்டு, கிறிஸ்துவோடு ஒட்டிக்கொள்கிறானோ அவன் இறைவனுடைய வாழ்வைப் பெற்றுக்கொள்கிறான். உயிர்த்தெழுதலின் நாளிலிருந்து நம்முடைய விசுவாசம் உயிருள்ள விசுவாசம் என்று நாம் அறிந்தி ருக்கிறோம், அது மரணத்திற்கும் அழிவிற்குமுரிய மதமல்ல. அவருக்குச் செவிகொடுப்பவர்களுக்கும், அவருடைய செய்தியை இன்னும் புரிந்துகொள்ளாவிட்டாலும் ஆவலோடு இருப்பவர் களுக்கும் அவர் தம்முடைய ஜீவனின் ஆவியைக் கொடுக்கிறார். அவர்களில் உண்மையான செவிகொடுத்தலை உருவாக்குகிறார், இதில் பாவத்தில் மரித்திருக்கிறவர்கள் அவருடைய சத்தத்தைக் கேட்பார்கள் என்ற ஆச்சரியமான கூற்று உண்மையாகிறது. மரித்தவர்கள் தாங்களாக எழுந்திருக்கவோ, செவிகொடுக்கவோ முடியாது, இயேசு அவர்களுக்கு ஜீவனைக் கொடுக்கிறார், அவர்கள் செவிகொடுக்கிறார்கள்.
நம்முடைய உலக வாழ்க்கை அழிந்துவிடும், ஆனால் நமக்குக் கொடுக்கப்பட்ட நித்திய வாழ்வோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். இயேசு சொன்னதைப் போல, நானே உயிர்த் தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக் கிறவன் மரியாமலும் இருப்பான்.
நித்திய வாழ்வின் முழுமையையும் பிதா கிறிஸ்துவுக்குக் கொடுத் திருப்பதால் அவர் நம்மை உயிர்ப்பிக்க முடியும். கிறிஸ்து ஜீவ தண்ணீர் ஓயாமல் சுரந்துவரும் மாபெரும் நீரூற்றைப்போல கிறிஸ்து இருக்கிறார். வெளிச்சத்தின் மேல் வெளிச்சத்தையும், அன்பின் மேல் அன்பையும், சத்தியத்தின் மேல் சத்தியத்தையும் அவரிடமிருந்து நாம் பெற்றுக்கொள்கிறோம். அவரிடமிருந்து எந்த கெட்ட காரியமோ, இருளோ, தீமையான சிந்தனையோ புறப்பட்டு வருவதில்லை. பவுல் சொன்னதைப்போல அவர் முழுவதும் அன்பினால் நிறைந்தவராயிருக்கிறார்: கிறிஸ்து இரக்கமுள்ளவர்; பொறாமையோ பெருமையோ இல்லாத நண்பன்; அவர் தனக்குரியவைகளை நாடுவதில்லை; அவர் மற்றவர்களுக்குத் தீங்கு நினைக்காமலும் அநியாயத்தில் சந்தோஷப் படாமலும் இருக்கிறார். அவர் எல்லாவற்றையும் சகிக்கிறார், எல்லாருடனும் பொறுமையாக இருக்கிறார்; அவருடைய அன்பு ஒருபோதும் ஒழியாது. இதை அவருடைய ஆவியின் மூலம் நமக்கு அருளியிருக்கிறார். நாமும் ஜீவ ஊற்றாக மாறுவோமாக.
யோவான் 5:27-29
27 அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். 28 இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்; 29 அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
சுபாவ மனிதன் பாவத்தினால் மரித்திருக்கிறான். இறைவனுடைய அன்புக்குச் செவிகொடுக்காதவன் எவனோ அவன் தன்னைத் தானே நியாயம் தீர்த்துக்கொள்கிறான். அவருக்குச் செவி கொடுத்து அவரை ஏற்றுக்கொள்பவர்கள் வாழ்கிறார்கள். அதே வேளையில் அவருடைய வார்த்தைகளும் நடத்தைகளும் நம் முடைய வாழ்வுக்கான விதிமுறைகளாயிருக்கிறது. இறைவன் நியாயத் தீர்ப்பை அவரிடம் கொடுத்திருக்கிறார்; நம்மைப் போல சோதிக்கப்பட்டும் பாவமில்லாதிருக்கிற பரிசுத்தர் அவரே. தெய் வீக சமூகத்திற்கு முன்பாக யாரும் சாக்குப்போக்குச் சொல்ல முடியாது. சர்வ லோகத்ததையும் நியாயம் தீர்ப்பதற்கு தகுதி யானவர் கிறிஸ்து மட்டுமே, அவரே முழு மனுக்குலத்தின் முடிவையும் தீர்மானிப்பார். தேவதூதர்களும் அனைத்துப் படைப்புகளும் அவரை வணங்கும்.
இயேசுவின் கட்டளைப்படி உயிர்த்தெழுதல் நிச்சயமாக நடை பெறும். அவருடைய அழைப்பு நம்முடைய உலகமுழுவதையும் ஊடுருவிச் செல்லும், மரித்தவர்கள் சாதாரண சத்தத்தைக் கேட்ப தில்லை, ஆனால் குமாரனுடைய சத்தம் அவர்களை நடுங்கச் செய்யும். நித்திரையடைந்திருக்கும் ஆத்துமாக்கள் தங்கள் கல்ல றைகளைவிட்டு எழுந்திருப்பார்கள். சில ஆத்துமாக்கள் உயி ருள்ளவைகளாக எழுந்திருக்கும், ஆனால் சிலதோ மரித்த வர்களைப் போலவே எழுந்திருக்கும், இது ஆச்சரியத்தில் ஆச்சரியம். அவை இரண்டு வகையான உயிர்த்தெழுதல், ஒன்று ஜீவனுக்கேதுவானது, மற்றது நியாயத்தீர்ப்புக்கு ஏதுவானது. அந்த தருணம் ஆச்சரியம் நிறைந்ததாக இருக்கும், நாம் பிரகாசமான ஒளி என்று நினைத்தவர்கள் இருளினால் மூடப்படுவார்கள். நாம் எளிமையானவர்களும் பயனற்றவர்களும் என்று நினைத்தவர்கள் சூரியனைப் போல பிரகாசிப்பார்கள்!
இறைவனுக்கு முன்பாக உயிருடன் இருக்கும் நல்லவர்கள் கெட்டவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் அல்ல. ஆனால் முதலாவது கூட்டம் இயேசு கிறிஸ்துவினால் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அதற்கு நன்றியுடன் வாழ்ந்தவர்கள். அவருடைய நற்செய்தியின் வல்லமையினால்தான் அவர்கள் வாழ்ந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் உண்டு பண்ணும் கனிகள்தான் காணப்பட்டது. இயேசு தன்னுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் அவர்களுடைய கறைகளை எல்லாம் கழுவி சுத்திகரித்துள்ளார். இந்தக் கிருபையை அவர்கள் விசுவாசத்தினால் பெற்றார்கள்.
தங்களுடைய சொந்த செயல்கள் இறைவனுக்கு முன்பாகப் போதும் என்று நினைத்தவர்கள் கீழ்க்காணும் நியாயத்தீர்ப்பைப் பெறுவார்கள். சுயநலமுள்ளவர்களே நீங்கள் உங்கள் சொந்த விடுதலையைக் குறித்து மட்டுமே கருத்துள்ளவராயிருந்தீர்கள், நீங்கள் உங்கள் எதிரிகளை நேசிக்கவில்லை? உங்களுக்கும் இறைவனுக்கும் இடையில் சிலுவையின் மூலமாக முழுமையான ஒப்புறவாக்குதலை கிறிஸ்து ஏற்படுத்தியிருக்க நீங்கள் அதை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? அவர் அருளும் நித்திய வாழ்வை எப்படிப் புறக்கணித்தீர்கள். உங்களுடைய பெருமையினால் உங்களுக்கு அருளப்பட்ட கிருபையைப் புறக்கணித்து மரணத் தைத் தெரிந்துகொண்டீர்கள். பாவத்தில் மரித்திருப்பவர் கள் எழுந்திருந்து கடுமையான தண்டனையைப் பெற்றுக் கொள்வார் கள், அவர்களுடைய வார்த்தைகள், செயல்கள், சிந்தனைகள் அனைத்தையும் குறித்து விரிவாகக் கணக்குக் கொடுப்பார்கள். ஆனால் விசுவாசத்தினால் கிறிஸ்துவின் மகிமையை நோக்கி இழுக்கப்பட்டவர்களுக்குள் கிறிஸ்து விடமிருந்து அன்பு பொழியப்படும். அதனால் அவர்கள் நித்திய வாழ்வின் இன்றைய தன்மையாகிய இரக்கமுள்ள சேவை செய்திருப்பார்கள்.
யோவான் 5:30
30 நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
எல்லாவற்றையும் விட பெரிய பணியைக் கிறிஸ்து நிறை வேற்றுகிறார்; அவரே நித்திய நியாயாதிபதி. கிறிஸ்து தனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை அறிந்திருந்தும் தாழ்மையுள்ளவ ராக, நான் சுயமாக ஒன்றும் செய்வதில்லை என்று கூறுகிறார். அதாவது நானாக நியாயம் தீர்ப்பதோ, சிந்திப்பதோ, அன்பு செய்வதோ, சுவாசிப்தோ இல்லை என்கிறார். ஆகவே அவர் அனைத்து கனத்தையும் பிதாவுக்குக் கொடுத்தார்.
பல நேரங்களில் இயேசு பிதாவோடு இணைக்கப்பட்டிருந்தார். இவர்களுக்கிடையிலான இந்த தொலைபேசித் தொடர்பு ஒருபோதும் தடைசெய்யப்படுவதில்லை, ஏனெனில் மனிதருடைய ஆவியைக் குறித்து இறைவனுடைய சத்தம் அவருக்குச் சொல்லிக்கொண்டிருந்தது. இறைவனுடைய ஆவியானவர் இவ்வுலகத்தையும் உங்கள் இருதயத்தையும் ஆராய்ந்து நீங்கள் மற்றவர்களிடமிருந்து மறைப்பதை வெளிப்படுத்துகிறார். கிறிஸ்துவில் இருக்கும் ஆவியானவர் உங்களைச் சரியாக நியாயந் தீர்க்கிறார். நீங்கள் உங்கள் பாவங்களை இறைவனுக்கு முன்பாக அறிக்கை செய்து, சிலுவையில் அறையப்பட்டவரிடமிருந்து பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொண்டிருந்தீர்களானால் நீங்கள் பாக்கியவான்கள். உங்கள் பெயர் ஜீவ புத்தகத்தில் இடம்பெறும். அதன்பிறகு அவர் நீதிமான்களைப் பார்த்து, பிதாவினால் ஆசீர் வதிக்கப்பட்டவர்களே வாருங்கள், உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்ட இராஜ்யத்தில் பிரவேசியுங்கள் என்பார்.
மனிதனுடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்று தெரிந்திருப்பதால் சத்தியமாகிய கிறிஸ்து பொய் சொல்ல மாட்டார். நாம் நம்முடைய முற்பிதாக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட குணாதிசயங்களை அவர் அறிவார், நம்மை அவசர மாக நியாயம் தீர்க்கமாட்டார். அவர் பாவியின் மனந்திரும் புதலுக்காக காத்திருக்கிறார். அவருடைய பரிசுத்த தன்மை அவருடைய இரக்கத்தினால் இரக்கமுள்ளவர்களாக மாறியவர் களை அவருடைய ஆவியைப் புறக்கணித்த கடின இருதயமுள்ளவர்களிடமிருந்து பிரிப்பார்.
கிறிஸ்து தன்னுடைய தாழ்மையுடன் சாந்தத்தையும் காண் பிக்கிறார். ஒவ்வொரு காரியத்திலும் தன்னுடைய பிதாவுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார். ஆகவே சிலுவையில் கூட கிறிஸ்து தன்னுடைய வார்த்தையிலும் செய லிலும் பிதாவின் சித்தத்தையே நிறைவேற்றினார். முக்கியமான கட்டத்தில் என்னுடைய சித்தப்படியல்ல உம்முடைய சித்தப் படியே நடக்கட்டும் என்று விண்ணப்பித்தார். இவ்விதமாகவே அவர் இறைவனுடைய நியாயத்தீர்ப்பை முழுவதுமாக நிறைவேற்றுவார்.
பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலுள்ள இந்த அனைத்து உறவுகளையும் விவரமாக நற்செய்தியாளன் பதிவுசெய்வதன் நோக்கம் திரித்துவத்தின் ஒற்றுமையைக் குறித்த நம்முடைய விசுவாசத்தில் நம்மை உறுதிப்படுத்தவே. மரித்தவர்களை உயிர்ப் பிக்கும் அதிகாரம் பிதாவுக்கும் குமாரனுக்கும் சமனாக இருக்கிறது. இறைவன் தன்னுடைய செயல்கள் எல்லாவற்றையும் தன்னுடைய குமாரனுக்குக் காண்பிக்கிறார், அவருக்கு வெளிப்படுத்தாமல் எதையும் செய்வதில்லை. கிறிஸ்து மர ணத்திற்கும் நரகத்திற்கும் உரிய திறவுகோலையுடையவரா யிருக்கிறபடியால் அவருடைய சத்தம் மரித்தோரை எழுப்பும். வெறும் அறிவுசார்ந்தவர்களுக்கு நம்முடைய விசுவாசம் இர கசியமானது; கிறிஸ்துவின் அன்பு அவருடைய சாந்தத்தோடு நம்முடைய இருதயத்தில் ஊற்றப்பட்டால் ஒழிய நம்முடைய இரட்சிப்புக்காக இறைவன் மூன்று பேரில் ஒருவராயிருப்பதன் காரணத்தை நாம் புரிந்துகொள்ள முடியாது.

யோவான் 5:31-40
31 என்னைக் குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது. 32 என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக் குறித்துக் கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன். 33 நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சிகொடுத்தான். 34 நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன். 35 அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள். 36 யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது. 37 என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சிகொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை. 38 அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை. 39 வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. 40 அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.
வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவின் செயல்களைச் செய்வதற்கு தனக்கு அதிகாரம் உண்டு என்று இயேசு தன்னுடைய எதிரிகளுக்கு அறிவித்தார். அவர்கள் தங்களுடைய அமைப்பை யும் விதிகளையும் தொந்தரவு செய்யும் இந்த கிராமத்தானை வெறுத்தார்கள். அவர் தன்னைப் பற்றி உரிமைபாராட்டிய காரியங்களுக்கு அவர்கள் சாட்சியங்களைக் கேட்டார்கள், ஆகவே இயேசு ஆதாரங்களைக் கொடுக்கும்படி இரக்கத்தோடு அவர்களுக்கு பதிலுரைத்தார். நாம் அனைவருமே நம்முடைய உண்மை நிலவரத்தை உணராமல் நாம் சிறந்தவர்கள் என்று கருதுகிறோம். ஆனால் இயேசு தன்னைப்பற்றிய பொய்யற்ற ஒரு மெய்யான அறிக்கையை முன்வைத்தார். சட்டம் ஒருவன் தன்னைக் குறித்து சொல்லும் சாட்சியை ஏற்றுக்கொள்ளா விட்டாலும் அவரைப் பற்றிய அவருடைய சாட்சி உண்மையா யிருக்கிறது. நான் என்னைக் குறித்து சாட்சிகொடுத்தால் அந்த சாட்சி உண்மையாயிராது என்று அவரே கூறுகிறார். அவர் தன்னைப் பாதுகாக்கத் தேவையில்லை, காரணம் அவருடைய பரலோக பிதா அவரைக் குறித்து சாட்சிகொடுத்து, நான்கு அடையாளங்களினால் அல்லது ஆதாரங்களினால் அவரை ஆதரித்திருக்கிறார்.
கிறிஸ்துவைப் மக்கள் நடுவில் பிரசங்கிக்கும்படி இறைவன் யோவான் ஸ்நானகனை அனுப்பினார். கிறிஸ்துவின் முன்னோ டியான அவர் கிறிஸ்துவின் ஆசாரிய ஊழியத்தைக் குறித்தும் அவருடைய நியாயத்தீர்ப்பைக் குறித்தும் பிரசங்கித்தார். ஆனால் யூதர்களுடைய ஆலோசனைச் சங்கம் யோவானுடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தது (யோவான் 1:19 - 28). யோவானுடைய சாட்சி இயேசுவுக்குத் தூண்டுகோலாக இருக்கவில்லை, மாறாக இயேசு நித்தியத்திலிருந்து வருகிறார். ஆனால் மக்களுடைய அறியாமையினிமித்தம் யோவானுடைய சாட்சி சத்தியத்திற்கு கூடுதல் ஆதாரமாக இருக்கும் என்று அதை இயேசு ஏற்றுக்கொண்டார். இயேசு உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்று யோவான் சொல்லியது மிகைப்படுத்தபட்ட சாட்சியல்ல.
ஸ்நானகன் இருளில் பிரகாசித்த விளக்காயிருந்தார், தன்னைப் பின்பற்றியவர்களையும் ஒளிரச் செய்தார். ஆனால் இயேசு என்னும் நபரில் சூரியன் வந்தபோது விளக்கின் தேவை இல்லா மல் போனது. இயேசு மட்டுமே அளவற்ற சக்தியுடன் உலகத் திற்கு வெளிச்சமாயிருக்கிறார். எப்படி சூரியன் பூமிக்கு வாழ்வை யும் வளர்ச்சியையும் கொடுக்கிறதோ, அவ்வாறே இயேசுவும் ஆவிக்குரிய வாழ்வையும் அன்பையும் அருளுகிறார். அவருடைய குணமாக்குதல்களும் பிசாசுகளைத் துரத்தியதும் இருளின் மேலான ஒளியின் வெற்றியைக் காட்டுகிறது. புயலைக் கட்டுப்படுத்தி மரித்தோரை உயிர்ப்பித்தது அவருடைய தெய் வீகத்தை நிரூபிக்கிறது. அவருடைய செயல்கள் பிதாவின் செயல்களோடு ஒத்தவைகளாயிருக்கிறது. அவர் சிலுவையில் தன்னுடைய ஊழியத்தை நிறைவேற்றி, தன்னுடைய உயிர்த் தெழுதலினால் தம்மை விசுவாசிக்கிறவர்கள் மீது பரிசுத்த ஆவியைப் பொழிந்தருளினார். இறைவனுடைய செயல்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது மரித்தோரை எழுப்பி உலகத்தை நியாயம் தீர்க்கும்போது முடிவடையும். பிதாவுக்கும் குமாரனுக்கும் அவர்களுடைய செயல்களில் வித்தியாசமில்லை: பிதா பணி செய்வதைப் போலவே குமாரனும் பணி செய்கிறார்.
இறைவனே தன்னுடைய சத்தத்தை உயர்த்தி கிறிஸ்துவைக் குறித்த சாட்சியை உறுதிப்படுத்தியிருக்கிறார். இவர் என்னுடைய பிரியமான குமாரன் என்று கூறினார் (மத். 3:17). இறை வனுடைய சித்தப்படி வாழ்ந்த இயேசுவைத் தவிர இத்தகைய சாட்சியைப் பெற்றவர் வேறு ஒருவரும் இல்லை. பிரியமான குமாரன் மெய்யான அன்பினாலும் தூய்மையினாலும் நிறைந்திருந்தார்.
யூதர்கள் இறைவனை அறியவில்லை என்று இயேசு அவர்களிடம் சொன்னார். நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசனங்களிலும் இருந்து அவருடைய சத்தத்தைக் கேட்க அவர்கள் தவறி விட்டார்கள். அவர்கள் தரிசனங்களிலும் சொப்பனங்களிலும் அவருடைய முகத்தை தெளிவாக அவர்கள் கண்டதில்லை. இதற்கு முன்னுள்ள வெளிப்பாடுகள் அனைத்தும் குறை வுள்ளவை, ஏனெனில் அவர்களுடைய பாவங்கள் அவர்களை பரிசுத்தரிடமிருந்து பிரித்து வைத்திருந்தது. ஏசாயா இறை வனுடைய வஸ்திரத்தொங்கலை தேவாலயத்தில் கண்டபோது ஐயோ அதமானேன், நான் அசுத்த உதடுகள் உள்ள மனிதன் என்று கத்தினார். இறைவனுடைய மனுவுருவான வார்த்தையாகிய கிறிஸ்துவை அவர்கள் புறக்கணிப்பதே அவர்களுடைய ஆவிக் குரிய செவிட்டுத் தன்மைக்கும் அறியாமைக்கும் காரணம். இறை வனுடைய வார்த்தையை நான் புரிந்துகொள்கிறேன் என்று ஒருவன் நினைத்துக்கொண்டு, இறைவனுடைய வார்த்தையாகிய இயேசுவைப் புறக்கணித்தால், அது அவன் உண்மையான வெளிப் படுத்தலைப் பெற்றுக்கொள்ளவில்லை அல்லது அதைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கிறது.
நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையோடு பழைய ஏற்பாட்டு மக்கள் வேதாகமத்தை ஆராய்ந்து பார்த்தார்கள். ஆனால் அவர்கள் மரணத்தின் நியாயப்பிரமாண எழுத்துக்களையே கண்டார்கள். மேசியாவைக் குறித்த வாக்குத்தத்தங்கள் பழைய ஏற்பாட்டிலே ஏராளமாக இருந்தபோதிலும் அவர்கள் அவற்றைத் தவற விட்டார்கள். அவர்கள் தங்களுடைய சொந்தக் கருத்துக்களையும், விளக்கங்களையும், விதிமுறைகளையுமே விரும்பியதால் அவர்கள் நடுவில் வந்திருந்த கிறிஸ்துவே இறைவனுடைய இறுதியான வார்த்தை என்பதை உணரத் தவறினார்கள்.
அவர்களுடைய புறக்கணிப்புக்கான காரணத்தை இயேசு குறிப்பிட்டார் உண்மையாக இறைவன் இருக்கிறபடி அவர்க ளுக்குத் தேவையில்லை. அவர்கள் கிறிஸ்துவை வெறுத்ததால் நித்திய வாழ்வை இழந்தார்கள், விசுவாசத்தின் பொருளையும் கிருபையையும் தவறவிட்டார்கள்.

யோவான் 5:41-44
41 நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. 42 உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன். 43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள். 44 தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?
இயேசு அவருடைய எதிரிகளின் ஆயுதங்களை அடித்து நொருக்கி, அவர்களுடைய இருதயத்தின் நிலையையும், அவர் களுடைய எதிர்கால விதியையும் அவர்களுக்குக் காண்பித்தார். அவர்களுடைய தீய நோக்கங்களையும் அவர்களுடைய தீய குணாதிசயத்தையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
அவருக்கு மக்களுடைய பாராட்டோ அல்லது தலைவர்களுடைய அங்கீகாரமோ தேவைப்படவில்லை, அவர் தன்னுடைய பணியைக் குறித்து உறுதியுடன் இருந்தார். அவருடைய மன உறுதி அவருடைய ஊழியத்தின் காணத்தக்க விளைவை அடிப்ப டையாகக் கொண்டிருக்கவில்லை. அவருக்கு கனம் கிடைத்தால் அதை அவர் பிதாவிற்குச் செலுத்தி விடுவார். முதலில் தன்னிடம் அல்ல, பிதாவிடமே நாம் விண்ணப்பிக்கும்படி நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய இராஜ்யம் வருக, உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக என்று கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க கற்றுக்கொடுத்தார். இயேசு ஒருபோதும் தன்னுடைய சுய கனத்தையும் மகிமையையும் தேடவில்லை. பிதாவின் மகிமையே அவருடைய நோக்கமாயிருந்தது, இறை வனுடைய நீதியின் மேல் அவர் கொண்ட வைராக்கியமே அவரைப் பட்சித்தது.
படைப்பிலும், மீட்பிலும், மகிமையிலும் இறைவனுடைய அன்பே செயலூக்கமளிக்கும் காரணியாக இருக்கிறது. பரிசுத்த திரித்துவத்தின் சாரமும் இதுவாகவே இருக்கிறது. நியாயப் பிரமாணத்தை நிறைவேற்றுதலும் பரிபூரணத்தின் நோக்கமும் இந்த அன்பையே நிறைவேற்றுகிறது. இந்த அன்பைப் பெற்றி ருப்பவன் தனக்காக வாழமாட்டான், தன்னைக் கனப்படுத்தவும் மாட்டான், மற்றவர்களைக் கனப்படுத்தி அவர்களுக்கு சுய வெறுப்புடன் சேவை செய்வான். தன்னிடம் உள்ளவைகளை எல்லாம் ஏழைகளுக்குக் கொடுப்பான். அன்பு ஒருபோதும் ஒழியாது.
எந்தவொரு மனிதனும் தானாக இறைவனை நேசிக்க முடியாது. ஆனால் ஒருவன் பாவத்தின் அசிங்கத்தைக் குறித்து துக்கப்பட்டு, மனந்திரும்பி, கிறிஸ்துவிலுள்ள இறைவனுடைய அன்பை விசுவாசிப்பவன், அப்போஸ்தலனாகிய பவுலைப் போல பரிசுத்த ஆவியினால் தெய்வீக அன்பு என்னுடைய உள்ளத்தில் ஊற்றப் பட்டது என்றே கூறுவான். இந்த அன்பு, தியாகத்திலும், பொறு மையிலும், தாழ்மையிலும் காணப்படும். இறைவனுடைய ஆவி யானவருக்கு யார் தன்னுடைய ஆத்துமாவைத் திறந்து கொடுக்கிறானோ அவன் பரிசுத்த திரித்ததுவத்தையும் அனைத்து மக்களையும் நேசிப்பான். தன்னைப் பற்றி பெருமையாக தான் நல்லவன் என்று நினைக்கிறவன் உண்மையாக மனந்திரும்பாத வனும் இறைவனுடைய ஆவிக்குப் பகைஞனுமாயிருக்கிறான். அவன் சுயநலமுள்ளவனும், புதுப்பித்தலை விரும்பாதவனும், தனக்கு ஒரு இரட்சகர் தேவை என்பதை உணராதவனும், தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனுமாயிருக்கிறான். கிறிஸ்து யாரும் அறியாத அந்நிய தெய்வத்தினுடைய பெயரில் வராமல், பிதாவினுடைய நாமத்தினாலே இறைவனுடைய அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறவராக வந்தார். கிறிஸ்துவைப் புறக்கணிக்கிறவர்களுடைய மனம் இறைவனுடைய அன்புக்கு மூடப்பட்டது என்பதை நிரூபிக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் ஒளியைக் காட்டிலும் இருளை அதிகம் நேசிக்கிறார்கள், ஒளியினால் பிறந்தவர்களையும் வெறுக்கிறார்கள்.
சுயத்தைத் தேடுபவர்களையும் சுயநலவாதிகளையும் ஒருங்கி ணைத்து இறைவனுடைய அன்புக்கு எதிராக கலகத்தை நடத்தும் அந்திக் கிறிஸ்துவின் தோற்றத்தைக் குறித்து இயேசு தம்முடைய எதிரிகளுக்குத் தெரிவித்தார்.
உண்மையான மனந்திரும்புதலை விரும்பாமல் ஒருவரையொருவர் முகஸ்துதி செய்வதை விரும்புகிற மக்கள் கிறிஸ்துவை விசுவா சிக்க மாட்டார்கள். அவர்கள் தங்களை நல்லவர்கள் என்றும், பெலசாலிகள் என்றும் புத்திமான்கள் என்றும் கருதுகிறார்கள்! அவர்கள் பரிசுத்தருக்கு முன்பாக நடுங்காமலும் அவர் ஒருவரே நல்லவர் என்பதை உணராமலும் இருக்கிறார்கள். அவிசுவாசத் திற்குக் காரணம் சுயநீதி, இந்தப் போலி மனப்பான்மையின் அடையாளம் பெருமை.
உண்மையில் இறைவனையும் தன்னுடைய ஆத்துமாவையும் அறிந்தவன், மனமுடைந்து தன்னுடைய பாவங்களை அறிக்கை செய்து, எல்லாவித கனத்தையும் மகிமையையும் புறக்கணித்து, பிதாவுக்கும் குமாரனுக்குமே எல்லா மகிமையையும் எப்போதும் செலுத்துவான். இரட்சிக்கும் கிருபையை அவன் மேன்மைப் படுத்துவான். நாம் பாவங்கள் மன்னிக்கப்பட்ட பாவிகள் என்பதை விசுவாசிப்பது நம்முடைய நடத்தையிலுள்ள இறு மாப்பிலிருந்து நம்மை விடுவிக்கிறது, ஏனெனில் அப்போது நாம் யார் என்றும் இறைவன் யார் என்றும் நமக்குத் தெரியும். அன்பு ஒரு நண்பனிடத்தில் உண்மையைச் சொல்லும்; பெருமையுள்ள மனிதன் தன்னையும் மற்றவர்களையும் வஞ்சிக்கிறான், நம்மைத் தாழ்மையாக உருவாக்கும் இறைவனுடைய ஆவியிலிருந்து விலகுகிறான்.
யோவான் 5:45-47
45 பிதாவினிடத்தில் நான் உங்கள் மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள்; நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான். 46 நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே. 47 அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்.
நியாயப்பிரமாணவாதிகள் பெருமையைக் குறைப்பதில் இயேசு தொடர்ந்து முன்னேறி, இறைவனுக்கு முன்பாக நான் உங்களைக் குற்றஞ்சொல்லத் தேவையில்லை. மோசேயே உங்களைக் குற்றப்படுத்துவார். அவர் கொடுத்த உடன்படிக்கை யின் சட்டமே உங்களை நியாயந்தீர்க்கும். நீங்கள் அன்பை விட்டுவிட்டு, நியாயப்பிரமாணத்தின் பேரினாலே என்னைக் கொல்ல விரும்புகிறீர்கள். இறைவனைவிட்டு விலகியிருக்கும் நீங்கள் இருளில் அலைகிறீர்கள். நான் ஒரு நோயாளியை ஓய்வுநாளில் குணமாக்கினேன், அந்த இறைவனுடைய செயல் உங்களுக்கு விருப்பமாயிருக்கவில்லை. இறைவனுடைய அன்பின் மனுவுருவான என்னை நீங்கள் வெறுக்கிறீர்கள். இவையெல்லாம் மேசியாவின் செயல் என்று நீங்கள் நம்ப மறுக்கிறீர்கள். உங்களுடைய ஆவி கலகமும் கடினமுமானது. இறைவன் வாழ்வுக்காகத்தான் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார், மரணத்திற்காக அல்ல. நீங்கள் மனந்திரும்பினால் ஒரு இரட் சகருக்காக ஏங்குவீர்கள். நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனமும் வருகிறவரைக் குறித்து முன்னறிவிக்கின்றன. நீங்கள் நியாயப் பிரமாணத்தின் நோக்கத்தை திரித்து, இறைவனுடைய கட்டளையை உங்கள் சொந்த சித்தத்தினால் நியாயந்தீர்க்க அனுமதித்தீர்கள். உங்களுடைய தீய ஆவிகள் சத்தியத்தை அறியாதபடி உங்களைத் தடுத்து, நீங்கள் பரிசுத்த ஆவியானவருக்கு எதிர்த்து நிற்கவும் அறியாமையிலும் செவிட்டுத்தனத்திலும் நிலைத்திருக்கவும் உங்களை இட்டுச் செல்லுகிறது. உங்களுடைய கடின இருதயத்தினால் வாழ்வளிக்கும் வார்த்தையை நீங்கள் நம்புவதில்லை என்று கடிந்துகொண்டார்.

By: Waters of life

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.