சமாரியவில் இயேசு (யோவான் 4:1–42)

. சமாரியவில் இயேசு (யோவான் 4:1–42)

அ) இயேசு ஒரு விபச்சாரியை மனந்திரும்புதலுக்கு நடத்துகிறார் (யோவான் 4:1-26)


யோவான் 4:1-6
1 யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது, 2 யூதேயாவைவிட்டு மறுபடியுங் கலிலேயாவுக்குப் போனார். 3 இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை, அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள். 4 அவர் சமாரியா நாட்டின் வழியாய்ப் போகவேண்டியதாயிருந்தபடியால், 5 யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார். 6 அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார்; அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி வேளையாயிருந்தது.

நற்செய்தியாளனாகிய யோவான் இயேசுவைக் கர்த்தர் என்று அழைக்கிறார். அதாவது அவர் நித்திய காலமாக வரலாற்றை ஆளுகை செய்பவர். அவர் தண்டிக்கிறவரும் இரக்கம் காட்டுகிற வருமாயிருக்கிறார். அவர் மக்களை வழிநடத்துகிறவரும் நியாயம் தீர்க்கிறவருமாக இருக்கிறார். இயேசுவின் மகிமையைப் பார்த்த யோவான் இந்த மகத்துவமான பட்டத்தைக் கொடுத்து அவரைக் கனப்படுத்துகிறார்.
பரிசேயர்கள் போராட்டத்திற்கு ஆயத்தமாக செயல்பட ஆரம் பித்தார்கள். யூதேயாவில் கிறிஸ்துவின் பிரசங்கம் பிரகாசமான வெற்றியாக இருந்தது. அவர் ஸ்நானகனைப் போலவே, மனந்திரும்பி தங்கள் பாவங்களை அறிக்கை செய்ய வேண்டும் என்று மக்களை அழைத்தார். அது ஸ்நானகனுடைய பணியை அவர் தொடருவதைப் போல காணப்பட்டது (அவர் ஞானஸ் நானம் கொடுக்காமல், அப்பணியைத் தம்முடைய சீடர்களிடம் கொடுத்திருந்தார்). தண்ணீர் ஞானஸ்நானம் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்துக்கு வெறும் அடையாளம் மட்டுமே என்று இயேசு போதித்தார். ஆனால் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை, அதனால் அவர் அந்த ஞானஸ்நானத்தைக் கொடுக்க வில்லை.
பரிசேயர்களுடைய எதிர்ப்பு அதிகரித்தபோது இயேசு வடக்கு நோக்கிச் சென்றார். அவர் தன்னுடைய பிதாவின் சித்தப்படியே வாழ்ந்துகொண்டிருந்தார். இந்த நியாயப்பிரமாண வாதிகளுடன் நேரடியாகப் போராடும் நேரம் அவருக்கு இன்னும் வரவில்லை. அவர் மலைநாட்டுப் பாதையின் வழியாக நடந்து, சமாரியா வுக்குள் நுழைந்து, குறுக்கு வழியாக கலிலேயாவிற்குச் செல்ல விரும்பினார்.
பழைய ஏற்பாட்டில் இந்த சமாரியர்கள் அங்கீகரிக்கப்படாத கூட்டமாயிருந்தார்கள். காரணம் அவர்கள் சில இஸ்ரவேலருடன் பல கலப்பினங்கள் சேர்ந்து உருவான ஒரு கூட்டம். கி.மு 722ல் அசீரியர்கள் சமாரியாவை ஊடுருவிய போது, ஆபிரகாமுடைய சந்ததியில் பெரும்பான்மையானவர்களை மெசபத்தோமியா விற்குக் கொண்டுபோய்விட்டார்கள். சிலர் மட்டும் சமாரியாவில் அசீரியர்களுடன் தங்கி இவ்விதமாக கலப்பினமும் அவர்களு டைய சமய நம்பிக்கைகளில் கலப்பும் உருவானது.
சீகேமுக்கு அருகிலுள்ள சீகார் என்ற இடத்திற்கு இயேசு வந்தார். அது முற்பிதாக்கள் ஆரம்பத்தில் வாழ்ந்த இடமாயிருந்தது. மக்க ளுக்கும் இறைவனுக்கும் இடையில் யோசுவாவின் காலத்தில் ஏற்பட்ட உடன்படிக்கையும் இவ்விடத்தில்தான் செய்யப்பட்டது (ஆதி. 12:6 மற்றும் யோசுவா 8:30 - 35). அங்கே ஒரு பழமையான கிணறு இருந்தது, அது யாக்கோபுடையது என்று கருதப்பட்டது (ஆதி. 33:19). யோசேப்பின் எலும்புகள் நாப்லஸ் என்ற இடத்திற்கு அருகில் புதைக்கப்பட்டது (யோசுவா 24:32). இது பழைய ஏற்பாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாக இருந்தது.
இயேசு நீண்ட தூரம் மலைப்பாதையில் நடந்து வந்த காரணத்தி னாலும் மதிய வெய்யிலினாலும் களைப்படைந்து கிணற்றி னருகில் உட்கார்ந்தார். அவர் ஒரு மெய்யான மனிதனாக வாழ்ந்தார். அவர் மாயாவியோ அல்லது மனித உருவில் காணப் பட்ட தெய்வமோ அல்ல. ஒரு மனிதனுக்குரிய அனைத்து பெல வீனங்களுடனும் அவர் வாழ்ந்தார்.
யோவான் 4:7-15
7 அவருடைய சீஷர்கள் போஜன பதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள். 8 அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ளவந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார். 9 யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரைநோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள். 10 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். 11 அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும். 12 இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப்பார்க்கிலும் நீர் பெரியவரோ? அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருக ஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள். 13 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். 14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார். 15 அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்.
இயேசு கிணற்றுக்கருகில் நின்று கொண்டிருந்தபோது, ஒரு சமாரியப் பெண் தண்ணீர் எடுப்பதற்காக அங்கு வருகிறாள். மற்ற பெண்களைப் போல அவள் காலையிலோ அல்லது மாலையிலோ வராமல் மதியத்திலே தண்ணீர் எடுக்க வருகிறாள். அவள் யாரையும் சந்திக்க விரும்பவில்லை; அவளுக்கிருந்த கெட்ட பெயரினால் அவள் எங்கு சென்றாலும் எல்லாரும் அவளைப் பரிகசித்தார்கள். அவளுடைய கலங்கிய இருதயத்தை இயேசு தூரத்திலிருந்தே அறிந்தவராய், சுத்திகரிக்கப்பட வேண்டும் என்ற அவளுடைய தாகத்தை உணர்ந்து கொண்டார். அவளுக்கு உதவ வேண்டும் என்று தீர்மானித்தார். அவர் பத்துக் கட்டளைகளை அவளிடம் எடுத்துக்கூறவில்லை, அவளுடைய நடத்தைக்காக அவளை அவர் திட்டவும் இல்லை; மாறாக அவர் தண்ணீர் தரும்படி அவளிடம் கேட்டார். அவள் தனக்குத் தண்ணீர் தரத் தகுதியானவள் என்று அவளுக்கு உணர்த்தினார். ஆனால் அவர் ஒரு யூதர் என்பதை அப்பெண் அறிந்துகொண்ட போது தயக்கம் காட்டினாள். அவளுடைய மக்களுக்கும் அவரு டைய மக்களுக்கும் இடையில் பெரிய பிரிவினை காணப்பட்டது. இரண்டு சாராரும் மற்றவர்களுடைய பாத்திரங்களைத் தொடுவ தில்லை. அவ்வாறு தொட்டால் தீட்டுப்பட்டுவிடும் என்று அவர் கள் கருதினார்கள். இயேசு அவ்விதமாக அவர்களுக்கு நடுவில் எந்த சடங்கு ரீதியான பிரிவினையும் இல்லாததுபோல, தண்ணீர் கேட்டதின் மூலமாக அவளைக் கனப்படுத்தினார்.
அந்தப் பாவியான பெண்ணுடைய இருதயத்தில் இறைவனைக் குறித்த பசியை உண்டுபண்ணுவதே கிறிஸ்துவின் நோக்கமாகும். அவர் கிணற்றுக்கு அருகில் இருந்த காரணத்தினால் தண்ணீரைப் பற்றி பேசுவது பொருத்தமாயிருக்கும். அது இறைவன் கொடுக் கும் கொடையைப் பற்றிய விருப்பத்தை அவளில் உண்டு பண்ணியது. இறைவனுடைய அன்பை ஒரு நோக்கமாக அவ ளுக்கு முன்பாக அவர் வைத்தார். அவளுடைய பாவத்திற்கான தண்டனையைக் குறித்து அவர் பேசாமல், கிருபையினால் ஆயத்தமாக்கப்பட்ட இறைவனுடைய அருட்கொடையைப் பற்றி பேசினார். எத்தனை பெரிய அற்புதம் இது.
கிருபை காற்றிலே தானாக வருவதில்லை, அது இயேசு என்னும் நபரில் மட்டுமே வருகிறது. அவரே தாலந்துகளையும் தெய்வீக கிருபைகளையும் கொடுப்பவர். ஆனால் அந்தப் பெண் இயேசுவை இன்னும் சாதாரண மனிதனாகவே பார்த்தாள். கிறிஸ்துவின் மகிமை அவளுடைய கண்களிலிருந்து மறைக்கப் பட்டிருந்தாலும் அவருடைய தூய அன்பு அவளுக்கு முன்பாக பிரகாசித்தது. ஜீவ தண்ணீர் (வாழ்வளிக்கும் தண்ணீர்) தன்னிடம் இருப்பதாக அவர் கூறினார். அவர் அருளும் பரலோக தண்ணீர் ஆத்துமாவின் தாகத்தைத் தணிக்கிறது. மக்கள் அன்புக்காகவும் சத்தியத்திற்காகவும் ஏங்கி இறைவனிடம் திரும்ப விரும்பு கிறார்கள். இயேசுவிடம் வருகிறவர்கள் தங்கள் தாகத்தைத் தீர்த் துக்கொள்கிறார்கள்.
யாரெல்லாம் கேட்கிறார்களோ அவர்களுக்கு கிறிஸ்து இறை வனுடைய அருட்கொடைகளைக் கொடுக்கிறார். இயேசு எவ்வாறு தனக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்டாரோ அவ்வாறு நாம் நம்முடைய தேவையை அறிக்கை செய்ய வேண்டும். யாரெல்லாம் தங்கள் தலைகளைத் தாழ்த்தி கேட்காவிட்டால், இலவசமாக அருளப்படும் பரலோக தண்ணீரைப் பெற்றுக்கொள்ள முடியாது.
அந்தப் பெண் இயேசுவைப் புரிந்துகொள்ளவில்லை. அவள் நடைமுறை உண்மையைப் பற்றி பேசினாள்: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரம் இல்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவதண்ணீர் உண்டாகும் என்று கேட்டாள். அதேவேளையில் அவள் இயேசுவின் இரக்கத்தையும் அன்பையும் அனுபவித்தபடியால் ஆச்சரியமடைந்தவளாகக் காணப்பட்டாள். அவளுடைய அயல கத்தாரைப் போல அவர் அவளை வெறுக்கவில்லை. அவருடைய மகத்துவத்தில் அவளைவிட்டு விலகினவராகக் காணப்பட்ட போதிலும், அவருடைய பரிசுத்தத்தில் அவர் அவளை நேசித்தார். அவரைப் போன்ற தூய்மையான ஒரு மனிதனை அவள் தன்னுடைய வாழ்வில் சந்தித்திருக்க மாட்டாள். அதனால் அவள், எங்களுடைய முற்பிதாவாகிய யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரா? நீர் ஒரு அற்புதத்தைச் செய்து ஒரு புதிய கிணற்றை உருவாக்கித்தரப் போகிறீரா? என்று கேட்டாள்.
சரீரத்தில் ஏற்படும் தாகத்தை இவ்வுலகத்திலுள்ள தண்ணீரைக் கொண்டு தணிக்கும் எவருக்கும் மீண்டும் தாகமெடுக்கும் என்பதால் தான் இயற்கைத் தண்ணீரைப் பற்றி பேசவில்லை என்று இயேசு அவளுக்கு விளக்கமளித்தாள். உடல் சாதாரணமாக தண்ணீரைக் கிரகித்து வெளியேற்றிவிடும்.
ஆனால் இயேசு கொடுப்பதோ ஜீவ தண்ணீர். அது மனிதனுடைய அனைத்து ஆன்மீக தாகத்தையும் தணிக்கக்கூடியது. கிறிஸ்தவர்கள் இறைவனைத் தேடி கண்டடைகிறார்கள். அவர்கள் தத்துவ ஞானிகளைப்போல தாங்கள் அடைய முடியாத சத்தியத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருப்பதில்லை. இறைவன் அவர்களைக் கண்டுபிடித்திருக்கிறார்; அவருடைய அடிப்படைத் தன்மையை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவருடைய அன்பு எப்போதுமே நமக்குப் போதுமானது. அவருடைய வெளிப்பாடுகள் ஒருபோதும் கடினமானதாகவோ காலத்துக்கு உதவாததாகவோ இருக்காது. எப்போதும் பிரவாகித்து வரும், அனுதினமும் புதுப்பிக்கப்பட்ட, தெளிவுள்ள, இறைவனைப் பற்றிய புத்துயிரூட்டும் வெளிப் பாடுகளாகிய அவை வெறும் சிந்தனைகள் அல்ல. அவை வல்லமை யாகவும் வாழ்வாகவும், ஒளியாகவும், அமைதியாகவும் காணப் படுகிறது. பரிசுத்த ஆவியானவரே இறைவனுடைய ஈவாகிய பரலோக தண்ணீர்.
தான் மட்டுமே ஜீவதண்ணீரைக் கொடுப்பவர் என்று இயேசு மூன்று முறை வலியுறுத்திக் கூறுகிறார். எந்தவொரு மதமோ, மக்கள் கூட்டமோ, உங்கள் உறவினர்களோ, நண்பர்களோ யாரும் உங்களுடைய தாகத்தைத் தீர்க்க முடியாது. உங்கள் இரட்சகராகிய இயேசுவே உங்கள் ஆத்தும தாகத்தைத் தீர்க்க முடியும்.
இறைவனுடைய வரத்தைப் பெற்றுக்கொள்ளும் எவரும் மறுரூபமடைகிறார்கள். அப்போது தாகமுள்ள மனிதனுடைய உள்ளத்திலிருந்து ஜீவதண்ணீர் பிரவாகித்து வந்து, மற்றவர்களுக்கு ஆசீர்வாதத்தையும், கிருபையையும், சந்தோஷத்தையும், அன்பையும் மற்ற ஆவியின் கனிகளையும் கொடுக்கும். அவரில் நிலைத்திருப்பவர்கள் கிருபையின் மேல் கிருபை பெற்று மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக மாறுகிறார்கள்.
இயேசு ஒரு மாயவித்தைக்காரன் அல்ல என்றும் தன்னுடன் மெய்யாகவே அவர் உரையாடுகிறார் என்றும் அந்தப் பெண் அறிந்து கொண்டாள். அந்த ஜீவதண்ணீரைத் தனக்கும் தரும்படி அவள் இயேசுவிடம் கேட்டாள். அவள் தன்னுடைய தேவையை அறிக்கை செய்தாள், ஆனால் இன்னும் இயேசு உலகத்திற்குரிய தண்ணீரைப் பற்றி பேசுவதாகவே நினைத்துக்கொண்டிருந்தாள். அந்தத் தண் ணீரைப் பெற்றுக்கொண்டால் அவள் மறுபடியும் தண்ணீர்க் குடத்தைத் தலையில் சுமந்துகொண்டு, தன்னை வெறுப்பவர்களுடன் தண்ணீர் எடுக்கும் செயலில் ஈடுபடத் தேவையில்லை என்று கற்பனை செய்தாள்.

யோவான் 4:16-24
16 இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா என்றார். 17 அதற்கு அந்த ஸ்திரீ: எனக்குப் புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான். 18 எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார். 19 அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். 20 எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள். 21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. 22 நீங்கள் அறியாததைத் தொழுது கொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. 23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். 24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
இயேசு ஜீவ தண்ணீர் மீதான விருப்பத்தை அந்தப் பெண்ணில் தோற்றுவித்த பிறகு, இறைவனுடைய அந்தக் கொடையைப் பெற்றுக்கொள்ள அவளுக்கிருக்கும் தடையாகிய அவளுடைய பாவத்தை அவளுக்குக் காண்பித்தார். நீ ஒரு விபச்சாரி என்று கடினமான வார்த்தைகளினால் அவர் அவளைக் காயப்படுத்தவில்லை. மாறாக அவள் தன்னுடைய புருஷனைக் கூப்பிடும்படி மென்மை யாகக் கூறினார். இவ்வாறு கேட்டது அவளுக்கு வேதனையளிப்பதாக இருந்தது. எல்லாப் பெண்களைப் போலவும் இவளும் கணவனுடைய பாதுகாப்பிற்காகவும் பராமரிப்புக்காவும் ஏங்கினாள். ஆனால் அவள் தனிமையானவளாகவும், வெறுக்கப்பட்டவளாகவும், தன்னுடைய அவமானத்தை இயேசுவுக்குச் சொல்ல விரும்பாதவளாகவும் காணப் பட்டாள். ஆகவே எனக்கு கணவன் இல்லை என்று சொல்லி தப்பித்துக்கொள்ள முயன்றாள்.
அவளுடைய அந்தக் கூற்று உண்மைதான் என்று இயேசு உறுதி செய்தார். ஏனென்றால் அவருக்கு எல்லா இரகசியங்களும் தெரியும். அவள் கைவிடப்பட்டவளும், தனிமையானவளும், இச்சையினால் அன்பைத் தேடுகிறவளும், ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து பாவத்தில் விழுந்துகொண்டிருப்பவளாகவும் இருந்தாள்.
ஒவ்வொரு விபச்சார நடவடிக்கையும் மனசாட்சியை கெடுத்துப்போடும் பேரழிவுக்குரிய செயல், அது உள்ளுணர்வுகளை நோய்கொள்ளச் செய்யும், அதைப் பெண்களில் காணக்கூடியதாக இருக்கும். அப்படிப்பட்ட பெண் இன்னும் தன்னுடைய கணவனுக் காகவும், புரிந்துகொள்ளுதலுக்காகவும் ஏங்குகிறாள்.
இப்போது அவளுக்கு இயேசு ஒரு சாதாரண மனிதனல்ல என்பது தெரிந்தவிட்டது; அவருக்கு தீர்க்கதரிசன சக்தி இருக்கிறது. தன்னுடைய பிரச்சனைக்கு இறைவன் மட்டுமே உதவிசெய்யக்கூடும் என்று அவளுடைய உள்மனதில் அறிந்திருந்தாள். ஆனால் அந்த இறைவனை அவள் எங்கே கண்டுபிடிப்பாள்? எந்த வழியில் அவரிடம் போவாள்? விண்ணப்பமும் சமயச் சடங்குகளும் அவளுக்கு அந்நியப்பட்டுப் போயின. பல வருடங்களாக அவள் எந்த சமயச் சடங்குகளிலும் கலந்துகொண்டதில்லை. ஆனாலும் அவள் விடுதலைக்காகவும் இறைவனோடு சமாதானத்திற்காகவும் ஏங்கினாள்.
தான் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்ற தாகத்தையும் அவளுடைய உள்ளத்தில் ஏற்படுத்திய பிறகு, இயேசு, நாம் ஆராதிக்கும் இடம் முக்கியமானதல்ல, நாம் ஆராதிக்கும் நபரே முக்கியமானவர் என்பதை அவளுக்குக் காண்பித்தார். இறைவன் பரலோக பிதா என்பதை இயேசு அவளுக்குக் காண்பித்தார். இறைவனை அறிந்துகொள்வ திலுள்ள இரட்சிப்பை அவர் அவளுக்கு அருளினார். பிதா என்ற முக்கியமான வார்த்தையை அவர் மூன்று முறை பயன்படுத்துகிறார். அறிவோ பக்தியோ இறைவனைக் குறித்த அறிவை நமக்குத் தராது. அது கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின் மூலமாக வருகிறது.
எல்லா தெய்வங்களையும் நாம் பிதா என்று அழைக்க முடியாது என்று இயேசு தெளிவுபடுத்தினார். சமாரியர்கள் பல தெய்வங்களை வணங்கினார்கள். ஆனால் யூதர்களோ வரலாற்றில் தம்மை வெளிப்படுத்தியவரும், தாவீதின் வம்சத்தில் உலகத்தின் இரட்சகராக வெளிப்படுவார் என்று வாக்களித்தவருமாகிய கர்த்தரைத் தொழுது கொண்டார்கள்.
வேதாகமத்தின் சமயம் உலகம் முழுவதும் பரவக்கூடியதாக இருந்தது. அதனால் ஒரு குறிப்பிட்ட தேவாலயத்துடன் தொடர்புடையதா யிருந்த ஆராதனை விடுவிக்கப்பட்டது. பரிசுத்த ஆவியானவர் வாசம்பண்ணும் விசுவாசிகள் இறைவனுடைய ஆலயமாயிருக்கி றார்கள். அவர்களுடைய வாழ்க்கை முழுவதுமே இறைமகிமையின் ஆராதனையாக மாறுகின்றது. அவருடைய அன்பின் பெருக்கத்திற்குள் அவர்கள் நுழைவதால் கிறிஸ்துவின் மீட்போ அவர்களுடைய தனித்தன்மையாகிறது. அவர்கள் இறைவனுடைய வல்லமையினால் நீதியான, நேர்மையான, சுத்தமான வாழ்க்கையைத் தெரிந்தெடுத்திருக்கின்றார்கள். அவர்களுடைய பரலோக பிதா அவர்களைப் புதுப்பித்திருக்கிறார். அவர்களுடைய உள்ளம் முழுவ தும் துதியினால் நிறைந்திருக்கிறது. இறைவனுடைய பிள்ளைகள் அவரை எங்கள் பரலோக பிதாவே என்று நன்றியோடும், அர்ப்பணத்தோடும், உள்ளபூர்வமாக அழைக்கும்போது இறைவன் பிரியப்படுகிறார்.
இறைவன் ஆவியாயிருக்கிறார். அவர் ஒரு விக்கிரகமோ மாயாவியோ அல்ல. அவர் நம்முடைய தகப்பன், நாம் அவருடைய ஆவியை அறிந்திருக்கிறோம். அவரை அணுகுவதற்கு நமக்கிருக்கும் பலவீனத்தையும் இயலாமையையும் அவர் அறிந்திருக்கிறார். அவர் தம்முடைய குமாரனில் நம்மிடம் வந்து, அவருடைய பலியினால் நம்மைச் சுத்திகரித்து, நமக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு இன்னும் பல பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஆசை; அவருடைய பிள்ளைகளே அவருக்கு ஆவியோடும் உண்மையோடும் ஆராதனையைச் செலுத்தமுடியும். எங்களுடைய வாழ்க்கை அவருடைய அன்பிற்கான பதிற்செயலாக மாறும்படி அவர் எங்களைப் பரிசுத்த ஆவியினாலும், சத்தியத்தினாலும், கிருபை யினாலும் நிரப்பும்படி பிதாவிடம் நாங்கள் விண்ணப்பிக்கிறோம்.
யாருமே இறைவனைச் சரியாக ஆராதிக்க முடியாது. அதனால்தான் பரிசுத்த ஆவியாகிய வரத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார். அவருக்குள் நாம் உண்மையுடன் விண்ணப்பிக்கிறவர்களாகவும், சந்தோஷத்தோடு சேவை செய்கிறவர்களாகவும், தைரியத்தோடு சாட்சி பகருகிறவராகவும் மாறுகிறோம். அப்போது கிறிஸ்துவின் சிலுவையிலிருந்து வரும் பரிசுத்த ஆவியின் வல்லமையோடு பிதாவை நேசிக்கும் ஆராதனையாக நம்முடைய வாழ்க்கை மாறும். உண்மை யான ஆராதனையை ஏற்படுத்துவதற்காக கிறிஸ்து தேவாலயத்தைச் சுத்திகரித்தார். கிறிஸ்துவில் அந்தப் பாவமுள்ள பெண்ணுக்கு பிதா வெளிப்படுத்தப்பட்டார். அவள் தன்னுடைய பாவத்தையும் தாகத்தை யும் அறிக்கை செய்தபோது, இயேசு அவளுக்குக் கிருபை கொடுத்தார்.

ஆ) ஆயத்தமாயிருக்கும் அறுவடையைக் காண இயேசு தம்முடைய சீஷர்களை வழிநடத்துகிறார் (யோவான் 4:27-38)


யோவான் 4:27-30
27 அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப் பற்றி ஆச்சரியப்பட்டார்கள். ஆகிலும் என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை. 28 அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி: 29 நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள். 30 அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள்.
அந்த உரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தாங்கள் வாங்கிய உணவுடன் சீஷர்கள் கிராமத்திலிருந்து திரும்பி வந்தார்கள். ஒரு பாவமுள்ள, அதுவும் புறம்பாக்கப்பட்ட சமாரிய இனத்துப் பெண்ணுடன் இயேசு உரையாடுவதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியா னவரின் பிரசன்னத்தை உணர்ந்த காரணத்தினால் யாரும் பேசத் துணியவில்லை. கிறிஸ்துவினால் நிகழ்த்தப்பட்ட தெய்வீக அற் புதத்தை அவர்கள் கண்டார்கள், ஏனெனில் கிறிஸ்துவைப் பார்ப்பதாலும் அவருடைய வார்த்தைகளைக் கேட்பதாலும் அந்தப் பெண்ணின் முகம் மறுரூபமடைந்திருந்தது. இரட்சகரை அறியும் அறிவு அவளை ஆட்சி செய்தது.
அந்தப் பெண் வெறும் குடத்தை கிணற்றருகில் விட்டுவிட்டு சென்றாள். இயேசு அவளிடம் கேட்ட தண்ணீரை அவள் அவருக்குக் கொடுக்கவில்லை. ஆனால் அவர் அவளுடைய பாவ மன்னிப்பின் தாகத்தைத் தீர்த்தார். அவள் பலருக்கு ஜீவ தண்ணீரைத் தரும் ஊற்றாக மாறினாள். அவள் கிராமத்திற்குள் ஓடி, மக்களோடு பேசி, கிறிஸ்துவை அவர்களுக்குக் காட்டினாள். ஒரு காலத்தில் கீழ்த்தரமான பேச்சின் ஊற்றாயிருந்த அவளு டைய வாய் இப்போது கிறிஸ்துவுக்குச் சாட்சி பகரும் தெளிந்த நீரூற்றாக மாறியது. அவர் எப்படி தன்னுடைய பாவங்களை வெளிப்படுத்தினார் என்பதைச் சொல்லி மக்களை அவள் இரட்சகரிடம் இழுத்தாள். இந்த அறிக்கையைக் கேட்ட கிராமத்து மக்கள் ஏதோ ஒரு வழக்கத்துக்கு மாறான நிகழ்ச்சி நடைபெற்றிருக்க வேண்டும் என்று யூகித்தார்கள். இறைவ னுடைய செயல் அந்தப் பெண்ணுடைய வாழ்வில் நடை பெற்றிருந்தது. அவளுடைய இரகசியத்தை அறிய ஏக்கமுடைய வர்களாக இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கிணற்றை நோக்கி மக்கள் ஓடினார்கள்.
தன்னைப் பின்பற்றுகிறவர்களுடைய வாழ்க்கையில் கிறிஸ்து செயல்படும்போது என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு மாதிரிப் படமாகக் காணப்படுகிறது. நாமும் நம்முடைய நண்பர்களிடமும் அயலகத்தாரிடமும் கிறிஸ்து நம்மை இரட்சிக்க வந்திருக்கிறார் என்று கூறுவோம். அப்போது பரிசுத்த ஆவியினால் உண்டு பண்ணப்படும் ஜீவ தண்ணீரைக் குறித்த விருப்பம் அவர்களிலும் உருவாகும். நீங்கள் பலருக்கு ஜீவ தண்ணீரின் ஊற்றாக மாறி யிருக்கிறீர்களா? அப்படியில்லையென்றால் நீங்கள் உங்கள் பாவங்களை இயேசுவிடம் அறிக்கை செய்யுங்கள், உங்கள் வாழ்க் கையை அவரிடம் ஒப்புக்கொடுங்கள், அப்பொழுது அவர் உங்களைச் சுத்திகரித்துப் பரிசுத்தப்படுத்தி, அநேகருக்கு ஆசீர் வாதமாக மாற்றுவார். இப்போது தன்னுடைய அயலகத் தாருக்குப் பிரசங்கம் செய்யும் இந்த முன்னாள் விபச்சாரியையும் அவர் அப்படித்தானே மாற்றினார்?

யோவான் 4:31-38
31 இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள். 32 அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார். 33 அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார்கள். 34 இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. 35 அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். 36 விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். 37 விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது. 38 நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார்.
ஒரு பாவமுள்ள பெண்ணுடைய ஆத்துமாவை விடுவித்து, அவளை நித்திய வாழ்வுக்குள் வழிநடத்திய பிறகு, தன்னுடைய சீஷர்களுக்கும் அதே சேவையைச் செய்யும்படி அவர்களிடம் இயேசு திரும்பினார். அவர்களுடைய சிந்தனைகள் உலகப் பிரகாரமாகவே இருந்தது. அந்தப் பெண்ணுடைய இருதயத்தில் இறைவனுடைய ஆவியானவர் செய்த செயலைக் கண்டு அவர்கள் சந்தோஷப்படவில்லை. உணவும் தண்ணீரும் உயிர் வாழ்வதற்கு அவசியமானவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சரீரத்திற்குத் தேவையான உணவைவிட முக்கியமான ஒரு உணவிருக்கிறது, சரீரத் தாகத்தைத் தீர்க்கும் தண்ணீரைக் காட்டிலும் நிரந்தர திருப்தி தரும் ஜீவ தண்ணீர் இருக்கிறது. அதை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் இயேசுவைப் பக்தியோடு பின்பற்றினாலும் இதில் அவர்கள் அந்தப் பெண்ணைக் காட்டிலும் மேலானவர்கள் அல்ல, ஏனென்றால் பரத்திலிருந்து பிறக்காவிட்டால் ஒருவனும் இறைவனுடைய இராஜ்யத்தைக் காணமாட்டான்.
எந்த சரீர உணவைக் காட்டிலும் ஆத்துமாவைத் திருப்தி செய்யும் பரலோக அல்லது ஆவிக்குரிய உணவைக் குறித்து இயேசு அவர்களுக்கு விளக்கினார். ஆசீர்வாதங்களை வழங்கு வதிலும் தன்னுடைய பிதாவின் சித்தத்தைச் செய்வதிலுமே இயேசு எல்லாவற்றைக் காட்டிலும் திருப்தியடைந்தார்.
இயேசு இறைவனுடைய அப்போஸ்தலன். அவர் சுயாதீனமுள்ள இறைமைந்தனாகக் காணப்பட்டாலும், தன்னுடைய தகப்ப னுக்குக் கீழ்ப்படிந்தவராக, சந்தோஷத்தோடு அவருடைய சித்தத்தைச் செய்தார், ஏனெனில் இறைவன் அன்பாக இருக்கிறார். யாரெல்லாம் அன்பில் நிலைத்திருக்கிறார்களோ அவர்கள் இறைவனில் நிலைத்திருக்கிறார்கள். பிதாவுக்கு கிறிஸ்து கீழ்ப்படிவதினால் அவர் பிதாவைவிட சிறியவர் என்று அர்த்த மாகாது, அது அவருடைய அன்பின் அளவைக் காட்டுகிறது. குமாரன் தானே உலகத்தின் இரட்சிப்பை நிறைவேற்றிய போதிலும், அதைத் தன் பிதாவின் வேலை என்று குறிப் பிடுகிறார். முன்பு எப்படி பிதா எல்லாவற்றையும் குமார னிடத்தில் கொடுத்தாரோ அதுபோல குமாரன் எல்லா மகிமையையும் பிதாவுக்குக் கொடுக்கிறார். பிதா குமாரனுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னுடைய வலது பாரிசத்தில் அவரை அமரச் செய்து வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.
வெறுத்தொதுக்கப்பட்ட இந்தப் பெண்ணை இரட்சிப்பதுதான் இறைவனுடைய சித்தமாயிருந்தது. யூதர்கள் மட்டுமல்ல, முழு மனித குலமும் மீட்பிற்காக அழைக்கப்படுகிறது. அனைவரும் சீரழிந்தவர்களும் இறைவனுக்காக ஏங்குபவர்களுமாகவே இருக்கிறார்கள். இயேசு இந்தப் பெண்ணைச் சந்தித்தபோது அவர் அவளிடம் ஒரு முதிர்ச்சியைக் கண்டார். அதாவது தன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று அவளுடைய உள்ளத்தின் ஆழத்தில் ஒரு ஏக்கம் இருந்தது. யூதர்களில் காணப்பட்டதைவிட இறைவனுடைய பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்வதற்கான ஆயத்த நிலை இந்தப் பெண்ணிடம் அதிகமாகக் காணப்பட்டது. திடீரென்று இயேசு முழு மனுக்குலத்தையும் அறுவடைக்கு ஆயத்தமாயிருக்கும் ஒரு பெரிய முதிர்வடைந்த கோதுமை வயலைப் போல பார்த்தார். அக்கதிர்கள் பரிசுத்த ஆவியானவரினால் அசைவாடிக் கொண்டிருந்தது.
ஆனால் உலகம் அறுப்புக்கு ஆயத்தமாயிருக்கும் இக்காட்சியைச் சீஷர்கள் காணவில்லை. இயேசு குளிர்காலத்தில்தான் சமாரி யாவிற்குச் சென்றிருந்தார், அறுவடைக்கு இன்னும் பல மாதங் கள் செல்ல வேண்டியிருந்தது. வெளிப்படையாகத் தெரிகிற சாதாரண உண்மைகளைப் பாருங்கள்; மனிதனுடைய ஆவியின் உள்ளான உண்மையைக் கவனியுங்கள்; பதிலளிக்கப்படாத கேள் விகள், மெய்வாழ்வுக்கான ஏக்கம், இறைவனைத் தேடுதல் அனைத்தும் அங்கு காணப்படுகிறது. இன்றைக்கே அறுப்புக் காலம் என்று இயேசு சொல்வதைப் போல் இருந்தது. இரட்சிப் பின் செய்தியை ஞானத்தோடும் அன்போடும் எடுத்துச் சொன் னால் இறைவனுடைய குமாரனை இரட்சகராக ஏற்றுக்கொள்ள பலர் விருப்பமுள்ளவராக இருக்கிறார்கள்.
நீங்கள் ஒருவேளை வேறுவிதமாகச் சிந்திக்கலாம். என்னைச் சுற்றி யிருக்கிறவர்கள் அனைவரும் கடினமானவர்கள், அடிப்படை வாதிகள் அல்லது குருடர்கள் என்று நீங்கள் கருதலாம். சீஷர்கள் அவ்வாறுதான் சிந்தித்தார்கள்; அவர்கள் மேலோட்டமாக நிதானித்தார்கள். ஆனால் இயேசு இருதயத்தை ஆராய்கிறவர். ஆரம்பத்தில் தன்னை அந்நியராக நடத்திய அந்தப் பெண்ணை அவர் நியாயம் தீர்க்கவில்லை. ஆவிக்குரிய உரையாடல் அவளு டைய புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டது என்பதை அறிந் திருந்தும் அவளோடு உரையாடுவதற்கு அவர் தயங்கவில்லை. அவர் எளிமையாகவும் தெளிவாகவும் அவளிடம் பேசினார். அவர் பரிசுத்த ஆவியானவருடைய வழிநடத்துதலோடு அவளுக்கு உதவி செய்து, ஆராதனையையும் மேசியாவின் மகத்து வங்களையும் அவளுக்கு நினைப்பூட்டி, அவள் ஒரு நற்செய்தி அறிவிப்பவளாக மாறும்வரை அவளோடு உரையாடினார். என்ன மாற்றம்! பக்தியுள்ள நிக்கோதேமுவைவிட இவளே பரிசுத்த ஆவியானவரின் செயலுக்கு அதிக நெருக்கமானவளாகக் காணப்பட்டாள். கர்த்தருக்காக பணிசெய்யும் ஒவ்வொருவருக்கும் தங்களுடைய பகுதியில் இறைவனுடைய நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்களைக் காணும் இயேசுவின் அன்புள்ள ஞானக் கண்கள் தேவை. அவர்களுடைய கடினத்தன்மையையும் அக்கறை யின்மையையும் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். இறைவன் அவர்களை நேசிக்கிறார். இயேசு அவர்களை அழைக்கிறார். அவர்களுடைய மனங்கள் கிருபையினால் மெதுவாக ஒளியூட்டப்படும். இறைவனைத் தேடும் மக்கள் இத்தனைபேர் இருக்கும் உலகத்தில் எத்தனை காலம்தான் நீங்கள் அமைதியாக இருப்பீர்கள்?
ஒரு நபர் கிறிஸ்துவிடம் திரும்பும்போது நித்திய வாழ்வு அவருக்குச் சொந்தமாகிறது; சந்தோஷம் அவருடைய இருதயத்தை நிரப்பும். மனந்திரும்புகிற பாவியினிமித்தம் பரலோ கத்திலும் பெரிய மகிழ்ச்சி உண்டாகும். எல்லா மக்களும் இரட் சிக்கப்படவும் சத்தியத்தை அறிகின்ற அறிவை அடையவும் இறைவன் சித்தமுள்ளவராயிருக்கிறார். இறைவனுடைய சித்தத் தோடு தங்களை இணைத்துக்கொண்டு, தாழ்மையோடு மற்றவர் களுக்குப் பிரசங்கித்துக் கொண்டு செல்பவர்கள் தங்கள் சொந்த ஆத்துமாவில் திருப்தியும் பெருமகிழ்ச்சியும் அடைவார்கள். என்னை அனுப்பினவருடைய சித்தத்தைச் செய்து அவருடைய பணியை நிறைவேற்றுவதே என்னுடைய உணவாயிருக்கிறது என்று இயேசுவைப் போல அவர்களும் சொல்வார்கள்.
நான் உங்களை அறுவடைக்கு அனுப்புகிறேன் என்று சொல்லி இயேசு சீஷர்களுக்கான தன்னுடைய செய்தியை முடிக்கிறார். ஸ்நானகன் வறட்சியான நிலங்களில் மனந்திரும்புதலுக்கான பிரசங்கத்தின் மூலம் ஏற்கனவே உழுதிருக்கிறார். ஏற்கனவே பண்படுத்திய நிலத்தில் இயேசுவே இறைவன் விதைக்கும் விதை. இன்று நாம் அவருடைய சிலுவை மரணத்தின் பலனாகிய அறுவடையைப் பெற்றுக்கொள்கிறோம். இயேசு உங்களை அறுவடைக்கு அழைத்திருந்தால், இது உங்களுடைய அறுவடை யல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பணி இறைவனுடையது. கிறிஸ்துவின் வல்லமையே ஆவியானவரின் கனிகளைப் பழுக்க வைக்கிறது. நாம் அனைவரும் அப் பிரயோஜனமான ஊழியக்காரர்கள். இருந்தாலும் அவர் நமக்கு தம்முடைய தெய்வீக ஊழியத்தில் பங்களித்திருக்கிறார். சில வேளைகளில் விதைப்பிலும், சில வேளைகளில் உழவிலும், சில வேளைகளில் அறுப்பிலும் பங்களிக்கிறார். நாம் இறைவனுடைய முதலாவது வேலைக்காரர்கள் அல்ல என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. நமக்கு முன்பாக பலர் கண்ணீரோடு உழைத்திருக்கிறார்கள்; அவர்களுடைய விண்ணப்பங்கள் எல்லாம் பரலோகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இறைவனு டைய மற்ற பணியாளர்களைக் காட்டிலும் நீங்கள் சிறப்பான வரம் பெற்றவர்கள் அல்ல. உங்கள் நடத்தையும் மற்றவர்களை விடச் சிறந்தது என்று சொல்லமுடியாது. நீங்கள் ஒவ்வொரு நொடியும் இறைவனுடைய மன்னிக்கும் கிருபையினாலேயே வாழ்கிறீர்கள். அறுவடை காலத்தில் துதியோடும் நன்றியோடும் அவருக்குச் சேவை செய்யுங்கள். அறுப்பவர்களுடன் சேர்ந்து பரலோக பிதாவைக் கனப்படுத்துங்கள். உம்முடைய இராஜ்யம் வருவதாக; ஆளுகையும் வல்லமையும் மகிமையும் என்றென் றைக்கும் உம்முடையவைகளே என்று அனைவரும் கூறுவோம். ஆமென்.

இ) சமாரியாவில் நற்செய்திப்பணி (யோவான் 4:39–42)


யோவான் 4:39-42
39 நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள். 40 சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்வேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டு நாள் அங்கே தங்கினார். 41 அப்பொழுது அவருடைய உபதேசத்தினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து, 42 அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
சமாரியா நகரத்திலிருந்து பெருங்கூட்ட மக்கள் அந்தப் பெண்ணுடைய உரையாடலினால் உந்தப்பட்டு இயேசுவிடம் ஓடிவந்தார்கள். அவர்களையே இயேசு அறுவடைக்கு ஆயத்தமான வயல்வெளியாகப் பார்த்தார். அவர்களிடம் விசுவாசத்தையும் நித்திய வாழ்வையும் பற்றி பேசி அவ்விடத்தில் இரண்டு நாட்கள் தங்கினார். அவருடைய சீஷர்கள் ஆத்து மாக்களை அறுவடை செய்கிறவர்களாக வீடுகளைச் சந்தித் தார்கள். கிறிஸ்துவும் அவருடைய வார்த்தைகளும் மக்களில் ஆழமான தாக்கத்தை உண்டுபண்ணியது. இந்த சமாரியர்களே உலக இரட்சகர் என்ற பெயரை முதலில் இயேசுவுக்கு வழங்கியவர்கள். இயேசு தம்முடைய மக்களை மட்டும் இரட்சிக்க வரவில்லை என்றும் எல்லா மக்களுடைய பாவத்தையும் அவர் சுமந்தார் என்றும் அவர்கள் உணர்ந்தார்கள். அவருடைய அன்பின் வல்லமைக்கு ஒரு முடிவில்லை. இன்றும் அவர் பாவத்தின் பிடியிலும் சாத்தானுடைய வல்லமையிலும் இருப்பவர்களை விடுவிக்க வல்லவர். ஏற்கனவே விடுவிக்கப் பட்டவர்களைப் பாதுகாக்க வல்லவர். ரோமாபுரியிலிருந்த இராயனுக்கு உலக இரட்சகன், பாதுகாவலன் என்று பட்டமுண்டு. இயேசு இந்த இராயர்களைக் காட்டிலும் பெரியவர் என்று சமாரியர்கள் அறிந்துகொண்டார்கள். அவர் தம்முடைய மக்களுக்கு நித்திய சமாதானத்தைத் தருகிறார்.

5. அரசு அதிகாரியின் மகனைக் குணமாக்குதல் (யோவான் 4:43-54)


யோவான் 4:43-46அ
43 இரண்டுநாளைக்குப்பின்பு அவர் அவ்விடம்விட்டுப் புறப்பட்டு கலிலேயாவுக்குப் போனார். 44 ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல்லியிருந்தார். 45 அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள்; அவர்களும் பண்டிகைக்குப் போயிருந்தார்கள். 46 பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்;
நித்திய வாழ்வின் வல்லமையோடு இயேசுவும் அவருடைய சீடர்களும் சமாரியாவில் பிரசங்கித்தார்கள். அவர்கள் மகிழ்வோடு அந்த நற்செய்திப் பணியைச் செய்தார்கள். அனைத்து இனங்களையும் சந்திக்கும் காலம் இன்னும் வரவில்லை. தன்னுடைய சொந்த நாட்டிலுள்ள தீய ஆவிகளை அவர் முதலாவது தோற்கடிக்க வேண்டியிருந்தது. நசரேயர் களுடைய கேலிப் பேச்சு, அவர்களுடைய வன்முறையின் அச்சுறுத்தல் ஆகியவை இருந்தும் அவர் நேரடியாகக் கலிலேயாவுக்குப் போனார். அவர் ஒரு தாழ்மையான குடும் பத்திலிருந்து வந்த காரணத்தினால் அவருடைய நண்பர்களும் உறவினர்களும் அவருடைய தெய்வீகத்தை விசுவாசிக்கவில்லை. அவர்கள் செல்வத்தையும் புகழையும் உயர்வாகக் கருதி, இயேசுவின் ஏழ்மையைப் பழித்தார்கள். அவர்களுடைய அவிசு வாசத்தினால் அவர் அங்கு ஒரு அற்புதமும் செய்ய முடியவில்லை.
பிணியாளிகளைச் சுகமாக்கும் கிறிஸ்துவின் புகழ் வெகுதூரம் பரவியிருந்தது. எருசலேமில் அவர் செய்த அற்புதங்கள் அவருக்கு முன்பாகவே கலிலேயாவுக்குப் போய்விட்டது. பஸ்கா பண்டி கையின் போது எருசலேமிற்கு வந்திருந்த பல கலிலேயர்கள், இயேசு அங்கு செய்த அற்புதங்களையும் அவருடைய அதிகாரத் துடன் கூடிய பிரசங்கத்தையும் கண்டிருந்தார்கள். அவர் கலி லேயா கிராமங்களை அடைந்தபோது அவர்கள் மகிழ்வ டைந்தார்கள். அவரிடமிருந்து சில நன்மைகளைப் பெறும்படி அங்கும் அவர் அற்புதங்களைச் செய்வார் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். இயேசு கானாவூரில் கல்யாணம் நடந்த வீட்டுக்கு திரும்பினார். கானாவூரில் அவர் முதலாவது செய்த அற்புதத்தைப் பார்த்து, அவரை நோக்கிப் பார்க்க ஆரம் பித்தவர்கள் நடுவில் தன்னுடைய சேவையை முழுமைப்படுத்த அவர் விரும்பினார்.
யோவான் 4:46ஆ-54
அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியாதியாயிருந்தான். 47 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப்போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான். 48 அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார். 49 அதற்கு ராஜாவின் மனுஷன்: ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்குமுன்னே வரவேண்டும் என்றான். 50 இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான். 51 அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டு வந்து, உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள். 52 அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள்: நேற்று ஏழாமணிநேரத்தில் ஜுரம் அவனை விட்டது என்றார்கள். 53 உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள். 54 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குத் திரும்பிவந்த பின்பு, இது அவர் செய்த இரண்டாம் அற்புதம்.
இராஜாவினுடைய அரண்மனையில் உள்ள ஒரு முக்கியமான அதிகாரி இயேசுவையும் அவருடைய அதிகாரத்தையும் கேள்விப் பட்டு அவரிடத்தில் வந்தார். அந்த கிராமத்து மக்கள் அவரு டைய வருகையைக் கேள்விப்பட்டு, நோயாளிகளைக் குண மாக்கும் இந்த இயேசுவை இராஜாவுக்கு அறிமுகப்படுத்தவே இந்த அதிகாரி அவரிடத்தில் செல்லுகிறார் என்று பேசிக் கொண்டார்கள்.
கப்பர்நகூமின் ஏரிக்கரையோரத்தில் அந்த அதிகாரிக்கு ஒரு சுகவீனமான மகன் இருந்தான். அவனுக்காக தகப்பன் பல்வேறு மருத்துவர்களைக் கொண்டு, அதிக பணத்தைச் செலவு செய்து அவனைக் குணப்படுத்த முயற்சித்தும் முடியவில்லை. இறுதியில் அவன் இயேசுவிடம் வந்தான். அவர் அவனுக்கு உதவுவாரா இல்லையா? இயேசு கானாவிலிருந்து கப்பர்நகூமுக்கு வர வேண்டும் என்று அந்த அதிகாரி விரும்பினார். அவருடைய பிரசன்னத்தினாலேயே தன் மகன் பிழைத்துக்கொள்வான் என்று விசுவாசித்தார்.
இயேசு பெருமையின்றி இந்த உயரதிகாரிக்கு வாழ்த்துச் சொன்னார். ஆனாலும் அவருடைய விசுவாசமின்மையைக் கண்டு வருத்தப்பட்டார். ஒருவன் ஒப்பற்ற நபராகிய இயேசுவை விசுவாசிக்காவிட்டால் அவரால் எதுவும் செய்ய முடியாது. பலர் அவரை விசுவாசித்து அவரிடம் விண்ணப்பிக்கும்போதும், வெறும் உலக உதவியை நாடி அவிசுவாசம் கொள்கிறார்கள். கர்த்தரை உண்மையாக விசுவாசிக்கும் ஒருவர், அவருடைய வார்த்தையை நிபந்தனையின்றி அவர், உதவி வருவதற்கு முன்பாவே அவரை நம்புவார்.
இயேசுவின் கண்டிப்பினால் அவர் சோர்ந்து போகாமல், தன்னைத் தாழ்த்தி இயேசுவை ஐயா அல்லது ஆண்டவரே என்று அழைக்கிறார். கிரேக்க மொழியின் படி அவரை கிறிஸ்துவின் பணியாளர் என்று அவர் கருதுகிறார். அவர் தன்னுடைய மகன் மீது வைத்த அன்பினாலும் இயேசுவின் மீதுள்ள மதிப்பினாலும், அவனுடைய உயிரைக் காப்பதற்காக கப்பர்நகூமுக்கு வரும்படி மறுபடியும் வேண்டிக் கொண்டார்.
இதைப் பார்த்து, இயேசு தன்னுடைய கர்த்தத்துவத்தை விசுவாசிக்க அந்த அதிகாரி விருப்பமுள்ளவராயிருப்பதை அறிந்து, நீ போகலாம் உன் மகன் பிழைத்திருக்கிறான் என்று கூறினார். இயேசு அந்த அதிகாரியோடு கப்பர்நகூமுக்குப் போகாமல், தகப்பனுடைய அன்பைச் சோதித்ததோடு, அவருடைய விசுவாசத்தை உறுதிப்படுத்தினார். இயேசுவுக்கும் சுகவீனமான அவருடைய மகனுக்கும் இடையில் வெகுதூரம் இருக்கும்போதும் அவரால் அவனைக் குணப்படுத்த முடியும் என்று அந்த அதிகாரி விசுவாசித்தாரா?
இயேசு கிறிஸ்துவுடனான தன்னுடைய உரையாடலில் அந்த அதிகாரி இயேசுவின் குணாதிசயத்தையும் அன்பையும் அறிந்து கொண்டார். இயேசு பொய் சொல்லவுமில்லை தன்னைப் பரியாசம் பண்ணவுமில்லை என்பதை அவர் நிச்சயப்படுத்திக் கொண்டார். ஆகவே அந்த அதிகாரி தன் மகனுடைய சுகத்தைத் தன் கண்களால் காணாமலே விசுவாசித்தார். இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து கப்பர்நகூமுக்குத் திரும்பிப் போனார். இவ்வாறு அவர் கீழ்ப்படிந்து போனது இயேசுவைக் கனப்படுத்துவதாகவும் சுகத்தை உறுதிப்படுத்துவதாகவும் இருந்தது. இயேசு என்னுடைய மரித்துக் கொண்டிருக்கும் மகனைக் குணப்படுத்துவாரானால் அவர் எல்லாரைக் காட்டிலும் பெரியவர். சுகமாக்குதல் அவருடைய அதிகாரத்தையும் அவர் பரத்திலிருந்து வந்தவர் என்பதையும் நிரூபிக்கிறது. திரும்பிப் போனதே ஒரு ஒழுக்கமாகவும் வளர்ச்சியடையும் விசுவாசமாகவும் இருக்கிறது.
இயேசு அந்த அதிகாரியின் வேலைக்காரர்களையும் அவருடைய மகனின் சுகத்தை அறிவிக்கும்படி அவரிடம் வேகமாக அனுப்பி வைத்தார். அவருடைய கவலை நீங்கி கர்த்தரை மகிமைப் படுத்தினார். காய்ச்சல் அவனை விட்டு நீங்கிய நேரத்தைக் கேட்டபோது, இயேசு அவரிடம் சுகத்தைக் கட்டளையிட்டு வாக்களித்த அதே மதிய வேளை என்பதை அறிந்து கொண்டான்.
இந்த அதிகாரி கிறிஸ்துவின் அன்பைக் குறித்து தன்னுடைய குடும்பத்தாரிடம் நன்றியுடன் சாட்சி பகர்ந்தார்.
இந்த அற்புதம் யோவான் பதிவுசெய்யும் இரண்டாவது அடையாளமாகும். கிறிஸ்துவின் செல்வாக்கு இராஜாவின் அரண் மனையையும் ஊடுருவிச் சென்றது. கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசமே அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் இதை உறுதிப்படுத்தும் இறைவனுக்கேற்ற ஆராதனை என்பதை விசுவாசித்து மக்கள் எதிர்கால நிகழ்ச்சிக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

By: Waters of life

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.